ஈராக் அதிபர் சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்துக் கொண்டு உள்ளதாகக் கூறி, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல முதலாளித்துவ நாடுகள் கூட்டு சேர்ந்து, ஈராக் மீது போர் தொடுத்தன. ஈராக் மீதான போரில் வெற்றி பெற்ற உடன் அவை அழிக்கப்படும் என்று அந்நாடுகள் உறுதி கூறின.
இப்போரில் இரு பக்கங்களையும் சேர்ந்த போர் வீரர்கள் மட்டும் அல்லாது பதினைந்து இலட்சத்திற்கும் அதிகமான ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அப்படி ஒரு கொலை பாதகத்தைப் புரிந்து விட்டு, ஈராக் நாட்டை இராணுவ ரீதியில் வென்ற பின், அந்நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் எவ்வளவு இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள உலக மக்கள் ஆர்வம் கொண்டு இருந்தனர். ஆனால் ஈராக் நாட்டில் இருந்து எந்த ஒரு பேரழிவு ஆயுதத்தையும் இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் செய்தது எல்லாம் ஈராக் இராணுவத்தை வலுவிழக்கச் செய்தது மட்டும் தான். இது எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தி இருக்கிறது தெரியுமா? இதைப் பற்றி 7.7.2016 அன்று, பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிலிப் ஹமோண்ட் (Philip Hammond) தன் அமைச்சரவை அதிகாரிகளுடன் பேசி இருக்கிறார்.
அரபு நாடுகளில் மறுமலர்ச்சிக் கட்சி (Ba’ath Party) என்ற அமைப்பு ஒற்றுமை, விடுதலை, சோஷலிசம் என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இவ்வமைப்பினர் இஸ்லாமிய மதக் கொள்கையில் இருந்து வெளிவராவிட்டாலும், மார்க்சியம் தான் மனித குலத்திற்கு விடுதலை அளிக்கும் தத்துவம் என்று உணரத் தொடங்கி இருந்தனர். இவ்வமைப்பினருக்கு ஈராக் இராணுவத்தில் கணிசமான அளவிற்குச் செல்வாக்கு இருந்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகள் ஈராக் மீது வெற்றி கண்ட பின், மிக முக்கிய வேலையாக ஈராக் இராணுவத்தில் மறுமலர்ச்சிக் கட்சியின் செல்வாக்கை ஒழித்து இருக்கின்றன. இதனால் தத்துவ திசை காட்டியை இழந்த இராணுவ வீரர்கள் இஸ்லாமிய அரசு (I.S. – Islamic State) எனும் பயங்கரவாத அமைப்பினால் கவரப்பட்டு உள்ளனர். இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் இஸ்லாமிய அரசு எனும் அமைப்பின் கொடுஞ் செயல்களுக்கு எதிராக இஸ்லாமிய மக்கள் தான் மற்ற அனைவரையும் விட மிக வலுவாகப் போராடிக் கொண்டு உள்ளனர்.
இந்த இஸ்லாமிய அரசு எனும் பயங்கரவாத அமைப்பு வளர்வதற்கு ஈராக் மீதான போர் மிக முக்கிய காரணம் என்று பிலிப் ஹமோண்ட் கூறி இருக்கிறார்,
இதே போன்ற நிகழ்வு ஒன்று இந்தியாவிலும் நடந்து இருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப் படுவதற்கு முன்னால் இந்திய மக்களுக்கு விளையாட்டுத் துப்பாக்கி, ஊசி வெடி, குருவி வெடிகளும் தான் தெரிந்து இருந்தன. ஆனால் பா.ஜ.க.வினர் பாபர் மசூதியை இடித்த பின் சமாதான முறையில் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் மதிப்பிழந்து போயினர். துப்பாக்கி, வெடி குண்டு கலாச்சாரங்கள் தோன்றி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்து இருக்கிறார் என்ற இம்மி அளவும் உண்மை கலவாத, பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏகாதிபத்திய நாடுகள் ஈராக் மீது போர் தொடுத்தன. இதன் விளைவாக உலக அரங்கில் பயங்கரவாதிகளின் தலைமையில் இஸ்லாமிய அரசு எனும் அமைப்பு உருவாகி, வளர்ந்து இன்று உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் இராமர் பிறந்தார் என்று இம்மி அளவும் உண்மை இல்லாத, பொய்யான கற்பனைகளைப் புனைந்து கூறி, பா.ஜ.க.வினர் பாபர் மசூதியை இடித்தனர். அதன் விளைவாக இன்று இந்தியா முழுவதும் துப்பாக்கி வெடி குண்டுக் கலாச்சாரங்கள் உருவாகி, வளர்ந்து இந்திய மக்களை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றன.
இஸ்லாமிய அரசு எனும் பயங்கரவாத அமைப்பு உருவாகி வளர்ந்து உள்ளதால், அவ்வமைப்பினரும் அதை உருவாக்கிய ஏகாதிபத்தியவாதிகளும் பாதிக்கப்படுவதை விட, அப்பாவிப் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
அதே போல் இந்தியாவில் துப்பாக்கி வெடிகுண்டுக் கலாச்சாரங்கள் வளர்ந்ததினால் அவ்வமைப்பினரும், அது உருவாகி வளரக் காரணமான பார்ப்பன ஆதிக்கவாதிகளும் பாதிக்கப்படுவதை விட, அப்பாவிப் பொது மக்கள் மிகவும் பாதிக்கபபடுகிறார்கள்.
ஆகவே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொறுப்பு பொது மக்களுக்கு உண்டு.
ஏகாதிபத்தியவாதிகள் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்று முனைப்புடன் இருப்பதாலேயே பயங்கரவாதத்திற்கு ஒரு முடிவு காண முடியாமல் திணறுகின்றனர்; அதை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
பார்ப்பன ஆதிக்கவாதிகள் பார்ப்பன ஆதிக்கம் தளர்ந்து விடக் கூடாது என்று முனைப்புடன் இருப்பதாலேயே துப்பாக்கி, வெடிகுண்டுக் கலாச்சாரங்களுக்கு ஒரு முடிவு காண முடியாமல் திணறுகின்றனர்; அவற்றை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொறுப்பு உள்ள மக்கள் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறையைக் காவு கொடுத்து விட்டு சோஷலிசப் பொருளாதார உற்பத்தி முறையை நிறுவுவதற்கான கருத்தியலை வளர்த்து எடுக்க வேண்டும். மேலும் பார்ப்பன ஆதிக்க அரசை ஒழித்து விட்டு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் அரசை நிறுவுவதற்கான கருத்தியலை வளர்த்து எடுக்க வேண்டும்.
இவையே பயங்கரவாதத்தையும், துப்பாக்கி வெடிகுண்டுக் கலாச்சாரங்களையும் வெற்றி கொள்ளும் சரியான வழிகளாகும்
(இக்கட்டுரை சிந்தனையாளன் ஆகஸ்.ட் 2016 இதழில் வெளி வந்துள்ளது.)