2015 மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையும் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்த காலம் நெருங்கி வரும் பொழுது மலையக பிரதேசத்தில் தொழிற்சங்கங்களும,; அரசியல் தலைவர்களும், கட்சிகளும் தங்களின் பார்வையினை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக திருப்பி வருவதனை காணலாம்.
இ.தொ.கா வழமையாக ஏதாவது ஒரு தொகையை கூறி பின்பு கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தையின் பின் குறிப்பிட்ட தொகையை விட குறைந்த ஒரு தொகையை மக்களுக்கு பெற்று கொடுத்து விட்டு, நாங்கள் தான் பெற்றுக் கொடுத்தோம் என்று மார் தட்டிக் கொள்வதும், அவர்கள் சார்ந்தவர்கள் இவர் இல்லாவிட்டால் இது கூட கிடைக்காது என்று கூறி மக்கள் மனங்களில் ஒரு வித பயத்தினை ஏற்படுத்துவதும் பட்டறிவு.
ஏனைய தொழிற்சங்கங்கள் ஏதாவது ஒரு தொகையை கூறிவிட்டு பிறகு மௌனம் காப்பதுவும், பத்திரிக்கைகளில் அறிக்கை விட்டு தப்பித்துக் கொள்வதும் வழமையான விடயமாகும்.
கடந்த பொது ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த மலையக தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், பிரஜைகள் முன்னணி என எல்லா தொழிற்சங்க அரசியல் கட்சிகளும், முன்னால் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச அவர்களின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட போது, அவர்களின் ஆசனங்களில் அமர்ந்து மேசைகளில் தட்டி தங்களின் ஒத்துழைப்பினை வழங்கியதினை நாட்டுமக்கள் கண்டனர். அதிலும் அதிகமாக தொலைகாட்சியில் தங்களின் காலத்தினை செலவு செய்யும் மலையக தோட்டத் தொழிலாளர்களும் பார்த்து ரசித்தனர். வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்ற போது பாராளுமன்றத்தில் எமது பிரதிநிதிகள் மிகவும் ஒய்யாரமாகவும் வசதியாகவும் தங்களின் ஆசனங்களில் அமர்ந்து இருந்தனர்.
இந்த வரவு செலவு திட்ட வாசிப்பில் முச்சக்கர வண்டியுரிமையாளர்களுக்கு விசேடமான சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டது. அது தான் முச்சக்கர வண்டியாளர்களுக்கான ஓய்வூதிய திட்டமாகும். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முன்னால் ஜனாதிபதி அறிவித்ததும், எமது தொழிற்சங்க பிரதிநிதிகள் மேசையில் தட்டி அவர்களது ஆதரவை வழங்கினார்கள்.
இலங்கைத் திரு நாட்டிற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் செய்யும் சேவையை பாராட்டி அவர்களின் எதிர்கால நன்மை கருதி அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானித்த எங்கள் அரசாங்கம், அதற்கு ஆதரவு வழங்கிய எங்கள் தலைவர்கள், எங்கள் சந்தாவைப் பெற்று தொழிற்சங்கம் நடத்தும் எங்களால் நியமிக்கப்பட்டவர்களின் தலையில் இருக்கும் மூளைக்கு ஏன் தோட்டத் தொழிலாளர்கள் நினைவிற்கு அந்த நேரத்தில் வரவில்லை என்று புத்தி ஜீவிகள் விசனப்படுகின்றனர்.
1973ல் டிசம்பர் மாதம் நடைபெற்ற சம்பள உயர்வுக்கான போராட்டமும், ஏமாற்றப்பட்ட மலையக மக்களும,; காட்டிக்கொடுத்த மலையக தலைவர்களும் இன்னும் எமது வாழ்க்கையில் மறக்க முடியாத வடுக்களாக பதியப்பட்டுள்ளன. 1973 ஆம் ஆண்டு போராட்டம் தோட்ட தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே நடத்தப்பட்டது.
1973 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தின் மூலம் மாத சம்ப கோரிக்கை வெற்றி பெற்றிருக்குமாக இருந்தால் இன்று எமது தொழிலாளர்கள் ஓய்வூதியத்தினை பெற்று மகிழ்வாக இருந்திருப்பார்கள்.
1983 ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு 100 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்ட போது தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட வில்லை. அப்போதும் எமது தலைமைகள் மௌனம் காத்தனர். எனவே மௌனித்து இருப்பதற்காகத்தான் நாங்கள் பாராளுமன்றம் போவோம,; நாங்கள் என்றும் ஆளும் கட்சியின் அடிமைகளாக மட்டும் தான் வாழ்வோம் என தீர்மானித்து விட்ட தொழிற்சங்கங்கள் மீண்டும் பொது தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அமைச்சு பதவிகளை பெற்று எதனை சாதிக்கப்போகின்றன என தோட்டத் தொழிலாளர்களின் மனங்களில் ஆயிரம் கேள்விகள் எழுந்துள்ளன.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களை சந்தோஷப்படுத்துவதா? தோட்ட தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம், மாத சம்பளம். ஓய்வூதியம் வழங்குவதா? என்று முதலாளிமார் சம்மேளனத்திட்டம் கேட்டால் தொழிற்சங்கங்களை சந்தோஷப்படுத்துவதே சிறந்தது என கூறுவார்கள்.
உதாரணம்
1000 தொழிலாளர்களுக்கு 24 மாதத்திற்கு நாள் ஒன்றிற்கு 1000 ரூபா வீதம் வழங்கினால் 1000ஓ1000 ஸ்ரீ 1000000
1000000ஓ 24 ஸ்ரீ 24000000 ரூபாய் கம்பனிகள் 2 வருடங்களுக்கு 24000000 இரண்டு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலவிடுவதை விட குறித்த இரண்டு அல்லது 3 தொழிற்சங்க தலைமைகளுக்கு மலைகளில் பறிக்கப்படும் கொழுந்து 1முப இற்கு 1 ரூபாய் வீதம் கமிஷன் ஒன்று வழங்குவது லாபகரமாகும். 1000 முப கொழுந்திற்கு ஒரு நாளைக்கு 1000ஓ 1ஸ்ரீ 1000ஓ 30ஸ்ரீ 30000, 30000ஓ 24 ஸ்ரீ 720000.00
இது ஒரு சாதாரண உதாரணமாகும். இது மாத்திரம் இன்றி குறித்த தொழிற்சங்க தலைவர் ஒருவருக்கு அதிக வசதிகள் கூடிய ஒரு வாகனத்தினை சன்மானமாக வழங்குவது. குறித்த சம்பள உயர்வு வழங்கும் தொகையில் குறித்த விகிதத்தினை கமிசனாக வழங்குவது அல்லது குறித்த கம்பனிகளின் பங்குதாரர்களாக ஆக்குவது, வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகளை கம்பனிகள் ஏற்பது, தேர்தல் கால செலவுகளுக்கு கம்பனிகள் உதவி செய்வது என்பது போன்ற விடயங்களை செய்வது கம்பனிகளுக்கு லாபகரமான செயற்பாடாகும். இவ்வாறான தந்திர காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளை தடுக்க வேண்டியது தொழிலாளர்களினதும், மலையக சிவில் அமைப்புக்களினதும,; புத்தி ஜீவிகளினதும், தொழிலாளர் நலன் விரும்பும் அமைப்புக்களினதும் பொறுப்பாகும்.