எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கையின் ஜனாதிபதியின் பிரித்தானியாவிற்குப் பயணம் செய்வதை முன்னிட்டு பிரித்தானியத் தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன. இலங்கையில் புதிய அரசு தெரிவு செய்யப்பட்ட பின்னர் தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை வாழ்க்கையிலும் அரசியலிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வடக்கும் கிழக்கும் இராணுவத்தின் குடியிருப்புப் பிரதேசங்களாகவே தொடர்கின்றன. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகுவித்த குற்றவாளிகள் இன்னும் அதிகாரவர்க்கத்தின் உச்சியில் அமர்ந்து ஆட்சி நடத்துகின்றனர். இலங்கை முழுவதையும் பல் தேசிய நிறுவனங்கள் சூறையாடுகின்றன. மன்னாரில் வேதாந்தா நிறுவனம் எந்தச் சூழல் பாதுகாபுமின்றி மைத்திரி அரசோடு இணைந்து கடற்பரப்பை நச்சாக்க ஆரம்பித்துள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகள் உறுதி செய்யப்படவில்லை.
இவை அனைத்திற்கும் எதிராக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்தும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் போராட்டங்களும் எழுச்சிகளும் தோன்றியுள்ளன. இலங்கையில் நிலவும் மையன அமைதி போன்ற ஜனநாயக சூழலில் ஏற்படும் இந்த எழுச்சிகள் பாதுக்காத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும். புதிய மக்கள் சார்ந்த அரசியலை நோக்கி மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும். சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் இதனூடாகவே எழுச்சி பெறும்.
இதுவரை ராஜபக்ச்வை வாழ வைத்த புலம்பெயர் அமைப்புக்கள் இப்போது மைத்திரிபாலவை நோக்கித் திரும்பியிருப்பது அச்சத்தைத் தோற்றுவிக்கிறது. இலங்கையில் தோன்றும் மக்கள் போராட்டங்களை அழிக்கும் மைத்திரி அரசின் தந்திரோபாய நடவடிக்கைகள் போன்று இப் போராட்டங்கள் அமைந்துவிடக் கூடாது.
புலிகள் இன்னும் வாழ்கிறாகள் என்று கூறியே சிங்கள மக்களையும் உலகத்தையும் ராஜபக்ச அரசு நம்ப வைப்பதற்குப் புலம்பெயர் அமைப்புக்களின் நடவடிக்கைகளே காரணமாக அமைந்தன.
மீண்டும் அவ்வாறான சூழல் ஏற்பட இப்போராட்டங்கள் காரணமாக அமைந்துவிடக் கூடாது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், இராணுவத்தை வெளியேற்றக் கோரியும், யாழ்ப்பாணத்தில் நச்சாக்கப்பட நீரைச் சுத்திகரிக்கக் கோரியும், சுலோகங்களை முன்வைப்பதற்குப் பதிலாக எங்கள் தலைவர் பிரபாகரன் என்று புலிக்கொடியோடு இந்த அமைப்புக்கள் நடத்தும் போராட்டம் ஈழத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டங்களைக் காட்டிக்கொடுக்கும்.