உண்மை கண்டறியும் சோதனை பொய்யா?உண்மையா?: டி.அருள் எழிலன்

இக்கட்டுரை ஜூலை, 18-ஆம் தியதி 2008, வெள்ளி மதியம் எழுதப்பட்டது. இத்தோடு பல் வேறு மனித உரிமை ஆர்வலர்களும் உண்மை கண்டறியும் சோதனை என்ற பெயரில் நடக்கும் மயக்கநிலை சித்திரவதையான நார்கோ அனாலிசிஸ்சுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.அனாலும் தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் கோபட் காண்டேயும் இப்படியான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இப்படியான சோதனை மையம் ஒன்றை தமிழகத்திலும் கொண்டு வரும் முயர்ச்சி நடந்து கொண்டிருக்க உற்சாகப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றம் உண்மை கண்டறியும் சோதனைக்கு எதிராக ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறது. இந்திய அரசின் சட்டம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கியுள்ள உரிமைகளை இது பறிக்கிறது என்றிருக்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன். ஆனாலும் நீதிமன்றம் எனபது கருத்துச் சொல்லும் ஒரு கருத்துப் பீடமாக மாறிப் போயுள்ள நிலையில், சட்ட ரீதியாக போராடுவோருக்கு இந்த கருத்து உதவும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை இங்கே மீள்பிரசுரம் செய்கிறேன்.

உண்மை கண்டறியும் சோதனை பொய்யா?உண்மையா?

ரௌடிகள் என்கவுண்டருக்கு பயப்படுவதைப் போல குற்றவாளிகள் என சந்தேகப்படுவோர்.அஞ்சி நடுங்குவது உண்மை கண்டறியும் சோதனைக்கு.தமிழகத்தில் அதியாமான் கோட்டை காவல் நிலையத்தில் காணாமல் போன துப்பாக்கிகளுக்கு காரணமானவர்கள் என்று போலீஸ் கஸ்டடியில் சிக்கியிருக்கும் எட்டு காவலர்கள் உட்பட வட இந்தியாவையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் ஆருஷி தல்வார் கொலை வரை இன்றைய ஹாட் டாப்பிக் நார்கோ அனாலிசைஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனைதான்.இந்த சோதனைகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் கொடி பிடிக்கத் துவங்கியிருக்கிறன.‘‘அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத இந்த சோதனைகள் மனித உரிமைகளுக்கு எதிரானது’’ என்ற குரல்கள் இந்தியாவில் எழத் துவங்க.இந்த சோதனைகளை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது.பெங்களூர் ஹைதராபாத் நகரங்களில் மட்டுமே உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது.இப்போது தமிழக அரசும் உண்மை கண்டறியும் சோதனை மையம் ஒன்றை சென்னையில் அமைக்க நிதி ஒதுக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

உண்மை கண்டறியும் சோதனை என்றழைக்கப்படும் Narco Analysis சோதனையில் குற்றம் சாட்டப் பட்டுள்ளவரின் உடலுக்குள் மயக்க மருந்தை செலுத்துவதன் மூலம் அவரின் கற்பனைத் திறனை மட்டுப் படுத்தி மனதை அறை மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காகவோ அல்லது வழக்கின் கண்டு பிடிக்கப்படாத ரகசியங்களை அறிந்து கொள்ளவோ மேற்கொள்ளப்படும் முயர்ச்சிதான் இந்த உண்மை கண்டறியும் சோதனை.உலகம் முழுக்க பல்வேறு மயக்க மருந்துகள் இந்த சோதனைக்கு பயன் படுத்தப்பட்டாலும் இந்தியாவில் சோடியம் பென்டத்தால்,சோடியம் அமிட்டால் போன்ற மயக்க மருந்துகளே உண்மை கண்டறியும் சோதனைக்கு பயன் படுத்தப்படுகின்றன.இந்த மருந்துகள் செலுத்தப்பட்ட சில நொடிகளிலேயே சம்பந்தப்பட்டவர் அறை மயக்க நிலைக்கு சென்றுவிடுவார்.அதிலும் சோடியம் பென்டத்தால் அதி வேகமாக செயல்படும்.நம் கனவுகள்,கற்பனைகள்,புனைவுகள் என மூளையோடு தொடர்புடைய அனைத்துமே நமது கற்பனைத்திறனால் உருவாவை.சோடியம் பென்டத்தால் செலுத்தப்பட்ட சில நொடிகளிலேயே மருந்து செலுத்தப்பட்டவரின் கற்பனைத்திறன் மட்டுப்படுத்தப் படுகிறது.இப்போது அவர் அறை மயக்க நிலைக்கு சென்று விடுகிறார்.அவரால் தானாக முன் வந்து எதுவும் பேச முடியாது.பெயர் என்ன என்று கேட்டால் பெயரைச் சொல்வார்.ஆருஷியை நீ கொன்றாயா? என்று கேட்டால் ஆம்…அல்லது இல்லை என்று ஒரு வரியிலேயே பதில் சொல்ல முடியும்.ஆமாம் அதனால்தான் மனித உரிமை ஆர்வலர்கள் இதை ஒரு விசாரணை முறையாகக் கூட ஏற்றுக் கொள்ள வில்லை காரணம்.ஆம்..அல்லது இல்லை என்று ஆழ்ந்த நித்திரையில் அல்லது மயக்கத்தில் இருக்கும் ஒருவர் சொல்வதை எப்படி அவருக்கு எதிராகவே பயன் படுத்த முடியும் என்று கேட்கிறார்கள்.அது மட்டுமல்லாமல் செலுத்தப்படும் இந்த மருந்து இதயத்துடிப்பின் வேகத்தை,ரத்த நாளங்களின் ஓட்டத்தை,முதுகெலும்பின் வலுவை,இவை எல்லாவற்றையும் விட மூளையின் செயல்பாட்டை சோர்வடையச் செய்கிறது அது மட்டுமல்லாமல் இந்த மருந்துகள் கொடுக்கப்படும் போது பரிசோதனைக்கு உள்ளாபவரின் வயது,உடல் நிலை,ரத்த அழுத்தம் என எதிலொன்றிலும் கவனக்குறைவாக இருந்தால் மயக்க நிலைக்கு சென்றவர் மீண்டும் நினைவு திரும்பாமலேயே மரணத்தை தழுவும் ஆபத்தும் உண்டு.அப்படியே நினைவு திரும்பினாலும் மருந்தின் பின் விளைவுகளை அவர் காலா காலத்துக்கும் அனுபவிக்க நேரிடும்.இயல்பாக இருக்கும் ஒருவரை சோர்வடையச் செய்வதன் மூலம் வாக்குமூலம் பெற நினைப்பதே நமது காவல்துறையின் திறமைக் குறைவுதானே?என்கிறார்கள்

.
பொதுவாக உண்மை கண்டறியும் சோதனைகளின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளை ‘‘உண்மை திரவங்கள்’’என்று அழைக்கிறார்கள்.ஒரு வேளை போலீசார் விரும்பும் வகையில் சந்தேகப் படுபவரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் இந்த இயந்திரம் பொய் பேசுகிறது என்று அர்த்தமா?இந்தியாவில் இது வரை எந்த வழக்கிலாவது இந்தச் சோதனை வெற்றிகரமாக பயன் பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.ஏனென்றால் தந்திரமாக நடித்து இந்த இயந்திரத்தைக் கூட சிலர் ஏமாற்றிவிட முடியும் என்கிற பார்வையும் உண்டு

.
இது போலத்தான் p-300 என்றழைக்கபப்டும் பிரெய்ன் மாப்பிங் (Brain Mapping) அல்லது பாலிகிராப் (Poly Graph test) சோதனைகள்.உண்மை கண்டறியும் சோதனையின் தவிர்க்க முடியாத இன்னொரு சோதனையாக மூளையையும் இதயத்தையும் பகுத்தறியும் இந்த சோதனையும் இன்று நடைபெறுகிறது.குற்றம்சாட்டப்பட்டவரின் இதயப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் வயர்கள் மூளையின் அதிர்வலைகளை உணரும் தன்மை கொண்டவை இது கணிப்பொறியோடு இணைக்கப்பட்டிருக்கும் கொலையுண்ட நபரின் குரலையோ புகைப்படத்தையோ குற்றம் சாட்டப்பட்டவரிடம் காட்டினால் அவரது மூளையில் அது p-300 என்னும் அதிர்வலைகளை வெளிப்படுத்தும்.உதாரணத்திற்கு நாம் வசிக்கும் வீட்டின் அருகே ஒரு கொலை நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அந்தக் கொலையை நாம் கண்ணால் பார்க்கிறோம் ஆனால் அந்தக் கொலையில் நமக்கு எந்த தொடர்பும் இல்லை.ஆனால் போலீஸ் நம்மை சந்தேகிக்கிறது நம்மை அழைத்துப்போய் பிரெய்ன் மாப்பிங் டெஸ்டில் அமர்த்தி கொலையான நபரின் புகைப்படத்தையோ குரலையோ நமக்கு காட்டினால் நமது மூளைp-300 அதிர்வலைகளை வெளிப்படுத்தாமல் என்ன செய்யும்.அப்படி அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாலேயே அந்தக் கொலையில் நமக்கும் தொடர்புண்டு என்கிற முடிவுக்கு வர முடியுமா?அப்படி வந்தால் இந்த உண்மை கண்டு பிடிப்பு இயந்திரங்களின் நம்பகத்தன்மைதான் என்ன?


இம்மாதிரி சோதனைகளை குற்ற வழக்குகளில் ஆவணமாகவோ சாட்சியமாகவோ சேர்க்க முடியுமா?என்றால் உலகின் பல்வேறு நாடுகளும் இந்த உண்மை கண்டறியும் சோதனைகளை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை என ஒதுக்கி வைத்திருக்கின்றன. நீதி மன்றங்களோ இதை ஏற்றுக் கொள்ள முடியாது என மறுதலித்திருக்கின்றன.ஆனால் இந்தியாவில் நீதிமன்றங்கள் இம்மாதிரி சோதனைகளை பிரதான சாட்சியங்களாக எடுத்துக் கொள்ளாவிடினும் இதனடிப்படையில் குற்றவாளிகள் யாரையும் தண்டித்ததில்லை.ஆனால் இம்மாதிரி சோதனைகளுக்கு இந்திய நீதிமன்றங்கள் தடை விதித்ததில்லை மாறாக அனுமதியளிக்கின்றன.

மும்பையில் தன் வீட்டுக்குள்ளேயே கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஆருஷியின் கொலையில் சில நாட்கள் வரை எந்த துப்பும் கிடைக்க வில்லை.கடைசியில் ஆருஷியின் தந்தை டாக்டர் தல்வாரை கைது செய்தது போலீஸ்.முறை தவறிய உறவு,வேலைக்காரருடன் பழக்கம் என பல கதைகள் ஆருஷியைச் சுற்றி பின்னப்பட்டாலும் இது எதுவும் நீரூபிக்கப்பட வில்லை.தல்வார் உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.ஒரு பயனும் இல்லை வழக்கு சி.பி.ஐ&க்கு மாற்றப்பட்ட பிறகு தல்வாரின் மருத்துவமனை உதவியாளர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு அவரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.அநத சோதனையின் முடிவும் ரகசியமாக வைக்கப்பட்ட பிறகு கிருஷ்ணாவும் அவரது நண்பர் ராஜ்குமாரும் சேர்ந்து செய்த கொலைகள்தான் ஆருஷியும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹெம்ராஜ் என்பரின் கொலையும் என்றும் போலீஸ் இப்போது கூறுகிறது.ராஜ்குமாரின் ரத்தக் கறைபடிந்த சட்டையை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது.இந்தியாவையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையை விட சி.பி.சி அதிகாரிகளின் விசாரணை திறமையே கொலையின் முடிச்சுகள் அவிழ காரணமாக இருந்திருக்கிறது.

உலக அளவில் இம்மாதிரி சோதனைகளை மனித உரிமைகளுக்கு எதிரானது என்று பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் சொல்கிறது. 1987 – ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா சபையின் சித்திரவைக்கு எதிரான உடன்படிக்கையில் சித்திரவதை என்ற சொல்லுக்கான பொருள் வரையறை செய்யப்பட்டது.‘‘ஒரு நபரிடமிருந்தோ அல்லது மூன்றாவது நபரிடமிருந்தோ ஒரு தகவலையோ ஒப்புதல் வாக்குமூலத்தையோ பெற உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடும் வலியை கொடுந் துன்பத்தை உண்டாக்கும் நடவடிக்கையே சித்திரவதையாகும்’’என்கிறது ஐநாவின் மனித உரிமை விளக்கம்.சட்ட ரீதியாக உண்மை கண்டறியும் சோதனைகளுக்கு எதிராக இதை வைத்தே வாதாட முடியும்.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 20(3) குற்றம் சாட்டப்பட்டுள்ள எவரையும் அவருக்கு எதிராகவே சாட்சியமளுக்கும் படி நிர்பந்திக்கக் கூடாது என்கிறது

.
இதில் வேடிக்கை என்னவென்றால் உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்படும் போது மயக்கமருந்து செலுத்துகிற ஒருவர்,மனநல மருத்துவர்,க்ளினிக்கல் சைக்காலஜிஸ்ட்,ஆடியோ வீடியோ கிராபர்,நர்ஸ் என ஐந்து அல்லது ஆறு பேர் இருக்க மனநல நிபுணர் சம்பந்தப்பட்டவரின் முனகலை வாக்குமூலமாகவோ விசாரணை அறிக்கையாகவோ பதிவு செய்வார்.எக்காரணம் கொண்டும் காவல்துறையினர் பரிசோதனை நடக்கும் பகுதிக்குள் நுழைய அனுமதி கிடையாது.ஆனால் இந்தியாவில் காவல்துறையினரே உண்மை கண்டறியும் போது சுற்றி அமர்ந்து கொண்டு கேள்விகளைக் கேட்பது வேடிக்கையான வேதனை.அதிலும் சில மருத்துவர்களும் உண்மை கண்டறியும் சோதனைகளில் கலந்து கொண்டு பின்னர் அதை பெரும் வீரமாக பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.ஆனால் மருத்துவர்களை அங்கீகரிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் என்ன சொல்கிறது தெரியுமா?‘‘மனித உரிமைகளுக்கு எதிரான வகையில் ஒரு நபரை சித்ரவதை செய்வதற்கு உதவியாகவோ,உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு மருத்துவர்கள் உடந்தையாக இருக்கக் கூடாது என்கிறது’’

ஸ்காட்லாந்த் யார்டுக்கு நிகராக ஒப்பிடப்படும் தமிழக போலீஸ் கூட பல வழக்கு விசாரணையில் தங்களின் பலவீனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.விசாரணை அதிகாரியின் திறமை மட்டுமே குற்ற ரகசியங்களை வெளியில் கொண்டுவரப் பட்டு விசாரணை முறைகள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டுமே தவிற இயந்திரமயமாக்கப்படக் கூடாது

One thought on “உண்மை கண்டறியும் சோதனை பொய்யா?உண்மையா?: டி.அருள் எழிலன்”

  1. இக்கட்டுரையை ஏற்கனவே வாசித்திருக்கிறேன் நல்ல கட்டுரை. குற்றவாளி என சந்தேகப்படும் ஒரு நபரை மயக்க மருந்து கொடுத்து விசாரணை என்ற பெயரில் நடக்கும் வன்முறையே?

Comments are closed.