ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பு ஐரோப்பவின் எல்லைக்குள்ளேயே சிதையும் நிலை தோன்றியுள்ளது. கிரேக்கத்தின் புதிய பிரதமர் கிரேக்கம் கடனாளி நாடாகத் தொடரமுடியாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஐ.எம்.எப் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி போன்றவையே கிரேக்கத்தின் இன்றை நிலைக்கு அடிப்படைக் காரணம் என்றும் கடந்தவாரம் தெரிவித்திருந்தார். ரொரைக்கா என்ற ஐரோப்பிய ஒன்றிய அதிகார சபையின் முன் மொழிவை கிரேக்க அரசு இன்று நிராகரித்துள்ளது.
இந்த முன்மொழிவிற்கு எதிராக கிரேக்கப் பிரதமர் சிப்பாசிஸ் இன்று தொலைக்காட்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையொன்றை மக்களுக்காக ஆற்றியிருந்தர்.
இடதுசாரிக் அமைப்புக்களின் கூட்டமைப்பான சிஸ்ரா புதிதாக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், உலக நாணய நிதியம் போன்றன கிரேக்க ஆட்சியின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன.
சிக்கன நடவடிக்கைகளின் ஊடாக அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு அரசை வற்புறுத்தி வருகின்றன.
பல்தேசிய கோப்ரட் நிறுவனங்களின் நலன்களுக்ககச் செயற்படும் ஐரோப்பிய நாடுகள் கிரேக்கத்தில் பல்தேசிய நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்குமாறு புதிய அரசைக் கோரி வருகின்றன.
கிரேக்க இடதுசாரி அரசுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததும், கிரேக்கத்திற்கு வழங்கிய கடனை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியமும், நாணய நிதியமும் அறிவித்தன. இதன் பின்னரும் அழுத்தங்கள் அதிகரிக்க கிரேக்க அரசும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அழிக்கப் போவதில்லை என்பதில் உறுதியான முடிவை எடுத்துள்ளது..
இந்த நிலையில் கிரேக்கப் பிதமர் முடிவை மக்களின் தீர்ப்பிற்கே விட்டுவிடுவதாக பொது சன வாக்கெடுப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுத்டுள்ளார். ஜூலை 5ம் திகதி பொதுசன வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரின் தொலைகாட்சி உரை ஐரோப்பா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உரையின் பிரதான பகுதிகள் கீழே:
“‘கிரேக்க மக்கள் மீது நிலையற்றை சுமை ஒன்றை ஏற்படுத்தும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கிரேக்க அரசை அவர்கள் வற்புறுத்தினார்கள். அது சமூகத்தினதும் பொருளாதாரத்தினதும் மீள் எழுச்சியைச் சிதைப்பதாக அமைந்துள்ளது. அரசின் உறுதித் தன்மையையும், மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்துவதாக அது அமைந்துள்ளது.
தொழிலாள்ர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணையத்தை நிறுத்தக் கோரியும், ஓய்வூதியத்தை மேலும் குறைக்குமாறு கோரியும், பொதுத்துறைப் பணியாளர்களின் ஊதியத்தை மேலும் குறைக்கக் கோரியும், உணவுப் பொருட்களுக்கான வரியை அதிகரிக்கக் கோரியும் அவர்கள் தமது திட்டத்தை முன்வைக்கின்றனர்.
கிரேக்கத்தின் இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமை கிரேக்க மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் சுமை எங்களுடைய தோள்களில் விழுந்துள்ளது. அவர்களால் முன்வைக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையை எமது இறையாண்மையைக் கருத்தில் கொண்டு எதிர்கொள்வது எமது கடமை”
இதே வேளை பிரித்தானிய அரசு அறிவித்துள்ள 12 வீதமான அரச செல்வீனங்களைக் குறைக்கும் திட்டத்திற்கு எதிராக இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை கடந்தவாரம் நடத்தியிருந்தனர். கிரேக்கப் பிரதமரின் உரை ஐரோப்பா முழுவதும் எதிரொலிகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க அரசு தொடர்பான பிரசாரங்களை ஆரம்பிப்பதற்கு முன்னரே கிரேக்க அரசு தமது பிரச்சனைகளை மக்கள் மயப்படுத்தியுள்ளது. கிரேக்க அரசு தன்னை இடதுசாரி அரசு என அழைத்துக்கொண்டாலும், உற்பத்தியை மக்கள் மயப்படுத்தும் செயற்திட்டத்தைக் கொண்டதல்ல. ஆக, தேசியவாத அரசாகவே கருதப்படலாம். பல்தேசியக் கொள்ளைக்கு எதிரான கிரேக்க அரசின் நிலைப்பாடும் போராட்டமும் ஐரோப்பாவின் அண்மைய வரலாற்றில் திருப்புமுனையாகவே கருதப்படும்.