குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை : கலையரசன்

குவைத்தில் அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த, தெற்காசிய தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் நாடுகடத்தப் பட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் துபாயிலும் இது போன்றே தொழிலாளர், தம்மை அடக்க ஏவிவிடப்பட்ட போலீசாரை எதிர்த்து போரிட்டனர்.

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அரை பாலைவன வளைகுடா நாடுகள், துரித அபிவிருத்திக்கு தெற்காசிய தொழிலாளரின் மலின உழைப்பை பயன்படுத்தி வருகின்றன. நவீன அடிமைகளாக நடத்தப்படும் இந்த தொழிலாளர்கள், ஒன்று சேர்ந்து கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்குடன், பல்வேறு தேசங்களை சேர்ந்த, பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். இருப்பினும் அடிமைவாழ்வு எல்லோருக்கும் பொதுவானது. இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனகள், தொழிலாளரின் சம்பளங்களை குறைத்து கொடுத்து, அத்தியாவசிய தேவைகளை செலவினங்கள் என்று சொல்லி குறைத்து, அதிக லாபம் கோடி கோடியாக சம்பாதிக்கின்றன. இதைப்பார்த்து சில அமெரிக்க நிறுவனங்களே பொறாமை கொண்டதால், தொழிலாளரின் அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு நிர்ப்பந்தித்து வருகின்றது.

உலகின் பணக்கார நாடான குவைத்துக்கும், பிற எண்ணைவள வளைகுடா நாடுகளுக்கும், இருண்ட பக்கம் ஒன்றுண்டு. ஆடம்பர மாளிகைகள், வானுயர்ந்த கோபுரங்கள் யாவும் பல்லாயிரக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவானவை. இவற்றை நிர்மாணிக்கும் நிறுவனங்கள் பல ஆளும் மன்னர்/ஷேக் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானவை. குவைத்தின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகை வெளிநாட்டவர்களை கொண்டிருக்கும் பட்சத்தில், தனியார் நிறுவனங்களின் 98% மனிதவளம் வெளிநாட்டு தொழிலாளரைக் கொண்டிருப்பது அதிசயமல்ல. இவர்களிலே படித்த, தொழில் தகமையுடைய சிறு பிரிவு மட்டுமே அதிக சம்பளம்(அதுவும் குவைத் பிரசையை விட குறைவு) பெறுகின்றனர்.

அதற்கு மாறாக பெரும்பான்மையான கட்டட நிர்மாண, துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், மிக குறைந்த சம்பளத்தை (அதிகபட்சம் 100 டொலர்கள்) பெற்று, நகரத்திற்கு ஒதுக்குப்புறமான பாலைவனங்களில் அமைந்த வசதியற்ற தொழிலாளர் குடியிருப்புகளில், ஒரு அறைக்குள் குறைந்தது ஆறு பேர் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. சில கம்பனிகள் சம்பளத்தை மாதக்கணக்காக கொடுப்பதில்லை. குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. சில நேரம் அனலாக கொளுத்தும் கோடையில், குளிரூட்டிகள் இல்லாமல் படுக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வேலை மட்டும் ஒழுங்காக வாங்கப்படும். 40 அல்லது 50 பாகை என்று வெப்பம் கூடினாலும், உயர்ந்த கட்டடங்களில், அந்தரத்தில் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் கடந்த வருடம் முதல்தடவையாக, வெப்பம் 50 பகைக்கு போகுமானால், 12:30 மணிக்கும் 14:00 மணிக்கும் இடையில் வெளி வேலை செய்ய தடைச்சட்டம் போடப்பட்டது.
கடந்த ஜூலை மாத இறுதியில், குவைத்தில் உள்ள நிறுவனமொன்று தனது பங்களாதேஷ் தொழிலாளருக்கு மாதக்கணக்காக சம்பளம் கொடுக்காத பிரச்சினை, நாடளாவிய ஆசிய தொழிலாளர் எழுச்சிக்கும், மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கும் வழிவகுத்தது. சர்வாதிகார ஆட்சி நடக்கும் குவைத்தில், வேலை நிறுத்தம் செய்வதோ, தொழிற்சங்கம் அமைப்பதோ, சம்பள உயர்வு கேட்பதோ சட்டவிரோதம். இருப்பினும் தன்னெழுச்சியாக தொடங்கிய பங்களாதேஷ் தொழிலாளர்களின் போராட்டம், போலிஸ் அடக்குமுறைக்குல்ளானது. நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட வேலைநிறுத்தக்காரரை கலைந்து செல்ல வைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி, தடியடிப்பிரயோகம் செய்ததால், தொழிலாளரும் எதிர் வன்முறையில் ஈடுபட்டனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரியூட்டப்பட்டன. சம்பத்தப்பட்ட நிறுவனத்தின் முகவர்கள் சமாதானமாக போகும்படி கூறி, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது தாக்கப்பட்டனர். கூட்டத்தை கலைத்த போலிசால், அந்த இடத்திலேயே 250 பேர் காது செய்யப்படனர். தொடர்ந்த போலிஸ் தேடுதல் வேட்டையில் ஆயிரத்துக்கும் குறையாத பங்களாதேஷ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக தனியான விமானத்தில் நாடுகடத்தப்பட்டனர்.
குவைத் போன்ற வளைகுடா நாடுகளில், தெற்காசிய தொளிலாளர்கள் ஈவிரக்கமற்று சுரண்டப்படுவதும், அவர்களின் அவல வாழ்வும் ஏற்கனவே உலகிற்கு தெரிந்த செய்திகள் தான். ஆனால் அடங்கிக்கிடந்த தொழிலாளர் மனங்களில் அநீதிக்கு எதிரான உணர்வு நீருபூத்த நெருப்பாக இவ்வளவு காலமும் உறங்கிக் கிடந்தது. இதுவரை இல்லாதவாறு இப்போது மட்டும் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டங்களில் இறங்குவதற்கு, சில உலக பொருளாதார மாற்றங்கள் முக்கிய காரணமாகும். அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், அரிசியின் விலையும் இரண்டு மடங்காகியுள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவு. மேலும் அமெரிக்க டாலரின் பெறுமதி இறங்கி வருவதால், அதனோடு தொடர்புடைய குவைத் டினாரின் பெறுமதியும் வீழ்ந்துள்ளது. இதனால் தமது அற்ப சம்பளம்(75 டாலர்) என்றுமில்லாதவாறு வயிற்றுப்பாட்டிற்கே போதாது என்ற நிலை ஏற்பட்ட போது தான் மேற்குறிப்பிட்ட தொழிலாளரின் தன்னெழுச்சி ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக குவைத் அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளம் 150 டாலர்களாக உயர்த்துவதாகவும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் சட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழில் ஒப்பந்தத்தை மீறும், அவை மோசமான வெளிப்படையான மீறல்களாக இருந்த போதிலும், நிறுவனங்களின் முதலாளிகள் எவரும்(இவர்கள் எப்போதும் அந்நாட்டு பிரசைகள்) இதுவரை தண்டிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. மாறாக உரிமை கோரும் தொழிலாளர்கள் மாத்திரம் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். தொழிலமைச்சின் பரிசோதகர்கள் கூட தமது கடமையை திறம்பட செய்வதில்லை. சுமார் இரண்டு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளரை கொண்ட ஐக்கிய அரபு ராச்சியத்தில் 80 பரிசோதகர்கள் மாத்திரமே உள்ளனர் என்பது, அரசின் அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகின்றது.
குவைத்தில் தம்நாட்டு தொழிலாளரின் அவலநிலை குறித்து கருத்து வெளியிட்ட சில பங்களாதேஷ் தூதரக அதிகாரிகள், தொழிலாளர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்று விவரித்தனர். தாயகத்தில் மாதம் 188 டாலர்கள் சம்பளமாக தருவதாக ஒப்பந்தம் போடும் நிறுவனங்கள், குவைத் வந்ததும் 75 டாலர் மட்டுமே கொடுக்கின்றன. தொழிலாளருக்கு புரியாத அரபு மொழியில் ஒப்பந்தம் போட்டு, கையெழுத்திட வைத்து ஏமாற்றுகின்றனர். சில அரச நிறுவனப் பணிகளை குத்தகைக்கு எடுக்கும் வேலை முகவர் நிலையங்கள், ஒரு தொழிலாளிக்கு 500 டாலர் படி பெற்றுக்கொண்டாலும், 75 டாலர் மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக கொடுக்கின்றன. ஒருவேளை தொழிலாளி சுகவீனமுற்றால், அந்த நாட்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை.
சர்வாதிகார வளைகுடா நாடுகளில், கட்டாரில் மட்டுமே சில வருடங்களுக்கு முன்பு, தொழிற்சங்கம் அமைக்க சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. துபாயில் குறிப்பிட்ட அளவில் தொழிலாளரின் நிறுவனமயமாக்கல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலைவன தொழிலாளர் குடியிருப்புகளில், தற்போது கூட்டம் கூடி, தமது உரிமைகளுக்காக போராடுவது பற்றி விவாதிக்கப்படுகின்றது. துபாய்க்கு வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்து, சர்வதேச ஊடக கவனத்தை பெறும் வகையில் ஆடம்பர வியாபார அங்காடிகள், கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் அமைதியான மறியல் போராட்டங்களை நடத்த திட்டமிடப்படுகின்றது. இவர்கள் ஏற்கனவே ஒருமுறை, துபாயின் உலகப் பிரசித்தி பெற்ற “பேஜ் அல் அரப்” என்ற ஆடம்பர ஹொட்டேலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, அது உள்ளூர் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்தது.

மக்களின் எந்த உரிமையும் போராடாமல் கிடைக்கவில்லை, என்ற யதார்த்தத்தை குவைத், துபாயில் நடந்த சம்வங்கள் உணர்த்துகின்றன.

என்ன செய்யப்போகிறோம் ? : உலகமயமதலின் பின் : சபா நாவலன்

பகுதி 2
முதலாளித்துவம் மறுபடி மறுபடி ஒழுங்கமைக்கப்படுகின்றபோது அதன் கால எல்லை அல்லது கால நிர்ணயம் (Periodisation) என்பது பல சமூகப் பொருளாதாரக் காரணிகளில் தங்கியிருக்கின்றது. இன்றைய நவ-தாராளவாத ( Neo-liberalism) அல்லது உலக மயமாதல் என்ற ஒழுங்கமைப்பும் அதன் உயிர் வாழ்தல் காலமும் கூட இதன்டிப்ப்டையிலேயேநிர்ணயிக்கப்படுகிறது.

ஆக, முதலாளித்துவக் கட்டமைப்பு என்பது பொருளியல் அடிப்படையில் நிலைபெற முடியாதவொன்றென்பதன் கருத்தாக்கத்திலிருந்தே இந்த ஒழுங்கமைப்புக்களின் தேவை ஏற்படுகிறது.

மூலதனத்தைச் சொந்தமாக வைத்துள்ள குறித்த சில முதலாளிகளின் இலாபத்தை அதிகப்படுத்தலை (Maximisation of profit) மட்டுமே நோக்கமாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்டிருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பானது பணம் ஓரிடத்தில் குவிக்கப்படும் போது பொது மக்களின் பாவனைக்குரிய பணம் பற்றாக்குறையாக, அவர்களின் கொள்வனவு சக்தி அருகிப்போன்ற நிலையில், மொத்த சமூக அமைப்புமே ஆட்டம்காணும் நிலைக்குத் தள்ளப்படும்.

இந்த அடிப்படைகளைப் புரிந்துகொண்ட அதிகாரவர்க்கம் இவற்றிற்கான மாற்றமைப்பை நெருக்கடிக் காலகட்டங்களில் உருவாக்க முனைவதன் விழைவே உலகமயமாதல் வரை நடந்தேறியுள்ள சகல மறு ஒழுங்கமைப்புகளுமாகும்.

பிரதான கட்டங்கள்:

ஒவ்வொரு முறையும் முதலாளித்துவம் மறு ஒழுங்கமைக்கப்படும் போது, அது , கட்டுரையில் பின்னதாக ஆராயப்படும் மூன்று பிரதான கட்டங்களூக நடை பெறுகிறது.

1. உற்பத்தி உறவுகளின் நிலை மாற்றம். ( Transformation of relation of production)
இது உற்பத்தி சாதனங்களின் கட்டுபாடு மற்றும் உரிமை தொடர்பான பிரச்சனை.

2. தொழில்நுட்பத்தின் வரலாற்றுப் போக்கும் அதன் வினியோகமும். (Historical tendencies of technology)
இன்று குறிப்பாக உலக மயமாதற் சூழலில் இலாபத்தைத் தீர்மானிக்கும் புதிய முக்கிய காரணியாக இந்தத் தொழில்நுட்பம் அமைவதைப் பின்னதாக ஆராய்வோம்.

3.முன்னைய ஒழுங்கமைப்பிலிருந்து தொடர்ச்சியாக உருவாகும் அதிகார சக்திகளின் ஒழுங்கமைப்பு. ( Power Configuration)

4. புதிய அதிகார வர்க்கத்தின் வேறுபட்ட உட்பிரிவுகளின் ஆதிக்கமும் அவற்றிடையேயான சமூகச் சமரசமும் (Social compromise) இங்கு முக்கிய பகுதியாகும்.

இவ்வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட உலக மயமாதலும் ஒரு குறித்த காலகட்டத்திற்குரிய அதிகார ஒழுங்கமைப்பேயாகும் (Power configuration) . சிறுகச் சிறுக நிகழ்ந்தேறும் இம்மாறுதல்கள் உலகின் குறித்த சமூகக் கட்டமைப்பைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதனூடாகவும், அதேவேளை அவற்றை மாற்றியமைபதனூடாகவும், சில வேளைகளில் அழித்தொழிப்பதனூடாகவும் நிறைவேற்றப்படுகிறது.

நிலவுடமைச் சமூகமாகவிருந்த இந்தியா போன்ற மூன்றாவதுலக நாடுகளின் சமூகக் கட்டமைபின் தேசியக் கூறுகள் அழிக்கப்பட்டும், நிலப்பிரபுத்துவ அதிகாரம் பாதுகாக்கப்பட்டும், அதன் ஒருபகுதி மாற்றப்பட்டும் நிகழ்ந்த்தேறிய காலனித்துவத்திற்குப் சற்றுப் பின்னதான காலகட்டம் உலக மயமாதலூடான இன்னொரு மாற்றத்தைச் சந்திக்கிறது.

இவ்வாறு நடந்தேறும் மாற்றங்களின் பின்னர் முதலாளித்துவம் தன்னை ஒருகுறித்த காலப்பகுதிக்குத் தக்க வைத்துக் கொள்கிறது. இலாபத்தையும் மூலதனச் சொந்தக்காரர்களின் வருமானத்தை அதிகரிப்பதையுமே நோக்கமாகக் கொண்ட இந்த ஒழுங்கமைப்புக்கள் மறுபடி நெருக்குதலுக்குள்ளாக இன்னொரு ஒழுங்கமைப்பிற்கான திட்டம் வரையப்படுகிறது.
ஒரு குறித்த ஒழுங்கமைப்பினது கால எல்லை அல்லது காலநிர்ணய எல்லை என்பது பின்வரும் பிரதான காரணிகளில் தங்கியுள்ளது.

1.பொருளாதார ஸ்திரத்தன்மை. ( Stability of the economy)

– பண வீக்கம், பொருளாதார ஸ்திரத்தன்மை போன்ற வகை சார்ர்ந்த நெருக்கடிகளைத் தவிர்த்து இருப்பிலுள்ள கட்டமைப்பைப் பேணுகின்ற ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்புமுறையைக் குறித்த காலம் வரை பேணும் தன்மையுள்ள அமைப்புமுறையே இங்கு குறிப்பிடப்படுகிறது.

2.குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியையும் பொருளாதாரக் குவிப்பையும் உறுதிப்படுத்தல். ( Accumulation and Growth)

3. தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் விரிவாக்கல் (Prolongation of technology)
இந்தப் பிரதான பொருளியற்காரணிகளே எந்தவொரு மறு ஒழுங்கமைபினதும் கால எல்லையை நிர்ணயிப்பதில் பிரதான பாத்திரம் வகிக்கிறதெனலாம்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே உலக மயமாதலின் கால எல்லையும் தீர்மானிக்கப்படலாம்..

மார்க்சிய ஆய்வின் அடிப்படையும் அதன் தொடர்ச்சியும் ( Marxist framework of analysis and it’s continuation)

மார்க்சினதும் ஏங்கல்சினதும் சமூக ஆய்வின் மையமாக அமைந்திருந்தது உற்பத்தி சக்திகளதும் உற்பத்தி உறவுகளதும் அடிப்படை இயக்கமாகும்..

உற்பத்தி சக்திகளென்பது பல்வேறு உற்பத்திக் கருவிகள் மனித உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கும். சமூகத்தின் இயங்கியல் வளர்ச்சிப் போக்கில் ஒரு குறித்த வளர்ச்சிக் கட்டத்தில் உற்பத்தி உறவில் மாற்றம் விளையும்.
அதாவது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது, உற்பத்தி உறவுகளின் நிலை அல்லது தோற்ற மாற்றத்தை ஏற்படுத்தும் நிபந்தனையாகிறது.

இது இருவகையான சமூகப் பின்னணிகளின் இன்றைய சமூகப் பகைப்புலத்தில் பிரயோகிக்கப்படுகிறது.

1.நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கான மாற்றப்போக்கு.

2.முதலாளித்துவ அழிவில் உருவாகும் புதிய சமூக அமைப்பாக்கம்.
  ஒவ்வோரு உற்பத்தி உறவுகளின் வடிவமைப்பும் ஒரு குறித்த வகையான வர்க்க அமைப்பு வடிவத்தைக் கொண்டதாகின்றது.

நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டமைப்பில் இந்த வர்க்க வேறுபாடானது, வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைந்திருந்தது. நிலங்களைச் சொந்தமாக வைத்திருந்த நில உடமையாளர்களிலிருந்து பண்ணையடிமைகள் வரை மேலிருந்து கீழான துல்லியமான இந்த முரண்பாடானது மன்னனாலும் மதங்களாலும் ஒழுங்கமைக்கப்பட்டது.
காலனி ஆதிக்கம் மூன்றாமுலக நாடுகளில் வலுப்பெற ஆரம்பித்த பின்னர், இதன் இது சிக்கலானதாகத் திட்டமிட்டு மாற்றப்பட்டது என்பது வேறான விடயம்.
முதலாளித்துவம் ஐரோப்பாவில் உருவான காலகட்டத்தில் வர்க்கங்களிடையேயான முரண்பாடு தெளிவானதாகவும் பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தை உள்ளகத்தே கொண்டதாகவும் அமைந்திருந்தது.

வீழ்ச்சியடைந்துகொண்டிருந்த முதலாளித்துவக் கட்டமைப்ப மறுசீரமைக்கும் தொடர்ச்சியில் சின்னாபின்னமாக்கப்பட்ட மூன்றாமுலக நாடுகளினதும், ஏகாதிபத்திய நாடுகளதும் வர்க்கக் கட்டமைப்பும் வர்க்க முரண்பாட்டின் வெளிப்படைத் தன்மையும் சிக்கலானதாகவும் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட பல உள்முரண்பாடுகளைக் கொண்டதாகவும் அமைந்தது.
ஆதிக்கத்திலுள்ள வர்க்கத்திற்கும் ஆட்சியிலுள்ள வர்க்கத்திற்குமிடையிலான முரண்பாடு, பலவகையான வர்க்க அடுக்குகளுக்கிடையேயான போராட்டங்களும் அழுத்தங்களும் என்று பல சிக்கல்கள் நிறைந்த சமூகமாக உற்பத்தியின் வளர்ச்சிப் படினிலைப் போக்கில் புதிய தன்மைகளூடாக வளர்ந்து செல்ல, அரசு என்பது இந்த அதிகார அமைப்பு முறையைப் பாதுகாக்கும் அமைப்பு மயப்படுத்தப்பட்ட வடிவமாகவமைந்தது.

உபரியினூடாக (Surplus) பெறப்படும் இலாபத்திலிருந்தே முதலாளித்துவ சமூகம் கட்டமைக்கப்பெறுகிறது. இந்த இலாபத்தை முதலாளி தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்கு மறு உற்பத்தி அவசியமாகின்றது. ஒரு பொருளை உற்பத்தி செய்யும் முதலாளி அதனைச் ச்ந்தைப்படுத்துகிறான். அதில் பெறப்படுகின்ற இலாபததினூடாக தொழிலை விரிவுபடுத்தும் மூலதன உடமையாளானான முதலாளியின் இலாபம் அதிகரித்துச் செல்லும். இப்போது முதலாளிகளிடம் பணம் குவிய பெரும்பான்மை மக்களிடம் பணத்தட்டுபாடு ஏற்படும்.

மக்களிடம் கொள்வனவுச் சக்க்தி குறைந்துபோக உற்பத்தி செய்யப்பட்ட பொருட் களைச் சந்தைப் படுத்த முடியாதநிலை முதலாளிகளுக்கு ஏற்படும். சந்தையில் பொருளின் அளவானது தேவைக்கும் அதிகமானதாகக் காணப்பட பொருளின் விலை குறையவாரம்பிக்கும். இறுதியாக இலாபம் அற்றுப்போக தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்கவாரம்பிக்க, தொழிலாளர்களின் வேலைநீக்கம் அதிகரிக்க மொத்தச் சமூகமுமே இயக்கமற்று ஸ்தம்பித்துப் போகும்நிலையில் முதலாளித்துவச் சமூக அமைப்பு நிலைபெறமுடியாது குலைந்து போய்விடும் என்பதே மார்க்சியர்கள் முன்வைக்கும் இலகுபடுத்தப்பட்ட தர்கீகமாகும். .

மூலதனம் என்ற புகழ் பெற்ற கார்ல் மார்க்சின் படைப்பின் சாராம்சம் இந்தத் தர்கீகத்தின் அடிப்படையிலிருந்துதான் கட்டியமைக்கப்படுகிறது..

பொருளியல் தொடர்பான மார்க்சிய ஆய்வுக் கட்டமிவானது, அதன் வரலாறு தொடர்பான கட்டமைவுடன் நெருங்கிய தொடர்புடையது.
வரலாற்றுப் போக்கினூள் மறுபடி மறுபடி நிகழ்கின்ற அமைப்பியல் நெருக்கடிகளையும் (Recurrent structural crisis ) , நிலையற்ற தன்மையையும் கொண்ட திட்டமிட்ட மறு ஒழுங்கமைப்பை முதலாளித்துவம் கண்டிராத காலகட்டத்தில் கார்ல் மார்க்சின் விஞ்ஞான ஆய்வுமுறையினூடாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் மூலதனமும் உருவாகியிருந்தது.
இன்றும் இதன் அடிப்படைகளே வரலாற்றை ஆய்தலிலும் பொருளாதார ஆய்விலும் அடிப்படையாக அமைந்தாலும், ஏகாதிபத்தியம் உருவாக்கிய புதிய சூழ்நிலைகளுக்கமைய இவ்வாய்வுகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை எழுகிறது. இதனூடாக உலகமயமாதல் தொடர்பான புரிதலையும் அதன் எதிகாலத்தை எதிர்கொள்வது தொடர்பான விவாதத்தையும் உருவாக்கலாம்.

இதன் முதல் படியாக குறித்த ஒழுங்கமைபினுள் முதலாளித்துவத்தின் இயங்குதிறன், முரண்பாடுகளைத் திசைமாற்ற ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டு உருவாக்கிய முகாமைத்துவப் புரட்சி அதன் இன்றைய அமைப்பு வடிவம். அண்மைக் கால உருவாக்கமான படைப்பாக்க முதலாளித்துவம் போன்ற பலவேறுபட்ட கருத்தாக்கங்கள் ஆராயப்பட வேண்டும்.
(தொடரும்…)
முதற்பகுதியைப் பார்வையிட.. http://inioru.com/?p=383

சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம் : கலையரசன்

லர்னகா விமான நிலையத்தில் வந்திறங்கும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்கள், கண்கள் நிறைய கனவுகளுடன் வருகின்றனர். தாயகத்தில் அவர்களின் வறுமையான குடும்ப பின்னணி, அவர்களை சைப்ரஸ் சென்றாவது திரவியம் தேடி வருமாறு நிர்ப்பந்தித்து இருக்கா விட்டால், “சைப்ரஸ்” என்ற நாட்டின் பெயரையே வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையில் தேசத்தின் பொருளாதாரத்தை உலகமயமாக்கியதன் விளைவு; ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் வளைகுடா நாடுகளுக்கும், பின்னர் சைப்பிரசுக்கும் ஏற்றுமதியானர்கள். சைப்பிரசின் நாணயமான பவுணின் உயர்ந்த பெறுமதியை, இலங்கை ரூபாய்க்கு பெருக்கி பார்த்து, அதனால் தாம் சம்பதிக்கப் போகும் தொகையை மனதுக்குள் நினைத்து பார்த்து மகிழும் பணிபெண்கள், தாம் சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர்.

இலங்கை பெண்களை பணிக்கமர்த்தும் குடும்பங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று: சிறு பிள்ளைகள் உள்ள குடும்பங்கள். இரண்டு: வயோதிப ஆண்கள்,பெண்கள். எப்படியான குடும்பமாக இருப்பினும், இவர்களின் பணி தினசரி அதிகாலையே ஆரம்பமாகி, இரவில் முடிகின்றது. சிறு பிள்ளைகள் இருக்கும் குடும்பமாயின், அந்தப் பிள்ளைகளை பராமரித்தல், அல்லது வயோதிபர்களை பராமரித்தல் போன்றன இவர்களின் கடமை. பிள்ளைகளை பராமரிக்கும் பணிப்பெண்கள் குடும்பத்தலைவிக்கு சமையலில் உதவி செய்தல் வேண்டும், வயோதிபர்களை பராமரிப்போர் அவர்களுக்கு சமைத்தும் கொடுக்க வேண்டும். சைப்ரஸ் உணவையே சமைப்பதால், அதையே அன்றாடம் சாப்பிடும் பணிபெண்கள், தமக்கு விடுமுறை கிடைக்கும் ஞாயிற்று கிழமை மட்டும், இலங்கை உணவை ருசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

குறிப்பிட்ட அளவு நேரம் தாய்மார்கள் பொறுப்பு எடுப்பதால், சிறு பிள்ளைகளை பராமரிக்கும் பெண்களின் நிலை பரவாயில்லை. ஆனால் வயோதிபர்களை பராமரிப்பவர்களின் நிலைமை பெரும்பாலும் பரிதாபகரமானது. தமக்கு ஓய்வு நேரம் கிடைப்பது அரிது என்றும், அப்படியே கிடைத்தாலும், பொழுதுபோக்காக தொலைக்காட்சி பார்க்க கூட அனுமதிக்காது, தங்களை கவனிக்கும் படி வயோதிபர்கள் நச்சரிப்பதாக சில பெண்கள் தெரிவித்தனர். உண்மையில் அதிக கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள், வயோதிபர்கள் ஆகியோரை பராமரிப்பதில் ஏற்படும் மன உளைச்சல்களில் இருந்து தப்பிக்கொள்ளவும், பல சைப்ரஸ்காரர்கள் பணிப்பெண்களை வைத்துக் கொள்கின்றனர்.

சைப்ரசில் வயோதிபமடங்கள் உள்ள போதிலும், சம்பிரதாயப்படி பல பிள்ளைகள் வீட்டில் வைத்து பார்க்கவே விரும்புகின்றனர். இருப்பினும் பிள்ளைகள் தொழில் காரணமாக வேறு இடங்களில் வாழ்ந்து வருவதால், அல்லது அதே வீட்டில் இருப்பினும் செல்வச்செழிப்பு காரணமாக, தமது பெற்றோரை பார்த்துக்கொள்ள பணிபெண்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். “வயோதிபர் பராமரிப்பு” என்ற பொதுப்பணித்துறையை அரசாங்கம் தனியார்மயமாக்கியுள்ளதால், வசதி குறைந்த சைப்ரஸ் குடும்பமாகவிருந்தாலும், பிள்ளைகள் பணம் சேர்த்து பணிப்பெண்களின் மாதசம்பளத்தை கொடுக்கின்றனர். மேற்கு ஐரோப்பிய தரத்துக்கு வளர்ச்சியடைந்த சைப்ரஸ் பொருளாதாரம், சாதாரண தொழிலாளியையும், வீட்டில் வேலைக்காரி வைத்துக் கொள்ளுமளவிற்கு பணவசதி படைத்துள்ளவர்களாக மாற்றியுள்ளது. ஒரு காலத்தில், அதாவது சுதந்திரத்திற்கு பின்னான அறுபதுகளில், பொருளாதார பின்னடைவு காரணமாக, பெருமளவு வசதியற்ற சைப்ரஸ் மக்கள் வேலை தேடி இங்கிலாந்து சென்றனர். இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

ஏற்கனவே ஒரு முகவர் மூலம் இந்தப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தும் சைப்ரஸ் குடும்பம், அந்தப் பெண்களுக்கு தமது வீட்டிலேயே உணவும், இருப்பிடமும் வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இந்த கடமை குறிப்பிடப்பட்டிருப்பினும், பெரும்பாலான தொழில் வழங்குனர்கள் தனியான அறை ஒதுக்கிய போதும், சில வீடுகளில் வரவேற்பறையில் உள்ள சோபாவில் படுக்கும் நிர்ப்பந்தம் நிலவுகிறது. பெரும்பாலும் வேலைக்கு வைத்திருக்கும் எசமானர்களே ஒப்பந்தத்தை மீறுவது வழமை. பல தொழில் வழங்குனர்கள், சட்டத்திற்கு மாறாக, பணிப்பெண்களின் கடவுச்சீட்டு, மற்றும் வதிவிட அனுமதிப்பத்திரம், வெளிநாட்டவர் பதிவுக் கையேடு போன்ற மிக முக்கியமான பத்திரங்களை கூட வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மேலும் அதிக நேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காதது, ஒப்பந்தத்தில் இல்லாத வேலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்தல் என்பன தாராளமாக நடக்கும் சட்ட மீறல்கள். பணிப்பெண்களுக்கான வதிவிட அனுமதி அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் என்று இருப்பதால், நீடிக்கப்படும் ஆண்டுகளுக்கு விசாவை புதிப்பிக்காமல் வைத்திருப்பதும், அது பின்னர் சம்பத்தப்பட்ட பணிப்பெண்களுக்கே பாதகமாக அமைவதும் உண்டு. தொழில் வழங்குனர்களின் மீது புகார் கூற துணியும் பெண்கள் மீது, “நடத்தை சரியில்லை” என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்தப்பெண்ணுக்கு ஒரு காதலன் இருந்தால், “துரதிர்ஷ்டவசமாக” கர்ப்பமடைந்தால், அது கூட “தகாத நடத்தையாக” கணிக்கப்பட்டு, சில நேரம் ஒப்பந்தத்தை முறித்து, நாடு கடத்தலில் கொண்டு போய் விடும்.

செல்வச்செழிப்பு அகம்பாவத்தையும் கூடவே கொண்டுவரும். சைப்ரஸ் சமூகத்தில் அடிமட்டத் தொழிலாக கருதப்படும் துப்பரவாக்கும் பணியை, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருவோர் செய்வதால், இலங்கையரை தரக்குறைவாக கருதும் பழக்கம் உள்ளது. மேலும் சிறு பிள்ளைகள் கூட, “மவ்று”(கிரேக்க மொழியில், கருப்பு) என்று இகழும் அளவிற்கு இனவாதம் வளர்ந்துள்ளது. இனவாதம் வெளிப்படையாக காட்டப்படா விட்டாலும், அது சைப்ரஸ் சமூகத்தினருக்குள்ளே மட்டுமுள்ள பேசு பொருளாகும். உதாரணத்திற்கு “ரகசிய உறவின்” மூலம் குழந்தை பெறும் இலங்கைப்பெண்கள் அந்தக் குழந்தையை கைவிடும் சம்பவங்கள், சைப்ரஸ் ஊடகங்கள் மூலம் பூதாகரமாக காட்டப்படும். அது போன்ற செய்திகளை பார்க்கும் சைப்ரஸ் மக்கள், இலங்கையரை பற்றி இனவாதக் கண்ணோட்டத்தில் தரக்குறைவாக கதைக்க பயன்படுத்துகின்றனர். வலதுசாரி அரசியல் சக்திகள் இந்த உதாரணங்களை காட்டி, “வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறும் புற்றுநோய் கிருமிகள்” நாட்டை பாழ்படுத்தும் அபாயம் பற்றி அடிக்கடி பேசுகின்றனர். இலங்கையருக்கும் சைப்ரஸ் மக்களுக்குமிடையிலான தொடர்பு வெறும் தொழில்முறை சார்ந்தது என்பதால், இனவாத தப்பபிப்பிராயங்கள் மிக அதிகம்.

வழக்கம் போலவே இலங்கைப் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதன் மூலம் கிடைக்கும் பணம் சைப்ரசை செல்வந்த நாடாக வைத்திருக்கும் உண்மை பற்றி பேசுவோர் மிகக்குறைவு. அதற்கு காரணம் தொழில் ஒப்பந்தம் பெற்று வரும் பணிப்பெண்கள், சைப்ரஸ் சமூகத்துடன் தாமரை இல்லை தண்ணீர் போல ஒட்டாமல் வாழ்வது தான். இந்த அரசியல் அறிவு, பாதிக்கப்படும் இலங்கைப் பணிப்பெண்களிடமும் இல்லை என்பது பெரிய குறை தான். முடிந்த அளவு பணம் சம்பாதித்துக் கொண்டு, இலங்கை திரும்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இருக்கும் இவர்கள், மனதளவில் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களது சமூக தொடர்பு பிற இலங்கையருடன் மட்டுமே உள்ளது. கிரேக்க மொழி தெரிந்த பெண்கள் கூட, தமது தொழில், மற்றும் தனிப்பட்ட பிரச்சினை குறித்து மட்டுமே சம்பாஷனைகளை குறுக்கிக் கொள்வதால், தாம் வாழும் நாட்டைப் பற்றி எதுவும் அறியாது வாழ்கின்றனர்.

சைப்ரசிற்கு இலங்கையைச் சேர்ந்த ஆண்களும் பெருமளவு வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் இவர்கள் கல்லூரிகளில் படிக்க என்று வந்து, பின்னர் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்று தங்கி விட்டவர்கள். இலங்கையில் ஏழ்மையான பின்னணியில், உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வரும் பணிப்பெண்களைப் போலன்றி, இந்த வாலிபர்கள் ஓரளவு வசதியான (கீழ்) மத்தியதர வர்க்கத்தில் இருந்து வருபவர்கள். கல்லூரி மாணவர்களாக வந்த இலங்கை வாலிபர்களுக்கும், வீட்டுப் பணிப்பெண்களாக வந்த இலங்கை யுவதிகளுக்கும் இடையே ஆன உறவு, சில நேரம் வர்க்க முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றது. சைப்ரசில் பொதுப் போக்குவரத்து சேவை அரிதாகவே கிடைப்பதால், சில இளைஞர்கள் சட்டவிரோத “டாக்ஸி” ஓடுகின்றனர். இவர்களின் ஜீவனம், பெரும்பாலும் பணிப்பெண்களை நம்பியே உள்ளது. பணிப்பெண்களின் (சட்டபூர்வ) மாத வருமானம் 300 யூரோவை தாண்டாத போது, இந்த டாக்ஸி சாரதிகளின் (சட்டவிரோத) வருமானம் மாதம் 1000 யூரோவை தாண்டுவது முரண்நகை.

இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பணிப்பெண்களின் சமூக பின்னணி, ஓரளவு வசதியான கீழ் மத்தியதர வர்க்கத்தை(குட்டி பூர்ஷுவா) சேர்ந்த இளைஞர்களிடம் தங்கியிருக்க வைப்பதால்; காதலித்து நடித்து ஏமாற்றும் ஆண்களும், நம்பி ஏமாறும் பெண்களுமாக இலங்கையர் சமூகம் உள்ளது. சில பெண்களின் மோசமான நடத்தையை சுட்டிக்காடும் ஆண்கள், “எல்லா பெண்களும் அப்படி” என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இந்தப் பிரச்சினையை கூட சிலர் ஆணாதிக்க பார்வையுடன் அணுகுகின்றனர். சில “நடத்தை தவறும்”(லாப நோக்கோடு செயற்படும்) பெண்கள், பல காதலர்களுடன் தொடர்பு கொண்டு பணம் கறப்பதை சுட்டிக்காட்டும் அதே வேளை, பல அப்பாவி யுவதிகள் தம்மால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவதை பல ஆண்கள் நியாயப் படுத்துகின்றனர். சில சம்பவங்கள் பாலியல் சுதந்திரம் சம்பத்தப் பட்டதாயினும், வறுமையான சமூகப் பின்னணியும் இத்தகைய பெண்கள் தடம் மாறும் காரணங்களாகும். அதேவேளை நன்னடத்தையுள்ள பெண்களை கூட தனது வாழ்க்கைத்துணையாக சில ஆண்கள் ஏற்க மறுப்பதற்கு, இலங்கையில் அவர்களது வேறுபட்ட சமூகப் பின்னணி தான் காரணமாக இருக்க முடியும். வெளிப்பார்வைக்கு ஆண்-பெண் முரண்பாடாகவோ, இன, மத முரண்பாடுகளாகவோ புரிந்து கொள்ளப்படும் பல சம்பவங்கள், வர்க்க அடிப்படையை கொண்டதாக உள்ளன. இலங்கை திரும்பியதும், “நல்ல பிள்ளையாக” தமது பெற்றோர் நிச்சயிக்கும் பெண்ணை மணக்க நினைக்கும் ஆண்கள், தமது தற்காலிக சுகத்திற்காக மட்டுமே சைப்ரஸ் காதலிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். “காதல்” என்ற முகமூடி மட்டும் இல்லையென்றால், வர்க்க வேறுபாடு அம்பலமாகி இருக்கும். விதிவிலக்காக சில காதல்கள் திருமணங்களில் முடிந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.

ஐரோப்பிய யூனியனில் சைப்ரஸ் சேர்ந்த பின்னர் இலங்கையில் இருந்து பணிப்பெண்களை தருவிப்பது குறைந்து வருகின்றது. தொழில்கள் யாவும் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாட்டு பிரசைகளுக்கே வழங்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், தற்போது பல்கேரிய, ருமேனிய பணிப்பெண்கள் வேலைக்கு வருகின்றனர். இலங்கை அரசாங்கமும் முன்பு போல பணிப்பெண்களை ஏற்றுமதி செய்ய விரும்பவில்லை. வளைகுடா நாடுகளில் நடந்த, சர்வதேச மட்டத்தில் அறியப்பட்ட, இலங்கைப்பெண்கள் மீதான வன்முறைகள், பிற மோசமான ஒப்பந்த மீறல்கள் என்பன, இலங்கை அரசு இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.

தமிழ் இணையங்களின் சுதந்திரக் கருத்தாடல் : தேசம்நெற்றில் ஆரம்பம் – சபா நாவலன்

மொழி, பிரதேசம், வர்க்கம், சாதி, இனம் என்ற முரண்கள் நிறைந்த சமூகக் கட்டமைவுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், புதிய கருத்தியலின் உருவாக்கத்திற்கான தேவையை பல சந்தர்ப்பங்களில் மறந்து போய்விடுகிறோம். இரண்டாயிரம் வருடங்களாக எம்முள் சுமந்து கொண்டிருக்கும் சொத்துடமைச் சிந்ததனை முறை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுதந்திரமான கருத்தியலை வழிமறித்து வடிகட்டிவிடுகிறது. புலம் பெயர் தேசத்தில் நமது வாழ்நிலை திர்மானிக்கும் சிந்தனைப் போக்கானது இலாப நோக்குடையதாகவும், அதிகாரத் தன்ன்மை வாய்ந்ததாகவும் அமைந்துவிடுகிறது.

போர்க் குணாம்சமும், சுயமாகச் சிந்திக்கும் தன்மையும் அற்றுப்போய் அழிந்துகொண்டிருந்த, புலம்பெயர் சூழலில் அரசியல் சக்திகளின் சார்புனிலைகள் தெளிவாகத் தெரியவாரம்பித்த காலபகுதியில், நம்பிக்கையின்மைக்கும் விரக்தி மனோனிலைக்கும் நடுவில் தேசம்னெற் இணையத்தின் வரவானது புதிய கருத்துப் பரிமாறல்களுக்கும், ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திய அதிகாரம் சார்ந்த கருத்தியலின் மீது தயவு தாட்சண்யமற்ற விமர்சனத்தை முன்வைப்பதற்கும் வழிசமைத்தது.

இணயத் தொழில் நுட்பம் ஏற்படுத்த்திக் கொடுத்த புதிய விமர்சன முறையானது புலம்பெயர் எல்லைகளுக்கு அப்பாலும் விரிந்தது. பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியது. இலங்கை அரசியல் பற்றிப் பேசுகின்ற எந்த ஊடகமும் தேசம் நெற்றை தொட்டுக்கொள்ளாமல் மேற்செல்வதில்லை.

இந்த ஜன நாயக வெளியானது புரட்சிக்கான தளமோ அல்லது அதன் ஆரம்பமோ கூடக் கிடையாது. ஆனால் குறைந்த பட்சம் இழந்து போன நம்பிக்கையை பலருக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறது.

பேசுவதற்கான வெளியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வெளியைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதில் புலம்பித் தொலைக்கும் கனவான் களுக்கும் கூட்டம் போட்டுக் கூக்குரலிடும் பரம்பரை ஜன நாயக ஜாம்பவான் மிரண்டு போயிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மக்கட் கூட்டமும், ஒவ்வொரு சமூக அமைப்பும் ஒவ்வொரு குறித்த வரலாற்றுக் காலகட்டத்திற்கானதே. ஐரோப்பாவில் தேசிய இனங்கள் உருவாகி மக்கள் ஒன்றிணைந்த காலகட்டம் இன்றில்லை. மன்னர்கள் சண்டைபோட்டு நாடுகளைத் தம்வசமாக்கிக் கொண்டிருந்த காலகட்டம், விவசாய நிலங்களோடும் அது சார்ந்த உற்பத்தி முறையோடும் மட்டுமே மக்கள் பிணைக்கப்பட்டிருந்த காலகட்டம் இன்றில்லை.

ஆனால் எமது சமூகத்தில், மூன்றாமுலக நாடுகளில், எப்படி மாறாத் தன்மையைப் பேணுவதென்றும், எமது சிந்தனைப் போக்கை மாற்றங்களற்றதாகப் பேணுவதென்றும் ஏகாதிபத்தியங்கள் அறிந்து வைத்துள்ளன. நிலத்தோடு மடிந்துகொண்டிருக்கும் தொலை கிராமத்து விவசாயியிலிருந்து மாற்றங்களை வரலாற்று நிகழ்ச்சிப்போக்காக தனது தத்துவ முறையிலேயே ஏற்றுக்கொள்ளும் மார்க்சியர்கள் வரை புதியனவற்றை ஏற்றுக் கொள்ளும் சிந்தனை மரபை வளர்த்துக்கொள்ளப் பின்நிற்கிறார்கள்.

புதிய தொழில் நுட்பம் ஏற்படுத்தும் மாற்றங்களை கருத்துருவாக்கத்தில் நாம் எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறோம்?

சமூகத்தின் நினைவுத் திறன்(Social Memory) தொடர்பாக நடைபெற்ற ஆய்வொன்றில் இந்நினைவுத் திறனின் வாழ்வுக்காலம் இணையத் தொழில் நுட்பத்தின் வருகைக்குப் பின்னர் நீடித்திருப்பதாகவும் இது மக்களின் சிந்தனைப் போக்கில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் ஜூன் 2007 இகொனமிஸ்ட் இதழ் கட்டுரை பிரசுரித்திருந்தது.
பல்கலைக் கழகமட்ட மனித்வியலிலும் கூட இவ்வாறான ஆய்வுகள் புதிதாக மேற்கொள்ளப்படுகின்றன. இன்றைய நிகழ்வொன்று இணையத்தில் பதியப்படும் போது பல நீண்ட வருடங்களின் பின்னரும் அது அழியாப் பதிவாகக் காணப்படும் என்பதே இதன் அடிப்படை. சமூக வலைத் தளங்களான (Social Networks), myspace, hi5, bebo, .. என்பன இதில் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன. இந்தக் கருதாக்கத்தின் அடிப்படையிலேயே பெனடிக்ட் அன்டர்சனின் தொலைதூர தேசிய வாதம் (Distance Nationalism) என்ற தவறான வாதமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இந்த சமூக நினைவுத் திறன் தொடர்பான பிரச்சனையை இடது சாரிச் சிந்தனைப் போக்கையும் சுதந்திரமான விவாதத்திறனையும் கட்டியெழுப்புவது தொடர்பாக நாம் ஏன் உரையாடக்கூடது.?

புலம் பெயர் தமிழ் இணையச் சூழலிலும் அதற்கு அப்பாலும் தேசம்னெற் இணையத்தளம் உருவாக்கிய தளத்தை பயன்படுத்திக்கொள்ல் என்பது எமது சமூகச் சூழலில் புதியன வருதலை வேகப்படுத்த்லாம்..

புலம்பெயர் வன்முறை அரசியல் : நிறுத்தக் கோருகிறோம்! – அப்துல் அலீம்

மூன்றாமுலக நாடுகளின் காலனியத்திற்குப் பின்னதான விடுதலை இயக்கங்களும் அதற்கான கருத்தாக்கங்களும் ஏதோ ஒருவகையில் வன்முறையோடு தொடர்புடைதாகவே அமைந்திருக்கிறது.

இயல்பான முதலாளித்துவப் புரட்சியும், தேசிய மூலதன வளர்ச்சியுமின்றிய சமூககப் பொருளாதாரச் சூழலில், மக்களை அமைப்பாக்குதல் என்பதும் ஏற்கனவே காலனிய ஆட்சியாளர்களின் நலன்களுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, முதலாளித்துவ சமூக அமைப்பில் காணப்பட முடியாத, சாதி, பிரதேச முரண்பாடுகள் போன்றவற்றை தேசியப்போராட்டக் காலகட்டத்திலும் அதன் தொடர்ச்சியாக சோசலிசத்திற்கான போராட்டத் தளத்திலும் கையாளுதல் என்பதும் சிக்கலானதாக அமைந்துள்ள சமூக, சிந்தனை அமைப்பு முறையுள், மக்கள் திரள் மீதான நம்பிக்கையும் பெரும்பான்மை மக்கள் சார்ந்த மக்கள் போராட்டத்தின் மீதான நம்பிக்கையுமற்று வன்முறையின் மீதும் தனி நபர் சாகசங்கள் மீதான நம்பிக்கையுமே போராட்டங்களின் பொது வடிவமைப்பாக மாறியது.

மார்க்சிய ஆய்வு முறையின் மீதும் மக்கள் போராட்டத்தின் மீதும் நம்பிக்கையற்ற சிந்தனைப் போக்கானது 70 களின் பின்னர் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியக் கல்விமுறை, கலாச்சாரம் என்பவற்றின் தவிர்க்கவியலாத தொடர்ச்சியாகவே அமைகிறது.

ஏகதிபத்தியச் சுரண்டலுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சிந்தனை மரபும் அதன் செயற்பட்டுத் தளமும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் பாசிசத்தின் சமூகக் கூறுகளாகவும், வன்முறையாகவும் வெளிப்படுகின்றன.

அதிகாரத்திற்கெதிராகப் போராடும் பின் நவீனத்துவ வாதிகளின் கலகக்குரல்களும் பெருங்கதையாடலை சமூக மாற்றத்திற்கெதிரான போராட்டத்தில் எதிர் நிறுத்தும் போக்கும் ஏகாதிபத்தியங்களின் இந்த நோக்கத்திற்குக் கணிசமான பங்கு வகித்திருக்கிறது.

பாரிய கொலை ஆயுதங்கள் சித்திரவதை முகாம்கள் என அனைத்து அதிகாரங்களுடனும் ஒரு சிறு தொகைக் கூட்டத்திற்காக மக்களைக் கொன்று குவிக்கும் அதிகரத்திற்கெதிராக குரெலெளுப்பும் போதெல்லாம் இவர்கள் மார்க்சியர்களுக்கெதிராகக் கலகம் செய்கிறார்கள்.

மக்கள் மீது நம்பிக்கை கொள்தல் என்றால் பெரும் பாலானோருக்கு வேடிக்கையாகவும் வியப்பாகவும் அமைந்து விடுகிறது. இது ஒரு நீண்ட போராட்டப்பாதை என்பதால் மக்கள் போராட்டங்களையும் ஜனநாயகப் போராட்டங்களையும் கருத்திற்கொள்ளவே மறுக்கிறார்கள்.

புலிகள் மக்கள் மீதான நம்பிக்கையற்று தனி நபர் தலைமை மீது நம்பிக்கை கொண்ட ஆரம்பமானது போராட்டமே மக்களுக்கெதிரானவொன்றாக மாறிப் போக வழிசெய்தது.

மக்கள் மீதான நம்பிக்கை என்பது எதோ மக்கள் தலைவர்களது புகைப்படங்களை விருந்தினர் அறையில் மாட்டிவைத்துக் கொண்டு பூஜை போடுவதல்ல.

புலிகளின் பாசிசத்திற்கெதிராக பேரினவாத இலங்கை அரசை நிறுத்துவதும், இலங்கை அரசின் இனப்படுகொலைக்கெதிராக சொந்த நாட்டிலேயே கொசுக்களைப்போல இலட்சக்கணக்கில் வறிய விவசாயிகள் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது கண்டுகொளளத் திரணியற்ற இந்திய அரசை நம்புவதும், இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சர்வதேச பயங்கரவாதத்தை உலக மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட்டிருக்கும் அமரிக்கவின் ஜனாதிபதி வேட்பளர் ஒபாமாவை எதிர்கால இரட்சகனாக கனவு காண்பதும் மக்களை புறக்கணிக்கும் அணுகுமுறைகளே. வன்முறைகக்கன ஆரம்பமே இங்கிருந்து தான் உருவாகிறது.

ஐரோப்பிய நாட்டிலிருந்து அதன் தன்னார்வ நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் நிதியில் தங்கிநிற்கும் ஒருமக்கள் கூட்டம் எமது நாடுகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

சார்க் மாநாடு நடத்தப்படுவதற்காக மட்டுமே கொழும்பு புறநகர்ப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டார்கள். இவர்கள் அரசிற்கெதிராகப் போராட முற்பட்டபோது, தன்னார்வ நிறுவனக்கள் தலையிட்டன. போராட்டத்தை நிறுத்தக் கோரியதுடன் அவர்களின் மறு குடியேற்றத்திற்குத் தாம் உதவுவதாகவும் உறுதியளித்தன.

அரசு தான் விரும்பியதையெல்லாம் செய்து முடிக்கட்டும், என்.ஜீ.ஓ கள் இருக்கின்றன, மக்கள் அமைதியாக அவர்கள் போடும் எலும்புத்துண்டுகளை வாங்கிக் கொண்டு மௌனிகளாக இருந்து விடுங்கள் என்பதுதான் இதன் சாராம்சம்.

அரசும் அதன் அமைப்பும் மாறாது, ஏகாதிபத்தியங்கள் தாம் விரும்பியபடியே சுரண்டிக்கொண்டு போவார்கள் அதனால் மக்கள் பாதிக்கப்படும் போது தற்காலிகமாக உதவிபுரிய என்.ஜீ.ஓ கள் என்ற அரச சாரா தன்னார்வ அமைப்புக்கள் உள்ளன. ஜீரணித்துக் கொள்ளமுடியாத நியாயம்.

மக்களை அமைப்புமயப்படுத்தி அரசின் அடக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் இங்கே முன்னெடுக்கபடுவதிலை.

மக்கள் மீதான நம்பிக்கையும் மக்கள் போராட்டமும் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகிறது. ஒரு புறத்தில் பின் நவீனத்துவம் அதன் அதிகாரசமரசம் போன்ற அழகான புத்திஜீவிப் போதையும் அதன் வன் முறையும், இன்னும் பிரதேச சாதி முரண்பாடுகள் என்பவற்றை கூர்மைப்படுத்தி மக்கள் போராட்டங்களைப் பிரித்துச் சிதறடிப்பதும், மறு புறத்தில் தன்னார்வ அமைப்புக்களூடான தங்கியிருக்கும் மக்கள் கூட்டம் ஒன்றை உருவாக்குதலும் ஏகாதிபத்திப் பணச்சுரண்டலின் திட்டமிட்ட நிகழ்ச்சினிரலின் ஒருபகுதியே என்பதைத் தவிர வேறென்ன?

இவ்வாறு மக்கள் மீதானதும், மக்கள் போராட்டத்தின் மீதானதுமான நம்பிக்கையற்ற ஒரு கூட்டத்தின் புகலிட அரசியற் தொடர்ச்சி தான் நாம் இன்று காணும் வன்முறை தாதா பாணி அரசியல்.

இவ்வாறு மக்கள் மீதானதும், மக்கள் போராட்டத்தின் மீதானதுமான நம்பிக்கையற்ற ஒரு கூட்டத்தின் புகலிட அரசியற் தொடர்ச்சி தான் நாம் இன்று காணும் வன்முறை தாதா பாணி அரசியல்.
ஜனநாயகமென்றும், தலித்தியமென்றும், மக்கள்போராட்டமென்றும் பேசிக்கொள்ளும் புகலிட அரசியலில் ஒரு கூட்டம் வன்முறை என்பதையே அரசிலாக்க முயல்கிறது.

இலங்கையிலும் இந்தியாவிலும் இடதுசாரிகளும் ஊடகத்துறையினரும் தேடித் தேடி அழிக்கப்படுகிறார்கள். அரசுக்கெதிரானவர்களும், புலிகளின் பாசிசத்திற்கெதிரான சமூக உணர்வுகொண்ட சக்திகள்ும் ஒன்றில் என்.ஜீ.ஓ களால் உள்வாங்கப்பட்டுச் சீரழிக்கப்படுகிறார்கள் அல்லது தெருவோரத்து அனாதைகளாகக் கொலைசெய்யப்படுகிறார்கள்.

இலங்கையில் இன்று மக்கள் நலன் சார்ந்து பேசுவதற்கு யாரும் இல்லை. ஊடகத் துறை ஒன்றில் அரசு சார்ந்தோ அல்லது புலிகள் சார்ந்தோ மட்டும் தான் இயங்கமுடியும். பெரும் பகுதியினர் இல்லாமல் அழிக்கபபட மறுபகுதியினர் அன்னியதேசங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் புகலிடத்திலிருந்து மட்டும் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை எதிரொலிக்க முடியும் என்ற நிலை உருவாகியிருந்தது.

சோவியத் ரஷ்யாவிலிருந்து வியட்நாம் வரை வெற்றிபெற்ற போராட்டங்களில் பெரும்பாலானவை தனது கருத்துப்பலத்தின் பின்புலமாக அன்னிய தேசங்களையே கொண்டிருந்தன.

ஆனால் இன்று அது தலைகீழாகிவிட்டது. ஈராகின் இன்றைய அமரிக்க ஏஜன்டுகள் பிரித்தானியாவிலும் அமரிக்காவிலுமிருந்துதான் உருவாக்கப்பட்டவர்கள். சுனி முஸ்லீம்களுக்கும் ஷியா முஸ்லீம்களுக்குமான புகலிடக்குழுக்கள் சதாமின் சர்வாதிகாரத்திற்கெதிரான ஜனநாயக முற்போக்காளர்களாக சதாம் காலகட்டத்தில் சித்தரிக்கப்பட்டவர்கள். இதே ஜனநாயக முன்னணிகளைத்தான் இன்று ஈராகில் தனது இராணுவ கொலை வெறிக்கு அமரிக்க அணி பயன்படுத்திக் கொள்கிறது.

ஆக, போர்ச் சூழல் ஏற்படுத்தவல்ல இராணுவமயச் சூழலிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் அரசியல் சக்திகளை மறுகாலனியாக்கத்திற்கான திறவுகோலாக ஏகாதிபத்தியங்கள் பயன் படுத்திக்கொள்வது மட்டுமன்றி இதற்கு இயைவடைய மறுப்பவர்கள் மீது வன்முறையையும் சேறடிப்புக்களையும் மேற்கொண்டு அவர்களை அன்னியப்படுதும் புதிய தந்திரோபாயம் புகலிட சூழலிலும் கையாளப்படுகின்றது என்பதை அவதானிக்கலாம்..

இந்த அரசியல் பகைப் புலத்திலிருந்துதான் புலிகள் நாடாத்திய சபாலிங்கம் கொலைச்சம்பவம் ஈறாக இன்றைய தாதா பாணியிலான அரசியல் வன்முறைகளையும் நோக்கமுடியும்.

2002 ஆம் ஆண்டு பிரான்சில் வசிக்கும் அஷோக் யோகன் கண்ணமுத்துடனான கருத்துமுரண்பாட்டைத் தீர்த்துக் கொள்வதற்காக சுகன், ஷோபா ச்க்தி, தேவதாசன், ஞானம் போன்ற முரண்பாடுகளை அரசியலாக்கும் புகலிட அரசியலாளர்கள் தாதா பாணியில் அஷோக்கின் மீது குண்டர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதே நபர்கள் மறுபடியும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டபோது அது அம்பலத்திற்கு வந்து புலம்பெயர் சூழலில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திற்று. பரிஸ் சார் இலக்கிய அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் இன்று இது அறியப்பட்ட சம்பவமாகிவிட்டது.

பாரிசின் தமிழர்கள் கூடும் இன்னொரு அறியப்பட்ட பகுதியான மார்கதே புவாசனியே என்ற இடத்திலுள்ள உணவு விடுதியையும் இதே குழுவினர் சிறிய முரண்பாட்டின் விளைவாக அடித்து சேதப்படுத்தினர்.

புலிகளுக்கெதிரானதும் யுத்தத்திற்கெதிரானதுமான சுவரொட்டிகள் பாரிஸ் தமிழர்கல் கூடுமிடங்களில் ஒட்டப்பட்டபோது அதை கிழித்தெறிந்த இதே குழுவினர் தம்மைப் புலிகளுக்கெதிரானவர்களாகவும் தீவிர ஜனநாயகவாதிகளாகவும் பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்கின்றனர்.

இவை எல்லாவற்றினதும் உச்ச வடிவமாக புலியெதிர்ப்பாளர்கள் எனக் கூறிகொள்ளும் இந்த எஸ்.எல்.டி.எப் என்ற குழுவைச் சேர்ந்த சில நபர்கள் தீவிர புலியெதிர்ப்பு வானொலியான ரீ.பீசீ ஐக் கொள்ளையடித்து சேதப்படுத்தியதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.

இதே நபர்களின் வன்முறையையும் மிரட்டல்களையும் முன்னதாகவே பல சமூக உணர்வுள்ள அரசியல் ஆர்வலர்கள் சந்தித்துள்ளார்கள்.

இந்த இலண்டன் குழுவினரும் பாரிஸ் குழுவினரும் வன்முறை, தனிநபர் மீதான தாக்குதல் என்ற ஒருங்கு புள்ளியில் இணைந்து கொள்ள, முதலில் தலித் முன்னணி உன்றுகூடல் பரிசிலும் இலண்டனிலும் நடந்து முடிய, அதன் தொடர் நிகழ்வாக “நெடுங்குருதி” நிறைவேறியது.

இந்னிகழ்வின் பிரதம ஏற்பாட்டாளரன குகன் தெய்வேந்திரன் என்ற நன்கறியப்பட்ட பாரிஸ் தமிழ் தாதா, நெடுங்குருதி நிகழ்வின் சற்று முன்னதாக துபாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் பிரஞ்சு குற்றத்தடுப்புப் பொலீசாரால் கைதுசெய்யப்பட, ஷோபா சக்தி ஏற்பாட்டாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, இலண்டனிலிருந்து வருகைதந்த ராகவன் தலைமையில் நெடுங்குருதி நிகழ்ந்தேறியது.

குகன் கைதைத் தொடர்ந்து அதே தாதாக்கள் பாணியில் ஏனைய வன்முறையாளர்களால் கூட்டம் நடாத்திமுடிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த அ.மார்க்ஸ் என்ற எழுத்தாளர் ஏனைய எஸ்.எல்.டி.எப் உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு முதலமச்சர் பிள்ளையானின் ஆலோசகரான ஞானம் ஆகியோரை முன் நிலைப்படுத்திய இந்ந்திகழ்வில் வன்முறையின் எதிரொலியாக மிகக் குறைவான எண்ணிக்கையினரே கலந்து கொண்டனர்.

புலம் பெயர் சூழலில் முதலாளித்துவ ஜனநாயகம் வழ்ங்கும் இடைவெளியை ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கை படிப்படியாகச் சிதறடிக்கப்படுகிறது,
வரலாற்றை மனிதர்கள் படைப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் குறித்த வரலாற்றுக்கட்டத்தினது உருவாக்கமே. ஆக கருத்தைப் படைப்பதில், வரலாற்றைப் படைப்பதில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு குறித்த எல்லைவரையான பாத்திரமுண்டு. இது கருத்திற்கும், வரலாற்றுக் கட்டத்திற்குமான ஒரு இயங்கியல் தொடர்பை உருவாக்கிறது. மாறுனிலை கொண்ட இத்தொடர்பானது இறுதியாக கருத்திற்கும் மனித வாழ்னிலைக்கும், சமூகத்திற்கும் இடையிலான தொடர்பாகிறது. தொடர்ச்சியான நிலையற்ற இந்தத் தன்மையின் வெளிப்பாடே மனிதன். நேற்றைய எனது தவறுகள் நிறைந்த கருத்துக்களை இன்று நான் செழுமைப்படுத்திக் கொள்ளமுடியும், என்னை விமர்சனத்திற் குட்படுத்துவதூடாக!
கருத்துச் சுதந்தித்தை மறுக்கும் வன்முறையாளர்கள் இனியாவது தம்மைச் சுய விமர்சனத்திற்குட்படுத்துவதனூடாக புதிய ஜனநாயவெளியைச் சுதந்திரமானதாக கட்டமைக்க உதவ வேண்டும்.
 நாம் இழந்தவை ஏராளம். மாறாகப் பெற்றுக்கொண்டவை பூஜ்யமே. இழப்புக்களிலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குவோம்.

ழான் போத்ரிலார் (Jean Baudrillard) : விதிவாதியின் பிம்ப அரசியல் :யமுனா ராஜேந்திரன்

கிறிஸ்துவுக்கு முன்னும் பின்னும்

சித்திரவதையைப் பொறுத்து

அது இருந்த மாதிரியேதான் இருக்கிறது

பூமிதான் சுருங்கிப் போய்விட்டது

நடக்கிற எல்லாமும்

பக்கத்து அறையில் நடக்கிற மாதிரி

கேட்கிறது

விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா

1.

2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள அபுகாரிப் சிறைச்சாலையில் தம் வசமிருந்த ஈராக்கிய யுத்த கைதிகளை சித்திரவதை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டினையடுத்து ஈராக் முழுவதிலுமான அமெரிக்கச் சிறைகளுக்குப் பொறுப்பாகவிருந்த பெண் படைத்துறைத் துறை தலைவரான பிரிகேடியர் ஜெனரல் ஜானிஸ் கார்பின்ஸ்க்கி உள்பட ஆறு அமெரிக்கப் படைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென 2004 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் அறிவித்திருக்கிறது. சிறை நடத்தைகளுக்குப் பொறுப்பான தளபதி ஜானிஸ் கார்பின்ஸ்க்கியும் ஆண் கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததில் அதிகம் பிரச்சினைக்குள்ளாகயிருக்கும் லின்டி லண்டன் ஆகிய இருவரும் பெண் படைத்துறையினர் என்பதும் அறிவிக்கபட்டிருக்கிறது.

தம்மிடமிருந்த யுத்தக் கைதிகளை நிர்வாணப்படுத்தி அவர்களது ஆணுறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகளைப் பொறுத்தினார்கள் எனவும் யுத்தக் கைதிகள் பலரை ஒரே சமயத்தில் நிர்வாணப்படுத்தி அவர்களைப் பலவந்தமாகக் கூட்டுப் புணர்ச்சி செய்ய நிர்ப்பந்தித்தார்கள் எனவும் படைத்துறை ஆண்களும் பெண்களும் பார்த்துக் கொண்டிருக்கப் பலவந்தமாகக் கைதிகள் முஷ்டி மைதுனம் செய்ய நிரப்பந்திக்கப்பட்டார்கள் எனவும் படைத்துறையினர் வெறிநாய்களை அம்மணமான கைதிகளின் மீது ஏவினார்கள் எனவும் அம்மணமான கைதிகளை நாய்களைப் போல கழுத்தில் கச்சை கட்டி இழுத்தார்கள் எனவும் அம்மணமான கைதிகளின் ஆணுறுப்புகளைச் துப்பாக்கியால் சுட்டுவிடும் தோரணையில் கைக்குறி காட்டி தமது செயலைக் கொண்டாடினார்கள் எனவும் கைதிகளின் உடலில் மலத்தைப் பூசி அவமானப்படுத்தினார்கள் எனவும் அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சி நியூயார்க்கர் மேகசின் வாசிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் சித்திரவதை குறித்த புகைப்படங்களை வெளியிட்டதனையடுத்து அமெரிக்க மக்களும் உலகெங்குமிருந்த மனித உரிமையாளர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள்.

அமெரிக்காவில் சிபிஎஸ் தொலைக்காட்சியினை அடுத்து புகழ்வாய்ந்த கலாச்சார இதழான நியூயார்க்கரில் அதனது புகழ்மிக்க பத்தரிக்கையாளர் செய்மோர் ஹெர்ஸ் அபுகாரிப் குறித்த மேலும் சில புகைப்படங்களோடு கட்டரையொன்றை எழுதினார். செய்மோர் ஹெர்ஸ் 1969 ஆம் ஆண்டு அமெரிக்கா வியட்நாமில் மைலாய் கிராமத்தில் நிகழ்த்திய மனித வேட்டையை உலகிற்கு முன் கொண்டு வந்தவர். எரிந்த தீக்காயங்களுடன் மைலாய் வீதியில் ஒரு பிறந்தமேனிச் சிறுமி ஓடி வரும் புகைப்படம் இவர்வழி வெளியிடப்பட்டு அப்புகைப்பட பிம்பம் அன்று உலகை உலுக்கியது வரலாறு. இதற்கென செய்மோர் ஹெர்ஸ் புலிட்சர் விருதையும் பெற்றார்.

நடைபெற்றிருக்கும் சித்திரவதைகள் ஈராக்கில் அமெரிக்கச் சிறைகளின் அமைப்பு முறையின் ஒரு அங்கமாகவே தோன்றுவதாகவும் செய்மோர் ஹெர்ஸ் கருத்து வெளியிட்டிருக்கிறார். அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால் ரொமஸ்பீல்ட்டின் முழு ஆசிPயுடனும் அவரது தனிப்பட்ட ஆலோசனையின் பேரிலுமே சித்திரவதைகள் நடந்திருப்பதாக செய்மோர் ஹெர்ஸ் நியூயார்க்கரில் எழுதியிருக்கும் கட்டுரையை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்திருக்கிறது.

பட்டினி போடுதல் சாவுப் பயத்தை உருவாக்குதல் முச்சுத்திணற வைத்தல் நீரில் மூழ்கவைத்து மரண அவஸ்தை உருவாக்குதல் போன்றவற்றை கைதிகளிடமிருந்து செய்தி பெறுவதற்காகப் பாவிக்கலாம் என்பது அமெரிக்க உளவுத்துறையினரான சிஜஏவினருக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கும் செய்மோர் ஹெர்ஸ் அதனைத்தான் அமெரிக்கப் படைத்துறையினர் ஈராக்கில் பாவித்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். அவமானரமான குன்டனாமோ சித்திரவதை முகாமின் பொறுப்பாளர்தான் தற்போது அபுகாரிப் சிறைச்சாலைக்குப் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் மனித உரிமைக் காவலின் இலட்சணத்துக்கு ஒரு சான்றாதாரம் எனவும்; சொல்லலாம்.

சிபிஎஸ் தொலைக்காட்சிப் பிம்பங்கள் நியூயார்க்கர் வாசிங்டன் போஸ்ட் பத்திரிக்கைகளின் புகைப்படங்கள் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் நெருக்கடி சில விடயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறது.

1.தகவல் தொழில்நுட்ப ஊடகத்துறையின் சக்தியை இந்நெருக்கடி நிரூபித்திருக்கிறது.

2.உலகிற்குத் தெரியவராமல் நிறைய கொடுமைகளும் சித்திரவதைகளும் பொஸ்னிய வளைகுடா ஆப்கான் மற்றும் ஈராக் போர்களில் இடம் பெற்று வந்திருக்கிறது என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கத்திய அமெரிக்க அரசுத்துறைசார் பிம்பங்கள் அக்கொடுமைகளை மறைத்து வருகின்றன என்பதும் சுயாதீனமான ஊடகங்கள் இதனை வெளிக்கொணராவிட்டால் இவை உலகின் கவனத்திற்கு வராமலே போயிருக்கும் என்பதும் தெளிவுபட்டிருக்கிறது. 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை அமெரிக்கக் கட்டுப்பாட்டிலிருந்த 38 ஈராக்கிய-ஆப்கான் கைதிகள் விசாரணையின்போது அமெரிக்கப் படையினரால் கொல்லபட்டிருப்பதாகவும் இதில் இருவர் சித்திரவதை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் தற்போது அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஒப்பக் கொண்டிருக்கிறது. முன்பாக இது மறைக்கபட்டு வந்த உண்மைகளில் ஒன்றாகும்.

3.இந்தப் பிம்பங்கள் உருவாக்கக் கூடிய விளைவுகள் வெகுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசியல் மாற்றத்தைக் கோருமளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதனை இரு ஆக்கிரமிப்பு நாடுகளினதும் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவுபட்டிருக்கிறது.

4.மறைக்கப்பட்ட நிஜங்களை வெளியிடும் புகைப்படங்கள் திட்டமிட்டு கட்டப்படும் மாதிரிப் புகைப்படங்கள் போலிப் புகைப்படங்கள் போலிப் புகைப்படங்கள் போல உருவாக்கப்பட்ட நகல் போலிப் புகைப்படங்கள் போன்றவற்றுக்கிடையிலான வித்தியாசங்களை எவ்வாறு பகுத்தாய்ந்து நிஜத்திற்கும் பிம்பத்திற்குமான உறவையும் பிம்பத்தின் பின்னுள்ள நிகழ்வின் ஆதாரத்தையும் கண்டடையமுடியும் என்பதும் கேள்விக்குரிய விசயமாக ஆகியிருக்கிறது.

2.

பிரெஞ்சு பின்நவீனத்துவக் கோட்பாட்டாளரான ழான் போத்ரிலாருக்கு இவ்வாறான குழப்பங்கள் எதுவும் இல்லை. போத்ரிலார் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ‘நிஜத்துக்கும் பிம்பத்திற்குமான வேற்றுமைகளைக் காண்பது இந்தத் தகவல் தொழில்நுட்பப் பிம்ப யுகத்தில் இனிச் சாத்தியமில்லை’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். ழுhன் போத்ரிலார் அவரது வாழ்வு குறித்த பின்னணி கேட்கப்படுகிறபோதெல்லாம் அதை அசட்டை செய்துவிடுகிறவர். போத்ரிலார் நம்காலத்தில் பிரபலமாயிருக்கும் பெரும்பாலுமான பிரெஞ்சுச் சிந்தனையாளர்களைப் போலவே 1968 பாரிஸ் மாணவர் எழுச்சியினாலும் ஸ்டாலினிய செக்கோஸ்லாவாக்கியப் படையெடுப்பின் விளைவினாலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அல்ஜீரியக் காலனியாதிக்கத்தின் விளைவாலும் உருவானவர்தான். பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியோடு இக்காலகட்டத்தின் அறிவாளிகள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்கள்.

போத்ரிலாரின் இன்றைய பிம்ப அரசியலுக்கான மூலதாரங்கள் இரண்டு பிரெஞ்சு அறிவுஜீகளிலிருந்து துவங்குகிறது.

நுகர்பொருட்களின் ஆதிக்கம் அதனால் விளையும் வெகு மக்களின் செயலின்மை பிம்பங்களின் ஆதிக்கம் குறித்துப் பேசியவர்கள் அந்த இரு பெரும் அறிவுஜீகள். ஹென்றி லெப்வோர் மற்றும் கை டெபோர்ட் போன்றவர்களே அவ்விருவர். 1947 ஆம் ஆண்டு வெளியான ஹென்றி லெப்வோரின் அன்றாட வாழ்வு குறித்த விமர்சனம ( Critique of Every day Life) அவரது புகழ்வாய்ந்த ஆய்வு நூல். நுகர்வுக்கு ஆட்பட்ட வெகுமக்கள் செயலுக்குத் தகுதியற்றவர்கள் எனவும் மாற்றத்திற்குத் தடைகளாக நுகர்வுக்கு ஆட்பட்ட அவர்களது நடவடிக்கையே அமைந்திருக்கிறது எனக் கண்டவர் லெப்வோர்.ஹென்றி லெப்வோரது கருத்துக்களோடு மட்டுமல்ல பல்கலைக்கழகத்தில் அவருடன் நேரடியிலும் நெருக்கமான உறவு பூண்டிருந்தவர் போத்ரிலார்.

போத்ரிலாரை அதிகமும் பாதித்த இன்னொருவர் கை டொபோர்ட். கை டெபோர்ட 1967 ஆம் ஆண்டு பிம்பங்களின் சமூகம (The Society of Spectacle) எனும் நூலை எழதினார். மோஸ்தர் தொழிற்சாலையையும் பிம்பங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட விளம்பர யுகத்தினையும் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் அன்னியமாகின விளைவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியவர் கை டெபோர்ட. ஐரோப்பியக் கலக அரசியலில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்திவரும் சிச்சுவேசனிசம் (ளவைரயவழைnளைஅ) அல்லது நடப்புவாதம் எனும் கருத்து நிலைபாட்டின் ஆரம்பகர்த்தாக்களில் அவரும் ஒருவர். பிம்பங்களைக் கலைப்பதற்கும் அதைத் தகர்ப்பதற்குமான நடவடிக்கைகளை அன்றாட வாழ்வில் நிகழ்த்த வேண்டும் என்பதனை அரசியலாக முன்வைத்தவர் கை டெபோர்ட். சிச்சுவேசனிஸ்ட இயக்கத்தில் கொஞ்ச காலம் செயல்பட்டவர் ழான் பேத்ரிலார்.

நுகர்வுச் சமூகம் பிம்பங்களின் ஆதிக்கம் போன்றவை குறித்த லெப்வோர் மற்றும் கை டெபோர்ட் என இருவரது கருத்தாக்கங்களும் போத்ரிலாரின் பகுப்பாய்வின் அடிப்படைகளாக அமைகின்றன.

மக்கள் திரளிலிருந்து விலகியதான கோட்பாட்டு முயற்சிகளுக்கான தளம் அவருக்கு ஹென்றி லெப்வோரிலிருந்து கிடைக்கிறது. ஹென்றி லெப்வோர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அரசின் நிலைபாட்டை நிபந்தனையற்று முழுக்கவும் ஆதரித்து நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹென்றி லெப்வோர் கை டெபோர்ட போன்றவர்களின் அடிப்படைப் பகுப்பாய்வு முறைகளும் பின்நவீனத்துவச் சிந்தனை முறையும் அது வழங்கிய மொழியியல் உளவியல் தொல்லியல் பார்வைகளும் இணைந்ததாக போத்ரிலாரின் நகல்போலி குறித்த பிம்ப அரசியல் பரிமாணம் பெற்றிருக்கிறது.

போத்ரிலார் மீதான இந்தப் பாதிப்புகளை அவர் என்றுமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டதில்லை. போத்ரிலாரின் கருத்துலகம் அமைப்பியல் பின்வீனத்துவம் போன்றவற்றின் சொல்லாடல்களிலும் கருத்தாக்கங்களிலும் கிளைத்ததாக இருக்கிறது. இந்தச் சிந்தனைப் பின்னணியோடு பொஸ்னிய யுத்தத்திலிருந்து செப்டம்பர் பதினொன்றுக்குப் பின்னான உலகு வரை தகவல் தொழில்நுட்பத்தின் கட்டுதளையற்ற பிம்பப் பரவலாக்கம் நிகழ்ந்த இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நிகழந்தவை குறித்து உடனுக்குடன் கருத்துச் சொல்கிற கல்வித்துறைசார் கலாச்சார விமர்சகராக அவர் இருப்பதாலேயே அவரது கருத்துக்கள் முக்கியத்துவமடைகின்றன. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அவரது கருத்துக்கள் நிறுவனமயமாகிவிட்ட மேற்கத்திய அமெரிக்க கல்வித்துறைக்கு மிக முக்கியமானதாகும். அவர் கருத்துச் சொல்கிற அரசியல் சம்பவங்களின் முக்கியத்துவத்தினால் அவரது கருத்துக்கள் வெகுஜன அரசியல் நடவடிக்கையாளர்களிடமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

உலக நிகழ்வுகளில் 1990 இருந்து 1992 ஆம் ஆண்டு வரையிலுமான மூன்றாண்டு காலகட்டங்கள் மிக முக்கியத்துவமானதாகும். இந்த ஆண்டுகளில்தான் யுத்தம் தொலைக் காட்சிப் பிம்ப யுத்தமாகப் பரிமாணம் பெற்றது. கதிரியக்கத்தால் உந்தப் பெற்ற குண்டு வீச்சுத் தொழில்நுட்பமாக (laser guided precision bomb technology) இக்காலத்தில் யுத்தம் தொலைக் காட்சியில் வண்ண வானவேடிக்கை பிம்பங்களின் உலகமாக ஆகியது. பொஸ்னிய யுத்தமும் முதலாம் ஈராக் யுத்தமும் நடந்து முடிந்தது இந்த ஆண்டுகள்தான்.

இந்த ஆண்டுகளில் சமகாலத்தில் நேர்ந்த இரண்டு மிகப்பெரிய மாற்றங்களில் முதலானது உலக விரிவு வலை ( world wide web) கண்டுபிடிக்கப்பட்டதாகும். இங்கிலாந்தைச் சேர்ந்த மூலக்கூறு பௌதிகவியலாளர் பெர்னர்ஸ்; லீ 1991 ஆம் ஆண்டு இணைய வளைத்தளத்தை உலகின் பொதுமகனுக்கென அர்ப்பணித்தார். உலகின் சாதாரண மகனுக்கு அவர் அருளிய மிகப்பெரிய கொடை இது.

இரண்டாவதாக நேர்ந்த மாற்றம் அரசியல் ரீதியிலான ஊடகத்துறைப் புரட்சி எனலாம். 1992 ஆம் ஆண்டு மத்தியக் கிழக்கு நாடான கத்தாரிலிருந்து அல்ஜிஜீரா தொலைக் காட்சி ஆரம்பிக்கப்பட்டதுதான் அந்நிகழ்வு. உலகின் மாற்று அரசியலுக்கான தகவல் ஆதாரமாக அமெரிக்க ஐரோப்பிய ஒற்றறைப் பரிமாண ஊடகங்களுக்கு எதிர் தகவல் ஆதாரமாக அல்ஜிஜீரா தொலைக்காட்சி தோன்றியது.

இத்தகைய அரசியல் மற்றும் தொலைக்காட்சிப் பிம்பச் சூழலில்தான் ழான் போத்ரிலாரது அபிப்பிராயங்கள் வெளியாகின்றன. பயங்கரவாதம் உலகவயமாதல் பிரபஞ்ச மதிப்பீடுகள் உள்ளுர் மதிப்பீடுகள் சித்திரவதை கடத்தப்பட்ட பணயக் கைதிகள் போன்ற பிரச்சினைகள் குறித்ததாக போத்ரிலாரின் இக்காலத்தியக் கதையாடல் களம் அமைகிறது. .

ழான் போத்ரிலாரின் கருத்தாக்கங்களில் மிக முக்கியமானது சிமுலேசன் (simulation)  சிமுலெக்ரா (simulacra) மற்றும் ஹைபர் ரியாலிட்டி (hyper reality) போன்றவையாகும். சிமுலேசன் என்பதனை நிகழ்வு மற்றும் அசல் மற்றும் ஆதாரம் போன்றவற்றொடு தொடர்பற்ற நகல் எனச் சொல்லாம். தொலைக் காட்சியைப் பொறுத்து பிம்பத் தொகுபபின் போது தத்தமது நோக்குக்காக சம்பந்தப்பட்டப் பிம்பங்களால் பயன்பெறுபவர்களால் உருவாக்கப்படும் அசலைப் போன்ற போலிப் பிம்பம் என இதனை விளக்கலாம். அடுத்த கட்டமாக சிமுலெக்ரா என்பது படத்தொகுப்பின் போது உருவாக்கப்பட்ட நகலின் மீது சார்ந்திருக்கிற நகல்போலி என விளக்கலாம். போலி அசலின் தன்மையைக் கொண்டிருப்பதில்லை நகல்போலி போலியின் தன்மையைக் கூடக் கொண்டிருப்பதில்;லை. இவ்வாறாக நகல் போலிகளின் அதீதமயமான நிலையாக நகல்போலியின் மீதான நகல்போலிகளின் நிலையாக ஹைபர் ரியாலிட்டி உருவாகிறது.

‘ஹைப்’ அல்லது அல்லது ‘ஹைபர் டென்ஸன்’ என்பன போன்ற சொற்கள் எழுப்பும் அர்த்தம் அதீதம் என்பதனோடு தொடர்புபட்டது. ஹைபர் ரியாலிட்டி என்பது அதீதப்படுத்தப்பட்ட பல்வகை யதார்த்தங்களின் அதீதத் தொகுப்பு நிலையாகும். இதனை ஆழ் யதார்த்தம் என்று சொல்லமுடியாது. இந்த யதார்த்தம் காலம் இடம் போன்றவை வழங்கும் ஆதாரமான யதாரத்தங்களை முற்றிலும் மறுத்த நிலையாகும். கலை இலக்கியம் போன்றன இயங்கும் வெளியும் இதுவேயாகும். இப்போது இருக்கும் உலகு மோஸ்தர்கள் பரிவர்த்தனை மதிப்புகள் போன்றவற்றினால் உருவான நகல்போலி உலகாக இருக்கிறது என்பதுதான் போத்ரிலாரின் நிலைபாடாக இருக்கிறது.

அசலுடன் சம்பந்தமற்ற போலி என்பதாகவே இன்றைய உலகு இருக்கிறது. இன்றைய மோஸ்தர்கள் நுகர்வுப் பொருட்கள் விளம்பரங்கள் தொலைக்காட்சிப் பிம்பங்கள் மக்களின் நுகர்வுத் தேர்வுகள் போன்றவற்றுக்கான ஆதாரம் அல்லது இருப்பிலிருந்த நிரந்தர நிஜம் அல்லது நிகழ்வு என்று ஏதுமில்லை. அவற்றை இன்றைய பின் நவீனயுகத்தில் கண்டுபிடிப்பதும் சாத்தியமில்லை என்கிறார் போத்ரிலார். இருப்பதெல்லாம் நகல்போலிகளின் எல்லையற்ற பெருக்கம்தான். ஓரு கட்டத்தில் நகல்போலியின் மீதான நகல்போலி எனும் கருத்தாக்கம் கூட நகல்போலி சமூகத்தின் உறுப்பாக ஆகிவிடும் என்கிறார் ழான் போத்ரிலார்.

அவரது பகுப்பாய்விலிருந்து உருவாக்கப்படுகிற அவரது முடிவுகள் இரண்டு.

1.பயன்மதிப்பு என்பது மறைந்து தற்போது பரிவர்த்தனை மதிப்பு மட்டுமே இருக்கிறது.

2.நிஜத்துக்கும் நிழலுக்கமான வித்தியாசம் மறைந்து போய்விட்டது. நகல்போலிகள் இன்று நிஜங்களாகியிருக்கிறது. பல்வேறு நகல்போலிகள் அலைவதினால் யதார்த்தமென்பதும் நிஜமென்பதும் பன்முகப்பட்டதாக ஆழ் யதார்த்தப் பண்பு கொண்டதாக ஆகிவிட்டது. ஆகவே ஆதாரங்கள் என்பதும் நிகழ்வென்பதும் நிஜமென்பதும் இனி இல்லை. இருப்பதெல்லாம் பிம்பங்களினது நகல்போலிகள்தான் என்கிறார் அவர்.

போத்ரிலாரைப் பொறுத்தளவு கருத்தியல்கள் இலட்சியங்கள் வரக்கங்கள் சமூக வேறுபாடுகள் எதுவும் இன்று இல்லை. மாற்றுச் சமூகம் போராட்டங்கள் எதிர்ப்பியக்கங்கள் என்பதற்கொல்லாம் ழான் போத்ரிலாரின் உலகத்தில் அர்த்தமில்லை. ஒரே வார்த்தையில் சொல்வதானால் : போத்ரிலாரின் உலகத்தில் மனிதப் பரிமாணம் மனிதனது செயலுலூக்கம் மிக்க பிரதிநிதித்துவம் என்பதற்கு ஏதும் முக்கியத்துவமில்லை.

போத்ரிலாரின் இத்தகையை நிலைபாடு அமெரிக்க சமூகத்துக்கும் ஐரோப்பிய சமூகத்துக்கும் ஜப்பானிய சமூகத்துக்கும் ஓரளவு பொருந்திவரக் கூடியதுதான். நுகர்வுக் கலாச்சரத்தின் விளைநிலங்கள் இந்தச் சமூகங்கள். அந்நியமான மனிதர்கள் அலையும் பாலை நிலங்கள் இந்நிலங்கள். ஆனால் நைக் காலணிகள் துணிவகைளிலிருந்து இந்த நாடுகளுக்கு ஏற்றமதியாகும் நுகர்பொருட்களை உருவாக்குபவர்கள் தென் ஆசிய நாடுகளின் பசிபிக் ஆசிய நாடுகளின் வியர்வைத் தொழிலாளிகள் என்பதனை நாம் மறந்துவிட முடியாது. இங்கிலாந்துக் கோட்பாட்டாளரான நோர்மன் ஜெராஸ் ‘தொழிலாளி வரக்கத்திற்கு விடைதருவோம்’ என்று சொன்னபோது ‘இல்லை மேற்குக்கும் அமெரிக்காவுக்கும் நுகர்வு பொருட்களையும் மோஸ்தர் பொருட்களையும் பிம்பங்களையும் ஆதாரமாகப் படைத்துத் தரும் வியர்வைத் தொழிலாளிகள் இதோ மூன்றாம் உலக சமூகங்களில் ஐரோப்பா அமெரிக்கா அல்லாத சமூகங்களில் வாழ்கிறோம்’ என்றார் இங்கிலாந்து மார்க்சியரும் நிறவெறி எதிர்ப்பாளருமான சிவானந்தன்.

மேற்கில் வெறும் குறிகளாக எஞ்சும் நுகர்பொருட்கள் எமது நாடுகளில் குறைந்த கூலியாகவும் சுரண்டலாகவும் காசநோயாகவும் எஞ்சிநிற்கிறது எனும் யதார்த்தம் போத்ரிலாரின் அன்றாட வாழ்வு யதார்த்தம் இல்லைதான். போரினால் சிதறிய உடல்களும மரணமுறும் அநாதைக் குழந்தைகளும் அகதிவாழ்வும் போத்ரிலாரின் அன்றாட யதார்த்தங்கள் இல்லைதான். போத்ரிலாரின் கருத்தாக்கங்கள கிராமங்களும் விவசாயக் கூலிமக்களும் வியர்வைத் தொழிலாளர்களும் நிறைந்த எமது நாடுகளின் யதார்த்தத்திற்குப் பொநுந்திவரும் யதாரத்தம் அல்ல. போத்ரிலார் மேற்கத்திய் அமெரிக்க உலகில் இரைந்து கிடக்கும் பிம்பங்களை முதன்மைப்படுத்தியே சகல விசயங்களையும் ஆய்வு செய்கிறார்.

தொலைக்காட்சிப் பிம்பங்கள் புகைப்படங்கள் போன்றவை குறித்து அதிகமாகப் பகுப்பாய்வில் ஈடுபட்ட பிரெஞ்சுச் சிந்தனையாளரென போத்ரிலாரையே சொல்லலாம். செப்டம்பர் தாக்குதலின் பின் கருத்தியலோ இலட்சியங்களோ கோருதல்களோ எதிர்ப்புணர்வோ எதுவும் இல்லையென்கிறார் இவர். செப்டம்பர் தாக்குதல் தனக்குத் தானே அழிவைத் தேடிக்கொண்ட அமெரிக்க சமூகத்தின் மீதான குறியீட்டுத் தாக்குதல் என அவர் குறிப்பிடுகிறார். தொலைக் காட்சிகளில் நிறைத்துக் கொண்டு நின்ற ஆதீத பிம்பங்களாகவே வளைகுடா யுத்தம் நடந்து முடிந்திருக்கிறது. தகவல் தொழல்நுட்ப விளையாட்டை திரையில் நிகழ்த்துவதாகவே போர் நடந்து முடிந்திருக்கிறது. காட்டப்பட்ட போர் அமெரிக்காவினால் முன்பே திட்டமிடப்பட்ட போர். நிஜமான போர் அல்ல எனும் அவர் நிஜமான போரைப் பாரக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாது எனவும் தெரிவிக்கிறார். போத்ரிலாரைப் பொறுத்த அளவில் அனைத்தையும் உறைநிலையில் வைத்தே விவரிக்கிறார்.

போர் என்பது ஒரு தொடர் நடவடிக்கையென்றோ போரில் மனிதர்கள் மரணிக்கிறார்கள் தகவல் மேலாதிக்கம் கொண்டவர்கள் மறைத்த பிம்பங்கள் இருக்கின்றன என்பதையோ அவர் காண்பதில்லை. போருக்கு எதிரான இயக்கங்கள் இருக்கிறது அதில் மனிதர்கள் பங்கு பெறுகிறார்கள் என்பதனை அவர் காண்பதில்லை. அவரைப் பொறுத்து சமூகத்தின் மேல்கட்டுமானமே கீழ்க்கட்டுமானத்தினைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. கீழ்க்கட்டுமானத்தின் ஆதாரங்;களை இனி காண்பது என்பது சாத்தியமில்லை. இவ்வகையில் எதிர்ப்பு நடவடிக்கைகள் அர்த்தமில்லை. வர்க்கப் போராட்டம் அர்த்தமில்லை. பயங்கரவாதததிற்கு ஒரு நோக்கமும் இல்லை என்கிற நிலைபாடுகளை வந்தடைகிறார்.

நிகழ்வுக்கும் பிம்பத்திற்கும் நிஜத்திற்கும் புனைவுக்கும் ஆன உறவுகளை கார்ல் மாரக்ஸ் தனது அன்னியமாதல் மற்றும் முதலாளிய சமூகத்தில் சரக்குவழிபாடு போன்ற கருத்தாக்கங்களின் வழி பயன்மதிப்பு-பரிவர்த்தனை மதிப்பு போன்ற கருத்தாக்கங்களின் வழி தீவிரமாகவே அலசியிருக்கிறார். அவரது பகுப்பாய்வு முறையை அறுபதுகளில் தோன்றிய தகவல் தொழில்நுட்பம் நுகர்வுக் கலாச்சாரம் விளம்பரங்கள் போன்றவற்றால் உருவாக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரத்திற்குப் பொறுத்திப் பாரத்தவர்களென ஜெர்மனியில் பிராங்க்பரட் சிந்தனைப் பள்ளியைச் சேர்நத ஹெர்பர்ட் மார்க்யூசும் அதார்னோவும் பிரான்சில் கை டெபோர்டும் இருந்திருக்கிறார்கள். அமெரிக்க வகை நுகர் கலாச்சாரம் எவ்வாறு ஓற்றைப் பரிமாண மனிதனை உருவாக்குகிறது என மார்க்யூஸ் விவரித்தார். ஆதிக்க வகை கலாச்சாரத்திற்கு ஆட்பட்ட செயலிலிகளாக எவ்வாறு மனிதர்கள் ஆக்கப்படுகிறார்கள் என்பதனை இத்தாலிய மார்க்சியரான அந்தோனியோ கிராம்சியின் மேலாதிக்கம் ( hநபநஅழலெ) எனும் கோட்பாட்டு அடிப்படையிலும் மார்க்சினது அந்நியமாதல் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையிலும் கை டெபோர்ட் முன்வைத்தார். இந்தச் செயலின்மைக்கு எதிராக கலாச்சார வெளியிலும் அன்றாட வாழ்விலும் எழுத்திலும் அன்றாட நிலவும் வாழ்வுக்கு எதிரான நடவடிக்கைகளை ‘மாற்றாக’ கை டெபோர்ட் முன்வைத்தார். பிம்பங்களின் சமூகத்திற்கு எதிராக நிகழ்வை மீட்டெடுக்க களியாட்டங்களையும் திருவிழாக்களையும் எதிர்ப்பு வடிவங்களாகவும் அவர் முன்வைத்தார்.

நிகழ்வுக்கும் புனைவுக்கும் நிஜத்துக்கும் போலிக்குமான இடைவெளியை இனம் காணமுடியாது என்பதால் பிம்ப அரசியலை அதீதமான எல்லைகளுக்கும் போத்ரிலார் எடுத்துச் சென்றார். ஓரு வகையில் மனிதனின் அழிவு குறித்துக் கொஞ்சமும் பொறுப்பற்று தூய கோட்பாட்டுச் சர்ச்சைகளில் மட்டுமே ஈடுபடுகிற உறைந்த மனம் கொண்டவராக அவரது மூனறு காலகட்டத்திய எழுத்துக்கள் பார்க்கப்படுகின்றன. பொஸ்னிய யுத்தம் வளைகுடாப் போர் செப்டம்பர் 11 தாக்குதல் போன்றவை குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் குரூரமான தன்மை கொண்டவை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

பொதுவாக அவரது கட்டுரைகளைக் குறித்துப் பேசவருகிறவர்கள் அனைவருமே அவரது எழுத்துகள் எளிமையாகப் புரிந்து கொள்ள முடியாதவை எனகிறார்கள். தகவல்யுகம் குறித்து எழுதுகிற ஒரு வகை தீரக்கதரிசி என அவரை விதந்தோதுகிற ஊடகத்துறைசார் கல்வியாளர்களும் உண்டு. தீர்க்கதரிசிகள் கடந்த காலத்தை விதிவசம் என்பவர்கள் மட்டுமல்ல எதிர்காலமும் அவர்களைப் பொறுத்துக் கடக்கமுடியாத விதிகளால் ஆனதுதான் என்பார்கள். இந்த வகையில் போத்ரிலாரும் ஒரு விதிவாதிதான். உடனடிக் கவனிப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கும் தன்மை கொண்டவை போத்ரிலாரின் எழுத்துக்கள் என்பதில் எவருக்கும் மாறுபாடு இருக்கமுடியாது.

குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததையடுத்து ஈராக்கின் மீது அமெரிக்க மேற்கத்தியப் படைகள் போர் தொடுத்த வளைகுடாப் போர் பற்றிக் குறிப்பிடும்போது ‘அந்தப் போரே நடக்கவில்லை’ என போத்ரிலார் எழுதினார். ‘போர் நடக்கவில்லை நடக்காது நடக்கப் போவதில்லை’ என அவர் எழுதினார். சம்பந்தப்பட்ட கட்டுரைகளை ஆழ்ந்து வாசிக்கிறபோது மோம்போக்காகவேனும் அவர் சொல்ல வருகிற விசயம் இது அல்ல எனச் சாதாணமானவர்களே புரிந்து கொள்ள முடியம். ஆனால் அதிர்ச்சி மதிப்புக்காக அவர் இவ்வாறான தலைப்புகளை எடுத்துக் கொள்கிறார். அந்தக் கட்டுரையில் அவர் சொல்ல விரும்பும் விஷயம் இதுதான் : ஈராக் யுத்தம் தொலைக்காட்சிகளில் வாணவேடிக்கை போல நடந்து முடிந்த ஒரு விசயம். முன்பாகவே திட்டமிட்டு நடத்தி முடிக்கப்பட்ட ஒரு விசயம். பிம்பங்களாகவே எஞ்சிப்போன ஒரு விசயம் என்பதுதான். உண்மையான போருக்கும் இதற்குமான இடைவெளியையோ வித்தியாசத்தையோ காணவியலாது என அவர் தெரிவிக்கிறார். அதாவது தொலைக்காட்சி பிம்பங்;களின் நகல்போலித் தன்மையை மட்டுமே முன்னிறுத்தி போருக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் அகதிமக்களுக்கு நேர்ந்த இடப்பெயர்வின் துயரம் மாற்று ஊடகங்கள் அமெரிக்க மேற்கத்திய ஊடகங்களுக்கு மாற்றாக முன்வைத்த சிறிய அளவிலான செய்திகள் பிம்பங்கள் போன்றவை அனைத்தையும் நிராகரித்ததாகவே அவரது அணுகுமுறை இருக்கிறது.

போத்ரிலார் பயங்கரவாத்திற்கும் உலகவயமாக்கலுக்கும் நேரடியான உறவைக் காண்கிறார். அதைப் போலவே மேற்கத்திய நவீனத்துவ மதிப்பீடுகளாள சுதந்திரம் ஜனநாயகம் மனித உரிமை போன்ற நவீனத்துவ மதிப்பீடுகளின் அடிப்படையிலான மறுமலர்ச்சி யுகக் கருத்தையொட்டிய பிரபஞ்சமயமாதலுக்கும் உலகவயமாதலுக்கும் இணக்கப்படுத்த முடியாத முரணையும் அவர் காண்கிறார். பிரபஞ்சமயமாதலுக்குமான பரிவர்த்தனையாக தறபோது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உலகவயமாதலை முன்வைக்கின்றன. மனித உரிமை விடுதலை ஜனநாயகம் போன்ற பிரபஞ்சமயமான மதிப்பீடுகளை முன்வைத்து அமெரிக்கா போரில் ஈடுபட்டாலும் அதனது நோக்கம் வன்முறையான உலகவயமாதல் என்கிறார் போத்ரிலார். நகல்போலிகள் நிறைந்த பொருளியல் ஆதிக்கத்தை பிரபஞ்ச மதிப்பீடுகள் எனும் போர்வையில் அமெரிக்கா மற்ற நாடுகளின் மீது திணிக்கிறது என்கிறார் அவர். உலகவயமாதலின் வன்முறை என்பதை அமெரிக்கா பிரபஞ்சமயமானது எனும் மதிப்பீடுகளின் போர்வையில் வைப்பதால் மேற்கத்திய மதிப்பீடுகளும் அழிந்து அது கட்டற்ற வன்முறைச் சூழலை உருவாக்குகிறது என்கிறார் போத்ரிலார்.

எந்தக் குறிப்பிட்ட கலாச்சார மதிப்பீடுகளும் பிரபஞ்சத் தன்மை கொண்டவை அல்ல. காலனியாதிக்கம் பிற பல் கலாச்சாரங்களை தன்வயப்படுத்தி பிரபஞ்சமட்டத்திற்குக் கொண்டு வந்ததால் தனது தனித்துவத்தைப் பேணுவதன் பொருட்டு அக்கலாச்சாரங்கள் மரணமுற்றது. அது அழகான மரணம் என அவர் குறிப்பிடுகிறார். இதே மாதிரியில் தறபோது மறுமலர்ச்சிக்கால மதிப்பீடுகளையும் அமெரிக்க மதிப்பீடுகளையும் தனித்துவமான புவியியல்சார் மதிப்பீடுகளை பிற மக்களின்மீது உலகவயமாதல் எனத் திணிப்பதால் இரண்டு விளைவுகள் ஏற்படுகிறது. தன்னழிவை அமெரிக்க மேற்கத்திய சமூகங்கள் நோக்கிச் செல்கிறது தன் மதிப்பீடுகளின் அழிவை இச்சமூகங்கள் நோக்கிச் செல்கிறது. அதே வேளையில் பிற காலச்சாரங்களிலிருந்து தற்பாதுகாப்புக்கான வன்முறையை அது தோற்றுவிக்கிறது. செப்டம்பர் 11 தாக்குதல் அத்தகையைதுதான் என்கிறார் போத்ரிலார். உலகவயமாதலின் வன்முறையே பயங்கரவாத்திற்கான அடிப்படை என்பதனை அவர் முன்வைக்கிறார்.

கலாச்சாரச்சார்புவாத நிலைபாட்டையும் உலகவயமாதலையும் இணைத்து பயங்கரவாத்தின் தோற்றத்திற்கான காரணத்தை அவர் முன்வைக்க விளைகிறார். ஆனால் கலாச்சாரங்கள் முற்றிலும் பிளவுண்டவை அல்ல என்பதும் மனித உரிமை ஜனநாயகம் சுதந்திரம் போன்றவை பிற சமூகங்களுக்கு ஒவ்வாதவை அல்ல என்பதனையும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.

போத்ரிலாரின் பகுப்பாய்வில் ஒரு பகுதி உண்மையே இருக்கிறது. பிரபஞ்சமதிப்பீடுகளை முன்வைத்ததாக அமெரிக்கா தனது உலகவயமாதலின் பொருளியல் நலன்களை உலகின் சகல இடங்களுக்கும் விஸ்தரிக்கிறது என்பதுதான் அந்தப் பகுதி உண்மை. ஆனால் கலாச்சாரங்கள் தீவுகளாக இல்லை என்பதனையும் முற்றிலும் இணங்கவே முடியாது என்பதனையும் ஒப்பமுடியாது என அமர்த்யா சென் போன்ற தத்துவம் கற்ற கிழக்கத்தியப் பொருளியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இவ்வகையில் பின்லேடன் ஜோர்ஸ் புஸ் இருவருமே ஒரே வகையிலான அடிப்படைவாதிகள்தான் என இவ்வகையிலேயெ ஆப்ரிக்க இலக்கியவாதியும் மனித உரிமையாளருமான வோலே சோயிங்கா குறிப்பிடுவதும் பரிந்து கொள்ளத் தக்கது. ஸதாம் குசைன் பின்லேடன் மட்டுமல்ல ஜோர்ஜ் புஸ்சும் டோனி பிளேயரும் இத்தாலியப் பிரதமர் பெர்லுஸ்கானியும் கூட மனித உரிமை மீறலாளர்கள்தான் என ஆப்கான் ஈராக் அமெரிக்க பிரித்தானிய மனித உரிமையாளர்கள் அனைவரும் குறிப்பிடுகிறார்கள்.

பிம்ப மைய வழிபாடு கொண்ட போத்ரிலாரின் பின்நவீனத்துவத் தலைகீழ் அணுகுமுறையே அவரது அனைத்துக் குளறுபடிகளுக்கும் காரணமாக அமைகிறது. மேற்கத்திய மையவாதக் கண்ணோட்டத்திலிருந்தும் தொலைக்காட்சீப் பிம்ப மையவாதக் கண்ணோட்டத்திலிருந்தும் மனித காரணி மற்றும் போரின் விளைவுகளாக மறுத்ததாக பேத்ரிலாரின் அணுகுமுறை இருப்பதால் நடவடிக்கையை மறுக்கும் செயல்முடக்க நிலைபாட்டுக்காக பேத்ரிலாரை விமர்சிக்;கிற மாரக்சியர்களும் உண்டு. அதே வேளையில் அறுபதுகளில் தோன்றி பல்வேறு பிரெஞ்சுச் சிந்தனையாளரகளின் தொடர்ச்சியாகவும் நம்காலத்தில் தோன்றியிருக்கும் தகவல் தொழில்நுட்ப ஊடகப் பிம்பங்களைத் தீவிரமாக அலசிய பகுப்பாய்வாளராகவும் அவரைப் பகுதியளவு ஒப்புக்கொள்கிற மாரக்சியர்களும் உண்டு. முன்னதற்கு பிரித்தானிய சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் கோட்பாட்டாளரான அலக்ஸ் கொலின்னி கோஸையும் இரண்டாவது நிலைபாட்டுக்கு அமெரிக்க மார்க்சியரான டக்ளஸ் கெல்னரையும் குறிப்பிடலாம்.

அமெரிக்காவில் போத்ரிலார் குறித்து அதிகமும் எழுதியவரும் போத்ரிலாரின் புத்தகங்களை முன்னுரையோடு பதிப்பித்தவரும் டக்ளஸ் கெல்னர்தான். கெல்னரின் கண்ணோட்டமே மிகப் பொறுத்தமானது என்பதை நாம் போத்ரிலாரைக் குறித்த வாசிப்பில் நாம் அறியமுடியும். தகவல் தொழில்நுட்ப உலகில் தொலைக்காட்சி பிம்பம் புகைப்படத்தின் அரசியல் போன்றவற்றின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியை மிகத் தீவிரமாக எழுப்பியவர் ழான் போத்ரிலார்தான். போத்ரிலாரில் இருந்த பகுப்பாய்வாளர் எனும் பகுதியை நாம் ஏற்பதில் பிரச்சினையிருப்பதில்லை. ஆனால் பகுப்பாய்வின் அடிப்படையில் அவர் முன்வைக்கிற ‘தரிசனம்’ விதிவாதமின்றி வேறில்லை.

எதிர்ப்பு அரசியல் மற்றும் மாற்றம் கடந்ததாக அவர் தனது பிம்ப அரசியலை முன்வைக்கிறார். நிகழ்வு நிஜம் ஆதாரம் போன்றவைகள் இனி இல்லை. அனைத்தும் பிம்பங்களின் விளையாட்டே என அவர் குறிப்பிடுகிறார். போரில் பிம்பத்தின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் தர்க்கத்தில் போரின் விளைவுகளோ மனிதத் துயரமோ அதனது தொடர்ச்சியோ இடம் பெறுவதில்லை. இவ்வகையில்தான் போத்ரிலாரின் கண்ணோட்டத்தைக் குறித்து அலக்ஸ் கொலின்னி கோஸ் ‘போத்ரிலாரின் பார்வையில் ஆழ்கண்ணோட்டமும் இருக்கிறது சமமாக மாட்டுச்சாணமும் (டிரடடளாவை) இருக்கிறது’ எனக் கடுமையாகச் சொல்கிறார்.

போத்ரிலாரை சமூகவியலாளராகவோ தொலைக்காட்சி பிம்பம் குறித்துப் பேசிய கோட்பாட்டாளராகவோ மட்டும் புரிந்து கொள்ள முடியாது. அவரை நீட்சேவின் அடியொற்றியவராகப் பார்க்கிறவர்கள் அதிகமும் இருக்கிறார்கள். அவரது சொல்லாடல்களில் நீட்சே போலவே இறந்துவிட்ட கடவுளும் அவநம்பிக்கையும் செயல்முடக்கமும் இருப்பதனை நாம் காணமுடியும். மேற்கத்திய அமெரிக்கச் சமூகங்களில் தற்போது கலாச்சாரத்துறையும் சரி பல்கலைக் கழகங்களும் சரி தொழிற்சாலைப் பண்டங்களை உற்பத்தி செய்கிற அமைப்பு சார்ந்த நிறுவனங்களாக ஆகிவிட்டன. இதில் செயல்படுபவர்கள் பண்டங்களைத் திரும்பத் திரும்ப உற்பத்தி செய்பவர்களாகவும் செயல்நோக்கிய விமர்சனப் பண்பற்ற பகுப்பாய்வாளர்களாகவும் செயலுக்கு முன்வராதவர்களாகவுமே இருக்கிறார்கள்.

ரெப் மியூசிக் எவ்வாறாக அதனது அரசியல் எதிர்ப்புப் பரிமாணமும் கலகக் கலாச்சாரப் பண்பும் விலக்கப்பட்டு எம்டிவியினால் நுகர் பொருளாக ஆக்கப்பட்டிருக்கிறதோ அதைக் போலவே பல்கலைக்கழகம் சார்ந்த பகுப்பாய்வுமுறைகளும் எதிர்ப்பு நீக்கப்பட்டதாக கலகப் பண்புகள் தவிர்த்த வெறும் பகுப்பாய்வுகளாக ஆகியிருக்கிறது என்கிறார் பிரித்தானியாவின் இடதுசாரிக் கலாச்சாரக் கோட்பாட்டாளரான பீட்டர் ஒஸ்போர்ன்.

3.

ஈராக்கில் பஸ்ரா பிரதேசத்திலுள்ள பிரித்தானியப் படைவீரர்களும் இதே வகையிலான சித்திரவதைகளிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டார்கள்; எனும் செய்தியை பிரத்தானியாவில்pருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிக்கை அதே ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டது.

தம்மிடமுள்ள ஈராக்கிய யுத்தக் கைதியொருவரின் மீது மூத்திரம் பெய்தபடி கைதியின் தலையின் பக்கவாட்டில் துப்பாக்கி முனையை அழுத்தியபடி நிற்கும் பிரித்தானியப் படைவீரர் ஒருவரின் புகைப் படங்களை டெய்லி மிரர் வெளியிட்டது. தொலைக் காட்சிப் பிம்பம் பத்திரிக்கைப் புகைப்படம் என வெளியான இவ்விரண்டு ஊடகச் செய்திகளும் அமெரிக்க பிரித்தானிய அரசுகளுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தைக் கொண்டு வந்தன. எந்த மனித உரிமை மீறல்களைத் தடுத்து றிறுத்துவதற்காக அல்லது இல்லாதொழிப்பதற்காக அவர்கள் ஈராக்கிற்குச் சென்றார்கள் எனக் கோரிக்; கொண்டிருந்தார்களோ அதே சித்திரவதைகளைத் தமது படையினரே மேற்கொள்கின்றனர் எனச் சொல்லப்பட்டபோது உடனடியாகவே அமெரிக்க பிரித்தானிய அரசுத் தலைவர்கள் தமது படையினரின் இந்தச் சித்திரவதை நடவடிக்கை உண்மையாக இருக்கமானால் தாம் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் இந்த அவமானகரமான நடத்தை பொறுத்துக்கொள்ள முடியாதது எனவும் அறிவித்தார்;கள்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்சும; பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேரும் பகிரங்கமாகவே தமது படையினரின் நடவடிக்கையை வெளிப்படையாக விமர்சித்தார்கள். இந்நடவடிக்கை அமெரிக்க மதிப்பீடுகளின் அடியொற்றிய நடவடிக்கை அல்ல என ஜோர்ஜ் புஸ் அறிவித்தார். இந்நடவடிக்கை அமெரிக்க மதிப்பீடல்லாதது (un-american) என இதனை அழைத்தார் பென்டகனிலிருந்த பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட். இதே சொற்றொடரின் அடிப்படையில்தான் மெக்கார்த்தியின் காலத்தில் பெர்டோல்ட பிரெக்ட் சார்லி சாப்ளின் போன்ற கலைஞர்கள் அமெரிக்காவில்; வேட்டையாடப்பட்டார்கள் என்பது வரலாறு.

நடந்த சம்பவம் அறுவறுப்பானது எனச் சொன்னார் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர். சதாம் குசைனது சித்திரவதைகளை விட மோசமில்லை என பாதுகாப்பு அமைச்சக அதிகாரி சப்பைக் கட்டு கட்டினார். இருநாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் அரபு வெகுமக்களிடம் மன்னிப்புக் கோருமளவு நிர்ப்பந்தத்தற்கு உள்ளானார்கள்.

பிரித்தானியாவில் இனவாதப் பத்தரிக்கையான தி சன் பத்திரி;க்கையும் டெய்லி மிரருக்கு எதிராக போலியான சில புகைப்படங்களைப் பிரசுரித்திருக்கிறது. இருநூறு பவுண்கள் செலவழி;த்தால் இம்மாதிரி போலிப் புகைப் படங்;களை எவரும் எடுக்கலாம் எனவும் ஸன் பத்திரிக்கை தெரிவித்திருந்தது. டெய்லி மிரர் பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படங்கள் தொடர்பான நம்பகத் தன்மை பிரித்தானியப் படைத்துறை உளவு அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டது. வெளியிடப்பட்ட புகைப்படங்கள் நிச்சயமானது எனவும்; புகைப்படங்கள் தமக்கு பிரித்தானியப் படைவீரர்கள் மூவர்; மூலமே கிடைத்தாகவும் டெய்லி மிரர் பிரதம ஆசிரியர் பீட்டர் மோர்கன் தெரிவித்திருந்தார்.

சமகாலத்தில் ஈராக்கில் பிரித்தானியப் படையினர் வேண்டுமென்றெ பொதுமக்களைச் சுட்டுக்கொன்றிருப்பதாக அம்னஸ்டி இன்டர்நேசனல் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தது. கொல்லப்பட்டவர்களில் ஹனன் வலா மாத்ருத் எனப் பெயர் கொண்ட 8 வயதுப் பெண்குழந்தையும் 22 வயதுள்ள கானம் காதிம் கதி எனப் பெயர்கொண்ட புதிதாக மணம் முடித்த ஒரு இளைஞரும்; அடங்குவார்கள் என அம்னஸ்டி தெரிவித்திருந்தது. 8 வயதுப் பெண்குழந்தை தெருவில் நடந்து செல்லும்போது 60 அடி தூரத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 22 வயது இளைஞன் ஒரு சவ அடக்கத்தில் கலந்து கொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அறிக்கை தெரிவித்திருந்தது. அம்னஸ்டியினால் சுட்டிக் காட்டப்பட்ட 38 சம்பவங்களில் 18 சம்பவங்கள் மட்டுமே விசாரணை செய்யப்பட்டிருப்பதாகவும் அவ்விசாரணைகள் கூட பகிரங்க விசாரணைகளாக அல்லாமல் படைத்துறைக் காவல்துறையினரால் ரகசியமாகவே மேற்கொள்ளபட்டிருப்பதாகவும் அம்னஸ்டி இன்டர்நேசனலின் அறிக்கை மேலும் சுட்டிக் காட்டியிருந்தது.

சுpபிஎஸ்; தொலைக்;காட்சி பிம்பங்கள் நியூயார்க்கர்டெய்லி மிரர்ஸன் பத்திரிக்கைகளின் புகைப்படங்கள் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் நெருக்கடி சில விடயங்;களைத் தெளிவுபடுத்தியிருக்கிறது.

1.முதலாவதாக தகவல் தொழல்நுட்ப ஊடகத்துறையின் சக்தியை இந்நெருக்கடி நிரூபித்திருக்கிறது.

2.இரண்டாவதாக உலகிற்குத் தெரியவராமல் நிறைய கொடுமைகளும் சித்திரவதைகளும் பொஸ்னிய வளைகுடா ஆப்கான் மற்றும் ஈராக் போர்களில் இடம் பெற்று வருகிறது என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கத்திய அமெரிக்க அரசுத்துறைசார் பிபம்பங்கள் அக்கொடுமைகளை மறைத்து வருகின்றன என்பதும் சுயாதீனமான ஊடகங்கள் இதனை வெளிக்கொணராவிட்டால் இவை உலகின் கவனத்திற்கு வராமலே போயிருக்கும் என்பதும் தெளிவுபட்டிருக்கிறது.

3.மூன்றாவதாக இந்தப் பிம்பங்கள் உருவாக்கக் கூடிய விளைவுகள் வெகுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசியல் மாற்றத்தைக் கோருமளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதனை இரு ஆக்கிரமிப்பு நாடுகளினதும் தலைவர்கள்; உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவுபட்டிருக்கிறது.

4.நான்காவதாக மறைக்கப்பட்ட நிஜங்களை வெளியிடும் புகைப்படங்கள் திட்டமிட்டுக் கட்டப்படும்; மாதிரிப் புகைப்படங்கள் போலிப் புகைப்படங்கள் போலிப் புகைப்படங்கள் போல உருவாக்கபட்ட நகல் போலிப் புகைப்படங்கள் போன்றவற்றுக்கிடையிலான வித்தியாசங்களை எவ்வாறு பகுத்தாய்ந்து நிஜத்திற்கும் பிம்பத்திற்குமான உறவையும் பிம்பத்தின் பின்னுள்ள நிகழ்வின் ஆதாரத்தையும் கண்டடையமுடியும் என்பதும் கேள்விக்குரிய விசயமாக ஆகியிருக்கிறது. எதிர்காலத்தில் தகவல் தொழில்நுடப் ஊடகவியலாளர்கள் உண்மை பொய்யை எவ்வாறு பகுத்தறிய முடியும் எனும் கேள்வியும் இன்று பலமாக எழுந்திருக்கிறது.

பொஸ்னிய யுத்தத்தின் விளைவுகள் என வந்திருக்கும் சில செய்திகள் இங்கு முக்கியமானவை. முதலில் 20 இரவு விடுதிகள் மட்டுமே இருந்த கொசவா பிரதேசத்தில் தற்போது 250 இரவு விடுதிகள் இருக்கின்றன. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிழக்கு ஐரோப்பிய இளம் பெண்கள் பணிரெண்டு வயதுக்கும் உட்பட்டவர்கள் கடத்தி வரப்பட்டு பாலியல் தொழிலாளிகளாக்கப்பட்டுள்ளனர். கொசவா மக்கள் தொகையில் ஒரு சதவீதமாக இருக்கும் ஐக்கிய நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகளின் படையினர் இந்த பாலுறவுத் தொழிலாளிகளில்; இருபது சதவீதமான பெண்களின் பாவனையாளர்களாக இருக்கின்றனர் என்கிறது சர்வதேசப் பொது மன்னிப்புச் சபையின் அறிக்கை. ஓரு லட்சத்துக்கும் மேலான ஜிப்ஸி ரோமா இன மக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டுள்ளார்கள் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நகர்ந்து கொண்டிருந்த அகதிகள் மீது குண்டு போட்டுக் கொன்றது தவறுதலாக நிகழந்;துவிட்டது என அறிவிக்கிறது அமெரிக்க அரசு. ஆப்கானி;தானில் குழந்தைகள் இருந்த வீட்டின் மீது குண்டு போட்டுவிட்டு தீவிரவாதிகள் எனத் தவறாகக் குண்டு போட்டுக் கொன்றுவிட்டோம் என்கிறார் ஆப்கானிய அமெரிக்கப் படையதிகாரி;.

செஞ்சிலுவைச் சங்க அறிக்கையும் சர்வதேசப் பொதுமன்னிப்புச்சபையின் அறிக்கையும் தணக்குக் கிடைக்கவிலை;ல என அறிவித்திருக்கிறார் பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சர். அறிக்கை 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே அமைச்சருக்கு அனுபப்பட்டுவிட்டது என அறிவித்திருக்கிறார்கள் சர்வதேசப் பொதுமன்னிப்புச் சபையினர். புpரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள; பதினைந்து ஈராக்கியக் குடும்பத்தவர்கள் பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது நட்டஈடு கோரி வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியன்; மனித உரிமைகள் யாப்பின் அடிப்படையில் அவ்வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியன் மனித உரிமைச் சட்டங்கள் ஐரோப்பிய யூனியன் நிலப்பரப்புக்குள்தான் பொருந்தும். ஈராக் ஐரோப்பிய யூனியனின்; பகுதியில்லை ஆகவே ஈராக்கில் பிரித்தானியப் படைகள் புரிந்த மனிதஉரிமை மீறல்களை ஐரோப்பிய யூனியன் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்க முடியாது என பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம் வாதித்து வருகிறது. சமகாலத்தில் அமெரிக்க உளவுத்துறையின் அதிகாரிகள் ஈராக் சித்திரவதைப் புகைப்படங்கள் வெளியானபின்; பீதியில் ஆழ்த்தப்பட்டிருப்பதாகச் அமெரிக்கச் செய்திகள் தெரிவித்திருக்கின்றன. சித்திரவதை என்பது அமெரிக்க சிறை அமைப்பின் ஒரு அங்கம் எனவும் கைதியைப் பட்டினி போட்டு உடலை நலியச் செய்து உயிர்பீதியூட்டி அவர்களை விசாரிப்பது அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை முறை எனவும் செய்திகள் வந்திருக்கினறன. பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் அமெரிக்க நிலப்பரப்பில் வைக்கப்படாமல் எங்கேயிருக்கிறார்கள் எனச் சொல்லப்;படாமல் விசாரிப்பதுதான் அமெரிக்கர்களின் முறையெனவும் தற்போதைய ஈராக் சித்திரவதைப் புகைப்படங்கள் வெளியானதையடுத்துத் தங்கள் மீதான கேள்விகளும் எழுப்பப்படுமானால் தங்களில் பெரும்பாலுமானோர் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் சிக்குப்படுவோம் என சிஐஏவினர் அஞ்சுவதாக பேர் (கயசை) எனும் அமெரிக்க மாற்று ஊடக அமைப்பின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

கோட்பாட்டாளர்கள் புகைப்படக் கலைஞர்கள; தொலைக்காட்சி வல்லுனர்கள; அரசுத் தலைவர்கள் என அனைவரையும் நடுத்தெருவுக்கு இழுத்து வந்து உலகின் முன் உண்மைகளைப் பேசவைத்த இந்த நிகழ்வு எதனால் ஏற்பட்டது என்பதற்கான பதில் வெளிப்படையானது.

அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக் காட்சி அபுகாரிப் சிறை சித்திரவதை தொடர்பாக சில புகைப்பட்ஙகளை ஒளிபரப்பியது.; தொடர்நது நியூயார்க்கர் மேகசினும; வாசிங்டன் போஸட்டும் சில புகைப் படங்களை வெளியிட்டன. சித்திரவதை பிம்பங்கள்; முழு அரபு மக்களிடமும் அமெரிக்க வெறுப்பைத் தூண்டியது. ஐரோப்பிய மக்களிடம் மிகப் பெரிய தார்மீக நெருக்கடியை அப்பிம்பங்கள் உருவாக்கியிருக்கின்றன. அமெரிக்கா போருக்குச்சென்றது தவறு எனத் தற்போது பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் தெரிவித்திருப்பதாக பிபிசி வலைத்தளம் தெரிவிக்கிறது. ஸ்பெயின் டொமினிகன் குடியரசு ஹாண்டுரஸ் போன்ற நாடுகள் தமது ஈராக்கிலிருந்து படைகளை திரும்ப அழைத்துக்கொண்டு விட்டன. ஈராக்கை முன்மாதிரியாக வைத்து மத்தியக் கிழக்கில் தனது பொருளியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைந்த அமெரிக்காவின் திட்டம; எதிர்விளைவாக அரபு தேசியவாதத்தை அம்மக்களிடம் மறுபடி தோற்றுவித்துவிட்டது. பிம்பங்கள் தோற்றுவித்த எதிர்ப்பின் பின்பான நிஜமாக பாலஸ்தீனப் பிரச்சினை அனைத்து அரபு மக்கிள் மனதிலும் நிறுபூத்த நெருப்பாக இருக்கிறது

புகைப்படம் அசையும் பிம்பம் முன்வைக்கும் அலையும் அர்த்தத்தை விடவும் துல்லியமான உறைந்த உண்மைகளை முன்வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. புகைப்படம் தெரிவிக்கும் அர்த்தம் அதனது பிம்பங்கள் தரும் மௌன வாசிப்பிலானது. புகைப்படத்தில் புகைப்படத்தின் பொருள் புகைப்பட ஆடி புகைப்படம் எடுப்பவன் என மூன்று நிலைகள்; இருக்கின்றன. புகைப்படம் எடுப்பவனின் மனநிலை புகைப்படத்தின் ஆதாரப் பொருளின் தன்மையையும் புகைப்படத்தின் காட்சித் தேர்வையும் தீர்மானிக்கிறது. இதனால்தான் தேந்தெடுக்கப்பட்ட பிம்பங்களில் விளையும் படத்தொகுப்பை கருத்தியல் வடிவம் என்றான் ஸெர்ஜி ஐஸன்ஸ்டீன்.

சித்திரவதையில் சந்தோசம் காண்பவன் எடுக்கும் புகைப்படம் தன்னளவில் சித்திரவதையாகவும் புகைப்படத்தின் பொருளை குரூரப்படுத்தவதாகவும் இருப்பது கண்கூடு. அரக்கர்களை மேற்கத்திய சமூகம் உருவாக்கி அதனைக் கொண்டாடுமானால; அவர்களது வெற்றிகரமான புகைப்படங்கள் கூட அரக்கத்தினத்தின் சாட்சியமாகவே இருக்கும் என்பதற்கான சாட்சியமாக அபுகாரிப் சிறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருக்கிறது. இந்த அர்த்தத்தில்தான் இட்லரின் கொலை முகாம்களுக்கு அனுபப்ப்;படவிருந்த மனிதர்களைத் தெரிந்து கொண்டு அதற்கு முன்பு அம்மனிதர்களது உடல்களைத் தனது திரைப்படத்தில் பாவித்த லெனி ரீப்செந்தால் எடுத்த கூபா கறுப்பின மக்கள் பற்றிய லெனியின் புகைப்படங்களை வெள்ளை நிறவெறி கொண்டவை என அனுமானித்தார் சுசன் சொன்டாக்.

ஈராக்கில் அமெரிக்கப் படைவீரர்கள் உல்லாசப் பயணியின் மனோபாவத்தில் எடுத்த பல்லாயிரம் படங்களில் சிலவாகத்தான் இப்படங்கள் இருக்கின்றன என்பதும் இப்படங்களை தங்கள் நினைவுச் சின்னம் போல அமெரிக்கப் படையினர் எடுத்தனர் எனவும் பிபிசி செய்தியாளர் குறிப்பிட்டதும் தற்செயலானதல்ல.

இன்று மேலாதிக்க தகவல் தொழில்நுட்ப ஊடகப் பிம்பங்களுக்கு மாற்றாக எதிர் பிம்பங்களை எடுக்க முடியும் என்பது மட்டுமல்ல வெகுளியாகத் தோற்றமளிக்கும் பிம்பங்களையே கூட எதிர்வியாக்யானத்துக்கு நாம் உட்படுத்த முடியும்.

எதிர் அரசியலுக்கான மிக முக்கியமான ஊடகமாக இன்று இருப்பது வலைத்தளம். வலைத்தளத்தில் அமெரிக்க பிரித்தானிய அரசுத் தகவல் மேலாதிக்கமும் அவர்களது பிம்பங்களும் மட்டுமே பரவியிருக்கவில்லை. கலாச்சாரம் அரசியல் கோட்பாடு என அனைத்துவிதமான எதிர்ப்பு அரசியலின் வடிவமாகவும் இன்று வலைத்தளம் விளங்குகிறது. கணணிப் புரட்சி தோற்றுவித்திருக்கும் சாதகங்களை இன்று எதிர்ப்பு அரசியலாளர்கள் சாதகமாகப் பாவிக்கிறார்கள். இதனது காரணமாகவே சீன அரசாங்கத்திலிருந்து அமெரிக்க பிரித்தானிய அரசாங்கங்கள் வரை வலைத்தளத்தின் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது மட்டுமல்ல தனிநபரை உளவு புரிவதற்கெனவே உளவு மென்பொருள்களையும் இவர்கள் உருவாக்கி வருகிறார்கள். முதலாளித்துவ எதிர்ப்பு இயக்க நடவடிக்கைகளில் நடவடிக்கையாளர்களைத் திரட்டுவதற்கான மிகப்பெரும் தகவல் பரிவர்த்தனை ஊடகமாகக் கணணி இருக்கிறது.

4.

பொஸ்னிய யுத்தத்தின் போதோ முதல் ஈராக் யுத்தின்போதோ அல்ஜிஜீரா தொலைக் காட்சி என்பது இல்லை. அது மட்டுமல்ல மேற்கத்திய் அமெரிக்கத் தொலைக் காட்சிப் பிம்பங்கள் வெளிப்படுத்துவதற்கு மாற்றான பிம்பங்கள் அல்லது எதிர்பிம்மபங்கள் என்பது இல்லை. நிறநிறங்களாக விரியும் வாணவேடிக்கை என்பதான களியாட்டமாக இரவுக் குண்டுத் தாக்குதல்கள் சிஎன்என்னிலும் பிபிசியிலும் காண்பிக்கப்பட்டதற்கு மாற்றாக கீழே பூமியில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய இரத்தமும் நிணமும் நாறிய கோரம் பிம்பங்களில் வெளியாகவில்லை. நேரடி விளைவுகளின் பிம்பங்கள் காண்பிக்கப்படவில்லை. மாறாக பரிவர்த்தனையான போலி பிம்பங்களே இருந்தன. ஆனால் இன்று பூமியில் என்ன நடக்கிறது என்பது அல்ஜிஜீரா தொலைக் காட்சியின் பிம்ங்களின் வழியும் கலக அரசியல் இயக்கத்தவர்களின் வலைத்தளங்களின் வழியிலும் நிலம் பிளந்து வரும் ஊற்றுப்போல் பூமியிலுள்ள அனைவரையும் எட்டுகிறது.

தொண்ணூறுகளில் மாறிவந்திருக்கிற போரின் தன்மையை நாம் அவதானிக்க வேண்டும். போரை உலகுக்கு அறிவிப்பதில் தகவல் தொழில்நுட்பத்தின் பாத்திரம் எவ்வாறு மாற்றம் பெற்றிருக்கிறது எனவும் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் படையினர் எழுதும் கடிதங்கள் கூட தளபதிகளால் தணிக்கை செய்யப்படும். வியட்நாம் காலத்தில் போரை உலகத்திற்கு அறிவித்ததற்கும் முதலாம் ஈராக் யுத்தத்தில் அறிவித்தற்கும் இரண்டாம் ஈராக் போரின் போது உலகிற்கு போர் அறிவிக்கப்படுவதற்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கிறது.

உலகத்தினால் அறியப்பட்ட வியட்நாம் போர் என்பது அமெரிக்கா தனது பகாசுர தகவல் ஊடகங்களில் முன்வைத்த வியட்நாம் போர்தான். இன்று தொலைக் காட்சிகளை பிறமொழிகளில் அமெரிக்க அரசு தொடங்குவது மாதிரி அறுபதுகளில் சுதந்திர வானொலிகள் எனும் பெயரில் வியட்நாமுக்கும் கியூபாவுக்கும் என தனி வானொலிகளை அமெரிக்கா துவங்கியது. வியட்நாம் போரை அதிஉக்கிரமாகவும் அளப்பரிய மனித விலை கொடுத்தும் எதிர்கொண்ட வியட்நாமிய மக்களின் பக்கச் சித்திரம் வெளியானதை விடவும் அமெரிக்க மக்களின் வாழ்வில் அமெரிக்கப் படைவீரர்களின் மரணத்தின்வழி அவை ஏற்படுத்திய மாற்றம்தான் அன்று வியட்நாம் போருக்கு எதிரான மனோபாவததை உலகில் ஏற்படுத்தியது. வியட்நாம் போரில் ஈடுபட்ட அமெரிக்கப் படையினர் பிற்பாடு சினிமா இயக்குனர்களாக எழுத்தாளர்களாக ஆனபோது போரின் இன்னொரு முகம் வெளியானது.

பிரான்சிஸ் போர்ட் கொப்போலா ஆலிவர் ஸ்டோன் போன்றவர்களின் திரைப்படங்கள் அமெரிக்கா வியட்நாம் மக்களின் மிது புரிந்த கொடுமைகளைத் திரையில் சொன்னது. அமெரிக்கப் படையினரின் மனங்களில் அந்த மனிதப் பேரழிவு விளைவித்த சிதைவுகள் இவர்களது படங்களில் வெளியானது. அமெரிக்கர்கள் புரிந்த பாலியல் பலாத்காரங்கள் உலகுக்குத் தெரிந்தது. பிளட்டுன் அபோகலிப்ஸ் நவ் டியர் ஹன்டர் டாக்ஸி டிரைவர் ஹெவன் அன்ட எர்த் என இப்படங்கள் அனைத்தும் அமெரிக்கப் படையினரின் அனுபவங்கள் அதிலிருந்து கிளைத்த இலக்கியங்களின் திரைப்பதிவுகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 11 க்கு முன்னாக அமெரிக்க இலக்கியத்தையும் திரைப்படத்தினையும் அமெரிக்க மக்களின் மனசாட்சியையும் வியட்நாம் யுத்தம் போலப் பாதித்த நிகழ்வு பிறிதொன்றி;ல்லை.

முதலாம் ஈராக்கிய யுத்தத்தையடுத்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால் போசாக்கின்மையினாலும் போதிய மருத்துவ வசதிகள் இன்மையினாலும் ஐந்து லட்சம் ஈராக்கியக் குழந்தைகள் மரணமடைந்திருப்பதாக ஜான் பில்ஜரின் விவரணப்படம் சொல்கிறது. போத்ரிலாரைப் போல தொலைக்காட்சியில் அமெரிக்க மேற்கத்தியப் பிம்பங்களைப் பார்த்துவிட்டு கோட்பாடு செய்து கொண்டிருந்தவரல்ல ஜான் பில்ஜர். ஜான்பில்ஜர் ஈராக்குக்கும் இந்தோனேசியாவுக்கும் கிழக்குத் திமோருக்கும் மெக்ஸிக்கோவுக்கும் நேரில் சென்று ஆங்சன்; சூகியையும் சனானோ குசாமோவையும் காமான்டன்ட் மார்க்கோஸையும் நேரில் சந்தித்து மாற்று அரசியலின் பிம்பத்தை எதிர்ப்பு அரசியலின் தொலைக் காட்சிப் பிம்பங்களை முன்வைப்பவர்.

செப்டம்பருக்குப் பிற்பாடான இரண்டாம் ஈராக் யுத்தம் பற்றி அமெரிக்க ஊடகங்களில் சொல்லப்பட்ட விடயங்களும் அல்ஜிஜீரா ஊடகத்தில் சொல்லப்பட்ட விடயங்களும் வித்தியாசமானது. அமெரிக்காவின் மூரக்கத்தனத்தினால் வெல்லப்பட்ட யுத்தமாகவே ஈராக யுத்தம் அமெரிக்க ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டது. ஸதாம் குசைனின் கைது குறியீட்டளவில் வெற்றியாக அமர்;க்களப்படுத்தப்பட்டது. பாக்தாத்தைக் கைப்பற்றுகிறபோது தலைமறைவாகிப்போன ஈராக்கின் குடியரசுப் பாதுகாப்புப் படையினர் ஐம்பதாயிரம் பேர் மறக்கப்பட்டுவிட்டார்கள். ஈராக்கில் இதுவரை அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் ஈராக்கிய சமூகத்திற்கு அன்னியர்கள் குற்றவாளிகள் பயங்கரவாதிகள் எனச் சொல்லிக் கொண்டு வந்த அமெரிக்க ஊடகங்களின் பொய்கள் பலூஜா நகரத்தில் பொய்த்துப்போனது. அந்த நகரத்தைத் தம் வசம் கொண்டுவர முடியாமலேயே பின்வாங்கினர் அமெரிக்கப் படையினர். பலூஜா நகர எதிர்ப்பில் கடைசி வரை நின்றவரகள் ஈராக்கியர்கள். சன்னி இனத்தைச் சேர்ந்த ஈராக்கியர்கள் என்பது தற்போது பட்டவர்த்தனமாகயிருக்கிறது. முழு ஈராக்கும் இன்று ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகக் கிளர்ந்திருக்கிறது.

அபுகாரிப் சிறையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களையும் சித்திரவதைகளையும் குறித்துப் பேசுகிறபோது நாகரிகம் சுதந்திரம் விடுதலை ஜனநாயகம் போன்ற சொல்லாடல்கள் இவர்களது அறிக்கைகளில் இடம் பெறுவதில்லை. அபுகாரிப் சித்திரவதைகள் 2003 ஆம் ஆண்டு ஆரமபத்திலிருந்தே நடந்துவருவதாகத் இத்தாலியப் படைத்தலைவர் தெரிவிக்கிறார். நடந்தவை இன்னும் கோரமானவை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சரும் அமெரிக்க ஜனாதிபதியும் தெரிவிக்கிறார்கள். இன்னும் பல ஒளி நாடாக்களும் இருக்கின்றன. கொடுரமான புகைப்படங்கள் இருக்கின்றன எனக்கு அதனை வெளியிட விருப்பம் ஆனால் பாதுகாப்புத்துறை வழக்குறைஞர்கள் அதனை வெளியிட வேண்டாம் என வலியுறுத்துகிறார்கள் என்கிறார் டொனால்ட் ரொம்ஸ்பீல்ட்.

காரணம் விநோதமானது : அந்தப் புகைப்படஙகள் வெளியிடப்பட்டால் கைதிகளின் கண்ணியம் அவமானப்படுத்தப்படும் கைதிகள் மனவருத்தமடைவார்கள் என்பதால் அஞ்சுகிறோம் என்கிறார் அவர். மேலதிகாரிகளின் கட்டளைப்படியே தான் கைதிகளை நிர்வாணமாக்கி அவர்களேடு புகைப்படங்களில் சித்திரவதை புரிந்தேன் என்கிறார் சித்திரவதைப் புகைப்படங்களில் இடம் பெறும் அமெரிக்க படைத்துறையைச் சேர்ந்த லிண்டி லண்டன். சித்திரவதைகளுக்குக் காரணம் சரியான திட்டவட்டமான தலைமை இன்மையே என்கிறார் விசாரண அதிகாரி அந்தோனிய தகூபா.

அபுகாரிப் சிறை பற்றிய அறிக்கை 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே முடிக்கப்பட்டும் ஏப்ரல் மத்திவரை தான் படிக்கவில்லை என்கிறார் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர். இதனடிப்படையில் இவர்கள் அமைக்கும் விசாரணைக் கமிசன்களின் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

சமகாலத்தில் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் அதிகாரிகள் ஈராக் சித்திரவதைப் புகைப்படங்கள் வெளியானபின் பீதியில் ஆழ்த்தப்பட்டிருப்பதாகச் அமெரிக்கச் செய்திகள் தெரிவித்திருக்கின்றன. சித்திரவதை என்பது அமெரிக்க சிறை அமைப்பின் ஒரு அங்கம் எனவும் கைதியைப் பட்டினி போட்டு உடலை நலியச் செய்து உயிர்பீதியூட்டி அவர்களை விசாரிப்பது அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை முறை எனவும் செய்திகள் வந்திருக்கினறன. பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் அமெரிக்க நிலப்பரப்பில் வைக்கப்படாமல் எங்கேயிருக்கிறார்கள் எனச் சொல்லப்படாமல் விசாரிப்பதுதான் அமெரிக்கர்களின் முறையெனவும் தற்போதைய ஈராக் சித்திரவதைப் புகைப்படங்கள் வெளியானதையடுத்துத் தங்கள் மீதான கேள்விகளும் எழுப்பப்படுமானால் தங்களில் பெரும்பாலுமானோர் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் சிக்குப்படுவோம் என சிஐஏவினர் அஞ்சுவதாக பேர் ( கயசை ) எனும் அமெரிக்க மாற்று ஊடக அமைப்பின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

5.

2004 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி லண்டன் டெ;யிலி மிரர் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் பீட்டர் மோர்கள் அப்பத்திரிக்கையிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். பிரித்தானியப் படையினருக்கு அவப்பெயரை உருவாக்கியதற்காகவும் இட்டுக்கட்டிய புகைப்படங்களை வெளியிட்டதற்காகவும் டெய்லி மிரர் பத்திரிக்கையின் முதலீட்டாளர்கள் பிரித்தானியாவின் குயின் லங்காசயர் படைப்பிரிவினரிடம் மன்னிப்புக்; கோரியிருக்கிறார்கள். பீட்டர் மோர்கனின் ராஜினாமாவைச் சமர்ப்பிக்கச் சொல்லி முதலீட்டாளர்கள் நிர்ப்பந்தித்தபோது மோர்கன் அதனை மறுத்து பத்திரிக்கை அலுவலகத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். இரு மெய்க்காவலர்கள் அவர் கட்டிடத்த்pலிருந்து வெள்pயேறும் வரையிலும் அவரோடு வாசல் வரை வந்திருக்கிறார்கள்.

தான் தவறு செய்யவில்லையெனவும் கிருமிகள்; நிறைந்த பாத்திரமொன்றினை மட்டுமே தான் கவிழ்த்திருப்பதாகுவும் கிருமிகள் எங்கெங்கும் இருக்கிறதெனவும் மோர்கன்; தெரிவித்திருக்கிறார். உண்மையை வெளியிட்டதற்காக மோர்கள்; வெளியேற்றப்பட்டிருக்கிறார் என அவரின் உதவி ஆசிரியர்கள் தெவித்திருக்கிறார்கள். பீட்டர் மோர்கன் மன்னித்துவிடுங்கள் என ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் பிரச்சினை தீரந்திருக்கும் என வலதுசாரிப் பத்திரிக்கையான ஸன் பத்தரிக்கை ஆசிரியர் கருத்துத் தெரிவித்திருக்கிhர். பிரச்சினை தற்காலிகமாகத் தீரந்துவிட்டது போலத் தோனறினாலும் நடந்து முடிந்த சம்பவங்களைப் பார்க்கிறபோது இது தொடரும் விவாதம் என்பதில் எவருக்கும் சந்தேகமிருக்கப் போவதில்லை.

டெய்லி மிரர் பத்திரிக்கையின் புகைப்படங்கள் பிரித்தானியப் படை முகாமினருகில் பெட்போர்ட் நகரின் அருகில் நகருக்கு வெளியில் ஒரு ராணுவ வாகனத்தில் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் அவை ஈராக்கிலுள்ள பஸ்ராவில் எடுக்கப்பட்டதல்ல எனவும் தாம் கண்டுபிடித்திருப்பதாக பிரித்தானியப் படைத்துறைக் காவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள். புகைப்படத்திலுள்ள படைத்துறை வாகனத்தில் காணப்பட்ட கீறல்களையும் கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்தில் காணப்பட்ட கீறல்களையும் ஒப்பிட்டு தாம் இம்முடிவுக்கு வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆதாரத்தை மோர்கனோ அல்லது கார்டியன் போன்ற பத்திரிக்கைகளோ மறுக்கவில்லை. ஆனாலும் மோர்கன் பிடிவாதமாகத் தான் உண்மையைத் தான் சொன்னேன் எனச் சொல்வதற்கும் அவரது சக ஊழியர்கள் அவர் உண்மையைச் சொன்னதற்காக வெளியேற்றப்பட்டிருக்கிறார் எனக் குறிப்பிடுவதற்கும் என்னதான் காரணம்?

இதற்கான விடையைக் காண்பது பிரித்தானிய அரசியலைக் கவனித்து வந்திருப்பவர்களுக்கு மிகவும் சாதாரணம். அமெரிக்கப் படையினரின் மனித உரிமை மீறல்களை அடுத்து ஒரு பொது விவாதம் அமெரிக்காவிலும் மேற்கிலும் எழுந்தது போல பிரித்தானியப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதமொன்றைத் தூண்டுவதுதான் மோர்கனின் நோக்கம். டெய்லி; மிரர் பத்திரிக்கையில் பிரித்தானியப் படையினரின் சித்திரவதை தொடர்பான புகைப் படங்கள் – அது திட்டமிட்டு இட்டுக்கட்டப் பட்டதே ஆயினும் – வெளியான பின்பே பிரித்தானியப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்த பல விடயங்கள் சமூகத்தின் முன்னுக்கு வந்தன.

2003 ஆம் ஆண்டு இறுதியிலேயே பிரித்தானிய அரசினிடம் கையளிக்கப்பட்ட அம்னஸ்டி இன்டர்நேசனல் செஞ்சிலுவைச்சங்கம் போன்றவற்றின் அறிக்கைகள் தொடர்பான விவாதங்களும் அதனைத் தொடர்ந்து தான் அவ்வகையிலான அறிக்கைகளைப் படிக்கவில்லை எனும் பாதுகாப்பு அமைச்சரின்; பதிலும் வெளியாகின. சமவேளையில் பர்மிங்ஹாமில் இயங்கும் பெதுமக்களின் நலன்நாடும்; வழக்குரைஞர்கள் எம் அமைப்பினர் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்றதற்காகப் பிரித்தானியப் படையினர் மீது பிரித்தானிய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அப்பாவிகள் கொல்லப்பட்டதற்காக பிரித்தானியப்; படையினர் சம்ப்ந்தப்பட்டவர்களுக்கு சிறு தொகையினை அவ்வப்போது அளித்திருப்பதனை ஒப்புக்கொண்டதனயைடுத்து அம்மக்கள் கொல்லப்பட்டதற்குப் பொறப்பேற்று பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம் அவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கோரியிருக்கிறார்கள்.

இந்த வ்pவாதங்கள் அனைத்துமே மோர்கனது டெய்லி மிரர் பத்திரிக்கைப் புகைப்படங்கள் பிரசுரமானதைத் தொடர்ந்தே பிரித்தனியாவில்; இடம் பெற்றன என்பதனை எவரும் மறுதளித்துவிடமுடியாது. மோர்கன் இட்டுக்கட்டி ‘கிருமிகளின் ஒரு பாத்திரத்தைக் கவிழ்த்தபோது’ பிரித்தானிய அரசின் ‘பற்பல கிருமிப் பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்டதனை’ ஒருவர் சாதாரணமாகவே அறிந்து கொள்ள முடியும்.

மோர்கன் முன்னதாக பிரித்தானியாவைக் குலுக்கிய இருபது லட்சம் மக்கள் பங்கு பற்றிய லண்டன் யுத்த எதிர்ப்பு ஊர்வலத்தினைத் தனது பத்திரி;க்கையின் சார்பாக ஸ்பான்சர் செய்த யுத்த எதிர்ப்புப் பத்திரி;க்கையாளர் என்பது இங்கு குறிப்பிடத்தகக்து. அவரைப் பொறுத்து அவரது நடவடிக்கை என்பது அவரது யுத்த எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு அங்கம். அவர் இந்தப் புகைப்படங்களை வெளிடுவதற்கு முன்பாக மூன்று நாட்கள் தனது அறையை விட்டு வெளியே வராது நீண்ட யோசனையின் பின்பே புகைப்படங்களை வெளியிட முடிவு செய்தார் எனத் தெரிவிக்கிறார் அவரது உதவி ஆசிரியர். அவரற்ற லண்டன் பத்திரிக்கையுலகு முன்னைப் போல் இருக்கப் போவதில்லை என அவரது வெளியேற்றம் குறித்து லண்டன் பத்திரி;ககைகள் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.

டெய்லி மிரர் பத்திரிக்கையின் நிர்வாகிகளில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கிற அமெரிக்கர்களே அப்பத்திரி;க்கையின் இரண்டில் மூன்று பகுதி முதலீட்டைக் கொண்டிருப்பவர்கள் எனவும் அவர்களே பீட்டர் மோர்கனை வெளியேற்றியிருக்கிறார்கள் எனவும் லணடன் கார்டியன் பத்திரி;க்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.

யுத்தம் விளைவிக்கும் கோரம்; ஓரு சில பிம்பங்களின் உண்மை பொய்யைத் தீர்மானிப்பதால் முற்றுப்பெற்றுவிடும் விசயம் இல்லை என்பதையே மோர்கனது நிலைபாடு தெளிவுபடுத்துகிறது. மேலாகத் திட்டவட்டமான ஆதாரங்களைக் கொண்டு போருக்குச் செல்வதாக பாரிய அழிவு ஆயுதங்கள் குறித்து அறிவித்த அரசுத் தலைவர்கள் அது முற்றிலும் பொய் என அவர்களது உளவுத்துறைகளே அறிவித்த பின்னரும் உண்மை விளம்பிகளாக இருந்து கொண்டு ஈராக்கிய மக்களைக் கொன்றொழித்துவரும் ச10ழலில் மோர்கனது நிலைபாட்டை வெறுமனே கறுப்பு வெள்ளையாக மட்டுமே கொண்டு நாம் புரிந்;து கொள்ள முடியாது.

முன்பாக பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் விஞ்ஞானியன டேவிட் கெல்லியின்; தற்கொலையை ஒட்டி நிகழ்ந்த விவாதத்தையும் இதனோடு பொறுத்திப் பார்ப்பது பொறுத்தமாக இருக்கும். பிரித்தானிய அரசு மட்டத்திலிருந்தவர்கள் பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகளை நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் சதாம் குசைன் 45 நிமிடத்தில் பாரிய அழிவு ஆயுதங்களால் பிரித்தானியாவைத் தாக்கும் நிலையில் இருக்கிறார் எனச் சொல்லுமாறு உளவுத் துறையினரைத் தூண்டினார்கள் எனும் செய்தியொன்றினை டேவிட் கெல்லி தெரிவித்தார் என பிபிசியின் செய்தியாளர் ஜில்லியன் அறிவித்திருந்தார்.

இந்த விவாதத்pன் ஆதாரமான பிரச்சினை என்ன?

பிரித்தானியாவோ அமெரிக்காவோ சொன்னபடி பாரிய அழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் சோதனiயாளர் ஹான்ஸ் பிலிக்சும்; இதனைத் தெளிவு படுத்தியிருக்கிறார். அமெரிக்க பிரித்தானிய உளவுத் துறைகள் ஈராக் பாரிய அணுஆயுதங்கள் கொண்டிருக்கிறது எனத் திட்டவிட்டமாகச் சொல்லவில்லை எனறும் தெரிவித்திருக்கிறது. தவறான அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே இரு அரசுகளும் யுத்தத்திற்குச் சென்றிருக்கின்றன எனும் விவாதத்தின் பகுதியாகவே இந்தப் பிரச்சினையும் பிரித்தானியாவில் எழுந்தது.

பத்திரி;க்கைகளில்; வெளியான ஆதாரங்கள் அனைத்தையும் வைத்துப் பார்க்கிறபோது பிரித்தானியாவும் அமெரிக்காவும் தவறான இட்டுக்கட்டிய ஆதாரங்களின் அடிப்படையிலேயே யத்தத்திற்குச் சென்றன என்பது தற்போது உலகுக்குத் தெளிவுபட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பாரிய அணு ஆயுதங்கள் இருக்கிறதா இல்லையா எனும் ஆதாரத்தை விசாரணை செய்வதற்கு மாறாக இந்தப் பிரச்சினையில் உளவுத்துறையை அரசுப் பதவியில் உள்ளவர்கள் தூண்டினார்களா இல்லையா என மட்டுமே விசாரணை செய்தது. பிரதமருக்கு நேரடியாக இதில் தொடர்பு இல்லையென அறிக்கை கூறியுள்ளது. தற்போது இரு அரசுகளும் மற்றொரு விசாரணையை யோசித்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகிறது.

எவ்வாறு உளவுத்துறை தவறான முடிவுகளுக்கு வந்தது என்பதுதான் அந்த விசாரணையாக இருக்கப் போகிறது. அமெரிக்க ஐரோப்பிய அரசியலின் வேடிக்கை இது. தவறான தகவல்களின் அடிப்படையில் இரு வல்லரசுகள் ஆயுதங்கள் கொண்டு பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்திருக்கிறது. அந்தத் தவறு எப்படி நேர்ந்தது என இப்போது இவர்கள் நிஜக் காரணங்களைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

நிகழ்வு நிஜம் புனைவு உண்மை பொய; ஆதாரம் போலி தொடர்பான விவாதங்கள் இப்படித்தான் கட்டப்பெறுகிறது. இதனடிப்படையில்தான் மேலாதிக்க அரசுகளால் தொலைக்காட்சிpப் பிம்பங்களும்; கட்டப்படுகிறது. புகைப்பட பிம்பங்களும் கட்டப்படுகிறது. இந்தப் போலிகளுக்கு எதிராகச் சில சமயங்களில் போலிகளை இட்டுக்கட்டி முன்வைப்பதன் மூலமே ஆதாரங்கள் தொடர்பான விவாதங்களையும் எழுப்ப முடிகிறது. மோர்கன் வெளியிட்ட பிம்பங்களும் அதனது தொடரச்சியாக வெளியான அம்னஸ்டி இன்டர் நேசனல் அறிக்கை வெஞ்சிலுவைச் சங்க அறிக்கை பர்மிங்ஹாம் வழக்குரைஞர்களின் பாதுகாப்பு அமைச்சகம் மீதான வழக்கு போன்றவை இதனையே தெளிவு படுத்துகின்றன.

வரலாறு போத்ரிலார்; கருதிக்கொள்வது போல மாயங்கள் கொண்டதல்ல அது இரத்தமும் சதையுமாக காலத்திலும் வெளியிலும் நிகழ்வதாகும். ஈராக்கிய மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் வெறுமனே அலையும் பிம்பங்களல்ல என்பதனை அதே பிம்பங்கள் தற்போது உலகுக்கு;ப் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.

6.

பிம்பத்தினதும் தொலைக்காட்சி ஊடகங்களினதும் டிஜிடல் கேமராக்களினதும் வலிமையை போத்ரிலார் மட்டுமல்ல அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரொமஸ்பீல்ட்டும் தெளிவாக உணர்ந்திருக்கிறார். பிம்ப உலகில் எதிர்ப்பு நடவடிக்கை அர்த்தமில்லை என போத்ரிலார் தெரிவிக்க இன்றைய டிஜிட்டல் கேமரா யுகத்தில் எதிர்ப்பு ஊற்றுக்களை அடைப்பது தமக்குச் சாத்தியமில்லாமல் இருக்கிறது ரொம்ஸ் பீலட் தெரிவிக்கிறார்.

ரொம்ஸ் பீல்ட் சொல்கிறார் : ‘சமாதான கால நெருக்கடிகளில் நாம் செய்ல்படுகிறோம். சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். தகவல் தொழில்நுட்ப யுகத்தில் யுத்ததருணத்தில் நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. இங்கே சிலர் டிஜிட்டல் கேமராக்களோடு அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்படி நம்பத்தகாத அளவிலான புகைப்படங்களை எடுக்கிறார்கள். எமக்கு அதிர்ச்சியளிக்கும்படி அவர்கள் அதனைப் பிறருக்கு அனுப்பவும் செய்கிறார்கள். அமெரிக்கச் சட்டத்திற்கு விரோதமாக ஊடகங்களுக்கும் அவர்கள் அனுப்பி விடுகிறார்கள்’ என வருத்தப்படுகிறார் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரொம்ஸ்பீல்ட்.

மனித உரிமை மீறல்கள் செய்தாலும் கண்டுபிடிக்க முடியாதபடியிலான மாற்று விவரங்களைச் சேகரிக்க முடியாதபடியிலான காலமொன்ற இருந்தது. பிரெஞ்சு சினிமா மேதை கோடார்ட் ‘காமெரா காகிதமும் எழுதுகோலும் போலச் சுலபமாகக் கிடைக்கிற வரை தான் படமெடுக்கப்போவதில்லை’ என அறுபதுகளில் பாரிசின் நிழலடர்ந்த சாலைகளில் திரிந்தார் என்பதை நாம் நினைத்துப் பாரக்கிறபோது தகவல் ஊடகங்கள் எதிர்ப்பு அரசியலுக்கு அப்போது கிடைக்கவில்லை என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

வியட்நாம் யுத்தத்தின் மறுபக்கத்தை நாம் பல பத்தாண்டுகளின் பின் அமெரிக்கத் திரைப்படங்களில் தரிசித்தோம். பொஸ்னிய யுத்தத்தினையும் முதலாம் ஈராக் யுத்தத்தினையும் கூட பெரும்பாலானவர்கள் பிரஞ்சுக் கோட்பாட்டாளர் பெலிக்ஸ் கித்தாரி போல ‘செய்வதறியாது பேச்சற்றுத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம்;’. ஆனால் டிஜிட்டல் கேமராக்கள் இன்று எதிர்ப்பியக்கம் சார்ந்தவர்களுக்கு மலிவாகக் கிடைககின்றன. மேற்கின் தகவல் ஊடக மேலாதிக்கத்திற்கெதிரான மேற்கல்லாத ஊடகங்கள் இன்று வளர்ச்சி பெற்றிருக்கின்றன. எதிர்ப்பு அரசியலில் உலக விரிவு வலையும் தனிமனிதர்களின் கணணிகளும் மிகப் பெரிய பங்காற்றுகின்றன.

அரபு உலகத்தின் வெகுஜன அப்பிராங்களை உருவாக்கும் தொலைக்காட்சியாகத் தற்போது அல்ஜிஜீரா தொலைக் காட்சி இருக்கிறது. அமெரிக்க மேற்கத்திய ஊடகங்கள் முன்வைக்கும் பிம்பங்களுக்கு மாற்றான பிம்பங்களை இன்று உலகின முன்பு அரபுத் தொலைக்காட்சிகளும் சிறுபான்மையினச் சமூகங்களின் தொலைக்காட்சிகளும் முன்வைக்கின்றன. எதிர் அரசியலுக்கான மிக முக்கியமான ஊடகமாக இன்று இருப்பது வலைத்தளம். வலைத்தளத்தில் அமெரிக்க பிரித்தானிய அரசுத் தகவல் மேலாதிக்கமும் அவர்களது பிம்பங்களும் மட்டுமே பரவியிருக்கவில்லை. கலாச்சாரம் அரசியல் கோட்பாடு என அனைத்துவிதமான எதிர்ப்பு அரசியலின் வடிவமாகவும் இன்று வலைத்தளம் விளங்குகிறது. கணணிப் புரட்சி தோற்றுவித்திருக்கும் சாதகங்களை இன்று எதிர்ப்பு அரசியலாளர்கள் சாதகமாகப் பாவிக்கிறார்கள்.

தன்னுடைய நூல்களை இருபது ஆண்டுகளாக ஜப்பானிய மொழியில் வெளியிட்டுவந்த ஒரு ஜப்பானியரிடம் ஏன் ஜப்பானியர்களிடமிருந்து என் கருத்துக்கள் தொடர்பாக எதுவும் செய்திகள் வருவதில்லை எனக் கேட்டிருக்கிறார் போத்ரிலார்.

ஜப்பானியர் சிரித்துக்கொண்டே பதில் சொல்லியிருக்கிறார் : ‘இதற்கான பதில் வெகு சாதாரணம். தற்போது நீஙகள் சொன்ன நகல்போலிகளின் உலகம் தொடர்பான கருத்துக்கள் ஜப்பானில் நடைமறைக்கு வந்துவிட்டது. நீங்கள் சொன்னது மெத்தச் சரி. உலகம் நீஙகள் சொன்னது போலாகி விட்டது. ஆகவே தற்போது உங்களின் தேவை எஙகளுக்க அவசியமில்லை. நீங்கள் யதாரத்தத்தில் கலந்துவிட்டீர்கள். ஹைபர் ரியலிட்டியில் நடைமுறையாகிவிட்டீர்கள். அந்தச் செயல்போக்கு முடிந்துவிட்டது. ஆகவே நீங்கள் மறைந்து விட்டீர்கள். கோட்பாட்டளவில் நீங்கள் இப்போது அவசியமில்லை. உங்களது கோட்பாட்டை எவரும் இப்போது வாதித்து நிலைநிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை’ என்றிருக்கிறார் போத்ரிலாரின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர்.

போத்ரிலாரின் தொடர்ந்த எதிர்விணை இவ்வாறு அமைகிறது : ‘இப்படித்தான் கற்பனைகள் நிஜமாகிவிடுகிறது. மிகத் தெளிவாக அனைத்து வகையிலான கற்பனைப் பரிமாணங்களும் பயனற்றவை’. 1996 ஆம் ஆண்டு தன் கருத்துக்கள் ஜப்பானில் பயனற்றுப் போய்விட்டதாக ஒப்புக்கொண்ட போத்ரிலார் 2002 ஆம் ஆண்டு செப்டம்பரிலும் அதன் பயன்குறித்த நம்பிக்கையோடுதான் எழுதிக் கொண்டிருந்தார்.

போத்ரிலாரின் அவதானங்களை முதலாம் இரண்டாம் ஈராக் போர்களில் தமது உறவுகளைப் பறிகொடுத்த மனிதர்கள் தமது வீடுகள் உறவுகளை இழந்து போனவர்கள் கொசவாவில் வாழும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட சிறுமியர்கள் விரட்டப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேலான ஜிப்ஸி மக்கள் நாடு நாடக அலைந்து திரியும் ஈராக்கிய அகதிகள் மரணமுற்ற ஈராக்கியக் குழந்தைகளுக்காக வாதிடும் பர்மிங்ஹாமிலுள்ள பொதுநல வழக்குரைஞர்கள் போன்றோர் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.

போத்ரிலாரின் அவதானத்தை செஞ்சிலுவைச் சங்க அறிக்கையோ அம்னஸ்டி இன்டர்நேசனலின் அறிக்கையோ அல்ஜிஜீராவோ நியூயார்க்கர் பத்திரிக்கையோ ஒப்புக்கொள்ளப்போவதில்லை.

பேரழிவின் விளைவுகளைப் போல மேற்கின் மீதான வெறுப்பாக மத்தியக் கிழக்கு மக்களிடையில் வன்முறை தோன்றியிருக்கிறது. போத்ரிலாருக்கு இன்று அவசியமில்லை. செய்மோர் ஹார்ஸ் போன்று அமெரிக்க ஐரோப்பிய அரசுகளின் தகவல் பொய்களைத் தோலுரிக்கிற ஊடகவியலாளர்களே இன்று அவசியம்.

மத்தியக்கிழக்கு அரபு மக்களின் பிரச்சினைகள் அனைத்தினதும் ஆதாரமாகவும் அரபு மக்களது கோபத்தின் கொதிகளனாகவும் இருக்கிற பாலஸ்தீனப் பிரச்சினை தீரக்கப்படாத வரையிலும் இந்த மக்களின எதிர்ப்புக்களும் அரத்தமற்றுப் போகப்போவதில்லை.

முதல் வலைத்தளப் புரடசி என ஜபடிஸ்டாக்களின் புரட்சியைச் சொல்வார்கள். மெக்ஸிக்கப் புரட்சியாளன் கமாண்டன்ட் மார்க்கோஸ் தனது சியாபஸ் பூர்வகுடி மக்களுக்கான விடுதலைப் பிரகடனத்தை வலைத்தளத்தில்தான் முதலாக வெளியிட்டார். அடுத்த நொடி அது எதிர்ப்பு அரசியல் இயக்கத்தின் பகுதியாகி உலகெங்கும் பரவியது. மெக்ஸிக்கக் கவியான ஆக்டேவியா பாஸ் கை டெபோர்டை மேற்கோள்காட்டி ஜபடிஸ்டாக்களின் எழுச்சியை மெக்ஸிக்கோவில் தகவல் ஊடக பிம்பத்தின் வருகை என எழுதுகிறார். மார்க்கோஸின் பிம்பம் வெறுமனே அலையும் பிம்பமல்ல கலக பிம்பம் எனவும் எழுதுகிறார் அவர்.

நெருதாவின் கவிதையும் புரட்சிகரச் சொல்லணிகளும் நாடகீயத் தன்மையும் மொசார்ட்டின் இசையும் பிணைந்ததாக மெக்ஸிக்க வெளியில் எழுந்த கலக பிம்பம்தான் கமான்டன்ட மார்க்கோஸ். பின்நவீPனத்துவ யுகத்தின் நகல்போலிகளாக ஈராக்கியக் கைதிகளின் பிம்பம் இருக்கிறது என்பதால் அல்ல மாறாக ஈராக்கிய மக்களின் கூட்டு நினைவுகளுக்கும் அவர்களது துயர்களுக்கும் சாடசியமாக கைதிகளின் பிம்பங்கள் இருப்பதாலேயே அவர்களது பிம்பங்கள் முக்கியத்துவமடைகின்றன.

குருதி தெறிக்கும் மௌன எதிரப்பை வெளியிடும் ஈராக்கிய சிறைக் கைதிகளின் பிம்பங்கள் ஒரு பேரழிவின் விளைவான எதிர்பிம்பங்கள்தான்.

ஆதாரங்கள் :

1.The Spirit of Terrorism by Jean baudrillard.  Verso.  11 September 2002. United Kingdom. 
2.Vivisecting the 90s: An Interview with Jean Baudrillard. Semiotic Inquiry. Volume 16 No. 1 : 1996.United States.  
3.This is the Fourth World War: The Der Spiegel Interview With Jean Baudrillard.Journal of Baudrilalrd Studies .Volume 1 Number 1. January 2004. United States. 
4. Debord and the postmodern Turn New Stages of the Spectacle.By Steven Best and Douglas Kellner. Douglas Kellner Wesite. United States. 
5.US [Powerless to halt Iraq net images by Robert plummer.BBC News Online.2004/05/08 10:33:54 GMT. United Kingdom.
6.US powerless to halt Iraq net images byRobert Plummer.BBC News Online.2004/05/08 10:33:54 GMT. United Kingdom.
7. Stunned Staff mourn loss of editor who ‘told the truth’ about Iraqi abuse. The Guardian. 15.05.2004. United Kingdom
8. Mirror(UK). Sun(UK) Washington Post( USA) Newyorker Magazine( USA) CBS Teevision(USA) and BBC News Online websites about Abu Gharib Priosion torture articles. websites and Print Copiesof April-May 2004.  

அடையாளம் : ஆர். ஷாஜஹான்

 தில்லியில் 2007 செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற இலக்கியச் சந்திப்புகூட்டத்தில், இலங்கை எழுத்தாளர் சேரனின் உயிர் கொல்லும் வார்த்தைகள்நூலுக்கான மதிப்புரை.

அடையாளம் என்ற சாதாரணச் சொல்லை ஒரு மனிதனுடன் பொருத்திப் பார்க்கும்போது அது வித்தியாசமான பரிமாணங்களைப் பெறுகிறது.

 

அவனது இந்த அடையாளத்தை அவன் பெரும்பாலும் உணர்வதில்லை. மார்பு வலி ஏற்படும்போது மட்டும் இதயத்தின் துடிப்பு தெரிவதுபோல, மூக்கு அடைத்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே மூச்சின் இயக்கத்தை உணர்வது போல, இந்த மனித அடையாளமும் சில சமயங்களில் மட்டுமே அவனால் உணரப்படுகிறது. பெரும்பாலும் தெரியாமலே இருக்கிறது. ஆனால் இந்த அடையாளத்தை அவன் உணராமல் இருந்தாலும், மற்றவர்கள் எப்போதுமே அவனை அந்த அடையாளத்துடன் இணைத்தே பார்க்கிறார்கள்.

அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த அடையாளம் அவனுடன் ஒட்டிக்கொண்டே இருக்கிறது. பல சமயங்களில் இந்த அடையாளம் அவனுக்கு

உதவியாக அமைகிறது என்றாலும், பாதகமான சூழல்களை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களையும் இந்த அடையாளம் அவனுக்கு ஏற்படுத்துகிறது.

 

ஒவ்வொரு மனிதனையும் மற்றவர்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொறார்கள் என்பதற்கு, ஓரளவுக்கு அவனுடைய பெயர், மொழி, இனம், மதம், சாதி, கட்சிச் சார்பு, அரசியல் கொள்கை, உலகாயத விஷயங்களின் அவனுக்கு இருக்கும் கருத்துகள் போன்ற காரணங்களே முக்கியக் காரணிகளாக அமைகின்றன என்றாலும், அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவன் வெறுத்தாலும் வெறுக்காவிட்டாலும், அவன் ஏற்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும், மற்றவர்கள் அவரவர் கருத்தோட்டத்தையும், வாழ்நிலையையும் பொறுத்துத்தான் அந்த அடையாளத்தை அர்த்தப்படுத்திக் கொள் கிறார்கள் . இதில் அவன் செளிணியக்கூடியது மிகக் கொஞ்சம் என்றுகூடச் சொல்ல முடியாது, அவன் கையில் எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல

முடியும். ஏனென்றால், இந்த அடையாளப்படுத்தல் எந்த முகாந்திரமும் இன்றி தானே துவங்கி விடுகிறது. எந்தவொரு மனிதனையும் முழுதாக அறியாமலே, அவனுடன் பேசாமலே, அவனுடன் பழகாமலே, அவன் கொண்டிருக்கிற கருத்துகள் பற்றிய அரிச்சுவடிகூடத் தெரியாமலே நாம் மற்றவர்களை அடையாளப்படுத்தி விடுகிறோம். நாமும் இப்படி மற்றவர்களால் அடையாளம் காணப்படுகிறோம். ஆதிகாலம் தொட்டு இந்த அடையாளப்படுத்தல் இருந்திருக்கலாம்.

 

ஆனால் இன்றைய அடையாளப்படுத்தல் புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறது விபரீதமான விளைவுகளைக் கொண்டதாகவும் ஆகியிருக்கிறது.

மதவாதத்தை முளையிலேயே கிள் ளி எறிவதற்கான வாளிணிப்புகளை நம் நாடு பயன்படுத்திக்கொள் ளாத நிலையிலும், தனிநபர் நம்பிக்கை என்ற அளவுக்குள் இருக்க வேண்டிய மதத்தை, சமூக வாழ்வில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக மாற்றுவதற்கு மதம் வெற்றிகரமான வழி என்று பலமுறை நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையிலும், இந்த அடையாளப் படுத்தலை மதவாதம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்திக் கொள் கிறது என்பதைப் பற்றிய விளக்கங்கள் இங்கு அதிகம் தேவையில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கோவை நகரிலும் குஜராத்திலும் அடையாளப்படுத்தப்பட்ட கடைகளும் மக்களும் மட்டுமே தாக்கப்பட்டதை சுலபமான

உதாரணமாகக் கொள் ளலாம். எந்தவொரு கண்டுபிடிப்பையும் புதிய தொழில்நுட்பத்தையும்

தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதில் வல்லவர்களுக்கு, இவையெல்லாம் இந்தப் புதிய

அடையாளப்படுத்தலுக்கும் உதவியாளிணி இருக்கின்றன.

 

இந்தத் தொழில்நுட்பங்கள் இல்லாவிட்டாலும் அடையாளப்படுத்தல் நிகழ்ந்தே தீரும் என்றாலும், இவை அடையாளப்படுத்தலை விரைவுபடுத்தியுள் ளன, எளிதாக்கியுள் ளன. உதாரணமாக, கணினியைப் பயன்படுத்தி மொத்த வாக்காளர் பட்டியலிலிருந்து சில நிமிட நேரத்தில் குறிப்பிட்ட மதத்தை அல்லது இனத்தை அல்லது சாதியைச் சேர்ந்தவர்கள் யார் என்பதைப் பட்டியலிட்டு விட முடியும். அவர்களின் ஜாதகம் தவிர, அனைத்து விவரங்களையும் திரட்டிவிட முடியும். அடையாளப்படுத்தலில் தொழில்நுட்பத்தின் பங்கைப் பற்றிப் பேசுவதில், இப்போது விவாதிக்கப்படும் விஷயத்திலிருந்து திசைதிரும்பிவிடக்கூடிய ஆபத்து இருப்பதால் இத்தோடு இதை நிறுத்திக் கொள் ளலாம்.

 

பனிப்போர் முடிவும், சோவியத் சிதறலும், ரஷ்ய பொருளாதாரச் சரிவும் அமைத்துக் கொடுத்த ஒற்றை ஏகாதிபத்திய ஆற்றலைப் பயன்படுத்தி எண்ணெளிணி வளம் மிக்க மத்தியக் கிழக்கு நாடுகளில் தன் ஆதிக்கத்தை அப்பட்டமாக நிலைநாட்டிக் கொள் ளும் அமெரிக்காவின் முயற்சியால் விளைந்த செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு இந்த அடையாளப்படுத்தல் சர்வதேச அளவில் மற்றொரு பரிமாணம் பெற்றிருக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகள் என்று அடையாளப்படுத்துவதுகூடத் தவறு என்று சிலர் கூறுகிறார்கள் . தூரக்கிழக்கு நாடுகள் , மத்தியக் கிழக்கு நாடுகள் என்று குறிப்பிடுவதே, மேற்கு நாடுகளை மையமாக வைத்துக் கொண்டுதான்.

 

எனவே இத்தகைய சொற்களை ஏற்க மறுப்பவர்கள் இருக்கிறார்கள் . இது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம். ஆக, இனம் சார்ந்த அடையாளப்படுத்தல் இன்று உலகளாவிய என்று சொல்ல முடியாவிட்டாலும் பலநாடுகள் தழுவிய பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது.

 

இவையெல்லாம் நிகழ்வதற்குப் பல ஆண்டுகள் முன்பாகவே ஒரு இனம் குறிப்பான

அடையாளத்தைப் பெற்றுவிட்டது. அதுதான் ஈழத் தமிழினம். அறுபதுகளில் துவங்கிய

இனப்பிரச்சினை பலவாறாக வளர்ச்சியும் மாற்றங்களும் பெற்று அந்த இனத்தையே மாற்றி

விட்டிருக்கிறது. தமிழர் என்று ஒரு இனம்தான் இருக்க முடியும், ஈழத் தமிழினம் என அதைத் தனி இனமாகக் கூற முடியுமா என்று ஒரு கேள் வி எழுகிறது. இங்கே ஈழத் தமிழினம் என்று குறிப்பிடப்படுவது தமிழினத்திலிருந்து தனித்துப் பிரித்துக் காட்டுவதற்கு அல்ல. தொப்புள் கொடி உறவு, தாளிணிபிள் ளை உறவு என்று எப்படி மார்தட்டிக் கொண்டாலும் எதார்த்தம் வேறாக இருக்கிறது. இனமானத் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டில் உள் ள தமிழர்களையும் நூறாண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்து இலங்கை சென்று இன்னும் காலூன்ற முடியாமல் புலம் பெயர்ந்துகொண்டே இருக்கும் தமிழர்களையும் ஒரே இனம் என்று அடையாளப்படுத்த என்னால் இயலவில்லை.

 

தமிழகத் தமிழினம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்துக கொண்டிருக்கும் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் விமான குண்டுமழைகளையும் ஈழத் தமிழினம் அன்றாடம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுக்கப் பாதயாத்திரை நடத்தி முன்னறிவிப்புக் கொடுத்து, பெரிய பெரிய பேனர்களால் விளம்பரம் செளிணிது இலங்கைக்குப் படகில் போகப்போவதாக நாடகம் காட்டிக் கொண்டிருக்கிறது தமிழகத் தமிழினம். எந்த அறிவிப்பும் இல்லாமல், இருப்பதை எல்லாம் கைவிட்டு, இரவோடு இரவாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கள் ளத்தோணி ஏறி, நிறைவேறாக் கனவுகளுடன் புலம் பெயர்வது ஈழத் தமிழினம். குக்கிராமத்துக் குப்பாயியின் குழந்தையும் மம்மிடாடி என்று பேச ஆங்கிலப் பள் ளிகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது தமிழகத் தமிழினம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகநூலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்ட பின்னும் உலகளாவிய முறையில் இணையத் தமிழில் பல சோதனைகளை மேற்கொண்டுள் ளது ஈழத் தமிழினம். இந்த இரண்டு இனங்களையும் ஒரேதமிழினம் என்று என்னால் அடையாளப்படுத்த முடியாது. இதை இத்துடன் நிறுத்திவிட்டு, மீண்டும் ஈழத் தமிழர் என்ற பிரச்சினைக்குப் போவோம்.

 

அறுபதுகளில் ஈழத் தமிழர் பிரச்சினையாக இருந்தது, பிறகு ஈழத் தமிழரே பிரச்சினை என்றாகி விட்டதற்கு, பல நாடுகள் , பல அரசியல் கட்சிகள் , பல அரசியல் கட்சித் தலைவர்கள் , பல இயக்கத் தலைவர்கள் காரணமாக இருந்ததுடன் இந்த அடையாளப்படுத்தலும் ஒரு காரணம்..

 

இந்தியாவில் இந்துத்துவவாதிகள் அவர்கள் என்று இஸ்லாமியரை அடையாளப்படுத்துவதுபோல, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் அனைவரையுமே அவர்கள் என்று அமெரிக்கா அடையாளப்படுத்துவதுபோல, இன்று தீவிரப்பட்ட பிரச்சினையாக இல்லாமல், முப்பதாண்டுகளாக இந்த அடையாளம் ஈழத் தமிழர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது. இன்று இந்து போன்ற சில பத்திரிகைகளில் மட்டுமே ஆழமான கட்டுரைகளில் விமர்சிக்கப்படும் நாம் அவர்கள் என்ற கருத்தோட்டத்தின் பாதிப்பை ஈழத் தமிழர்கள் பல பத்தாண்டுகளாகவே அனுபவித்து வருகிறார்கள் .

இதிலும் குறிப்பாக, ஈழத் தமிழர் என்றாலே புலிகள் என்ற அடையாளப்படுத்தலாக மாறிவிட்டதுதான் விந்தை. இருப்பதுபோலவே, சர்வதேச அளவில் ஈழத் தமிழர் என்றாலே புலிகள் என்ற கருத்து உருவானால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

 

அவர்களுக்கு இலங்கைஇனப்பிரச்சினைபுலம்பெயர்ந்த தமிழர்ஈழத்தமிழர்ஈழ இயக்கம் போன்ற வரலாறுகள் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், இந்தியாவின் வடபகுதியில் இருப்பவர்கள் தெற்கே உள் ள தமிழும் தெலுங்கும் மலையாளமும் கன்னடமும் எல்லாமே மதராசிதான் என்றே அடையாளப்படுத்துவதுபோல, இந்தியாவில் உள்ள படித்த வர்க்கத்தினர்கூட ஈழத் தமிழர் எவரையும் புலிகள் என்று மட்டும் அடையாளப்படுத்துவதைப் புரிந்து கொள் ள முடியவிலலை.

 

இதுவும் ஒருவகையில் இனஆதிக்க, மொழியாதிக்க உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் ஈழத்தமிழர் எவரும் புலியாக அடையாளம் காணப்படும் அபாயம் தொடர்ந்தே வந்திருக்கிறது. இதனால் ஏற்படும் வேதனையை அனுபவித்தவர் மட்டுமே உணர முடியும். அதுவும் தொப்புள் கொடி உறவு உள் ள நாட்டில் இந்த அடையாளப்படுத்தலின் வேதனை அனுபவிக்கப்படுமானால் அந்த வேதனை இன்னும் அதிகமாக இருக்கும். சேரனின் இந்த நூலில் உள் ள ஒரு கட்டுரை அங்கதச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் அதன்பின்னே ஒளிந்துள் ள வேதனையை உணர முடிகிறது. இந்த நூலில் சர்வதேசப் பிரச்சினைகள் பலவும் அலசப்பட்டுள் ளன என்றாலும் குறிப்பாக இந்த ஒரு அனுபவக்கட்டுரை, அவர் அனுபவித்த வேதனையை நானே அனுபவித்ததாக உணரச் செதது.

 

நேபாளத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நடத்திய ஒரு

மாநாட்டில் பங்கேற்க சேரன், கோல்கத்தா வழியாகச் செல்ல நேர்கிறது. கோல்கத்தா விமான

நிலையத்தில் அவர் எதிர்கொண்ட சிக்கல்தான் இந்த அனுபவம்.

 

பக்கம் 184-185 கட்டுரையின் இறுதியில் எழுதுகிறார் – “யாருக்காவது நேபாளம், பூடான், திம்பு என்ற போகிற உத்தேசம் இருந்தால் சிங்கப்பூர் பாங்காக், ஊடாகச் செல்லவும். பயணம் தொலைவு, பணமும் அதிகம் எனினும் புண்ணிய பாரதத்தினால் புண்படாமல் போளிணிச் சேருவீர்கள் இந்தச் சொற்றொடரின் அங்கதத்தைப் புரிந்து சிரிக்க வேண்டும் ஆனால் சிரிப்பு வரமறுக்கிறது.

 

அடையாளப்படுத்தலின் முழுஅர்த்தம் அங்கே புரிகிறது. தமிழர் அனைவரும் புலிகள் என்று அடையாளம் காணப்படுவது ஒருபுறம் இருக்க, சார்புநிலை எடுக்காத ஈழத் தமிழர்கள் எவரும் புலிகளின் எதிரிகளாக புலிகளால் அடையாளம் காணப்படும் அபாயமும் ஈழத் தமிழர்களுக்கு உண்டு. மற்ற அடையாளப்படுத்தல்களைவிட இந்த அடையாளப்படுத்தலுக்குக் கொடுக்கும் விலை மிக உயர்ந்த விலையாக இருக்கும். புலிகளின் அகராதியே வேறு என்பதை அண்மை வரலாற்றை அறிந்த நாம் விவாதிக்க வேண்டியதில்லை.

 

எனவேதான், இன்னொரு கட்டுரையில் ஒன்றல்ல, பல கட்டுரைகளில் புலிகள் மீதான பார்வை வெளிப்படும்போது சேரனின் நேர்மை வெளிப்படுகிறது.

 

சேரனின் நண்பர் சபாலிங்கம் பாரிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்படுகிறார்.

 

புலிகளின் மறுப்பாளர்கள் ஈழத்தில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை பத்மநாபா இருந்த சென்னை என்றாலும் சரி, சபாலிங்கம் இருந்த பாரிசானாலும் சரி, புலிகளால் அடையாளம் காணப்பட்டவர்களின் கதி அதோ கதிதான்.

இந்தப் படுகொலைக்கு புலிகள் தான் காரணம் என்று தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று சேரன் குறிப்பிட்டாலும், ‘கேள் விகளுக்கு அப்பாலான ஒரு தலைமைப் பீடமும், நம்பிக்கையும் தலைவர்மீதான விசுவாசத்தையும் தவிர வேறெதையுமே கருதாத ஒரு விடுதலைப் பட்டாளமும் அது எவ்வளவு சாமர்த்தியம் மிக்கதாக இருந்தாலும் அது உண்மையான விடுதலையைப் பெற்றுத் தந்துவிடப் போவதில்லை. இது வரலாற்றின் துயரம், துயரத்தின் வரலாறு

 

பேனா முனையை துப்பாக்கிக் குண்டுகளால் சிதைப்பதுதான் மாவீரம் என்பது

எங்களுடைய கருத்தியலாக மாறி விட்டால் எங்களுடைய தேசத்தின் கல்லறைக்குள் ஒரு

எலும்புக்கூடுகூட மிஞ்சாதுஎன்கிற வாசகங்க ஈழப்போராட்டத்தின் திசைவழியைக் கண்டு

வேதனைப்படுகிற ஒரு மனதின் குரல்கள்.

 

ஈழத் தமிழர்களையே முஸ்லீம்கள் மற்றவர்கள் என்று புலிகள் அடையாளப்படுத்துவதை

ஈழத்தின் தேசியத் தற்கொலைஎன்ற கட்டுரை விவரிக்கிறது. பாலஸ்தீனத்தை ஒப்பிட்டுக்காட்டும்

சேரன்

வடக்கிலிருந்து முஸ்லீம் மக்களை விரட்டியடிப்பது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்

போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு குறுக்குவழி என்று யாராவது நினைத்தால் அதைவிட மூடத்தனம் வேறு ஒன்றுமில்லை. ஈழத்தின் தேசியத் தற்கொலைதான் இது, முஸ்லிம் மக்களை அடித்துத் துரத்தி விட்டு உருவாக்கப்படும் ஈழம் இஸ்ரேலாகத்தான் இருக்குமே தவிர ஈழமாக இருக்க முடியாது.’ என்கிறார். தமிழ்த் தேசியவாதத்தில் நோளிணிக்கூறாகப் பரவி வரும் முஸ்லிம் எதிர்ப்பையும் ஆக்ரோஷமாக எதிர்க்க வேண்டும் என்கிறார்.

 

தேசியவாதத்தின் எல்லைகள் என்கிற கட்டுரை, இன அடையாளப்படுத்தலை விவாதிக்கிறது. ‘தேசியவாதத்தின் பொதுவானதும் குறிப்பானதுமான வரலாற்றுப் பாடங்கள் சுட்டுவது என்னவென்றால், தேசியவாதம் மற்றவர்களை அல்லது வெளியார்கள் என்று தான் உருவகிப்பவர்களை விரட்டுகிறது அல்லது கொல்கிறது. யார் இந்த வெளியார்கள் என்பது காலத்துக்கும், அரசியல், சமூக வரலாற்றுத் தேவைகளுக்கும் ஏற்ப உருவகித்துக் கொள் ளப்படுவது வழக்கம். சிங்களபௌத்த தேசியவாதத்திற்கு தமிழர்கள் , முஸ்லிம்கள் , மலையாளிகள் அனைவரும் வெளியார். இந்துத் தேசியவாதிகளுக்கு முஸ்லீம்கள் வெளியார்.

ஈழத் தமிழ் தேசியவாதத்திற்கு (இப்போதைக்கு) முஸ்லீம்கள் வெளியார்.

இத்தகைய வெளியார் என்ற உருவகிப்பும் வெளியார் நீக்கமும் தேசிய வாதங்களுக்கு

அடிப்படையிலேயே ஒரு ஜனநாயக இயல்பைத் தருகின்றன. இன்னொரு தளத்தில், தன்னுடைய இருப்பையும் உன்னதத்தையும் வலியுறுத்த எல்லாத் தேசியவாதங்களும் கடந்துபோன பொற்காலங்களின்வரலாற்று, இலக்கிய, கலாச்சார மேன்மைகளிலிருந்து தமக்குத் தேவையான தமது இன்றைய அரசியலுக்குச் சாதகமான விவரங்களையும் அம்சங்களையும் மட்டுமே பொறுக்கி எடுத்துத் தமது அடையாளத்தை நிறுவுகின்றன…’ என்று தேசியவாதப் பிரச்சினையை சர்வதேச வரலாறுகளை ஒப்பிட்டுச் சுட்டிக்காட்டுகிறது இக்கட்டுரை.

 

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இப்போது எழுப்பப்பட்டுள் ள ராமர் சேது பிரச்சினை. ஆட்சியில்இருந்தபோது சேதுசமுத்திரம் திட்டத்தை எந்தக் கட்சி அங்கீகரித்ததோ, அதே கட்சி இப்போது முழுக்கரணம் அடித்து திட்டத்தை எதிர்க்கிற விந்தை இத்தகைய தேசியவாதத்தினால் மட்டுமே சாத்தியம். ‘விடுதலையும், தேசிய விடுதலையும் எங்களுடைய புரிந்துகொள் ளலின்படி சமத்துவம், சுதந்திரம், மானுடம், ஆகிய விழுமியங்களின் மேல் கட்டப்படுவது. இந்த சமத்துவம், இனத்துவ சமத்துவம் மட்டுமல்ல, பொருளாதார சமத்துவம், பால் அடிப்படையிலான சமத்துவம் போன்ற

அனைத்தையும் உள் ளடக்க வேண்டும்என்ற ஆவலை வெளிப்படுத்துகிறது. ஆனால் இது

நிறைவேறுமா என்கிற ஐயப்பாடுடன்தான் கட்டுரை முடிகிறது.

 

வதைமுகாம்கள் எழுப்புகிற கேள் விகள் என்னும் கட்டுரை, நாஜி கொலை முகாம்களைப் பற்றிவிளக்கிவிட்டு, நீங்களே சிந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் முடிகிறது. ‘நாஜிகனின்கொலை முகாம்கள் வரலாற்றின் ஒருபக்கமாக ஆவணங்களுக்குள் சென்று விட்டது என்று நாம் அமைதி கொள் ள முடியாது.

பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு அரசியலுக்கூடாகவும் இத்தகைய பயங்கரங்களின் கூறுகள் மேலெழுவதை ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், வளர்ந்துவரும் நவநாஜிகளிலும் இன்று பர்க்கிறோம. நிறவெறியும், இனவெறியும் இன்னொருமுறை மனிதகுல அழிப்புகளுக்குக் காரணமாகாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. நீங்கள் பயப்படுகிறீர்கள் . பயப்படுவதில் அர்த்தமில்லை. மனிதநேயம்

எங்கிருந்து ஆரம்பமாகிறது என யோசித்துப் பாருங்கள் . உங்கள் அயலவர்களை உண்மையாக இதயபூர்வமாக உங்களால் நேசிக்க முடிகிறதா என்று உங்கள் மனச்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள் என்கிறார் சேரன்.

சேரன் நிச்சயம் வன்முறைவாதி அல்ல என்றாலும் காந்தியவாதி என்றும் கருதிவிட இயலாது.

 

ஆனால் இங்கே தேசியவாதத்துக்கு மருந்தாக அவர் குறிப்பிடுகிற வழி உண்மையில் பயன்தரக் கூடியதுதானா என்பதில் அவருக்கும் சந்தேகமாகத்தான் இருக்கும். இறுதிவரிகள்

சாத்தியப்பாட்டில் ஐயத்தை எழுப்புவன என்றாலும், இக்கட்டுரையும் ஆழமானது, விரிவானது.

 

மகாகவியின் மகனான சேரன், கவிதையின் மூலம் அறிமுகமாகி, பிறகு பத்திரிகைகளில் கட்டுரைகளும் எழுதினார். இந்த நூலில் இடம்பெற்றுள் ள கட்டுரைகள் 1989 முதல் 97 வரையான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் இவரது ஒரு கட்டுரை உயிர் கொல்லும் வார்த்தைகள் என்ற தலைப்பில் அமைந்துள் ளது. செல்வி என்பவருக்கு எழுதப்பட்ட கடிதமாக அது இருக்கிறது. இலங்கையில் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட கவிஞர் செல்வியைத்தான் இவர் குறிப்பிடுகிறார் என்று எண்கிறேன்.

 

எங்களுடைய வார்த்தைகள் உயிர் கொல்லும் வார்த்தைகள் என்று அவர்கள் கருதினால்

கருதட்டும். உயிர் கொல்வது அல்ல எங்களுடைய வேலை. வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பதே எங்கள் வேலை. விரைவில் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன்என்று முடிக்கிறார்.

இவர் சந்திக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அந்த செல்வி 97இல் புலிகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று நினைவு.

அமைதி வழி விமர்சனம் என்றாலும் சரி, ஆயுதமேந்திய எதிர்ப்பானாலும் சரி, புலிகள் தமக்கு வேண்டாதவர் என்று அடையாளம் கண்டவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களை ஒழித்துக்

கட்டுவதில் குறியாக இருப்பவர்கள் .

இவர்களால் படுகொலை செளிணியப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தமிழ்க் கவிஞர்களும் தலைவர்களும் ஏராளம். கனடாவுக்குப் புலம் பெயர்ந்துவிட்டார் சேரன். யார்க் பல்கலையில் சமூகவியல் ஆசிரியராக இருக்கிறார்.

 

இந்த நூல், சேரனே குறிப்பிடுவதுபோல நான்கு தளங்களில் இயங்குகிறது. கருத்துச் சுதந்திரம் ஒன்று. தேசியவாதம், அடையாளங்கள் எழுப்புற சிக்கல்கள் இரண்டாவது. போராட்டங்களும், அதற்கான வழிமுறைகளும் என்பது மூன்றாவது. அறம்சார்ந்த அணுகுமுறை என்பது நான்காவது தளம்.

 

நியாயமான வழிமுறைகள் தான் நியாயமான முடிவுகளுக்கும் இட்டுச் செல்லும்என்று போராட்ட வழிமுறைகள் பற்றிய இவரது கூற்று, காந்தியின் ways justifies the means என்பதோடு நெருங்கி நிற்கிறது.

 

தமிழ், சுற்றுச்சூழல், சோசலிசம், உலகமயமாக்கம், ஈழத் தமிழர் பிரச்சினை, கஷ்மீர், மனித

உரிமைகள் , என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இருக்கின்றன. பல கட்டுரைகளில்

இடுக்கண் வருங்கால் நகுக என்பதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் சேரன். வேதனை

தரக்கூடிய சில கட்டுரைகளையும்கூட அங்கதச் சுவையுடன் இவரால் தர முடிந்திருக்கிறது.

.கே. 47இலிருந்து பேஸ்பால் மட்டை வரை என்கிற கட்டுரை, ஆயுதப் போராளிகளையும்

காளிணிச்சுகிறது, ஈழத்தைவிட்டு மேலை நாடுகளுக்குப் பறந்தோடிவிட்டவர்களைக் காளிணிச்சுகிறது. ‘ஆயுதபாணிகளை மட்டுமல்ல, நிராயுதபாணிகளையும் குழந்தைகளையும் சுட்டுவீழ்த்துகிற வீரம் எங்களுடையதுவீரமும் களத்தே விட்டுவிட்டு, பாஸ்போர்ட்டையும் மலசல கூடத்தில்வீசிவிட்டு, வெறுங்கையோடு கனடா புக்க வீரத் தமிழ் மறவர்கள் பலர் ஏ.கே. 47க்குப் பதில், பேஸ்பால் மட்டைகளை ஆயுதமாகத் தரித்திருப்பதுதான் இன்றைய அவல நிலை. . .

இந்த வீரத்தைப் பற்றி எழுதிக்கிழிக்க என்ன இருக்கிறது? வெல்ஃபேர் காசில் தூள் கிளப்புகிறது வீரம்…’ என்று முடிகிறது. வெல்பேர் காசு என்று இவர் சுருக்கமாக எழுதியிருப்பது எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து போன்ற நாடுகள் தற்காலிக இருப்பிடமும், செலவுக்குப் பண உதவியும் தருவார்கள் .

இதை வெல்பேர் நிதி என்பார்கள் . குடியுரிமை கிடைக்கும் வரை, அல்லது தஞ்சம்

அனுமதிக்கப்படும் வரை, இருப்பிடம் உணவு போக்குவரத்து எல்லாவற்றுக்கும் அரசின் உதவி கிடைக்கும். இதை வாங்கி திருப்தியாகச் சாப்பிட்டுக்கொண்டு அங்கேயே இருந்து கொண்டு வீரம் பேசுபவர்களைச் சாடுவதாகவும் சொல்லலாம். அந்த வெல்பேர் காசில் ஒரு பகுதி கட்டாயமாக புலிகளால் வசூலிக்கப்பட்டு அது இலங்கையில் ஆயுதங்களுக்குப் பயன்படுவதைக் குறிப்பிடுவதாகவும் சொல்லலாம். எல்லாமே வெல்பேர் காசு என்பது புரிந்தவனுக்கு மட்டுமே இதுவும் புரியும்.

 

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்கிற கட்டுரையில், புலம்பெயர்ந்து உலகெலாம் பரவியிருக்கிற தமிழர்களை எட்டுத் திக்கும் சென்றாயிற்று. கொலைச் செல்வங்களுக்குப் பதில் கலைச் செல்வங்களைக் கொண்டு வந்துசேருங்களேன் தயவுசெளிணிதுஎன்று வேண்டுகிறார்.

பல்லவ புராணம் என்று ஒரு கட்டுரை தமிழ்ப் பத்திரிகையாளர்களை நகைச்சுவையாகச் சாடுகிறது. இவர் புதுவைக் கல்லூரியில் பேராசிரிய நண்பரை சந்திக்கப் போயிருந்தாராம். அப்போது அங்கே வருகிறார் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர். இவர் இலங்கைக் கவிஞர் என்று தெரிந்ததும், தன் பத்திரிகைக்கு ஒரு கவிதை கேட்கிறார். இவர் தயங்க, கடைசியாக பத்திரிகயாளர் கூறுகிறார்

 

நானே ஒரு நாலுவரி எழுதி உங்க பேரில போட்டுடட்டுமா? தமிழ்ப் பத்திரிகையாளர்களை

இதைவிட மோசமாக சாட முடியாது. சிந்தனையைத் தூண்டும் இக்கட்டுரைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள் ளது. விலை 90 ரூபா. நூலில் உள் ள கட்டுரைகள் அனைத்துமே ஆழமானவை, விவாதத்துக்கு உரியவை.இவற்றைப் படித்துப் புரிந்து கொள் ளும் அளவுக்கு தமிழ் வாசக வட்டம் விரிவடைய வேண்டும்

என்பதே என் ஆவல்.

ஆர். ஷாஜஹான்

யுத்தமும் தமிழ்ப் பெண்களும் : மனோ – யாழ்ப்பாணம்.

யுத்தம் நடைபெறும் நாடு, பிரதேசம், காலம் என்ற வேறுபாடில்லாது, அதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் சிறுவர்களுமாகவே இருக்கிறார்கள்.
யுத்தப் பிரதேசத்தில் ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்படுவதுடன் மாத்திரமல்லாது ஒரு யுத்த தளபாடம் போல் பயன்படுத்தப்படுகிறார்கள். தனியார் நிலவுடைமை ஆட்சி அதிகாரம் ஆரம்பித்த மன்னர் காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை நடைபெற்ற அனைத்து போர்களிலும், பெண்கள் போரில் பங்குபற்றினாலும் இல்லாவிட்டாலும் காலத்திற்கேற்ப பல்வேறு வடிவங்களிலும் பெண்களே யுத்தத்தின் பாதிப்பை அதிகமாக அனுபவிப்பவர்களாக இருந்துவருகிறார்கள், யுத்தத்தின் உச்சமான துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அதற்குக் காரணம் அரசியல் ஆட்சி அதிகார சிந்தனையில் மாற்றம் இல்லையா? அல்லது அநேகமான போர்களை ஆண்களே நடத்திச் செல்பவர்களாக இருக்கிறார்கள் என்பதா? அல்லது பெண்கள் போரை எதிர்கொள்ளும் ஆற்றல் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதா? எது காரணம்?

‘பொஸ்னியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் யுத்தம் காரணமாகத் தமது கணவன்மார் காணாமல்போய்விடுவதால் பல்லாயிரம் பெண்கள் கணவனின் அனுசரணையை இழந்துவிடுவது மட்டுமல்ல, உத்தியோகபூர்வமாக விதவைகள் என்ற அங்கீகாரத்தையும் இழந்துநிற்கிறார்கள்’ என்று கூறுகிறார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டியின் ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் நிகழ்ச்சித் திட்டம்’ என்ற அமைப்பின் தலைவியான புளோரன்ஸ் ரெர்சியர். பொஸ்னியாவில் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை. அதேபோல் 10 வருடத்திற்கு மேல் தொடர்ந்த யுத்தம் நேபாளத்தில் தற்போது நிறுத்தப்பட்டு ஜனநாயகத் தேர்தல் ஒன்றின் மூலம் புதிய அரசு ஒன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய திட்டம் எதனையும் அந்த அரசாங்கம் முன்வைக்கவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை 30 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் யுத்தம் பெண்கள் மேல் பெரும் சுமையாக அழுத்திக்கொண்டிருக்கிறது.

இலங்கையில் இனப்பிரச்சினை மேலெழுந்து போராட்டங்கள் உத்வேகம் பெற்றபோது, 1965 காலகட்டங்களில் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் பெண்களே முன்னணியில் பயன்படுத்தப்பட்டார்கள். போராட்டங்களைத் தடுக்கவரும் எதிராளிகள் பெண்கள் மேல் உடனடியாகத் கடுமையான தாக்குதலில் ஈடுபடமாட்டார்கள் என்ற எண்ணத்தில், போராட்டம் நீடிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகவே பெண்களை முன்னணியில் நிறுத்துவார்கள்.

1983 இன் பின்னர் ஆயுதப்போராட்டம் முழுவடிவம் பெறத் தொடங்கியபோது, தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெண்கள் தாமே விரும்பிப் பங்குபற்றத் தொடங்கினார்கள். அவர்கள் அதிகமாக ஆண் போராளிகளை மறைத்து வைப்பதற்கும் அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கல், மற்றும் பிரசாரங்களுக்கான துண்டுப் பிரசுரங்களை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டதுடன் சிலர் ஆயுதம் ஏந்தி யுத்த களத்திற்கும் சென்றார்கள். போராளிகள் மறைந்து வாழ்வதால் அவர்களைக் கைதுசெய்யமுடியாதபோது உதவிபுரிந்த பெண்களே அரசாங்கப் படைகளினால் துன்புறுத்தப்பட்டார்கள்.

இடையறாது யுத்தம் நடைபெறும் எமது நாட்டில் கணவனை இழந்த இளவயதுப் பெண்கள், தகப்பனை சகோதரனை யுத்தத்திற்குப் பலி கொடுத்தவர்கள், அங்கவீனமடைந்த இளம் பெண்கள், தமது எதிர்காலம் பற்றி எந்தவித நம்பிக்கையும் அற்ற நிலையில் அநாதரவானவர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டவர்கள் எனப் பல்வேறு நிலைகளில் மனம் உடைந்து வாழ்பவர்களைத் தமிழீழம் என்ற இலட்சியக் கனவிற்குள் அகப்படுத்துவது சுலபமாக இருக்கிறது. உளவு நடவடிக்கை மற்றும் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதில் பெண்களுக்கு உள்ள சாதகமான அம்சங்களும் பெண்களைப் பெருமளவில் புலிகள் பயன்படுத்திவருவதற்குக் காரணமாகியுள்ளது. பெண் உடம்பை நிந்தனை செய்யும் ‘மனித வெடிகுண்டு’ மனிதனை ஒரு சடப்பொருளாக நினைக்கும் எந்தவித போரியல் நீதிக்கும் உட்படாத ஒன்று.

வான் தாக்குதல், இரண்டு பக்கத்திலும் நடத்தப்படும் செல் தாக்குதல் மற்றும் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது புலிகள் நடத்தும் குண்டுத்தாக்குதல்களினால்; யுத்தத்தில் நேரடியாக ஈடுபடாத 70000க்கு மேற்பட்ட பொதுமக்கள் இதுவரை இறந்திருக்கிறார்கள். இதற்கு புறம்பாக இலங்கை இராணுவமும் தமிழர் தரப்பு ஆயுதக்குழுக்களும் பெருந்தொகையில் நேரடி யுத்தத்தில் இறந்திருக்கிறார்கள். மேலும் பல இளைஞர்கள் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

குடும்பத்தின் ஆண்கள் இறக்கும்போது அல்லது காணாமல் போகும்;போது பெண்கள் குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியவர்களாகிறார்கள். இந்த இக்கட்டான நிலைக்கு உள்ளானவர்கள் பெரும்பாலும் கிராமப்புறப் பெண்களாகவும் இளம் வயதினராகவும் உள்ளனர். குடும்பத்தை நடத்தும் அனுபவம் அற்றவர்களாகவும் வெளியுலக அனுபவம் அற்றவர்களாகவும் இருப்பதால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள். மேலும் காணாமல் போன தமது கணவனோ அல்லது மகனோ திரும்பி வரலாம் என்ற நம்பிக்கையுடன் அதற்கான எந்த அத்தாட்சியையும் பெறுவதற்கு முயற்சி செய்யாமல், அவரைக் கண்டுபிடிப்பதற்காக பல்வேறு வகைகளில் தம்மிடம் உள்ள பணம், நகைகள் மற்றும் காணியைக் கூட விற்று செலவழித்துவிட்டு நடுவீதிக்கு வந்துவிடுகிறார்கள்.

இதேபோல், வன்செயலில் கணவன் இறக்கும்போது, அந்த நேரத்தில் உள்ள துன்பகரமான நிலையில் இறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் சரியான தகவல்களைப் பதியாது விட்டிருப்பார்கள். இதன் காரணமாக, அரசாங்கம் வழங்கும் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். ஏமாற்றுப் பேர்வழிகளிடம் அகப்படுகிறார்கள். நஷ்டஈட்டுப் பணத்திற்காக சில உறவினர்களும் இப் பெண்களை ஏமாற்றுகிறார்கள். அந்தப் பணத்தை முதலீடாக வைத்துக்கொண்டு ஏதாவது சிறிய தொழில் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதற்கான ஆலோசனைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆண் துணையின்றி தனித்து வாழும் பெண்ணுக்கு ஆண்களால் ஏற்படும் இடைஞ்சல்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் இக்கட்டான நிலையொன்றில் மறுமணம் செய்துகொள்கிறாள். அந்த ஆண் வெறுமே சுயநல நோக்கில் அந்தப் பெண்ணை மணந்துகொண்டு நஷ்டஈட்டுப் பணம் ஏதோவொரு வழியில் செலவானபின் இப் பெண்ணை கைவிட்டுச் செல்கிறான். இந்நிலையில், இப்படியான பெண்கள் மீண்டும் அநாதரவாவது மட்டுமல்ல மறுமணம் செய்துகொண்டதால் சமூகத்தின் நன் மதிப்பையும் இழக்கிறார்கள். சமூகத்தின் வசை பாடலுக்கு அஞ்சியும் தனது பொருளாதாரத் தேவைக்காகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒன்றை நாடுகிறாள். இந்தப் பெண்கள் பெரும்பாலும் தமது கல்வியை இடைநடுவில் நிறுத்திவிட்டு திருமணம் செய்துகொண்டவர்களாய் இருப்பார்கள். அவர்களுக்குப் போதுமான கல்வியறிவு இருக்காது. இதனால் மத்தியகிழக்கு நாடொன்றுக்கு பணிப்பெண்ணாக செல்வதே அவர்களால் முடியுமானதாய் இருக்கிறது. இதில் அவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் எத்தகையது என்பதைப் பின்னர் பார்ப்போம்.

யுத்தம் நடைபெறும் நாடு ஒன்றில் பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கூட வேதனையையும், ஏமாற்றத்தையும், அவஸ்த்தைகளையுமே ஏற்படுத்துகின்றன. யுத்தம் பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பினையும் சீர்குலைத்துள்ளது. நலிவடைந்த பெண்களை பயன்படுத்த ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு நல்லதொரு களமாக யுத்தம் நடைபெறும் எமது பிரதேசம் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் பெண்களுக்கான இறுக்கமான சில கட்டுப்பாடுகள், எந்தளவு பணத்தின் தேவை இருந்தபோதிலும் மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு ஒன்றைப் பெற்றுச் செல்ல அவர்களை அனுமதிப்பதில்லை. அப்படி செல்பவர்கள் அநேகமாக கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அல்லது வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களாகவே இருக்கிறார்கள்.

இப் பெண்கள் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு புறப்படத் துணியும்போது அப் பெண் எந்த நிலையில் இந்த தீர்மானத்தை மேற்கொள்கிறாள் என்பதை ஆராய்ந்தால். இதுவரை குடும்ப பாரத்தை சுமந்து வந்த ஆணின் ஆதரவு இல்லாமல் போயிருக்கும் அல்லது தமது குடும்பத்திற்கென ஒரு முதலாக பெருந்தொகைப் பணமோ சொத்தோ இவர்களிடம் இருக்காது.

ஆண் துணை இல்லாமல் போவதற்கு எல்லாப் பெண்களுக்கும் ஒரே காரணம் இருப்பதில்லை. இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் பங்குபற்றியது, நடுவில் அகப்பட்டுக்கொள்வது, மாற்றுக் கருத்துக் கொண்ட ஒரு அமைப்பின் உறுப்பினராக இருப்பது, விடுதலைப்புலிகள் அமைப்பு பிளவுபட்ட போது மாற்று அணியில் இருப்பது, போராட்டத்தில் ஈடுபடும் அமைப்புகள் பற்றியோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் பற்றியோ கடுமையான சிந்தனை வெளிப்பாடுகளையும் விமர்சனங்களையும் வெளிப்படையாக பேசிக்கொள்பவன், புலி உறுப்பினராக இருந்தும் தனது அமைப்பின் தவறுகள் பற்றி விமர்சிக்கத் துணிந்தவன், கப்பம் கொடுக்க மறுத்தவனாயிருப்பான் அல்லது தேசியம் என்ற கருத்துக்கு மாறாக அனைத்து தரப்பினர் மீதும் பற்றுக்கொண்ட ஒரு மனிதநேயவாதி யாகவிருப்பான் எப்படியிருந்தபோதிலும் பெருந்தொகையான ஆண்களின் இறப்பிற்கும், காணாமல் போவதற்கும், அங்கவீனம் அடைவதற்கும் காரணம் யுத்தம் மட்டுமே. யுத்தமே இந்தப் பெண்களை வெளிநாடுகளுக்கும் துரத்துகிறது.

அவளின் நிராதரவான நிலையைப் பொறுப்பேற்பதற்கு யாரும் தயாராக இல்லை. அரசாங்கத்தின் சமூக நலத் திட்டங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைத்திட்டங்கள் எதுவும் யுத்தம் நடைபெறும் இடத்தில் சீராக நடைமுறைப்படுத்தப்படும் என்று சொல்லமுடியாது. யுத்தத்தில் அலைக்கழிக்கப்படும் இந்தப் பெண்கள், தமது எதிர்காலத்தை மீட்டுக்கொள்வதற்கு அல்லது தமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்திற்கு தேவையான பணத்தைத் தேட ஒரே வழி வெளிநாடு செல்வது என முடிவு செய்கிறார்கள். ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்த பெண்கள் சிலர் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றிருப்பார்கள். அவர்களின் ஊரில் வெளிநாட்டு முகவர் அமைப்பு பிரதிநிதிகளின் நடமாட்டம் அதிகமாகவிருக்கும். இந்த முகவர்கள் வெளிநாடு செல்லத் தயாராகவுள்ள இந்த இளம்பெண்களை சுலபமாக அடையாளம் கண்டுகொண்டு அவர்களை அணுகி தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அருகாமையில் சேலையால் முக்காடிட்டிருந்த ஒரு சிறு பெண்ணும் அவளுக்குப் பக்கத்தில் ஒரு நடுத்தர வயது ஆணும் இருந்தார். அவர்களின் பேச்சிலிருந்து அந்தப் பெண் வெளிநாடு செல்வதற்காக வந்து கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. ஒரு தரிப்பிடத்தில் அந்த ஆண் எழும்பிச் சென்றபோது அப் பெண்ணிடம் கேட்டறிந்தவை எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

17 வயது மட்டும் நிரம்பிய அந்த இந்துப் பெண்ணை 25 வயதான ஒரு முஸ்லிம் பெண்ணின் அடையாளங்களுடன் குவைத் நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக சொன்னாள். தனது கிராமத்தில் புலிகள் வந்து தங்கிச் செல்வதாகவும் அப்போது சந்தித்த இயக்க உறுப்பினர் ஒருவர் தன்னைக் காதலித்து கட்டாயப்படுத்திய தாகவும் பெற்றோரால் எதிர்த்து நிற்கமுடியாது தன்னை அவருடனேயே வாழ நிர்ப்பந்தித்தனர் என்றும் சொன்னார். ஆயினும் சில மாதங்களின் பின்னர் அவர் தன்னை விட்டுச் சென்றுவிட்டதாகவும் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சொன்னார். இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் தனது கணவர் பற்றிய எந்தத் தகவலையும் பெறமுடியாதுள்ளதுடன் தனது குழந்தையை வளர்ப்பதற்கு பெரும் சிரமப்படுவதுடன் முறைப்படியான திருமணம் ஒன்றை தாங்கள் செய்துகொள்ளாததுடன் இயக்க உறுப்பினரான தனது கணவர் பற்றி வெளிப்படையாக பேசிக் கொள்வதனால் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடலாம் என்ற பயமும் உள்ளது என்பதால் சமூகத்தின் மத்தியிலும் தன்னைப் பற்றிய தப்பான பேச்சுக்கள் தன்னைக் கஷ்டப்படுத்துவதாக சொன்னார்.

ஆயினும், வெளிநாடு போவதற்கு எப்படியும் சிறிய தொகை பணம் என்றாலும் தேவைப்படுமே அதற்கு என்ன செய்தீர்கள்? என்று கேட்டபோது, அப் பணத்தை இந்த முகவரே தருவதாகவும் மாதா மாதம் சம்பளப் பணத்தில் கழித்துக் கொள்வதாகவும் ஏற்பாடு, ‘போக்குவரத்து, பாஸ்போட், கொழும்பில் தங்குமிடம், உணவு செலவு என்று எல்லாவற்றிற்கும் கணக்கு ஒன்று பதியப்பட்டு வருகிறது, அவற்றையெல்லாம் எனது சம்பளத்திலிருந்தே கொடுக்க வேண்டும். இவர் பல தடைவை என்னைக் கொழும்பிற்குக் கூட்டிக்கொண்டு வந்து போய்விட்டார். என்னிடம் இருந்த ஒரு சங்கிலியும் விற்று செலவழித்து விட்டேன். கொழும்பில் நடக்கும் தேடுதல் நடவடிக்கைகளிலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எங்களுக்குப் பயம் தான். இந்த முறையாவது சரிவந்தால் போய்விடலாம்’ என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

எனக்குத் தோன்றியது இந்தப் பெண்ணை எப்படி இந்தப் போலி முகவரிடமிருந்து காப்பாற்றுவது? அவர் இந்தப் பெண்ணுடைய ஊரைச் சேர்ந்தவராக இருப்பதால் தன்னை நிச்சயம் ஏமாற்றமாட்டார் என அவள் நினைக்கிறாள். அப்படி ஏமாற்றாமல் அனுப்பிவைத்தாலும், முஸ்லிம் என்று பொய்யைச் சொல்லி ஒரு முஸ்லிம் வீட்டிற்கு பணிப்பெண்ணாகப் போய் அவர்களின் மார்க்க முறைப்படி இப்பெண் நடக்காமல் விடும்போது அவர்கள் இவளை இலங்கைத் தூதரகத்திடம் ஒப்படைப்பார்கள்.

அந்த நாட்டில் இந்தப் பெண்ணிற்கு பொறுப்பான முகவர், மீண்டும் இன்னொரு வீட்டிற்கு அனுப்பிவைக்க முயற்சிப்பான். வெளிநாட்டில் பிரச்சினைக்குள்ளாகும் பணிப்பெண்கள் முகவர்களின் அடிமைகள் போல் தான் நடத்தப்படுவார்கள். முகவர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளா விட்டால் அவர்கள் கடுமையான இழிவான வார்த்தைப் பிரயோகங்களை இவர்கள் மேல் கொட்டுவார்கள். அதற்கு அஞ்சிய பெண்கள் மறு பேச்சின்றி முகவர்களுக்கு இணங்கி அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு போவார்கள். அந்த இடத்தில் வீட்டுக்காரி பெரும் கொடுமைக்காரியாக இருந்தாலும் பொறுத்துக்கொண்டு போகும்படி முகவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். தமது சொந்த நாட்டில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை நினைத்து, நாட்டிற்கு திருப்பி அனுப்பிவைக்கும்படி இந்தப் பெண்கள் கேட்கத் துணிவதில்லை. சித்திரவதைகளைத் தாங்கிக் கொள்ள முடியாதநிலையில் தற்கொலையை நாடுகிறார்கள் அல்லது ஏதுமற்று வெறுங் கையுடன் மீண்டும் நாட்டிற்கு வந்து சேர்கிறார்கள்.

மத்தியகிழக்கு நாடுகளுக்குப் புறப்பட்ட பெண்கள் கொழும்பில் முகவர்களினால் அலைக்கழிக்கப்படுவதும் அவமானப்படுத்தப்படுவதும் கொஞ்சநஞ்சமல்ல.
இதையெல்லாம் சந்தித்து மனதைத் திடப்படுத்திக்கொண்டு சவுதி, குவைத், ஜோர்டான், லெபனான் என்று அந்நிய நாடுகளில் அந்நிய மொழிகள், அந்நிய தேசத்தவர்களுடன் போராடி தமது வாழ்வை மீட்கத் துடிக்கும் பெண்கள் எத்தனைபேர். அந்த வீடுகளில் நேரகாலம் பாராது உழைத்து தம்பி, தங்கையர், பெற்றோர் அல்லது பிள்ளைகள் வாழ்க்கையை உயர்த்தவென்று பணத்தை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். தனது உறவினருடனோ பெற்றோருடனோ விட்டுச் சென்ற தனது குழந்தைகளை நன்றாக வளர்க்குமாறு கடிதம் எழுதுவார்கள். ஆனால் இங்கு அவளது குழந்தைகள் பெற்றோரின் நெருக்கமான உறவின்றி ஏக்கம் கொண்டு கல்வியிலும் மன வளர்ச்சியிலும் பின்தங்கி நிற்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் தாயின் அனுசரணையை அதிகம் எதிர்பார்ப்பவர்கள். தாய் இல்லாமலும் உறவினர்களின் கவனிப்பின்மையாலும் மன உளைச்சல் அடைந்த இந்தச் சிறு பராயத்தினர்; இலகுவில் புலிகளின் திட்டமிட்ட கவர்ச்சி வலையில் விழுந்துவிடுகிறார்கள்.

எந்த யுத்தம் அவளது தந்தையைப் பலியெடுத்து தாயையும் வெளிநாட்டுக்கு துரத்தியதோ அதே யுத்தம் அவளையும் பலியாக்க அழைத்துக் கொண்டபோது அந்தத் தாயின் முயற்சி அனைத்தும் வீணாகிறது. மகளின் துர்ப்பாக்கிய நிலை கேட்டு தனது தொழிலை விட்டு நாட்டிற்கே அந்தத் தாய் திரும்பி வந்து புலிகளின் முகாம்களுக்கு அலைந்து திரிகிறாள். மனித உரிமை இயக்கங்களை நாடுகிறாள். அங்கு அவளது வாழ்க்கையை மீட்பதற்கான எந்த வழிகாட்டலும் வழங்கப்படவில்லை. புலிகளின் முகாம்களில் ‘தேசிய விடுதலைக்காக மகளை அர்ப்பணம் செய்ய வேண்டியது ஒரு தமிழ்த்தாயின் கடமை’ என்றும் கடந்த காலங்களில் வாழ்ந்த வீரத்தாய்களின் அர்ப்பணங்கள் பற்றியும் அந்தத் தாய்க்கு உபதேசிக்கப்படுகிறது. அவர்களின் கதைகளை மறுத்து தனது வாழ்வின் எதிர்காலமே தன் பிள்ளை தான், பிள்ளையைத் திருப்பிக்கொடுங்கள் என்று வாதாடி நிற்கும்போது கடுமையான கண்டனத்தை அவள் எதிர்நோக்குகிறாள். எப்படியாவது மகளை மீட்டெடுத்துச் செல்வாளாயின் ஒரு துரோகியாகவே கணிக்கப்படும் அவலத்தில் தள்ளப்பட்ட அந்தப்பெண் யுத்தத்திற்குள் தான் விலங்கிடப்பட்டுவிட்டதை உணர்ந்துகொள்கிறாள். அதாவது போராளி அல்லது மாவீரர் குடும்ப அடையாளத்துடன் அரச படைகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி புலிகளின் பிரதேசத்திலேயே அடைக்கலம் தேடிக்கொள்கிறாள். இது அந்தப் பெண்ணுக்கு மாத்திரம் நேரிடுகிற அவலம் அல்ல, தமிழ்த் தாய்மார் அநேகர் இந்த அவலத்தில் அகப்பட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் போய் நிற்கிறார்கள்.

வன்னியில் இந்த நிலை என்றால் கிழக்கின் பின்தங்கிய கிராமங்களிலிருந்து கவர்ந்து செல்லப்பட்ட சிறு பெண் பிள்ளைகள், என்ன காரணத்திற்காக கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள் என்று அந்தத் தாய்மார் கேட்கிறார்கள். கிழக்கின் வெருகல் ஆற்றின் கரையில் 2004 ஏப்ரல் 29இல் 145 சிறுவர் சிறுமிகள் சிதைத்து சின்னாமாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். அந்த சிறுவர்களின் தாய்மார்களுக்கு முதலில் சொல்லப்பட்டது ‘மட்டக்களப்பு பிள்ளைகளை யாழ்ப்பாணத்தவன்கள் கொன்றுவிட்டான்கள்’ அவர்களது இயக்கத்தின் உள்ளேயே ஏற்பட்ட பிரச்சினையில் தான் கொல்லப்பட்டார்கள் என்பது பின்னர் அவர்களுக்குத் தெரிந்தது.

வன்னித் தலைமையால் அனுப்பப்பட்ட தமிழ்ப்படை வந்து, கிழக்கின் தலைமையின் கீழ் இருந்த தமிழ்ப்படைகளை அழித்திருக்கிறது. தலைமைகளுக்குள் நடந்த பிரச்சினைக்கு ஏன் இந்தப் பெண் சிறுமிகளை அவமானப்படுத்தினார்கள்? என்று அந்தத் தாய்மார் கேட்டார்கள். ‘யுத்தத்தில் இது சகஜம்’ என்ற பதில் தான் அவர்களுக்குக் கிடைத்தது. தமிழர் மானம் காக்கப் புறப்பட்டவர்களும் பெண்களை அவமானப்படுத்தியே தமது வெற்றியை நிலைநாட்டியுள்ளார்களா?

வருமானம் குறைந்த பெரும்பாலான குடும்பங்களில் பெண்களும் ஏதோவொரு வகையில் சிறு சிறு தொழில்களை செய்து வருமானத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அதன் மூலமே பெரும்பாலும் தமது பிள்ளைகளின் கல்விக்கான மேலதிக செலவைச் சமாளித்துக்கொண்டிருந்தார்கள். யுத்தத்தினால் அந்தப் பெண்களின் நடமாட்டம் பயத்தின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டு அவர்கள் அந்த சிறு வருமானத்தையும் இழந்தார்கள்.

அடுத்ததாக அகதி முகாம்களில் பெண்கள் படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளது. தொழிலை இழந்த ஆண்கள் அல்லது ஆண் துணையே இல்லாத குடும்பங்கள் பெரும்பாலும் அகதிமுகாம்களில் நிவாரண உதவிகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள பெண்களே தமது குடும்ப சுமையை முற்று முழுதாகத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அகதி முகாம் வாழ்க்கையில் பெண் ஒருவர் இப்படிச் சொல்கிறார், தனது குடும்பம் கணவன், 3 பிள்ளைகள், கணவனின் தாய், தாயின் தங்கை, கணவனின் தந்தை என்ற 8 பேரைக் கொண்டிருக்கிறது. இடம்பெயர்ந்து அகதிமுகாமுக்கு வருவதற்கு முன்னர் நாம் ஒரு சிறு கடையை எமது வீட்டிற்கு அருகாமையிலேயே நடத்தி வந்தோம். அந்தக் கடையின் வருமானம் எமது குடும்பத்திற்கு சாதாரண நிலையில் போதுமானதாக இருந்தது. 6 வருடங்களுக்கு முன்னர் அந்த நிலை மாறத் தொடங்கியது, யுத்த ஓய்வு, யுத்தம் மாறி மாறி வந்து, கட்டுப்பாடற்ற பிரதேசத்திலிருந்து பொருட்களைக் கொண்டுவருவதற்கு சோதனைகளும் போக்குவரத்துச் செலவுகளும் அதிகமாகி யுத்தத்திற்கான கட்டாய வரிப்பணமும் நாம் செலுத்த வேண்டியேற்பட்டது. வரிப்பணத்தை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தில் கடையிலுள்ள முதலீட்டை எடுக்கத் தொடங்கி கடைசியில் அந்தக் கடையையும் மூடியவுடன் இடம்பெயர்ந்து வந்துவிட்டோம். இங்குள்ள இட நெருக்கடியை சமாளித்து வயதான மாமா, மாமியைக் கவனிப்பது முதல் பிள்ளைகள் தீயவர்களிடம் அகப்படாமல் கண்காணிப்பது, அவர்களைக் கல்வி கற்கத் தூண்டுவது வரை எல்லாவற்றையும் நானே கவனித்துக் கொள்கிறேன். எனது கணவர் வருமானம் அற்ற நிலையில் மனம் உடைந்தவராகக் காணப்படுகிறார். பொறுப்பு முழுவதையும் எனது தலையில் போட்டுவிட்டு அவர் ஒரு மூலையில் படுத்துறங்குவார். அவரைப் போல் என்னால் ஓய்வெடுக்கக் கூட முடியாது. அகதி முகாமின் வசதிகள் பற்றித் தெரிந்தது தானே, அந்த நெருக்கடிக்குள் உடைகளைத் துவைப்பதோ குளிப்பதோ சமையல் செய்வதோ எல்லாவற்றிற்கும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்து சமாளிக்க வேண்டியுள்ளது. யுத்தம் கொடுத்த இந்த அவல வாழ்க்கையிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் அகதி முகாம்களில் பெண்கள் காத்திருக்கிறார்கள்.