போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது ? : சபா நாவலன்

Jaffna_waterவடக்கும் கிழக்கும் இணைந்த பூர்வீகத் தமிழர்களின் தேசிய நிலம் வடக்கு என்ற எல்லைக்குள் மட்டும் குறுக்கப்பட்டு அதற்கு விக்னேஸ்வரன் என்பவரை நிர்வாகியாக நியமித்து வருடங்கள் கடந்துவிட்டன. வடக்கிலும் கிழக்கிலும் உள்ளூர் உற்பத்திகள் அழிக்கப்பட்டு பல் தேசிய வியாபார நிறுவனங்கள் எந்தத் தடங்கலுமின்றி மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்களில் தங்கியிருக்கும் பல் பொருள் அங்காடிகள் ‘மூலைக் கடைகளை’ப் பிரதியீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. விவசாயம், மீன்பிடி, தொழிற் துறை என்ற அனைத்தும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன.

பெரு நிறுவனங்களுக்குச் சேவையாற்றக்கூடிய சிறு தொழிகளைச் ஆரம்பிப்பதற்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன. மலிந்த கூலியில் உற்பத்தியாகும் பொருட்களை பெரு நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன.

“ஒரு வர்த்தக சபையின் ஸ்தாபகர் ஜதுசன் கூறுகையில், பால்வளத்துறை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள 120 அங்கத்தவர்கள் நாளாந்தம் அண்ணளவாக 600 லிட்டர் பால் சேகரிக்கின்றனர், “இந்த பண்ணையிலிருந்து நாங்கள் நெஸ்டல் நிறுவனத்திற்குப் பால் வினியோகிக்கிறோம், ஆனால் அவர்கள் எங்களுக்கு மிகவும் குறைவான விலை தான் கொடுக்கிறார்கள்” என்று குறைபட்டுக் கொண்டார்.”
(நன்றி:http://www.wsws.org/tamil/articles/2016/jan/160112_tamil.shtml)

திருனெல்வேலியில் பயோ ரெக் என்ற நிறுவனம் மூலிகளைக்கொண்டு குடிபானம் ஒன்றைத் தயாரித்து விற்பனை செய்துவந்தது. 2009 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்திற்கு கொக்கோ கோலா போன்ற குடிபானங்களும், எலிபண்ட் ஹவுஸ் குடிபான வகைகளும் விற்பனைக்கு வராத வேளைகளில் பயோ ரெக் இன் குடிபானங்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டன. இன்று அதன் விற்பனை முற்றாக நிறுத்தப்படும் நிலை தோன்றியுள்ளதாக பயோ ரெக் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

nationsand nationalismதேசியம் என்பதன் ஆரம்பமே சுய சந்தையிலும் பொருளாதாரத்திலும் தான் தங்கியுள்ளது. தேசியத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் புதிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் முழுமையான ஆதரவை வழங்குகின்றன. எதிராகப் பேசுவதற்குகோ குறைந்தபட்சம் துண்டறிக்கை விடுவதற்கோ இன்று எம்மத்தியில் ஒருவரும் இல்லை.

சுன்னாகத்தில் மின்னுற்பத்தி நடத்தி அப்பிரதேசத்தின் நீர் மற்றும் நில வளத்தை அழித்த நிறுவனம் இலங்கையில் இன்று பல்வேறு வர்த்தகத் துறைகளைக் கையகப்படுத்திக்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு தமிழ்த் தேசியம் பேசும் அனைத்துக் குழுக்களும் ஆதரவு வழங்கி வருகின்றன. இதற்கு ஒரு படி மேலே சென்று விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து நிறுவனத்தைச் சட்டவிரோதமாகக் காப்பாற்றியுள்ளது.

chunnakampaddyவிவசாயப் பிரதேசங்களான சுன்னாகம், இணுவில், மருதனாமடம், தெல்லிப்பழை, உரும்பிராய், எழாலை, ஊரெழி,புன்னாலைக்கட்டுவன் போன்ற பிரதேசங்கள் படிப்படியாக அழிந்து வருகின்றன.

இவற்றைப் பேசுவதற்கு ஒரு குருவிகூட இல்லாத அவல நிலைக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியம் தோன்றியதன் மற்றுமொரு பிரதான காரணம் பேரினவாதிகளின் கல்வி மறுப்புக் கொள்கையே! கல்வி மறுப்பையும் மீறி வட மகாணம் இலங்கையின் கல்வித் தரத்தில் முதலாவது அல்லது இரண்டாவது இடத்தை வகித்தது. இன்று இலங்கையின் கல்வித் தரத்தில் இறுதி நிலையை அடைந்துள்ளது.

இதனிடையே நல்லாட்சி என்ற முகமூடிக்குள் ஒளிந்துகொண்டு இலவசக் கல்வியை அழிக்கும் இலங்கை கிரிமினல் அரசாங்கம், கல்வியைப் பணம்படைத்தோருக்கான சொத்தாக மாற்றியுள்ளது. யாழ்ப்பாண மருத்துவபீட மாணவர்கள் மருத்துவக் கல்வியைத் தனியார் மயப்படுத்தலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். தேசியம் மற்றொரு முனையிலிருந்து இங்கு தாக்குதலுக்கு உள்ளாகிறது.

தேசிய இனத்தின் இரண்டு பிரதான அடிப்படைக் கூறுகள் பொருளாதாரமும். பிரதேசமும்.

முதலில் வடக்குக் கிழக்கை எந்த எதிர்ப்புமின்றிப் பிளவுபடுத்தி அதன் ஒரு பகுதி விக்னேஸ்வரன் ஐங்கரனேசன் போன்ற அடியாட்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு முழு ஆசியையும் வழங்கியது.

tpcஇரண்டாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றின் துணையுடன் தேசியப்பொருளாதாரம் அழிக்கப்பட்டு அன்னியர்களின் பல் தேசிய நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றது.
இங்கு வேடிக்கை என்னவென்றால் கலாச்சாரம் கெட்டுப் போகிறது என்று நீலிக் கண்ணீர் வடித்து தேசியம் பேசும் ஒரு தனிமனிதனோ, கட்சியோ உள்ளூர் உற்பத்திகளின் அழிவிற்கு எதிராக மூச்சுக்கூட விடவில்லை. தேசியத்தின் அடிப்படை அழிகிறது என்று அவர்களுக்குத் தெரியாமலில்லை.

இவர்கள் அனைவரும் எதாவது ஒரு தொடர் புள்ளியில் தேசியத்தை அழிப்பதற்காக ஏகாதிபத்தியங்களாலும், அதன் தரகுகளான இலங்கை அதிகார வர்க்கத்தாலும் களமிறக்கிவிடப்பட்டவர்கள்.

மக்களை உணர்ச்சிவசப்ப்படுத்தி அதனைப் பணமாகவும் வாக்காகவும் மாற்ற இக்குழுக்கள் முனைந்துகொண்டிருக்க தேசியத்தின் அடித்தளம் இனிமேல் மீளாதவாறு முற்றாகத் தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டத்தை நடத்திய தமிழ்ச் சமூகம் முப்பதாயிரத்திற்கும் மேலான போராளிகளை தமது விடுதலைக்காகப் பலிகொடுத்துள்ளது. இவ்வாறான சமூகம் ஒன்றில் அழிவுகளுக்கு எதிராக ஒற்றை வார்த்தைகூட பேசாத அரசியல் தலைமை ஒன்று ஒவ்வொரு முனையிலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு புறத்திலும், அதற்கு எதிரான மக்கள் சார்ந்த தலைமைகள் தோன்றாமல் இடைவெளியை நிரப்பிக்கொள்ள விக்னேஸ்வரன், சுரேஷ், கஜேந்திரகுமார் குழுவினரும், புலம்பெயர் தேசியக் கோமாளிகள் என அனைத்து முனைகளிலும் அழிப்பவர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான அரசியல் தலைமைகளின் பின்னணியில் வன்னிப்படுகொலைகளை நடத்திய மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும், இந்திய அரசும் செயற்படுகின்றன.

இன்றைய போலிகள் உண்மையான தேசிய வாதிகளாகவிருந்தால்.

1. முப்பதாயிரம் போராளிகளை தியாகிகளாக்கிய சமூகத்திற்கு அன்னிய உற்பத்திகளை நிராகரிக்குமாறு பிராச்சாரம் செய்திருப்பார்கள். மக்களில் பெரும்பகுதியினர் அதனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

2. உள்ளூர் உற்பத்திகளை உக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்கள்.

3. உள்ளூர் வியாபாரமும், மூலதனமும் அன்னிய முதலீட்டாளர்களால் அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராடியிருப்பார்கள்.

3. அன்னிய மூலதனத்தின் உள்ளீட்டால் தான் கலாச்சாரம் சிதைவடைகிறது என்பதை மக்களுக்குக் கூறியிருப்பார்கள்.

4. இலவசக் கல்வி அழிக்கப்படும் போடு நடைபெற்ற போராட்டங்களைத் தலைமை தாங்கியிருப்பார்கள்.

5. வளங்கள் சுரண்டப்படும் போது அதற்கு எதிராகப் போராடியிருப்பார்கள்.

6. சுன்னாகம் போன்ற பேரழிவுகளுக்கு எதிராகக் குரல்கொடுத்திருப்பார்கள்.

இந்தக் கோரிக்கைகளை மீறி பேசப்படும் தமிழ்த் தேசியம் போலியானது. திட்டமிட்டு அழிப்பதற்காகப் பேசப்படுவது.

women1இன்னும் சில வருடங்களில் சுய பொருளாதாரம் மீளமுடியாத அளவிற்கு அழிக்கப்பட்டு மக்கள் அன்னியப் பொருளாதாரத்தை நிராகரித்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கல்வி உட்பட அனைத்தும் பல் தேசிய வர்த்தகமயமாகிவிடும். வளங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டுவிடும். சுன்னாகம் போன்ற பேரழிவுகள் தமித் தேசியவாதிகளின் ஆசியுடன் நடைபெற்று முடிந்துவிடும். அப்போது தேசியம் என்பது பாடப்புத்தகங்களிலும் புலம்பெயர் நாடுகளில் பிழைப்பு நடத்தவும் மட்டுமே பயன்படும்.

இன்றைய போலித் தேசியவாதிகள் அழிவுகளுக்கு எதிராகக் குரல்கொடுக்காமல், வட்டுக்கோட்டைத் தீர்மானம், தமிழீழ தாயகம், போர்க்குற்றம் போன்ற உணர்ச்சியூட்டும் வார்த்தைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்வார்கள் என்பதை அடித்துக்கூறலாம்.

எது தமிழ்ப்புத்தாண்டு? : வி.இ.குகநாதன்

பொதுவாக சனவரி ஒன்றில் ஆங்கிலப்புத்தாண்டைப் புதுவருடமாக உலகளாவியரீதியில் மக்கள் கொண்டாடிவருகின்றபோதும் ஒவ்வொரு இனமும் தனக்கென தனியான ஒரு புதுவருடக் கொண்டாட்டத்தினையும் நடாத்திவருவதானது அவர்களின் தனித்துவத்தினையும், பண்பாட்டினையும் பேணிவரும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.  இந்தவகையில் தமிழரிற்கெனவும் ஒரு புத்தாண்டு கொண்டாடப்படவேண்டும் என்பதில் யாரிற்கும் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அப்புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்பதிலேயே குழப்பம் காணப்படுகிறது. இன்று ஈழத்திலும்சரி, தமிழகத்திலும் சரி, புலம்பெயர்தேசங்களிலும் சரி தமிழர்களில் பலர் சித்திரையிலேயே தமிழ்புத்தாண்டு என நம்பவைக்கப்பட்டுள்ளனர். இதனைப் பற்றிய ஒரு சிறிய ஆய்வாகவே இக் கட்டுரை அமைந்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டு கணிப்பீட்டுமுறை:

சித்திரைப்புத்தாண்டு கணிப்பீட்டு முறையானது சாலிவாகணன் என்ற அரசனால் (சிலர் கனிஷ்கன் என்கின்றனர்) கி.பி 78ம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூறப்படுகிறது.  இக் கணிப்பீட்டின்படி சுக்கில, விரோதி, துன்மதி போன்ற அறுபது ஆண்டுகள் கணிப்பிடப்பட்டு சுழற்சிமுறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி இப்போது நடைபெறுவது துர்முகி ஆண்டாகக்கருதப்படுகிறது.  இத்தகைய கணிப்பீட்டு முறைக்கு அடிப்படையாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது

சித்திரைப்புத்தாண்டு பற்றிய புராணக்கதை:

அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. ஒருமுறை நாரதமுனிவர், ‘கடவுள்’ கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “நான் உடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார். கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் ‘கடவுள்’ கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள்.  இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில்  ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.

தைப் புத்தாண்டு கணிப்பீட்டுமுறை:

ஆதித் தமிழர்கள் காலத்தினை பருவகாலங்களை அடிப்படையாகக்கொண்டு ஆறு பிரிவுகளாகப்பிரித்திருந்தனர். அவையாவன

1.இளவேனில்- தை,மாசி

2.முதுவேனில்- பங்குனி, சித்திரை

3.கார்காலம்- வைகாசி,ஆனி

4.கூதிர்காலம்-ஆடி,ஆவணி

5.முன்பனி- புரட்டாசி, ஐப்பசி

6.பின்பனி- கார்த்திகை,மார்கழி

இந்தப்பகுப்பினடிப்படையில் இளவேனில் காலத்தினை ஆண்டின் தொடக்கமாகக்கொண்டு தையிலேயே வருடப்பிறப்பினைக்கொண்டாடி வந்துள்ளார்கள். இப்போது சிலர் சித்திரையே இளவேனில் காலம் எனக் கூறலாம், ஆனால் தாயகத்தின் காலநிலையினைப் பொறுத்தவரையில் சித்திரை இளவேனிற்காலம் என்பதற்கு பொருந்தாது, மாறாக தையே  இளவேனில் காலத்திற்கும் வருடத்தொடக்கத்திற்கும் சிறப்பாகப்பொருந்தும்.   இதற்கான ஆதாரத்தினை  நாம் சங்க இலக்கியங்களான நற்றிணை,குறுந்தொகை, புறநாநூறு என்பனவற்றில் காணலாம். ( உதாரணம்- தைத்திங்கள் தண்கயம் படியும்-நற்றிணை, தைத்திங்கள் தண்கயம் போல்- புறநாநூறு). இவற்றினடிப்படையிலேயே தமிழர்களிடம் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற முதுமொழி இன்றும் நடைமுறையிலுள்ளது.

இவ்வாறு தமிழர்களால் ஆதிமுதல் கொண்டாடப்பட்டு வந்த தைத்திருநாளானது கி.பி முதலாம் நூற்றாண்டளவில் பார்ப்பனியர்களின் மதரீதியான ஊடுருவல் மூலமாக சித்திரைக்கு மாற்றப்பட்டது. அதற்குப் பின்னரே தமிழர்களிடம் இந்தப் புதுவருடக்குழப்பம் ஏற்பட்டது.

குழப்பத்திற்கான அறிஞர்களின் தீர்வு:

இக் குழம்பத்திற்கு தீர்வு காணும்பொருட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1921இல் மறைமலை அடிகளார் தலமையில் 500 அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதலே தமிழ்புத்தாண்டு என முடிவு செய்திருந்தனர். பின்பு அதேபோன்று திருவள்ளுவரின் பிறப்பினை அடிப்படையாகக்கொண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக்கூட்டி திருவள்ளுவர் ஆண்டு தமிழாண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பார்ப்பனிய ஊடகங்களால் இச் செய்தி இருட்டடிப்புச் செய்யப்பட்டது. பின்பு 2006 இல் கருணாநிதியின் ஆட்சியில் தமிழக அரசால் தைத்திங்களே புத்தாண்டாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்பு (மீண்டும்  ஒரு பார்ப்பன ஆட்சியில்) ஜெயலலிதா ஆட்சியில்2011 இல் சித்திரையாக மாற்றப்பட்டது ஒரு வரலாற்றுச் சோகமேயாகும்.

புலிகளின் தை புதுவருடப்பிரகடனம்;

இக் காலப்பகுதியில் ஈழத்திலும் தைமுதலே புத்தாண்டாக விடுதலைப்புலிகளால் தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இங்கும் வரலாற்றுச் சோகமாக புலிகளின் அழிவிற்குப்பிறகு அந்த முயற்சி தொடரப்படவில்லை. புலிகளின் தியாகத்தினை வைத்து பிழைப்பு நடாத்திவரும் தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது புலம் பெயர் அமைப்புக்களோ இதில் எந்தவித அக்கறையுமின்றியிருப்பது அவர்களின் பிழைப்புவாதத்தினை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்துகிறது.

அறிவியல் பொருத்தப்பாடு:

வரலாறு, சொந்த விருப்பு வெறுப்புகளிற்கப்பால் அறிவியல்ரீதியாக தைத்திருநாளா அல்லது சித்திரைக் கணிப்பீடா பொருத்தம் எனப்பார்ப்போம். முதலாவதாக திருவள்ளுவர் ஆண்டானது எண்களில் வருவதனால் சிறப்பானது, மறுபுறத்தில் சித்திரைக்கணிப்பீடானது ஒரே பெயர்களில் 60 ஆண்டுகளிற்கொரு முறை  மறுபடியும் வருவதனால் குழப்பகரமானவை. மேலும் இப்பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லாதிருப்பதுடன் அவற்றின் கருத்துக்கள் ஆபாசமானவை அல்லது எதிர்மறையானவை. (உதாரணமாக சுக்கில-விந்து, துன்மதி-கெட்டபுத்தி).

இரண்டாவதாக ஒருவரின் (திருவள்ளுவரின்) வாழ்க்கைக் காலத்தினை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீடானது சர்வதேச நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றது.மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீட்டிற்கான நாம் ஏற்கனவே பார்த்த புராணக்கதையினை மதநம்பிக்கையாளரில் பெரும்பாலானோரே நம்பமாட்டார்கள். அதேபோன்று சித்திரைக்கணிப்பீட்டிற்கு சொல்லப்படும் இராசிக்கணிப்பும் அறிவியலிற்கு முரணான புவிமையக்கொள்கையினை அடிப்படையாகக்கொண்டது.

மூன்றாவதாக சங்க இலக்கியங்களினடிப்படையில் வரலாற்று த்தொன்மையானதாக க்காணப்பட, மறபுறத்தில் சித்திரை வருடப்பிறப்பானது இடைக்காலத்தில் வெளியாரின் திணிப்பால் உள்நுழைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.

நான்காவதாக தைத்திருநாளானது மதசார்பற்றதாகக் காணப்படுவதால்  எல்லாத் தமிழரும் கொண்டாடக்கூடியதாகவிருக்க, மறுபுறத்தில் சித்திரையானது இந்துக்களிற்கு மட்டுமே அதுவும் பார்ப்பன ஆதிக்கத்தினை ஏற்றுக்கொண்டவரிற்கே பொருந்தும். இறுதியாக தைத்திருநாளானது தமிழரின் வாழ்க்கையுடன் இணைந்தும், உழவுத்தொழிலுடன் தொடர்பானதாகவும் காணப்படுகிறது.

முடிவாகக்கூறின் தைத்திருநாளினை தைப்பொங்கலாக மட்டும் சுருக்காமல் தமிழரின் புத்தாண்டாகவும் கொண்டாடுவதே பொருத்தமானது. பாவேந்தரின் பாடலுடன் இக் கட்டுரையினை முடிப்பதே சிறப்பானதாக அமையும்.

“ நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்                                                  கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”- பாவேந்தர் பாரதிதாசன்

-தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்-

 

 

தேசியப்பிரச்சனையில் லெனின் பங்களிப்பு-எமது எதிர்காலத்திற்கான திறவுகோல் :சபா நாவலன்

leninandstalin1924 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மறைந்த லெனின் உலகத்தில் முதல் முதலில் பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சியை – தொழிலாள வர்க்கப் புரட்சியைத் தலைமை தாங்கியவர்களுள் ஒருவர்- மட்டுமன்றி, உலகம் குறித்த கார்ல் மார்க்சின் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்தியவர். உலக மக்ககளின் விடுதலைக்கு லெனின் வழங்கிய தத்துவார்த்த பங்களிப்பின் தொடர்ச்சி இன்றைய உலகச் சூழல் மீண்டும் கோரி நிற்கின்றது.

சிங்களவர்கள் என்றால் அவர்கள் பிறப்பிலேயே எதிரிகள், சாதி என்பது மனிதனின் பிறப்புரிமை போன்ற மிகவும் பழமைவாத பிற்போக்குக் கருத்தியலுக்கு எதிராக சமூகத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகுதல் எவ்வாறு என்பதை முதலில் தெளிவான கோட்பாடாக முன்வைத்தவர் கார்ல் மார்க்ஸ்.

இன்றைய சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கும் அது நாளை எவ்வாறு மாற்றமடையும் என்பதையும் ஒவ்வோரு சமூகத்தின் குறித்த நிலைகளையும் முன்வைத்து ஆராய்வது எவ்வாறு என்பதை அவர் கற்றுத்தந்தார். இன்றோ உலகத்தின் பெரும்பான்மை பழமைவாத கருத்துக்களைப் பற்றிக்கொண்டுள்ளது.

சமூகத்தை ஆட்சிசெய்கின்ற அதிகாரவர்க்கமும் அதற்கு தத்துவார்த்த பலத்தை வழங்கும் கல்வியாளர்களும் உலகத்தை இயக்கத்தை ஆராய்வதற்கும் நாளைய உலகம் எவ்வாறு மாற்றமடையும் என்பதையும் புரிந்துகொள்ள மார்க்சியதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அமரிக்க மத்திய உளவு நிறுவனமான CIA அண்மையில் வெளியிட்ட ஆய்வு ஒன்று 2025 இல் உலகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை ஆராய்கிறது. மார்க்சிய தத்துவத்தைப் பிரயோகித்த அவர்கள் நாளைய உலகம் எவ்வாறு அமைந்திருக்கும் என ஆராய்கிறார்கள். அங்கு உற்பத்தி உறவுகளின் நிலை எப்படியிருக்கும் எனக் கூறுகிறார்கள்.

அடிப்படையில் மார்கிசியம் என்பது உலகத்தைப் இன்றைய நிலையைப் புரிந்துகொள்வதற்கும் நாளை அது எவ்வாறு மாற்றமடையும் என்பதை அறிவதற்கும் வகை செய்வது மட்டுமல்ல மாற்றத்திற்கான தடைகளையும் அதனை புரட்சியின் ஊடாக எவ்வாறு வெற்றிகொள்வது என்பதையும் கூறுகின்றது.

சமூக மாற்றம் தவிர்க்க முடியாததும், இயல்பானதுமாகும். ஒவ்வோரு தடவையும் சமூகம் மாற்றமடையும் போதும், பழமைவாத சக்திகள் தமது அதிகாரத்தை மீளமைக்க முயல்வது இயல்பு. சமூகத்தின் இயல்பான மாற்றத்தை அதிகாரத்தைக் கையகப்படுத்தியிருபோரும், பழமைவாதிகளும் தடைசெய்ய முற்படுகின்ற போது அந்தத் தடைக்கு எதிராகப் போராடுகின்ற நிலைக்கு மக்கள் வந்து சேர்கிறார்கள். சமூகத்தின் இயல்பான வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்த அவர்களை அமைப்பாக்குவதற்கு புரட்சிகரக் கட்சியும், அவர்கள் மத்தியிலான முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட வெகுஜன அமைப்புக்களும் அவசியம் என்பதை மார்க்சியம் முன்வைக்கிறது.

கார்ல் மார்க்ஸ் தனது வாழ் நாள் முழுவதும் தத்துவார்த்த உழைப்புக்கு மத்தியில் புரட்சிகரக்கட்சிகளைத் தோற்றுவிக்க முயன்றார். அந்தப் பணி ரஷ்யாவில் புரட்சியாளர்களின் தலைமையில் முதலில் வெற்றிபெற்றது. ரஷ்யாவின் சூழலுக்கு ஒப்ப தத்துவார்த்த அடிப்படையை வழங்கிய பலருள் லெனின் பிரதானமானவர்.

லெனினின் பங்களிப்பு இன்று வரைக்கும் பல அரசியல் சிக்கல்களுக்கு விடை தருகிறது.

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து லெனின் முன்வைத்த கோட்பாட்டு வகையிலான முடிவுகள், உலகத்தில் முதல் தடவையாக தேசிய இனங்கள் குறித்துப் பேசியது. சோவியத் ரஷ்யாவில் தேசிய இனங்களுக்கு பிரிந்துசெல்லும் உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே சோசலிசப் புரட்சி வெற்றி பெறுவதற்கான முன் நிபந்தட்னை என்றார். கார்ல்மார்க்ஸ் முயன்றதை லெனின் தேசியப் பிரச்சனையிலும் முன்னெடுத்தார். ரஷ்யாவில் சமூக ஜனநாயகப் புரட்சியை வெற்றி கொள்வதற்கான முன்நிபந்தனையாக ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். அத் தேசிய இனங்களை பாட்டாளிவர்க்கக் கட்சியில் கீழ் ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரட்டுவதற்கான தத்துவத்தை முன்வைத்தார்.

இன்று தேசிய இனப்பிரச்சனை என்பது இலங்கையில் மட்டுமல்ல, மத்திய கிழக்கிலும், ஆபிரிக்காவிலும், சீனாவிலும், இந்தியத் துணைக்கண்டத்திலும் பல திரிபுகளுக்கு உட்பட்டுத்தப்படுகின்றது.

ஏகாதிபத்தியமும் அதன் உப நிதி நிறுவனங்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைச் சீர்குலைக்கின்றன.

ciaஇன்று முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஜே.வி.பி போன்ற இடதுசாரிக் கருத்துக்களைப் பொறுக்கிக்கொண்ட இனவாதிகள் கூறுவது போன்றே ரோசா லக்சம்பேர்க், புக்காரின், பிளக்கானோவ் போன்றோர் லெனினின் கருத்துக்களுக்கு எதிராக கிளர்ந்தனர். பெரும்பான்மைத் தேசிய இனத்தின் தொழிலாளர்களை சுயநிர்ணைய உரிமைக்கான முழக்கம் அன்னியப்படுத்தும் என்றனர்.

தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி சோசலிசப் புரட்சியைச் சிதைக்கும் என்றனர். இதற்கெல்லாம் எதிரக லெனினும் அவரைத் தொடர்ந்து ஸ்டாலினும் நடத்திய கோட்பாட்டு யுத்தங்கள் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த உறிதியான முடிவிற்கு வருவதற்கு உதவியது.

இலங்கையில் இனவாதம் அழிந்து போவதற்குரிய முன்நிபந்தனை அங்கு சிங்களத் தொழிலாளர்கள் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை உணர்ந்துகொள்வதும் அதனை ஆதரிப்பதும் மட்டுமல்ல தேசிய விடுதலைப் போராட்டத்தை தொழிலாள விவசாயிகள் அணி முன்னெடுப்பதே ஆகும்.

வன்னி அழிப்புக்களின் பின்னர் ராஜபக்ச பாசிச ஒடுக்குமுறையை சிங்கள உழைக்கும் மக்கள் உணர ஆரம்பித்தனர்.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்கும் குரல்களும் சிறுகச் சிறுக எழ ஆரம்பித்தன. அவற்றை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான தூண்டப்பட்ட திரிபுவாதிகள் தாம் பொறுக்கிய மார்க்சியக் கருத்துக்களோடு இனவதத்தைக் கலந்து ஜே.வி.பி ஐ உயிர்ப்பித்த போது உருவானதே முன்னிலை சோசலிசக் கட்சி.

இலங்கை அரசிற்கும் அதன் பின்பலமாகத் தொழிற்படும் அமரிக்க இந்திய சீன அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் எவ்வளவு முக்கியத்துவப்படுத்தப்படுகிறதோ அதே அளவு முன்னுரிமை திரிபுவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் எதிரான போராட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்று கலர் கலராக பெருத்த பணச் செலவில் அல்ல, எங்காவது மூலை ஆர்ப்பாட்டமில்லாமல் சிறிய குழு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினாலே தமிழ் இனவாதம் சரிய ஆரம்பிக்கும்.

இலங்கை இந்திய அரசுகள் அந்த ஒரு விடயத்தில் மட்டும் மிகவும் தெளிவாக இருந்திருக்கின்றன. எந்தக் கணத்திலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் குரல்கள் எழுந்துவிடக் கூடாது என்பதில் அவற்றின் செயல் தந்திரம் உறுதியாகவிருந்தது

இனவாதிகள் தொடர்ச்சியாக தமது சாம்ராஜியத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை அடையாளத்திற்கான போராட்டமாக மாற்றுவதற்கும் ஜெவீபி போன்ற இனவாதிகள் துணைசென்றனர். சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் குரல் எழுவதை இடது சாரி ‘சொல்லாடல்களைப்’ பொறுக்கி வைத்திருந்த ஜே.வி.பி என்ற இனவாதக் கட்சியும், இன்று அதன் பிரதியெடுத்த அரசியலை முன்வைக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியும் திட்டமிட்டு தடைசெய்கின்றன. இந்த இருகட்சிகளும் சுய நிர்ணய உரிமையை மட்டுமல்ல அதிகாரப் பரவலாக்கலைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு இடைவெளிகளுக்குள் இலங்கையில் இடதுசாரி இயக்கங்களில் பின்னடைவை ஏற்படுத்திய ஜேவிபி . கிளர்ச்சிகளின் முன்மாதிரி அபாய அறிவிப்பு.

இலங்கையில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் தலைமகள் முன்னெடுத்த அரசுக்கு எதிரான போராட்டங்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களாக முன்னெடுக்கப்படவில்லை. அவற்றிற்கு குறைந்தபட்ச தேசியத்தன்மை அதன் உண்மையான உள்ளர்த்தில் இருந்திருக்கவில்லை.

பிந்தங்கிய நிலப்பிரபுத்துவ சமூகம் ஒன்றில் மக்கள் தமது அடையாளத்தை கிராமங்களை மையப்படுத்தியும், தொழிலை மையப்படுத்தியும், மதங்களை முன்னிறுத்தியும் உருவமைத்துக்கொள்வார்கள். இவை அனைத்தையும் தகர்த்து தேசங்களும் தேசிய அரசுகளும் உருவாகின.

தேசிய அரசுகள் தேசியப் பொருளாதாரத்தை, நிலப்பிரபுத்துவ மற்றும் அன்னிய மூலதன ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்தன. தேசிய முதலாளிகளின் தேவைக்காக அவர்களின் ஆதிக்கத்தில் தேசிய அரசுகளும், தேசிய உணர்வும் உருவானது. சிறிய அடையாளங்களின் தொகுப்பாக தேசிய அடையாளம் உருவானது. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் ஏகபோக அரசுகளாக மாற்றமடைந்த போது நிலப்பிரபுத்துவ காலத்தில் காணப்பட்ட குறுகிய அடையாளங்களை மீளமைத்து முதலாளித்துவ உருவாக்கத்தின் கோரத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிய நீட்ஷே போன்றவர்களிடமிருந்து கடன்வாங்கிய கருத்துக்களின் அடிப்படையில் பின்னவினத்துவம் போன்ற சமூகவிரோதக் கோட்பாடுகள் தோன்றின.

seemanஅதே வேளை ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும், உலகம் முழுவதிலும் தேசிய முதலாளிகள் அன்னிய மூலதனத் தரகர்களால் விழுங்கப்பட்டு தேசியம் என்பதும் சந்தைப் போட்டி என்பதும் மத்தியதரவர்க்கத்தின் மேல் அணிகளிடையே மட்டுமே காணப்பட்டது. இதனால் தேசிய இனங்களிடையே முரண்பாடுகள் தோன்றின. இந்த முரண்பாடுகளை ஆழப்படுத்தி பயன்படுத்திக்கொண்டவர்கள் அன்னிய மூலதனத்தின் தரகர்களும் ஏகபோகங்களுமே.

ஒரு புறத்தில் பெருந்தேசிய ஒடுக்கு முறையும் அழிப்பும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட மறுபுறத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டங்க ள் அன்னிய சக்திகளால் கையகப்படுத்தப்பட்டன.

மத்தியதரவர்க்க அணிகளால் தலைமை தாக்ங்கப்பட்ட போராட்டங்களை அன்னிய சக்திகள் தமது தேவைக்கு ஏற்ப பயன்படுதின தேவை முடிந்த வேளைகளில் அழித்தன.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தேசியப் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தும். அன்னிய மூலதனத்தையும் ஏகாதிபத்க்தியங்களையும் எதிரியாக எதிர்கொள்ளும். அன்னிய தரகுகள் இதனைத் தலமைதாங்க முடியாது. தமக்கு எதிரான போராட்டத்தைத் தாமே எப்படித் தலைமை தாங்குவது? ஆக, இலங்கைச் சூழலில் சமூகத்தின் கீழணியிலுள்ள உழைக்கும் மக்களே போராட்டத்தைத் தலைமை தாங்கியிருக்க முடியும். இதனை அறிந்துவைத்திருந்த இந்தியாவும் அமரிக்கா போன்ற ஏனைய நாடுகளும், தமது தரகுகளின் போராட்டமாக தேசிய விடுதலைப் போராட்டத்தை மாற்றியமைத்து லட்சக்கணக்கான மக்களோடு அதனை அழித்துச் சாம்பலாக்கினர்.

இதனால் தேசிய விடுதலைப் போராட்டம் அன்னிய சக்திகளின் ஆதரவோடு இனக்குழு அடையாளப்போராட்டமாக மாறியது. தேசிய இனத்தின் பண்புகளான சுய பொருளாதாரம், அன்னிய மூலதனத்திற்கு எதிரான நிலை என்பவற்றைக் கொண்டிருக்கவில்லை. இனக்குழு அடையாளத்திற்கான பிந்தங்கிய போராட்டம் அந்த இனக்குழு சார்ந்த தமிழ் நாட்டின் ஒரு பகுதியினரையும் கவர்ந்தது. அவர்களின் தலைமையும் அன்னியத் தரகுகளே. போராட்டத்தின் முழு வடிவமுமே தமிழ் இனக்குழுவின் இனவாதப் போராட்டமாகியது. இந்த இனவாதம்

பேரினவாதத்தைப் பலப்படுத்தியது. சிங்களமக்கள் மத்தியில் இனவாத வேர்களுக்கு தீனிபோட்டது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்தின் ஐந்தாம்படையின் போராட்டமானது.

லெனின் கூறுவது போல தேசிய முதலாளிகள் உள்ளூர்ச் சந்ததையைக் கயகப்படுத்துவார்கள், அரசியல் ரீதியாக அதனைச் தேச மக்களை இணைத்துக்கொள்வார்கள். அதுதான் தேசிய இயக்கங்களின் பொருளாதார அடிப்படை… இதற்கெல்லாம் எதிர்த்திசையில் பயணித்த தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டு அன்னியர்களை அண்ணார்ந்து பார்த்துகொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

உலகில் பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் குறைந்தபட்ச ஒன்றிணைவாவது இதுவரை ஏற்படவில்லை. இன்னும் எதிர்காலம் இருள் சூழந்ததாகவே உள்ளது.  தேசிய விடுதலை இயக்கங்கள் ஊடாகவும், தமிழர் கட்சிகள் ஊடாகவும் விதைக்கப்பட்ட அதே பிந்தங்கிய சிந்தனை இன்னமும் கோலோச்சுகிறது. இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு ஒன்பது வருடங்களின் பின்பும் ஒரு அங்குலம் கூட முன்னோக்கி நகரவில்லை.

லெனின் மறைந்த ஜனவரியில் அவர் முன்வைத்த விடுதலைக்கான கோட்பாடுகளின் அடிப்படைகளையாவது புரிந்துகொள்ள முற்படுவோம்.

சூரியனை எரிக்கப்போன நாளில்… : எழிலன் தமிழ்

நாங்கள் சூரியனை எரிக்கப்போன நாட்களில் எனக்கு ஒரு சிங்கள தோழனின் அறிமுகம் கிடைத்தது. சிங்கள தேசத்தில் அவனுக்கு தேசத்துரோக பட்டம் சூட்டப்பட்டிருந்தமையும் அவனது மனைவி தமிழ் காரணமும் அவன்பால் என்னை ஈர்த்தன.

2001 ஏப்ரல்; மாதத்தின் நடுப்பகுதியொன்றில் இப்படியான ஆச்சாரியமான சம்பவம் நடைபெற்றது. அன்று ஒரு மதிய நேரம் நாங்கள் சிலர் தங்கியிருந்த வீட்டுக்கு சைக்கிளை வேகமாக மிதித்தபடி இளையநம்பி அவசரமாக வந்திறங்கினான்.

இதற்கு முன்னர், 2001 ஆரம்ப மாதங்களின் யாழ்ப்பாண நிலைமைகளை சற்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஈழப்போரில் நோர்வேயின் தலையீடுகளால் புலிகள் 2000 டிசம்பர் நத்தார் தினத்தை தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் யாழ்ப்பாணத்தில் வழமைக்கு மாறான சூழ்நிலை காணப்பட்டது. வலிந்த மோதல்களை இருதரப்பும் தவிர்த்து வந்தன. இந்த வெற்றிடத்தை பயன்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் பொங்கு தமிழ் போன்ற இன எழுச்சி நிகழ்சிகளை நடத்தி யாழ்ப்பாணத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பியிருந்தனர்.

இந்த நாட்களில் யாழ்ப்பாண அரசியல் துறைப் பொறுப்பாளராக இளையநம்பி என்ற இளைஞன் செயப்பட்டு வந்தான்.

‘டேய் தம்பியள்! எங்கட அண்ணையை அரை நிர்வாணமாக படம் வரைந்து ஈ.பி.டீ.பி ஒரு பத்திரிகை வெளியிட்டிருக்கு.. கம்பஸ் பெடியள் எல்லாம் அதை எரிக்க போய் கொண்டிருக்கிறாங்கள்.. எங்கேயெல்லாம் அந்த புத்தகம் விற்கிறாங்களோ அங்கை எல்லாம் போய் பறித்து கொழுத்துங்கள்’ என கூறினான்.

நாங்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டோம். எங்கள் தலைவர் பிரபாகரனை அரைநிர்வாணமாக வரைந்து அவமானப்படுத்திய பத்திரிகை எந்த இடத்திலும் விற்கபடகூடாது என்று முடிவு செய்துகொண்டு யாழ்நகரை நோக்கி புறப்பட்டோம்.

நாங்கள் பரமேஸ்வரா சந்தியை கடக்கும்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஆவேசமாக ‘அமுது’ என்ற அந்த பத்திரிகையை எரித்து கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாணம் எங்கும் இராணுவம் காவலுக்கு நின்றபோதும் பல கடைகளில் அந்த பத்திரிகையை பறித்து எடுத்தோம். வர்தககர்களும் அச்சத்துடன் நாம் இனி அந்த பத்திரிகையை விற்கபோவதில்லை என கூறியமை எமக்கு மகிழ்சியை கொடுத்தது.

அந்த பத்திரிகையில் தலைவரை எப்படி வரைந்தார்கள் என்று இன்றுவரை எனக்கு தெரியாது. ஏனெனில் நிர்வாணம் என்பது அவமானமா? என சிந்திக்க முடியாத அந்த நாட்களில் முழு பத்திகையையும் நாங்கள் எரித்துவிட்டோம்.

அன்றுவரை அமுது என்ற பத்திரிகை வெளிவரும் விடையம் எனக்கு தெரியாது. எனக்கு மட்டுமல்ல பல மக்களுக்கும்தான். நாங்கள் எரித்தது தொடர்பாக அவர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என்ற ஆர்வத்தில் அடுத்த பதிவை நான் வாங்கிப்படித்தேன். ‘சூரியனை எரிக்கபோய் கைகளை சுட்டுக்கொண்டவர்கள்’

என்ற தலைப்பில் எரித்தவர்கள் தொடர்ப்பில் ஒரு கட்டுரை வந்திருந்தது.

அவர்களுடைய அடுத்த பதிப்புகள் பன்மடங்கு அதிகமாக விற்கபட்டது இப்படித்தான். அவர்களுக்கு நாங்கள் இலவசமாக விளம்பரம் தேடிக்கொடுத்து விட்டோம்.

அமுதின் அடுத்த சில பதிப்புகளினூடகாகதான் இந்த ‘உதுவன்கந்த சரதியல்;;;’ என்ற இளைஞன் எனக்கு அறிமுகமானான். ‘வரலாறு செய்த குற்றம்’ என்ற தலைப்பில் அவன் தொர்பான தொடர் கட்டுரை வெளிவந்திருந்தது.

150 வருடங்களின் முன்னர் இவன் வாழ்ந்த நாட்களில்தான் பிரித்தானியா இலங்கையை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டிலுள் கொண்டு வந்திருந்தது. சிங்கள தாழ்ந்த குடியில் பிறந்த சரதியில் ஏழைமக்களுக்காக புரட்சி செய்து ஏழைப்பங்காளனாக விளங்கினான், படை திரட்டி பிரித்தானிய அரச வர்த்தகத்தை சீர்குலைத்து பிரித்தானிய அரசுக்கே சவால் விட்டான். அவர்களின் பிரித்தாளும் தந்திரம் இவனிடம் பலிக்கவில்லை. ஒரு தமிழ் பெண்ணை மணம் முடித்த இவனுடன் மரக்கார் என்ற ஒரு இஸ்லாமியன் தோழனாக உடனிருந்து போராடினான்.
இந்த செய்திகள் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தன. இவன் கொல்லபட்டு 150 வருடம் முடிந்த நிலையிலும், இலங்கை பிரித்தானியவிலிருந்து விடுதலைபெற்று 60 வருடங்கள் ஆகிய நிலையிலும் இவனின் மீது விதிக்கபட்டிருந்த தேசதுரோக குற்றச்சாட்டு நீங்கபடவில்லை.

கடந்தவாரம் தமிழ் இணையத்தளம் ஒன்று மைத்திரி அரசு, சரதியல் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டை விலக்கிகொண்டுள்ளதாக ஒரு வரியில் செய்தி வெளியிட்டிருந்தது. சரதியலும் அவன் இஸ்லாமிய தோழன் மரிகாரும் 1864 இல் தூக்கில் போடமுன்னர் அரைநிர்வாணமாக்கபட்டு எடுக்கபட்ட அரிய புகைப்படத்தை அந்த இணையத்தில் தற்செயலாக பார்த்த ஒரு தமிழ் நண்பர,; ஆ! யார் இவன்? ஊரில் ஆடு கோழி திருடுபவன் போல! என தனது அபிப்பிராயத்தை தெரிவித்தார்.

ஆள்பவனுக்கு வேண்டுமானால் மானத்தை காக்க ஆடை அலங்காரங்கள் தேவைப்படலாம். ஆனால் மக்களுக்காக புரட்சி செய்பவனுக்கு புரட்சிதான் அவனது ஆடை என்பதை விளக்க முடியாமல் திகைத்து நின்றேன்.

(உதுவன் கந்த சரதியல் தொடர்பான எனது பதிவு. இவை கற்பனையில்லை. உண்மையில் நடந்தவையே! -எழிலன் தமிழ்)

ஆமிஷ் சமூகம் (Amish Community) : இராமியா

ஆமிஷ் மக்கள் வாழும் வீடு

கி.பி. 1695ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில், ஜேக்கப் ஆம்மான் என்பவர் கிருத்துவ மதத்தில் ஒரு புதிய பிரிவைத் தோற்றுவித்தார். அவரைப் பின்பற்றியவர்கள் (ஆம்மான் என்ற பெயரை ஒட்டி) ஆமிஷ்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் 18ஆம் நூற்றாண்டில் போர், பஞ்சம், வேலை தேடுதல் போன்ற பல காரணங்களை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் குடியேறினர். இவர்கள் பேசும் மொழி பென்சில்வேனியா டச்சு மொழி என்றும், பென்சில்வேனியா ஜெர்மன் மொழி என்றும் அழைக்கப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் பென்சில்வேனியா மாநிலத்தில் குடியேறிய இவர்கள் தொடர்ந்து அங்கேயே வசித்து வருகிறார்கள்.

ஆமிஷ் மக்கள் தங்கள் பகுதியில் குதிரை வண்டியில் பயணித்தல்.

இந்த மதப் பிரிவினருடைய முதன்மையான கொள்கை என்னவென்றால், விவிலியத்தில் (பைபிளில்) கூறப்பட்டுள்ளவற்றை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதும், அதில் கூறப்படாத எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதும் தான். ஆகவே இவர்கள் விவிலியத்தில் கூறப்படாத புதுமைகளை, அறிவியல் வளர்ச்சிகளை, மின்சாரத்தை, கன்னெய (பெட்ரோல்) வாகனங்களை இன்னும் பலவற்றை ஏற்றுக் கொள்வது இல்லை. சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்துகின்றனர். பயணத்திற்குக் குதிரை வண்டிகளையும், இரவில் எண்ணெய் விளக்குகளையுமே பயன்படுத்துகின்றனர். இதனால் இவர்கள் மற்ற சமூக மக்களிடம் இருந்து விலகித் தனிமைப்பட்டு வாழ்கின்றனர்.

இவர்கள் அறிவியல் புதுமைகளை ஏற்காததால், இச்சமூகத்தில் குழந்தை மரணம் (Infant death) அதிகமாக உள்ளது. ஆனால் இவர்கள் விவிலியத்தில் “பலுகிப் பெருகுங்கள்” என்று கூறி உள்ளபடி அதிக குழந்தைகள் (ஒவ்வொரு பெண்ணும் 6 – 7 குழந்தைகள் வரை) பெற்றுக் கொள்வதால் இவர்களது மக்கள் தொகை கூடிக் கொண்டு இருக்கிறது. 1920ஆம் ஆண்டில் 5,000 ஆக இருந்த இவர்களுடைய மக்கள் தொகை, படிப்படியாக உயர்ந்து 2016ஆம் ஆண்டில் 3,08,030ஆக உயர்ந்து உள்ளது.

பள்ளிக்கூடம்

இவர்கள் பொதுவாக, இவர்களே நடத்தும் பள்ளிகளில் 8வது வகுப்பு வரை மட்டுமே படிக்கிறார்கள். வாழ்க்கை வாழ்வதற்கு இப்படிப்பே போதும் என்று நினைக்கின்றனர். 16வது வயதில் விவசாயம், குதிரை வளர்த்தல், தச்சுப் பட்டறை, இரும்புப் பட்டறை போன்ற தொழில் கல்வியைக் கற்கின்றனர்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் 25 வயதிற்குள் திருச்சபையில் ஞானஸ்நானம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்கு ஞானஸ்நானம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

சமூகக் கட்டுப்பாடுகளை மீறி நடப்பவர்கள் சமூகத்தை விட்டு விலக்கி வைக்கப்படுவதுடன், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவார்கள். இச்சமூகச் சூழலில் வளர்ந்தவர்கள் வெளியே சென்று வாழ்வது சிரமம் என்பதால் சமூகக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மிக மிக அரிதே.

விவசாயப் பண்ணை

அறிவியல் வளர்ச்சியின் நலன்களை நுகர்ந்த மக்கள், ஆமிஷ் மதப் பிரிவில் இணைவார்கள் என்பதை எண்ணிப் பார்ப்பதே கடினம். ஆனால் இவர்களுடைய வாழ்க்கை முறையில் மன அமைதி கிடைக்கிறது என்று கூறி 1950ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 75 பேர்கள் இம்மதப் பிரிவில் இணைந்து உள்ளனர், இவர்களுள் 1990ஆம் ஆண்டில் இணைந்த 20 இரஷ்யர்களும் அடங்குவர். சோவியத் ஒன்றியம் சிதைந்த பின், அங்கு நிலவிய அமைதி இன்மையில் இருந்து தப்பிக்க, அவர்கள் இவ்வழியைத் தேடினார்கள் போலும்.

இவர்களுடைய மக்கள் தொகை மிகக் குறைவாக இருப்பதால், இரத்த உறவுள்ள உறவினர்களையே திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. இதனால் உடல் நலமும், மனநலமும் குன்றிய குழந்தைகள் பிறக்கின்றன. இரத்த உறவு இல்லாதவர்களைத் திருமணம் செய்து கொள்வதால் நற்பயன்கள் விளைகின்றன என்பதை இவர்கள் தெரிந்து கொண்டு இருந்தாலும், தங்கள் மதப் பிரிவையும், சமூகக் கட்டுப்பாடுகளையும் காப்பாற்றும் பொருட்டு வெளியாரைத் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

இவர்களது வாழ்க்கை முறையைப் பார்க்கச் சுற்றுலாப் பயணிகள் இவர்கள் வாழும் பகுதிக்குச் செல்வது உண்டு. அண்மைக் காலமாக, இச்சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவு விடுதிகளை நடத்துகின்றனர். இங்கும் இவர்கள் புதுமையைத் தவிர்க்கின்றனர்; அவர்களுடைய பாரம்பரிய உணவுகளை மட்டுமே பரிமாறுகின்றனர். ஆனால் எந்த வகையிலும் தாங்கள் வாழும் பகுதியில் பிறரை ஆக்கிரமிக்க விடுவது இல்லை.

விவசாயப் பண்ணை

இச்சமூக மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் போதும் குதிரை வண்டிகளிலேயே செல்வதால், போக்குவரத்துக்கு (Traffic) இடைஞ்சல் ஏற்படுகிறது. இதனால் மற்ற மக்களின் வெறுப்புக்கு உள்ளாகின்றனர். அது மட்டும் அல்லாமல் இவர்கள் வாழும் முறையினால் அரசுக்கு எந்த வரியும் செலுத்தாமல் இருக்க முடிகிறது. ஆனால் நாட்டில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் இவர்களுக்கும் சேர்த்துத் தான் வடிவமைக்கப்படுகின்றன. இதுவும் மற்ற மக்கள் இவர்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், இவர்களால் பென்சில்வேனியா மாநிலத்தின், அமெரிக்க நாட்டின் சமூக இயக்கத்திற்கு இடையூறு ஏதும் இல்லை என்று கூறி, இவர்களுடைய வாழ்க்கை முறையில் அரசுகள் குறுக்கிடுவது இல்லை. ஆகவே இம்மக்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையைத் தொடர முடிகிறது.

ஆனால் நம் நாட்டில் வாழும் பழங்குடி மக்களைப் பாருங்கள். அவர்கள் ஆமிஷ் சமூகத்தவரைப் போல நாட்டின் பிற பகுதி மக்களுடன் ஒத்துழைக்க மறுப்பது இல்லை. அது மட்டும் அல்ல; தேன், மூலிகைகள் போன்ற காட்டு விளைபொருட்களை நம் பயன்பாட்டிற்காக அளித்தும் வருகின்றனர். தங்கள் வாழிடங்களையும், வாழ்வாதாரங்களையும் பாதிக்காத பட்சத்தில், பிற பகுதி மக்களுக்கு மனமுவந்து உதவி செய்ய ஆயத்தமாக உள்ளனர்.

ஆனால் நாம் இவர்களை எப்படி நடத்துகிறோம்? உலகின் மிக மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு அவசியத் தேவையாக இல்லாத, ஒரு சிலரின் ஆடம்பர வாழ்வுக்குத் தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக, கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு, இந்நாட்டின் மண்ணின் மைந்தர்களை அவர்களுடைய வாழிடங்களில் இருந்து துரத்துகிறோம். அவர்களுடைய வாழ்வாதாரங்களைப் பறித்து, வாழ வழி இல்லாமல் செய்து, அவர்களை முற்றிலுமாக அழித்து ஒழித்து வருகிறோம்.

என்னது? இத்திருப்பணியை நாம் செய்யவில்லையா? பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, இந்திய அரசு தான் செய்கிறதா? அது சரி! இந்திய அரசைத் தேர்தல் மூலம் நாம் தானே தேர்ந்தெடுத்தோம்? அது மட்டுமா? இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எதையும் நாம் எதிர்த்து நிறுத்துவதே இல்லையே? அப்படி இருக்கும் போது பழங்குடி மககளின் வாழ்வாதரரங்களைப் பறித்து, அவர்களுடைய வாழிடங்களில் இருந்து துரத்துவது நாம் தான் என்ற மன உறுத்தலும் ஏற்படவில்டலையே? ஏன்?

இந்திய இழிவு : அருந்ததி ராய்

என் தந்தை ஓர் இந்துப் பார்ப்பனர். நான் வயதுக்கு வரும் வரை அவரைப் பார்த்ததே இல்லை. தென்னிந்தியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்த கேரளாவில் அயமெனம் சிற்றூரில் ஒரு சிரிய கிறித்துவக் குடும்பத்தில் என் தாயோடு வளர்ந்து வந்தேன். அயமெனம் சிற்றூர்க்கென அமைந்திருந்த ‘பறையர்’ தேவாலயத்தில் ‘பறையர்’ குருமார்கள் ‘தீண்டத்தகாத” திருக்கூட்டத்தினரைப் பார்த்து போதனைகள் வழங்குவர். ஊர் மக்களின் பெயர்களில், அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதில், செய்யும் தொழிலில், உடுத்தும் உடையில், ஏற்பாடு செய்யும் திருமணங்களில், பேசும் மொழியில் சாதி ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனாலும் நான் ஒரு பள்ளிப் பாடப் புத்தகத்தில் கூட சாதி என்னும் கருத்தைக் கண்டதே இல்லை.

இந்திய எழுத்தாளரும் சிந்தனையாளருமாகிய பி. ஆர். அம்பேத்கர் 1936இல் வழங்கிய உரையாகிய சாதி ஒழிப்பு என்னும் நூலைப் படித்த பிறகுதான் நமது பயிற்றுமுறை உலகில் உள்ள பெரும் இடைவெளி பற்றி என் மனத்தில் உறைத்தது. இந்த இடைவெளி இருப்பதேன் என்றும், அது இந்தியச் சமுதாயம் அடிப்படையான புரட்சிகர மாற்றத்துக்கு உள்ளாகாத வரை தொடரவே செய்யும் என்றுங்கூட அவ்வாசிப்பு எனக்குத் தெளிவாக உணர்த்தியது.

malala_obama
ஒபாமாவுடன் மலாலா

உங்களுக்கு இந்த ஆண்டின் நோபல் பரிசைக் கூட்டாகப் பெற்ற மலாலா யுசாஃப்சைப் பற்றித் தெரியும், ஆனால் சுரேகா போட்மங்கே பற்றித் தெரியாது என்றால் அம்பேத்கரைக் கட்டாயம் படியுங்கள். அப்போது மலாலாவுக்கு 15 அகவைதான். ஆனால் அவள் ஏற்கெனவே பல குற்றங்கள் புரிந்திருந்தாள். அவள் ஒரு பெண், அவள் பாகிஸ்தானில் சுவாத் பள்ளத்தாக்கில் வசித்து வந்தாள், அவள் பிபிசி இணையத்தளத்தில் எழுதி வந்தவள், நியூ யார்க் டைம்ஸ் காணொளியில் காட்சி தந்தவள், பள்ளி சென்றவள். மலாலா மருத்துவராக விரும்பினாள்; மலாலாவின் தந்தை அவள் அரசியல்வாதியாக வேண்டுமென நினைத்தார். அவள் வீரச் சிறுமி. பள்ளிகள் பெண்களுக்கானவை அல்ல என்ற தலிபன்கள் அறிவிப்புக்கு, அவள் தங்களுக்கு எதிராகப் பேசுவதை நிறுத்தா விட்டால் அவளைக் கொன்றுவிடுவோம் என்ற அவர்களின் அச்சுறுத்தலுக்கு அவள் (அவள் தந்தை கூட) காது கொடுக்கவில்லை. 2012 அக்டோபர் 9 அன்று துவக்கேந்திய தலிபன் படையாள் ஒருவர் அவளைப் பள்ளிப் பேருந்திலிருந்து இறக்கி அவள் தலையில் குண்டு பாய்ச்சினார். மலாலா இங்கிலாந்துக்கு வானூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கூடுமான சிறந்த மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு பிழைத்துக் கொண்டாள். அது அதிசய நிகழ்வே.

arundhathi_roy_333அமெரிக்க அதிபரும் அரசுச் செயலரும் தங்கள் ஆதரவையும் உறுதிப்பாட்டையும் தெரிவித்தனர். மடோனா அவளுக்காக ஒரு பாடலை அர்ப்பணித்தார். ஏஞ்சலினா ஜூலி அவளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். மலாலா டைம் நாளேட்டின் அட்டைப் படத்தில் மிளிர்ந்தாள். அவள் மீதான கொலை முயற்சி நடைபெற்ற சில நாள்களுக்குள் இன்று உலகக் கல்விக்கான ஐக்கிய நாடுகள் சிறப்புத் தூதராக இருக்கும் ஜார்டன் ப்ரௌன் ‘நான் மலாலா’ என்னும் வேண்டுகோளை வெளியிட்டார். அது ஒவ்வொரு சிறுமிக்கும் கல்வியளிக்கும்படி பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டது. அமெரிக்கா தங்களின் பெண்ணியத் திருப்பணியை நிறைவேற்றும் பொருட்டே பாகிஸ்தானில் ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடத்தி பெண் வெறுப்பாளர்களாகிய இசுலாமியப் பயங்கரவாதிகளை ‘வெளியேற்றும்’ காரியத்தில் இறங்கியிருக்கிறதாம்.

அகவை 40 நிரம்பிய சுரேகா போட்மங்கே கூட பல குற்றங்கள் புரிந்தவரே. அவர் ஒரு பெண், ‘தீண்டத்தகாத’ தலித் பெண், இந்தியாவில் வசித்தவர், பரம ஏழை இல்லை. அவர் தன் கணவரைவிட மிகுந்து படித்தவர். எனவே அவர்தான் குடும்பத் தலைவராகச் செயல்பட்டு வந்தார். அம்பேத்கர் அவரது நாயகராக இருந்தார். அவரது குடும்பத்தினர் இந்து மதம் துறந்து பவுத்தத்தைத் தழுவினார்கள். சுரேகாவின் குழந்தைகள் கல்வி கற்றவர்கள். சுதிர், ரோஷன் ஆகிய இரு மகன்கள் கல்லூரியில் பயின்று வந்தார்கள். அகவை 17 நிரம்பிய மகள் பிரியங்கா உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். சுரேகாவும் அவர் கணவரும் மகாராஷ்டிர மாநிலத்தில் கைர்லாஞ்சி என்னும் சிற்றூரில் சிறு மனை ஒன்று வாங்கினார்கள். இந்த மனையானது சுரேகாவின் மகர் சாதியைக் காட்டிலும் உயர்ந்தவர்களாகக் கருதிக் கொண்ட சாதியினரின் பண்ணைகளுக்கு நடுவில் அமைந்திருந்தது. அவர் தலித் என்பதாலும், எனவே நல்ல வாழ்க்கை வாழ்ந்து பார்க்கும் உரிமை அவருக்கு இல்லை என்பதாலும் கிராமப் பஞ்சாயத்து அவருக்கு மின்னிணைப்பு பெறவும், அவரது மண் குடிசையைச் செங்கல் வீடாகக் கட்டிக் கொள்ளவும் அனுமதி வழங்கவில்லை. அந்தக் கிராமத்தினர் அவரது குடும்பத்தினர் எவரையும் அவர்களின் வயல்களுக்கு வாய்க்காலிலிருந்து நீர் பாய்ச்சிக் கொள்ளவோ பொதுக் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொள்ளவோ அனுமதிக்க மறுத்தார்கள். அவர் நிலத்தின் வழியாகப் பொதுச் சாலையமைக்க முயன்றனர். சுரேகா எதிர்த்தபோது அவரது வயல்களில் மாட்டு வண்டிகளை ஓட்டினர். கால்நடைகளை அவிழ்த்து விட்டு அவரது பயிர்களை மேய விட்டனர்.

ஆயினும் சுரேகா பின்வாங்கவில்லை. காவல்துறையிடம் முறையீடு செய்தார். காவல்துறையோ அவருக்குக் காது கொடுக்கவில்லை. சில மாதங்கழித்து கிராமத்தில் பதற்ற வெப்பம் உயர்ந்து சென்றது. கிராமத்தினர் எச்சரிக்கை தரும் விதத்தில் சுரேகாவின் உறவினர் ஒருவரைத் தாக்கிக் கொன்றனர். சுரேகா காவல்துறையிடம் மீண்டும் முறையீடு செய்தார். இம்முறை காவல்துறை சிலரைக் கைது செய்தது. ஆனால் குற்றம்சாட்டப்பட்டோர் உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

dalit_kairalanji2006 செப்டம் 29 மாலை 6 மணியளவில் வெறியேறிய கிராமத்தினர் ஆண்களும் பெண்களுமாகச் சுமார் 40 பேர் உழுதுந்துகளில் சுரேகாவின் வீட்டைச் சூழ்ந்து கொண்டனர். வயல்வெளிகளுக்கு அப்பால் இருந்த அவரது கணவர் பையாலால் ஓலம் கேட்டதும் வீட்டை நோக்கி ஓடினார். அவர் ஒரு புதருக்குப் பின்னால் மறைந்திருந்தபடி அந்தக் கும்பல் தமது குடும்பத்தைத் தாக்கக் கண்டார். அவர் துஸ்லா என்ற பக்கத்து ஊருக்குச் சென்று உறவினர் ஒருவரின் உதவியுடன் காவல்துறைக்கு எப்படியோ செய்தியைத் தெரிவித்து விட்டார். (காவல்துறையினரைத் தொலைபேசியை எடுக்கச் செய்வதற்கே கூட அறிமுகங்கள் தேவை.) காவல்துறை வரவேயில்லை. அந்தக் கும்பல் சுரேகாவையும் பிரியங்காவையும் இரு பாலகர்களையும் தரதரவென வீட்டை விட்டு இழுத்து வந்தனர். இரு மகன்களில் ஒருவன் முழு விழித் திறனற்றவன். அவ்விருவரையும் தாயையும் தங்கையையும் கற்பழிக்கும்படி வெறிக்கும்பல் கட்டளையிட்டது. அவர்கள் மறுத்த போது அவர்களின் பிறப்புறுப்புகளை நசுக்கினர். இறுதியில் அடித்தே கொன்றனர். சுரேகா, பிரியங்கா இருவரையும் கும்பலாகக் கற்பழித்து அடித்துக் கொன்றனர். நான்கு உடல்களையும் அருகிலுள்ள கால்வாயில் அமுக்கினர். அடுத்த நாள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

முதலில் இந்நிகழ்வை ‘அற’கொலை என்றுதான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. சுரேகாவுக்கு உறவினர் ஒருவருடன் (ஏற்கெனவே தாக்கப்பட்டிருந்த அந்த உறவினருடன்) கள்ளத் தொடர்பு இருந்ததால் கிராமத்தினர் கவலையுற்றதாகப் பத்திரிகைகள் கூறின. தலித் இயக்கங்கள் நடத்திய பெருந்திரள் போராட்டங்கள் தந்த அழுத்தத்தில் நடந்த குற்றம் பற்றி நீதி அமைப்பு கவனம் செலுத்தத் தொடங்கியது. குடிமக்கள் உண்மையறியும் குழுக்கள் எப்படி எல்லாம் சான்று கெடுக்கப்பட்டது, அழிக்கப்பட்டது என அறிக்கை வெளியிட்டன. இறுதியாகக் கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, முக்கியக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தது, ஆனால் அட்டவணைச் சாதியினர் மற்றும் அட்டவணைப் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த மறுத்தது. அந்த நீதிபதி கைர்லாஞ்சி படுகொலை “பழிக்குப் பழி வாங்கும்” நோக்கத்தில் விளைந்த குற்றமே என்றார். கற்பழிப்புக்குச் சான்றேதும் இல்லை என்றும், கொலைக்குச் சாதி நோக்கேதும் இல்லை என்றும் கூறினார்.

ஒரு தீர்ப்பு சட்டச் சட்டகத்தை வலுவீனப்படுத்தி அந்தச் சட்டகத்தில் குற்றங்களை முன்வைப்பதும், பின்னர் அக்குற்றங்களுக்கு மரண தண்டனைகள் வழங்குவதும் இறுதியில் மேலமை நீதிமன்றங்களுக்கு அத்தண்டனையை மாற்றியமைப்பது, ஏன், குறைப்பதே கூட எளிய காரியமாகி விடுகிறது. இது ஒன்றும் இந்தியாவில் இயல்புமீறிய நடைமுறையன்று. ஒரு நீதிமன்றம் குற்றமிழைத்தோர் எவருக்கும் அவர்களின் குற்றம் எவ்வளவுதான் கொடியதாயினும் மரண தண்டனை விதிப்பது ஒன்றையே சரியான நீதியென எப்படிக் கூற முடியும்? சாதிப் பாகுபாடுகள் இந்தியாவில் கொடூரமான ஒரு மெய்மையாகத் தொடர்ந்து இருந்து வருவதாக நீதிமன்றம் ஏற்றிருந்தால் அது நீதி நோக்கிய நகர்வாக மதிக்கப்பட்டிருக்கும். இதற்கு மாறாக, அந்த நீதிபதி சித்திரத்தை விட்டுச் சாதியையே பூசி மறைந்து விட்டார்.

சுரேகா போட்மங்கேயும் அவரது குழந்தைகளும் சந்தைக்குத் தோதான ஒரு சனநாயகத்தில் வாழ்ந்து வந்தார்கள். எனவே ‘நான் சுரேகா’ வேண்டுகோள்கள் ஏதும் ஐநாவிடமிருந்தோ, இந்தியாவிடமிருந்தோ வரவில்லை. அல்லது அரசத் தலைமைகளிடமிருந்து வெறிக்கூச்சல் செய்திகள் எதுவுங்கூட வெளிவரவில்லை. எல்லாம் நன்மைக்கே, நம் மீது உலகின் மாபெருங்குண்டுகள் ஏதும் விழுவதை விரும்புவோமா என்ன? நாம் சாதியைக் கடைப்பிடிக்கிறோம் என்னும் காரணம் ஒன்று போதாதோ?

இன்றைய இந்திய அறிவாளிகள் கூட வெளிப்படுத்தத் தயங்கும் உணர்வு நடையில் அம்பேத்கர் 1945இல் எழுதினார்: ‘தீண்டப்படாதோருக்கு இந்து மதம் கொடூர அரங்காய்த் திகழ்கிறது.’ ஓர் எழுத்தாளர் சக மனிதர்களை வர்ணிப்பதற்கு ‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ போன்ற பதங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பது கொடூர அரங்கில் வாழ்வதை ஒத்ததே. அம்பேத்கர் ‘தீண்டப்படாதோர்’ என்னும் சொல்லைத் தயக்கமேதுமின்றி ஆழ்ந்த கோபத்துடன் பயன்படுத்திய காரணத்தால், நானும் அதையே செய்வேன். இன்று ‘தீண்டப்படோதோர்’ என்னும் சொல்லுக்கு மாற்றாக ‘தலித்’ (‘குலைந்துபோன மக்கள்’) என்னும் மராத்தியச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லோ ‘அட்டவணைச் சாதியினர்’ என்பதற்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அறிஞர் ரூப விஸ்வனாத் குறிப்பிடுவது போல் சரியான நடைமுறையன்று. ஏனென்றால் தலித் என்னும் பதத்துக்குள் சாதிக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க மற்ற மதங்களுக்கு மாறிய (என் கிராமத்தில் கிறித்துவத்துக்கு மாறிய பறையர் போன்ற) தீண்டப்படாதோரும் அடங்குவர். ஆனால் இவர்கள் ‘அட்டவணைச் சாதியினர்’ பதத்தில் அடங்க மாட்டார்கள். இப்படிக் கேடான ஒன்றுக்குப் பெயர்சூட்டும் சடங்கு ஒரு பக்கம் இருக்க, இந்த முயற்சியுங்கூட மூட அதிகாரிகளின் கோப்புக் குறிப்புகள் போன்று குழப்பமிக்கதாய் உள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு நான் எப்போதும் இல்லா விட்டாலும் பெரும்பாலும் கடந்தகாலம் தொடர்பாக எழுதுகையில் ‘தீண்டப்படோதோர்’ என்ற சொல்லையும், நிகழ்காலம் பற்றி எழுதுகையில் ‘தலித்’ என்ற சொல்லையும் பயன்படுத்துகிறேன். நான் மற்ற மதங்களுக்கு மாறிய தலித்துகள் பற்றி எழுதுகையில் தலித் சீக்கியர்கள், தலித் முஸ்லிம்கள் அல்லது தலித் கிறித்துவர்கள் எனக் குறிப்பிட்டு எழுதுகிறேன்.

தேசியக் குற்றப் பதிவுத் துறைக் குறிப்புகளின்படி, ஒவ்வொரு 16 நிமிடத்துக்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது; ஒவ்வொரு நாளும், நான்கு தீண்டப்படாத பெண்கள் தீண்டப்படுவோரால் கற்பழிக்கப்படுகிறார்கள்; ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள், 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள். 2012இல் மட்டும், தில்லியில் 23 அகவை நிரம்பிய பெண் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட அந்த ஆண்டில் மட்டும், 1,574 தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் (தலித்துகளுக்கு எதிரான கற்பழிப்புகளில் அல்லது ஏனைய குற்றங்களில் 10 விழுக்காடு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்பது பட்டறிவு), 651 தலித்துகள் கொல்லப்பட்டனர். இந்தக் கணக்கில் அடங்குபவை கற்பழிப்புகளும் சித்திரவதைகளும் மட்டுமே. உடையவிழ்த்து அம்மண ஊர்வலம் நடத்துதல், மலந்தின்னச் செய்தல், நில அபகரிப்பு, சமூக ஒதுக்கல், குடிநீர் கிடைக்க விடாது தடுத்தல் ஆகியவை அடங்குவதில்லை. மசாபி தலித் சீக்கியர் ஒருவர் தன் மகளைக் கூட்டாகக் கற்பழித்தோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் துணிந்ததற்காக 2005இல் அவரது இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்பட்ட செய்தி இந்தப் புள்ளி விவரங்களில் அடங்கவில்லை என்கிறார் பஞ்சாபைச் சேர்ந்த பந்த் சிங். மூவுறுப்பு துண்டிக்கப்பட்டோருக்கெனத் தனிப் புள்ளி விவரப் பதிவேதும் கிடையாதாம்.

‘சமூகத்தால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுமானால் எந்தச் சட்டமும், எந்த நாடாளுமன்றமும், எந்த நீதித்துறையும் அவர்களுக்கு உலகில் அதற்குரிய முழுப் பொருளுடன் உத்தரவாதம் அளிக்க முடியாது’ என்றார் அம்பேத்கர். மேலும் கூறினார்: ‘அமெரிக்க நீக்ரோக்களுக்கும் ஜெர்மானிய யூதர்களுக்கும் இந்தியத் தீண்டப்படாதோருக்கும் அடிப்படை உரிமைகளால் என்ன பயன்? பர்க் கூறியது போல், பெருங்கூட்டத்தினரைத் தண்டிப்பதற்கு வழியேதும் கண்டறியப்படவில்லை.’

இந்தியாவில் எந்தக் கிராமத்தைச் சேர்ந்த காவல்துறையினரையும் பார்த்து உங்கள் வேலை என்ன என்று கேட்டுப் பார்த்தால், ‘அமைதியை நிலைநாட்டுவதே’ எனக் கூறுவார். ஆம், பலநேரம் இப்படித்தான் நடக்கிறது – சாதி அமைப்பை நிலைநாட்டியபடியே. இங்கு தலித் அவா என்பதே அமைதி மீறல் ஆகும்.

இனவொதுக்கல், இனவெறி, ஆணாதிக்கம், பொருளியல் ஏகாதிபத்தியம், மத அடிப்படைவாதம் போன்ற ஏனைய சமகாலத் தீச்செயல்களை எதிர்த்துப் பன்னாட்டு மன்றங்களில் அரசியல் வகையிலும், அறிவு வகையிலும் விவாதிக்கப்பட்டுள்ளன. இதே போன்ற ஆய்வுகளிலிருந்தும், குற்றச்சாட்டுகளிலிருந்தும் இந்தியாவின் சாதி நடைமுறை, மனிதச் சமுதாயம் அறிந்துள்ள மிகக் கொடுமையான படிமுறைச் சமுதாய அமைப்புகளில் ஒன்றாகிய இந்த நடைமுறை மட்டும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தது எப்படி? ஒருவேளை சாதியம் இந்து மதத்துடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கும் காரணத்தால், அது தெய்விகம், ஆன்மிகம், அகிம்சை, சகிப்புத்தன்மை, புலால் உண்ணாமை, காந்தி, யோகா, வெளிநாட்டு யாத்ரிகர்கள், பீடில்ஸ் இசைக்குழு என அன்பும் இனிமையும் வாய்ந்த பலவற்றுடன் இணைத்துப் பேசப்படும் காரணத்தால், குறைந்தது அயலாருக்கேனும் அதனைத் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்வது முடியாத காரியமாக உள்ளது.

சிக்கல் கடுஞ்சிக்கலாகும் வகையில், சாதி என்பது இனஒதுக்கல் போன்ற ஏனைய பாகுபாடுகளைப் போலல்லாமல் நிறக்குறியீடு கொண்டது அல்ல. எனவே அதனைக் காண்பது எளிதன்று. மேலும், இனஒதுக்கல் போலன்றி உயரிடங்களில் சாதி அமைப்புக்குத் தீவிரப் பற்றாளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சாதி என்பது தனித்தனி மக்களையும் சமுதாயத்தினரையும் கருத்துக்குரிய வகையிலும் நேர்வகையிலும் பிணைக்கும் ஒரு சமுதாயப் பசை என அவர்கள் வெளிப்படையாகவே வாதிடுவர். சாதி அடிப்படையில் நடைபெறும் பாகுபாட்டையும் வன்முறையையும் இனவெறியுடனோ இனவொதுக்கலுடனோ ஒப்பிடும் கருத்தைக் கண்டு இந்திய ஆளும் வர்க்கம் திகைத்து நின்றது. தலித்துகள் 2001இல் டர்பனில் நடைபெற்ற இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டில் சாதியை ஒரு பிரச்சினையாக எழுப்ப முயன்ற போது இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைக் கடுமையாகச் சாடியது, சாதி ஒரு உள்நாட்டுப் பிரச்சினை எனச் சொன்னது. இதனை முன்வைத்த நன்கறிந்த சமூகவியலர்கள் பலர் சாதி நடைமுறை இனப் பாகுபாடு போன்றதன்று எனவும், சாதி இனத்தைப் போன்றதன்று எனவும் வாதிட்டனர்.

அம்பேத்கரால் அவர்களுடன் வாதிட்டிருக்க முடியும். ஆனால் டர்பன் மாநாட்டின் பொருளுக்கு உட்பட்டு தலித் வினைஞர்கள் முன்வைத்த கருத்து என்னவென்றால், சாதி என்பது இனத்தைப் போன்றதன்று என்றாலும், சாதியமும் இனவெறியும் ஒப்பிடத்தக்கவையே. இரு பாகுபாட்டு வடிவங்களுமே மக்களை அவர்களின் மரபுவழிசார்ந்து குறி வைக்கின்றன. இந்த உணர்வுக்கு உறுதிப்பாடு அளிக்கும் வகையில், 2014 சனவரி 15 அன்று இளைய மார்டின் லூதர் கிங்கின் 85ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி வாஷிங்டனில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கையெழுத்திட்ட ‘பரிவுச் சாற்றுரை’ ஆனது ‘இந்தியாவில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்கு’ ஒரு முடிவு தேவை என அழைப்பு விடுத்தது.

அடையாளமும் நீதியும், வளர்ச்சியும் மேம்பாடும் என்பன தொடர்பான நிகழ் வாதுரைகளில் பங்கேற்கும் நன்கறிந்த இந்திய அறிஞர்கள் பலரையும் பொறுத்த வரை, சாதி என்பது மிஞ்சிப் போனால் ஒரு தலைப்பு அல்லது ஒரு துணைத் தலைப்பு மட்டுமே, அல்லது வெறும் அடிக்குறிப்புதான். இடதுசாரிச் சார்பான இந்திய முற்போக்கு அறிவாளிக் கூட்டம் சாதியை சுருக்கல்வாத மார்க்சிய வர்க்கப் பகுப்பாய்வுக்கு வலிந்து பொருத்துவதன் மூலம் அதனை இன்னும் கடினமானதாக்கி விட்டார்கள். இந்தத் துடைத்தழிக்கும் போக்கு, காணாதிருக்கும் திட்டம் ஆகிய இரண்டும் சிலநேரம் அறிந்தே செய்யும் அரசியல் நடவடிக்கையாக உள்ளது; இருட்டோ, சாதியோ, நாங்கள் எதிலும் தடுக்கி விழுந்ததில்லை என்பதால் அது பெரியம்மை போன்றே அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதிக் கொள்ளும் மேட்டுக்குடி வர்க்கத்திடமிருந்து இவ்விரு கருத்துகளும் சிலநேரம் வெளிப்படக் காண்கிறோம்.

சாதியின் தோற்றுவாய் குறித்து வரவிருக்கும் ஆண்டுகளில் மானிடவியலர்கள் தொடர்ந்து விவாதிப்பர். ஆனாலும் படிமுறைத்தன்மையும், மேலிருந்து கீழான பொறுப்புகள், கடப்பாடுகள் எனப்படும் அளவீடுகளையும், புனிதத்தையும் தீட்டையும் அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட சாதிக் கொள்கைகளை, அவை அன்றும் இன்றும் கண்காணிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்ற வழிகளைப் புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் கடினமான காரியமல்ல. சாதிப் பிரமிடின் உச்சி புனிதமானதாகவும், ஏராளமான பொறுப்புகள் உடையதாகவும் கருதப்படுகிறது. அடி தீட்டானதாகவும், பொறுப்புகளேதுமில்லை என்றாலும் ஏராளமான கடமைகள் உடையதாகவும் கருதப்படுகிறது. இந்தத் தீட்டுபுனித வார்ப்பு சாதியடிப்படையிலான குலத் தொழில் என்னும் விரிந்து பரந்த அமைப்பு ஒன்றுடன் இணைக்கப்படுகிறது.

இன்றும் நாம் அழைக்கும் சாதி அமைப்பு என்பது இந்து சமய மூல நூல்களில் நால்வர்ண அமைப்பாகிய வர்ணாசிரம தர்மம் அல்லது சதுர்வர்ணம் என அறியப்படுகிறது. இந்துச் சமுதாயத்தில் சுமார் 4,000 அகமணச் சாதிகளும், உட்சாதிகளும் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றுக்கும் அதற்கேயான வழிவழிவந்த தொழில்கள் உண்டு. இந்தத் தொழில்கள் பார்ப்பனர்கள் (புரோகிதர்கள்), சத்ரியர்கள் (படையாட்கள்), வைசியர்கள் (வணிகர்கள்), சூத்திரர்கள் (பணியாட்கள்) என நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த வர்ணங்களுக்கு வெளியே இருப்பவர்கள் அவர்ணர்கள், ஆதி சூத்திரர்கள், இழிமனிதர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர். தீண்டத்தகாதோர், காணத்தகாதோர், அண்டத்தகாதோர் என்ற வகையில் அவர்களுக்கே உரிய படிவரிசைகளில் அடுக்கப்பட்டுள்ளனர். அதாவது அவர்களின் இருப்பும் தொடுதலும், ஏன், நிழலே கூட உயர்சிறப்புச் சாதி இந்துக்களைத் தீட்டாக்கி விடுமெனக் கருதப்படுகிறது.

சில சமூகங்களில் உட்குருதிக் கலப்பைத் தடுக்கும் வகையில் அகமணச் சாதிகள் புறமணக் கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அகமணமுறை கண்காணிக்கப்படுகிற அதே அதி கொடூரமான வழிமுறைகளின் வாயிலாக – சமூகத்தில் மூத்தோரின் இசைவுடன் நடத்தப்படும் தலைத்துண்டிப்புகள், கட்டைப் பஞ்சாயத்துக்கள் போன்ற செயல்பாடுகளின் வாயிலாக – புறமணமுறையும் கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அதற்கே உரித்தான வகையில் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சாதிவாதக் கொடூர வடிவங்கள் உள்ளன. எழுதப்படாத இந்த நெறிமுறைகள் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பழைய ஜிம் க்ரோ சட்டங்களை விட மோசமானவை. முன்பு தீண்டப்படாதோர் தனிக் குடியிருப்புகளில் வாழக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு உயர்சிறப்புச் சாதியினர் பயன்படுத்தும் சாலைகளைப் பயன்படுத்த அனுமதியில்லை, பொதுக் கிணறுகளில் நீரருந்த அனுமதியில்லை, இந்துக் கோயில்களில் நுழைய அனுமதியில்லை, உயர்சிறப்புச் சாதிப் பள்ளிக்கூடங்களில் நுழைய அனுமதியில்லை, மேலுடம்பை மூடி மறைத்துக் கொள்ள அனுமதியில்லை, குறிப்பிட்ட உடைகளை மட்டுமல்ல, குறிப்பிட்ட நகைகளை அணிந்து கொள்ளவும் அனுமதியில்லை. அம்பேத்கர் பிறந்த மகர் போன்ற சில சாதியினர் தங்களின் தீட்டான பாதச் சுவடுகளைப் பெருக்கித் தள்ளுவதற்காக இடுப்பில் விளக்குமாறுகளைக் கட்டிக் கொள்ள வேண்டியிருந்தது; வேறு சில சாதிகள் தங்களின் தீட்டு எச்சிலைச் சேகரிப்பதற்கெனக் கழுத்தில் சட்டிகளைத் தொங்க விட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. உயர்சிறப்புச் சாதி ஆண்களுக்குத் தீண்டத்தகாத பெண்களின் உடல் மீது கேள்வி கேட்கவியலாத உரிமைகள் இருந்தன. காதல் தீட்டானது; கற்பழிப்பு புனிதமானது. இதைப் போன்ற பலவும் இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்றும் தொடர்கின்றன.

மனிதனோ தெய்வமோ, இத்தகையதொரு சமுதாய ஏற்பாட்டை சிந்தனையில் வடித்தெடுத்த கற்பனை பற்றிச் சொல்வதற்கு இனியும் என்ன இருக்கிறது? வர்ணாசிரம தர்மம் ஒன்று போதாது என்பது போல் கர்மம் என்னும் சுமை வேறு அழுத்துகிறது. கீழ்ச் சாதியில் பிறந்தோர் அவர்களின் கடந்தகாலப் பாவச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. செயலளவில், அவர்கள் தங்களுக்குரிய சிறைத் தண்டனையைத்தான் கழித்து வருகிறார்களாம். அடங்க மறுத்து அத்துமீறுபவர்களுக்குக் கூடுதல் தண்டனையே கிடைக்கும், அதாவது அவர்கள் தீண்டப்படாதவராகவோ சூத்திரராகவோ மறுபிறப்பு எடுக்க வேண்டுமாம். எனவே பார்த்து நடந்து கொள்வதே நல்லது.

gandhi_246சாதி அமைப்பைக் காட்டிலும் தரந்தாழ்ந்த ஒரு சமுதாய அமைப்பு இருக்க முடியாது என்றார் அம்பேத்கர். ‘உதவும் செயல்களில் ஈடுபட விடாது மக்களை மந்தப்படுத்தும், முடக்கிப் போடும், ஊனப்படுத்தும் அமைப்பிது.’ இதனை உலகின் மிகப் புகழ்வாய்ந்த இந்தியரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மறுதலித்தார். சாதி இந்தியச் சமுதாயத்தின் மாண்பைக் குறித்திடுவதாக அவர் நம்பினார். 1921இல் அவரது நவஜீவன் என்னும் குசராத்தி ஏட்டில் எழுதினார்:

‘இந்துச் சமுதாயத்தால் நிமிர்ந்து நிற்க முடிகிறது என்றால், அது சாதி அமைப்பின் மீது நிறுவப்பட்டிருப்பதே காரணம்… சாதி அமைப்பை அழித்து மேற்கத்திய ஐரோப்பியச் சமுதாய அமைப்பை ஏற்றுக் கொள்வதென்றால், சாதி அமைப்பின் ஆன்மாவாகத் திகழும் குலத் தொழில் கொள்கையைக் கைவிடுவதாகத்தான் பொருள். குலக் கொள்கை ஒரு நிலைபேற்றுக் கொள்கை ஆகும். இதை மாற்றுவது சீர்குலைவை உண்டாக்கும். நான் பிராமணரை வாழ்நாள் முழுதும் பிராமணர் என்றே அழைக்காது இருப்பேனேயானால் அவரால் எனக்கு ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. ஒவ்வொரு நாளும் பிராமணர் சூத்திரராகவும், சூத்திரர் பிராமணராகவும் மாறிக் கொண்டே இருந்தால் குழப்பமே மிஞ்சும்.’

காந்தி சாதிய அமைப்பின் அன்பராக இருந்தார் என்ற போதிலும், சாதிகளுக்கு இடையே படிநிலைகளேதும் இருக்கக் கூடாது என நம்பினார்; அதாவது எல்லாச் சாதிகளையும் சமமாகக் கருத வேண்டும், ஆதி சூத்திரர்களாகிய அவர்ணச் சாதியினரை வர்ண அமைப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றார். இதற்கு அம்பேத்கர் சொன்ன பதில்: ‘புறச்சாதியினர் சாதி அமைப்பின் விளைபொருளே ஆவர். சாதிகள் இருக்கும் வரை புறச்சாதியினரும் இருப்பர். சாதி அமைப்பை நொறுக்குவது ஒன்றைத் தவிர வேறெதுவும் புறச்சாதியினரை விடுவித்து விடாது.’

ஏகாதிபத்திய பிரித்தானிய அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் 1947 ஆகஸ்டில் அதிகாரக் கைமாற்றம் நடைபெற்று 70 ஆண்டுகள் ஓடி விட்டன. சாதி பழங்கதையாகி விட்டதா?

நிறைய மாறி விட்டன. இந்தியாவுக்கு ஒரு தலித் குடியரசுத் தலைவர் (கே. ஆர். நாராயணன்), ஒரு தலித் தலைமை நீதிபதி எல்லாம் கிடைத்தாகி விட்டது. தலித்துகளும் இதர கீழ்ச் சாதிகளும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சிகளின் எழுச்சிக்கும் பஞ்சமில்லை. இது ஒருவகையில் புரட்சிகர வளர்ச்சியே. சிறிதாயினும் புலப்படத்தக்க அளவில் வளர்ந்துள்ள ஒரு சிறுபான்மைத் தலைமையே பரந்த பெரும்பான்மையினரின் கனவுகளை வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு வடிவத்துக்கே அப்புரட்சி வழிவகுத்துள்ளது என்றாலும், நமது வரலாற்றை வைத்துப் பார்த்தால், அரசியல் அரங்கில் தலித் பெருமிதம் ஓங்கி ஒலிப்பது நன்மைக்கே. பகுஜன் சமாஜ் கட்சி போன்ற இயக்கங்களுக்கு எதிராக அவர்கள் ஊழல்வாதிகள் என்றும், இதயமற்றவர்கள் என்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஏனைய பழைய கட்சிகளுக்கு இன்னும் நன்றாகவே பொருந்தும். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மட்டும் நாராசமாக உரத்து ஒலிக்கின்றன. இதற்கு மாயாவதி போன்ற அதன் தலைவர் ஒரு தலித் என்பதும், திருமணமாகாத பெண் என்பதும், இவ்விரண்டு குறித்தும் வருத்தப்படாத மனிதர் அவர் என்பதுமே காரணம். பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைச் சரிவுகள் என்னவாயினும், தலித் கண்ணியத்தைக் கட்டியமைத்ததில் அதற்குரிய பங்களிப்பு என்பது ஓர் ஆழ்ந்த அரசியல் பணியாகும். இதனை ஒருபோதும் சுருக்கி விடக் கூடாது. ஆனால் இதில் துயரம் என்னவென்றால், கீழ்நிலைச் சாதிகளும் நாடாளுமன்ற சனநாயகத்தில் குறிப்பிடத்தக்க ஓர் ஆற்றலாக வளர்ந்து வந்தாலும் சனநாயகமே மெய்யாகவும் கட்டமைப்பு வகையிலும் சிதைந்து வருகிறது.

ஒரு காலத்தில் கூட்டுசேரா இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்த இந்தியா சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பிறகு தடம்மாறி அமெரிக்காவின், இஸ்ரேலின் ‘இயற்கைப் பங்காளியாக’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டு விட்டது. 1990களில் விறுவிறுப்பான பொருளியல் சீர்திருத்தச் செயல்வழிகளில் இந்தியா ஈடுபடத் தொடங்கியது. ஏற்கெனவே பாதுகாக்கப்பட்டு வந்த சந்தையை உலக மூலதனத்துக்குத் திறந்து விட்டது. இதன் பொருட்டு 50 ஆண்டுக்கு மேலாகப் பொதுப் பணத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த இயற்கை ஆதாரங்களும், இன்றியமையா சேவைகளும், தேசிய அகக்கட்டமைப்பும் இப்போது பன்னாட்டுக் குழுமங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன. இருபதாண்டு கழித்து நிகர உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் (இப்போது மெதுவாகி வருகிறது என்றாலும்) அருமையாக இருப்பது உண்மைதான். ஆனால் புதிய பொருளியல் கொள்கைகள் செல்வக் குவியல் சிற்சிலரின் கைகளைச் சென்றடைவதற்கே வழிவகுத்துள்ளன. இன்று, இவர்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் இந்த நிகர உள்நாட்டு உற்பத்தியில் நாலில் ஒரு பங்குக்குச் சமமான சொத்துக்கள் இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் கைகளில் உள்ளன. 120 கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தில் 80 கோடிக்கு மேற்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான தொகையை வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். சொல்லப் போனால், பேருருக் குழுமங்களே இந்த நாட்டை அதன் உடைமையாளர்களாகத் திகழ்ந்து வழிநடத்தி வருகிறார்கள். அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் பெரு வணிகத்தின் கீழியங்கும் குழுமங்களாகத் தொடங்கி விட்டார்கள்.

இது வழிவழிவந்த சாதி வலைப்பின்னல்களை எப்படிப் பாதித்துள்ளது? மேற்கத்தியச் சமுதாயம் தொழில் புரட்சிக்குப் பிறகு பிளவுபட்டுத் தனித் தனி அலகுகளான நிலை இந்தியச் சமுதாயத்துக்கு ஏற்படாமல் சாதி பாதுகாத்துள்ளதாகச் சிலர் வாதிடுகிறார்கள். வேறு சிலர் இதற்கு நேர்மாறாக வாதிடுகின்றனர்; முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்து வரும் நகர்மயமும் புதிய வேலைச் சூழலின் உருவாக்கமும் சாதிப் படிநிலைகளைப் பழங்கதையாக்கி விடவில்லை என்றாலும் பொருளற்றதாக்கி விட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். இரு கூற்றுகளும் முக்கியக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய செய்திகளே. கீழே அவ்வளவு முழுமையில்லாத செய்திகள் இடைப்படுவதற்கு வருந்துகிறேன் என்றாலும், பொதுமைப்படுத்தல்கள் புற உண்மைகளுக்கு மாற்றீடாகது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் ஃபோர்ப்ஸ் ஏடு வெளியிட்டுள்ள உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 55 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இயல்பாகவே இந்த மதிப்புகள் வெளியில் தெரிவிக்கப்பட்ட செல்வத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த 55 செல்வந்தர்களின் நடுவில் கூட செல்வப் பரவல் என்பது குத்துப் பிரமிடாகத்தான் உள்ளது. அதில் முதல் 10 பணக்காரர்களின் செல்வம் அவர்களுக்குக் கீழுள்ள 45 பேரின் செல்வத்தையும் விஞ்சி நிற்கிறது. முதல் 10 பேரில் எழுவர் வைசியர்கள், அனைவரும் உலகெங்கும் வணிக நலன்களைக் கொண்ட பெருங்குழுமங்களின் முதன்மைச் செயற்பாட்டு அலுவலர்கள் ஆவர். அவர்கள் துறைமுகங்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், வளி வயல்கள், கப்பல் குழுமங்கள், மருந்துக் குழுமங்கள், தொலைபேசி வலைப்பின்னல்கள், பெட்ரோவேதி ஆலைகள், திரைப்படத் தயாரிப்புக் குழுமங்கள், தண்டு செல் சேமிப்பு அமைப்புகள், மின் வழங்கல் வலைப்பின்னல்கள், சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் ஆகியவற்றைச் சொந்தமாக நடத்தி வருகிறார்கள். மீதமுள்ள 45 பேரில் 19 பேர் வைசியர்கள். இதில் மிஞ்சிய 26 பேரில் பெரும்பாலானவர்கள் பார்சிகள், போரர்கள், கத்ரியர்கள் (அனைவரும் வணிகச் சாதியினர்), பார்ப்பனர்கள் ஆவர். இந்தப் பட்டியலில் தலித்துகளுக்கோ ஆதிவாசிகளுக்கோ இடமில்லை.

பனியாக்கள் (வைசியர்கள்) பெருவணிகம் மட்டுமல்ல, நகரங்களின் சிறு வணிகங்கள் மீதும் உறுதியான பிடியை வைத்துள்ளனர். தறிகெட்டுயரும் கடன் பொறியில் மாட்டித் தவிக்கும் கோடிக்கணக்கான ஏழை உழவர்களையும் மத்திய இந்தியாவின் ஆழ் காடுகளில் வாழ்வோருள்ளிட்ட ஆதிவாசிகளையும் கொண்ட இந்த நாடெங்கிலும் பனியாக்கள் பாரம்பரியக் கிராமக் கடன்வணிகத்திலும் செழித்து வளர்கின்றனர். அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அசாம் ஆகிய பழங்குடிகள் அதிகம் வசிக்கும் இந்திய வடகிழக்கு மாநிலங்கள் ‘விடுதலைக்கு’ பிறகு போராட்டங்களையும் இராணுவமயமாக்கலையும் இரத்தக்களரிகளையும் சந்தித்து வருகின்றன. இவை அனைத்துக்கும் நடுவில் மார்வாரிகளும் பனியாக்களும் அங்கு குடியேறி அடக்கி வாசித்துத் தங்கள் வணிகத்தை நிலைநிறுத்திக் கொண்டு விட்டனர். அவர்கள் இப்போது இந்தப் பகுதியில் பொருளியல் நடவடிக்கை அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சாதியை ஒரு கூறாகக் கொண்டு கடைசியாக நடத்தப்பட்ட 1931 கணக்கீட்டின்படி, மக்கள்தொகையில் வைசியர்களின் தொகை 2.7 விழுக்காடு, அதேபோது தீண்டப்படாதோரின் தொகை 12.5 விழுக்காடு. பனியாக்களுக்குக் கிடைக்கும் நலவாழ்வுச் சேவைகளையும், அவர்களின் குழந்தைகளுக்குள்ள நல்ல உறுதியான எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டால், அவர்கள் தொகை மிகுந்திருப்பதைக் காட்டிலும் குறைந்திருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். எப்படிப் பார்த்தாலும், புதிய பொருளியல் சூழலில் அவர்களின் பொருளியல் செல்வாக்கு அசாதாரணமானது. பெரு வணிகமாகட்டும் சிறு வணிகமாகட்டும், உழவுத் துறையாகட்டும் தொழில் துறையாகட்டும், அவற்றில் நமக்குத் தென்படுவது எல்லாம் மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் சாதியத்தையும் முதலாளியத்தையும் ஒன்றாய் உருக்கி வார்த்த தனித்துவமான இந்தியக் கலவை மட்டுமே.

வைசியர்கள் அவர்களுக்குத் தெய்வத்தால் விதிக்கப்பட்ட கடமையைத்தான் செய்கிறார்கள். கிமு 350 வாக்கில் எழுதப்பட்ட தொன்மையான இந்திய அரசியல் நூலாகிய அர்த்தசாத்திரம் கடுவட்டி பெறுவது வைசியர்களின் உரிமை என்கிறது. (கிபி 150 வாக்கில்) தொன்மையான இந்துச் சட்ட நூலாகிய மனுஸ்மிருதி இன்னும் மேலே போய், உயர்ந்தேறிச் செல்லும் வட்டி வீதங்களை அறிவிக்கிறது: மாத வட்டி பார்ப்பனர்களுக்கு 2 விழுக்காடு, சத்ரியர்களுக்கு 3 விழுக்காடு, வைசியர்களுக்கு 4 விழுக்காடு, சூத்திரர்களுக்கு 5 விழுக்காடு. ஆண்டு அடிப்படையில் பார்ப்பனர்கள் 24 விழுக்காடு வட்டி கொடுக்க வேண்டும், சூத்திரர்களும் தலித்துகளும் 60 விழுக்காடு தர வேண்டும். இன்றுங்கூட, வட்டித் தொழில் செய்வோர் விரக்தியில் இருக்கும் உழர்களிடமும் நிலமற்ற கூலிகளிடமும் 60 விழுக்காடு (அல்லது இன்னுங்கூடுதல்) வட்டி வாங்குவது சாதாரண நிகழ்வே. அவர்களால் பணமாக அடைக்க முடியா விட்டால், ‘உடல்வகை வட்டி’ எனப்படுவதை அவர்கள் செலுத்த வேண்டும். அதாவது அவர்கள் அடைக்கவியலாக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகத் தலைமுறை தலைமுறையாக வட்டிக்காரரிடம் உழைத்து உழல வேண்டும். கீழ்ச் சாதியைச் சேர்ந்த எவரிடமும் ஊழியம் செய்யும்படி எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாதென மனுஸ்மிருதி கட்டளையிடுவதாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

வைசியர்கள் இந்திய வணிகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பூதேவர்களாகிய பார்ப்பனர்கள் செய்வதென்ன? 1931 கணக்கெடுப்பின்படி அவர்களின் தொகை 6.4 விழுக்காடு. ஆனால் அவர்களின் மக்கள்தொகையும் வைசியர்களுக்குக் கூறிய அதே காரணங்களினால் அனேகமாகக் குறைந்திருக்கும். வளரும் சமுதாயங்களின் ஆராய்ச்சிக்கான மையம் [Centre for the Study of Developing Societies (CSDS)] என்ற அமைப்பு வெளியிட்ட கணக்கெடுப்பின்படி, நாடாளுமன்றத்தில் பார்ப்பனர்களுக்கு அவர்களின் தகவுப்பாட்டுக்கு மீறி இருந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதித்துவம் இன்று மிக வேகமாகக் குறைந்துவரக் காண்கிறோம். அப்படியானால் பார்ப்பனர்களின் செல்வாக்கு இன்று குறைந்து விட்டதாய்க் கொள்ளலாமா?

அம்பேத்கரின் கருத்துப்படி, 1948இல் சென்னை மாகாண மக்கள் தொகையில் 3 விழுக்காட்டினராக இருந்த பார்ப்பனர்கள் அரசுப் பணிகளில் அரசிதழ்ப் பதிவுள்ள 37 விழுக்காட்டுப் பதவிகளையும், அரசிதழ்ப் பதிவற்ற 43 விழுக்காட்டுப் பதவிகளையும் வகித்து வந்தனர். இந்தப் போக்குகளைக் கணக்கு வைத்துக் கொள்வதற்கான நம்பத்தகுந்த வழிமுறையேதும் இப்போது இல்லை. 1931க்குப் பிறகு இந்தத் திட்டப்பணி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாததே காரணம். நமக்குக் கட்டாயம் கிடைத்தாக வேண்டிய இந்தத் தகவல்கள் கைவசம் இல்லாத காரணத்தால், நம்மால் கண்டறிய முடிவதை வைத்துக் கொண்டுதான் எதையும் செய்தாக வேண்டும். 1990இல் பார்ப்பனர் ஆற்றல் [Brahmin Power] எனத் தலைப்பிட்டு குஷ்வந்த் சிங் எழுதினார்:

‘பார்ப்பனர்களின் மக்கள்தொகை நமது நாட்டில் 3.5 விழுக்காட்டுக்கு மேல் இல்லை… இன்று அவர்கள் அரசுப் பணிகளில் 70 விழுக்காடு என்னுமளவுக்கு அமர்ந்துள்ளார்கள். இந்தக் கணக்கு அரசிதழ்ப் பதிவுபெற்ற பதவிகளை மட்டுமே குறிப்பதாகக் கருதுகிறேன். குடியியல் பணிகளின் முதுநிலை அடுக்குகளில் துணைச் செயலர் பதவிகள் தொடங்கி மேல் நோக்கிச் சென்றால், 500 பேரில் 63 விழுக்காட்டினர், அதாவது 310 பேர் பார்ப்பனர்கள். 26 மாநில முதன்மைச் செயலர்களில் 19 பேர் பார்ப்பனர்கள்; 27 ஆளுனர்கள் மற்றும் துணை ஆளுனர்களில் 13 பேர் பார்ப்பனர்கள்; 19 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர்கள்; 330 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 166 பேர் பார்ப்பனர்கள்; 140 அரசுத் தூதர்களில் 58 பேர் பார்ப்பனர்கள்; மொத்த இந்திய நிர்வாகப் பணி அதிகாரிகள் 3,300 பேரில் 2,376 பேர் பார்ப்பனர்கள்; தேர்தல் பதவிகளிலும் மேலோங்கித் திகழ்கின்றனர்; 508 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் பார்ப்பனர்கள்; 244 மாநிலங்களவை உறுப்பினர்களில் 89 பேர் பார்ப்பனர்கள்; ஆக, இந்திய இருப்பில் இருக்கும் பசைப் பதவிகள் அனைத்திலும் 36 முதல் 63 விழுக்காடு வரையிலான இடங்களை 3.5 விழுக்காட்டுப் பார்ப்பனச் சமுதாயம் அனுபவித்து வருவதையே இந்தப் புள்ளிவிவரங்கள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதற்குப் பார்ப்பனர்களின் உயர் அறிவுத் தகவே [மினி] காரணமென நம்புவது கடினமே.’

சிங் குறிப்பிடும் இந்தப் புள்ளி விவரங்கள் வெளிவந்து கால் நூற்றாண்டாகி விட்டது. இவ்வகையில் புதிதாகக் கணக்கீடு ஏதும் கிடைத்தால் நல்லது என்றாலும், வருங்காலத்தில் அது நடப்பது போல் தெரியவில்லை. வளரும் சமுதாயங்களின் ஆராய்ச்சிக்கான மையம் அளிக்கும் விவரங்களின்படி, 1950 முதல் 2000 வரையிலான காலத்தில் அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 47 விழுக்காட்டினர் பார்ப்பனர்கள், உயர் நீதிமன்றங்களிலும் கீழமை நீதிமன்றங்களிலும் இணை நீதிபதிகளில் 40 விழுக்காட்டினர் பார்ப்பனர்கள். பிற்பட்ட வகுப்பினர் ஆணையம் வழங்கிய 2007 அறிக்கையின்படி, இந்திய அதிகார வர்க்கத்தின் 37 விழுக்காட்டை நிரப்புவது பார்ப்பனர்களே. இவர்களில் பெரும்பாலார் உயர் பதவிகளில் அமர்ந்திருந்தனர்.

பார்ப்பனர்கள் காலங்காலமாகவே ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 2006இல் வளரும் சமுதாயங்களின் ஆராய்ச்சிக்கான மையம் புது தில்லி ஊடகங்களில் உயர் பொறுப்பில் இருப்போரின் சமூக விவரம் குறித்து ஆய்வு செய்தது. அதன்படி, தில்லியை மையமாகக் கொண்டு செயல்படும் 37 இந்தி, ஆங்கில ஏடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் 315 பேரில் ஆங்கில அச்சூடகத்தில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினரும், தொலைக்காட்சியில் 79 விழுக்காட்டினரும் ‘உயர் சாதியினர்’ ஆவர். இவர்களில் 40 விழுக்காட்டினர் பார்ப்பனர்கள். 315 பேரில் ஒருவர் கூட தலித்தோ ஆதிவாசியோ இல்லை. 4 விழுக்காட்டினர் மட்டுமே சூத்திரப் பதவி வழங்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்; 3 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் (மக்கள் தொகையில் இவர்கள் விழுக்காடு 13.4).

இது இதழியலர்கள் பற்றிய ‘ஊடக ஆளுமைகளின்” கதைதான். இவர்கள் பணியாற்றும் பெரும் ஊடகங்களின் உரிமையாளர்கள் யார்? நான்கு முக்கிய ஆங்கிலத் தேசிய நாளிதழ்களில் மூன்று வைசியக் குடும்பங்களுக்கும், ஒன்று பார்ப்பனக் குடும்பத்துக்கும் சொந்தமானவை. டைம்ஸ் ஆஃப் இந்தியா, 24 மணிநேரச் செய்தித் தொலைக்காட்சி டைம்ஸ் நவ் ஆகியவற்றை உரிமையாகக் கொண்டு இந்தியாவிலேயே மாபெரும் மக்கள் ஊடகக் குழுமமாகத் திகழ்கிற டைம்ஸ் ஊடகக்கோவை (டைம்ஸ் க்ரூப்) ஜைன பனியா குடும்பத்தின் கைகளில் உள்ளது; இந்துஸ்தான் டைம்ஸ் மார்வாரி பனியாக்களாகிய பார்தியர்களின் கைகளில் உள்ளது; இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டை நடத்தி வரும் கோயங்காக்களும் மார்வாரி பனியாக்களே; இந்து ஏட்டை நடத்துவது பார்ப்பனக் குடும்பம்; ஐந்தரை கோடி சுற்றுப்படி விற்பனையுடன் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் இந்தி நாளேடாகிய தைனிக் ஜாக்ரன் கான்பூர் பனியாக்களாகிய குப்தா குடும்பத்தினரிடம் உள்ளது. ஒன்றரைக் கோடிக்கு மேற்பட்ட சுற்றுப்படி விற்பனையுடன் இந்தி நாளேடுகளில் மிகுந்த செல்வாக்குடன் திகழும் தைனிக் பாஸ்கர் அகர்வால்களின் கைகளில் உள்ளது, இவர்களும் பனியாக்களே. (குஜராத்தி பனியா முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான) ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 27 முக்கியத் தேசிய, வட்டாரத் தொலைக்காட்சிகளின் பங்குகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தேசியத் தொலைக்காட்சிச் செய்திகள் மற்றும் கேளிக்கை வலைப்பின்னல்களிலேயே மிகப் பெரியதான ஜீ டிவி நெட்வொர்க்கின் உரிமையாளரான சுபாஷ் சந்திராவும் ஒரு பனியாவே. (தென்னிந்தியாவில், சாதி சற்றே மாறுபட்ட வடிவம் எடுக்கிறது. எடுத்துக்காட்டாக, செய்தித்தாள்களையும் உலகின் மிகப் பெரும் திரைப்பட நகரையும் 12 தொலைக்காட்சிகளையும் கைகளில் வைத்திருக்கும் ஈநாடு ஊடகக்கோவை ஆந்திராவில் கம்மா வேளாண் சாதியைச் சேர்ந்த ராமோஜி ராவுக்குச் சொந்தமானது. இது பெரும் ஊடகங்கள் மீதான பார்ப்பனபனியா உடைமைப் போக்கை இன்னும் துரிதப்படுத்துகிறது. மற்றொரு பெரும் ஊடக இல்லமான சன் டிவி ஊடகக்கோவை மாறன்களுக்குச் சொந்தமானது, இவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்றாலும், அரசியல் வகையில் ஆற்றல் மிக்கவர்கள்.)

இந்திய அரசு விடுதலைக்குப் பிறகு வரலாற்றுப் பிழையைச் சரியாக்கும் முயற்சியில் பல்கலைக்கழகங்களிலும் மாநில அரசுத் துறை வேலைவாய்ப்புகளிலும் அட்டவணைச் சாதியினருக்கும் அட்டவணைப் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கும் கொள்கையை (நேர்வகைப் பாகுபாட்டு முறையை) நடைமுறைப்படுத்தியது. மைய ஓட்டத்துக்குள் ஊடுடைப்புச் செய்ய அட்டவணைச் சாதியினருக்கு இடஒதுக்கீடு மட்டுமே ஒரே வாய்ப்புவழியாகும். (ஏனைய மதங்களுக்கு மாறினாலும் தொடர்ந்து பாகுபாடுகளைச் சந்தித்து வரும் தலித்துகளுக்கு இக்கொள்கை பொருந்தாதுதான்.) இடஒதுக்கீட்டுக் கொள்கைக்குத் தகுதியடைவதற்கு தலித் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டியது அவசியம்.

அரசுத் தரவுகளின்படி, 71.3 விழுக்காட்டு அட்டவணைச் சாதி மாணவர்கள் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்குவதே இல்லை. இதன் பொருள் கீழ்நிலை அரசுப் பணியிடங்களுக்கேகூட இடஒதுக்கீட்டுக் கொள்கை நான்கு தலித்துகளில் ஒருவருக்கே பொருந்தும். வெள்ளைச்சட்டைப் பணியிடங்களுக்கான சிறுமத் தகுதி ஒரு பட்டப் படிப்பு ஆகும். 2001 மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி, 2.24 விழுக்காட்டு தலித் மக்களே பட்டதாரிகள். இடஒதுக்கீட்டுக் கொள்கை தலித்துகளில் ஒரு சிறு விழுக்காட்டினருக்கு மட்டுமே பொருந்துகிறது என்றாலும், அது அவர்களுக்குப் பொதுச் சேவைத் தளங்களில் நுழைந்து மருத்துவர்களாகவும் கல்வி அறிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும், நீதிபதிகளாகவும், காவல்துறை அதிகாரிகளாகவும், குடியியல் பணி அலுவலர்களாகவும் திகழும் வாய்ப்புவழியைத் திறந்துவிட்டுள்ளது. அவர்களின் எண்ணிக்கை சிறிதே என்றாலும், அதிகார மட்டங்களில் கொஞ்சம் தலித் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்ற உண்மை பழைய சமுதாயச் சமன்பாடுகளை மாற்றியமைக்கிறது. சில பத்தாண்டு முன்பு கற்பனை செய்திராத சூழல்களை, காட்டாக, இன்று ஒரு தலித் குடியியல் பணியாளரின் கீழ் ஒரு பார்ப்பன எழுத்தர் பணியாற்றுவது போன்ற நிலைமைகளை உருவாக்கித் தருகிறது. தலித்துகள் தமக்குத் தாமே வென்று காட்டியுள்ள இச்சிறு வாய்ப்புவழியையுங்கூட உயர்சிறப்புச் சாதிப் பகைமை என்னும் கோட்டை தடுத்து நிறுத்துகிறது.

ambedkar_267எடுத்துக்காட்டாக, அட்டவணைச் சாதியினர் மற்றும் அட்டவணைப் பழங்குடியினருக்கான தேசிய ஆணைய அறிக்கையின்படி, கூட்டுரிமை படைத்த பொதுத் துறை நிறுவனங்களில் ‘A நிலை’ அலுவலர்களில் 8.4 விழுக்காட்டினரே அட்டவணைச் சாதியினர், ஆனால் இந்த எண்ணிக்கை 15 விழுக்காடாக இருக்க வேண்டும். இதே அறிக்கை இந்திய நீதித் துறைகளில் தலித்துகளுக்கும் ஆதிவாசிகளுக்குமான பிரதிநிதித்துவம் குறித்து மனங்கலங்கும் புள்ளி விவரங்கள் சிலவற்றை முன்வைக்கிறது: தில்லியில் 20 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் கூட அட்டவணைச் சாதியைச் சேர்ந்தவரல்ல, மற்றெல்லா நீதித்துறைப் பதவிகளையும் எடுத்துக் கொண்டால், இந்த எண்ணிக்கை 1.2 விழுக்காடு மட்டுமே; இராஜஸ்தான் நிலைமையும் இதேதான்; குஜராத்தில் தலித் அல்லது ஆதிவாசி நீதிபதிகள் எவரும் கிடையாது; சமூகநீதி இயக்கங்களின் பெருமித வரலாற்றைக் கொண்ட தமிழ் நாட்டில் 38 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 4 பேர் மட்டுமே தலித்துகள்; மார்க்சியப் பெருமிதம் படைத்த கேரளத்தில் 25 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே தலித். சிறைவாசிகள் தொகை பற்றிய ஆய்வு இதற்கு எதிர்த் தகவில் இருக்குமென நம்பலாம்.

தலித்தாகிய மேனாள் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் 2011 கணக்கீட்டின்படி 120 கோடி இந்திய மக்கள்தொகையில் 25 விழுக்காட்டினராகிய அட்டவணைச் சாதியினருக்கும் பழங்குடிகளுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி இருக்கைகளில் உரிய விகிதாசரப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்த போது நீதித் துறையினர் அவரை ஏளனம் செய்தனர். ‘இந்த வகைப்பிரிவுக்கேற்ற தகுதியான ஆட்கள் இருக்கிறார்கள்; எனவே அவர்களின் குறைப் பிரதிநிதித்துவம் அல்லது பிரதிநிதித்துவமின்மையை நியாயப்படுத்த இயலாது’ என்று 1999இல் கூறினார். ‘நீதித் துறையில் மேற்கொள்ளப்படும் எந்த இடஒதுக்கீடும் அதன் சுயேச்சைத் தன்மைக்கும் சட்ட ஆட்சிக்குமான அச்சுறுத்தலாகவே அமையும்’ என எதிர்வினையாற்றினார் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் ஒருவர். மேட்டிமை வாய்ந்த இன்னொரு சட்டப் பெருந்தகை கூறினார்: “வேலை ஒதுக்கீடுகள் என்பது இப்போது நச்சரிப்பான கருத்தாகி விட்டது. தகுதி-திறமை மேனிலை பராமரித்துக் காக்கப்பட வேண்டும் என நம்புகிறேன்.”

தெய்வ அத்தாட்சி பெற்று விட்டதாகக் கூறிக் கொண்டு ஓர் அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தங்களுக்குக் கீழ்ப்பட்ட சாதிகளுக்குக் குறிப்பிட்ட வகைப்பட்ட அறிவை மறுத்து வந்துள்ள இந்திய மேட்டுக்குடிக் கூட்டத்தின் கைகளில் மாட்டிக் கொண்ட ஒன்றே ‘தகுதி-திறமை’ என்னும் ஆயுதம். இன்று அது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசுப் பணியிடங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக உயர்சிறப்புச் சாதியினரின் உணர்வுபொங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தகுதி-திறமை என்பது வரலாறற்ற ஒரு சமூக வெற்றிடத்தில் நிலவுவதாக நம்புகிற அனுமானமும், உயர்சிறப்புச் சாதிச் சமூகத்தினரின் சொந்தபந்தப் பிணைப்பால் அடையப் பெறும் சாதகமான கூறுகளும், கீழ்நிலைச் சாதியினருக்கு எதிராக அரணாய் வந்து நிற்கும் அதிகார வர்க்கத்துப் பகைமையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய காரணிகள் அல்ல. மெய்ந்நடப்பில், தகுதி-திறமை என்பது குருதிப்பாசத்தை மறைத்துக் கூறுவதற்கான மங்கல வழக்காகி விட்டது.

முற்போக்குச் சமூக அறிவியலர்களின், வரலாற்றுச் சிந்தனையர்களின் கோட்டை எனக் கருதப்படும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் தலித்துகளின் விழுக்காடு 3.29, ஆதிவாசிகளின் விழுக்காடு 1.44 விழுக்காடு. ஆனால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டு விழுக்காடு முறையே 15, 7.5 ஆகும். இத்தனைக்கும் இங்கு 27 ஆண்டுகளாக இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. 2010இல் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்ட போது, ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் சிலர் கூறியது என்னவென்றால், அரசமைப்பின் கட்டளைப்படியான இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் முயற்சி ‘இப்பல்கலைக்கழகத்தை உயர்மாண்பு கொண்ட மையங்களில் ஒன்றாகத் திகழ விடாது தடுத்து விடும்.’ அவர்கள் மேலும் வாதிட்டனர், பேராசிரியர்ப் பணியிடங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், ‘மேட்டுக்குடிப் பேராசிரியர்கள் வெளிநாடுகளுக்கோ தனியார்ப் பல்கலைக்கழகங்களுக்கோ சென்று விடுவார்கள். எனவே வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு இதுநாள் வரை இப்பல்கலைக்கழகம் மிகப் பெருமையுடன் வழங்கி வரும் உலகத் தரக் கல்வி இனியும் கிடைக்காது போய் விடும்.’ வாழ்க்கை அறிவியல் துறைப் பேராசிரியர் பி. என். மல்லிக் இன்னும் வெளிப்படையாகவே பேசினார்: ‘சில சாதியினர் மரபீனி அடிப்படையிலேயே ஊட்டச்சத்துக் குறைந்தவர்கள் என்பதால் அவர்களைத் தூக்கி விடும் செயலால் பெரிதாக ஒன்றும் சாதிக்கவியலாது; அப்படிச் செய்வது மாண்பையும் தகுதி-திறமையையும் கெடுத்து விடும்.’ ஆண்டு தவறாது உயர்சிறப்புச் சாதி மாணவர்கள் இந்தியாவெங்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பெருந்திரள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இது உச்சியிலிருந்து கிடைத்த செய்தி. புது இந்தியாவின் மறுபக்கத்தில், சச்சார் குழு அறிக்கை சொல்வது என்னவென்றால், தலித்துகள் பொருளியல் பிரமிடில் அவர்கள் எப்போதுமே இருந்து வரும் அதே அடிப்பகுதியில் முஸ்லிம் சமூகத்துக்குக் கீழே உள்ளனர். சுரங்கங்களாலும் அணைகளாலும் வேறு பெரிய அகக்கட்டமைப்புத் திட்டப் பணிகளாலும் இடமாற்றப்படும் லட்சக்கணக்கானோரில் பெரும்பான்மையினர் தலித்துகளும் ஆதிவாசிகளுமே என்பதறிவோம். அவர்கள்தான் பரிதாபத்துக்குரிய வகையில் குறைந்த கூலி வழங்கப்படும் கூலிகள் ஆவர், நகரக் கட்டமைப்புத் தொழிலில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளிகளும் அவர்களே. எப்படிப் பார்த்தாலும் 70 விழுக்காட்டு தலித்துகள் நிலமற்றவர்களே. பஞ்சாப், பீகார், அரியாணா, கேரளா போன்ற மாநிலங்களில் இந்தத் தொகை 90 விழுக்காடு ஆகும்.

ஆறுக்கு ஒன்று என்ற காரணிக்கு மேற்பட்ட தலித் பிரதிநிதித்துவம் கொண்ட அரசுத் துறை ஒன்று கூட இல்லை. அதேபோது சாலைகளைத் தூய்மைப்படுத்தும், புதைச் சாக்கடைகளில் இறங்கி வடிகால் அமைப்பைச் சீரமைக்கும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவதற்கென இந்திய அரசால் பணியமர்த்தப்படுவோரில் 90 விழுக்காட்டினர் தலித்துகளே. (இந்தத் துறையுங்கூட இப்போது தனியார்மயமாகி வருவதால், தனியார்க் குழுமங்கள் இந்தப் பணிகளை தலித்துகளுக்குக் குறைந்த சம்பளத்தில் வேலை உத்திரவாதம் ஏதுமின்றி தற்காலிக அடிப்படையில் ஒப்பந்தப் பணியாகவே தரும் நிலை இனி ஏற்படும்.)

மனிதத் துப்புரவு எதற்கும் தேவையில்லாத நேர்த்தியான கழிப்பறைகளைக் கொண்ட பெரு வணிக வளாகங்களிலும் குழும அலுவலகங்களிலும் துப்புரவுப் பணிகள் தலித் அல்லாதோருக்கு வழங்கப்படுகின்றன. அதேபோது, (அதிகாரபூர்வமாக) 13 லட்சம் தலித்துகள், பெரும்பாலும் பெண்கள் தண்ணீர்ப் பயன்பாடற்ற பாரம்பரியக் கழிப்பிடங்களைக் கழுவி, தலைகளில் மனித மலம் நிரம்பிய கூடைகளைத் தூக்கிச் சென்று கிடைக்கும் ஊதியத்தில்தான் வயிற்றைக் கழுவி வருகின்றனர். இது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்றாலும், இந்தியத் தொடர்வண்டித் துறை மனிதத் துப்புரவாளர்களைப் பெருமளவு பணிக்கமர்த்தும் நிறுவனங்களில் ஒன்று. 14,300 தொடர்வண்டிகள் 25 லட்சம் பயணிகளை ஒவ்வொரு நாளும் 65,000 கிமீ ஏந்திச் செல்கின்றன. அவர்களின் மலம் 1,72,000 திறந்த கழிப்பு வெளியேற்றத் துளைகள் வழியே நேராக இருப்புப் பாதைகளில் போய் விழுகின்றன. டன் கணக்கான இந்த மலம் முழுக்க முழுக்க தலித்துகளால் கையுறைகளோ, வேறெந்தப் பாதுகாப்புச் சாதனங்களோ இன்றி வெறுங்கையால் கூட்டி அள்ளப்படுகிறது. மனிதத் துப்புரவாளர்ப் பணியமர்த்தத் தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான சட்டவரைவு (2012) ஒன்றுக்கு அமைச்சரவையும் மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்தியத் தொடர்வண்டித் துறை அதனைக் கண்டுகொள்ளவில்லை. வறுமைச் சூழல் இன்னும் மோசமாகி வரும் போதே அரசு வேலைவாய்ப்புகளும் தொடர்ந்து வற்றி வரும் நிலையில், தலித்துகளில் ஒரு பிரிவினர் பாரம்பரிய மலமள்ளும் தொழிலினை இடையில் புகுந்து சிலர் பறித்துக் கொள்ளும் சூழலை எதிர்த்து நின்று அதனையே தங்கள் ‘நிரந்தர’ அரசுப் பணியெனத் தீவிரமாகத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தலித்துகளில் சிலர் இந்த அநீதிகளை வென்று சமாளித்து விட்டனர். அவர்களின் தனிப்பட்ட கதைகள் அசாதாரணமானவை, ஊக்கந்தருபவை. சில ஆண், பெண் தலித் வணிகர்கள் ஒன்றாகச் சேர்ந்து சொந்தமாக தலித் வணிகம் மற்றும் தொழிலுக்கான இந்தியக் குழாம் என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். அது பெரு வணிகங்களால் போற்றப்படுகிறது, ஆதரவு நல்கிக் காக்கப்படுகிறது. அது தொலைக்காட்சிகளிலும் பெரும் ஊடகங்களிலும் பெருமளவுக்குப் பேசப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், நன்கு உழைப்பீர்களானால் முதலாளித்துவம் இயல்பாகவே சமத்துவத்துக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டுவதற்கு அது உதவி புரிகிறது.

சாதி இந்து கடல் கடப்பது சாதி இழப்பாகவும் அனாசாரமாகவும் கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. இப்போது சாதி அமைப்பே ஏற்றுமதியாகி வருகிறது. இந்துக்கள் எங்கே சென்றாலும், சாதியையும் கூடவே அழைத்துச் செல்கின்றனர். அது இலங்கையில் சித்திரவதைகளுக்குள்ளாகும் தமிழர்களிடம் நிலவுகிறது; ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ‘சுதந்திர உலகில்’ உச்சி நோக்கி நகரும் இந்தியக் குடியேறிகளிடம் நிலவுகிறது. இங்கிலாந்தில் சுமார் 10 ஆண்டாகவே தலித் தலைமையிலான குழுக்கள் சாதிப் பாகுபாட்டை பிரித்தானியச் சட்டத்தின் அடிப்படையில் இனப் பாகுபாட்டைப் போல் கருத வேண்டுமென்னும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். சாதி இந்துப் பரப்புரையாளர்கள் இதனைத் தற்போதைக்குத் தடுத்து வைத்துள்ளனர். சனநாயகம் சாதியை அழித்து விடவில்லை. அது சாதியை உறுதிப்படுத்தி நவீனமாக்கியுள்ளது.

சாதி அமைப்புக்குரிய இந்துப் பதமாகிய சதுர்வர்ணம் அசைக்க முடியாதபடி ஆட்டிப் படைத்து வருகிறது: பார்ப்பனர் பெருமளவுக்கு அறிவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்; வைசியர்கள் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சத்ரியர்கள் இன்னுஞ்சிறந்த நற்காலங்களைப் பார்த்து விட்டவர்களே என்றாலும் இன்றும் அவர்கள் பெருமளவுக்கு நில உடைமையாளர்களாக உள்ளனர். மாபெரும் வீட்டின் அடித்தளத்தில் வசிக்கும் சூத்திரர்கள் உள்ளே இடம்பிடிக்க முயல்வோரை அண்டவிடாது தடுக்கின்றனர். ஆதிவாசிகள் தங்களின் வயிற்றுப் பாட்டுக்கே போராடி வருகின்றனர். கடைசியாக தலித்துகள் – நன்கு விரிவாகப் பார்த்தாயிற்று.

சாதி அமைப்பை அழிக்க முடியுமா? நாம் நமது மண்டலத்தில் விண்மீன் நிலைகளை மாற்றியமைக்கத் துணிவு காட்டாத வரை, புரட்சியாளர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் தங்களைப் பார்ப்பனியத்தின் தீவிர விமர்சகர்ளாக மாற்றிக் கொள்ளாத வரை, பார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டோர் தங்களின் முதலாளித்துவ விமர்சனத்தைக் கூர்மைப்படுத்திக் கொள்ளாத வரை சாதியை அழிக்க முடியாது. அது வரை இந்துஸ்தானத்தின் நோய்வாய்ப்பட்ட ஆண் பெண்களாகவே இருந்து வருவோம், அவர்களுக்கோ நலம் பெற வேண்டுமென்னும் எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லை.

தமிழில்: நலங்கிள்ளி

2014 நவம்பர் 13 ப்ராஸ்பெக்ட் இதழில் வெளியான கட்டுரை

நன்றி : கீற்று

ஈழத்தமிழர்களும் அவர்கள் வழங்கும் அடைமொழிகளும் : தங்கம்

for-saleஎத்தனையோ பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் போது அடைமொழிகள் பற்றி ஏன் தூக்கிக் கொண்டு வருகிறீர்கள் என எம்மில் பலர் நெற்றியைச் சுருக்கலாம். இவர்களுக்கு வேலையில்லை இப்பிடித்தான் சின்னப்பிரச்சனைகளைப் பொதுஅரங்கில் கொண்டு வந்து ஊதி பெரிசாக்கிறார்கள் என்று இன்னும் சிலர் தமது அநுசூசையை வெளிப்படுத்தலாம். இக் குறிப்பு பேசமுயலும் விடயம் தமிழரும் அவர்கள் வழங்கும் அடைமொழிகளுமே.

இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னான காலப்பகுதியில் இலக்கியமுயற்சிகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், நாடகவிழாக்கள், இசைக்கச்சேரிகள் எனப் பல முயற்சிகள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இலங்கையிலும் நடைபெறுகின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர் தமது கலை, இலக்கிய முயற்சிகளை அங்கும், இங்கும் விழாவாக் கொண்டாடுகின்றனர். விடயங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் எனும் அவர்களின் பேரவாவை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த விழாக்களுக்கு சிலர் பிரதமவிருந்தினராக, திறனாய்வாளார்களாக, அறிமுகவுரை வழங்குபவர்களாக, நூல் விமர்சகர்களாக, சிறப்பு அதிதிகளாக அழைக்கப்படுவதுண்டு. அழைப்பிதழ்களில் குறிப்பிட்ட சிலருக்கு படைப்பாளி, (படைப்புக்கள் சமூகநலம் சார்ந்தவையா ), ஆய்வாளர்( எந்த துறையில்) , திறனாய்வாளர் (எத்துறையில் கொண்டுள்ள நிபுணத்துவத்தின் அடிப்படையில் ), இலக்கியமேதை (எந்த இலக்கியத்தில் ) போன்ற அடைமொழிகள் வழங்கப்படுவதுண்டு. இந்த அடைமொழிகள் ஏன் வழங்கப்படுகின்றன? இவற்றை வழங்குவதற்கான காரணம் என்ன? வழங்கும் ஆர்வம் எங்கிருந்து வருகிறது? யாரால் யாருக்கு இவைகள் வழங்கப்படுகின்றன என்பதை சற்று நோக்கினால் இந்த அடைமொழி சூட்டலுக்குப் பின்னால் ஒருவித உள்ளக அரசியல் இருப்பதாக காணலாம்.

கவிதைத்தொகுதியொன்றை, கட்டுரைகளடங்கிய தொகுதியை தயாரித்த, எழுதிய அல்லது தொகுத்த ஒருவர் அதனை வெளியிட விரும்புகிறார், விடயம் பலரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக வெளியீட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்கிறார். இந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பின் போது கவிஞர், இசைஅறிவாளர், ஆய்வாளர், இலக்கியஆய்வாளார் என்ற அடைமொழிகள் வழங்கப்பட்டு நபர்கள் விழாவுக்கு அழைக்கப்படுகிறார்கள். இதன் பின்பு மேடையில் பொன்னாடைகள், பொன்முடிச்சுகள், புகழாரங்கள் எல்லாம் வரிசையில் வர ஆரம்பிக்கின்றன.

எனது கட்டுரைத்தொகுதி ஒன்றை நான் மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறேன். அதற்கான வழிகளில் ஒன்றாக நான் ஒரு வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்கிறேன் இதற்கு நான் குறிப்பிட்டவர்களுக்கு சில அடைமொழிகளை வழங்கி அழைக்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என நம்மில் பலர் கேட்கலாம்.

நானும் எனது கட்டுரைத்தொகுதியும் « கரைசேர்வதற்கு « நான் அடைமொழிகளை வழங்கி அவர்களை அழைக்கிறேன், அவர்களும் நான் அழைத்துவிட்டேன் என்பதற்காக வருகை தருவார்கள், வந்தவர்கள் புத்தகத்தை வாசித்தார்களோ இல்லையோ நாலுவார்த்தை பேச வேண்டும் இல்லாவிட்டால் அது நன்றாக இருக்காது என்று தனது மனதில்படுபவற்றை அன்றைய அரங்கில் கூறிவிட்டுச் செல்வார். நூலின் உள்ளடக்கத்திற்கும் அவரது உரைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாவிட்டாலும் கூட அந்த நபர் ஆற்றிய உரையில் ஏதோ ஒரு நுனியைப் பிடித்துக் கொண்டு இன்னொரு நபர் கதையளப்பார், அரங்கம் களைகட்டும் பின்பு எல்லாம் சுபம் என முடிந்து விடும். நானும் எனது முகநூலில் எனது புத்தக வெளியீட்டை மிகவும் சிறப்பாக உரிய அம்சங்களுடன், அழைக்கப்பட்ட அனைத்து அதிதிகளும் கலந்து கொண்டு அவரவர் தமக்குரிய பாணியில் எனது புத்தகம் பற்றிய உரையை நிகழ்த்தியிருந்தார்கள் என ஒரு சில பிரபல்யங்களுடனான புகைப்படங்களைப் போட்டு முகநூலை அலங்கரிப்பேன். இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எனது சொந்த செலவில் புத்தகத்தை அச்சிட்டு, சொந்த செலவில் நூல் வெளியீட்டை நடத்துகிறேன், எனது சொந்த முயற்சியில் எனது கற்பனைவளத்திற்கும் எனது சிந்தனைப்போக்கிற்கும் அமைய நான் குறிப்பிட்ட நபர்களுக்கு அடைமொழியை வழங்குகிறேன். எனது இருப்பின் சுதந்திரமிது என நான் வாதிடலாம்.

ஈழப்போராட்டத்திற்கு முந்திய காலப்பகுதியில் இசை, இலக்கியம், நடனம், நாடகம், விளையாட்டு, கல்வி போன்ற ஸ்தாபனமயமாக்கபட்ட விடயங்களில் அவை சார்ந்த நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வந்தன. இந்நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களை விடவும் சமூகஅங்கத்தவர்கள் சிலருக்கு பிரத்தியேக அடைமொழிகளைச் சிலர் முன்மொழிவதுண்டு. இதற்கான காரணங்கள் எவை என்பதையும் இதன் பின்னணி பற்றியும் சமூகவியலாளர்கள் ஆய்வு செய்து கண்டறிவது ஈழத்து தமிழ்பேசும் சமூகத்திற்கு சிலவேளை நன்மை பயக்கலாம்.

ஈழப்போராட்டத்தை வலுக்கட்டாயமாக குத்தகை எடுத்துக் கொண்டவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில், மாமனிதர், நாட்டுப்பற்றாளர், ஆளுமை, மாஸ்டர் இன்னபிற அடைமொழிகள் இந்தக் குத்தகையாளர்களால் வழங்கப்பட்டன. இவர்தம் அபிமானிகள், விசுவாசிகள் தவிர ஈழப்போராட்டத்திற்கு தமது இன்னுயிரை ஈந்த வேறு எவருக்கும் இந்த அடைமொழிகள் வாய்க்கப் பெறவில்லை. எல்லைக் கிராமங்களில் வசித்த மக்கள், ஈழப்போராட்டம் அமைப்பு மயமாக்கப்படுவதற்கு முன்னர் பெரும்பான்மையின ஆட்சியாளர்களின் இனப்பாரபட்சக் கொள்கையினாலும், இனக்கலவரங்களின் போது கொல்லப்பட்ட எவருக்கும் எமது சமூகம் எந்த பட்டத்தையும் வழங்கவில்லை. அமைப்புகள் எதிலும் உத்தியோகபூர்வமாக இணையாவிட்டாலும் சமூகநலனில் அக்கறை கொண்டு செயற்பட்டு, இலங்கை இராணுவத்தினாலும், இலங்கையில் இயங்கிவந்த ஆயுதக்குழுக்களாலும், சமாதானம் காக்க வந்த படைகளாலும் கொல்லப்பட்ட மக்களுக்கு எந்தப் பட்டத்தையும் யாரும் வழங்கவில்லை. அந்த உயிர்களும் அவர்தம் தியாகமும் எமது கண்ணில் படுவதில்லை.

அடைமொழிகள் வழங்கலுக்கான அவசியம் ஏன் ஏற்படுகிறது? பட்டங்கள், அடைமொழி இல்லாமால் எங்களால் ஒரு மனிதரை மனிதராகப் பார்க்க முடியாதா? அடைமொழிகளை வழங்குபவர்களும் அவற்றைப் பெறுபவர்களும் சாதாரண மக்களை விட வேறுபட்டவர்களா? அப்படியாயின் இவர்கள் எந்த விதத்தில் வேறுபட்டவர்கள்? இந்த மனப்பான்மை எங்கிருந்து வருகிறது? பிரித்தானிய சுரண்டல் அதிகாரிகள் விட்டுச் சென்ற மிச்சசொச்சமா அல்லது இலங்கை சமூகஅமைப்பில் காணப்படும் அதிகாரவரம்புமுறை வழங்கும் செளகரியமா?

எமது சமூகத்தில் மருத்துவர், பொறியிலாளர் போன்ற தொழில்கள் மற்றும் கலாநிதி பட்டங்கள் தொடர்பாக ஒரு மயக்கமும் மாயையும் காணப்படுகிறது. மருத்துவக்கல்வியை பயின்று முடித்தால் அவர் ஒரு மருத்துவர். இந்த மருத்துவருக்கு எமது சமூகத்தில் ஒரு இடத்தையும், அதற்கு மேலாக சில மாயைகளையும் உருவாக்கத் தொடங்கிவிடுவார்கள். மருத்துவர் விழாக்களுக்கு, விளையாட்டுப் போட்டிகளுக்கு கெளரவிருந்தினராக அழைக்கப்படுவார், இவ்வாறான அழைப்புகள் மூலம் வழங்கப்படும் கெடுபிடி மாயைக்குள் அகப்பட்டுக்கொள்ளும் இவர் பிற்காலத்தில் பல சங்கங்கள், அமைப்புகளில் பிரத்தியேக பதவிகளை வகிக்கத் தொடங்குவார். இந்த மருத்துவருக்கு ஆதரவாக, விசுவாசமாக, இவரைக் கடவுளாக வணங்குமளவுக்கு விடயங்கள் அரங்கேறும். இவர் காலப்போக்கில் மருத்துவத்துறைக்குள் அடங்கிய ஏதாவது ஒரு விடயத்தில் விசேட கல்வியைக் கற்பார், மேற்கொண்டு கலாநிதி பட்டமொன்றைப் பெறுவார், இவரை பின்பு விழாக்களுக்கு அழைக்கும் போது இலக்கியச் செம்மலும் கலாநிதியாகிய திரு இன்னார் இந்த விழாவுக்கான சிறப்பு அதிதியாக வருகை தருவார் என அழைப்பிதழில் குறிப்பிடுவர்.

இங்கு என்ன நடக்கிறது. இவர் கலாநிதி பட்டத்தைப் பல்கலைக்கழகம் ஒன்றில் பெற்றிருக்கலாம். இலக்கியத்திற்கும் இவரது கலாநிதி பட்டத்திற்குமான தொடர்புதான் என்ன? இவர்களுக்கும் இலக்கிய முயற்சிகளுக்குமான உறவு என்ன, இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களா, அதற்கான முன்னேற்றத்தில் சமூகநலனின் அக்கறையில் இலக்கிய விமர்சனங்களை முன்வைப்பவர்களா, சமூகமாற்றத்தைக் கருத்தில் கொண்டு தனது தனிப்பட்ட கருத்துக்களில், நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த விளைபவர்களா, பின்னர் இவரைப் பற்றி இல்லாத பொல்லாத கற்பனைகள் கலந்த கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்படும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் இவர் இலக்கிய ஆளுமையாகவும், விமர்சகச் செம்மலாகவும் ஆகிவிடுவார். இன்னும் பலர் இவரைத் தமது நூல் வெளியீட்டுக்கு அழைப்பார்கள்.

அடைமொழிகளை வழங்குவதன் நோக்கம் தான் என்ன? இதன் மூலம் குறிப்பிட்ட ஒருவரை சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களிடமிருந்து சற்று விலக்கி வைக்கிறோம். இதனை எதற்காக நாம் செய்கிறோம்?, இதன் மூலம் சமூகத்திற்கு கிடைக்கும் நலன்தான் என்ன?, இந்த அடைமொழிகளை வழங்குவதன் மூலம் நாம் சமூகத்திற்கும், எமது எதிர்கால சந்ததிக்கும் எவற்றைக் கூற முயல்கிறோம்? , எங்கோ ஓரிடத்தில் வழங்கப்படும் இந்த அடைமொழிகள் உலகின் பல பாகங்களுக்கும் பரவுகின்றன. காலப்போக்கில் இவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இவை நிரந்தரமாக ஒட்டிக் கொள்கின்றன.

படைப்பாளி என்பவர் யார், யாருக்கு நாம் படைப்பாளி என்ற அடைமொழியை வழங்கிறோம், சமூகநலனில் அக்கறை கொண்டு, அதன் முன்னேற்றத்தின்பால் ஆர்வம் கொண்டு அச் சமூகத்தில் நிலவுகின்ற கடைந்தெடுத்த அழுக்குகூறுகளையும் அவை தொடர்பாக சமூகத்தில் பேணப்படும் பாரபட்சங்களை நீக்குவதற்காக குரல் கொடுப்போரை நாம் படைப்பாளி எனக் குறிப்பிடுவோமாயின் இந்த அடைமொழியைப் பெற்றவர்களில் எத்தனை பேர் மேற்குறிப்பிட்ட விடயங்களில் தங்களின் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்கள்?. கவிஞர்களை, கலைஞர்களை, சமூக ஆர்வலர்களை இவர்களின் செயற்பாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லது எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளார் என்ற அடிப்படையில் தான் நாம் அவர்களை கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் அங்கீகரிப்போம் என்ற கருத்தைக் கொண்டவர்களையும் நாம் எம்மிடையில் காண்கிறோம். இவ்வாறான எண்ணிக்கை கருத்தின் அடிப்படையில் பார்த்தால் பல புத்தகங்களை வெளியிடும் அச்சகங்களும் வெளியீட்டாளர்களுமே இவர்களின் அங்கீகாரத்திற்குள் அடங்குவார்கள். தரம் என்பது எண்ணிக்கையில் அடிப்படையில் அமைவதல்ல சமூகநலனையும், அதன் முன்னேற்றத்தைக் கருத்தில் முதன்னிலைப்படுத்துவதுமே.

இந்த அடைமொழி வழங்கலிற்குப் பின்னால் காணப்படும், வர்க்க, பால், சாதிக்குமான தொடர்புகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அடைமொழிகளை வழங்குவதில் காணப்படும் வர்க்க, சாதி, பால் ரீதியான பண்புகளை இவ்வாறான ஒரு சிறிய குறிப்பில் ஆராய்ந்து பகுத்துக் கூறுவதற்கு போதியளவு ஆய்வும், தரவுகளும் அவசியம் என்பதால் இதனை பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம். புள்ளிவிபரமே தேவைப்படாத ஆனால் சமூக வெளியில் நாளாந்தம் பயன்படுத்தப்படும் இன்னொரு விடயமான பாலினஅசமத்துவம் பற்றி இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன்,

அடைமொழிகளில் காணப்படும் பாலின அசமத்துவம்
மேற்குறிப்பிட்ட மருத்துவதுறையில் பெண்கள் பலர் இருந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் பெண்களுக்கு இலக்கியச்செம்மல்கள், திறனாய்வாளர்கள், ஆளுமைகள் போன்ற அடைமொழிகள் வழங்கப்படுவது குறைவு. பிரதம அதிதிகளாக அழைக்கப்படும் போது துணைவரின் பெயரைக் குறிப்பிட்டு இன்னாரின் பாரியார் எனக்குறிப்பிடுவதை பல சந்தர்ப்பங்களில் காணலாம். பெண்கள் பெற்றிருக்கும் கல்விசார், நாட்டிய, இசை சார்ந்த பட்டங்கள் கூட சிலவேளைகளில் திருமதிகளுக்குள் அடங்கிவிடுகின்றன, இவை எல்லா சந்தர்ப்பங்களிலும் குறிப்பிடப்படுவதில்லை.

நாம் வாழும் சமூகத்தில் மூன்று பாலினங்களைச் சேர்ந்தவர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறோம். உயிரியலின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும் இப்பாலின அடையாளங்களுக்கு சமூகம் மேலும் பல அரிதாரங்களை வழங்குகிறது. அதுவும் இவைகள் குறிப்பாக பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. இவை பூ, பொட்டு, பட்டு, மெட்டி என அமைந்து விடுகின்றன. அடைமொழிகளாக பெண்களுக்கும் ஆண்களுக்கும் வழங்கப்படும் செல்வி, செல்வன் போன்றவை திருமணத்திற்குப் பின் பெண்ணுக்கு திருமதியாக மாறுகின்ற அதேவேளை ஆணுக்கு அது திருவாக காலம் முழுக்கவும் நீடிக்கிறது. இந்த திருமணமான பெண் விவாகரத்துப் பெறும் போது இவரது பெயருடன் அடைமொழியான செல்வி மீண்டும் வந்து ஒட்டிக் கொள்கிறது. ஆனால் விவாகரத்துப் பெற்ற, பிரிந்து வாழும், மற்றும் தபுதாரன்களுக்கும் திருவெனும் அடைமொழி இறுதி வரை நீடிக்கிறது. மனைவி இவரை விட்டுப் பிரிந்தாலோ இவர் மனைவியைப் விட்டுப் பிரிந்ததற்காகவோ இவரது அடைமொழியில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படுவதில்லை. திருமண அந்தஸ்தை மட்டுமே பிரதானமாக சுட்டி நிற்கும் திருமதி எனும் அடைமொழியைப் பயன்படுத்துபவர்கள் இது பாரபட்சமானது என்பதை சிந்திப்பதில்லையா, உங்களது பெண்பிள்ளைகளும் இவ்வாறான அசமத்துக்குள்ளாக்கப்படுவார்கள் என தந்தையர்களும் தாயார்களும் சிந்திப்பதில்லையா, சமூகத்தின் அங்கத்தவரான ஒருவர் அசமத்துவமாக நடத்தப்படுகிறார் என்பதை சுட்டிக்காட்ட அதனை அநுபவிப்பவர்கள்தான் முன்வர வேண்டும் என்பதில்லை, பாலின அசமத்துவம் பற்றி தனியே பெண்கள்தான் பேசவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவுமில்லை. இந்த அடைமொழி தொடர்பாக காணப்படும் அசமத்துவம் பற்றி அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும், சகோதரிகளைக் கொண்டவர்களுக்கும் தோன்றுவதேயில்லையா, இந்த அடைமொழிகளை பெயர்களுக்கு முன்னால் சூடிக் கொள்ளும் பெண்களும், சூட்டப்படும் போது கருத்திற்கொள்ளாமல் இருக்கும் பெண்களும் இனிமேல் உங்கள் மீது புனையப்படும் அடைமொழிகளை சற்று கண்ணெடுத்துப் பாருங்கள், இதற்கு பின்னால் காணப்படும் அரசியலை கேள்விக்குட்படுத்துங்கள். அனைத்து விதமான பாலின அசமத்துவங்களுக்கும் பெண்உரிமைக்காகப் போராடுபவர்கள் தான் கொடி தூக்க வேண்டும் என வாளாதிருப்பதும் இவ்வாறான கருத்துக்களுக்குத் துணைபோவதற்கு ஒப்பானதே.

அடைமொழிகளுக்கும் பட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்குவதை விடுத்து மனிதநேயமிக்கதும், மாற்றுக்கருத்துக்களை உள்வாங்கும் தன்மை கொண்டதும், சகிப்புத்தன்மை கொண்ட சமூக மாந்தர்களை உருவாக்க முனையும் மக்கள் இலக்கியத்தினை உருவாக்கவதில் முன்னின்று உழைப்போம். இவைகளே இப்போதுள்ள எம்முள்ள தேவையும் அவசியமும்.

தலைமைக் கனவு : இராமியா

operessionபெரும் அளவில் கருப்புப் பணத்தை வைத்து இருப்பவர்கள், அதைப் பதுக்கிக் கொள்வதற்கு மேலும் வசதி செய்து கொடுப்பதற்காக ரூ.2,000 பணத் தாளைப் புதிதாக அறிமுகப் படுத்தியும், சிறிய அளவில் கருப்புப் பணத்தை வைத்து இருப்பவர்களை மிரட்டிப் பணிய வைத்து, அவர்களைப் பெருமுதலாளிகளின் கேடயங்களாகவும், கவசங்களாகவும் பயன்படுத்தும் நோக்கத்துடன் ரூ.500, ரூ1,000 பணத் தாள்களைச் செல்லாததாக்கியும் 8.11.2016 அன்று இந்திய அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இவ் அறிவிப்பு உழைக்கும் வர்க்கத்தினரை மட்டும் அல்லாமல் சிறு, நடுத்தர வணிகர்களையும், தொழிலதிபர்களையும் முன் எப்போதும் கற்பனையும் செய்திராத அளவிற்குத் தாக்கி உள்ளது.

இவ்வளவு கடுமையான தாக்குதலுக்கு உட்பட்ட மக்கள் பொங்கி எழவில்லையே என்று சமூக மாற்றம் வேண்டுவோர் அதிர்ச்சியையும் மனக் கவலையையும் அடைந்து உள்ளனர். சமூக மாற்றம் வேண்டுவோர் நிச்சயமாகத் தங்கள் வழிமுறையைச் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.

அரசியலில் ஈடுபாடு கொள்வது அமைதியான வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஏன்? அரசியலில் முன்னணியில் இருக்கும் தலைவர்களில் ஊழல் கறை படாதவர்கள் யாரும் இல்லை. விதிவிலக்காகச் சிலர் இருந்தாலும் அவர்கள் ஊழல் தலைவர்களின் குடைக்குக் கீழ் தான் இருக்க முடிகிறது. ஊழல் தலைவர்களுக்குக் கீழ் வராதவர்கள் ஊடகங்களால் முற்றிலும் புறக்கணிக்கப் படுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான மக்கள் அரசியலைப் புறக்கணிப்பது தவிர்க்க முடியாததாகிறது. இந்நிலையில் மனக் கவலையை மறக்கடிக்கும் மதத்தில் சரண் புகுவதும் தவிர்க்க முடியாததாகிறது.

இது சுரண்டல் வர்க்கத்திற்கு மிகவும் சாதகமான சூழ்நிலை. புரட்சி நடக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தில் புரட்சிகரத் தத்துவம் நிலவ வேண்டும். ஆகவே இந்நிலையில் மக்களிடையே புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து எடுப்பதே சமூக மாற்றத்தை வேண்டுவோரின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை என்பது தான் யதார்த்த நிலை.

தேர்தலில் பங்கு கொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகள் கூலி உயர்வு வட்டத்தை விட்டு வெளியே எட்டிப் பார்ப்பதே பெரும் பாவமாகக் கருதுகின்றன. தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகள் கூலி உயர்வு வட்டத்தில் சிறைப்பட்டுக் கிடக்கின்றன என்றால், தேர்தலில் பங்கு கொள்ளாத பொதுவுடைமைக் கட்சிகள் நடக்க வாய்ப்பே இல்லாத புரட்சிக்குத் தலைமை தாங்கும் கனவில் இருந்து வெளியே வரமாட்டோம் என்று அடம் பிடிக்கின்றன. சிதறிக் கிடக்கும் இக்கட்சிகள் ஒன்று சேர விடாமல் தடுப்பது இத்தலைமைக் கனவே.

இத்தலைமைக் கனவுக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா? இன்று நம் சமூகத்தைக் கவ்வியுள்ள இருளின் அடர்த்தியைப் பார்க்கையில், எவ்வளவு தான் கடுமையாக முயன்றாலும், நம் தலைமுறையில் புரட்சி வரப் போவது இல்லை என்பதை உணரலாம். ஆகவே இத்தலைமைக் கனவு இம்மி அளவும் நடைமுறைக்கு உதவாது.

சமூக மாற்றத்தை வேண்டும் அனைவரும் மக்களிடையே அதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் கூற வேண்டும். “பெரு முதலாளிகளை வென்றெடுப்போம்”, “பெருமுதலாளிகளை இந்தியாவில் கால் பதிக்க விடமாட்டோம்”, “இந்தியத் தரகு முதலாளிகளை ஒழித்துக் கட்டுவோம்” இன்னும் இது போன்ற கூச்சல்கள் எந்தப் பயனையும் விளைவிக்காது. அது மட்டும அல்ல. மக்கள் பொதுவுடைமைத் தத்துவத்தில் இருந்து அந்நியப்படவே பயன்படும். ஆகவே சமூக மாற்றத்தை வேண்டுவோர் தங்கள் அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பொதுவுடைமைத் தத்துவத்திற்கு எதிராக உள்ள பிரச்சினைகள் யாவை? பொதுவுடைமைச் சமூகத்தில் சுதந்திரம் இருக்காது என்று முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும் வலுவாகவும் வெற்றிகரமாகவும் பிரச்சாரம் செய்து வைத்துள்ளனர். உழைக்கும் வர்க்கத்தினரிலேயே மிகப் பலர் இப்பொய்ப் பிரச்சாரத்திற்கு முழுமையாகப் பலியாகி உள்ளனர். அவ்வாறு பலியாகாதவர்களிலும் பலர் இத்தத்துவத்தைக் கொச்சையாகப் புரிந்து வைத்து இருக்கிறார்கள்.

நடுத்த வர்க்கத்தினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். முதலாளித்துவ அறிஞர்களின் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று சொல்லுவது தான் புத்திசாலித்தனம் என்று நினைப்பவர்கள். இவர்கள் முதலாளிகளின் சம்பளம் வாங்காத வேலைக்காரர்கள்.

இவ்வாறு பொதுவுடைமைத் தத்துவத்தில் இருந்து அந்நியப்பட்டு நிற்கும் மக்களை இத்தத்துவத்தின் பால் ஈர்க்காமல், முதலாளிகளை, முதலாளித்துவத்தை வென்றெடுப்போம் என்று முழங்குவது வீண் வேலை. முதலில் பொதுவுடைமை என்பது மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல; மக்களின் சுதந்திரம் பொதுவுடைமைச் சமூகத்தில் தான் சாத்தியமாகும் என்பதைப் புரிய வைக்க வேண்டும். முதலாளித்துவச் சமூகத்தில் மக்ளுக்குச் சுதந்திரம் என்பது சாத்தியமே அல்ல என்பதையும் புரிய வைக்க வேண்டும். மேலும் மக்கள் இன்று சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் முதலாளித்துவ முறை காரணமாக இருப்பதையும், பொதுவுடைமையில் மட்டுமே அவற்றிற்குத் தீர்வு காண முடியும் என்பதையும் விளக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல. இன்று உலக மக்கள் அனைவருக்கும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து, உலகில் உயிரினங்களின் முழு அழிவிற்கு இட்டுச் சென்று கொண்டு இருக்கும் சுற்றுச் சூழல் கேடும், புவி வெப்ப உயர்வும் முதலாளித்துவம் பெற்றெடுத்த பெருங்கேடுகள் என்பதையும் புரிய வைக்க வேண்டும், மேலும் முதலாளித்துவ முறையில் இக்கேடுகள் வளராமல் இருக்க முடியாது என்பதையும் புரிய வைக்க வேண்டும். பொதுவுடைமை வழியில் மட்டும் தான் இவற்றிற்குத் தீர்வு காண முடியும் என்பதையும் விளக்கி, உழைக்கும் வர்க்கத்தினரை மட்டும் அல்லாமல் இவ்வுலகில் உயிரினங்கள் அழியக் கூடாது என்று நினைக்கும் மனித நேயம் படைத்த பிற வர்க்கத்தினரையும் பொதுவுடைமைத் தத்துவத்தின் பால் ஈர்க்க முயல வேண்டும். இதன் மூலம் மக்களிடையே புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து எடுக்க வேண்டும்.

இப்பணிகள் நிச்சயமாகச் சலிப்பூட்டுபவையாகவும், சோர்வூட்டுபவையாகவுமே இருக்கும். அந்தச் சலிப்பையும் சோர்வையும் பொறுத்துக் கொண்டு, பணி புரியதே சமூக மாற்றம் வேண்டுவோரின் கடமையாகும்.