காலனியக் காலத்திலிருந்தே சட்டவிரோத யுத்தத்திற்கும் போர்க்குற்றங்களுக்கும் பழக்கப்பட்டுப் போன கிழட்டு ஏகாதிபத்திய நாடான பிரித்தானியா இன்று மற்றொரு சட்டத்திற்குப் புறம்பான குண்டுத்தாக்குதலை சிரிய மக்கள் மீது ஆரம்பித்துள்ளது.
சிரிய மக்களைப் பாதுகாப்பதோ அன்றி ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழிப்பதோ பிரித்தானிய அரசின் நோக்கமல்ல. ஆங்கிலோ அமெரிக்கன் பயங்கரவாதத் துணைக் குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உருவாக்கிப் பாதுகாக்கும் பிரித்தானிய அமெரிக்கப்படைகளின் நோக்கம் சிரிய அரசைப் பதவியிலிருந்து அகற்றி தமது அடியாள் படைகளைப் பதவியிலமர்த்துவது மட்டுமே.
மனிதர்களின் தலைகளை கொய்து வீர முழக்கமிடும் ஆங்கிலோ அமெரிக்கன் அடிமை நாடான சவுதி அரேபியாவைக் கடந்து செல்லும் பிரித்தானிய விமானஙகள் சிரியாவில் ‘ஜனநாயகக்’ குண்டு போடுவதாகக் கூறுவது வேடிக்கையானது.
ஐ.நா போன்ற சர்வதேச உறுப்புக்களின் அனுமதியின்றி ஆங்கிலேய ஆக்கிரமிப்பு அரசியல் வாதிகள் இறைமையுள்ள சிரியா என்ற நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து அழிப்பதற்கு அனுமதியளித்துள்ளனர்.
தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினின் கோரிக்கையை எதிர்த்து, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளையும் மதிக்காமல் 66 தொழிற்கட்சி உறுப்பினர்கள் போருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சிரிய அதிபர் ஆசாத்தின் கோரிக்கையின் அடிப்படையில் ஐ.எஸ்.ஐஎஸ் ஐ எதிர்கொள்ள ரஷ்ய விமானங்கள் அனுப்பப்பட்ட போதே அமெரிக்க அணி விழித்துக்கொண்டது.
பிரான்சில் நடத்தப்பட்ட தாக்குதல் சிரியாவில் குண்டுமழை பொழிய வேண்டும் என்ற பொது அபிப்பிராயத்தை எற்படுத்திற்று. இன்னும் பிரான்ஸ் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்க்க அரச பயங்கரவாதமே இருந்திருக்கலாம் என்ற ஊகங்களை ஆதாரமாக்குவதற்கு இச் சட்டவிரோத குண்டுத் தாக்குதல் மற்றொரு சான்று.
டேவிட் கமரனைப் போல பிரித்தானிய அதிகாரவர்க்கத்தின் மற்றொரு நம்பிக்கைக்குரிய நிர்வாகியான ரொனி பிளேரின் ஆதரவாளர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சரிந்து விழும் முதலாளித்துவ அரசுகளைத் தற்காலிகமாகத் தூக்கி நிறுத்த போர்களைத் தவிர வேறு வழிகள் அதன் நிர்வாகிகளுக்கு இருந்ததில்லை. ஈராக் மீது பிரித்தானிய அரசு ஆக்கிரமித்துப் படுகொலைகளை நடத்திய விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் புதிய யுத்தம் ஒன்றை மக்களின் பணத்தில் பிரித்தானிய அதிகாரவர்க்கம் ஆரம்பித்திருக்கிறது.
இன்று பிரித்தானிய அரசின் சட்டவிரோதப் போருக்கு எதிராக நடந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.