அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 37 குழந்தைகள் உட்பட 157 தமிழ் அகதிகளை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
பெப்ரீனா என்ற குழந்தை உட்பட 37 குழந்தைகளைத் நவ்ரு தீவில் சட்டவிரோதமாகத் தடுத்துவைத்திருக்கும் அவுஸ்திரேலிய நிறவெறி அரசின் நடவடிக்கைகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகம் மறைமுகமாகக் அங்கீகரிக்கிறது.
அகதிகளின் வரவை நிறுத்துவோம் என ஆட்சிக்கு வந்த அவுஸ்திரேலிய அரசு உலகம் முழுவதும் கனிம வளங்களைச் சுரண்டுவதற்காகப் போர் ஆபத்தைத் தூண்டி வருகிறது. உலகத்தைப் பாதுகாப்பற்றதாக்கி அகதிகளை உற்பத்தி செய்யும் அவுஸ்திரேலிய அரசு தனது நாட்டில் நிறவெறியையும் வெளி நாட்டவர்களுக்கு எதிரான அரசியல் யுத்தத்தையும் தூண்டிவருகிறது.
கடந்த ஒரு வருடமாக நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் உடல் நலம் குன்றி வருவதாக பெப்ரீனாவை உதாரணம் காட்டி தமிழ் அகதிகள் அமைப்பு கூறுகிறது.
ஒரு வருடத்தினுள் பெப்ரீனாவின் எடை 15 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் பல தடைவைகள் உடல் நலக் குறைவால் வருந்தியதாகவும், தனிமைப்படுத்தப்பட்டு அச்ச உணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைப்பைச்சார்ந்த கிராண்ட் என்பவர் கூறுகிறார். பொதுவாக எல்லாக் குழந்தைகளும் இதே நிலையில்தான் இருப்பதாகக் கூறும் கிராண்ட் அவர்கள் படிப்படியாகத் தங்களையே இழந்து வருவதாகக் குறிப்பிடுகிறார்.
கடலின் நடுவில் ஜூலை மாதம் 2014 ஆம் ஆண்டு தடுத்து நிறுத்தப்பட்ட இக் குழந்தைகள் உட்பட்ட 157 அகதிகள் கரைக்குக் கொண்டு செல்லப்படாமல் ஒரு மாதம் அலைகளின் இடையே சிறைவைக்கப்பட்டிருந்தனர்.