வன்னியில் இலங்கைப் பேரினவாத அரசினால் ஆயிரமாயிரமாய் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது உலகின் அதிகாரவர்க்கங்கள் அனைத்தும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. கொலைகளை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்த உலக நாடுகளின் அதிகார அமைப்புக்கள் கொலைகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அதற்கான குற்றவாளிகளைத் தண்டிக்கப் போவதாக நாடகமாடின. இந்த நாடகத்தின் கோமாளிகளாக தமிழர் தலைமைகள் இணைந்துகொண்டன.
அமெரிக்காவும் ஐ.நா சபையும் வன்னிப் படுகொலைகளின் பின்னான விசாரணைகளைக் கையகப்படுத்தி தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டன.
அமெரிக்க அரசு ஐ.நா உட்பட்ட அதிகார மையங்கள் இனப்படுகொலை தொடர்பான போராட்டங்கள் அனைத்தையும் முடக்கி போராடும் மக்கள் மத்தியிலிருந்தும், ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்தும் ஈழப் போராட்டத்தை அன்னியப்படுத்தி சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிக்க உதவின.
அமெரிக்காவும் அதன் அடியாள் அமைப்பான ஐ.நா வும் உலகம் முழுவதும் கடந்த காலங்களில் போராட்டத்தை அழித்த வரலாறுகளை உதாரணம் காட்டி புதிய அரசியல் வேலை முறையின் அடிப்படையில் போராட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்று எழுந்த குரல்கள் நசுக்கப்பட்டன.
இன்றைய இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்குத் தகுதியான அரசு எனக் கணிப்பிடும் ஐ.நா இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு நிதி உதவி வேறு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் இன்றும் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் நிலையில், நிலமும் வளங்களும் சூறையாடுப்படும் நிலையில், அரசியல் கைதிகள் இன்னும் சிறைகளில் சித்திரவைதை செய்யப்படும் நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் இராணுவம் தனது நிலைகளை உறுதிப்படுத்தும் நிலையில், இலங்கை அரசிடமே போர்க்குற்ற விசாரணை நடத்தும் பொறுப்பை ஐ.நா ஒப்படைக்கிறது.
இதற்காக மூன்று பில்லியன் டொலர்களை ஐ.நா இலங்கைக்கு வழங்கத் தயாராகிறது. இலங்கையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிதி வழங்கப்படுவதகத் தெரிவிக்கிறது.
தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட வேண்டும் என ஐ.நாவின் சாசனம் கூறுகிறது. சுய நிர்ணைய உரிமையை மட்டுமல்ல சுயாட்சியைக் கூட மறுக்கும் இலங்கை சிங்கள பௌத்த அரசிடம் விசாரணைகள் ஒப்படைக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலை தோன்றும் என எதிர்வுகூறப்பட்ட போதும், ஐ.நா விற்கு வெளியில் எந்த வேலைத்திட்டமும் இன்றி, தமிழர்களை நட்டாற்றில் விட்டிருக்கும் தமிழ்த் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் புலம்பெயர் அமைப்புக்கள் இன்றும் தமே தமிழர்களின் தலைமை என எந்தக் கூச்சமுமின்றிக் கூறுகின்றன.
நம்பிட்டோம். புள்ளைய கிள்ளிவிட்டு, பிறகு தொட்டில் ஆட்டு.