நாடு கடந்த தமிழீழம் என்ற அமைப்பு 2009 பின்னர் தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து 11 வருடங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மட்டுமன்றி உலக மக்கள் மத்தியிலும் கூட ஒரு சிறிய அரசியல் அசைவைக் கூட ஏற்படுத்தவில்லை. பதினொரு வருடங்களில் முதல் தடவையாக பிரித்தானிய நீதிமன்றத்தில் அவர்களுக்கு ஆதரவான தீர்ப்பு ஒன்றைப் பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை பிரித்தானிய அரசு தடை செய்தமைக்கு முன்வைத்த காரணம் தவறானது என பிரித்தானிய நீதிமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அமைப்பு வழக்குத் தாக்கல் செய்திருந்தது. பிரித்தானிய அரசாங்கம் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் “பயங்கரவாத” நடவடிக்கைகள் இன்னும் நீடிப்பதற்கான ஆதரங்கள் இருப்பதால் அத் தடையை நீடிப்பதாக கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இதற்கு மேன்முறையீடு செய்திருந்த நாடு கடந்த அரசு, விடுதலைப் புலிகளின் பயங்கரரவாத நடவடிக்கைகள் இன்னும் இலங்கையில் நீடிக்கவில்லை என்று வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தடை விடுதலைப் புலிகளை பிரித்தானியாவில் தடை செய்ததற்கான கருதுகோள் தவறானது என தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானிய அரசு விலக்கிக் கொள்ளுமா இல்லையா என்பது அரசின் தீர்மானத்திற்கு உரியது மட்டுமே.
2009 ஆம் ஆண்டு இலங்கை அரச பயங்கரவாதத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட சற்று முன்னதாகவே அவர்கள் “ஆயுதங்களை மௌனிக்கிறோம்” என அறிவித்தனர். ஆயிரக்கணக்கான மக்களதும், போராளிகளதும் தியாகங்களாலும் இரத்ததாலும் கட்டமைக்கப்பட்ட வட – கிழக்குத் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது, முள்ளிவாய்க்காலில் முடிக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்றுத் தவறு. அதன் பின்னர் போராட்டத்தின் தொடர்ச்சி என்பது புலம் பெயர் நாடுகளிலுள்ள அடிப்படை வாதிகள் விடுதலைப் புலிகளையும் அதன் அடையாளங்களையும் முன்வைத்து நடத்தும் வியாபாரமாக மாறிவிட்டது.
வரலாற்றில் கோரமான இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தி முடித்த காலப்பகுதியிலிருந்து இன்று வரைக்கும் ஈழ மக்களின் வாழ்விலோ கருத்தியல் அடிப்படையிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
விடுதலைப் புலிகள் விமானங்களையும் பாரிய ஆயுதங்களை முன்வைத்துப் போராடிய போதும் அவர்கள் இலங்கை அரசால் அழிக்கப்பட்டுவிட்டார்கள்,எனவே போராட்டம் என்பது இனிமேல் சாத்தியமற்றது, உலக நாடுகளுக்கு அல்லது இலங்கை அரசிற்கோ அடிமைகளாக மாறி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதே ஒரே வழி என மக்கள் மீது உளவியல் யுத்தம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த யுத்தத்தின் ஒரு பகுதியான உலகின் வல்லரசு நாடுகளுக்கு அடிமையாகி விடுவது என்ற கருத்தை புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புக்களும், இலங்கை அரசிற்கு அடிமை ஆகிவிடுவது என்ற கருத்தை இலங்கையிலுள்ள பல அமைப்புக்களும் முன்வைத்தன. இவை இரண்டுமே ஒரே வெவ்வேறு வழியில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தான். மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி சிறிய அளவில் நடைபெற்ற அரச எதிர்ப்புப் போராட்டங்களைக் கூட அழித்துவிட்டார்கள்.
குறைந்த பட்சம் போரட்டம் அழிந்து போனதற்கான அடிப்படைக் காரணங்களை விமர்சனபூர்வமாக முன்வைக்க யாரும் முன்வரவில்லை. அவ்வாறு முன்வைக்க முனைந்தவர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டார்கள். மக்கள் மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளானார்கள்.
இனப்படுகொலையைத் தலைமை தாங்கிய அதன் சூத்திரதாரிகள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்.
தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிராக முழு சிங்கள மக்களையும் மடை மாற்றி இலங்கை பாசிச அரசிற்கு வலுச் சேர்ப்பதை மட்டுமே புலம் பெயர் அமைப்புக்கள் நடத்திமுடித்திருக்கின்றன.
எதிர்கால தமிழீழத்தில் பொருளாதாரத்தை எப்படி வளர்ப்போம், பனங்கொடொட்டையில் பெற்றோல் எடுத்து அமெரிக்காவிற்கு விற்போம் என்று புலம்பெயர் நாடுகளின் பளிங்கு மாளிகைகளில் இவர்கள் போடுகின்ற கூட்டமும் அறிக்கைகளும் வெற்றுப் பேச்சுக்களும் இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதத்தை மேலும் பலப்படுத்தவே பயன்பட்டிருக்கிறது.
இலங்கை அரசால் கோரமாக ஒடுக்கப்படும் சிங்களை மக்களுக்கு அவர்கள் மீதான் ஒடுக்குமுறையை உணர்த்தவோ, அன்றி அவர்களை சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகத் திசைமாற்றி அரசைப் பலவீனப்படுத்தவோ இவர்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
உலகில் ஜனநாயக வாதிகள் மத்தியில் இன வெறுப்பை தூண்டும் வலதுசாரிகளாகவே தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் புலம்பெயர் அமைப்புக்களோடு, தமிழ் நாட்டில் தமக்குத் தொடர்பற்ற ஈழ அரசியலை முன்வைத்து சீரழிக்கும் அருவருப்பான இன வெறியர்கள் இணைந்துகொள்கிறார்கள்.
ஆக, நாடு கடந்த தமிழீழம் போன்ற அமைப்புக்கள் இத் தீர்ப்பை தமது நடவடிக்கைகளின் வெற்றியாகக் கருதினால், இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் தமது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்வைக்கட்டும், வெற்றியை கொண்டாடுவோம்