தேர்தல் முடிவுகள் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை என அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் பிலிப் க்ரவுட்லி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தமது அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
70வீதமானவர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளமை வரவேற்கத் தக்க விடயம் எனவும், இது ஜனநயாகம் அடைந்த வெற்றியாக கருதப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறு சம்பவங்களைத் தவிர தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேர்தல் விதிமுறைகள் மீறலா? விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தல்:
“இலங்கையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறப்படுவது குறித்து, முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கும், ராஜபக்ஷே வெற்றி பெற்றதற்கும் அமெரிக்கா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தேர்தலின்போது வன்முறைகள் நடந்ததாகவும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் வெளியாகியுள்ளது, கவலை அளிப்பதாக உள்ளது.குறிப்பாக பிரசாரம், ஓட்டுப் பதிவு, ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றின்போது விதிமுறைகள் மீறப்பட்டதாக சில தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இலங்கை அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும். பிரசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அதிகாரிகளின் கடமை.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்.