நாள் ஒன்றிற்கு சராசரியாக இரண்டு மனிதர்களுக்கு மேல் அமெரிக்கப் போலிஸ் கடந்த வருடம் கொலை செய்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் இன் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கொலை செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் கறுப்பினத்தவர்களாகவோ அன்றி ஏனைய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகவோ காணப்படுகின்றனர் என அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
குறிப்பாக கொலைசெய்யப்பட்டவர்களில் கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கை ஏனையோரை விட மூன்றுமடங்கு அதிகம் எனத் தெரிவிக்கும் வாஷிங்டன் போஸ்டின் ஆய்வு, சிறுபான்மை இனத்தவருக்கும் போலிசாரிற்கும் இடையிலான மோதலின் போதே பெரும்பாலான கொலைகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கிறது.
பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவான அரசுகளால் மேற்கு நாடுகளில் கூட மக்களின் நாளாந்த வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது. பொருட்களின் திடீர் விலை உயர்வு, வரிச் சுமை, போன்ற அனைத்தும் மக்கள் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் சூழலை உருவாக்கின்றன.
மக்களின் சிந்தனையை திசைதிருப்பி அதிகாரவர்க்கம் தப்பிப் பிழைத்துக்கொள்ள நிறவாதம், இனவாதம் என்பன திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்படுகின்றன. இவற்றை அரசுகளே நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையில் நடத்தி வருகின்றன. நிறவாதப் பாசிசக் குழுக்களை அரசுகள் கண்டுகொள்வதில்லை. இதன் ஒருபகுதியாகவே சிறுபான்மை இனமக்கள் மீதான வெள்ளை நிறவெறி மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்படுகின்றது.