உலக திரைப்பட ரசிகர்கள், திரை விமரிசகர்கள், திரைத்துறை படைப்பாளிகள் முதலாளித்துவ அறிவுஜீவிகள் முதல் பாட்டாளிவர்க்கம், புரட்சிகர கட்சிகள் வரை அனைவரும் கலை எழுச்சியுடன் இன்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இந்த ’ போர்க்கப்பல் பொதம்கின்’(Battelship Potemkin) என்ற ரஷிய மவுன படத்திற்க்கு வயது 85.
திரை மேதை செர்ஜி ஐசன்ஸ்டினால் இயக்கப்பட்ட இந்த படத்தின் கரு, ரஷியாவில் 1905-ம் ஆண்டு ஜார் மன்ன்னுக்கு எதிராக நடந்த போதம்கின் கப்பல் தொழிலாளர்களின் கலகத்தை பற்றியது. பேட்டல்ஷிப் பொதம்கின் கப்பலில் அதன் மாலுமிகளால் ஆரம்பிக்கப்படும் கலகம் பின்பு ஒடேசா துறைமுகத்தில் தீயாக பரவி பல உயிரிழப்புகளுக்கு பின் மக்கள் எழுச்சியாக மாறுகிறது.
வடிவம், உள்ளடகம் என இரண்டிலும் கணகச்சிதப் படைப்பான இந்த படம், 1925-ம் ஆண்டு சோவியத் ரஷியாவில், ரஷிய புரட்சியை நினைவு கோரவும், அதன் எழுச்சியை ஆவணப்படுத்தவும் உலக மக்களுக்கு தெரியப்படுத்தவும் நடந்த குறிப்பிடத்தக்க முயற்ச்சி.
ஐசன்ஸ்ட்டீன் ரஷிய புரட்சியை மையமாக வைத்து மூன்று படங்களை இயக்கினார் ஸ்டரைக்(Strike -1925), பேட்டில்ஷிப் பொதம்கின்(Battleship Potemkin-1925),அக்டோபர் (October-1928). முதல் படம் ரஷிய புரட்சியின் மிக முக்கிய நிகழ்வுகளான, ரஷியா தொழிலாளர்கள் ஒன்றுபட்டு வேலை நிறுத்தம் செய்தது குறித்த ஒன்று. அதை தொடர்ந்து இரண்டாவது படம் 1905-ம் ஆண்டு பேட்டில்ஷிப் பொதம்கின் எனும் கப்பலில் ஏற்பட்ட கலகம் குறித்தது. இறுதியாக மூன்றாவது படம் 1917-ம் ஆண்டு லெனின் தலமையில் நடந்த பாட்டாளிவர்க மக்கள் பேரெழுச்சியை ஆவணப்படுத்தியிருக்கிறது.
பேட்டல்ஷிப் பொதம்கின் படம் வெளிவந்தவுடன் அதை பல முதலாளித்துவ நாடுகள் தடை செய்தன. இன்னொரு புறம் திரைத்துறைப் படைப்பாளிகளும் பொதுவுடமைவாதிகளும் உச்சிமுகர்ந்து வரவேற்றனர். 1925-ல் பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி ஏதும் இல்லாத நிலையில் மவுனப்படமாக ஐசன்ஸ்டின் எடுத்த இந்த படம், நூற்றாண்டுகள் கடந்தும், பார்க்கும் பார்வையாளனை ஒன்றிவிடச்செய்யும் அற்புத திரைக்கதையையும்,அதற்க்கு தகுந்த கச்சிதமான காட்சிகளையும் கொண்டது. இது பிரச்சாரப்படம் தான். ஆனால் பல போலி அறிவுஜீவிகளும், முதலாளித்துவ முட்டாள்களும் முன் வைக்கும் கருத்தான “கம்யுனிஸ்டுகளுக்கு படைப்புக்கான நுண்ணுர்வும், நவின யுக்திகளும் , புதுமைகளை படைக்கும் அறிவும் இல்லை” எனும் வாதம் முட்டாள்த்தனமானது என்பதை நிரூபித்த படம்.
தொடர் பிரச்சாரங்களைச் செய்யும் போது தான் படைப்பில் பல புதுமைகள் செய்ய வேண்டிய நிர்பந்தம் தானாக எழுகிறது. இல்லையென்றால் மக்கள் பிரச்சாரத்தை புறந்தள்ளிவிடுவார்கள். இன்னொரு பக்கம் எழுச்சியை மக்களிடம் பதியவைக்க வேண்டும் என்கிற ஆவல் தான் புதுமைகளுக்கான தேவையை ஏற்படுத்துகின்றது.
ஒடெஸா படிகட்டுகள் எனும் ஒரு முக்கிய காட்சியில் ஐசன்ஸ்டீன் கையாண்ட படத்தொகுப்பு யுக்தியான மாண்டேஜ் திரைத்துறையின் முக்கிய கோட்பாடாக மாறியது. இன்றளவும் பல நாடுகள் இந்தப் படத்தை அந்த யுக்தியை கற்றுக் கொடுத்த “க்ளாசிக் சினிமாவாக ” அறிமுக படுத்துகிறார்கள. அந்த யுக்தியின் பிறப்பின் சூழலும் அவசியத்தையும் பின்பு பார்க்கலாம்.
இன்னொரு பக்கம் இந்த படத்தை ஏதோ படத்தொகுப்பு கோட்பாட்டிற்க்கான ஒரு மாதிரி படம் என்பது போலவும், இந்த படத்தை பற்றிய விமரிசனம், ஆய்வு தொகுப்புகள், கட்டுரைகள் என பலவும் அதன் வடிவத்தை மாத்திரம் முன்னிறுத்தி அந்த வடிவத்தைக் கோரிய உள்ளடகத்தையும், அரசியலையும் புறக்கணிக்கும் வேலையை சிறப்பாகவே முதலாளித்து அறிவுஜீவிகள் செய்கிறார்கள்.
ஆனாலும் பார்வையாளர்கள் இந்த அறிவுஜீவிகளின் கருத்தை புறந்தள்ளுவது நிச்சயம். படம் பார்த்தப்பின் ரஷிய பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி இயல்பாகவே உங்களுள் புகுந்துவிடும். இந்த படம் பார்த்து தங்கள் நாட்டிலும் புரட்சி வந்துவிடும் என பயந்து ஆரம்ப நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முதலாளித்துவ நாடுகள இந்த படத்தை தடை செய்தது. அதையும் மீறி பலர் மூலம் இந்த படம் ரகசியமாக பார்க்கப்படுவதும்,ஆராதிப்பதும் தொடரவே, திரைத்துறையை பற்றிய கோட்பட்டினை கற்க இது அவசியம் என்றபதாலும் அந்த தடைகள் புறகணிக்கப்பட்டு படம் எல்லா நாடுகளிலும் வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் கோலாச்சியது.
சோவியத் அரசாலே அறிவிக்கப்பட்ட பெரும்கொடையான இந்த படத்தின் கதை என்ன?
இந்த படம் ஐந்து பகுதிகளாக பிரிக்கபட்டது,
1. “Men and Maggots”
பேட்டல்ஷிப் பொதம்கின் எனும் கப்பலில் பணி செய்யும் மாலுமிகள் கடுமையான பணிகளோடும், மோசமான உணவும் கொடுக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுகிறார்கள். ஒரு நாள் புழுக்கள் நிறைந்திருக்கும் இறைச்சியின் சூப்பை சமைக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கண்ணுக்கு தெரிந்து நெளியும் புழுக்களை கண்டுக்கொள்ளாத அதிகாரி மாமிசம் புழுக்களற்றது அது தான் சமைக்கப்படும் என்கிறான். இதனால் ஆத்திரம் அடையும் மாலுமிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். மாலுமிகளின் கலகம் பிறக்கிறது.
2. “Drama on the deck”
உண்ணாவிரதம் போராட்டமாக மாறுகிறது, நடுக் கப்பலில் பிரச்சரங்கள், விவாதங்கள் என போராட்டம் சூடு பிடிக்கிறது ஒரு கட்டத்தில் அதிகாரிகளுக்கெதிரான பெரும் கலகமாக வெடிக்கிறது. கப்பலில் ஊழியர்கள் வேலை செய்ய மறுக்க, கொழுத்த அதிகாரிகளோ துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டுகிறார்கள். பணியாமல் எதிர்த்து நிற்க்கும் கலகக்காரர்களின் தலைவன் சுட்டுக்கொல்லபடுகிறான். ஆனால் கலகம் தொடருகிறது, அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள், கப்பலில் இருந்து வீசியெறியப்படுகிறார்கள். கப்பல் ஒடேஸா துறைமுகம் வருகிறது.
3. “A Dead Man Calls for Justice”
சுடப்பட்ட தலைவனின் பிணம் துறைமுகத்தில் அனாதையாக கிடக்கிறது, மறு புறமோ இந்த செய்தி காட்டு தீயை போல பரவுகிறது. மக்கள் கூடுகிறார்கள். கலகத்தின் விளைவாக இறந்த த்ங்கள் தோழனுக்கு இறுதி மரியாதை செலுத்த சாரைசாரையாக வருகிறார்கள். அதிகார வர்கத்தின் கொடுமைகளுக்கு எதிராக அணிதிரளுகிறார்கள். மக்கள் எழுச்சியடைகிறார்கள்.
4. “The Odessa Staircase”
ஒடெஸா படிகட்டுகளில் மிக சாதரணமாக பொழுதை கழிக்கும் எண்ணற்ற மக்கள் கூட்டதின் மீது ஜார் ராணுவம் எந்தவித அறிவிப்புமில்லாமல் தாக்குதலை தொடுக்கிறது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரை கொன்று வெறியாட்டம் ஆடுகிறது ஜாரின் ராணுவம்.
5. “The Rendez-Vous with a Squadron”
பொதம்கின் கப்பலை கலக்காரர்கள் கைப்பற்றி கடலில் செலுத்துகிறார்காள், அதை தடுக்க அனுப்படும் இன்னொரு போர் கப்பல் இவர்களை நெருங்கி சரணடைய சொல்லுகிறது. மீறினால் பொதம்கின் தாக்கப்படலாம் என எச்சரிக்கை செய்யபட்டு தாக்குதல் தொடுக்க தயாராகிறது. எந்த நேரத்திலும் கப்பல் எதிர்கப்பலால் அழிக்கப்படலாம் என்ற சூழலில் பொதம்கின் ஊழியர்கள் குண்டுகளை எதிர்கொண்டு நிற்க, சுட வேண்டியா பீரங்கிகள் தாழ்ந்து பொதம்கினுக்கு வழிவிடுகின்றது. தங்களின் தோழர்களின் ஆதரவால் எழுச்சியடையும் பொதம்கின் தோழர்கள், சுதந்திரமாக கடலில் செல்கிறார்கள். கலகம் வெற்றியடைகிறது.
ஜார் மன்ன்ன் காலத்தில் முதலாளித்தும் வளர்ச்சியடைந்து வந்த நேரத்தில் ரஷியாவில் மக்கள் அனுபவித்த இன்னல்கள் சொல்லில் முடியாது. கசக்கி பிழிந்து சக்கைகளாக, மருத்துவம், சுகாதரம், போதிய உணவு என்று ஏதுமில்லாமல் தூக்கி வீசப்படுவார்கள். ஆனால் பின்னாட்களில் கம்யுனிஸ்ட கட்சியின் வரவால் அந்த தொழிலாளர்களது வர்க்கம் ஒரு முற்போக்கு பாதையில் வளரத் தொடங்கியது. ஒன்றுப்படவும், போராடவும் பழக ஆரம்பித்தார்கள். அரசின் மீதும், சக்கையாக பிழியும் முதலாளிகளையும் எதிர்த்து போராடக் கற்றுக்கொண்டார்கள். இது பின்னால் வரப்போகும் எழுச்சிக்கான ஆரம்ப படி நிலை.
இப்படியாக முன்னேறிய தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதிகளான பேட்டில்ஷிப் பொதம்கினில் வேலை செய்த மாலுமிகள் 1905-ம் ஆண்டு இனிமேலும் சகித்துக்கொள்ள முடியது என கலகத்தை தொடங்குகிறார்கள். புழுக்கள் நிறைந்த மாமிசத்தை சாப்பிட மறுக்கிறார்கள். இது ஏதோ உணவால் வந்த பிரச்சனை என்பது போல் சுருக்கிவிட முடியாது. காலம் காலமாக ஊட்டப்பட்டு வந்த எழுச்சியின் ஒரு படிநிலை.
படத்தில் இந்த எழுச்சியை இயல்பாக பார்வையாளர்களுக்கு பதிய வைத்ததில் தான் முதல் வெற்றி. உதரணத்திற்க்கு சுடப்பட்டு ஒடேசா துறைமுகத்தில் அனாதை பிணம் போல் கலக்கார தலைவனின் பிணம் கிடத்தப்பட்டிருக்க, இறுதி மரியாதை செலுத்த வரும் ஒடேசா மக்களின் அனுதாபம் பேரேழுச்சியாக மாறும் காட்சியை பாருங்கள்.
முதலில் செய்தி சிலருக்கு தெரியும், பின்பு அது பலருக்கு, என தீயாய் பரவும்., மக்கள் கூட ஆரம்பிப்பார்கள். உடனடியாக பல கம்யுனிஸ்ட்டுகள் பிராச்சாரம் செய்வார்கள்,. மக்கள்திரள் அரசியல்படுத்தப்படும், அதற்க்கான துண்டு பிரச்சுரங்கள் விநியோகிக்கப்படும். முதலில் துக்கத்துடன் த்ங்கள் தொப்பிகளை கசக்கிச் பிடிக்கும் கைகள் காட்டப்படும் . பின்பு தொடர் அரசியல்படுத்தப்படுதலின் விளைவு விரல்கள் மடக்கி முஷ்ட்டிகள் உயரும். ”போராடுவோம்” என மக்கள் எழுச்சியடைவார்கள். இந்த காட்சி, மக்கள திரள் பற்றிய அரசியலை போதிக்கும் அதே நேரம் ஒரு திரைப்பட வடிவம் என்ற முறையிலும் மிக நேர்த்தியான காட்சிகளைக் கொண்டிருக்கும்.
மாண்டேஜ் கோட்பாட்டை விளக்கும் ஒடேசா படிகட்டுகள் பகுதியையும் பாருங்கள். மாண்டேஜ் யுக்தியின் தேவையை அந்த உள்ளடக்கம் கோருகிறது. அமைதியாக கூடும் மக்கள் மீதான எதிர்பாராத தாக்குதல், அந்த தாக்குதல் ஏற்படுத்தும் போர்கள், ஜார் ராணுவத்தின் ஒழுங்குப்படுத்தப்பட்ட வெறி, என அந்த நச்சு சூழல் திரையில் வரவேண்டுமென்பது மாத்திரம் இல்லை. அதை பார்க்கும் மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இலக்கல்ல. அதை பார்க்கும் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே புரட்சிகர இயக்குனரின் இலக்கு. அந்த இலக்கும், உள்ளடக்கமும், தொடர்ச்சியாக மாறும் காட்சிகளையும், பெரும் மக்களின் சிதறலையும், அவர்களை கொல்லும் ராணுவத்தின் கோரமுகத்தையும், சிதறி ஓடும் மக்களில் மடியும் குழந்தைகள் என அந்த போர்க்கள காட்சியின் வீரியம், அதை தொடர்ந்து இனி போராடுவது தான் வழி என ஒரு தாய் தன் இறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு தனி ஒருவராக அந்த ராணுவத்தை எதிர்த்து முன்னோக்கி நகருவதும் சிலிர்க்க வைக்கும் காட்சி. அதை வார்த்தைகளால விளக்கிவிட முடியாது. பார்த்து அனுபவிக்க வேண்டும்.
பொதம்கின் கப்பலை நோக்கி இன்னொரு ராணுவ கப்பல் பீரங்கிகளை உயர்த்தி குறிபார்க்க, என்ன நடக்குமோ என்று வெறித்து பார்க்கும் கப்பல் ஊழியர்களின் நிலையையும், அந்த நேரத்திலும் எழுச்சியுடன் சரணடையாத வீரத்தையும் பார்க்கும் பார்வையாளர்கள் ”சுடாதே” என தங்களை மீறி திரையை நோக்கி முனங்கவைத்ததுதான் இந்த படத்தின் சிறப்பு தன்மை. தனித் தன்மை.
பல கோடிகள் செலவில் முன்னேறிய டெக்னிக்குகளுடன் லாபம் மட்டும் நோக்கம் என எடுக்கப்பட்ட டைட்டானிக் முதல் எத்தனையோ படங்களை ஒப்பிடும் போது வசதிகள் குறைவான நிலையில் எடுத்த ஒரு படம் வெல்கிறது என்றால், அது காலந்தோரும் வரும் மக்கள் எழுச்ச்சியின் சாட்சி. மக்கள் இருக்கும் வரை மக்கள் எழுச்சி மறையபோவதில்லை. மக்கள் எழுச்சி இருக்கும் வரை அதை பிரதிநித்துவப்படுத்தும் இந்த மாதிரியான கலைப்படைப்புகள் மறையப் போவதில்லை.
இனி போர்க்கப்பல் பொதெம்கினை பாருங்கள், எழுச்சி கொள்ளுங்கள்!
நன்றி : வினவு