13.09.2008.
ஜப்பானின் டகீஜி கோயாஷி என்ற கம்யூனிஸ்டால் “கனிகோசென்” நாவல் எழுதப்பட்டது. 1929ல் எழுதப்பட்ட இந்த மார்க்சிய நாவல் கடந்த நான்கு மாதங்களாக அதிக அளவில் விற்பனையாகும் புத்தகங்கள் வரிசையில் இடம் பெற்றது. அதோடு அந்த வரிசையில் முதல் இடத்தையும் கைப்பற்றியுள்ளது. டகீஜி கோயாஷி காவல்துறையினரின் சித்ரவதை காரணமாகத் தனது 29வது வயதிலேயே கொல்லப்பட்டவர்.
அந்நாவல், ஒரு கொடூரமான கப்பல் தலைவனின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தம் செய்ய விழைவதைப் பற்றியது. முதலாளித்துவத்தையும், அதன் பெருமுதலாளிகளையும் வெல்ல அவர்கள் சபதமேற்பதே அந்நாவலின் முடிவு. தொழிற்சங்கங்களில் உறுப்பினராவதில் ஜப்பானியர்கள் பெரும் விருப்பத்தைக் காட்டுவதில்லை. அங்குள்ள தொழிற்சங்கங்களில் உறுப்பினர் எண்ணிக்கை மிகவும் குறைவு.
ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என அழைக்கப்படும் ஜப்பானின் பொருளாதாரம் கடந்த காலாண்டில் 0.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளது என அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகப் போருக்குப் பின் அந்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த ஏற்றுமதி 2.3 சதவீதமும் இறக்குமதி 2.8 சதவீதமும் குறைந்துள்ளன. இதேபோல் தொடர்ந்து ஏறிவரும் விலைவாசியும் நுகர்வோரின் வாங்கும் சக்தியை 0.5 சதவீதம் குறைத்துள்ளது.
அங்குள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் செலவினங்களைக் குறைக்க தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்கப்போவதாக கூறியுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளாக இல்லாத வகையில் பொருளாதாரம் வலுவிழந்துள்ளது என ஜப்பானிய அரசு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் பகுதிநேர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் பணிப்பாதுகாப் பின்மை மற்றும் வருமானத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு போன்றவற்றின் காரணமாக எதிர்கால வாழ்வு குறித்த கவலை அதிகரித்து வருகிறது என அந்நாட்டின் வணிக ஆலோசகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பின்னணியிலேயே மக்கள் மார்க்சியம் குறித்து அறிந்து கொள்ள ஆவலாக உள்ளனர் எனவும், இவ்வகையான புத்தகம் ஒன்று இதுவரை அதிக விற்பனையாகும் புத்தகங்கள் வரிசையில் வந்ததே இல்லை எனவும் அவர் தெரிவிக்கிறார். 20 வயது முதல் 60 வயது வரை அனைவருமே சரிவிகிதத்தில் இப்புத்தகத்தை வாங்குவதாக இப்புத்தகத்தின் பதிப்பாளர் தெரிவித்துள்ளார். எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதாரச் சிக்கல்கள் உருவாகியுள்ள நிலையில் மார்க்சியத் தீர்வை நோக்கி தென் அமெரிக்க நாடுகள் நடைபோடும் வேளையில் ஜப்பானிலும் கருத்து ரீதியான மாற்றங்கள் தோன்றத் துவங்கியுள்ளன.