01.06.2011 இல் பதியப்பட்ட இந்தக் கட்டுரை காலத்தின் தேவைக்கு ஏற்ப மீள் பதிவிடப்படுகிறது.
“சொந்த முகங்களையும் இழந்து அன்னிய முகங்களும் பொருந்தாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்கிறோம்” என்பது முன்னெப்போதோ கேட்ட கவிதை வரிகள். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் நிலை இவ்வாறுதான் இன்றும் ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் மையம் கொண்டுள்ளது. சீர்குலைந்து போயுள்ள ஐரோப்பியக் கலாச்சாரத்தின் முற்போக்கான கூறுகளைக் கூட எதிர்க்கும் விசித்திரமான அடையாளக் குழுக்கள் தான் இந்தப் புலம்பெயர் குழுக்கள்.
ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து மேற்கை வாழ்விடமாக வரித்துக்கொண்ட பல்வேறு சமூகக் குழுக்களுக்கும் இது பொருந்தும்.
1950 இற்கும் 60 இற்கும் இடையிலான காலப்பகுதியில் கிழக்கு லண்டனை நோக்கிக் குடிபெயர்ந்த பங்களாதேஷியர்கள் இதற்குச் சிறந்த உதாரணமாகும். பங்களாதேஷின் சிலட் மாவட்டத்திலுள்ள பகீர் காதி கிராமத்திலிருந்து பெருந்தொகையான பங்களாதேஷியர்கள் இங்கிலாந்தின் மலிவான கூலிகளாக கிழக்கு லண்டன் பகுதியில் குடியேறினார்கள். கட்டுமானத் துறையில் மிகக் கடினமான பணிகளுக்காக வரவழைக்கப்பட்ட இவர்கள், ஆரம்பத்தில் பிரித்தானியாவில் நிரந்தரமாகத் தங்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை.
முதலில் குடியேற்ற வாசிகளின் குடும்பங்களும் அதனைத் தொடர்ந்து கிராமத்தவர்களும் லண்டனை நோக்கி இடம்பெயர ஒரு குட்டி சிலெட் கிழக்கு லண்டனின்ல் உருவானது. இதன் பின்னர் அவர்கள் நாடுதிரும்புவதற்கான தேவை ஏற்படவில்லை என்கிறார் கார்னர் என்ற ஆய்வாளர்.
இவ்வாறே அரசியல் காரணங்களை முன்வைத்து தற்காலிகமாக அமரிக்காவில் குடியேறிய ஹெயிட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் தமது சொந்தத் தேசத்திற்குத் திரும்பிச் செல்வது குறித்துச் சிந்தித்தில்லை என்கிறார் அவர்கள் குறித்து ஆய்வு செய்த கிளிக் சில்லர். ஹெயிட்டி குடியேற்ற வாசிகளைப் போலவே அரசியல் காரணங்களுக்காக நோர்வேயை நோக்கி இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் நோக்கப்பட வேண்டும் என்கிறார் புலம் பெயர் தமிழர்கள் தொடர்பான கற்கையை மேற்கொண்ட பொக்லேர்ட் என்பவர்.
புலத்திலிருந்து இடம் பெயர்ந்து புதிய ஐரோப்பிய அல்லது அமரிக்க நாடுகளில் குடியேறிய மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ற வாசிகளிடையே ஒரு பொதுவான கூட்டுப்பண்பு காணப்படுகிறது என்று வாதிக்கிறார்.கிளிக் சில்லர். அந்தப் பொதுவான பண்பு என்ன அது புலம்பெயர் அரசியல் தளத்தில் எவ்வாறு செயற்படுகிறது என்ற வினாக்கள் இன்றைய தமிழ்ப் புலம்பெயர் அரசியல் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாகும்.
முதலாளித்துவப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்த நாடுகளான ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறுகின்ற அல்லது நாடுகளிடையே குடிபெயருகின்ற குழுக்களைப் பொறுத்தவரை அவர்களின் புலம்பெயர் அரசியல் புலம் பெயர்ந்த நாடுகளின் தேசிய அரசியலாகவே மாறிவிடுகிறது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவர்கள் உள்ளூர் அரசியல் பொருளாதார கலாச்சார நிலைமகளோடு இரண்டறக் கலந்துவிடுகின்றனர்.
புலம் பெயர் தமிழர்களின் சிந்தனை தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளின் சிந்தனை முறையிலிருந்து அடிப்படையிலேயே வேறுபடுகிறது. 30 வருடங்களாகப் புலம்பெயர்ந்து வாழுகின்ற பெரும்பாலான தமிழர்கள் முப்பது வருடத்திற்கு முன்னர் தாம் தொலைத்த அடையாளங்களை இன்றும் தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள். பங்களாதேஷியர்களைப் பற்றிக் குறிப்பிடும் அல் அலி என்ற ஆய்வாளர் இதனைத் தேசம் கடந்த அடையாளம் என்கிறார்.
குடிபெயர்ந்த தமிழர்கள் மத்தியில், முதலாவது சந்ததி இப்போது தான் உருவாக்கம் பெற்றுள்ளது. அந்தச் சந்ததியை தமது கலாச்சார வட்டத்திற்குள் பேணுவதற்காகான பெரும் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்.
இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.
30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.
பிரித்தானியாவில் பெர்போர்ட் என்ற இடத்தில் செறிந்து வாழ்கின்ற பாகிஸ்தானியர்களை விட பாகிஸ்தானிய நகர்ப்புற முஸ்லீம்கள் மிகவும் “முன்னேறிய” மூட நம்பிக்கையற்றவர்களாகக் காணப்படுவதாக ஜோர்ஜ் அழகையா இன்ற பி.பி.சி ஊடகவியலாளர் தனது நேர்முகம் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
ஆக, மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ர வாசிகள் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகவும் “விசித்திரமான” சிந்தனைத் தளத்தில் போராடுகின்றார்கள். இந்தச் சிந்தனை அவர்களிடையே ஒரு வகையான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக , தனது பெண்பிள்ளை ஒரு கறுப்பினத்தவரைத் திருமணம் செய்துகொண்டிவிடக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படுகின்ற ஒருங்கிணைவு, திருமணத்திற்கு முன்னர் பெண்பிள்ளை உடலுறவு வைத்துதுக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படும் ஒருங்கிணைவு என்பனவெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைகின்றன. அவை பண்பாட்டு நிகழ்வுகளாகவும், கலாச்சார வைபவங்களாகவும், மத வழிபாடுகளாகவும் வெளிப்படுகின்றன.
இவை எல்லாம் சரியா தவறா என்பதற்கான விவாதத்தை முன்னெடுப்பது கட்டுரையின் நோக்கம் அல்ல.
எது எவ்வாறாயினும் புலம் பெயர்ந்த தேசியம் அல்லது அது குறித்த உணர்வுகளின் பிரதான காரணிகளாக இவையே அமைகின்றன.
இவ்வாறு புலத்திலிருந்து தொலை தூரத்தில் உருவாகின்ற தேசிய உணர்வானது “கலாச்சாரப் அச்ச” உணர்வின் அடிப்படையிலிருந்து மேலெழுகிறது. இத் தொலை தூரத் தேசிய உணர்வு சொந்த நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கதைச் செலுத்துகிறது.
ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை. மேற்கின் சீரழிந்த கலாச்சாரத்திலிருந்து தமது சந்ததியைப் பாதுகாக்கின்ற குறியீடாக விடுதலைப் புலிகள் அமைப்பை “மேற்குத் தமிழர்கள்” நோக்கினார்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.
குஜராத்யர்கள் செறிவாக வாழும் பிரித்தானியாவின் நகரமான லெஸ்டரில் சாரி சாரியாக 30 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி கலந்துகொண்ட பொதுக்கூட்டமாகும். விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து அடிப்படை வாதக் குழுவிற்கு பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் உணர்வு பூர்வமாக வழங்கும் பணம் புலிகள் இயக்கத்திற்குத் தமிழர்கள் “கண்ணை மூடிக்கொண்டு” வழங்கிய பணத்தைப் போன்றதாகும்.
மேற்கு நாடுகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தடைப்பட்டு, அழிந்து சீர்குலைந்து கொண்டிருக்கும் சமூக உறவுகளோடு இணைந்து கரைந்து விடுவதற்கு வெளி நாட்டவர்கள் யாரும் தயாராக இல்லை. பாரதீய ஜனதாவும், இஸ்லாமிய அடிப்படை வாதமும், புலிகள் முன்வைத்த தேசிய வாதமும், அல்பேனிய தேசிய வாதமும் கூட பிற்போக்கான நிலப்பிரபுத்துவ சிந்தனைக்கும் சீரழிந்த கலாச்சாரத்திற்கும் இடையேயான மோதலின் விளைவே.
இலங்கையில் சிறுவர்கள் புலிகளின் இராணுவத்தில் இணைந்து கொள்கிறார்கள் என்று ‘உரிமை வாதிகள்’ கூக்குரலிட்டுக்கொண்டிருந்த வேளையில் “மேற்குத் தமிழர்கள்” தமது பிள்ளைகளை புலிகளின் புலம்பெயர் அமைப்புகளுக்கு அனுப்பிவைத்தார்கள். “புலம்பெயர் புலி அமைப்பில் இணைந்த பின்னர் தான் டங்கோ நடனம் கற்றுக்கொண்டிருந்த தனது பெண்பிள்ளை பரத நாட்டியம் கற்றுக்கொள ஆர்வம் காட்டுகிறாள்” என்று பெருமைப்பட்டுக் கொண்டார் ஒரு புலம்பெயர் தாய்.
புலிகளின் பின்னான புலம் பெயர் அரசியல் என்பதும் கூட இந்தத் தொலை தூரத் தேசிய உணர்விற்கு யார் தலைமை வகிப்பது என்பதிலிருந்தே ஆரம்பமாகிறது. புலம் பெயர் தமிழ் அரசியல் என்பது சீரழிந்த கலாச்சாரத்திற்கு எதிராக பிபோக்குக் கலாச்சாரத்தை நிறுத்துவதிலிருந்தே தனது ஆதரவுத் தளத்தைக் கட்டமைக்கிறது. . இந்த அரசியலின் இயங்கு சக்திகள் 20 அல்லது 30 வருடங்களின் முன்பதான சம்பவங்களை தமமது புலம்பெயர் சூழலுக்கு ஏற்றவாறு மறுபடி மறுபடி இரை மீட்பவர்களாகவே காணப்படுகின்றனர்.
குடியுரிமை பெற்ற இரண்டாவது மூன்றாவது சந்ததிகள் கூட நிறவாதத்தாலும், வர்க்க ஒடுக்குமுறையாலும் பாதிக்கப்படுகின்றது. கலாச்சார ஒடுக்குமுறையும் கூட இதன் ஒரு அங்கமே. இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பிற்போக்கு நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை எதிர்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்துவது தீர்வல்ல. இலங்கையிலும் உலகெங்கிலும் ஒடுக்கப்படும் மக்களின் அங்கமாக எம்மையும் அறிமுகப்படுத்திக் கொள்வதே தீர்வாகும்.
இந்த நூற்றாண்டின் தெற்காசியாவின் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் “புலம் பெயர் அரசியல்” தொலைதூரத் தேசிய உணர்விலிருந்து விடுதலை செய்யப்பட்டு மனித நேயம் மிக்க அரசியலாக மாற்றமடையே வேண்டும். ஆப்கானிஸ்தானிலும், காஷ்மீரிலும் மனிதர்கள் கொல்லப்படும் போது அதன் வலியையும் நாம் உணர வேண்டும்.
புலிகளின் அழிவின் பின்னர் தொலைதூரத் தேசியத்தைப் பயன்படுத்திக்கொள்ள முனையும் ஐரோப்பிய அரசோ, இந்திய- இலங்கை அரசுகளோ நமது நண்பர்கள் அல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும். இதுதான் தொலைதூரத் தேசியம் , இதுவரைக்கும் தோற்றுப் போகாத சர்வதேசிய வாதமாக மாற்றம் பெறுவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைய முடியும்.
தவறுகளைத் தர்க்கரீதியான ஆய்விற்கும் விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுத்துவதனூடாக தேசிய வாதத்தின் முற்போக்குக் கூறுகளை வளர்த்தெடுக்க முடியும். இலங்கைப் பேரினவாதப் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சார்ந்த புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் மக்கள் போராட்டத்திற்கான ஜனநாயகச் சூழலை இலங்கையில் உருவாக்குமாயின் போராடத்தின் புதிய திசைவழியில் ஒரு மைற்கல்.
————————————————————————————————-
Gardner, K., 2002. Age, Narrative and Migration: The Life Course and Life
Histories of Bengali Elders in London. Oxford: Berg.
Gardner, K., 1995. Global Migrants, Local Lives: Travel and
Transformation in Rural Bangladesh. Oxford: Clarendon Press.
Nationalism, Minorities and Diasporas: Identity and Rights in the Middle East Library of Modern Middle East Studies by Kirsten E. Schulze, Martin Stokes, and Colm Campbell
Glick Schiller, N. and G. Eugene Fouron, 2001. Long-Distance Nationalism
புலிகள் தோன்று முன்பே உலகமெங்கும் தமிழர் குடியேறி தமிழர்களாகவும்
அந்தந்த நாட்டின் மதிப்புகுரியவ்ர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.
புலிகளின்
ஆதிக்கம் தமிழர் மத்தியில் பயங்கரவாத்த்தின் மூலமே திணிக்கப்பட்டது.
இதன்
பின்னணியில் தமிழரின் அருவருக்கத்தக்க சமுக அடக்கு முறைகழும், சேர்ந்தே
இருந்துள்ளன.
கட்டுரையாளர் சொல்வது போல் புலத்தில் 30 வருடஙகளிற்கு
முன்பிருந்த யாழ்ப்பாணத்தை புலத்தில் காண்கின்றோம்.
ஊரின் பெயரால் சங்கங்கள், சாதியின் பெயரால் சட்ங்குகள், இங்கு தமிழரென்று யாரை குறிப்பிட முடியும்?
சிங்களவரை எதிர்ப்பதற்கும், நாடுகடந்த அரசின் தேர்தலிற்கும் மட்டும்தான்
நாம் தமிழரா? தமிழரின் புலத்தின் வாழ்வு நாகரீக உலகில்
அருவருக்கத்தக்க விட்யம். புகழ்வத்ற்கு ஒன்றுமேயில்லை.
துரை
புலம் பெயர் தமிழர் தமிழ் நேயம் மிக்கவர்களாகவும் மாறவேண்டும்.தமிழரைத் தமிழர் வெறூப்பதாக மாறக் கூடாது.சமூகமாக இணந்து ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பாங்கு கொண்டவராக,தமிழ் எனும் இனமாக ஒன்றூ சேர வேண்டும்.
//புலிகளின் பின்னான புலம் பெயர் அரசியல் என்பதும் கூட இந்தத் தொலை தூரத் தேசிய உணர்விற்கு யார் தலைமை வகிப்பது என்பதிலிருந்தே ஆரம்பமாகிறது.//
இது நிதர்சனமானது. புலிகளைத் திட்டியவர்களும் அதே வேலையைத் தான் செய்கிறார்கள்.
நாவலன், முக்கியமான சில விடயங்களைத் தொட்டிருக்கிறீர்கள். எனினும் புலம் பெயர்ந்தோரின் சமூக நடத்தையை அவர்கள் புலம்பெயர்ந்த சூழ்நிலைகளையும் வைத்துப் பார்ப்பின் முக்கியமான வேறுபாடுகள் புலனாகும்.
ஐரோப்பியப் போர்களின் காரணமான அரசியற் புலப் பெயர்வுகளின் பின் 1971 முதல் பங்ளாதேஷ் அகதிகள் ஒரு பகுதியினர் அரசியற் காரணங்களாலும் இன்னொரு பகுதியினர் பொருளாதாரக் காரணங்களலும் ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்தனர். அதன் பின்பு 1980களில் அரசியற் காரணங்களாலான புலப் பெயர்வுகள் அதிகரித்தன.
புலம்பெயர்ந்தோரை ‘விருந்தோம்பிச்’ சமூகம் உள்வாங்க இயலாமை நீங்கள் கூறும் பிரச்சனைகட்குப் பங்களிக்கிறது. பண்பட்டு வேறுபடுகளை விட நிறமும் ஒரு காரணமென எண்ணுகிறேன்.
குஜராத்திகளைப் பற்றிக் கூறினீர்கள் அவர்கள் கிழக்கு ஆபிரிக்காவில் கொலனி ஆட்சிக்குச் சேவகம் செய்த வசதி படைத்த வர்க்கத்தினராவர். புலப் பெயர்வையடுத்துச் சில ஆண்டுகளாக அவர்கள் தொழிற் கட்சி ஆதரவை நாடினர். இப்போது அவர்கள், மீள –முன்னிலும் வலுவான– ஒரு வசதி படைத்த வர்க்கமாகி விட்டனர்.
இவ்வாறான பாவற்றையும் ஒரு கட்டுரைக்குள் விளக்கமாகப் பார்க்க இயலாது.
எனினும் புலப் பெயர்வின் உளவியலில் பொதுத் தன்மைகளும் வேறுபாடுகளும் உள்ளன என்பதுடன், பழ மரபின் மீட்சி பல இடங்களில் பாதுகாப்பின்மையின் ஒரு வெளிப்பாடுங் கூட என்பதை மட்டும் இவ்விடத்துச் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.
நல்லதொரு கட்டுரை 1.. புலம் பெயர் இந்தியர்களை விட மேறகு வங்கத்திலும் கேரளாவிலும் முற்போக்கு தன்மைகள் அதிகம் காணப்படுகின்றன. 2. அமெரிகக கண்டம் முழுவதும் புலம் பெயர் மக்களே வாழ்கின்றனர். கொலம்பஸின் அடியைத் தொட்டு பூர்விக குடிகளின் தொகையை 95 வீதம் குறைத்தவர்கள் இவர்களே. 3. இந்தியாவில் இருந்து அடிமைகளாகக் கொண்டுவரப் பட்ட இந்தியர்கள் தான் இன்று ரின்டிடாட்டையும் கஜானாவையும் ஆள்பவர்கள். இந்த மேற்கிந்திய நாடுகளில் கறுப்பர்களுக்கெதிராக பெருமளவு இனவாதத்தை கக்குபவர்களும் இந்த இந்தியர்கள் தான் 4. சிறுபான்மை புலம் பெயர்வின் முக்கிய அம்சம் இந்த முகமிழத்தலே. பெரும்பான்மை புலம் பெயர்வு நேரெதிரானது. இதனை ஆக்கிரமிப்பு என்றும் கூறலாம். உ+ம் அமெரிக்கா.
நீங்கள் சுட்டிக்காட்ட முனைவது போல் ஆசியர்களுக்கு மற்றச் சமூகத்தினர் பற்றிப் பிரச்சனைகள் உள்ளன. ஆனால், ஒரு சிறு முரண்பாடு.
முழு மேற்கிந்தியத் தீவுகளுமே வந்தேறு குடிகளின் நாடுகள் தான்.
ற்ரினிடாடிலும் கயானவிலும் அடிமைகளகப் போனோரிற் பெரும்பாலோர் (பிஜியில் போன்று) இன்னமும் கூலி உழைப்பாளர்களாகவே உள்ளனர். கறுப்பர்கட்கும் இந்திய வம்சாவழியினருக்குமிடையே பரிய பூசல் இருந்ததில்லை. (செட்டி ஜகன் என்ற இடதுசாரி மீன்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க கறுப்பின மக்களிடையே இனவாதத்தைத் தூண்டி விட பேண்ஹாம் என்பவர் 1960 அளவில் வளர்த்துவிடப்பப்ட்டர்).
வர்க்கப் பரிமாணத்தை புறக்கணித்து எல்லாவற்றையும் இன அடிப்படையில் விளக்கி விட இயலாது.
நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. இனப் பூகலின் அடிப்படை வர்த்தக போடடியே.2. தெற்காசியரிடம் இன்னமும் வெள்ளை மேல் கறுப்பு மோசம் என்ற நிலை உள்ளது. ஜமெய்க்காவில் உள்ள இந்திய கடைகளில் வேலை பார்ப்பதற்கு இந்தியர்களையே இந்தியாவிலிருந்து அழைக்கின்றார்கள். கறுப்பர்கள் நம்பிக்கையற்றவர்கள் என கருதுகின்றார்கள் இதனை மனித உளவியலுக்கூடாகத்ததன் பார்க்க வேண்டும். 3. மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பத்தில் பூர்விக குடிகள் இருந்துள்ளார்கள். இன்றும் அங்கு சென்றால் அதன் எச்ச சொச்சங்களை பார்க்கலாம். நேரமிருப்பின் அவைபற்றிய குறிப்புக்களை இணைக்கின்றேன்.
நீங்கள் சொல்வது உண்மை. மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடிகள் முற்றாகவே அழிக்கப் பட்டுவிட்டனர் என்றே நினைக்கிறேன்.
ஜமெய்க்காவில் உள்ள இந்தியர்கள் கூலி வேலைக்காகக் கொண்டு செல்லப்பட்டவர்களல்ல என்பதும் ஒரு காரண்மாக இருக்கலாம்.
தென்னாசியாவில் மட்டுமல்ல முழு ஆசியாவிலும் நிறம் ஒரு பிரச்சனை தான்.
கொல்கொதாவில் படித்த ஒரு மேற்கிந்தியர் என்நண்பர் ஒருவருக்குச் சொன்னது: I would not say that the Indians are racist, but they are very colour conscious.
நல்ல ஆக்கம்,
காலத்திற்கு காலம் புலம் பெயா்ந்த இனங்களெல்லாம் ஏறக்குறய ஒரே பண்பினையே கொண்டிருந்தன எனலாம் இதில் நமக்கு முன்பு புறப்பட்ட யூதா்கள்,இத்தாலியா்கள்,துருக்கியா்கள் குறிப்பிடக்கூடியவா்கள் அதாவது தமது அடையாழத்தை இழக்காமல் வாழ்கின்றார்கள்.
எப்போதும் இடம்பெயா்ந்தவா்களின் அடுத்த சந்ததியே வாழ்கின்ற சூழ்நிலையுடன் இரண்டறக்கலப்பதை அறியமுடிகின்றது இத்தாலியா்கள் அமெரிக்காவை அடைந்து 100 வருடங்களுக்கு மேலாகின்றது ஆனால் இன்றும் தமது கலாச்சார நிகழ்வுகளை கொண்டாடிக்கொண்டே இருக்கின்றார்கள் ஆனால் இத்தாலி நாட்டு அரசியலிலோ நிகழ்வுகளிலோ அக்கறை காட்டுவதில்லை.
நாம் என்ன செய்கின்றோம்,நமது மூட நம்பிக்கைகளையும் முட்டாள்தனங்களையும் நமது அடையாளமாகவும் பாரம்பரியமாகவும் பார்ப்பதாலேயே பூப்புனித நீராட்டுவிழாவை ஒரு தெய்வீக விழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்,30 வருடத்திற்கு முன்புகூட பரவாயில்லை என்று சொல்லலாம் அதாவது எங்கள் மூத்த சகோதரிகள் Mini skirt அணிந்தார்கள், கல்லூரிகளில் டினா்,சோஸல் என்று வரும்போது நட்புடன் பெண்களும் ஆண்களும் பழகமுடிந்தது, பெண்கள் கல்லூரிகளின் விழையாட்டுப்போட்டிகளில் சாதாரணமாக அரை காற்சட்டை அணிந்து பங்குபற்றுவார்கள் ஆனால் புலம்பெயா்ந்த நாடுகளில் சுடிதாருடன் பெண்கள் விழையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றியதை என்னால் மறக்கமுடியாது.இது புலிகளின் உபயம்.
புலம் பெயா்ந்தவா்களின் இயலாமையும் தாழ்வு மனப்பான்மையுமே இதற்கெல்லாம் காரணம், அதாவது எல்லாவற்றிலுமே நமக்கு ஆசையுண்டு வெறியுண்டு ஆனால் சீ இந்தப்பழம் புளிக்கும் என்கின்றோம்,அடுத்த சந்ததியாவது முற்போக்கான விடயங்களை அறிந்து செயல்படும் என்று நம்பினால் அவா்களையும் தங்கள் நிலையிலேயே வைத்திருக்க தமிழ் சினிமாவை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அன்பு நாவலன்,”சொந்த முகங்களை இழந்து… – புலம் பெயர் அரசியல்” சொல்ல அவசரப்படாதீர்கள்! இப்படிச் சொல்வதற்கு எனக்கு நிறையக் காரணங்கள் உண்டு! நான்,உங்களது இக்கட்டுரைக்கு ஓடிவந்து நறுக்குப் பதிலுரைக்கும்வாசகர்கள் போன்று கருத்துச் சொல்லமாட்டேன். இதற்கான காரணங்களை நமது மக்களதும்-புலம் பெயர் மானுடர்தம் சமூக உளவியல்சார் தொடர்பாடலோடும், அதன் தளத்தில் அவர்களது சமூக அசைவியக்கத்தோடும் பொருத்தியே நான் எழுத முற்பட்டிருப்பேன். உங்களது கட்டுரை இவற்றையெல்லாம் பார்க்கமால் வெறும் முன்தீர்ப்பு மொழிவுகளோடு அவசரக் குடுக்கைத் தனமாக எழுதப்பட்ட அறிதலை எமக்கு வழங்குகிறது.
அவசரப்படாதீர்கள்-ஆத்திரப்படாதீர்கள்!
நான்,நேரடியாக விஷயத்துக்கு வருவேன் :
[ //இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழாஇ மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.//
//30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.//
//ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை. மேற்கின் சீரழிந்த கலாச்சாரத்திலிருந்து தமது சந்ததியைப் பாதுகாக்கின்ற குறியீடாக விடுதலைப் புலிகள் அமைப்பை “மேற்குத் தமிழர்கள்” நோக்கினார்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.// ]
இப்படியுரைக்கிறீர்கள்.ஒரு மார்க்சிஸ்ட்டு இத்தகைய முடிவுக்கு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது-உங்களுக்கு இந்தச் சிக்கல் முன் தோன்றவில்லையா?
சரி,நான் சொல்கிறேன்!மனிதர்கள் கூட்டாகவும்,தாம்சார்ந்த மொழிநிலைப்பட்ட குழுவாழ்வுக்குள் தம்மை இணைத்து உறவாடியபோது,அவர்கள் ஒரு பொது மொழிக்கு இணைவாகவும்-சிந்தனை பூர்வமாகவும் ஆத்மீகரீதியான ஆற்றலோடு இசைந்து உயிர்த்திருக்க முனைந்தனர்.இலங்கை அரசு,இந்த வாழ் சூழலை இல்லாதாக்கிச் சமூக நிலையைச் சிதைத்தபோது புலப்பெயர்வு-இடப்பெயர்வு ஆரம்பமாகிறது.இங்கு,ஒரு “ஒழுங்குக்கு” உட்பட்ட உறவு-வாழ்நிலை உடைவுறுகிறது.புலம்பெயர்ந்த தேசம் புதிய சூழலோடு-புதியபாணி ஒடுக்குமுறையோடு புலம்பெயர் தமிழர்களை-மனிதர்களை வரவேற்கிறது.புலம் பெயர்ந்தவர்கள் முன் எல்லாம் வெறுமை!அம் மனிதர்கள் அனைத்திலும் வறுமையோடு இப் புலப் பெயர்வை எதிர்கொள்கின்றனர். வரலாற்றில் கட்டியமைக்கப்பட்ட”ஈஸ்ற்-வெஸ்ற்”கருதுகோள் மேற்கு மனிதர்கள் மூலம் அறிமுகமாகிறது.
அந்தோ பரிதாபம்!ஆச்சி காலமுக்க-அப்பு,கைப்பிடித்து குரும்பட்டி பொறுக்கி விளையாட்டுக்காட்ட வளர்ந்த நாம்,அனைத்தையும் இழந்து, பெட்டி வீட்டுக்குள் புறாக்கூடு கட்டிவைத்து எமது குழந்தைகளை வளர்க்கும் போது, இந்த நெருக்கடியைத் தவிர்த்து சமூக இசைவாக்காத்தோடு மேற்குடன் கலக்கப் போராடித் தோற்போம்!அங்கே,அனைத்தையும் சொல்லும் தடையாக,நாசமாப்போன வாழ்நிலை சிதறி மனிதர்களைத் துவசம் செய்கிறது.
“குங்குமம்”ஐரோப்பியர்களுக்கு ஒரு நிறம் மட்டுமே.தமிழ்மொழிக் காரருக்கு ஒரு வாழ்வு அநுபவம்!”ஆர்பைட் மார்க் பிறாய்”[Arbeit macht Frei] தமிழர்களுக்கு ஒரு சுதந்திரம் குறித்த வார்த்தை.ஆனால் ஜேர்மனியனுக்கு ஒரு ஒடுக்குமுறையின் திசைவழி சொல்வது.இதைத் தாண்டுவோமா?
தான்சார்ந்து,தன் சுற்றங்கொண்ட சிலாகித்த வாழ்வு தொலையும்போது, வந்த தேசத்தில் குழுமமாக வாழ மொழி தடையாகிறது-நிறம் தடையாகிறது-கல்வி தடையாகிறது-செயற்றிறன் தடையாகிறது.என்ன செய்வார்கள்?புலம்பெயர்ந்தோரை,அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழப் பணித்த ஐரோப்பிய நிர்வாகம்,அவர்களது இணைவைத் திட்டமிட்டுப் பறித்தெடுத்தது.இதன் புரிதலில்,தான்சார்ந்த சமூகத்தோடு அசைவுறும் வழியென்னவெனப் பாமர மனிதன் சிந்திக்க முனைதல் சாத்தியமில்லையா?தான் வாழ்ந்து மடிந்த ஏதோவொரு கனவில் தன்னிருப்புக்கு நெருக்கடியேற்படுவதில் அதைக் காக்கவும்-கண்டடையவும் தன் வேர்களைக் காணமுனைவது சாத்தியமாகிறது.
எனக்குப் பண்பாடுண்டா,எனக்கு உணவுக் கலாச்சாரம் உண்டா,எனக்கெனவொரு மொழி-தேசம் உண்டா?இது கேள்வியாகவும்,உள நெருக்கடியாகவும் புலம்பெயர்ந்த எம்மைத் தக்குகிறது!எமக்கு முன் துருக்கியர்கள் கூட்டாகவும்,கொடிபித்தும் வாழ்ந்து பார்க்கின்றனர்.இத்தாலியர்கள் தமது தேசக்கொடியை முத்தமிட்டு மிடுக்குக்காட்டும்போது,புலம்பெயர் தேசத்துக் குடிமகனோ தனது தாய்ப் பூமியை தரிசித்து எம்மை ஏசுகிறார்கள்.நாம்,மீளவுஞ் சிதைகிறோம்.எமக்கானவொரு “கொடி-தேசம்,மொழி-பண்பாடு” நம்மைத் தவிக்க வைக்கிறது.இலங்கையிலிருந்தபோது இந்தப் பஞ்சம் ஏற்பட்டதில்லை.அங்கு தேசமாகவும்-நகரமாகவும்,கிராமமாகவும் வாழ்ந்ததைவிட ஒரு சுற்றமாக வாழ்ந்தோம்.எமக்கு அந்நிய நெருக்கடி தெரியவில்லை.பெரிதாகத் தெரிந்தது மாமி வீடும்-சித்தியின் வீடும்.மிச்சம் சந்தித் தெருவில் உலகம் விரிவதாகவிருந்து, நாகமணியின் தேனீர்க்கடையில்பருப்பு வடையும்-பிளேன் ரீயும் குடித்துக் “கமல்-ரஜனி வாழ்வு” பேசியது.இது,ஒரு சமூக வாழ்நிலையில் உறுதியான சமூக அசைவாக்கம் விரித்துப் பார்த்திருக்கிறது.
இவை இழந்தபோது,எனது உறவுகள்,புலம் பெயர் தேசத்தில் பொய்யுரைத்த புலிக்கொடிக்கு அர்த்தங்கண்டது-தமிழீழத்தைத் தனது தேசமாகக் கண்டடையக் புறக் காரணிகள்வழி வகுத்தன.பண்பாட்டுத் தாகமாகவும்,வாழ்ந்தனுபத்தின் முன்னைய கருத்தியலைத் தகவமைக்க விரும்பியது.அங்கே,”சாமத்திய-கல்யாண-பிறந்ததின”க் கொண்டாட்டங்கள் தனது சுற்றத்தோடு தன்னை இணைத்துக் கோலம் போட விரும்பிய அக விருப்புக்கு வடி காலாகிறது.
புலிக்கொடிக்கு எந்தவுந்துதல் காரணமோ அதே காரணம் அனைத்துக்குமான காரணத்தின் திறவுகோலை எமக்கு வழக்குகிறது.இது,சமூக நெருக்கடியின் தற்காலிகத் தேவையாக புலம் பெயர் மக்கள் ஒவ்வொருவரையும் அண்மிக்கிறது.இது,தமிழர்களுக்குமட்டுமல்ல அனைத்து இனப் புலப்பெயர்வுக்கும் பொருந்துகிறது.இதை வெறுமனமே சப்ப முடியாது!
சமூக-மானுடவியற் புரிதலின்வழி சிந்திக்க வேண்டும்.
முப்பது வருடத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணத்தை இன்றைய யாழ்ப்பாணத்தில் காணமுடியாதுதாம்.அதுதூம்சமூக வளர்ச்சியின் பரிணாமம்.அவர்களும்,அவர்தம் இன்றைய சுற்றஞ் சூழப் “பில்லி-சூனியமெல்லாஞ் ” செய்து சுகமாய் வாழ்வதாகக் கனவுகொள் மனமும்,யுத்தத்தில் மையங்கொண்ட மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்து நல்லூர்த் திருவிழாச் செய்து, தம்மை நிரூபித்தார்கள்! இது,ஒரு குழுமம வாழ்வுக்குச் சாத்தியம்.புலம் பெயர் மண்ணில் நாம் சமூகவாழ்வோடு இசைந்து ஒரு மொழிக் குட்பட்ட “ஒழுங்குக்குள்” வாழ முடியுமா? இது இல்லாதவரை,இருந்த அன்றைய சூழலை மையப்படுத்தி அடையாளமாக வாழ்ந்து காட்டுவது மனித நடத்தைக்குப் புதிதாகுமா?
[ //ஆக, மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ர வாசிகள் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகவும் “விசித்திரமான” சிந்தனைத் தளத்தில் போராடுகின்றார்கள். இந்தச் சிந்தனை அவர்களிடையே ஒரு வகையான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.// ]
நாவலன்,இது அபத்தமாகத் தெரியவில்லையா?விசித்திரமோ-சாத்திரமோ இங்கு கிடையாது.மனிதர்கள் எப்போது சமூகவுணர்வோடு”ஒரு ஒழுங்குக்குள்”வாழ நேர்ந்தார்களோ,அந்த ஒழுங்கினது வாழ்நிலைக்கிசைவான”அடையாள”நெருக்கடி உருவாவதை எவரும் விரும்புவதில்லை!வாழ் சூழல் பாதிப்படைந்து தன் சூழலைவிட்டு அந்நியமானவொரு சூழலை எதிர்கொண்டபோது,அதைத் தமதாக்க முடியாத மனிதர்கள் அதற்குப் பிரதியீடாக இன்னொரு முறைமையைத் தமக்கேற்ற புரிதலோடு இணைத்து வாழ முற்படுதல்தாம் அவர்களை உயிர்த்திருக்க வைப்பது.இதை மறுத்து வாழ முற்படுதலென்பது எப்போதும் சாத்தியமாக முடியாது.விசித்திரம் என்பது எதைவைத்து-எதர்க்கு நிகராக அணுகிச் சொல்ல முடிகிறது.
தனக்குள் பொருத்தப்பாடும்-பொருந்தாதத் தன்மைகளுடனும் புலம்பெயர் இளைய தலைமுறை வாழும் இந்தப் புலம் பெயர் வாழ்வில் சமூகவாண்மை என்பது தனக்குட்பட்ட அரசியல் வாழ்வைத் தகவமைக்கும் போராட்டமாக இருக்கும்போது,ஒரு பொருளாதார வாழ்வுக்குட்டபட்ட”வாழ்நிலை”இவர்களுக்குக் கைகூடிவிட்டதா?ஏதோ,சொல்வதால்-சொல்லிச் செல்லும் கட்டுரை மொழி வேண்டாம்!
[ //உதாரணமாக இ தனது பெண்பிள்ளை ஒரு கறுப்பினத்தவரைத் திருமணம் செய்துகொண்டிவிடக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படுகின்ற ஒருங்கிணைவுஇ திருமணத்திற்கு முன்னர் பெண்பிள்ளை உடலுறவு வைத்துதுக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படும் ஒருங்கிணைவு என்பனவெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைகின்றன. அவை பண்பாட்டு நிகழ்வுகளாகவும்,கலாச்சார வைபவங்களாகவும், மத வழிபாடுகளாகவும் வெளிப்படுகின்றன.// ]
“கருப்பு-வெள்ளை”-திருமணப் பந்தம்-எதிர்காலம்.”கற்பு”-பதிவுத்திருமணத்துக்கு முன் “உடலறுவு”ஒரு வாசிப்புக்காகச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.எமது நினைவிலி மனதில் தமிழ்மொழிவழி சிந்தனைத் தேட்டம் அழியாதவரம் பெற்றிருக்கிறது.இளமையிற் கற்றல்(வாழ்நிலை)சிலையில் எழுத்து”சரி.இன்று,தமிழ் வானொலிகளில் தமக்கு அந்நியப்பட்ட,தமது நிறத்தைக் கேலி பேசும் தமது சமூகத்துக்கு உட்பட்ட உணர்வானது தமது பண்டத்தை விற்கவே வெள்ளைமேனிப் பெண்ணை முன்னிறுத்தி விளம்பரஞ் செய்கிறதா?எது,அரிய பொருளாக இருக்கோ-அதற்கு மவுசுதாம்!நாம் இயல்பாகக் கருப்பர்களா?நமது சமூகத்தில் மேற்குலகச் சிந்தனைக்குட்பட்ட-கலப்படைந்த மக்கள் வெண்மையாக-“அழகாக”இருக்கிறார்களா?எமது சமுதாயத்தின்பெண்கள்-ஆண்கள்”கருப்பு-அவலட்சணம்”கண்டு கேலி பேசுகிறார்களா?கலப்படைந்து”வெள்ளையாக”இருக்கும் நபருக்கு இருக்கும்”செருக்கு”எத்தகைய சமூக-அகவொடுக்குமுறையை”கருமையாக”இருக்கும் மனிதருக்கு வழங்கியது? இந்த அனுபவம் தன் பெண்ணுக்குத் தொடர்ந்து”கருமையுடைய”பிள்ளை பிறப்பதை நம்மில் எத்தனைபேர் விரும்பினோம்?”கருப்பு-வெள்ளை”கருத்தியலைச் செய்த “மேற்கு,கிழக்கு”க் கருதுகோள் நம்மைக் கோவணத்தோடு-கும்மப் பூவோடு அலையவிட்டது மட்டுமல்ல-நம்மையே,நாம் அங்கீகரக்க-மதிப்பளிக்க மறுத்து நிற்கிறது.
இன்றைய புலப்பெயர்வு வாழ்வில் பாலியல் நடாத்தையென்பது பொறுப்போட நடைபெறவில்லை.”அநுபவத்தில்-தட்டிக்கழித்தல்” வரை முறையற்ற பாலியல் நடாத்தையெனப் பல பாலகர்களைத் துவசம் செய்து நடுத்தெருவில் அலையவிடும்போது,இப்போது மேற்குப் பெற்றோரே தமது பிள்ளைகள் குறித்துக் கவலையடையும்போது,நீங்கள் இதைக் குறித்து மேலோட்டமான வார்த்தைகொண்டு மெலினமாகவுரையாடுகிறீர்கள்.இது,முழுமொத்த மனித சமூகத்தையே இன்று பல உள நெருக்கடிக்குள் கொணர்ந்திருக்கும்போது அதை நமது மக்களிடம்-புலம்பெயர்ந்தவர்களிடம்மட்டும் குறிப்பாக நிகழ்வதாக ஒரு மார்க்சியன் கருத்துக் கூறுவதாகவிருந்தால் நான் உங்கள் மார்க்சியம் குறித்துக் கவலையடைகிறேன்.மனிதர்களை அவர்களது வாழ்நிலையோடு புரிதலைவிட்டுப் பெயர்த்தெடுத்து விமர்சிப்பது நியாயமாகாது.எமது வாழ்நிலை பாதிப்படைந்து நாம் அங்குமிங்குமாக அலைகிறோம்.
[ //இவ்வாறு புலத்திலிருந்து தொலை தூரத்தில் உருவாகின்ற தேசிய உணர்வானது “கலாச்சாரப் பய” உணர்வின் அடிப்படையிலிருந்து மேலெழுகிறது. இத் தொலை தூரத் தேசிய உணர்வு சொந்த நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கதைச் செலுத்துகிறது.// ]
தூரத்தே உருவாகும்”தூரத்தேசியவுண்ர்வு”என்பதெல்லாம் அடிப்படையில் அறிவியல் பூர்வமற்றது.ஒரு இனக் குழும மக்கள் இடம்பெயர்ந்து,சிதறிச் சமூகக்கூட்டின்றியும், எந்தப் பொருளாதார-நில-நினைவிலித் தளமும் இன்றியவொரு புலம்பெயர் தளத்தில் இத்தகையவுரையாடலானது அந்த மக்கள் துண்டிக்கப்பட்டவொரு மனிதக் கூட்டாக வாழ நேர்ந்த வலியயை மறுதலிப்பதாகும்.இது,புலம்பெயர் தேசத்துப் பொருளாதார-இனத்துவ அடையாள அரசியலது ஈனத் தனத்தை மறுமுனையில் வைத்து மறைக்கும் கயமைத்தனமாகும்.புலம் பெயர் மக்களைத் தொடர்ந்து அச்சத்துக்குட்படுத்தி,அவர்களது மனவலிமையை-ஆற்றலை முடக்கி நிராகரித்துத் தமது சமுதாயத்துக்கு புறம்பாக வாழ நிர்பந்தித்த வெள்ளைத் தேசமும்-வேற்று அரசவுரிமையுடைய தேசத்துச் சமுதாயங்களும் தொடர்ந்து புலம்பெயர்ந்த-குடியேறியவர்களைத் திட்டமிட்ட உளவியலொடுக்குமுறைக்குட்படுத்தும்போது அங்கே, தமது அடையாள நெருக்கடிக்குள் வந்துவிட்ட வாழ்நிலைகண்டு அச்சங்கொள்வதும்,தாம் வாழ்ந்த வரலாற்று மண் நோக்கிய அவாவுறுதலும் மனிதர்கள் அனைவருக்குமான பொதுப் பண்பாக மாறுவது இயல்பு.இதுவே,புலம்பெயர் வாழ்வில் ஒவ்வொரு அகதியும் சந்திக்கும் மிகப் பெரிய சோகம்.இதுள்,இவர்கள்”துராத் தேசியவுணர்வடைகிறார்கள்”என்பது தப்பான கற்பித்தலாகும்.
இன்றுவரை,இந்த உணர்வைத் தமது அயலுறுவு-நலன் நோக்கிய அரசியற் காரணங்களுக்காகத் தட்டையாக உருவாக்கி அசைபோட்டுவரும் மேற்குலகம், இத்தகைய புலம்பெயர் மக்களைக்கொண்டு, அவர்கள் சார்ந்த தேசத்து அரசியலை அழுத்தப்படுத்தித் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ததை நாம் ஈரானியர்கள்-ஈராக்கியர்கள்,குத்தீஸ்புலம்பெயர் மக்கள் வழி புரிகிறோம்.இந்த வகையிற்றாம் புலிகளது தேவையோடு,அவை மிக நெருக்கமான வினையாற்றலைக்கொண்டியங்கியது.இது குறித்துச் சிந்தியுங்கள்.
இவர்களது கொச்சையான-மொட்டையான இந்தக் கருத்தை ஜேர்மனியக் கவிஞன்ஹன்ஸ்-ஹேர்பேர்ட்திறைஸ்கே[ Hans-Herbert Dreiske]இப்படிக் கேலி பேசிய ஆண்டு 1985. :
“இங்கே அந்நியராய் இருந்தோம்
அங்கே அந்நியராக்கப்பட்டோம்
எனினும்இ
நாம் ஒரு வனாந்திரத்தைத் தேடி
ஒரு நாட்டை உருவாக்குவோம்
எங்கெங்கு
எப்படியெப்படியோ அந்நியர்களாகிய
அனைவருக்குமாக.”
[ Hier
fremd geblieben
dort
fremd geworden
Vielleicht
sollten wir
ein land suchen
einen Staat gruenden
fuer alle
die irgenwo
irgenwie
Fremde sind.]
-Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984
[ //குஜராத்யர்கள் செறிவாக வாழும் பிரித்தானியாவின் நகரமான லெஸ்டரில் சாரி சாரியாக 30 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி கலந்துகொண்ட பொதுக்கூட்டமாகும். விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து அடிப்படை வாதக் குழுவிற்கு பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் உணர்வு பூர்வமாக வழங்கும் பணம் புலிகள் இயக்கத்திற்குத் தமிழர்கள் “கண்ணை மூடிக்கொண்டு” வழங்கிய பணத்தைப் போன்றதாகும்.// ]
புலிகளுக்கு நிதி கொடுத்த சமூகவுணர்வை-உளநிலையை மிகவும் தப்பாக உரைப்பதற்குப் பலர் முனைகிறார்கள் நாவலன்.நீங்கள் இந்த வரிசையில் ஒருபோதும் உரைத்திருக்கப்படாது.இது,தப்பானது.எமது மக்கள் முன் சில தீர்வுகள் இருந்திருக்கிறது.இந்த நிதியுதவி மனத்துள்.இவர்கள் எவரும் கண்ணை மூடிககொண்டு புலிக்கு நிதி;கொடுக்கவில்லை!
“கண்ணை மூடிக் கொடுத்ததுபோல்” நடாகங்காட்டியது புலிப்பினாமிகள்.அது,மக்களது நிதியைக் கறக்க அவர்களது பணத்தில் புலி தன் பொண்டிலுக்குத் தாலிகட்டி பின் அதை மக்கள் முன் களற்றிப் போட்டு நாடகம் ஆடியது.இதுவொரு வியூகம்.
ஆனால்,எமது மக்கள் தமது உழைப்பில் சிறு தொகையை மாதாந்தங்கொடுக்கும்படி உருவாகிய சூழல் மிக முக்கியமாகத் தவறவிடப்படுதல் சாபக்கேடானது!
1:”
ஸ்ரீரங்கனுக்கு நல்லாத்தான் …, ஒரு ஐந்துவரியில் முடிக்க இருக்கும் தீர்வுதான் தமிழன் முன் பலகாலமாக ஊசலாடி சாகும் தறுவாயில் நிற்கிறது ஒற்றுமையாக இருந்தால் எப்போவே முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும்.ஸ்ரீரங்கன் ஜெயகாந்தனின் நாவலை விஞ்சிய சோதனையை கிரந்தமாக அள்ளிவிட்டு மக்களை தொடர்ந்து கொல்லாமல் விட்டாலே பேருதவியாயிருக்கும், …. நன்றி, சோமண்ணை.
புலி எதிர்ப்பு புலிஆதரவு என்ற தளத்தில் எதைச்சொல்ல, எதைச்சொல்லாமல்விட என்றும் வெறும் காழ் புணர்வுகளோடு மாத்திரம் பார்கத்தேரிந்த எமது சமூகத்தில் உள்ள அன்புச் சகோதரங்களே!, சமூக உளவியலை புரிந்து கொள்ளாது அதனை கொச்சை படுத்தல் அல்லது பிழை கண்டு பிடித்தல் என்ற மனநிலையில் இருந்து நாம் மாற மறுத்தும் நிற்கும் அன்புச் சகோதரங்களே!, சமூக உளவியலை புரிந்து கொண்டு, சமூகத்தின் பிற்போக்குதனமான இயங்கியலை சரியான நெறியில் கொண்டு செல்ல நீங்கள் உண்மையாக விரும்பின், ப.வி.ஸ்ரீரங்கன் (ஜேர்மனி) எழுதிய பின்னூட்டத்தை அனைவரும் தாம் விளங்கும் வரை, இன்னும் விளக்கம் தேடும் வகையில் படியுங்கள். இத்துடன் இனிஒருவுக்கும் ப.வி.ஸ்ரீரங்கன் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் இப்பின்னூட்டம் ஒரு சிறப்பான கட்டுரையாக மேலும் செளிப்பூட்டப் பட்டும் செறிவூட்டப் பட்டும் இனிஒரு வாசகர்களுக்கு கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன்
சிறீ ரங்கன்,
மிக நீண்ட விவாதத்திற்குரிய உங்கள் கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டுபவை. இவை விரிவான விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கும் அதே வேளை, உங்கள் கருத்துக்களுக்கு சுருக்கமான எனது கருத்தைக் கூற முயல்கிறேன்.
1. மக்ரேபியன் நாடுகளிலிருந்து வட ஆபிரிக்க அரேபியர்களும், ஆர்மேனியாவிலிருந்தும், பால்கன் நாடுகளிருந்தும், இன்னும் பல தேசங்களிலிருந்தும் ஐரோப்பாவிற்கு அரசியல் – பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்கள் 16ம் 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய தேசங்களின் தேசிய இனங்களின் பகுதிகளாக ஒன்றிணைந்து கொண்டார்கள்.
2. முதலாளித்துவப் பொருளாதார மாற்றத்தோடு முன்னெழுந்த தேசிய இன உருவாக்கத்தின் போது இவ்வாறான இரண்டறக் கலக்கும் நிலை உருவாகின்றது.
3. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறை தேக்க நிலை அடைகிறது. உற்பத்தி அருகிப் போகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி இயல்பானதாக இல்லாத நிலை தோன்றுகிறது. ஏகாதிபத்திய அமைப்பு உருவாகிறது. இது ஐரோப்பாவில் புதிய இயக்கமற்ற சமூகத்தைத் தோற்றுவிக்கிறது. தேசிய இன உருவாக்கம் முற்றுப்பெறுகிறது.
4. புதிதாக வருகின்ற இனக் குழுக்கள் தேசிய இனமாக இணைந்து கொள்கின்ற சூழல் இப்போது அற்றுப் போகிறது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிப் போக்கு ஆரம்பிக்கிறது.
5. புதிய ஏகதிபத்தியப் பொருளாதார உற்பத்தி முறை புதிய சமூக மேற்கட்டுமானம் ஒன்றை உருவாக்குகிறது. அங்கு புதிய இனக் குழுக்களின் அடையாளம் பேணப்படுவதற்கான சூழல் உருவாகின்றது.
6. இவ்வாறான அடையாளம் பேணப்படும் சூழலை உருவாக்கியது ஏகாதிபத்தியப் பொருளதாரமே.
7. பாதுகாக்கப்படும் அடையாளம் தன்னை புலத்தோடு தொடர்புபடுத்திக் கொள்வதனூடாகவே இருப்பைப் பேணிக்கொள்கிறது. இதுவே தொலைதூரத் தேசியவாதமாக உருவாகின்றது.
8. முதலளித்துவப் உருவாக்கம் தோற்றுவித்த மக்கள் கூட்டம் தேசிய இனம் என்றால், அதன் உருவாக்கம் முற்றுப் பெற்ற வேளையில் தொலை தூரத்துத் தேசியவாதம் என்பது உருவாகிறது. இது உற்பத்தியோடு முற்றாகத் தொடர்பற்ற வெறுமனே ஆதிக்கம் செலுத்தும் சமூக மேற்கட்டுமானமாகிறது.
9. இவ்வாறு அடையாளம் பேணுகின்ற தொலைதூரத் தேசிய வாதம் என்பதை மேற்கின் ஒடுக்கு முறை அரசுகளும் தமது தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன. புலம் பெயர்ந்தவர்களை ஒடுக்குவதற்கு இது மிகச்சிறந்த ஆயுதமாக அவர்களுக்குப் பயன்படுகிறது.
இவைதான் கட்டுரையின் பின்னணியில் அமைந்திருந்த பொருள்முதல்வாத முடிபுகளாகும். எது எவ்வாறாயினும் உங்கள் கருத்துக்களின் வேறு சில கூறுகள் மேலும் ஆரோக்கியமான விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவையே.
சமூக உளவியல் என்பது பிரய்டிசம் போலானது அல்ல. சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகள் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் என்பவற்றின் அடிப்படையிலானது என்பது எனது கருத்து. புலம் பெயர் சமூகத்தின் உளவியல் கூட இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.
தவிர, ஏனைய விடயங்கள்…உங்கள் கருத்துக்கள்.. குறித்து இன்னும் எழுத முற்படுகிறேன்…..
/சமூக உளவியல் என்பது பிரய்டிசம் போலானது அல்ல. சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிஇ உற்பத்தி உறவுகள் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் என்பவற்றின் அடிப்படையிலானது என்பது எனது கருத்து. புலம் பெயர் சமூகத்தின் உளவியல் கூட இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. /
நாவலன் உங்கள் கருத்துக்களில் நான் முரண்படும் தளமானது நீனாவின் ஆய்வின்வழி புலம்பெயர் சமூகத்துக்குத் து}ரத்துத் தேசியங் கற்பித்தல்.இது கற்பழதம் என்பதை மீளவுஞ் சொல்லி வைக்கிறேன்.நீனாவை எதிர்த்து ஜேர்மனியில் முதன்முதலாக வந்த நூல் “துண்டிக்கப்பட்ட மக்கள் கூடம்”(Die geteilte Menschenwürde) சமூகவுளவியல் குறித்த தங்கள் கருத்துச்சரியானது.ஆனால் நான் புலம் பெயர் மக்களை ஒரு சமூகமாக-குழுமமாக-குறிப்பட்டவொரு இனமாகக் காணவில்லை!நான் புலம்பெயர் தளத்தில் லாகரில் அடைத்து வைக்கப்படுஇடு>நகரத்தைவிட்டு நகர முடியாதவொரு சூழலோடு நெருங்கிய இன்றைய வாழ்வில் புலம் பெயர் மக்கள் குறித்த அனைதஇதுப் பரிணாமத்தையும் இந்த வளர்ச்சியடைந்த உற்பத்திச் சக்தி>உற்பத்திஉறுவுகளுடன் மறுவுற்பத்தியையுஞ் சேர்த்தே இனம் காண்கிறேன்.பிறிதொரு சந்தர்ப்பத்தில் நீனாவினது ஆய்வு எவ்வளவு து}ரம் இந்த ஐரோப்பியத் தேசத்து மனிதவிரோதப் போக்கை புலம்பெயர் மக்களது வாழ்வுப் போராட்டத்தால் நியாயப்படுத்துகிறதென்பதையொட்டி உரையாடுவேன்.-நன்றி>தங்கள் கருத்துகளுக்கு!
அதாவது சபா. நாவலன் அவர்கள், தூரத்து தேசியம் (சுருக்கம்) ஒன்று உருவாக வேண்டும் என்று நினைக்க… அந்த நேரம் பார்த்து இந்த புலம் பெயர் ஈழ தமிழர்களோ இன்னும் தமது கலாசார எச்சங்களை (யாழ் மண்ணிலேயே இவை அருகிப் போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையிலே) விடாமல் கட்டிப்பிடித்து கொண்டிருக்கிறார்களே என்று விசித்திரப்பட்டிருக்கிறார். அவர் சொல்லாவிட்டாலும் இதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று இலைமறைகாயாக தெரிகிறது.அது ஸ்ரீரங்கனுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் விருப்பு வெறுப்புகளை ஏன் நாம் விமர்சனம் செய்யவேண்டும்? என்கிறார்.
ஸ்ரீரங்கன் நிறைய அடை மொழிகளுடன் (சில அவருக்கு மட்டுமே புரியும்.) 18-19 ம் நூற்றாண்டின் கடுந்தமிழ் நடையில் பிழிந்திருக்கிறார். இலகுவாக எளிய நடையில் அவருக்கு எழுத தெரியவில்லையா அல்லது புரிந்துவிட்டால் அவர் பாண்டித்தியம் வீணாய்ப்போய்விடும் என்று கவலைப்படுகிறாரா? தெரியவில்லை. இருக்க,
பின் நவீனத்தில் (Post modernism) இந்த சடங்குகள், குங்கும பொட்டு எல்லாவற்றுக்கும் அங்கீகாரம் உண்டு. அதை நானும் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்காக, அய்யோ, இந்த புலம் பெயர் தமிழர்கள் எவ்வளவு நல்லதனமாய், வெள்ளைக்கார பெண்களை வைத்து விளம்பரம் பண்ணவில்லை! தமிழ்ப்பெண்கள், தம் இனத்து கருப்பு ஆண்களை கேலி செய்யவில்லை! எப்பேர்ப்பட்ட தமிழினம் என்று உருகுவது தான் தாங்க முடியாத தலைவலி. தவிர மேற்குலகு பெரிய திட்டம் போட்டு இவர்களை பொறி வைத்து பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் போது..இது தேவை தானா என்று யோசிக்க வைக்கிறது. (அதற்கு சபா. நாவலனும் தாளம் போடுகிறார்.) நான் கேட்பது இது தான்: உங்களை யாரய்யா மேற்குலகு வரச்சொன்னது? இலங்கையில் சிங்களவர்கள் அடித்தால் தமிழ் நாட்டுக்கு ஓடியிருக்க வேண்டும். எதற்கு மேற்குலகு? 100 க்கு 90 விழுக்காடு எதற்கு வந்தார்கள் என்று அவர்களுக்கும் தெரியும். மேற்குலகு அரசுகளுக்கும் தெரியும். கணராவி!
தூரத்துத் தேசியம் உருவாக வேண்டும் என்று நான் எப்போதும் கூறவில்லை. பின்நவீனத்துவம் குறித்து நீங்கள் எழுதுவது சற்று விவாதிக்கப்படலாம். என்னைப் பொறுத்த வரையில் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களைச் சிதைப்பதற்காகவே பின் நவீனத்துவம் உருவாக்கப்பட்டதாகக் கருதுகிறேன். ஐரோப்பாவில் மக்கள் ஏக போகங்க நிறுவனங்களின் ஆதிக்கத்தில் விரக்தியுற்றுப் போராட்டங்களை முன்னெடுத்த வேளையில் மத்தியதர வர்க்கத்தைக் கவரும் வகையிலேயே பின்னவீனத்துவம் உருவாக்கப்படுகிறது. முழுமையான சமூகத்தை மாற்றும் வர்க்கம் சார்ந்த கருத்திற்கு எதிராக அடையாளம் சார்ந்த சிறிய சமூகக் கூறுகளின் நலனை முன்வைத்து பின்நவீனத்துவக் கோட்பாடுகள் உருவாகின்றன. ஐரோப்பியச் சமூகப் புறச் சூழலில் இது பொருத்தப்படுகிறது. நவீனத்துவம் என்ற முழுமைக்கு எதிராக அதன் கூறுகளின் நலனை முன்வைப்பதாக ஆரம்பிக்கின்ற பின்நவீனம் வர்க்கம் என்ற முழுமைக்கு எதிரானதாகவும் மாற்றப்படுகிறது.
பெரும்பாலான நேரங்களின் அதிகாரத்தின் அரசிலுக்குத் துணைபோவதாகவே அமைந்திருக்கிறது.
தமிழ் நாட்டிற்குப் போகாமல் மேற்கிற்கு ஏன் வந்தீர்கள் என்பது நியாயமான கேள்வி. இவ்வாறான இடப் பெயர்வுகள் ஒவ்வொரு போராட்ட காலத்திலும் இடம் பெற்றிருக்கிறது. வியட்னாமில் போராடிய கோசிமின் பிரான்ஸ் இல் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறார் என்பதை நியாயப்படுத்தலாக அன்றி ஒரு உதாரணமாகக் காட்டலாம். வர்க்கம் சார்ந்த மனோநிலை உட்பட புறச் சூழல் சார்ந்த பல காரணங்கள் மேற்கிற்கு ஓடிவர வழியைத் திறந்திருக்கிறது. எது எப்படியும் இருக்கட்டும் மேற்கிற்கு வந்த மகா-தவறால் எமது கருத்துக்களைச் சொல்ல வேண்டாம் என்ற கூறவருகிறீர்கள். இதுவும் பின்நவீனத்துவத்தில் கூறப்பட்டுள்ளதோ?
சரி,விரிவாக விவாதிக்க வேண்டியவொரு தேவைக்கு சிரஞ்சீவி உந்தித் தள்ளுகிறார்.இந்தக் கட்டுரையின்வழி நாவலன் பேச முற்பட்டதை அவர் பின்னூட்டில் விளக்கியுள்ளார்(.) .
சரிஞ்சீவி,தமிழ்”சிவப்பு” பெண்கள்-ஆண்கள்,”கருப்பு”ஆண்-பெண்களை கேலி பேசுவதை என் விமர்சனம் எப்படிப் பேசியுள்ளதென்பதை இன்னொரு முறை வாசித்துப் புரியவும்.அடுத்து,தமிழ்பேசும் புலப்பெயர் மக்களை மட்டுமான வட்டத்துள் பேசப்படாததும்-பேசப்பட்டதுமான எனது உரையாடாலானது ஒரு சமூகத்தின் இருப்பை நோக்கி-உருவாக்கத்தின் ஆரம்ப நிலைமைகளைப் பேசுவது.அதுள் புலம்பெயர் மக்களுக்கு எங்கிருந்து-எப்படி ஒடுக்குமுறைகள் வருகின்றனவென்பது அவசியமான தேடுதலாக எனக்குப்படுகிறது.அதன்வழி மேலோட்டமாக எவர் எழுதும்போதும் அதைக் குறித்து எதிர்வினையாற்றுவதென்பது பதினெட்டாம் நேற்றாண்டினது மொழியாகவிருந்தாலென்ன 21 ஆம் நூற்றாண்டினதாகவிருந்தாலென்ன?
இமானுவல் காண்டையும்,மார்க்சையும் எத்தனையாம் நூற்றாண்டு மொழிகொண்டு வாசிக்கிறோம் ?
பெரிய விடுகதையெல்லாம்”பின்நவீனத்துவம்”என்ற வார்த்தையை வைத்து விளையாடாதீர்கள்!
இது குறித்து வாங்கோ வரிவாக விவாதிப்போம்.நான் இத்தகையவுரையாடல்களை மிகவும் மனத்தோடு பேச முற்படுபவன்.இந்தவுரையாடலையே பேஷ் புக்கில் அதிகம் இணைக்கிறேன்.இப்போதைக்கு மிக்கேல் பூப்காவின் ஒரு பதிலை உங்களுக்குச் சுட்டுவேன்.
“Ich bin kein theoretiker.Als Throretiker bezeichne ich Jemanden,der ein allgemeines System errichtet,sei es ein deduktives oder ein analytisches,und es immer in der gleichen Weise auf unterschiedliche Bereiche anwendet.Das ist nicht mein Fall.Ich bin ein Experimentator in dem sinne,daß ich schreibe,um mich selbst zu verändern und nicht mehr dasselbe zu denken wie zuvor.-Gespräche mit Ducio Trombadori-Die Hauptwerke von Michel Foucault,Seite:1585-86.
“நான் ஒரு சிந்தாந்தவாதி அல்ல.சிந்தாந்தவாதியாக என்னை நான் காட்டிக்கொள்வனால் எங்கேயாவது,அது வித்தியாசமான நிலைகளுக்குள்-பகுதிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒருமாதிரியான விளக்கங்களும்-கழித்தல்களையுமே பயன்படுத்திக்கொள்வதில் முடியும்.அது எனக்குரிய செயலல்ல! உங்களுக்கு என்னைக் குறித்துச் சொன்னால்,நான் ஒரு பரிசோதகன்.நான் சித்தாந்தவாதியல்ல.எனது நோக்கத்துள் நான் எழுதுவது என்னைத் தொடர்ந்து மாற்றுவதற்கும்,மற்றும் முன்னையே சிந்தித்ததை நெடுகவும்,மீளவுஞ் சிந்தி வருவதை மறுப்பதே.” இப்படிச் சொல்லும் பூப்காக மனிதன் ஒரு அநுபவ மிருகமென(Der Mensch ist ein Erfahrungstier) இடூசியோ டொறோம்பாடோறியோடு(Ducio Trombadori) நீண்ட உரையாடலையும் செய்திருக்கிறார்.இப்படிப் பின் நவீனத்துவம் பரிசோதித்து வரும் பகுதிகளை மனத அநுபவத்தை-நடாத்தையை,அதன் அடையாள நெருக்கடியைத் தட்டிக்கழிக்க நான் பயன்படுத்தும் தற்குறித்தனத்துக்குத் தெரிந்த வார்த்தை ஒன்று மட்டுமே.அது,”பின் நவீனத்துவம்”இந்த வார்த்தைக்கு வெளியில் வரிவாக உரைக்க முடியாத புத்திசாலிகள் நம்மில் பலர் இருக்கிறார்கள்.அதுள் நீங்களும் ஒன்றா சிரஞ்சீவீ?அப்படியில்லையென்றால் வாருங்கள் பூப்கா,தெரிதா,லெக்கான்,சசூர்,ரொலாந் பார்த்,சார்த்தார்,அந்திரே ஜீத் குறித்தும் காம்யுவின் கொள்ளை நோய் குறித்த அல்ஜீரிய மானுடரது முகமிழந்த வாழ்நிலை பற்றி சமூக அசைவாக்கவும் குறித்துப் பகிர்வோம்.அதுள் நமது மக்களது புலம் பெயர் வாழ்வது வலி என்னவெனப் புரிந்தும் போகும்!
பின் நவீனத்துவம் ஏதோவொரு பெரிய தத்துவமெனப் பீலாக்காட்டும் கயமைக்கு முன் அவரது கூற்றுப் புட்டுவைப்பதும்-எனது புரிதல் இந்தத் தமிழ் பின்நவீனத்துவப் பீலாவைக் கண்டு புன்னகைத்தலும் சதா நிகழ்வது சிரஞ்சீவீ!
உங்களுக்கு மனிதசமூகத்தின் இடப்பெயர்வு அவ்வளவு கேலித்தனமாக இருக்கு?புலம் பெயர்ந்து உலகம் பூராகவும்வாழ்பவர்கள் எத்தகைய ஒடுக்கு முறைகளை நேர்முகமாகவும்-மறைமுகமாகவுஞ் சந்திக்கின்றார்கள் என்பதைக் குறித்து மேட்டுக்குடித் தனமாக எள்ளி நகையாடுவதாகவிருக்கிறது?
புலம் பெயர்ந்து”அகதி”யாக வாழ்ந்து மடிவதன்வலி உங்களுக்குப் புரியமுடியாதபோது எனது எழுத்தின்மீதான கேலியாக வாக்கியங்கள் வருகிறது.அதைவிட மோசமான கேள்வி”யாரர் ஐயா உங்களை இங்கு வரச் சொன்னது-தமிழ்நாட்டுக்குப் போயிருக்கலாமே?” சிரஞ்சீவி இந்தக் கேள்வி எமக்குப் புதிதில்லை.
இக் கேள்வியை 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணி மேயர் கைம் எனது அகதி விண்ணப்பக் கோட்டு விசாரணையின் முடிவில் மொழிப் பெயர்ப்பாளரான வேந்தனார் இளங்கோவைப் பார்த்துக் கேட்டார்.அதற்கு அந்தப் பொறியிலாள மேதை அளித்த பதில் சிரிஞ்சீவீயிளது அதே “மோட்டு”தனமானது.
“ஒரு நாயின் முன் சோற்றையும்,இறைச்சியையும் வையுங்கள் அவற்றில் எதை நாய் நாடும்-இறைச்சியைத்தானே?”என்றான் அந்த இளங்கோ.பின்பு அவருக்கு அவுஸ்ரேலியா இறைச்சியாகத் தெரிய அங்னுபோய் “டாக்டர்”பட்டம் பெற்றுத் தமிழ்ச் சங்கம் அமைத்து அரை வயதில் இறந்தே போனார்.இது,ஒரு எடுத்துக்காட்டு.
புலம் பெயர் மனிதர்களை நாயின் முன் ஒப்பிட்டு ஐரோப்போ இறைச்சி,தமிழ்நாடு சோறு.
தமிழ் மக்கள் ஐரோப்பா வரக் கூடாதென்பதற்கு நீங்கள் கூறும் காரணமென்ன?தமிழ்மக்கள் யுத்தாத்தால் பாதிப்படையாத பொருளாதார அகதிகள் என்பதா?இதன்வழி அவர்களுக்கு-தமிழ்பேசும் மக்களுக்கு பிரச்சனையே இலங்கையில் இல்லையென்பதா?
ஐரோப்பியனும்-அமெரிக்கனும் எங்களது மண்ணில் நேரடியாகவும்-மறைமுகமாகவும் வந்து யுத்தப் பிரபுகளை ஊக்குவித்து யுத்தஞ் செய்வான்,ஆனால் நாம் அவர்களது மண்ணுக்கு இடம் பெயரக்கூடாது.அவ்வகான் அகதி பாகிஸ்த்தானுக்குள்தாம் நுழையவேண்டும் மேற்கு ஐரோப்பாவுக்குள் இல்லை-,ரானியர்கள் சரியாவுக்குள் அல்லது ஈரானுக்குள் நுழையவேண்டும்.அப்படியா சிரஞ்சீவி?
நாயோடு நம்மை ஒப்பிட்ட இளங்கோ,உங்களது திமருக்கு நிகரானவர்தாம்.தமிழ்நாட்டில் எத்தனை இயக்கம்,எத்தனை அட்டகாசம் செய்ததென்பதும்,ஈழ அகதிகளை ரோவினது குரங்குகள் எப்படிக் கண்காணித்துத் திறந்தவெளிச் சிறையில் அடைத்தார்கள் என்பதும் எவருக்கும் புரியாததல்ல.மாற்று இயக்கத்தவன்,அவனது-அவளது குடும்பத்தவர்கள் கணிசமாகத் தமிழ்நாடு செல்ல முடியாது.அங்கே இருமுனைத் தாக்குதல் தயாராகவிருந்தது.அடுத்துத் தனது சொந்த மக்களையே அகதியாக வைத்திருக்கும் தமிழகத்துக்குப் புதிதாக இன்னொரு அகதி குழுமம் செல்லமென எதிர்பார்ப்பது அகங்காரம்.
மக்கள் சமூகத்தில் யுத்தம் என்பதைவிடக் கொடிய யுத்தமானது திட்டமிட்டு ஒரு இனத்தின்மீது வறுமையை ஏவிவிடுவது.இதை எவர்கள் செய்கின்றார்களோ அங்கே சென்று அவர்களது முற்றத்தில் பறிக்கப்பட்ட எமது வாழ்வைக் கேட்பதே நியாயமானது.அந்த வகையிற்றாம் இன்றைக்கு ஆபிரிக்காவிலிருந்து கடல்வழிப் பாதைமூலம் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க மக்கள் ஐரோப்பாவுக்கு வரும் வழியில் கடலில் மூழ்கிச் சாகிறார்கள்.
ஆபிரிக்க மக்களிடம் என்ன இல்லை?அவர்களை ஒட்டச் சுரண்டுபவன் எவன்?
ஏன் நாமெல்லாம் பட்டுணிகிடந்தா காலந் தள்ளினோம்.நமது மக்களிடம் என்ன இல்லாமல் இருந்தது.எம்மை மொட்டையடித்தவனுக்கு வக்கலாத்து வாங்கும் கேள்விகளை இலண்டனிலிருந்து கொடிபிடிப்பவன்கூடக் கேட்பான்.அவனுக்கு ஐரோப்பியக் கொலனித்துவத்தின் கொடுமை இன்றுவரைண நம்மைச் சிதைப்பது புரியாது!அதிலொரு மேதைதாம் இந்தச் சிரஞ்சீவியெனச் சொல்லேன்.ஏனெனில் நாம் எல்லோருமே வீணர்கள்-வினைமறுப்பாளர்கள்!எமக்கு ஆழமாகச் சிந்திக்கும் திறன் அறவே கிடையாது.
ஐரோப்பாவில் அகதியாக வாழ்பவன் தன்மீது நடாத்தப்படும்,உயிரியில்ரீதியான ஒடுக்குமுறையையும்,சட்டரீதியான ஒடுக்குமுறையையும் சேர்த்து தனது அடையாளத்தின்மீதான ஒடுக்குமுறையைப் பரம்பரைவரை சந்திக்கிறது சிலருக்குப் புரிவதே இல்லை.அகவொடுக்குமுறையானது அள்ளிப்போடும் சில்லறைகளால் மறைக்க முடியாது. அதுவரையும் இந்த ஏகாதிபத்தியப் பேய்களால் பாதிப்படைய உலகக் குடிமக்கள் எங்கும் இடம் பெயர்வார்கள்-எப்படியும் வாழ்வார்கள்!அதை தட்டிக் கேட்கும் உரைமை எந்தப் பேய்க்கும் கிடையாது!கொங்கோவைப் பிளந்து பத்தாண்டுக்குள் கோடி மக்களை இரகசியமாய்க் கொல்பவனுக்குச் சொல்-அவ்வகானை வேட்டையாடுமஇ அமெரிக்கனுகஇகுச் சொல்-அல்லது ஆசியாவை வேட்டையாடும் இந்தியனுக்கும்-சீனனுக்கும்போய் வகுப்பெடு உனது பித்தலாட்டத்தை!
அன்பு நாவலன்,தூர தேசிய உரையாடலானது மிக மோசமான இனவாதம் நிறைந்த அல்லது,அதை மறைக்க முனைந்த உரையாடலாகும்.அதை நினா(நைனா ஆற்கில உச்சரிப்பு) கிலிக் சில்லர் மூலம் தத்துவ நிலைக்குட்படுத்தியவர்களில் ஜேர்மனிய அரசுக்குப்(Visiting Research Associate, Max Planck Institute, Social Anthropology, Germany ) பெரிய இடமுண்டு.மக்ஸ் பிலாங் பல்கலைக் கழகமானது பேர்ளில் அவருக்கு மானுடவியற்றுறையை வழங்கியது அவரது புலமைசார் புரிதலில் இல்லை.அவர் மேற்கொண்ட குடியேற்ற வாசிகளது வாழ்வு-சாவு,விருப்புகள் குறித்து(Global Migration Project, Center for International and Area Studies, ) அச்சொட்டான இரகசியங்கள் பற்றியது.ஆபிரிக்காவில் அவர் செய்த ஆய்வுகள் ஆபிரிக்க மக்களைத் துரத்தி அவர்களது கனிவழங்களைத் தொடுர்ந்து கையகப்படுத்தும் வியூகத்தோடு சம்பந்தப்பட்டது.
அதற்காகவே 21 நூற்றாண்டின் காட்சிச்சலையென(African Culture and the Zoo in the 21st Century ) அவுஸ்பேர்க்கில் நிறுவி ஆபிரிக்கர்களை ஒட்ட மொட்டையடிக்கும் செயல்களில் (The “African Village” in the Augsburg Zoo and Its Wider Implications )அவர் மும்மரமாக இருக்கிறார்.அவ்கானில் அமெரிக்கா படையெடுப்பதற்கு முன் அமெரிக்க மானுடவியலாளர்கள் மூலம் அவ்கான் மக்களது வாழ்வையும்-சாவையும் ஆய்ந்து பார்த்தது.
எனவே,நினா சொல்வதும்-நிறுவுவதும் அடிப்படையில் கயமைத்தனமானதும்,ஐரோப்பிய இனவாத்தை குடியேற்ற வாதிகளது வாழ்வுப்போராட்டத்தில் மேலெழும் அடையாள அலகுகளை முன் நிறுத்தித் தமது சுரண்டலை-கொள்ளையை-இனவாத அரசியல் நகர்வை மறைத்தல்-நியாயப்படுத்தலாகும்.
இப்போதைக்கு இவ்வளவுந்தாம் நான் சொல்வேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
09.01.2011
1) பின் நவீனத்தை எதிர்க்கவில்லை என்று சொன்னேனே தவிர அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லவில்லை. வித்தியாசத்தை கவனிக்கவும். நவீனத்துவமும் அப்படியே. இதனுள் இருக்கும் சில சிக்கல்களை அது நேராக்குகிறது. சுருக்கமாக சொன்னால், அறிவியல் முன்னேற்றங்களின் அடிப்படையில் மட்டுமே மனிதன் உளவியல், கருத்தியல், இயங்கியல் போன்றவற்றை நவீனத்துவம் நோக்கும்போது, அதற்கு அப்பால் போய், அத்தனையும் அந்ததந்த காலகட்டத்தின் சூழ்நிலை முடிபுகளே அன்றி எதையும் அறுதி உண்மையாய் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறது பின் நவீனத்துவம். இரண்டிலும் கவரும் அம்சங்கள் இருக்கின்றன. நம் புற வாழ்வுக்கு நவீனத்துவம் உதவ, அக வாழ்வுக்கு பின் நவீனத்துவம் கை கொடுக்கிறது. (ஒன்று Software.மற்றது Hardware.). மற்றும்படி இவற்றுக்கு பின்னணியில் உள்நோக்கங்கள் இருப்பது பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை.
2) கார்ல் மார்க்ஸ் காலத்தில் முதலாளிகளும் தொழிலாளர்களும் கண்ணுக்கு பட்டவர்த்தனமாய் தெரிந்தார்கள். ஆகவே உலகில் ரெண்டு கலர் தான் இருக்கிறது என்கிற முடிவுக்கு அவர் வந்ததில் தவறில்லை. இப்போ, இனம், மொழி, மதம், தேசியம் (நாடு), சமூக, பூகோள சூழ்நிலைகள், சுற்றுப்புற சீதோஷ்ணம், சூழல் சீர்கேடுகள், உலக மயமாதல் என்று இன்னும் ஏகப்பட்ட கலர்களில் மனிதர்கள் கலந்து போய் எது எந்த கலர் என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் வாழ்கிறோம். (கார்ல் மார்க்சிடம் எனக்கு மதிப்புண்டு. அவரின் கொள்கைகள் தான் இன்றைய தொழிலாள வர்க்கத்தை மேம்பட செய்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதுக்காக, அவர் சொன்னது எல்லாமே ஆண்டவர் வாக்கு என்பதை ஜீரணிக்க முடியவில்லை.) தவிர, அவர் இந்தியர்களும் ஆசிய மக்களும் காட்டுமிராண்டிகள் என்று வர்ணித்ததை ஏன் மறந்து போனோம்? ஆனால் அவரின் தத்துவத்தை மறக்கவில்லை. (மீண்டும் மேல் பந்தியின் கடைசி வசனத்துடன் இதை ஒப்பிட்டுக் கொள்ளவும் .)
3) எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் முதலாளித்துவம் என்று எல்லாருமே சொல்வது ஒரு பாஷனாய் போய்விட்டது. (இப்போ உலக முதலாளித்துவம்) நல்ல பொழுது போக்கு. சரி. எப்படி போராடுவது? எதற்காக போராடுவது? போராடியதன் பின் என்ன கொள்கைகள், திட்டங்கள் இருக்கின்றன? ( உண்மை சொன்னால் யாருமே போராட வரமாட்டார்கள் என்றும் தெரியும்) எத்தனை பேர் மற்ற நாட்டு போராளர்கள்? அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன ஒற்றுமைகள்? மேற்குலகின் பெரும் இடதுசாரிகளே, பன்னாட்டு நிறுவனங்கள் பலம் வாய்ந்தவை. அரசுகளே அவர்களின் கையாட்களாய் போய்விட்டார்கள். நேரடியாய் இவர்களுடன் மோதினால் தோல்வியில் தான் முடியும். சுற்றி வியூகம் அமைத்து சிறிது சிறிதாய்த்தான் குறிக்கோள்களை அடையமுடியும் என்கிறார்களே. அதெல்லாம் பம்மாத்தா? உங்களுக்கு உதவியாய் யார் யார், எந்த நாட்டு அரசுகள் இருக்கின்றன? போராட்டத்துக்கு தேவையான நிதி உதவிகள் எங்கிருந்து வரும்?
4) ஈழ போராட்டமே அதிகாரம் + முதலாளித்துவம் சம்பந்தப்பட்டது. (அதிகாரமும் காசும் அண்ணன் -தம்பிகள் தெரிந்ததே.) இந்த போட்டியில் இயக்கங்கள், எத்தனை சகோதரர்களை வெட்டி தள்ளினார்கள்? கடைசியில் ஒரு கூட்டம், மிஞ்சி இருக்கிறவர்களை வெட்டி தனக்கு தானே முடிசூடிக்கொண்டது. யோசித்து பார்த்தால், இது இலங்கையின் பொருளாதார பிரச்னையின் எதிரொலி . 1970 களுக்கு முன்பு யாழ் மாணவர்கள் அதிகம்பேர் பல்கலை கழகம் போனார்களாம். (மிஞ்சிப்போனால் 200 பேர்?) இத்தனை பேர் போனதில் அப்போதிருந்த நாலரை லட்சம் யாழ் தமிழர்களுக்கும் ஒரே சந்தோஷமாம். யாருக்கு காது குத்து? சீ! அதில்லை. எங்கள் உரிமை எல்லாம் போட்டுது. சிங்களம் படிக்க வேணுமாம் என்று கவலைப்பட்டார்களாம். ஆங்கிலம் படிக்க ஒருவரும் கவலைப்படவில்லை. சிங்களவர்கள் என்றென்றைக்கும் எந்த முன்னேற்றமும் இல்லாது வயல்களில் எருமை மேய்ப்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை. மலையக குழந்தைகளை வீட்டு வேலைக்கு அடிமைகளாய் இழுத்துப்போனதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. சிரிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா போக இருந்த மலையகத்து மக்களை ஆசை காட்டி வன்னியில் ரகசியமாய் இருக்க வைத்து, இன்று அவர்கள் பெரும்பான்மையாய் அகதி முகாம்களில் துன்பப்படுவதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. இப்போ பனந்தோப்பில் நிலா சோறு சாப்பிடமுடியவில்லையே என்று கவலை.
5) ஒரே ஒரு ஹோசி மின் தான் இருக்க முடியும். 2 -3 மில்லியன் ஈழத்து ஹோசி மின்கள் மேற்குலகில் இருக்கிறார்களா? ஆச்சரியமாய் இருக்கிறது. மேற்கு நாடுகளுக்கு போன ஈழ தமிழரில் 90 விழுக்காடு காசு சேர்க்கத்தான் வந்தார்கள் என்கிற கொள்கையில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன். அது தான் உண்மை. மேற்கின் மானுடவியலாளர்கள் (உபயம்: சபா. நாவலன்) சொல்வது போல் இவர்கள் அங்கேயே தங்கிவிடுவார்கள். ஆனால் நிச்சயம் தாய் நாட்டுக்கு போவார்கள். எப்படி? ஒரு டூரிஸ்ட் ஆக – இன்னோர் முதலாளித்துவ பிரதிநிதி! ஏன் இப்போதே பார்க்கிறோமே! கொடி பிடித்து கூச்சல் போடுவது தான் போராட்டம், காசு தான் கடவுள் என்று நினைக்கிற (அநேகமாய் எல்லார் வீடுகளிலும் சாமி அறைக்குள் நிச்சயமாய் லட்சுமி படம் இருக்கும் என்று நம்புகிறேன்) இந்த கூட்டத்துக்கா போராட வா! சர்வதேச தேசியமாய் மாறி வா! என்று உபதேசம் செய்வீர்கள்?
சுயவிமர்சன சூறாவளி புலத்தில் மையம்கொண்டு ஏனைய இடங்களையும் தாக்கக்கூடும்…