முற்றத்து மல்லிகையின் நறுமணமும், தூரத்து வேப்பமரத் தென்றலின் வருடலும் பட்சிகளின் கொஞ்சலுமாய் விடியும் அதிகாலை அப்போது கோரமாக மட்டும் தெரிந்தது! அச்சமும் அழுகுரல்களும் மரண ஓலமும் எம்மைத் துயிலெழுப்பின. கந்த நெடியும், வெடிகுண்டு ஒலியும் எப்போது எமது மரணத்தைக் கொல்லைப்புறத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தது. அருகே உறங்கிய நண்பன் இரத்த வெள்ளத்துள் மிதந்ததை சகித்துக்கொண்ட நாட்கள் அவை.
அவலத்துள் மோதிய மக்கள் மேல். உலகத்தின் போர் விதிகள் அத்தனையையும் மீறி உயிர்ய்க்கொல்லி ஆயுதங்கள் பாய்ந்தன. பலிக்குக் கொண்டு செல்லப்பட்ட விலங்குகளைப் போல் நாமெல்லாம் சில மைல் சுற்றளவிற்குள் ஆயுதங்களோடு அலைமோதிக்கொண்டிருந்தோம். ‘உலகம் வாழாவிராது, வந்து காப்பாற்றும்’ என வழங்கப்பட்ட நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் என இறுதி நாட்கள் வரை நாம் நம்பியிருக்கவில்லை.
உலகத்தின் பலம் மிக்க ஆயுதக் இயக்கம் எப்படித் தோற்றுப் போனது? எல்லா வளங்களையும் வைத்துக்கொண்டிருந்த எமது நிலைகள் எப்படித் தகர்ந்து போயின? போராட்டத்தின் எச்ச சொச்சங்கள் கூட இல்லாமல் ஒரு சமூகம் எப்படித் தலை கீழாக மாற்றப்பட்டது?
இவை எல்லாம் ஒரு வகையில் நேர்மையாக இதய சுத்தியுடன் ஆராயப்பட வேண்டும். நாளைய சந்ததி தமது முன்னையவர்கள் பொய்யான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் எனக் குறை கூறிவிடக்கூடாது. இன்றைய வளரும் சந்ததி பொய்கள் சகஜமானது என எண்ணிக்கொண்டிருக்கிறது. போலித்தனம் சாதாரணமானது என நம்பிக்கொண்டிருக்கிறது. வீரம்செறிந்த எமது போராட்டத்தின் நோக்கம் புதிய நேர்மையான மக்கள் மீது பற்றுக்கொண்ட ஒரு புதிய சந்ததியை உருவாக்குவதே என நம்பியிருந்தவர்கள் பலர்.
சிங்கள அதிகாரவர்க்கத்தின் நலனுக்காக தமிழ்த் தேசிய இனத்தின் மீதான ஒடுக்கு முறைகள் முழுச் சிங்கள மக்களுக்கும் மூடி மறைக்கப்படுகிறது. இனப்படுகொலை சமாதானத்திற்கான போர் என பெரும்பாலான சிங்கள மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். அங்கும் பொய்களின் மேல் உட்காந்திருக்கும் சமூகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மறுபக்கத்தின் எமது வரலாற்றின் உண்மை முகம் புதைக்கப்பட்டு தமிழ் வியாபாரிகளின் தேவைக்காக பொய்யான சமூகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
எப்போதும் செத்துப்போகலாம் என சயனைட் குப்பிகளோடு யுத்த முனைகளின் போராடிய என்னைப் போன்ற போராளிகள் இதனை அனுமதிக்க மாட்டார்கள். மக்களுக்கு உண்மைகளை அறிந்துகொள்ளும் உரிமை உண்டு. அதனை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. மக்களுக்காகவே நாங்கள் போராடினோம்.
எம்மை மற்றவர்கள் ஆராய்ந்தால் அது விமர்சனம், எதிரிகள் எமது தவறுகளைத் தூற்றினால் அது சேறடிப்பு, நாமே நமது சரிகளையும் தவறுகளையும் ஆராய்ந்தால் அது சுய விமர்சனம்.
எம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொண்டால் மட்டுமே எதிரிகள் எம்மீது சேறடிக்க முடியாது. எமது தவறுகளை ஒப்புக்கொண்டும், சரியான பக்கங்களை சமூகத்தின் மத்தியில் எடுத்துச் சென்றும் புதிய சந்ததிக்கு விட்டுச் சென்றால் மட்டுமே நம்பிக்கை பிறக்கும். தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய போராட்ட வழிகளைக் கட்டமைத்தால் மட்டுமே அவநம்பிக்கை செத்துபோகும்.
40 வருட ஆயுதப் போராட்டத்தின் பின்னர், எல்லாம் சரியாகிவிட்டது என இலங்கை அரசாங்கம் கூறுகிறது. வரலாறு இனப்படுகொலைகளை தனது வழி நெடுகிலும் சந்தித்திருக்கிறது. இன்னும் அது நடக்காது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. ஆக, அச்சம் சூழந்த சூழலுக்குள்ளேயே மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். நாம் பிரிந்துசென்று வாழ்வதற்கான போராட்டம் இன்று இல்லாவிட்டாலும் நாளை ஆரம்பமாகும் என்பது உறுதியானது. அதற்கான நம்பிக்கை வழங்கப்பட வேண்டும். அதன் முதல்ப்படி நேர்மையான சமூகம் ஒன்று உருவாக்கப்பட்டு, அரசியல் வியாபாரிகள் ஓரம்கட்ட்டப்பட வேண்டும்.
இறுதி யுத்த காலத்தில் களத்தில் நின்ற போராளி என்ற வகையிலும், தலைமையுடன் நேரடித் தொடர்பிலிருந்தவன் என்ற வகையிலும் இனப்படுகொலையின் நேரடிச் சாட்சி நான். இரசாயனக் குண்டுகளிலிருந்து யுத்தமுனையிலிருந்து தப்பிவந்த மிகச்சில போராளிகளில் நானும் ஒருவன். இறுதி நாள் வரை எனது அனுபவங்கள் தொடர்பான எனது இப் பதிவு புதிய நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கட்டும்.எனது இப் பதிவு நேர்மையான ஒளிவு மறைவற்ற சுய விமர்சனமாக அமையும். ஒடுக்கப்படும் எமது தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை தொடர்வதற்கான வழிகளை திறக்கட்டும். நண்பர்களையும் எதிரிகளையும் இனம்கண்டுகொள்ள துணைபுரியட்டும்.
தொடரும்…
இறுதி யுத்தம் வரை எனது நேரடிச் சாட்சி : ஜனா
தொடரும்….. ஆனால் தொடராது.
Why…?
தமிழர்களின் சுஜநலமே தோல்விக்கு காரணம் , போராளிகளை விட துரோகிகளே இஜக்கத்துக்குள் இருந்ததை தலைமை காணாதது வேதனை தான்,