காணமல் போனவர்களை விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்திய விபூசிக்கா மற்றும் ஜெயக்குமாரி ஆகியோர் மீது பயங்கரவாதிகள் எனக் குற்றம் சுமத்தி இலங்கை அரசு சிறையிலடைத்தது. ஜெயகுமாரி பாலேந்திரன் அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்பு கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் உள்ள தனது மகளை தன்னுடன் இணைக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனுக்கொடுத்திருந்தார். அம்மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விபூசிக்கா என்ற குழந்தையின் மீதும் பயங்கரவாதக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் அவரை விடுதலை செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விபூசிக்கா மீதான குற்றத்தைத் திரும்பப் பெற்றால் மட்டுமே அவர் விடுதலை செய்யப்படுவார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறையிலிருக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அப்பாவிகள் மீது பயங்கரவாதக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பத்து வருடங்கள் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சி நடத்திய மைத்திரிபாலவும், மனிதப்படுகொலைகளை ஆரம்பித்துவைத்த யூ.என்.பி கட்சியும் இணைந்து நடத்தும் நாடகத்தில் நீதி மன்றங்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியாது என்பதற்கு விபூசிகா ஒரு உதாரணம்.
ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அனைத்து ஒடுக்கு முறைக்கு எதிரான பொதுக் கருத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மகிந்த ராஜபக்சவைத் தண்டிப்பதை மட்டுமே அரசியலாகக் கொண்டிருந்த தமிழ்த் தலைமைகள் மைத்திரியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்குத் துணை போயின.
இன்று மைத்திரி அரசின் கீழ் மிகத் தந்திரமாக இனவழிப்புத் தொடர்கிறது. மக்களை அணிதிரட்டுவதும் போராட்டத்திற்கு தயார்படுத்துவதும் இன்றைய காலத்தின் தேவை.