முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியை நிறவாதமாக மாற்றுவதற்கு ஐரோப்பா முழுவதும் அதிகாரவர்க்கம் முயற்சிக்கிறது. சரிந்து விழுந்துகொண்டிருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரம் ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பிரித்தானிய உழைக்கும் மக்களின் நாளாந்த வாழ்க்கை நிச்சயமற்ற ஒன்றாகிவிட்டது. இந்தச் சூழலில் பிரித்தானியாவின் வலது சாரிப் பாசிசக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி (UKIP) தொடர்ந்து நிறவாதத்தையும் வெளி நாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிரான கருத்தையும் மக்கள் மத்தியில் விதைத்து வருகிறது.
வெளி நாட்டவர்களால் மட்டுமே பிரித்தானியாவில் மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்படைந்ததாகக் கூறும் இக் கட்சிக்கு பல்தேசிய வியாபாரக் கொள்ளைக்காரர்கள் பண உதவியை வழங்கி வருகின்றனர்.
வெளி நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்குச் செல்லும் தொழிலாளர்களை மேலும் ஒடுக்குவதற்காகவும், அச்சத்தின் மத்தியில் அவர்களைப் பேணுவதற்காகவும் பல்தேசிய நிறுவனங்கள் அக்கட்சிக்கு பணம் வழங்கி வருகின்றன.
சண்டே எக்ஸ்பிரஸ், டெய்லி எக்ஸ்பிரஸ், ஓ.கே போன்ற மல்ரி பில்லியன் ஊடகங்களை நடத்திவரும் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ரிசார்ட் டெஸ்மண்ட் கட்சிக்கு ஒரு மில்லியன் பவுண்ஸ் பணத்தைத் தேர்தல் நிதியாக வழங்கியுள்ளார்.
சமூகத்தில் அரசியல் பொருளாதரச் சிக்கல்கள் தோன்றும் போது அவற்றை மூடி மறைத்து வாக்குப் பொறுக்குவதற்காக அயோக்கியர்கள் பயன்படுத்தும் ஆயுதமாகத் தேசியவாதம் பயன்படுகிறது. இலங்கையில் பேரினவாதமும், தமிழ் நாட்டில் சீமான் போன்ற கோமாளிகளின் இனவாதமும், பிரித்தானியாவில் UKIP இன் தேசியவாதமும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.
UKIP இன் நிறவாதம் கலந்த தேசியவாதத்தை எதிர்கொள்வதற்கு ஏனைய கட்சிகளிடம் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு எதிரான திட்டம் ஒன்று இல்லை. இதனால் பலர் கேள்விப்பட்டிராத UKIP போன்ற கட்சிகள் சமூகத்தின் ஆழத்தில் ஊடுருவியுள்ளன.