“அமெரிக்கா உங்களை அழைக்கிறது. உலகின் தலைசிறந்த சுதந்திர நாடு உங்களை அழைக்கிறது. வெறுப்பு, வன்முறை, கொலை, தீமை ஆகியவற்றை நிராகரிப்பதன் மூலம் தனது அடிப்படை மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்ட நாடு உங்களை அழைக்கிறது.” – ஜார்ஜ் புஷ், ஆப்கான் போருக்கு முன் ஆற்றிய உரையில். “அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு நிமிட மவுனம் இருக்கவேண்டுமாம்; அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களுக்கு…? 59 நிமிட மவுனமா?” – ஒரு லத்தீன் அமெரிக்க மாணவி
ஆப்கானிஸ்தானைத் தனது வெடி குண்டுகளால் தோண்டியெறிந்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. ”அமெரிக்காவிலிருந்து அன்புடன் என்று எழுதப்பட்ட உணவுப் பொட்டலங்களும், அமெரிக்காவிலிருந்து வெறுப்புடன் என்று எழுதப்படாத கொத்துக் குண்டுகளும் (Cluster Bombs) ஒரே நேரத்தில் வீசப்படுகின்றன. இரண்டின் நிறமும் மஞ்சள்.
பசியல் துடிக்கும் மக்கள், வெடி குண்டுகளை உணவுப் பொட்டலமெனக் கருதித் தொட்டவுடன் வெடித்துச் சிதறுகிறார்கள் என்கிறது ஒரு செய்தி. இது அமெரிக்க பயங்கரவாதத்தின் ஒரு உருவகம்.
இந்தப் போருக்கு அமெரிக்க அரசு சூட்டியுள்ள பெயர் ’நீடித்த சுதந்திரம்’. ஆக்கிரமிப்பின் மூலம் ஆப்கன் மக்களின் சுதந்திரத்தையும், கருப்புச் சட்டங்களின் மூலம் அமெரிக்க மக்களின் சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் பறிக்கும் நடவடிக்கைக்குப் பெயர் நீடித்த சுதந்திரம்! இந்த வக்கிரப் புத்தியின் வேர் அமெரிக்க வரலாற்றிலேயே இருக்கிறது.
இலட்சக்கணக்கான செவ்விந்திய மக்களை வெட்டிக்கொன்று நாய்களுக்குத் தீனியாகப் போட்டான் கொலம்பஸ். அவனுடன் ஐரோப்பாவிலிருந்து கசாப்புக் கத்தியைக் கொண்டு சென்ற பாதிரிகள் “கிறிஸ்துவின் புகழைக் கொண்டு செல்வதாக” அதை வருணித்துக் கொண்டனர். கொல்லப்பட்டவர்களுக்காகத் தவறாமல் ஜெபிக்கவும் செய்தனர்.
ஆப்பிரிக்கக் கருப்பின மக்களை இலட்சக்கணக்கில் பிடித்துச் சென்று அடிமைகளாக்கி தங்கள் சொர்க்க பூமியை உருவாக்கிக் கொண்ட அமெரிக்கர்கள் கருப்பர்களை ”நாகரிகப்படுத்துவதாக”க் கூறிக் கொண்டார்கள்.
மெக்சிகோவை ஆக்கிரமித்து 2 கோடி மக்களைக் கொன்று குவித்த போது அதை ”தவிர்க்கவியலாத விதி” என்று வருணித்தார்கள்.
1917-இல் ரசியப் புரட்சியை முறியடிக்க அமெரிக்கக் கடற்படையை ஏவிய போது ”அமெரிக்க இலட்சியங்களை ரசியாவில் புகுத்துவதாக”ச் சொல்லிக் கொண்டார்கள்.
இரண்டாம் உலகப் போரில் இறங்கிய போது ”உலகை ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக ஆக்குகிறோம்” என்று சொல்லிக் கொண்டார்கள்.
பிறகு கம்யூனிச அபாயத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் உலக மேலாதிக்கத்துக்காக நடத்திய போர்களனைத்தையும் ”அமெரிக்காவின் தேசியப் பாது காப்புக்காக” “சுதந்திரத்திற்காக” நியாயப்படுத்தினார்கள்.
இன்று அமெரிக்காவின் போர் விமானங்கள் ஆப்கானுக்கு ஏந்திச் செல்வதும் மரணத்தை அல்ல. புஷ்ஷின் மொழியில் சொன்னால் அவை சுதந்திரத்தை ஏந்திச் செல்கின்றன.
இப்படி உலகமுழுமைக்கும் அமெரிக்க சுதந்திரத்தை எடுத்துச் சென்ற வரலாறு நெடியது. உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்டதைச் சாக்காக வைத்து உலக வர்த்தகக் கழகத்தின் பயங்கரவாதத்தை சட்டப்பூர்வமாக நிலைநாட்டும் சதி தொடங்கியிருக்கிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், ஜனநாயகத்துக்கான போராட்டங்களையும் பயங்கரவாதம் என முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் அந்தச் சதி. இதை எதிர்த்து முறியடிப்பதற்கு உலக மகா பயங்கரவாதி அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வரலாற்றை ஒரு பறவைப் பார்வையிலாவது நாம் அறிந்து கொள்வது அவசியம்.
அமெரிக்கக் காலனியாதிக்கத்தின் துவக்கம்
உலகத்தை ”அமெரிக்க முறைப்படியான உலகமாக” (Pax Americana) மாற்ற வேண்டும் என்ற மேலாதிக்கவாத சிந்தனை 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே அமெரிக்க ஆளும் வர்க்கத்திடம் தோன்றிவிட்டது.
19-ம் நூற்றாண்டில் மட்டும் அமெரிக்கா 114 போர்களை நடத்தியுள்ளது. முதல் உலகப் போர் தொடங்கு முன்பே உலகத்தை மறுபங்கீடு செய்து கொள்வதற்கான யுத்தத்தை ஸ்பெயின் நாட்டுடன் அமெரிக்கா தொடங்கிவிட்டது.
ஸ்பெயினின் காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடி 1821-இலேயே விடுதலை பெற்றது மெக்சிகோ. அந்நாட்டின் மீது மீண்டும் போர் தொடுத்து ஆக்கிரமித்துக் கொண்டது அமெரிக்கா.
இன்று சிலிகான் பள்ளத்தாக்கில் மின்னிக் கொண்டிருக்கும் பில் கேட்சின் சாம்ராச்சியத்தின் கீழே, லட்சக்கணக்கான மெக்சிகோ விவசாயிகளின் பிணங்கள் புதைந்திருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அங்கமான கலிபோர்னியா என்றழைக்கப்படும் இந்த மாநிலமும் நியூ மெக்சிகோ என்ற மாநிலமும் சென்ற நூற்றாண்டில் மெக்சிகோவின் பகுதிகள்.
அடுத்து பிலிப்பைன்சையும் போர்ட்டோ ரிகோவையும், ஹவாய் தீவுகளையும் ஆக்கிரமித்துக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ”பசிபிக் பெருங்கடலை அமெரிக்காவின் உள்நாட்டு ஏரியாக மாற்றுவோம்” என்று முழங்கினார்கள்.
”பிரிட்டனையும் பிரான்சையும் போலப் பிற நாடுகளைக் காலனியாக்கிக் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்க்காமல் தன் சொந்த உழைப்பில் முன்னேறிய நாடு அமெரிக்கா” என்ற கூற்று ஒரு இரட்டைப்பொய், மேற்கண்டநாடுகளைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி, ஆப்பிரிக்கக் கருப்பின மக்களை அடிமைகளாக்கி, அவர்கள் உழைப்பிலும் மத்திய அமெரிக்க, தென் அமெரிக்க நாட்டு மக்களின் உழைப்பிலும் தான் அமெரிக்கச் செல்வம் பெருகியது.
முதல் உலகப் போருக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளுக்குப் பொருள் ஏற்றுமதி செய்யும் தொழில் வளர்ச்சி பெற்ற நாடாகவும், கடன் கொடுக்கும் நாடாகவும் வளர்ந்துவிட்டது, அமெரிக்கா.
ரசிய சோசலிசப் புரட்சிக்கு எதிராக ஆக்கிரமிப்பு
முதல் உலகப் போரில் அமெரிக்கா பங்கு பெறவில்லை. ஆனால், 1917 நவம்பர் ரசியப் புரட்சியை அழிக்கும் திட்டத்தில் உடனே பங்குபெற்றது.
மனிதர்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் உரிய பண்டமாகவும், விருப்பம் போல வெட்டிக் கொல்லத்தக்க மிருகமாகவும் கருதிய நாடு, அத்தகைய உழைக்கும் மக்கள் ஒரு நாட்டின் அரசதிகாரத்தையே கைப்பற்றும்போது அதை வேறு எப்படி எதிர்கொண்டிருக்கும்?
பிற ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து சோசலிச ரசியாவை முற்றுகையிட்டது அமெரிக்க இராணுவம். 1920 ஜனவரி வரையில் 12,000 வீரர்கள் கொண்ட அமெரிக்கக் கடற்படை போல்ஷ்விக் அரசை வீழ்த்தவும், சோவியத் யூனியனைத் துண்டாடவும் பலவாறாக முயன்று தோற்றது. அமெரிக்காவின் உலக மேலாதிக்க வெறியும் அதன் கம்யூனிச வெறுப்பும் பிரிக்க முடியாத படி பின்னிப் பிணைந்தவை.
நாஜிகளுடன் கள்ளக்கூட்டு ஜெர்மனிக்கெதிராகப் போர்!
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் – ஜப்பான் – இத்தாலியின் பாசிசக் கூட்டணி அடுக்கடுக்காக ஆக்கிரமிப்புகளைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது அதைத் தடுத்து பாசிசத்தை முறியடிப்பதற்காக அமெரிக்கா போரில் குதிக்கவில்லை.
சொல்லப்போனால் பொருளாதாரப் பெருமந்தத்திலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளக் கிடைத்த பொன்னான வாய்ப்பாக இரண்டாம் உலகப்போரைப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ஆயுதவியாபாரம் அவற்றில் மிக முக்கியமானது.
போர்முடிந்தபின் உருவாகவிருக்கும் உலக அமைப்பில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகப் போரில் இறங்கத்தயாராக இருந்த அமெரிக்கா, பேர்ல் துறைமுகத்தின் (Pearl Harbour) மீதான தாக்குதலை அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.
ரசிய சோசலிசப் புரட்சியின் விளைவாகக் கம்யூனிசத்திற்கு உலகெங்கும் பெருகி வந்த செல்வாக்கு பாசிசத்திற்கெதிரான மக்களின் கோபத்தை முதலாளித்துவத்தின் மீதான வெறுப்பாக மாற்றிக் கொண்டிருந்தது. காலனி நாடுகளின் விடுதலையை முழங்கிய கம்யூனிசம் உலகெங்கும் நடந்த தேச விடுதலைப் போராட்டங்களின் நேச சக்தியாகியது.
காலனி நாடுகளின் விடுதலைக்கும் கம்யூனிசத்திற்கும் உள்ள இந்தப் பிணைப்பு எல்லா ஏகாதிபத்திய நாடுகளையும் – குறிப்பாக அமெரிக்காவை – அச்சுறுத்தியது. காலனியாதிக்கத்தைப் புதிய வடிவில் நிலைநாட்டும் முயற்சியில் அமெரிக்க பயங்கரவாதத்தின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
புதிய காலனியாதிக்கம்:
கம்யூனிச எதிர்ப்பு தேசிய விடுதலை எதிர்ப்பு பயங்கரவாதம்!
ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் தான் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக ஒரு வரலாற்றுப் புரட்டு நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் வீழ்ச்சி தொடங்கியவுடனேயே, ரசியாவின் செம்படை மஞ்சூரியாவில் நுழைந்தவுடனேயே ‘சரணடையைத் தயார்’ என்று தூதுவிடத் தொடங்கிவிட்டது ஜப்பான். இதன் விளைவாக போருக்குப் பிந்தைய உலக அமைப்பில் ரசியாவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதாலும், ஜப்பானைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வர இயலாது என்பதாலும் அவசரமாக ஜப்பானில் தலையிட்டது அமெரிக்கா.
தனது புதிய அணு ஆயுதத்தின் திறனைச் சோதித்துப் பார்ப்பது, புதிய உலக ஆதிக்க சக்தியாகத் தனது வரவை கம்பீரமாக அறிவிப்பது ஜப்பானை தன் அணியில் கொண்டு வருவது என்ற நோக்கங்களுக்காக 2 லட்சம் அப்பாவி மக்களைக் கொலை செய்தது அமெரிக்கா
பல லட்சம் மக்களைக் கொலை செய்யத் தயங்காத அமெரிக்க அரசு, மன்னர் மீது அளவு கடந்த அன்பு காட்டியது. ஜெர்மனியுடன் சேர்ந்து உலகப் போரைத் தொடுத்து பல கோடி மக்களின் அழிவுக்குக் காரணமாயிருந்த ஜப்பானிய மன்னர் மீது ”போர்க் குற்றம் சாட்டமாட்டோம்” என்றும் மன்னராட்சி தொடர்வதை ஆதரிப்பதாகவும் அறிவித்தது அமெரிக்கா. இதன் மூலம் ஜப்பானில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளோ, கம்யூனிஸ்டுகளோ செல்வாக்கு பெறுவதைத் தடுத்து பாசிஸ்டுகளின் கையிலேயே அதிகாரம் நீடிப்பதை உறுதிசெய்து கொண்டது.
1945-இல் தென்கொரியாவில் நுழைந்தது அமெரிக்க இராணுவம். ஜப்பானிய பாசிஸ்டுகளுக்கெதிராக உள்நாட்டுக் கம்யூனிஸ்டுகளும், ஜனநாயக சக்திகளும் இணைந்து அமைத்திருந்த பாசிச எதிர்ப்பு அரசைக் கலைப்பதாக அறிவித்தது.
ஜப்பானியப் போலீசு மற்றும் ஜப்பானின் உள்நாட்டுக் கைக்கூலிகள் துணையுடன் ஒரு லட்சம் மக்கள் தென் கொரியாவில் கொலை செய்யப்பட்டனர்.
ஒரு இலட்சம் மக்களுடைய பிணங்களின் மேல் அமெரிக்க ஆதரவு பாசிசக் கும்பலின் ஆட்சி தென் கொரியாவில் நிறுவப்பட்டது. அன்று அங்கே அமைக்கப் பட்ட அமெரிக்கப் படைத்தளம் இன்றும் நீடிக்கிறது.
அடுத்து அமெரிக்காவின் கவனம் சீனத்தை நோக்கித் திரும்பியது. மாவோவின் தலைமையில் முன்னேறி வந்த சீனப் புரட்சியைத் தடுக்க, 1947-இல் 50,000 அமெரிக்கத் துருப்புகள் சீனத்தை ஆக்கிரமித்தன. சியாங் கே ஷேக்கின் ஆட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்துவதன் மூலம் ஆசியாவில் தனது சாம்ராச்சியத்தை விரிவாக்க முனைந்தது அமெரிக்கா.
ஐரோப்பாவில் மீண்டும் பாசிசம்
ஆசியாவில் கம்யூனிச அபாயத்தைக் கட்டுப்படுத்த முயல்வதற்குள் மேற்கு ஐரோப்பாவையும் அச்சுறுத்தியது கம்யூனிசம். கிரீஸ் நாட்டில் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான விவசாயிகள் தொழிலாளர் கூட்டணி செல்வாக்கு பெற்றிருந்தது. நாஜிப் படைகள் தோற்றுப் பின் வாங்கியவுடன் உள்ளே நுழைந்த பிரிட்டிஷ் இராணுவம், நாஜி ஆதரவுக் கும்பலை மீண்டும் ஆட்சியிலமர்த்தியது.
மக்களின் எதிர்ப்பை மீறி அந்தப் பொம்மையாட்சியைக் காப்பாற்ற பிரிட்டினால் இயலவில்லை. உடனே 1947-இல் உள்ளே நுழைந்தது அமெரிக்க இராணுவம் அந்தச் சின்னஞ்சிறிய நாட்டில் 1,60,000 பேரைக் கொன்று குவித்தது.
பொம்மை ஆட்சியை நிறுவி, அதன் துணையுடன் படுகொலைகள் நடத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளும் வழிமுறையை, கிரீஸில் அமெரிக்கா கற்றுக் கொண்டது. பின்னாளில் வியத்நாமிலும், மத்திய அமெரிக்க நாடுகளிலும் இந்த அனுபவத்தைத்தான் அமெரிக்கா பிரயோகித்தது.
இத்தாலியிலும், கம்யூனிஸ்டுகள் செல்வாக்கு பெற்றிருந்தனர். விவசாயிகள் தொழிலாளர்களின் படை வடக்கு இத்தாலியை விடுதலை செய்து நாஜிப் படைகளைத் தன் சொந்த வலிமையால் வெளியேற்றியிருந்தது.
இந்தச் செல்வாக்கின் காரணமாக 1948-இல் நடைபெறவிருந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் பெரும்பான்மையாக வெற்றி பெறுவர் என்று எச்சரித்தது சி.ஐ.ஏ.
உடனே முசோலினியின் பாசிஸ்டு போலீசு படையைப் பயன்படுத்தி அடக்குமுறை ஏவப்பட்டது; தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன. இத்தாலிக்கான உணவு சப்ளை துண்டிக்கப்பட்டது.
கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டளித்தால் தொடர்ந்து என்ன நடக்கும் என்பது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. இவையனைத்தையும் மீறி கம்யூனிஸ்டுகள் ஜெயித்தால், இத்தாலியை ஆக்கிரமிக்கத் தயார் நிலையில் நின்றது அமெரிக்க இராணுவம். கம்யூனிஸ்டு கட்சி தோற்கடிக்கப்பட்டது.
மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டளித்தால் அமெரிக்கா அவர்களை என்ன பாடுபடுத்தும் என்பதைத் தேர்தலுக்கு முன்னரே அனுபவிக்குமாறு செய்து, பிறகு தேர்தலை நடத்தினால் மக்கள் வேறு வழியின்றி ஜனநாயகத்தின் அருமையைப் புரிந்து கொள்வர் என்பது இத்தாலியில் அமெரிக்கா கண்டுபிடித்த அனுபவம். பின்னாளில் நிகராகுவாவில் சாண்டினிஸ்டா அரசைத் தேர்தலில் தோற்கடிக்க இந்த உத்திதான் பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்கா – ஏகாதிபத்திய உலகின் தலைவன்
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடனேயே இத்தகைய அப்பட்டமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடக் காரணமிருந்தது. ஜப்பானிய, ஜெர்மானிய சாம்ராச்சியங்கள் கலைக்கப்பட்டு விட்டன. போரின் காரணமாக ஏற்கனவே பொருளாதார ரீதியில் பலவீனமடைந்திருந்த பிரிட்டன் தேசிய விடுதலைப் போராட்டங்கள் காரணமாகத் தன் காலனிகளையும் இழந்து கொண்டிருந்தது.
சோவியத் ஒன்றியமோ ஹிட்லரை முறியடிப்பதற்குத் தன் மக்கள் தொகையில் 10 சதவீதத்தை – 2 கோடிப் பேரை பலி கொடுத்திருந்தது. சோவியத் ரசியாவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் போரில் சீர்குலைந்து புணரமைக்க வேண்டிய நிலையில் இருந்தன.
ஆனால் உலக மேலாதிக்கத் திட்டத்துடன் பொருத்தமான தருணத்தில் போரில் நுழைந்த அமெரிக்கா போரின் காரணமாக பாதிக்கப்படவில்லை. மாறாக ஆதாயம் அடைந்தது. நாடுகளின் நாணய மதிப்பைத் தீர்மானிப்பதற்கான தங்க இருப்பைப் பொறுத்தவரை உலக நாடுகளின் தங்க இருப்பில் 68% அமெரிக்காவின் கையில் இருந்ததால் டாலர் தீர்மானிக்கும் நாணயமானது.
உலக வங்கி, காட், ஐ.எம்.எஃப் ஆகிய நிறுவனங்களையும் டாலரையும் வைத்து சோசலிச முகாம் தவிர்த்த பிற நாடுகள் அனைத்தையும் தன் குடையின் கீழ் கொண்டுவர முடியும் என்று அமெரிக்க ஆளும் வர்க்கம் கருதியது.
அனைத்துக்கும் மேலாக ’இறுதி ஆயுதம்’ என்றழைக்கப்பட்ட அணு ஆயுதம் அன்று அமெரிக்காவிடம் மட்டும் தான் இருந்தது. உலக சாம்ராச்சியம் கிட்டத்தட்ட கைக்கு வந்து விட்டதாகவே அமெரிக்க ஆளும் வர்க்கம் கருதியது.
கம்யூனிச எதிர்ப்பு மூளைச்சலவை
இருந்தாலும் அமெரிக்காவின் சாம்ராச்சியக் கனவுக்குத் தடையாக நின்றது கம்யூனிசம் பெற்றிருந்த செல்வாக்கு. தம்மைப் பலிகொடுத்து ஹிட்லரை வீழ்த்திய சோவியத் ரசிய மக்கள் மீது ஐரோப்பிய அமெரிக்க மக்கள் பெரும் அன்பும் நன்றியும் கொண்டிருந்தனர். நீண்ட போருக்குப் பின் அமைதியான வாழ்க்கையை மக்கள் விரும்பினார்கள். ”பகுதியளவிற்காவது கட்டாய இராணுவச் சேவையைத் தொடரவேண்டும்” என 1945-இல் அதிபர் ட்ரூமன் அறிவித்த போது அதை எதிர்க்கத் தொடங்கினர் மக்கள்.
உலகளவில் ஆதிக்கத்திற்குத் தேவையான பிரம்மாண்டமான உலகு தழுவிய இராணுவ எந்திரத்தைக் கட்டியமைப்பதற்கும், அதற்கு வேண்டிய அளவுக்கு இராணுவச் செலவினங்களை அதிகரிப்பதற்கும் ஏற்ப அமெரிக்க மக்களின் ‘சமாதானம் விழையும் மனநிலையை’ ஒழிக்க வேண்டியிருந்தது.
அமெரிக்காவின் பாதுகாப்பையும், உலக சமாதானத்தையும் அச்சுறுத்துகின்ற, ஹிட்லரைவிடக் கொடிய எதிரியாக சோவியத் யூனியன் சித்தரிக்கப்பட்டது. கம்யூனிஸ்டுகள் ரசிய உளவாளிகளாகவும், கம்யூனிச ஆதரவுக் கருத்து கொண்டவர்கள் அமெரிக்கப் பண்பு இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். ’மெக்கார்த்தியிசம்’ எனும் இந்தக் கம்யூனிச எதிர்ப்பு இயக்கம் 1948 முதல் 8 ஆண்டுகள் இடையறாது தொடர்ந்தது.
அமெரிக்காவின் அரசுத் தலைமையகத்திலேயே 205 கம்யூனிஸ்டுகள் இருப்பதாகவும், ஹாலிவுட் கம்யூனிஸ்டுகளால் நிரம்பி வழிவதாகவும் விதவிதமான பொய்ப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சார்லி சாப்ளின், பால் ராப்சன் உள்ளிட்ட புகழ் பெற்ற கலைஞர்களும், அரசியல்வாதிகளும், அறிவு ஜீவிகளும் ‘கம்யூனிஸ்டு’ குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஸ்டாலினைக் கொடிய சர்வாதிகாரியாகவும், ரசியாவை இரும்புத்திரை நாடாகவும் சித்தரிக்கும் புனைகதைகள், கட்டுரைகள் பெருகின. பிரபல ஐரோப்பிய எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் சி.ஐ.ஏ.வால் விலைக்கு வாங்கப்பட்டு ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டனர்.
“அமெரிக்க மக்களிடம் தியாக உணர்வையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டுமானால் கம்யூனிச அபாயம் பற்றிய பீதியை மக்களின் மூளைக்குள் அடித்து இறக்கவேண்டும்” என்று அதிபர் ஐசன்ஹோவர் காலத்திய தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலின் ஆவணம் கூறுகிறது (NSC-68, Chomsky).
சீனப்புரட்சி – கம்யூனிசத்தின் பதிலடி
மக்களின் மூளையில் கம்யூனிச எதிர்ப்பை அடித்து இறக்குவதற்குள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தலையில் பேரிடியாய் இறங்கியது 1949 சீனப் புரட்சியின் வெற்றி. சியாங்-கே-ஷேக்கின் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க முடியாமல் செஞ்சீனத்தை விட்டு வெளியேறியது அமெரிக்க இராணுவம்.
அடுத்த ஆண்டிலேயே (1950-ல்) துவங்கியது கொரியப் போர். அமெரிக்க ஆதரவு பொம்மையாட்சி வடகொரிய எல்லையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதற்கு வடகொரியா கொடுத்த பதிலடியை சாக்காக வைத்து வட கொரியாவை ஆக்கிரமித்தது அமெரிக்க இராணுவம்.
ஏறத்தாழ தமிழகத்தின் அளவே உள்ள அந்தநாட்டில் அமெரிக்காவின் 20லட்சம் துருப்புகளை வடகொரியா எதிர்கொண்டது. பள்ளிகள், ஆலைகள், மருத்துவமனைகள், வீடுகள் என மொத்த நாடும் தரைமட்டமாக்கப்பட்டது. இரசாயன ஆயுதம், கிருமி ஆயுதம் அனைத்தையும் பயன்படுத்தி 30 லட்சம் மக்களைக் கொலை செய்தது அமெரிக்கப் படை.
ஏறத்தாழ தமிழகத்தின் அளவே உள்ள அந்தநாட்டில் அமெரிக்காவின் 20லட்சம் துருப்புகளை வடகொரியா எதிர்கொண்டது. பள்ளிகள், ஆலைகள், மருத்துவமனைகள், வீடுகள் என மொத்த நாடும் தரைமட்டமாக்கப்பட்டது. இரசாயன ஆயுதம், கிருமி ஆயுதம் அனைத்தையும் பயன்படுத்தி 30 லட்சம் மக்களைக் கொலை செய்தது அமெரிக்கப் படை.
தேசிய விடுதலை, ஜனநாயகத்தின் எதிரி அமெரிக்கா
கம்யூனிசம் என்ற கொள்கை தன் இயல்பிலேயே ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும், அமெரிக்கா தான் இயல்பிலேயே ஜனநாயகத்தின் காவலன் என்றும் ஒரு கட்டுக்கதையை உலகெங்கும் பரப்பி ‘அறிவாளிகளை’ மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது அமெரிக்கா.
ஆனால், மன்னராட்சியை ஒழித்து ஜனநாயகத்தை நிறுவிய நாடுகளில் தலையிட்டு மீண்டும் மன்னராட்சியை உருவாக்குவது பாராளுமன்றத்தை ஒழித்து இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவது மதச்சார்பற்ற ஆட்சியை ஒழித்து மதவெறியர்களின் ஆட்சியை உருவாக்குவது என்று வரலாறு முழுவதும் ஜனநாயக விரோதியாக மட்டுமே அமெரிக்கா செயல்பட்டிருக்கிறது.
ஏகாதிபத்தியச் சுரண்டலையும், அமெரிக்க அடிமைத்தனத்தையும் ஒப்புக் கொள்ளாமல் “சுதந்திரம் – ஜனநாயகம்” என்று முழங்கிய நாடுகளுக்கும், முணு முணுத்த நாடுகளுக்கும் கூட இதுதான் நேர்ந்திருக்கிறது.
1951-இல் ஈரானின் ஜனநாயகப் புரட்சி, மன்னன் ஷாவை நாட்டை விட்டு விரட்டியது. அந்நிய நிறுவனங்களுக்கு – குறிப்பாக பிரிட்டனுக்குச் சொந்தமான எண்ணெய் வயல்களனைத்தையும் நாட்டுடைமையாக்கியது மொகமத் மொசாதேயின் அரசு.
ஆனால் மன்னன் ஷாவின் இராணுவ அதிகாரிகளை ஒழித்துக் கட்டவும், மக்களை ஆயுத பாணியாக்கவும் மொசாதே தவறினார். இந்த விரிசலில் உள்ளே நுழைந்து இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி மீண்டும் ஷாவை மன்னனாக்கியது சி.ஐ.ஏ. இரானின் எண்ணெய் வயல்களில் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனங்கள் விழுங்கின.
ஷாவின் உளவுப்படையான சாவக் சி.ஐ.ஏ.வாலும், இசுரேலாலும் பயிற்றுவிக்கப்பட்டது. அதன் பின் வந்த ஆண்டுகளில் நினைத்துப் பார்க்கவே முடியாத சித்திரவதைகளும் படுகொலைகளும் ஈரானில் தொடங்கின. பல ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளும் தேசிய விடுதலைப் போராளிகளும் தேடிப் பிடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் பிராந்தியத்தில் இசுரேலுக்கு அடுத்து அமெரிக்காவின் அடியாள் அரசானது ஷாவின் ஈரான்.
1952-இல் மத்திய அமெரிக்காவின் சின்னஞ் சிறிய நாடான கவுதமாலாவில் தலையிட்டது சி.ஐ.ஏ. 1944-இல் இராணுவ சர்வாதிகாரத்தைத் துக்கியெறிந்து நிலைநாட்டப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தத் தொடங்கியது.
உடனே அரங்கேறியது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு. இன்று வரை கவுதமாலாவில் அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சிகளே தொடர்கின்றன. இலங்கையைக் காட்டிலும் சிறிதான இந்த நாட்டில் இராணுவ ஆட்சியால் கொலை செய்யப்பட்ட மக்கள் ஒன்றரை லட்சம் பேர்.
1959 கியூபாவில் அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சியை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது காஸ்டிரோவின் படை கவுதமாலாவைப் போலவே ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த முயன்று தோற்ற கென்னடி அரசு அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதாக மிரட்டியது.
கியூபா மீது அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளும் மிரட்டலும் அருகாமையில் இருந்த மத்திய அமெரிக்க நாடான டொமினிக்கன் ரிபப்ளிக்கில் ராணுவ சர்வாதிகாரம் துக்கியெறியப்படுவதை நிறுத்தவில்லை.
தேசிய ஜனநாயகவாதியான ஜூவான் போஷ் அங்கு அதிபரானவுடன் வழக்கம் போல ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தியது சி.ஐ.ஏ. ஆனால் இராணுவத்தின் இளநிலை அதிகாரிகள் மீண்டும் போஷ்ஷின் ஆட்சியை நிறுவினர். இதைச் சகிக்க முடியாத கென்னடி அரசு 40,000 அமெரிக்கத் துருப்புகளை அனுப்பி மீண்டும் அங்கே அமெரிக்க ஆதரவு பொம்மையாட்சியை நிறுவியது.
சதியும் கொலையுமே வெளியுறவுக் கொள்கை!
1973-இல் சிலியில் சி.ஐ.ஏ. நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு உலகளவில் அமெரிக்காவை அம்பலப்படுத்துவதில் பெரும்பங்காற்றியது. 1970-இல் சிலியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்றார் சோசலிஸ்டு கட்சித் தலைவர் சால்வடார் அலண்டே. உடனே ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடத்த முயன்று தோற்றது சி.ஐ.ஏ. சிலியின் செம்புச் சுரங்கங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து பறித்து நாட்டுடைமையாக்கும் சட்டத்தை இயற்றினார் அலண்டே.
ஜெனரல் பினோசட் என்ற கைக்கூலியை வைத்து அலண்டேயைக் கொலை செய்து இராணுவ ஆட்சியை நிறுவியது சி.ஐ.ஏ. அடுத்த சில வாரங்களுக்குள் பல ஆயிரம் கம்யூனிஸ்டுகள் கொலை செய்யப்பட்டனர். மேலும் பல்லாயிரம் பேர் காணாமல் போயினர்.
ஆயுதம் தாங்கிய மக்கள் படை இல்லாமல், நாடாளுமன்றம் மூலம் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதற்கு, அத்தகைய நாடாளுமன்ற ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பதற்கும் சிலி ஒரு பாடமானது.
சிலியில் அலண்டே கொலை என்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. சி.ஐ.ஏ. கொலை செய்த தலைவர்கள், கவிழ்த்த ஏகாதிபத்திய அரசுகள் பட்டியலிட்டு மாளாதவை.
1958-இல் இலங்கை பிரதமர் சாலமன் பண்டாரநாயகா, 1961-இல் காங்கோ பிரதமரும் விடுதலைப் போராளியுமான பாட்ரிஸ் லுமும்பா, 1967-இல் லத்தீன் அமெரிக்கப் போராளி சே குவாரா, 1969-இல் மொசாம்பிக் விடுதலை முன்னனியின் தலைவர் மாண்ட்லேன், 1973-இல் கினியாவின் ஆப்பிரிக்க சுதந்திரக் கட்சித் தலைவர் அமில்கார் கப்ரால்… இவர்கள் சி.ஐ.ஏ.வால் படுகொலை செய்யப்பட்ட தலைவர்களில் சிலர்.
சிலியை விஞ்சக்கூடிய கொடுரமான ஆட்சிக் கவிழ்ப்பு இந்தோனேசியாவில் நடந்தது. அங்கு ஆட்சிக்கு வந்த சுகர்னோவின் மதச்சார்பற்ற அரசு ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளைப் பிரகடனம் செய்தது.
இசுலாமிய மதவெறி அமைப்புகளைத் துண்டிவிட்டு இராணுவ அதிகாரி சுகார்த்தோவின் தலைமையில் 1965-இல் சி.ஐ.ஏ. ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தியது. சில மாதங்களில் சுமார் 7 லட்சம் கம்யூனிஸ்டுகளும், கம்யூனிஸ்டு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகளும் தொழிலாளர்களும் கொலை செய்யப்பட்டனர். கம்யூனிசம் என்ற பேச்சே தடை செய்யப்பட்டது.
பிலிப்பைன்சில் மார்க்கோசின் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்கும், தாய்லாந்தில் இராணுவ சர்வாதிகாரத்திற்கும் பக்கபலமாக நின்றது அமெரிக்கா. ஆனால் தென்கிழக்காசியாவில் அமெரிக்கத் திமிருக்கு முடிவுகட்ட வியத்நாம் காத்துக் கொண்டிருந்தது.
வியத்நாம்: அவமானத்தால் துடிக்கிறது அமெரிக்கா
தென் வியத்நாமின் பொம்மை ஆட்சியைக் காப்பாற்ற 1965-இல் அமெரிக்க இராணுவம் வியத்நாமில் இறங்கியது. இரண்டே ஆண்டுகளுக்குள் வியத்நாமில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை 5 லட்சமாகியது. வியத்நாம், லாவோஸ், கம்போடியா ஆகியநாடுகளில் அமெரிக்க இராணுவம் நடத்திய அட்டூழியங்கள் உலகறிந்தவை.
இரண்டாம் உலகப் போரில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளின் அளவைக் காட்டிலும் அதிகமான குண்டுகள் வியத்நாம் மீது மட்டும் போடப்பட்டன. நாபாம் தீக்குண்டுகள், குகைகளில் புகுந்து தாக்கும் ராக்கெட்டுகள், இரசாயன ஆயுதங்கள், விவசாயத்தை அழிக்கும் பயிர்க்கொல்லி மருந்துகள். என அணுகுண்டு ஒன்றைத் தவிர அனைத்தும் இந்நாட்டு மக்கள் மீது வீசப்பட்டன. சாவு எண்ணிக்கைக்குக் கணக்கில்லை. பல பத்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியது. அமெரிக்க மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட கட்டாய இராணுவச் சேவை அமெரிக்காவெங்கும் அதிருப்தியையும் வெறுப்பையும் தோற்றுவித்தது. 1950-களில் செல்வாக்கு பெறத்தொடங்கிய கருப்பின சிவில் உரிமை இயக்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதும், கருப்பின மக்கள் வியத்நாமில் காவு கொடுக்கப்படுவதும் அவர்களிடையே பெரும் எதிர்ப்பு அலையைத் தோற்றுவித்தது.
வியத்நாம் ஆக்கிரமிப்பு மட்டுமின்றி தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளில் சி.ஐ.ஏ. நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புகள், அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரிகள் நடத்திய கொலைகள், தென் ஆப்பிரிக்க நிறவெறிக்கு எதிரான ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் போராட்டம், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் எழுச்சி, தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுக்கும் இசுரேலின் யூதவெறி அரசுக்கும் அமெரிக்கா அளித்துவந்த ஆதரவு இவையனைத்தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கும் அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சிகளைத் தோற்றுவித்தன.
அனைத்துக்கும் மேலாக, வியத்நாமிய மக்களின் உறுதியும், கம்யூனிஸ்டுகளின் வீரம் செறிந்த போராட்டமும் அமெரிக்க இராணுவத்தின் தார்மீக பலத்தைக் குலைத்தன. இன்னும் எத்தனை ஆண்டுகள் போரிட்டாலும் வெற்றி பெற முடியாத இந்தப் போரிலிருந்து பின்வாங்குவதைத் விர அமெரிக்க அரசுக்கு வேறு வழியின்றிப் போனது.
அடுத்து அமெரிக்க மக்களின் போர் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் அரசை அச்சுறுத்தின. இதற்குமுன் அமெரிக்கா இழைத்த அநீதிகள் – ஆக்கிரமிப்புகளின் போதெல்லாம் உள்நாட்டில் இத்தகைய பெரும் எதிர்ப்பை அமெரிக்க ஆளும் வர்க்கம் சந்தித்ததில்லை. இதுவரை வெளி நாட்டு மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டிருந்த துப்பாக்கி இப்போது உள்நாட்டு மக்களுக்கு எதிராகவும் திருப்பப்பட்டதால் அமெரிக்க அரசின் ஜனநாயக வேடம் கலைந்து கொண்டிருந்தது.
மாபெரும் அமெரிக்க வல்லரசு அவமானப்பட்டு, தோற்று, தலைகுனிந்து 1975-இல் வியத்நாமிலிருந்து தப்பியோடி வந்தது.
தென்கிழக்காசியாவில் அடிவாங்கிய அமெரிக்காவை மீண்டும் செருப்பாலடித்தது ஈரானின் புரட்சி. அமெரிக்கக் கைக்கூலியான ஷாவின் அரசு 1979-இல் தூக்கியெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கொமெய்னியின் அரசு கம்யூனிஸ்டுகளையும், மதச்சார்பற்றவர்களையும் வேட்டையாடிக் கொலை செய்தது அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஈரான் அரசு அமெரிக்க எதிர்ப்பாளராகவே இருந்தது.
ஷாவிற்கு அடைக்கலம் கொடுத்ததுடன் ஈரானின் சொத்துக்ளை முடக்கியது அமெரிக்கா. டெஹ்ரானின் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அனைவரையும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்தது ஈரான். அவர்களை மீட்பதற்கு அதிபர் கார்ட்டரின் அரசு செய்த முயற்சிகள் தோற்றன. வேறு வழியின்றி ஈரான் அரசுடன் சமரசம் செய்து கொண்டு பணயக் கைதிகளை மீட்டது அமெரிக்க அரசு.
அமெரிக்காவின் காலடியிலேயே உள்ள சின்னஞ்சிறிய மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவில் அமெரிக்கக் கைக்கூலி சர்வாதிகாரியான சொமோசாவின் அரசைத் துக்கியெறிந்தனர் சாண்டினிஸ்டாக்கள்.
பொருளாதாரத் தேக்கம், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானிய நாடுகளின் வர்த்தகப் போட்டியைச் சமாளிக்கவியலாத நிலை, இராணுவச் செலவினங்களின் அதிகரிப்பு போன்றவற்றுடன் தொடர்ந்த தோல்விகளால் அமெரிக்க தேசியப் பெருமிதத்திற்கு ஏற்பட்ட அவமானம் ஆகியவற்றுடன் 70-களின் முடிவை எதிர்கொண்டது அமெரிக்க ஆளும் வர்க்கம்.
ஏகாதிபத்தியமாகிறது ரசியா – பனிப்போர் துவக்கம்
உலக மேலாதிக்கத்துக்கான வெறித்தனமான நடவடிக்கைகளில் இரண்டாம் உலகப் போர் முடிந்த தருணத்திலிருந்தே அமெரிக்கா ஈடுபட்டிருந்த இதே காலகட்டத்தில், அதனை எதிர்த்து நின்ற சோசலிச முகாமில் தோன்றிய பாரிய பின்னடைவு மிகவும் முக்கியமானது.
ஸ்டாலின் மறைவிற்குப் பின் அரசு முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய சோவியத் மெல்ல மெல்ல தானே ஒரு ஏகாதிபத்தியமாக வளரத் தொடங்கியது. சீனாவின் தலைமையிலான சோசலிச முகாம் என்பது ஒப்பளவில் சிறியதாகவே இருந்தது. ரசிய சமூக ஏகாதிபத்தியமோ உலக மேலாதிக்கத்திற்கு அமெரிக்காவுடன் போட்டிபோடும் இன்னொரு வல்லரசானது.
உலக வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவற்றுக்கு இணையாக, டாலருக்குப் பதில் ரூபிளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வர்த்தக வலைப்பின்னல்கள், இராணுவக் கூட்டு ஒப்பந்தங்கள் என்று தனது தலைமையில் இன்னொரு முகாமை ரசியா உருவாக்கியது. அமெரிக்க எதிர்ப்பு தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரித்து அவற்றைத் தனது முகாமுக்குள் இழுத்தது. ஆயுதப் போட்டியில் குறிப்பாக அணுஆயுதப் போட்டியில் இறங்கி பொருளாதாரத்தை இராணுவ மயமாக்கியது. அமெரிக்காவுக்குப் போட்டியாக உலகெங்கும் இராணுவத் தளங்களை நிறுவியது.
70-களின் அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சிகளும், அமெரிக்காவின் தோல்விகளும் ரசிய வல்லரசுக்குத் தெம்பூட்டியபோதும், பொருளாதார மேலாதிக்கத்தில் அமெரிக்காவுடன் போட்டி போடவியலாத பலவீனம், இராணுவச் செலவினங்கள் தோற்றுவித்த சுமை ஆகியவற்றுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது ரசியா.
ரசிய மேலாண்மையின் நிருபணமாகவும் அதன் சரிவைத் துரிதப்படுத்தும் துவக்கமாகவும் அமைந்தது 1979-இல் ரசியா நடத்திய ஆப்கான் ஆக்கிரமிப்பு. அமெரிக்காவுக்கோ இந்த ரசிய ஆக்கிரமிப்பு என்பது வியத்நாம், ஈரான், நிகராகுவா ஆகியவற்றின் வரிசையில் ஒரு கூடுதல் தலைகுனிவானது.
பதிலிப் போர்- ரீகனின் தந்திரம்
“மீண்டும் உலக அரங்கில் அமெரிக்காவைத் தலை நிமிர்ந்து நிற்கச்செய்வேன்” என்று முழங்கினார் 1980-இல் பதவிக்கு வந்த ரீகன். தேங்கிக் கிடந்த பொருளாதாரத்தை இயங்கச்செய்ய தனியார்மயம், தொழிற்சங்க உரிமைகளைப் பறித்தல், ஆயுத விற்பனையை அதிகரித்தல்; நட்சத்திரப் போர்த்திட்டம் போன்ற அதிரடி இராணுவ நடவடிக்கைகள் மூலம் ரசியாவின் இராணுவச் செலவினத்தை அதிகரிக்கத் தூண்டி அதனை பொருளாதாரத் தற்கொலைக்கு இழுத்து விடுதல்; உலகெங்கும் அமெரிக்காவின் செல்வாக்கு மண்டலங்களை உறுதிசெய்து இழந்த பெருமிதத்தை நிலைநாட்டுதல் – என அமைந்தது ரீகனின் உலக மேலாதிக்கத்திட்டம்.
ஆப்கானிஸ்தானில் ரசிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரிட்டுவந்த முஜாகிதீன்களைப் பயிற்றுவிக்கவும், ஆயுதம் கொடுக்கவும் பல கோடிக்கணக்கான டாலர்களைச் செலவிட்டது ரீகன் அரசு. அமெரிக்கா நடத்திய பதிலிப் போர்களிலேயே மிகவும் பிரம்மாண்டமானது ஆப்கன்போர்.
நிகராகுவாவின் சாண்டினிஸ்டா ஆட்சியைக் கவிழ்க்கவும் இதே தந்திரத்தை அமெரிக்கா கையாண்டது. ஆட்சியிலிருந்து துக்கியெறியப்பட்ட சர்வாதிகாரி சொமோசாவின் கூலிப்படைக்கு பயிற்சியும் ஆயுதமும் அளித்து இடைவிடாமல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடத் துண்டியது.
சாண்டினிஸ்டா அரசு அமல்படுத்திய நிலச்சீர்திருத்தம் மற்றும் பல மக்கள் நலத் திட்டங்கள் காரணமாக அது மக்கள் மத்தியில் பெற்று வந்த செல்வாக்கு அமெரிக்காவை அச்சுறுத்தியது. எல்சால்வடார், ஹோண்டுராஸ், கவுதமாலா போன்ற அருகாமையிலுள்ள மத்திய அமெரிக்க நாடுகளிலும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மிக மோசமான வறுமையும் அடக்குமுறையும் தலைவிரித்தாடும் போது இத்தகையதொரு ஆபத்தான முன்மாதிரி தனக்கு அருகிலேயே உருவாவதை அமெரிக்காவால் எப்படி அனுமதிக்க இயலும்? ”உடனே அறுத்தெறிய வேண்டிய புற்றுநோய் அமெரிக்கநிலப்பகுதியிலேயே உருவாகிவிட்டது” என்று அலறினார் அமைச்சர் ஜார்ஜ் ஷூல்ட்ஸ்.
காண்ட்ராஸ் என்ற சி.ஐ.ஏ.வின் கூலிப் படை குடியிருப்புகள், பாலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு குண்டு வைத்தது. ஆங்காங்கே வீடு புகுந்து மக்களைச் சுட்டுக் கொன்றது. உள்நாட்டுப் போரைச் சமாளிக்க இராணுவச் செலவுகளை அதிகரிக்கும் நிலைக்கு நிகராகுவா தள்ளப்பட்டது. கடனுதவிகளை நிறுத்துமாறு உலக வங்கியை நிர்ப்பந்தித்து நிகராகுவா பொருளாதாரத்தின் கழுத்தை நெறித்தது அமெரிக்கா. இத்தனைக்குப் பிறகும் சாண்டினிஸ்டா ஆட்சியைக் கவிழ்க்க இயலாமலும் நேரடியாக இராணுவத்தை அனுப்ப இயலாமலும் குமுறியது ரீகன் அரசு.
லெபனானில் செருப்படி!
1983-இல் லெபனான் மீது இசுரேல் நடத்திய ஆக்கிரமிப்புக்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மீது இசுரேல் தொடுத்த தாக்குதலுக்கும் ஆதரவாகத் தன் படைகளை அனுப்பியது ரீகன் அரசு. அமெரிக்க இராணுவ முகாமின் மீது இசுலாமிய அமைப்பினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 240 அமெரிக்கத் துருப்புகள் வெடித்துச் சிதறவே பீதியடைந்து இடத்தைக் காலி செய்தது அமெரிக்கா.
மீண்டும் அமெரிக்காவைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்வதாகச் சவடால் அடித்த ரீகன் யாரையாவது அடித்து அமெரிக்கத் தலையை நிமிர்த்த வேண்டியிருந்தது. வெறும் ஒன்றேகால் லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட (90 சதவீதம் கருப்பின மக்கள்) மேற்கிந்தியத் தீவான கிரெனடா மீது படையெடுத்தது அமெரிக்க இராணுவம்.
வளைகுடாவிலிருந்து வரும் அமெரிக்க எண்ணெய்க் கப்பல்களுக்கு கிரனடாவின் ரசிய ஆதரவு அரசினால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறி கிரெனடா மீது குண்டு மழை பொழிந்தது. பிரதமர் மாரிஸ் பிஷப்பைக் கொலை செய்து தனது வலிமையை நிருபித்தது அமெரிக்கா.
வேறெங்கும் நேரடி இராணுவத் தலையீடு செய்து தனது வலிமையை ரீகனால் நிரூபிக்க முடியவில்லையெனினும் ரசிய ஆதரவு நாடுகளில் தனது கூலிப்படைகள் மூலம் பதிலிப்போர் நடத்துவது முன்னெப்போதும் இல்லாத அளவு ரீகன் ஆட்சிக் காலத்தில் அதிகரித்தது.
எத்தியோப்பியா, நமீபியா, கென்யா, சூடான், மேற்கு சகாரா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் சி.ஐ.ஏ.வால் பயிற்றுவிக்கப் பட்ட கூலிப்படைகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டன. தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுடன் கூட்டுச் சேர்ந்து அங்கோலாவிலும் மொசாம்பிக்கிலும் பதிலிப் போர் நடத்தியது அமெரிக்க அரசு.
வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க சமூகத்தில் தோற்றுவித்த ஜனநாயக உணர்வையும், வியத்நாம் தோல்வி தோற்றுவித்த அவமானத்தையும் ஒரே நேரத்தில் ஒழித்து ஆதிக்க வெறியைத் தூண்டும் ராம்போ வகை ஹாலிவுட் படங்கள் சரம் சரமாக வெளிவரத் தொடங்கின.
மத்திய அமெரிக்க நாடுகளான எல் சால்வடார், கவுதமாலாவில் அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சிகள் நாட்டையே கொலைக் களமாக்கிக் கொண்டிருந்தன. இராணுவ ஆட்சியை எதிர்த்த பாதிரியார்களும் கொலை செய்யப்பட்டனர். கன்னிகா ஸ்திரீகள் கற்பழிக்கப்பட்டனர். பத்திரிகை அலுவலகங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. எல்லாவற்றையும் சி.ஐ.ஏ. அதிகாரிகள் உடனிருந்து இயக்கினர்.
சி.ஐ.ஏ. கைக்கூலியும், பனாமாவின் சர்வாதிகாரியுமான நொரீகோ சி.ஐ.ஏ.வுக்குத் தெரியாமல் நிகராகுவாவின் “காண்ட்ராஸ்” கூலிப்படையுடன் போதை மருந்து – ஆயுத வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பதை அறிந்தவுடன் பனாமாவின் மீது படையெடுத்து விமானத்தாக்குதல் நடத்தியது அமெரிக்க இராணுவம். தனது கையாள் மீது அமெரிக்கா எடுத்த இந்த ஒழுங்கு நடவடிக்கையில் 2000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். நொரீகோ கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டான்.
பனாமா, கிரெனடா ஆகிய நாடுகள் மீது நடத்திய வெற்றிகரமான போர்கள், உலகெங்கும் நடத்திய எண்ணற்ற பதிலிப் போர்கள், ரசியாவுடனான ஆயுதக் குவிப்புப் போட்டிகள் ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவை தலைநிமிரச் செய்ய 1980-90களில் ரீகன் செய்த இராணுவச் செலவு 2,848 பில்லியன் டாலர்கள். 1970-80களில் வியத்நாம் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்திய பத்தாண்டுகளில் ஆன இராணுவச் செலவோ 887 பில்லியன் டாலர்கள் மட்டுமே.
அமெரிக்கா பெரும் கடனாளியாவதற்கு இது வழிவகுத்த போதிலும், இந்தப் பத்தாண்டுகளின் இறுதியில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்தது; ஆப்கான் ஆக்கிரமிப்பு தோல்வியில் முடிந்தது; கிழக்கு ஐரோப்பா வீழ்ந்தது; சோவியத் ஒன்றியம் சிதறியது. போலி சோசலிசமும் ஒழிந்து முழுமையான முதலாளித்துவம் நிலைநாட்டப்பட்டது.
உலகின் கேள்விக்கிடமற்ற ஒற்றைத் துருவ ஆதிக்க சக்தியாக, உலக போலீசுக் காரனாக அமெரிக்கா தன்னை நிலை நாட்டிக்கொள்வதுடன் தொடங்குகின்றது – மறுகாலனியாக்கக் காலம் எனும் சமீபத்திய அத்தியாயம்.
மறுகாலனியாக்கம்!
அமெரிக்க-சோவியத் வல்லரசுகளுக் கிடையேயான பனிப்போரும் பதிலிப் போர்களும் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போதே, 80-களின் துவக்கத்திலிருந்தே பொருளாதார அரங்கில் ரசியா தோற்கத் தொடங்கிவிட்டது. உலகவங்கி, ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்கள் ரசிய ஆதரவு நாடுகளில் கணிசமானவற்றைத் தம் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டன.
பன்னாட்டு நிறுவனங்களின் பூதாகார மான உலகு தழுவிய வளர்ச்சியானது உற்பத்தி, உழைப்புப் பிரிவினை, உழைப்புச் சந்தை, மூலதனம் ஆகிய அனைத்தையும் உலகமயமாக்கத் தொடங்கிவிட்டது. விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி, குறிப்பாக தகவல் தொழில்நுட்பப் புரட்சி இந்தப் போக்கை மேலும் விரைவுபடுத்தியது. ஒரே உலகச் சந்தைக்கும். அதனைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் உலக வர்த்தகக் கழகத்துக்குமான அடிப்படை உருவாகிவிட்டது.
ஆனால் பொருளாதார ரீதியில் உலக நாடுகளின் மீது தனிப்பெரும் மேலாண்மை செலுத்தும் நிலையில் அமெரிக்கா இல்லை. மாறாக, கடனாளியாக இருந்தது. ஜெர்மனி (ஐரோப்பிய ஒன்றியம்), ஜப்பான் போன்ற வல்லரசுகள் பொருளாதார ரீதியில் அமெரிக்காவை விஞ்சத்தொடங்கின.
கடனாளியான நிலையில், பனிப்போர் எதிரியான ரசியாவும் வீழ்ந்துவிட்ட நிலையில் அமெரிக்கா தனது இராணுவச் செலவுகளைக் குறைத்திருக்க வேண்டும்; மாறாக அதிகரித்தது.
உலகின் ஏழை நாடுகளையும், தனக்குப் பணிய மறுக்கும் நாடுகளையும், பிராந்திய வல்லரசுகளையும் மிரட்டித் தாக்கிப் பணிய வைப்பது தன்னுடைய சேவைக்கு மற்ற நாடுகளிடம் குறிப்பாக ஜப்பான், ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளிடமும் நேட்டோ கூட்டாளிகளிடமும் கப்பம் வசூலிப்பது என்ற ரவுடியின் வேலையை மேற்கொள்ளத் தொடங்கியது அமெரிக்கா.
வளைகுடாப் போர் – அமெரிக்க மேலாதிக்கத்தின் பிரகடனம்
1991-இல் ஈராக்கிற்கு எதிரான வளைகுடாப் போரை அறிவித்த ஜார்ஜ் புஷ் “அடுத்த அமெரிக்க நூற்றாண்டு துவங்கி விட்டது’ என்றார்.
அமெரிக்க நூற்றாண்டின் துவக்கம் இரண்டு லட்சம் ஈராக்கியர்களை உடனே கொன்றது. அங்கே வீசப்பட்ட அணு ஆயுதங்களும், பொருளாதாரத் தடையும் பல லட்சம் மக்களை ஆண்டுதோறும் கொன்று வருகின்றன. போர்ச் செலவை குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலையில் கட்டியதுடன் ஈராக் மீது தண்டத்தொகை விதித்து வசூலித்து வருகிறது அமெரிக்க அரசு.
1991-இல் ஈராக் ஆக்கிரமிப்பு; 1992-இல் அமைதியை நிலைநாட்ட சோமாலியாவில் தலையீடு; 1992-இல் யூகோஸ்லாவியா மீது கப்பற்படை முற்றுகை; 1993-இல் போஸ்னியாவில் குண்டு வீச்சு 1994-இல் ஹெய்தியில் பொம்மையாட்சியை நிறுவுவதற்காகத் தலையீடு; 1995-இல் குரோஷியாவில் குண்டுவீச்சு 1996-இல் காங்கோவில் சர்வாதிகாரி மொபுடுவைக் காப்பாற்ற இராணுவத் தலையீடு; 1997-இல் லைபீரியாவிலும், அல்பேனியாவிலும் வெளிநாட்டவர்களைக் காப்பாற்றுவது என்ற பெயரில் தலையீடு; 1998- இரசாயன ஆயுதம் தயாரிப்பதாகப் பொய்க் குற்றம் சாட்டி சூடான் மீது ஏவுகணைத் தாக்குதல்; பின்லாடனின் முகாமைத் தாக்குவது என்ற பெயரில் ஆப்கான் மீது ஏவுகணைத் தாக்குதல்; 1998 இரசாயன ஆயுதம் தயாரிப்பதாகப் பொய்க்குற்றம் சாட்டி ஈராக் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 1999-இல் யூகோஸ்லாவியா மீது படையெடுப்பு, அணு ஆயுதத் தாக்குதல்; 2000 ஏமனில் அமெரிக்கக் கப்பல் தாக்கப்பட்டதற்காகக் கடற்படை மிரட்டல்; 2001 மாசிடோனியாவில் அமைதி ஏற்படுத்த இராணுவத் தலையீடு; தற்போது ஆப்கானிஸ்தான்.
உலகில் எல்லா மூலைகளிலும் அமெரிக்க இராணுவத் தளங்கள் உலக மக்களை அச்சுறுத்துகின்றன. ஐரோப்பாவில் ஒரு லட்சம் துருப்புகள், பசிபிக் கடலில் ஒரு லட்சம் துருப்புகள், வளைகுடாவில் 25,000 துருப்புகள், இந்துமாக் கடலில் கடற்படைத்தளம், பிலிப்பைன்சில் தளம், தென் கொரியாவில் தளம், ஜப்பானில் டோக்கியோ நகரம் உள்ளிட்டு எங்கும் அமெரிக்க இராணுவத்தின் ‘பாதுகாப்பு’!
ரசியாவின் வீழ்ச்சிக்குப் பிறகுப் பிறந்திருக்கும் புதிய அமெரிக்க நூற்றாண்டில் அமெரிக்க அரசின் உலகக் கடமையையும் தொழிலையும் பற்றி சிகாகோ டிரிப்யூன் என்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நாளேடு கீழ்க்கண்டவாறு பொருள்பட எழுதியது:
“ஒரு அடியாள் படையாகச் செயல்பட நாம் தயாராக இருக்க வேண்டும். பாதுகாப்புச் சந்தையில் (அதாவது இராணுவ வலிமையில்) நாம் பெற்றிருக்கும் ஏகபோக வலிமையை, நமது போட்டியாளர்களுக்கு (ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள்) விற்பதன் மூலம், உலகப் பொருளாதாரக் கட்டமைப்பின் மீது நம் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்.”
உலகின் மிகப்பெரிய கிரிமினலும், ரவுடியும், போலீசும் – இவையனைத்தும் ஒன்றாய்ச் சேர்ந்த பயங்கரவாதியும் யார் என்பதற்கு இதைவிட வேறு விளக்கமே தேவையில்லை.
இந்த பயங்கரவாதிக்கெதிரான உலகப் போரைத் துவங்குவதொன்று தான் உலக நாடுகளும், மக்களும் நீடித்த சுதந்திரம் பெறுவதற்கான ஒரேவழி.
புதிய கலாச்சாரம், டிசம்பர் 2001.
அமெரிக்க பயங்கரவாதம் – சிறப்பிதழ்.
நன்றி : வினவு
கம்யூனிச அரிவாளும், சுத்தியலும் ரத்தக்கறையே படாததா காம்ரேட்………நெஞ்சைத்தொட்டு சொல்லமுடியுமா மாசேதுங்-கும் …லெனினும், ஸ்டாலினும் மக்களாட்சி நடத்தினார்கள் என்று………..?????
Very well said. End of the day no one can change human nature. Whatever the form of government the people at the top are going to turn corrupt sooner or later. There is no use in talking idealism when it doesn’t exist.