அமெரிக்கா -தனது நேச நாடுகள் தவிர்ந்த- அதிகமாக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் அனைத்திலும் இரத்த ஆறு பெருக்கெடுத்திருக்கிறது. ஈரான், ஈராக், லிபியா, மாலைதீவு என்ற ஒரு பட்டியலையே போட்டுக்காட்டலாம். உலகைக் கொள்ளையடிக்கும் பல்தேசியப் பெரு நிறுவனங்களின் தலைமையகமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதம் உலகின் மூலை முடுக்கெல்லாம் படுகொலைகளை நடத்தியிருக்கின்றது. பல்தேசிய நிறுவனங்களின் இலாப்ப் பசியைத் தீர்ப்பதற்கு அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம் ஆயிரமாயிரமாய் மனித உயிர்களைத் தீனியாகக் கொடுத்துள்ளது.
உலகில் மக்கள் வெற்றிபெற்ற எல்லாப் போராட்டங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களாகவே அமைந்திருக்கின்றன. மக்களின் உரிமைக்கான போராட்டங்களை அழிக்கும் கருத்தியல் மற்றும் இராணுவக் கொலைக்கருவிகளை அமெரிக்காவே உலகில் முதல் தடவையாக அறிமுகப்படுத்திற்று.
தன்னார்வ நிறுவனங்கள், உளவு அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், உலகவங்கி, நாணய நிதியம் போன்ற பொருளாதார அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை அமைப்புக்கள் என்று நூற்றுக்கணக்கான உப கூறுகள் அமெரிக்கா ஏகாதிபத்தியப் பயங்கரவாதத்தின் முகவர் நிறுவனங்களாகச் செயற்படுகின்றன.
புரட்சிகளையும் போராட்டங்களையும் அழிப்பதற்கு ‘எதிர்ப்புரட்சி அமைப்புகளை’ அமரிக்கவே தோற்றுவித்தது. புரட்சிகளைத் தனது முகவர்கள் ஊடாகத் தலைமை தாங்கி அழித்தது.
உலகத்தில் நாகரீமடைந்த சமூகங்கள், மக்கள் பற்றும் மனிதாபிமானமும் உடையவர்கள் அமெரிக்காவை எதிரியாகவே எண்ணுகின்றனர். தமிழர்கள் மட்டும் ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரப்போகும் போர்க்குற்ற அறிக்கையை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு உரிமைகளைக் கோட்டைவிட்டார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் இதுவரை களமாடிய அமெரிக்கா அங்கு ஆயிரக்கணக்கான அகதிகளைத் உருவாக்கியது. லட்சம் லட்சமாக மக்கள் கொல்லப்பட்டனர். சர்வாதிகளையும், கொடுங்கோலர்களையும் வளர்த்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிற்று.
இனிமேல் ஆசியாவில் தாம் கவனம் செலுத்த வேண்டும் என ஆசிய பசிபிக் கட்டளை என்ற கடற்படைப் பிரிவை ஆரம்பித்து ஆசியக் கடற்பிராந்தியத்தை இராணுவமயப்படுத்திற்று. வன்னிப் படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்டு தெற்காசியாவில் மனிதப் பலிகளை ஆரம்பித்து வைத்தது.
உலகத்தில் குற்றச் செயல்கள் மிகக் குறைவாகக் நடைபெறும் நாடுகளில் ஒன்றான மாலைதீவில் இந்தியாவுடன் இணைந்து சதிப் புரட்சியை ஆரம்பித்து வைத்தது. இந்தியாவில் ஒரு புறத்தில் இந்து பாசிசத்தையும் மறு புறத்தில் இஸ்லாமியத் தீவிரவாதத்தையும் உருவாக்கத் துணை போயிற்று.
இலங்கையில் அமெரிக்காவின் அனுசரணையுடன் கொலைகளுக்காக வளர்க்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றிவிடு தனது பொம்மைகளை ஆட்சியிலமர்த்க ஜோன் கெரி நேரடியாகவே தலையிட்டார். சர்வாதிகாரி மகிந்த ஆட்சியிலிருந்து விலக மறுத்த போது கெரி தொலைபேசியில் மகிந்தவை மிரட்டினார் என்ற செய்திகள் வெளியாகின.
உககத்தின் தெற்காசிய மூலையின் கண்ணீர் போலக் காட்சி தரும் இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர் திடீர்ப் பயணம் செய்வது என்பது அமெரிக்க அரசின் நேரடித் தலையீட்டின் முன்னறிப்பாகும். அழிவிற்கான முன்னெச்சரிக்கையாகும். தெற்காசியாவில் தலையிடும் அமெரிக்காவின் திட்டத்திற்கு இலங்கையே தளமாகப் பயன்படுத்தப்படும்.
வியட்னாம் யுத்தத்தின் போது தாய்லாந்து நாடு அமெரிக்காவின் பின் தளமாகச் செயற்பட்டது. அமெரிக்க இராணுவம் தாய்லாந்தின் கலாச்சாரத்தையே தலைகீழகப் புரட்டிப் போட்டது. அமெரிக்க இராணுவம் தாய்லாந்தில் தங்கியிருத்த போது பெண்களைப் பாலியல் வல்லுறவிற்கு உடப்டுத்தியது. பின்னர் பாலுறவைத் தொழிலாக மாற்றியது. இன்றும் தாய்லாந்தின் பிரதான தேசிய வருவாய்களில் ஒன்றாக பாலியல் காணப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவது ஆதரபூர்வமாக நிறுவப்பட்டது. உலகம் முழுவதும் அமெரிக்க அரசு நடத்தும் நர வேட்டையை இலங்கையிலும் அதே வேகத்தில் ஆரம்பிக்கத் தலைப்படுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஜோன் கெரி நாளை 02.05.2015 இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். இதன் பின்புலத்திலுள்ள ஆபத்தை ஆராய்வதைத் தவிர்த்து ஜேன் கெரியின் காலடியில் விழுந்து வணங்கத் தயாராகும் தமிழர்களுக்கு உலகில் போராடும் எந்த சமூகமும் ஆதரவு வழங்க முன்வராது.
ஜோன் கெரி சார்ந்த நாட்டின் ஆதரவுடன் நடைபெற்ற வன்னிப் படுகொலைகளின் போது கணவரை இழந்த இராணுவத்தின் மனைவியரை ஜோன் கெரி சந்தித்து ஆறுதல் கூறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதனை அறிந்த ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு என்ற ஏகாதிபத்திய ஒட்டுக்குழு தமிழர்களையும் சந்திக்குமாறு ஜோன் கெரிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஜோன் கெரிக்கு போர் புதியதல்ல, வியட்டனாமில் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்டதற்காக பதகம் பெற்றவர். 1971 ஆம் ஆண்டு வியட்னாமிய யுத்தத்திற்கு எதிராகச் செயற்பட்டதாகக் கூறும் ஜோன் கெரி, ஜோர்ஜ் புஷ் இற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தைப் பிரச்சார சாதனமாகப் பயன்படுத்தினார்.