11.11.2008.
கிழக்கில் சிங்கள அதிகாரத்தை வலுப்பெறச் செய்யும் வகையிலான இரகசிய சதித்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நம்பகத் தகுந்த தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அதிகாரப் பலத்தை வலுவிழக்கச் செய்யும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் மிகவும் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறப்பினர் கருணாவிற்கும், முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை பலவீனமடையச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கிழக்கில் தமிழ் அல்லது முஸ்லிம் சமூகங்களின் ஆட்சி அதிகாரம் வலுப்பெறுவதனை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மறைமுகமாக தடுத்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.
தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையேயான உட்கட்சி பூசல்கள், சமூகங்களுக்கு இடையிலான பிளவு ஆகியவற்றினைப் பயன்படுத்தி கிழக்கில் சிங்கள மயமாக்களை மெதுவாக அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கைகளில் திறமையான தமிழர்கள் பங்கேற்பதனை அரசாங்கம் விரும்பவில்லை, ஆற்றல் மிக்க தமிழர்கள் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் தமிழர் ஆதிக்கம் கிழக்கில் ஓங்கக் கூடாதென்பதில் அரசாங்கம் மிக திட்டவட்டமான கொள்கைகளை முன்னெடுக்கின்றது.
இதன் காரணமாகவே, கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் பதவி நீக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோர் மீது தாக்குதல் நடத்தும் பொருட்டு 200 முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றிலிருந்து கிடைக்கும் இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படக் கூடும் என குறிப்பிடப்படுகிறது.
மறைமுக செயற்பாடுகளின் மூலமாக கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தை வீழ்ச்சியடைச் செய்ய அரசாங்கம் தீவிர முயற்சி காட்டி வருவதாகவும், இவ்வாறு வீழ்ச்சியடையும் பட்சத்தில் தமிழர்களுக்கு மாகாணசபையின் மூலமான தீர்வுத் திட்டம் பொருத்தமாகாதென இந்தியாவிற்கு அறிவிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் சகல பிரதேசங்களிலும் ஆட்சியை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.globaltamilnews.net/