டிசம்பர்25 அன்று யேசு பாலன் பிறந்தநாளாக நத்தார் உலகெங்கும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் படைப்பு, அழிவு முதலிய பிரபஞ்ச இரகசியம் முதல் மனிதனின் வாழ்க்கையில் இடம்பெறும் சிறு பிரச்சனைகள்வரை வைபிள் புத்தகத்தில் விடையிருப்பதாகக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் ஏனோ அவ்வாறு யேசுபாலன் டிசம்பர்25 அன்றுதான் பிறந்தார் என வைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? என அவதானிப்பதில்லை. உண்மையில் யேசு டிசம்பர் மாதத்திலேயே பிறக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் வைபிளிலேயே உள்ளது.
வைபிளின் (Luke 2:7-8) படி யேசு பிறந்தநாளில் இடையர்கள் ஆடுகளை புல்வெளியில் மேயவிட்டிருந்தார்கள் ஆனால் டிசம்பர் மாத கடுங்குளிர்காலத்தில் அவ்வாறு செய்வது சாத்தியமில்லை. டிசம்பர் காலப்பகுதிகளில் தமது ஆட்டு மந்தைகளை பெத்தலகாம் பிரதேசத்திற்கு புறம்பாக உள்ள பாலைவனங்களில் கொண்டுசென்று விட்டுவிடுவார்கள். அல்லது மலைக்குகைகள், கொட்டகைகளில் தமது மந்தைகளை அடைத்துவைத்துப் பேணுவார்கள். இரவு வேளைகளில் நடுநடுங்கும் குளிரில் வெட்டவெளியில் தமது மந்தைகளை மேய்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள்.
மேலும் வைபிளின் (Luke 2:1-4)பகுதியில் குடிசனமதிப்பீடு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. ஒரு குளிர்காலப்பகுதியில் , பகல் நேரம் குறுகிய காலத்தில், மின்சாரவசதிகள் அற்ற காலப்பகுதியில் குடிசனமதிப்பீடு நடைபெறவாய்ப்புக்கள் இல்லை. முடிவாக வைபிளின்படி யேசு டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்கவில்லை என்பது தெளிவு. இது பற்றி ஒரு பாதிரியாரிடம் கேட்டபோது தாங்கள் யேசுபிரான் எப்போது பிறந்தார் என்று கூறுவதில்லை அது எப்போதாயினும் இருக்கட்டும், அதனை டிசம்பர் 25 இல் கொண்டாடுகிறோம்.(பொதுவாக எங்களது பிறந்த நாள் கிழமைநாட்களில் வந்தால் அதனை சனி இரவு கொண்டாடுவது போனறு). அப்பாதிரியாரே ஒரு தொலைக்காடசியின் நத்தார் நிகழ்ச்சியில் டிசம்பர் 25 இல்தோன்றி “யேசு பாலன் பிறந்த நாளான இன்று..”என தனது மத சொற்பொழிவினை தொடங்கினார்.
நம்பினால் நம்புங்கள் மதங்கள் பொய்பேசுவதில்லை.
உண்மையில் டிசம்பர் 25 கிறிஸ்தவ மதத்தோற்றத்திற்கு முன்னரே மித்ரா என்ற சூரிய வழிபாடாகவிருந்தது. டிசம்பர் மாதத்தில் குறைவடையும் சூரிய ஓளி மீண்டும் டிசம்பர்25 அன்று பூமியில் அதிகரிப்பதனை ஒரு திருவிழாவாகக் கொண்டாடிவந்தனர். பின்னர் இதனையே பெகனீசியம்(paganism) என்ற மதமாக மாற்றினர்(அறிஞர் றிச்சார்ட் டாவ்கின்ஸின் கருத்துப்படி எல்லா மதங்கள், கடவுள்களிற்கும் ஒரு காலாவதி(expiry) உண்டு). கி.பி நான்காம் நூற்றாண்டளவில் பெகனீசியத்திலிருந்து பெருமளவானோர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டபோது இந்த நாளினையே யேசுபாலன் பிறந்தநாளாக நத்தார் கொண்டாட்டமாக மாற்றி அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுவரை நடைமுறையிலுள்ளது. ஆரம்ப காலத்தில் வைபிளினை சாதரணமானோர் வீடுகளில் வைத்திருக்கமுடியாது, எனவே இதனை சாதகமாக்கிய மதபீடத்தினர் யேசுபாலன் டிசம்பர் 25 இலேயே பிறந்ததாக வைபிளில் குறிப்பிட்டிருப்பதான ஒரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியிருந்தார்கள்.
காலப்போக்கில் நத்தார் கொண்டாட்டம் வர்த்தகமயப்படுத்தப்பட்டது. இதனால் பெரிய கார்ப்பிரேட் நிறுவனங்கள் பல பில்லியன் டொலர்களில் இலாபமீட்டுகின்றன. கறுப்பு வெள்ளி, சைபர் திங்கள், பொக்சிங் டே(black Friday, cyber Monday, boxing day) என ஒரு பட்டியலிட்டு ஊடக விளம்பரங்கள் மூலமாக வழக்கம், மரபு எனச் சொல்லித் தேவையற்ற ஆடம்பரப்பொருட்களினை மக்களின் தலைகளில் சுமத்துகின்றன. இந்த சுமையானது நடுத்தர,கீழ்மட்ட மக்களினை அடுத்த சில மாதங்களிற்காகவது அலைக்கழிக்கின்றன. இவ்வாறான காலப்பகுதியில் சிறு வியாபாரிகளும் கூட பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடமுடியாமல் பாதிக்கப்படுகின்றன.
2011இல் அமெரிக்கா பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள்வதற்கு முன்னரே போப்ஸ்(forbes) எனும் சஞ்சிகை நடாத்திய கணிப்பீட்டின்படி 450 பில்லியன் டொலர்கள் நத்தார் காலப்பகுதியில் மேலதிகமான ஆடம்பரப்பொருட்களில் செலவிடப்பட்டிருந்தது. உலகவங்கியின் ஐநா அபிவிருத்தி திட்டவரைவின்படி உலக நீர்ப்பிரச்சனையினை தீர்ப்பதற்கு இந்த செலவின் 5 வீதமான நிதியே (20பில்லியன் டொலர்)போதுமானது. பொருளாதார மந்தகதியில் அமெரிக்காவில் செலவிடப்பட்டநிதியில் 5வீதமே இவ்வாறு எனில், இன்று உலகம் முழுவதும் நத்தார் பண்டிகைக்காக செலவிடப்படும்நிதியில் ஒரு 10 வீதத்தினையாவது ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால்?. அற்புதங்கள் மனிதர்களால் மட்டுமே சாத்தியம். தேவை மதங்களல்ல, மனிதநேயமே.
இயேசு டிசம்பர் 25ல் பிறக்கவில்லை. ஆனால் ஒரு நாளை வைத்து கொண்டாடுகின்றனர். அந்தக் கொண்டாட்டத்தில் உள்ள பல விடயங்கள் கிறிஸ்தவத்துடன் தொடர்வில்லாதவை. நத்தார் மரமும் அந்நிய வழிபாடுகளாலே வந்தது. நத்தார் தாத்தாவும் 1600களில் உருவானார்.
கறுப்பு வெள்ளி சைபர் திங்கள் என்பன கிறிஸ்தவர்களின் கொண்டாட்டங்களல்ல. அவை அமெரிக்காவின் கொண்டாட்டங்கள். அவர்களின் அறுவடைக் காலத்துடன் தொடர்புள்ளவை.
இன்று நத்தார் மட்டுமல்ல சகல கொண்டாட்டங்களுமே வணிக மயப்படுத்தப்பட்டு விட்டன. எல்லா கொண்டாட்டங்களிலும் நன்மையடைவது முதலாளிகளே.
இயேசு பிறந்தநாளை மட்டும் மாற்றவில்லை. Sun of godஎன்ற சூரியக்கடவுள் வழிபாட்டினை son of god என இயேசு பிறந்த நாளாக்கி மக்களை ஏமாற்றியது கட்டுரையாளர் குறிபபிட்டபடி பொய் பித்தாலாட்டமே.