பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி, தொழில் கட்சி, போன்ற பிரதான கட்சிகளில் ஒன்று அதிகமான வாக்குக்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறுதித் தகவல்களின் அடிப்படையில் இரண்டு கட்சிகளும் முறையே 34 வீதமான வாக்குக்களைப் பெற்றுக்கொள்ளும் எனினும் ஆட்சி அமைப்பதற்காக தகமையைப் பெற்றுக்கொள்ள மாட்டா எனக் கூறப்படுகின்றது. தவிர, சிறிய கட்சிகளுள் பிரித்தானிய சுதந்திரக் கட்சி (UKIP) எனப்படும் வெளி நாட்டவர்களுக்கு எதிரான கட்சி 12 வீதமான வாக்குக்களைப் பெறும் என கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.
வாக்களிப்பவர்களின் தொகை வளமையிலும் குறைவானதாகவே காணப்படும் என மேலும் சில கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.
பல்தேசிய நிறுவனங்களின் பிரதிநிகளாகச் செயற்படும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். பொதுவாக எந்தக் கட்சியும் பெருமான்மை பெறமுடியாமலிருப்பதற்கு நம்பிக்கையீனமே காரணம் என்று கூறப்படுகின்றது. பொதுவாக ஜனநாயக சக்திகளும் போராடும் மக்கள் பிரிவினரும் தேர்தலை நிராகரிக்கும் நிலையிலுள்ளனர்.
ஏனைய சமூகத்தினருக்கு தங்களை எப்போதும் சுய நலவாதிகளாகவே காட்டிக்கொள்ளும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மைக் கட்சிகளில் ஒன்றை ஆதரிக்கும் படி கோரிக்கைவிடுக்கின்றனர்.
தமிழர்களின் வாக்குக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆளும் பழமைவாதக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர்க்குற்றங்களைத் தண்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்க்கொண்டிருக்கிறது. டேவிட் கமரனைப் பிரதம வேட்பாளராகக் கொண்ட அக்கட்சிக்கு தம்மைப் புலிகளின் பிரதிநிதிகள் எனக் கூறும் குழுவினரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் சென்ற டேவிட் கமரன் ‘கொடூரமான புலிகளின் பயங்கரவாதத்தை அழித்தமைக்காக இலங்கை அரசைப் பாராட்டுகிறேன்’ எனக் கூறினார். டேவிட் கமரன் தனது ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகவே இப்படிக் கூறினார். அதே வேளை புலிகளின் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் புதிய போராட்டங்களை முன்னெடுப்போம் என்கிறவர்கள் துரோகிகள் ஆக்கப்படுகின்றனர்.
டேவிட் கமரனுக்கு வாக்களியுங்கள் என அதே குழுக்கள் கூறுகின்றன.
இலங்கையில் பிரித்தானிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரான நிர்ஜ் தேவா சுன்னாகத்தில் அழிப்பு நடத்தும் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். இது குறித்து கேள்வியெழுப்புமாறும் பேசுமாறும் ஆளும் கட்சி தமிழ் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது, இதுவரை இது குறித்து ஒருவரும் மூச்சுக்கூட விட்டதில்லை. ஆக, தமிழ் வேட்பாளர்கள் வாக்குப் பொறுக்குவதற்காக மட்டும் தமிழர்களை நோக்கிச் செல்கிறார்கள் என்பது புலனாகிறது.
ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சியின் ஆட்சியிலும், தொழிற்கட்சியின் ஆட்சியிலும் இலங்கைப் பேரினவாத அரசிற்கு ஆயுதங்களும், ஆலோசனைகளும், ஆயுதப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இவை குறித்தெல்லாம் பேசக் கூட இவர்கள் விரும்பவில்லை.
30 வருட ஆயுதப் போராட்டம் புரட்சிகரமான தமிழ்ச் சமூகத்தைக் கட்டியெழுப்பவில்லை. வாக்குப் பொறுக்கிகளிடமும், அன்னிய உளவாளிகளிடமும் தமிழ்ப் பேசும் மக்களின் தலைவிதியை ஒப்படைக்கும் ஒட்டுண்ணிகளையே உருவாக்கியுள்ளது என்பது தேர்தல் அருவருப்புக்களே தெளிவுபடுத்துகின்றன.