கிரேகத்தைத் தொடர்ந்து ஸ்பெயின் நாடும் அரச கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்பானிய அரசும் அதிகாரவர்க்கமும் அதற்கான முன்னடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. ஸ்பெயினில் ஒன்று கூடுவதற்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குமான சட்டங்களை மேலும் இறுக்கப்படுத்தும் புதிய சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் 01.072015 செவ்வாயன்று நடைபெற்றது.
ஸ்பெயினில் மரினால்டா இப்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது. மரினால்டா என்ற நகரப் பகுதி ஸ்பெயினின் நட்சத்திர நகரமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது. 2010 ஆம் ஆண்டு பிரித்தானிய நாழிதளான ‘மிரர் ‘ மரினால்டா குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் ‘போலிஸ் இல்லாத, குற்றச் செயல்கள் அற்ற, அனைவருக்கும் தொழில் வாய்ப்புள்ள நகரம்’ எனக் குறிப்பிட்டிருந்தது.
மரினால்டாவில் கடந்த 30 வருடங்களாக ஒரே நகர பிதா போட்டியின்றி மக்களால் தெரிவுசெய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஜோன் மனுவல் சஞ்ஷே என்ற அவர் தனது நகரத்தை ஸ்பெயினின் முதலாளித்துவ அமைப்பினுள் உருவாக்கப்பட்டுள்ள கம்யூனிச அமைப்பு என்கிறார்.
அங்கு அனைவருக்கும் வேலை கிடைக்கிறது.குறைந்தது 1200 யூரோக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது. கம்யூனிச அமைப்புக்களைப் போன்று கூட்டு உற்பத்தி நடைபெறுகின்றது, வீடு கட்டிக்கொள்ள மக்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. தன் நிறைவு பெற்ற நகரமாகிவிட்ட மரினால்டாவின் மக்கள் தொகை 3000 மட்டுமே. நகரபிதாவிற்கு ஸ்பனிஷ் ரொபின் ஹூட் என்ற பெயரும் உண்டு.
அனைவரும் தமது தேவைக்கேற்ப உழைக்கிறார்கள். இந்த நகரத்தில் மாத வீடு ஒன்றின் வாடகை 15 யூரோக்கள் மட்டுமே. தனது பிரதேசத்திலுள்ள ஏனைய நகரங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்ட நகர முதல்வர், பணி நீக்கங்களை நிறுத்தவும், அரச வரவுசெலவுத்திட்ட சிக்கனக் கோரிக்கைகளைப் புறக்கணிக்கவும், வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்கவும், ஏனைய நகர முதல்வர்களைக் கேட்டுக்கொண்டார்.
நகரத்தில் பொலீஸ் படை இல்லை. குற்றச் செயல்கள் இல்லை. நகரத்தின் அழகான வெள்ளைச் சுவர்களில் புரட்சிகர சுலோகங்கள் அந்த நகரத்திற்குச் செல்வோரை வரவேற்கும். தெருக்கள் அனைத்தும் லத்தீன் அமரிக்கப் புரட்சியாளார்களின் பெயர்களிலேயே காணப்படுகின்றன. மாதத்தில் சில ஞாயிற்றுக்கிழமைகளை சிவப்பு ஞாயிறாக நகரசபை அறிவிக்கும். அந்த நாட்களில் நகரத்தின் தொண்டர்கள் நகரத்தைச் சுத்திகரிப்பது உட்பட வேறு பணிகளில் ஈடுபடுவார்கள்.
மூவாயிரம் ஏக்கர் கூட்டுப்பண்ணை உற்பத்தியே நகரத்தின் பிரதான வருவாய். அங்குள்ள மக்கள் இந்தக் கூட்டுப்பண்ணையிலேயே வேலைசெய்கிறார்கள்.
15 யூரோக்களை நகரசபைக்கு மாதவாடகையாக்ச் செலுத்தும் குடியிருப்பாளர்களுக்கு சில காலங்களில் வீடு உரித்தாகிவிடுகிறது.
பலவருடங்களாக ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்த இந்த சோசலிச நகரம், கடந்த வருடம் பலரலும் பேசப்பட்ட்டது. ஸ்பெயினின் தேசியச் செய்திகளில் இடம்பிடித்துக்கொண்டது. ஸ்பெயினின் மிகப்பிரதான பிரச்சனைகளுள் ஒன்றாக வீட்டு வாடகை மற்றும் வீட்டுக்கடன் பிரச்சனை உருவானபோது, மரினாலெடாவில் 15 யூரோவிற்கு வீடொ ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றதும் ஏனைய பகுதிகளின் பார்வை அங்கு திரும்பியது. அங்கு நிலவும் கூட்டு உழைப்பு, கூட்டுப்பண்ணை உற்பத்தி, மக்கள் அதிகாரம் என்பன குறித்தும் அந்த மக்களின் போராட்ட உணர்வு குறித்தும் ஏனைய பகுதி மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள்.
பல்தேசிய நிறுவனங்களால் செயற்படுத்தப்படும் ஸ்பானிய அதிகாரவர்க்கம் இந்த நகரத்தின் மீது தாக்குதலை ஆரம்பிக்கும் போது அதற்கு எதிராகத் தற்காப்பு யுத்தம் நடத்துவதற்கு அவர்களிடம் போதிய பலம் இல்லை. ஆக, சோசலிட அரசு என்பது உற்பத்தியைத் தனியர்களிடமிருந்து விடுவித்து மக்களிடம் ஒப்படைப்பது என்ற அடிப்படைக் கோட்பாட்டு மட்டுமே போதுமானதன்று. உலகின் மிகப்பெரும் மாபியாக்களின் போராட்டங்களை எதிர்கொள்ளும் பலமும் தேவையானது. மரினால்டவின் முன்னுதாரணம் மக்களை அந்த நிலையை நோக்கி இட்டுச் சேல்லும் என்பது உறுதி.