வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஊழல் மீண்டும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. சுன்னாகம் பிரதேசத்தில் மின் உற்பத்தியை மேற்கொண்டு, யாழ்ப்பாணம் முழுமைக்கும் மின்சார சேவையை மகிந்த ஆட்சிக் காலத்தில் வழங்கிய நிறுவனமான நோதேர்ன்பவர் மற்றும் அதன் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பெரும் பணத்தொகை பரிமாறப்பட்டுள்ளதாக மல்லாகம் நீதிமன்றம் துணிகரமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.
இப் பணப்பரிமாற்றத்தில் வட மாகாண சபை முதலமைச்சர், அவரை பின்னணியில் இயக்கும் நிமலன் கார்த்திகேயன் என்ற அவுஸ்திரேலிய குடியேற்றவாசி, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்களே செயற்பட்டனர் என்ற தகவல்களை இனியொரு ஆரம்பம் முதல் வெளிப்படுத்தி வந்துள்ளது.
வன்னிப் படுகொலைகளின் பின்னர் நடைபெற்ற மிகப்பெரும் சுற்றாடல் அழிவாகக் கருதப்படும் சுன்னாகம் பிரதேசத்தின் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்திய குற்றவியல் செயற்பாட்டை மூடி மறைத்து அப்பிரதேச மக்களை சிறுகச்சிறுகக் கொல்லும் நடவடிக்கையில் வட மாகாண சபையைச் சார்ந்தவர்கள் செயற்பட்டுள்ளனர்.
இலங்கை அரசின் நீர்ப்பாசனத் திணைக்களமும், பல சமூக ஆர்வலர்களும் மேற்கொண்ட ஆய்வுகளில் சுன்னாகம் நீரில் அதிபார டீசல் மற்றும் கிறீஸ் போன்றவை கலந்துள்ளதாகவும், அது பாவனைக்கு உகந்ததல்ல எனவும் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. தவிர, இலங்கை அரசின் நீர்பாசன வடிகாலமைப்பு அமைச்சர் ராவுப் ஹக்கிம் 20151 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நிலையில் வட மாகாண சபை போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து சுன்னாகம் நீரில் மலக் கழிவுகளே கலந்துள்ளது எனவும் கிறீஸ் மற்றும் டீசல் கலந்திருக்கவில்லை எனவும் முடிவிற்கு வந்தது. அந்த நிபுணர்குழுவை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் வட மாகண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்தே அமைத்திருந்தனர்.
தாம் பெற்றுக்கொண்ட பணத்திற்காக இக் கும்பல் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மக்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்தது. தமது காலடியில் வாழும் மக்களின் வாழ்க்கையை பணயம் வைத்தது. மல்லாகம் நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறியிருப்பதற்கும் அப்பால் பணப் பரிமாற்றத்திற்கும் அப்பால் வேறு ஆபத்தான் அரசியல் நோகங்கள் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.
கடந்த 9ம் திகதி வட மாகாண சபை கூடிய போது எதிர்வரும் 23ம் திகதி நீர் நச்சடைந்தமை தொடர்பாகப் பேசுவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் தவராசா ஆகியோர் அவைத்தலைவரிடம் அனுமதி கோரினர். அவர்களது கோரிக்கை கருத்தில் எடுக்கப்பட்டு அவர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. பின்னதாகத் தலையிட்ட வட மாகண சபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், நீர் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்துகொண்டிருப்பதால் அது தொடர்பாகப் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அவைத்தலைவரிடம் கோரிக்கைவிடுத்தார்.
அதன் போது, பொதுவாக நீர் தொடர்பாகப் பேசுவதற்கு அனுமதி வழங்குவதற்கும் விசாரணைகளுக்கும் தொடர்பில்லை என சிவாஜிலிங்கம் மற்றும் தவராசா ஆகியோர் விவாதித்ததைத் தொடர்ந்து அனுமதி மீண்டும் வழங்கப்பட்டது.
அப்போது நீர் தொடர்பாக எவ்வாறன விடையங்களைப் பேசுவதாகக் குறிப்பிட்டால் மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் கூறிய போது, அது சட்டப்படி குறிப்பிட வேண்டிய தேவையற்றது என எதிர் விவாதம் செய்யப்பட்டது, அந்த நிலையில் வேறு வழியின்றி விக்னேஸ்வரன் மௌனமாக அவைத் தலைவர் எதிர்வரும் மாகாணசபைக் கூட்டத்தில் நீர் தொடர்பாகப் பேசுவதற்கு அனுமதி வழங்கினார்.
பின்னதாக நீர் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக விக்னேஸ்வரன் குழு நடத்திய மாநாடு ஒன்றின் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்ப்படாத நிலையில் நீர் தொடர்பாக மாகாணசபையில் பேசுவது பொருத்தமற்றது என மீண்டும் விக்னேஸ்வரன் அடம்பிடித்தார். இறுதியாக அவைத்தலவர் அனுமதி வழங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் மருத்துவ விடூப்பை அறிவித்துவிட்டு முதலமைசர் விக்னேஸ்வரன் தனது கொழும்பு இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இவை தவிர, நீர் மாசடைந்தமை தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் போலி நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக முதலமைச்சரைச் சந்திப்பதற்கு அனுமதி கோரிய கடிதத்தத்திற்குப் பதிலனுப்பிய முதமைச்சர் இது தொடர்பாக பேசுவதை நிராகரித்துவிட்டார்.
தவிர, சுன்னாகம் பகுதியின் நீர் மற்றும் நில வழத்தை அழித்து மக்களை மரணத்துள் வாழ நிர்பந்தித்த அழிப்பு நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்காற்றிய அவுஸ்திரேலியக் குடியேற்றவாசியும், விக்னேஸ்வரனின் சட்டவிரோதப் பங்குதாரருமான நிமலன் கார்த்திகேயனுக்கு வட மாகாண சபையில் ஊழியராகப் பதவி வழங்கப்பட்டுள்ளது. வெறும் 35 ஆயிரம் ரூபா ஊதியத்திற்காக நிமலன் கார்த்திகேயன் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்துள்ளார். நிமலன் கார்த்திகேயன் வடக்கு மாகாண சபையில் பணியாளராக இணைந்துகொள்வார் என கடந்த ஜனவரி மாதத்தில் எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.