வினா: நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ரூ.500, ரூ.1,000 பணத் தாள்களைச் செல்லாததாக்கும் திட்டத்தால் கருப்புப் பணமும், கள்ளப் பணமும் ஒழிந்து விடுமா?
விடை: முதலாளித்துவ அமைப்பு தொடரும் வரை கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிக்கவே முடியாது.
வினா: முதலாளித்துவ அமைப்பில் கருப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிக்க முடியாது என்றால், வளர்ச்சி அடைந்த மேலை நாடுகளிலும் கருப்புப் பணம் இருக்க வேண்டும் அல்லவா?
விடை: நிச்சயமாக. அங்கும் கருப்புப் பணம் இருக்கவே செய்கிறது. சில சமயங்களில் அக்கருப்புப் பணம் வெளிச்சத்திலேயே கூடப் புழங்குகிறது. மேலை நாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இலஞ்சம் வழங்கிய விவரம் வெளியே தெரியும் போது, அந்நாட்டு நீதி மன்றங்களில் அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. அப்போது, வளரும் நாடுகளில் இலஞ்சம் கொடுக்காமல் வேலை நடப்பது இல்லை என்று வெளிவரும் செய்திகளையும், கட்டுரைகளையும் மேற்கோள் காட்டி வழக்குகளில் இருந்து விடுதலை ஆகின்றன. ஆகவே அங்கும் கருப்புப் பணம் புழங்குவது தெளிவாகிறது.
வினா: அது கிடக்கட்டும். ரூ.500, ரூ.1,000 பணத் தாள்கள் செல்லாது என ஆக்கி விட்டதால், பதுக்கப்பட்டு இருக்கும் கருப்புப் பணம் வெளியே வந்து தானே தீர வேண்டும்? இல்லாவிட்டால் பயனற்றுப் போய் விடும் அல்லவா? அந்த வரையிலும் கருப்புப் பணம் ஒழியத் தானே செய்யும்?
விடை: அப்படி நம்புவது அப்பாவித் தனமும், ஏமாளித் தனமும், அரசியல் பக்குவம் இன்மையும் ஆகும்.
வினா: கருப்புப் பணம் அனைத்தும் பல நாட்டுச் சட்ட திட்டங்களில் உள்ள ஓட்டைகள் வழியாகப் பயணம் செய்து, இப்பொழுது நிலம் மற்றும் கட்டிடங்களாகவும், தொழில்களில் முதலீட்டாகவும் ஏற்கனவே மாறி உள்ளதால் இனி ஒழிக்கப்படுவதற்குக் கருப்புப் பணம் இல்லை என்று கூறுகிறீர்களா?
விடை: நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் முழு உண்மை அல்ல. கருப்புப் பணத்தை ரொக்கமாகக் கைகளில் வைத்து இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கவே செய்கின்றனர். செல்வாக்கு இல்லாத அரசியல்வாதிகளில் இருந்து செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதிகள் வரையும், சின்னஞ்சிறு அரசு ஊழியர்களில் இருந்து உயரதிகாரிகள் வரையும், மிகச் சிறிய தொழில் அதிபர்களில் இருந்து மிகப் பெரிய தொழில் அதிபர்கள் வரையிலுமாக அவர்கள் பல நிலைகளில் உள்ளனர்.
இவர்களுள் செல்வாக்கு இல்லாத, அதிகாரம் இல்லாத அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தொழில் அதிபர்கள் தங்களிடம் உள்ள கருப்புப் பணத்திற்குக் கணக்கு காட்ட முடியாமல் தவிப்பார்கள். அவர்கள் அஞ்சி அஞ்சியும் “கஷ்டபபட்டும்” சேர்த்த பணம் பணம் வீணாகப் போகும். ஆனால் செலவாக்கும், அதிகாரமும் படைத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் ஆகியோருடைய செல்லாத பணத்தாள்களுக்குப் பதிலாக, இப்பொழுது வெளியிடப்பட்டு இருக்கும் புதிய பணத்தாள்களை மாற்றிக் கொள்ளும் வழிகளை முதலாளித்துவ அறிஞர்கள் உருவாக்குவார்கள்; அவர்களுக்குக் கற்றும் கொடுப்பார்கள். மேலும் இப்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டத்தினால் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க அதிக வசதி ஏற்பட்டு உள்ளது. அதனால் தான் தங்களைப் பிறவி எதிரிகளாக மக்களிடம் காட்டிக் கொள்ளும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகள் அனைத்தும் இப்பிரச்சினையில ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள். இத்திட்டத்தால் தங்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாது என்று உணர்ந்து உள்ளதால் தான் கருப்புப் பணத்தை வைத்துக் கொண்டுள்ள மிகப் பல பணக்காரர்கள் இதை வரவேற்கிறார்கள்.
வினா: ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் ஒற்றுமையாகச் செயல்படுகிறார்களா? கருப்புப் பணத்தை வைத்துக் கொண்டு உள்ள பணக்காரர்கள் இதை வரவேற்கிறார்களா? இத்திட்டம் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க அதிக வசதியை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறதா? எப்படிக் கூறுகிறீர்கள்?
விடை: ரூ.500, ரூ.1,000 பணத்தாள்களைச் செல்லாது என அறிவித்த அரசு இனி ரூ.100 பணத் தாள் தான் அதிக மதிப்புள்ள பணத்தாள் என்பதாக விட்டு இருந்தால், கையில் உள்ள கருப்புப் பணத்தை மாற்றிக் கொண்டாலும், அவற்றை வைத்துக் கொள்ள இடம் போதாமலும், அவற்றை ஓரிடத்தில் இருந்து வேறிடம் கொண்டு செல்வதிலும் கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் / வைத்திருப்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு இருப்பார்கள் / சிரமப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தச் சிரமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக ரூ.2,000 பணத்தாளை வெளியிட்டு இருக்கிறார்களே! அதுவும் சிறிய அளவில்! இதிலிருந்தே இந்த அரசு கருப்புப் பணத்தைக் கையாளுபவர்களின் சிரமத்தைக் குறைப்பதற்குத் தான் இத்திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறது என்று புரியவில்லையா?
வினா: அதற்குப் புதிதாக ரூ.2,000 பணத்தாளை வெளியிட்டால் போதாதா? உள்ள பணத்தைச் செல்லாதாக்கி, அதுவும் 88% நடப்பில் உள்ள பணத்தைச் செல்லாதாக்கி மக்களை இவ்வளவு கஷ்டத்தில் தள்ள வேண்டுமா?
விடை: அதற்கும் மக்களின் அப்பாவித் தனமும், ஏமாளித் தனமும், அரசியல் பக்குவம் இன்மையும் தான் காரணம். காமராசர் பள்ளிக்கூடம் கட்டினார்; சாலைகள் அமைத்தார்; அணைகள் கட்டினார்; இன்னும் பல வளர்ச்சிப் பணிகளைச் செய்தார். தான் செய்த பணிகளால் பயன் அடைந்தவர்கள் அதைப் புரிந்து கொண்டு, தன் பணியைத் தொடர அனுமதிப்பார்கள் என நம்பினார். ஆனால் மக்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. கருணாநிதியோ மக்களின் வரிப் பணத்தை வீணடித்து, செய்யாத வேலைகளை எல்லாம் செய்ததாக விளம்பரப்படுத்தினார். மக்கள் அதை நம்பி அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதித்தனர். கருணாநிதியைப் பல மடங்கு மிஞ்சும் நரேந்திர மோடி மக்களைப் பாடுபடுத்துவதன் மூலமாகவே அவர்களை ஏமாற்றும் வித்தையை அரங்கேற்றி இருக்கிறார். இது கருணாநிதியின், மோடியின் திறமை என்பதைவிட மக்களின் அப்பாவித் தனமும், ஏமாளித் தனமும், அரசியல் பக்குவம் இன்மையும் தான் மிகப் பெரிய காரணம் ஆகும்.
வினா: அது சரி! இத்திட்டத்தினால் மக்கள் படும் கஷ்டத்தைச் சுட்டிக் காட்டி எதிர்க் கட்சிகள் எதிர்க்கத் தானே செய்கின்றன? அவர்கள் இத்திட்டத்தை ஆதரிப்பதாகவும் ஒற்றுமையாகச் செயல்படுவதாகவும் எப்படிக் கூறுகிறீர்கள்?
விடை: அவர்கள் அனைவரும் மக்கள் படும் தற்காலிகமான கஷ்டத்தைத் தான் பெரிது படுத்திப் பேசுகிறார்களே தவிர ரூ.2,000 பணத்தாளை வெளியிடுவதைக் கண்டிக்கவில்லையே? ஏனென்றால் ஆளும் கட்சியும் சரி! எதிர்க் கட்சிகளும் சரி! அவை பெருமுதலாளிகளின் வேலைக்காரர்களே. ஆகவே அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்படியாக யாரும் பேசுவது இல்லை.
வினா: அப்படி என்றால் இத்திட்டத்தினால் கருப்புப் பணம் சிறிதும் ஒழியாதா?
விடை: நான் ஏற்கனவே கூறியபடி, செல்வாக்கு இல்லாத, அதிகாரம் இல்லாத அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோரின் கருப்புப் பணம் ஒழிக்கப்படும். பெருமுதலாளிகளின், அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளின், செல்வாக்கு மிகுந்த உயரதிகாரிகளின் கருப்புப் பணம் கூடுதல் வசதியுடன் பதுங்கி இருக்கும். பெருமுதலாளிகள் சிறு முதலாளிகளை விழுங்குவது போலத் தான் இதுவும்.
வினா: சரி! கருப்புப் பணத்தைத் தான் ஒழிக்க முடியாது. போனால் போகட்டும். கள்ளப் பணம் ஒழிந்து விடும் அல்லவா?
விடை: கள்ளப் பணம் ஒழியாது என்று இத்திட்டம் நடைமுறைக்கு வந்த மூன்றாவது நாளிலேயே மெய்ப்பிக்கபட்டு விட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூரில் புதிய ரூ.2,000 கள்ளப் பணத்தாள் செலவாணி ஆகி இருக்கிறது. இதைச் செய்தவன் ஒரு உணர்ச்சி வேகத்திற்காகத் (Thrill) தான் செய்து இருக்க வேண்டும். ஆனால் கயவர்கள் (Criminal) திட்டமிட்டுக் கள்ளப் பணத்தை அச்சடித்தால், அதைச் சாதாரண மக்கள் எளிதாகக் கண்டு பிடித்துவிட முடியாது. அக்கயவர்கள் மீண்டும் முயன்றால் பழைய நிலையை மீட்டு எடுத்துவிட முடியும்.
வினா: அப்படி என்றால் கருப்புப், பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிக்கவே முடியாதா?
விடை: முதலாளித்துவ அமைப்பு தொடரும் வரைக்கும் முடியாது. முதலாளித்துவ அமைப்பு ஒழிந்து, சோஷலிச அமைப்பு ஏற்பட்டால் பணத்தை வைத்துக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. உழைக்கும் மக்களின் நலனே எந்தவிதமான வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும். அந்நிலையில் கருப்புப் பணமும், கள்ளப் பணமும் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆகவே அவற்றின் தேவை மறைந்து விடும். தேவை இல்லாத இடத்தில் அவை நிலைபெற முடியாது. உலர்ந்து உதிர்ந்து விடும். ஆகவே உண்மையில் கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் முதலாளித்துவ முறையைக் காவு கொடுக்க வேண்டும். பின் சோஷலிக முறையை அமைக்க வேண்டும். அதைச் செய்யாமல் வேறு எதைச் செய்தாலும் அது ஏமாற்று வித்தையே தவிர உண்மையான நடவடிக்கை அல்ல.