All posts by inioru admin

தீவிரமடைந்துள்ள தேசியக்கொடிப் பிரச்சனை – சர்வேஸ்வரனுகு மறைமுக அச்சுறுத்தல் விடுத்தார் கூரே!

கடந்த வாரம் வவுனியா மாவட்டத்திலமைந்துள்ள பரக்கும்பா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக் கொடி ஏற்றாமை தொடர்பில் பலத்த விமர்சனங்களை வெளியிட்டு வரும் சிங்கள இனவாத அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் போன்றவர்கள் உட்பட வடமாகாண ஆளுநரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையானது ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு நாடாகும். இவ்வாறான ஜனநாயக நாட்டில் தேசியக் கொடியை ஏற்றாமல் விடுவதற்கு கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு முழு உரிமையும் உண்டு. இருந்தாலும், (இலங்கை ஒரு சோசலிச நாடு எனக் கூறிக்கொள்ளும் சிங்கள ஏகாதிபத்திய அரசாங்கம் இங்கு வாழும் பிற இனங்களை விலங்குகளைப்போல் வேட்டையாடி வந்தநிலையில் தற்போது,, அவ்வினங்களை அடக்கி ஒடுக்கி, அவர்களின் உழைப்பையும் சுரண்டி உல்லாச ஆட்சி செய்துவருகின்றமை கண்கூடு.

ஆனால், சிங்கள இனவாதிகள் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் சிறிலங்கா அரசியலமைப்பை மீறிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கருத்துக்களை வெளியிட்டுவரும்நிலையில், அதற்கேற்றாற்போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் சர்வேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கொதித்தெழுந்துள்ளார்.

மேலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட சர்வேஸ்வரன் தேசியக் கொடி ஏற்றாதது தவறு எனத் தெரிவித்தமையும் வேடிக்கையானதே.

இவை இவ்வாறிருக்க, வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, சர்வேஸ்வரன் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதுடன், இதனால் சர்வேஸ்வரன்மீது எடுக்கப்படும் நடவடிக்கையானது பாரதூரமாக இருக்கும் எனவும் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

பனை, தென்னைகளில் கள்ளுச் சீவ வரி, ஆனால் கித்துளுக்கு வரிவிலக்கு; தமிழ் மக்களின் தலையில் விழுந்த அடுத்த இடி!

அண்மையில், கித்துளைத் தவிர பனை, தென்னை மரங்களில் கள்ளுச் சீவத் தடை விதித்து சிறிலங்கா அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற விவாதத்தின்போது இந்தப் பிரச்சனையை எடுத்துரைத்தபோது, ‘பனை, தென்னைகளில் கள்ளுச் சீவலாம், ஆனால் அதற்கு வரி செலுத்தவேண்டும்’ என அரசாங்கம் அறிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

வடக்குக் கிழக்கு மாகாணங்களே அதிகளவான பனை மற்றும் தென்னை வளங்களை க் கொண்ட மாகாணங்களாகத் திகழ்கின்றன. வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களே பனை,தென்னைகளில் கள்ளுச் சீவி வருகின்றனர்.

இம்மக்கள் கள்ளுச்சீவி வரும் வருமானத்திலேயே தமது அன்றாட வாழ்வைக் கழித்துவரும் நிலையில், மைத்திரி – ரணில் அரசானது, அதற்கு வரி அறவிட்டுள்ளது.

இந்நிலையில், தென்பகுதியிலேயே கித்துள் எனப்படும் பனை இனங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

பனை, தென்னையில் கள்ளெடுப்பவர்களுக்கு வரி விதிக்கும் அரசாங்கம், எவ்வாறு கித்துளில் கள்ளெடுக்கும் தொழிலாளிகளுக்கு வரி விதிக்காதிருக்கமுடியும்.

இவ்வாறு  சிறிய விடயங்களுக்கே  மக்களின் தொழில்களில் இனப்பாகுபாடு காட்டும் சிங்கள இனவாத அரசாங்கம், எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கமுடியும்.

இவற்றினைத் தட்டிக்கேட்காத தமிழ்த் தலைமைகள் இனவாத அரசுடன் இணைந்து தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் சலுகைகளைப் பெறுகின்றனரே தவிர வேறெதனையும் செய்யவில்லையென்பது வெளிப்படை.

மக்களுக்காக தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வுக்காய் போராட, துயிலுமில்லம் அமைக்க 40 இலட்சம் உவந்தளித்து அடுத்த தேர்தலைக் குறிவைக்கும் சிறிதரன்!

தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையிலிருந்து விடுபடவேண்டுமென்பதற்காக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர், அப்போராட்டத்தில் அங்கவீனமடைந்த மக்கள் மற்றும் போராளிகள் இன்று ஒரு வேளை உணவுக்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையில், கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை புனரமைப்புச் செய்வதற்காக 40 இலட்சத்தை வழங்கியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

இந்நிதியானது குறித்தொதுக்கப்பட்ட பன்முகப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது எனவும், கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் பழைய நிலையில் உள்ளபடியே மீண்டும் புதுப்பிக்கப்படும் எனவும் சிறிதரன் உறுதியளித்துள்ளார்.

கடந்த மாவீரர் தினத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இரண்டு இலட்சம் ரூபா லஞ்சம் கொடுத்து விளக்கேற்றினார் என அவரது கட்சியைச் சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும், அவரது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகாக்களும் மக்கள் மீது வாழ்க்கைச் சுமையை ஏற்றியுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து இரண்டு கோடியை (இந்நிதியானது ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற இரகசிய உடன்பாட்டின்படி ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், விடயம் மக்களுக்குத் தெரியவரும் நிலையிலேயே இந்நிதி அபிவிருத்திக்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டiதும் குறிப்பிடத்தக்கது) இலஞ்சமாகப் பெற்றுள்ளனர்.

அந்நிதியை, எதிர்வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலைக் குறிவைப்பதற்கும், மக்களின் மனதில் தன்னைப் பற்றிய நல்லபிப்பிராயம் உருவாகவேண்டுமென்பதற்காக, விடுதலைக்காக, தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த வீரர்களின் துயிலுமில்லத்தை தனது அரசியல் இலாபத்துக்காக துஷ்பிரயோகம் செய்வதை எந்தவொரு சமூகப்பற்றுள்ளவர்களால்  ஏற்றுக்கொள்ளமுடியாது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து, எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களே வறுமையில் முன்னணியில் உள்ளதுடன், யுத்தத்தினால் அங்கவீனமடைந்தவர்கள், விதவைகள் என தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப  போராடிக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றி துளியளவும் நினைக்காத சிறிதரன்  போன்ற வாக்குப் பொறுக்கும் அரசியல் வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்.

மக்களின் உரிமைக்கான போராட்டமும் அதன் வழிவந்த இழப்புக்களும் தியாகங்களும் வாக்கு வங்கி அரசியலின் கருவியாகப் பயன்படுத்தப்படும் அவமானகரமான இன்றைய சூழல் மக்கள் சார்ந்த அரசியலால் பிரதியடப்பட வேண்டும்.

ஒலுவிலிருந்து – பொத்துவில் வரையான நிலப்பரப்பை அபகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம்!

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசத்தினை இல்மனைற் கனியவள அகழ்விற்காக கையகப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட குழுவொன்று நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஒலுவிலிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பானது கனியவளம் கூடிய பிரதேசமாகவும் இயற்கை வளம் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது.

குறிப்பாக, ஒலுவில் கடற்கரைப் பிரதேசமானது ஏற்கனவே மோசமான கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வருட முற்பகுதியில் மக்களின் வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்கள் பாரிய அழிவைச் சந்தித்திருந்தனர்.

இதனையடுத்து, அங்கிருந்த மீன்பிடித்துறைமுகத்தை மூடி தடுப்பணை அமைக்கப்பட்டதுடன் அக்கடற்கரைப் பிரதேசத்தினை கடற்படையினர் அபகரித்திருந்தனர்.

இந்நிலையிலேயே, தற்போது ஒலுவிலிலிருந்து பொத்துவில் வரையான கனியவளங்களை அதிகளவில் கொண்டுள்ள கடற்கரைப் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதற்கான ரி.ஐ.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எடுத்துரைத்தபோது, இது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்படும் திட்டமெனவும், இதனால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படின் அதனை அவர் கருத்திலெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மோசமான கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள சிறிலங்கா அரசாங்கமானது, அதிலிருந்து மீள்வதற்காக நாட்டிலுள்ள வளங்களைச் சுரண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே புல்மோட்டையிலிருந்து இல்மனைற் கனியவளமானது யப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலேயே, தற்போது ஒலுவிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால், இங்கு வாழும் தமிழ், முஸ்லிம் சமூகமானது அவர்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு, மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவதுடன், அவர்களது இருப்பே கேள்விக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு, சிறிலங்கா அரசாங்கம், இயற்கை வளங்கள் நிறைந்த தமிழர் பிரதேசங்களை அபகரித்து வருவதுடன், தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் நிலையை உருவாக்கி வருகின்றது என்பதுடன், இதனை தமிழ் மக்கள் உணரும் நிலைவரும்போது அனைத்து வளங்களும் சூறையாடப்பட்டு, தமிழ்மக்கள் சிங்கள அரசிடம் கையேந்தும் நிலை உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காணாமலாக்கப்பட்ட உறவுகளை நினைத்து மரங்களை நாட்டுமாறு செஞ்சிலுவைச் சங்கம் அறிவுறுத்தல்!

மனிதாபிமானம், பாரபட்சமின்மை, நடுநிலமை, சுதந்திரத்தன்மை, தொண்டுபுரிதல், ஒற்றுமை, பரந்த வியாபகம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கூறிக்கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்கா அரசாங்கத்தினால் கடத்தி காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் முகமாக ‘காணாமலாக்கப்பட்ட உறவுகளை நினைத்து மரங்களை நாட்டுங்கள்’ என அறிவுறுத்தல் வழங்கி வருகின்றமை  மக்கள் மத்தியில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது 1863ஆம் ஆண்டு ஹென்றி டியூனானட் என்பவரால் போர்க்களத்தில் காயமடையும் இராணுவ வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் முகமாக உருவாக்கப்பட்டிருப்பினும், இவ்வமைப்பானது யுத்தம் நடைபெற்று வரும் பல நாடுகளில் பொதுமக்களுக்கு தொண்டு புரிந்ததனூடாக புலனாய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தமைக்கான ஆதாரங்களும் பலவுண்டு.

அந்தவகையில், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்திலும் பல தொண்டுப் பணிகளை ஆற்றிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் பல்வேறு தகவல்களைத் திரட்டியிருந்ததுடன், பதிவுகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  குறித்த தொண்டு அமைப்பானது, முதலில் மேற்கொண்ட பதிவுகளை விடுத்து மீண்டும் ,  மீண்டும் எதற்காக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்ற கேள்வியும் மக்கள் மனதில் தொக்கி நிற்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களின் மனதை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய குறித்த அமைப்பானது,  நொந்துபோயுள்ள உறவுகளை நோக்கி கடத்தப்பட்டவர்களை நினைத்து மரங்களை நாட்டுங்கள் எனக் கூறுவது பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்களது போராட்டத்தையும் கேலிக்குள்ளாக்கும் செயலாகும்.

தீர்வைப் பெற்றுத் தரும் என மக்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு தொண்டு அமைப்பு, பாதிக்கப்பட்டவர்களிடம் மீண்டும் மீண்டும் விபரங்களைத் திரட்டி என்ன செய்யப்போகின்றது? குறித்த அமைப்பும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றதா என்ற சந்தேகத்தையும் மக்கள் மத்தியில்  தோற்றுவித்துள்ளது.

 

 

கிளிநொச்சியில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் சிறிதரன்!

கிளிநொச்சி மாவட்டத்தை தனது சர்வாதிகாரப் பிடிக்குள் வைத்திருக்கும், வைப்பதற்கு முயன்றுகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக வேறு எவரையும் அழைக்கக்கூடாது என்பதில் விடாப்பிடியாக உள்ளதுடன், அவ்வாறு வேறு நபர்கள் அழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் தனது அடியாட்களைக் கொண்டு மிரட்டியோ, பணத்தினை வழங்கியோ, அச்சுறுத்தியோ தனது காரியங்களைச் சாதித்து வருகின்றார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த திங்கட்கிழமை இரண்டு வருடங்களாகப் புனரமைப்புச் செய்யப்பட்டு, கிளிநொச்சி விவசாயிகளின் காலபோக பயிர்ச்செய்கைக்காக இரணைமடுக்குளம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் நடைபெற்றாலும், இந்நிகழ்விற்கு வடமாகாண விவசாய அமைச்சர் வரவழைக்கப்படவில்லை.

மாறாக இந்நிகழ்வில், சிறிதரன், குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.

விவசாய அமைச்சர் கலந்துகொள்ளாமை தொடர்பாக இரணைமடு கமக்கார அமைப்பின் தலைவராக இருக்கும் சிவமோகன், ‘இந்நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சரையோ, புளொட் அமைப்பைச் சேர்ந்த விவசாய அமைச்சரான சிவனேசனையோ அழைத்தால் சிறிதரன் குழம்புவார் என்ற காரணத்தினாலேயே அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லையெனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்கனவே கிளிநொச்சியில் உள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற வைரவிழாவிற்கு வடமாகாண கல்வி அமைச்சர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு அழைப்பிதழ் வெளியாகிய நிலையில் அதிபரை மிரட்டியதுடன் ரணில் விக்கிரமசிங்கவுடன் கதைத்து பாடசாலைக்கு கட்டடம் ஒன்று கட்டித் தருவதற்கு ஒழுங்கு செய்து தருவதாகவும் கூறி தன்னையே பிரதம விருந்தினராக அழைக்கவேண்டுமெனவும் அச்சுறுத்தியிருந்தார் என்பதுடன் அந்நிகழ்வில் தானே பிரதம அதிதியாகவும் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட மக்களை முட்டாளாக்கும் சிறிதரன் போன்றவர்கள் வெகு விரைவில் மக்களால் ஓரங்கட்டப்படும் காலம் வெகு தொலைவில் இல்லையென்பதுடன், மக்களுக்குச் சேவையாற்ற நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிறிதரன் போன்றவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாகவே செயற்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

தொண்டமனாறு கடற்கரையில் இந்தியாவின் மருத்துவக் கழிவுகள் – மௌனம் சாதிக்கும் தமிழ் தலைமைகள்!

யாழ்ப்பாணம், தொண்டமனாறு அக்கரைப் பகுதி மற்றும் வளலாய் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்திய முகவரி பொறிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் கரையொதுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், வடமாகாணசபையோ, சுற்றுச்சூழல் அமைச்சோ வாய்திறக்காது மௌனம் காத்து வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை உண்டுபண்ணியுள்ளது.

கடந்த புதன் கிழமையிலிருந்து மருத்துவக் கழிவுகள், கண்ணாடிப் போத்தல்கள், ஊசி மருந்தேற்றும் சிறிஞ்சுகள், மதுபானப் போத்தல்கள், பாக்கு வகைகள் உட்பட பெருமளவான பொருட்கள் கரையொதுங்கி வருவதுடன், மீனவர்களின் வலைகளிலும் அகப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக இதுவரை வடமாகாணசபையோ, சுற்றுச்சூழல் அமைச்சோ எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவரவில்லை.

யாழ். நகரிலுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான சரியான முகாமைத்துவம் இல்லாத நிலையில் உள்ள வடமாகாண சபையினால் இப்பிரச்சனையை எவ்வாறு கையாளமுடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அத்துடன், வடமாகாண மக்களுக்கு உதவுவதற்கே யாழில் இந்தியத் துணைத் தூதரகம் அமைக்கப்பட்டுள்ளதாக பல மேடைகளில் முழங்கிவரும் இந்தியத் துணைத் தூதர் நடராஜன்  இது தொடர்பாக கள்ள மௌனம் காத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடந்தமை தொடர்பான சிக்கலில் எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனத்தை காப்பாற்றிய வட மாகாண சபையிடம் மற்றொரு மாசடைதலுக்கான பதிலை எதிர்பார்க்க முடியாது என்பது வெளிப்படை.

2 கோடிக்காக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அவர்களது அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக இரண்டு கோடி வீதம் ஒதுக்கீடு செய்வதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனைத் தவிர்த்து ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை ஆதரிப்பதா? அல்லது நிராகரிப்பதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குறித்த வரவு செலவுத் திட்டத்தினை நிராகரிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்குள் தனது அதிகார பலத்தைப் பிரயோகிக்கும் தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கும், ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்குமிடையில் நடைபெற்ற இரகசிய சந்திப்பினையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சி உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கு இரண்டு கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

இதில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றம் தொடர்பில் இரா.சம்பந்தனுடன் முரண்பட்டமை காரணமாக அவருக்கு இந்நிதி வழங்கப்படவில்லை.

இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் தமிழரசுக்கட்சிக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், தாம் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லையென முடிவெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அபிவிருத்திக்கென இரண்டு கோடி ரூபா நிதி அவர்கள் அங்கம் வகிக்கும் மாவட்டச் செயலகங்களினூடாக அனுப்பிவைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.

அபிவிருத்திக்காக இந்நிதி ஒதுக்கப்படுவதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தாலும், இந்நிதியானது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்டதேவைக்கேயன்றி, அபிவிருத்திக்கல்ல எனவும் தெரியவந்துள்ளது.

விதிவிலக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததுடன், இந்நிதியைப் பெற்றுக்கொள்ளவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் ஆளுமைக்கு உட்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனால் பாதுகாக்கப்படும் தமிழ் சிங்கள அதிகார வர்க்கமும், இலங்கை அரசோடும் அதன் பேரினவாத அதிகார வர்க்கத்தோடும் வரலாறு முழுவதும் சமரசம் செய்வதையே தனது கடமையாகக் கொண்டு செயற்படுகின்றது. இன்று புதிய மக்கள் எழுச்சிக்கான அவசியத் தேவை ஒன்றும், வாக்குக் கட்சிகளை நிராகரித்து புதிய அரசியலை முன்வைக்கும் அவசியம் ஒன்றும் மக்களால் உணரப்படுகின்றன.