தமிழ் ஊடகங்கள் மீத பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் நிறுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண நகரில் இயங்கி வரும் ஊடகங்கள் மீது அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
சுடரொளி, வலம்புரி மற்றும் உதயன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்கள் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை வெளியிட வேண்டாம் என இனந்தெரியாத நபர்கள் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான தற்போதைய இலங்கையில் ஜனநாயகப் பொறிமுறை உரிய வகையில் பேணப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மாற்றுக் கொள்கைகளை உடைய ஊடகங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக அடக்குமுறைகளில் கட்டவிழ்த்து விடுவோருக்கு எதிராக அரசாங்கம் கடுயைமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.