யாழ்ப்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கற்கும் இரண்டு மாணவர்கள் இலங்கைப் பொலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பான அதிர்வலைகள் மக்கள் மத்தியிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அதன் எதிர்த் தரப்பிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கைப் பொலிஸ் படை இரண்டு மாணவர்களை அதிகாலை வேளையில் கொன்று போட்டுவிட்டு அதற்கான தடயங்களை அழித்துவிட்ட சம்பவம் ஒரு வகையான அச்ச உணர்வைச் சமூக மட்டத்தில் தோற்றுவித்துள்ளது. இரண்டு கொலைகளின் பின்புலத்திலுள்ள அரசியல் காரணங்கள் எதுவாயினும், அவற்றை முன்வைத்து நடத்தப்படும் பிழைப்புவாத அரசியல் ஆபத்தானது. இலங்கையின் இன்றைய அரசியல் சூழலின் குறுக்குவெட்டு முகம் கொலைகளின் பின்னே தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது.
பேரினவாதத்தின் இன்றைய நிலை
சிங்கள பௌத்த மேலாதிக்க உளவியலைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரவர்க்கத்தின் தந்திரோபாயமே இலங்கையை இரத்தம் தோய்ந்த நாடாக காலனியத்திற்குப் பிந்தைய வரலாற்றுக் காலம் முழுவதும் பேணியிருக்கிறது. சிங்கள பௌத்த மேலாதிக்க மனோ நிலையை இந்தியா அமெரிக்கா உட்பட்ட ஏகபோக நாடுகள் கையாள்வதன் ஊடாக தமது நலன்களை உறுதிப்படுத்திக்கொள்கின்றன. தமிழர்களுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் எதிரான சிங்கள பௌத்த அதிகாரவர்க்கம் இலங்கையிலுள்ள தமிழ் பேசும் தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுவதைத் தவிர வேறு சமரசங்கள் சாத்தியமற்றது என்ற சூழலைத் தோற்றுவித்திருக்கிறது. எழுபதுகளின் பின்னர் தோன்றிய அந்த அரசியல் சூழல் இன்றும் குறைந்தபட்ச மாற்றங்களுக்குக் கூட உட்படவில்லை. உலக மயமாதலின் பின்னர் தன்னை ஏகாதிபத்திய நாடுகளின் உறுதியான தரகுகளாக உறுதிப்படுத்திக்கொண்ட இலங்கை அதிகாரவர்க்கம் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தைப் புதிய அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப பயன்படுதிக்கொள்கிறது.
சிங்களப் பேரினவாதமும் தமிழ் இனவாதமும்…
பௌத்த மதச் சாயம் பூசப்பட்ட சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்த் தேசிய அரசியல் எப்போதும் சிங்கள அதிகாரவர்க்கத்தைப் பலப்படுத்தும் வகையிலேயே முன்னெடுக்கப்பட்டுவந்துள்ளது என்பதே இங்கு துயரம்படிந்த உண்மை. தமிழர்கள் தம்மை அழித்துவிடுவார்கள் என்றும், ஆக்கிரமித்துவிடுவார்கள் என்றும், இனவாதிகள் என்றும் அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றி சிங்கள ஆளும் வர்க்கம் வாக்குப் பொறுக்கிக்கொள்ள தமிழ்த் தேசியவாதிகள் தமது இனவாத அரசியலின் ஊடாக வசதி ஏற்படுத்திக்கொடுக்கிறார்கள்.
சிங்கள அதிகாரவர்க்கம் சிங்கள உழைக்கும் மக்களின் போராட்டங்களைத் திசைத்திருப்புவதற்கு தமிழ் இனவாதிகள் துணை செல்கிறார்கள். தமிழ் இனவாதிகள் முன்னெடுப்பது சுய நிர்ணய உரிமை கோரும் அரசியல் அல்ல மாறாக சிங்களப் பேரினவாதிகளைப் பலப்படுத்தி அதிகாரத்தில் தொடர்வதற்குத் துணை செல்லும் அழிவு அரசியல்.
பல்கலைக் கழக மாணவர்களின் கொலைகளை தமது வாக்குப் பொறுக்கும் தேவைக்காக முன்னெடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் பேசும் மக்களின் தன்னுரிமைக்காகப் போராடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக பாராளுமன்ற ஆசனங்களைத் தக்கவைத்துக்கொள்வதையே நோக்கமாககொண்டிருக்கிறார்கள்.
இன்றைய தேவை
சுய நிர்ணய உரிமைக்காகப் போராடும் அதே வேளை சிங்களப் பேரினவாதிகளின் நோக்கங்களை நிறைவேற்றாமல் முன்னெடுக்கப்படும் அரசியலே இன்றைய இலங்கையின் சூழலில் அவசியமானது. அடிப்படையில் ‘சிங்களவனின் தோலில் செருப்புத்தைப்போம்’ என ஆரம்பித்த அரசியலை சிங்களப் பேரினவாதிகள் விரும்பினார்கள். தமிழ் இனவாதிகளின் அரசியலே 80களின் ஜே.ஆர்.ஜெயவர்வர்த்தனவை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக உருவாக்கியது. ஆக, தமிழ் இனவாத அரசியல் என்பது சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரை பொன் முட்டைப்போடும் வாத்துப் போன்றது.
இங்கு தமிழ் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான அரசியலை முன்னெடுப்பதும் அதேவேளை சிங்களப் பேரினவாத அதிகாரவர்க்கத்தைப் பலமிழக்கச் செய்வதும் மிக அவதானமாகத் திட்டமிடப்பட வேண்டிய அரசியல். தமிழ் வாக்குப் பொறுக்கிகள் இவ்வாறான மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுக்கப் போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை வாக்குப் பொறுக்குவதே அடிப்படை நோக்கம். அதன் மறுபக்கத்தில் சிங்களப் பேரினவாதிகளை பலமடையச் செய்யும் அரசியலை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.
இலங்கையின் எல்லைக்குளிருக்கும் வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகளைப் போன்றே அதற்கு அப்பால் தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகளும் சிங்களப் பேரினவாதிகளைப் பலப்படுத்தும் அரசியலை தமது நலன்கள் சார்ந்து முன்னெடுக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளிலும், தென்னிந்தியாவிலும் நிலகொண்டுள்ள இந்த அரசியல்வாதிகள் இலங்கையின் பேரினவாதிகளுக்கு வரப்பிரசாதம்.
பேரினவாத உளவியலும் நல்லிணக்கப் பேர்வழிகளும்
பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் படுகொலைகளைப் பொறுத்தவரை, தற்செயலாகப் பொலிசார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் என்று மட்டும் கருத முடியாது. சிங்கள பௌத்த மேலாதிக்கக் கருத்தியல் மேலோங்கியுள்ள அரசியல் சூழலில் சாதாரணமாகக் கொலைகளை நடத்திவிட்டுக் கடந்து செல்ல முடியும் என்ற மனோ நிலையே இக் கொலைகளை மேற்கொள்ள பொலிசாரைத் தூண்டியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. சிங்களப் பகுதிகளிலேயே போலிஸ் நடத்தும் சித்திரவதைகளும், கொடுமைகளும் அறியப்பட்டவையே. ஆனால் நள்ளிரவு கடந்த நேரத்தில் தெருவில் போகின்ற இரண்டு இளைஞர்களை, வேகமாகப் பயணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிக்கொள்கின்ற அளவிற்கு பொலிஸ் படை துணிந்ததில்லை.
இந்தப் பின்புலத்தில், இக் கொலைகள் நேரடியாகப் பேரினவாதத்துடன் தொடர்பற்றதாயினும், பேரினவாத மனோநிலையே கொலையாளிகள் பாதுகாப்பாக உணர்ந்ததற்கு அடிப்படைக் காரணம்.
இதனை நிராகரிக்கும், அரச ஆதரவு ‘நல்லிணக்கப்’ பேர்வழிகள் இலங்கை அரசிடம் முறையிடுவோம் என்றும் கொலைகளுக்குக் காரணம் தமிழர்களின் தவறே என்றும் கூறுவது அப்பட்டமான பிழைப்புவாதமே.
பேரினவாதிகளும் சிங்கள மக்களும்
பேரினவாதிகள், குறிப்பாக சிங்கள ஊடகங்கள், தமிழ் ஊடகங்களைப் போன்றே தமது பேரினவாத ஊடக வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டன. சிங்கள பௌத்த மனோ நிலையைப் தொடர்ச்சியாகக் காப்பாற முயலும் இந்த ஊடகங்கள் கட்டமைக்கும் பொதுப் புத்தியே அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இலங்கை தழுவிய போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது. ஒன்றியத்தின் அரசியல் கோட்பாடு சுய நிர்ணய உரிமையை நிராகரிப்பதிலிருந்து ஆரம்பமாகிறது என்றாலும், இன்றைய சூழலில் இப் போராட்டம் தேவையான ஒன்றே. சமூகப்பொறுப்புடைய ஒவ்வொருவரும் அதற்கு ஆதரவு வழங்குவது அவசியமானது. பேரினவாதத்தைப் பலவீனப்படுத்தும் இவ்வாறான போராட்டங்கள், பேரினவாத மனோ நிலையிலிருந்து சிங்கள மக்களை விடுதலை செய்வதற்கான அடிப்படையாக அமையலாம்.
பல்கலைக்கழக மாணவர்கள்
இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொறுப்புணர்ச்சியுடனேயே நடந்திருக்கிறார்கள். தேவையற்ற உணர்ச்சியூட்டல்களுக்கு அவர்கள் உட்படவில்லை என கொலைகளின் பின்னான நிகழ்வுகள் உணர்த்துகின்றன. தவிர, கொலைகளை வாக்குப் பொறுக்கிகள் பயன்படுத்திக்கொள்வதற்கு எதிராக உறுதியுடன் செயற்படுகிறார்கள். கொல்லப்பட்டவர்களில் ஒருவரான நடராஜா கஜனின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்ட அரசியல் பிழைப்புவாதிகளை அங்கிருந்து அவர்கள் வெளியேற்றியுள்ளார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் போராட்டப் பாரம்பரியத்தைக் கொண்டது. உரிமைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் அரசியல் மாற்றங்களின் ஆரம்பப் புள்ளியாக அமைந்திருந்திருக்கிறது. மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகள் அற்ற இன்றைய புறச்சூழலில் மாணவர்களின் பொறுப்புணர்ச்சி பாராட்டுக்குரியது.
ஆக, கொலைகளுக்கான காரணம் எதுவாயினும் சிங்கள பௌத்த மேலாதிக்க உளவியலும் அதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிரான, அதாவது பேரினவாதத்திற்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியல் இன்று பிரதான தேவையாகின்றது. அதேவேளை அதே சிங்கள பௌத்த பேரினவாதத்தை வளர்க்கும் தமிழ் இனவாத அரசியலும், அத்தோடு பிணைந்திருக்கும் வாக்குப் பொறுக்கும் அரசியலும் இன்று முழுமையாக நிராகரிக்கப்படவேண்டும்.