All posts by இனியொரு...

இழஞ்செழியனை நோக்கிய துப்பாக்கியின் பின்னால் விஜகலா மகேஸ்வரன்?

இலங்கை இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களை மீட்பதற்கு முயற்சிசெய்யும் காணொளியும் ஏனைய ஆதாரங்களும் பல்வேறு கேள்விகளை உருவாக்கியுள்ளன. விஜயகலா மகேஸ்வரனுக்கு பெருந்தொகைப் பணம் சுவிஸ் குமார் உட்பட்ட சந்தேக நபர்கள் ஊடாகப் பரிமாறப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புக்கள் நிராகரிப்பதற்கு இல்லை.

தவிர நீதிபதி இளஞ்செழியன் மீதான மெய்ப்பாதுகாவலர் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணி தொடர்பான சந்தேகங்களும் எழுந்துள்ளன. சந்தேக நபர்களைக் காப்பாற்ற முற்பட்ட போலிஸ் அதிகாரிக்கும் விஜயகலாவிற்கும் இடையேயான உரையாடல்கள் என்பன முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

இவ் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தும் நிலையிலேயே இழஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கொலை முயற்சியெனத் தெரிவிக்கப்பட்ட போதும், பின்னதாக குடி போதையிலிருந்த இருவரின் தற்செயலான செயற்பாடே துப்பாக்கிச் சூடு என அறிக்கப்பட்டது.

ஆக, இழஞ்செழியனை மிரட்ட அல்லது கொலைசெய்யவே இத் துப்பாக்கிச் சூட்டை விஜயகலா பின்னணியிலிருந்து இயக்கியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் பரவலாக எழுகின்ற போதும் அவை உறுதிப்படுத்தப்படவில்ல.

போரின் அனுபவங்களும், கற்றலும் புதிய அறிவியல் சமூகம் ஒன்றையும், புதிய போராட்ட வழிமுறைகளையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஊழலும், வன்மமும் நிறைந்த சமூகச் சூழல் தோன்றியுள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்து திணிக்கப்படும் பிந்தங்கிய அரசியல் சிந்தனையும், வாக்கு வங்கியை முன்வைத்து நடத்தப்படும் அரசியலும், பேரினவாத ஒடுக்குமுறையும், பொருளாதாரச் சுமையும் நிறைந்த ஒரு சமூகத்தின் அவலங்களைப் பயன்படுத்திக்கொள்ள விஜயகலா மட்டுமல்ல, இன்றைய ஒவ்வொரு அரசியல் தலைமைகளும் இடைவிடாது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தமிழீழக் கனவான்களது ஆசியுடன் பேரினவாதத்தின் நிலப்பறிப்பு: பறிபோகும் மட்டக்களப்பு

கிழக்கு மாகாணத்தில் கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் போது நடைபெற்ற நிலப்பறிப்புக்களே 1956 ஆம் ஆண்டு தமிழ்ப் பேசும் மக்கள் மீதான படுகொலைகளுக்கு வழிவகுத்தது. கல்லோயா குடியேற்றத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டதன் மறுபுறத்தில் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையும் வலுவடைந்து ஆயுதப் போராட்ட இயக்கங்களைத் தோற்றுவித்தது. நிலப்பறிப்பு இன்றும் தொடர்கிறது.

வெறுமனே தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராத புதிய வடிவில் தொடர்கின்றது. ‘சர்வதேசம்’ என்று புலம்பெயர் மற்றும் தமிழ் வாக்குப் பொறுக்கி அரசியல்வாதிகள் அழைத்துக்கொள்ளும் உலகின் பயங்கரவாத அதிகாரவர்க்கங்களது நலன்களை நோக்கமாகக்கொண்டும் அதே நிலப்பறிப்புத் தொடர்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தி; 1300 ஏக்கர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு ஐரோப்பிய, அமெரிக்க பல்தேசிய வர்த்தக நிறுவனங்களில் சுரண்டலுக்காக கையளிக்கப்படவுள்ளது.

சுற்றுலாத் துறைக்குக்காகச் சுவீகரிக்கப்படும் இந்த நிலப்பரப்பில் அரச நிலம் மட்டுமல்ல தனியார் நிலமும் அடங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்புக் கடற்கரைப் பகுதியிலிருந்து 500 தொடக்கம் 100 மீட்டர் பகுதியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த நிலப்பறிப்பு மக்கள் குடியிருப்புக்களை ஊடறுத்துச் செல்கின்றது.

வரலாறு தெரிந்த காலம் முழுவதும் அங்கு வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் வெளியேற்றப்பட சுற்றுலா விடுதிகளும், களியாட்ட விடுதிகளும், மதுபான சாலைகளும் என மாபெரும் கலாச்சாரச் சிதைப்பும் இங்கு நடைபெறுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன.

நிலப்பறிப்பு மட்டுமல்ல கலாச்சாரச் சிதைப்பையும் பேரினவாத இலங்கை அரசு பல்தேசிய வர்த்தக் நிறுவனங்களின் துணையோடு பாரிய அளவில் நடத்த ஆரம்பித்துவிட்டது. சுன்னாகத்தில் இலங்கை அரசு, வடமாகணத்தின் ‘தேசியத் தலைவர்’ சீ.வீ.விக்னேஸ்வரன், ஐங்கரநேசன் ஆகியோரால் நடத்தப்பட்ட சுன்னாகம் அழிவு குறித்து இன்றுவரை தமிழீழக் கனவான்கள் வாய் திறக்கவில்லை. மட்டக்களப்பின் நிலப்பறிப்பும் தமிழீழக் கனவான்களது ஆசியுடனேயே நடைபெறும்.

மாகாணசபைக்கான தேர்தலுக்குத் தயாராகும் வாக்குப் பொறுக்கிகள்

 சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படுகின்ற உலகின் அதி பயங்கர அதிகார வர்க்கத்தின் கூட்டு எதை விரும்புகிறதோ அதை இலங்கையில் செயற்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அடிமைகள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியால் தலைமை தாங்கப்படும் அதன் அரசியலும் .

தமிழரசுக் கட்சியின் மேட்டுக்குடி ஏகாதிபத்தியங்கள் சார்ந்த அரசியலுக்கும் இலங்கை அரசின் அரசியலுக்கும் அடிப்படையில் எந்த முரண்பாடும் கிடையாது.

‘சிங்களவனின் தோலில் செருப்புத் தைப்போம்’ என்று மேடை மேடையாக முழங்கிவிட்டு பேரினவாத அரசியல் யாப்பையே வரைந்துகொடுத்த அரசியல் வரலாற்றையே அறுபது வருடங்களாக நாம் அனுபவித்து வருகிறோம். அதற்கெல்லாம் இந்த மேட்டுக்குடிகள் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அது தான் அரசியல் சாணக்கியம் என்பது.

இன்று மக்கள் மீண்டும் தேர்தல் அரசியலை நோக்கி அழைத்துவரப்பட அதனை மையமாக முன்வைத்து வாக்குப் பொறுக்கக் காத்திருக்கும் வல்லூறுகள், இதுவரைகால இழப்பையும், தியாகங்களையும் இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டன.

இலங்கை அரசு அனைத்து மாகாணங்களுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்க, அதிகாரக் கனவுகளோடு காத்திருந்த வாக்குப்பொறுக்கிகள் தம்மைத் தயார்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

40 வருட காலப் போராட்டத்தின் விளைபலன் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவது மட்டுமே என்ற எல்லைக்குள் அனைத்தும் குறுக்கப்பட்டுவிட்டன.

போராட்டம் சர்வதேச மயப்பட்டுவிட்டதாக புலம்பெயர் புலிகளும் அவர்களின் உள்ளூர் முகவர்களும் மார்தட்டிக்கொள்ள, வட கிழக்கின் வழங்கள் சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் சுரண்டலுக்குத் தயார்படுத்தப்பட்டுவிட்டன.

போராடத்தின் தோல்விக்கான காரணத்தைக் கூட ஆராய்ந்து பார்க்க மறுக்கும் புலம் பெயர் தேசங்களிலிருந்கு கட்டமைக்கப்படும் மூடிய சமூகம், போராடினால் சர்வதேசம் அழித்துவிடும் என்ற மாயைக்குள் மக்களை அமிழ்த்தி வைத்திருக்கிறது.

எஞ்சியிருக்கும் மக்களின் போர்குணத்தை துடைத்தெறிந்து தேர்தலும் வாக்குப் பொறுக்குதலுமே கதியென தமிழரசுக் கட்சியின் பிழைப்புவாத வழிமுறையை இன்று மொத்த சமூகமுமே ஏற்றுகொள்ளும் ஆபத்தான நிலை தோற்றம் பெற்றுள்ளது.

ஈழத்தில் ஜாக்சன் துரை…

தற்கால ஜாக்சன் துரை சுவாமிநாதனும் வீரபாண்டிய ஈழத் தமிழனும் சந்தித்தால் எப்படி பேசியிருப்பார்கள்? (disclaimer : இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது மற்றப்படி எந்த ஒரு தனிநபரையும் சுட்டிக் காட்டாது, யாவும் கற்பனை )

காட்சி: தமிழர்களின் நிலங்களை விடுவிப்பதற்கு படையினருக்கு பணம் செலுத்துவது தொடர்பாக ஜாக்சன் துரையும், வீரபாண்டியனும் காரசாரமாக வார்த்தை மோதல் வசனங்கள்

கதாபாத்திரங்கள்: வீரபாண்டிய ஈழத் தமிழன் , ஜாக்சன் துரை சுவாமிநாதன்

இடம்: கோப்பாபிலவு மற்றும் தமிழருக்கு சொந்தமான விடுவிக்கப்படாத நிலங்கள்

ஜாக்சன் துரை: ம், நீர் தான் வீரபாண்டிய ஈழத்தமிழனோ ?
வீரபாண்டிய ஈழத் தமிழன்: நீர் தான் ஜாக்சன் துரை சுவாமிநாதன் என்பவரோ?
ஜாக்சன் துரை: ஏது, வெகுதூரம் வந்துவிட்டீர்?
வீரபாண்டிய ஈழத் தமிழன் : நான் எனது சொந்த மண்ணில் பிறந்து வளர்ந்த நிலத்தில் தான் நிற்கிறேன். நீர் தான் அரசியல் இலாபம் கருதி இங்கு வந்து எமது ஆதரவை விரும்பி அழைத்ததாக அறிகிறேன்.

ஜாக்சன் துரை: உமது ஆதரவு வேண்டும், ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உம்மிடம்.
வீரபாண்டியன் : கற்றுக்கொடுக்கும் இனம் தமிழ் இனம். நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்.
ஜாக்சன் துரை: படையினருடன் நாட்டுரிமை பெற்றிருப்பது நாங்கள். நீயாக ஏன் ஆதரவு தேடி காண வரவில்லை?
வீரபாண்டியன்: ஹா…! ஹா…! ஆதரவு கொடுப்பவர் நாங்கள். இல்லாவிட்டால் நீ அமைச்சராக இந்த நாட்டுக்குள்ளே நுழைந்திருக்க முடியாது.
ஜாக்சன் துரை: இறுமாப்பு இன்னும் ஒழியவில்லை உன்னிடம்.
வீரபாண்டியன்: எல்லாம் உடன்பிறந்தவை, ஒழியாது.
ஜாக்சன் துரை: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.
வீரபாண்டியன்: என்னவென்று?
ஜாக்சன் துரை: எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது.
வீரபாண்டியன்: எண்ணிக்கை தெரியாத குற்றம்.
ஜாக்சன் துரை: எனக்கா எண்ணிக்கை தெரியாது? அகம் பிடித்தவனே, சொல்கிறேன் கேள். உன் நிலத்தில் படையினர் செய்து விளையும் விளைச்சலுக்கு நீ கிஸ்தி கொடுக்கவில்லை. உன் நிலத்தை திருப்பி தருவதற்கு திறைப்பணம் செலுத்தவில்லை. வெகுகாலமாக வரிப்பணம் வந்து சேரவில்லை. இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை.

வீரபாண்டியன்: ஹா ஹா ஹா ஹா. கிஸ்தி, திறை, வரி, வட்டி. வானம் பொழிகிறது, எமது பூமி விளைகிறது, அதை திருப்பி எடுப்பது எங்களது உரிமை. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு ஷெல்லடி நடக்கும் போது உயிருக்கு அஞ்சி ஓடினாயா? அல்லது வருடக் கணக்கில் எந்தக் குற்றமும் புரியாது அகதி முகாமிலும் சிறையிலும் எங்களோடு அடைபட்டு கிடந்தாயா ? உணவுத் தடையினால் ஆயிரக் கணக்கில் நாங்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தபோது எங்களுக்கு ஒரு கவளம் சோறு தந்தாயா ? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்க்குக் கேட்கிறாய் பணம் , யாரைக் கேட்கிறாய் வரி? இதுவரை காலம் எமது நிலத்தில் விளைந்த விளைச்சலை அடாத்தாக எடுத்த கயவர்களை கேள் நீதிக்காக அதை திருப்பி தருமாறு. வீட்டையும் நிலத்தையும் பறிகொடுத்து வாழ வருமானமும் இன்றி தவிக்கிறோம். நியாயமாக கேள் எமக்கு நட்டஈடு வழங்குமாறு . சட்டம் படித்து தொழில் செய்யும் உனக்கு தெரியாததா உண்மையான நீதி எதுவென்று ? எதற்கு இந்த மானம் கெட்ட அரசியல் நாடகம் ? வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து வருவோம் ஜாக்கிரதை.

ஜாக்சன் துரை: Shut up. அதிகார முத்திரையிட்டு உன்னை பணத்தை செலுத்தி நிலத்தை பெற்றுக் கொள்ள கையோடு அழைத்து வர ஆள் அனுப்பினேனே?

வீரபாண்டியன்: அப்படியா? ஹா…ஹா…ஹா…ஹா… பலே, நீ அனுப்பிய ஆள் மிகவும் புத்திசாலி. என்னை அழைத்து வரும் நோக்கத்தோடு எவனும் தலைகாட்டியதில்லை இந்தப்பக்கம். எங்களுடைய பெருமை தெரிந்தவன் அவன். ஆனால், இது போன்ற ஒரு ஈனச் செயலை செய்ய இதுவரை எவனுக்கும் துணிவு பிறந்ததில்லை. எமது நிலத்துக்கே நாம் பணம் செலுத்தவேண்டும் என்று என் முன்னே கூறிய உன்னை, இனியும் விட்டுவைப்பது என் குற்றம். துடிக்கிறது மீசை, அடக்கு, அடக்கு என்று எமது ஆதரவை நாடி வந்த உறவு முறை தடுக்கிறது.

ஜாக்சன் துரை: என்ன? மீசையை முறுக்குகிறாயா? அது ஆபத்தின் அறிகுறி. உன்னை சிறைபிடிக்க உத்தரவிடுகிறேன்.
வீரபாண்டியன்: என்ன? வரச்சொல் பார்க்கலாம். ஆ..! மானம் அழிந்துவிடவில்லையடா மறத்தமிழனுக்கு. வீடு இல்லாமல் திறந்த சிறையில் தானே வைத்திருந்தாய் எங்களை . பொருத்து வீடு தருகிறோம் என்று இன்னொரு நாடகம் ஆடினாய். எங்கள் மடியிலே கை வைத்த உன் தலை அடுத்த தேர்தலில் உருண்டு போகட்டும்…!

ஆக்கம்: வைத்திய நிபுணர், வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கத்தைக் கொண்டாடும் புலம்பெயர் அமைப்புக்கள்

இராணுவத் தாக்குதல்களில் ஈடுபடாத காரணத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. எதுஎவ்வாறாயினும் அந்த இயக்கம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இயக்கமாகவே கருதப்படும் என தீர்ப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சி என்ற தோற்றப்பாட்டைக் காட்டிக்கொள்ளும் பல அமைப்புக்கள் இத்தடை நீக்கம் பெரும் வெற்றியாகக் கொண்டாட ஆரம்பித்துள்ளன.

தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் தலைவிதியைத் தொலைவிலிருந்து இயக்க முற்படும் பெரும்பாலானஅமைப்புக்கள இலங்கை அரசின் பேரினவாவத ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட நகர்த்தியதில்லை. மாறாக தமது சொந்த வர்த்தக நலன்களுக்காக விடுதலைப் புலிகளின் அடையாளத்தைப் பயன்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழ் பாராளுமன்ற அரசியல்வாதிகளாலும், இலங்கைப் பேரினவாத அரசியலாலும், சிறுகச் சிறுக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்ப் பேசும் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்வதற்கு மிகப்பெரும் தடையாக புலம்பெயர் வியாபாரிகள் செயற்படுகின்றனர்.

கடந்த காலத் தவறுகள் முற்றுமுழுதாக ஆரயப்படுவதும், அவற்றிலிருந்து எதிர்கால சந்ததி புதிய போராட்ட வழிமுறைகளைத் தெரிந்தெடுத்துக்கொள்வதும், இன்றைய அவசரத் தேவை.

விமர்சனங்களையும் சுய விமர்சனங்களையும் தீண்டப்படாதவை என்று மறுக்கும் பழைமைவாதக் கும்பல்கள், எதிரிகளுக்கு அவற்றைப் போராட்டத்தை அழிக்கும் குற்றச்சாட்டாக முன்வைக்க வழிவிட்டுக்கொடுத்துள்ளனர்.
போராளிகளின் தியாகங்களையும் இழப்புக்களையும், குற்றச்செயலாக மாற்ற முனையும் இவர்களின் ஊற்றுமூலம் புலம்பெயர் நாடுகளே.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கம் போராட்டத்தில் மைற்கல் என்ற மாயையை ஏற்படுத்த முனையும் பெரும்பாலானவர்கள், அழிந்துகொண்டிருக்கும் தேசிய இனம் குறித்துச் சிந்திபதில்லை,