-கட்டுரையின் கருத்துக்களுக்கு எழுத்தாளரே பொறுப்பு-
இலங்கை இந்திய உறவுகள் வலுப்படுத்தப்படுவதை இரண்டு அரசுகளும் காட்டுகின்ற அக்கறையில் ஒரு பொது உடன்பாடு ஒளிந்திருப்பதையும் காண முடிகிறது. அது என்னவெனில் முடிந்தவரை வடகிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தின் அரசியல் பொருளாதார கலாச்சார பண்பாடுகளை சிதைத்தழித்து விட வேண்டும் என்பது தான்.
இந்த இடத்தில் சீனாவை காட்டி இந்தியாவை இலங்கை வழிக்கு கொண்டு வரும் உத்தியை பாவித்தாலும். இந்திய நாடு இந்துத்துவா இந்திய ஆரிய மனோநிலையில் இருந்து ஈழத் தமிழர்களையும் விரோதியாகவே பார்க்கின்றது.
இலங்கையின் தமிழர்களின் பூர்வீக குடியிருப்பு மற்றும் வாழ்விடங்களில் இருந்து தமிழர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தி வெளியேற்றி வரும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு இந்திய, சீன நிதியுதவியுடனும் ஆதரவுடனும் சிங்கள மற்றும் சிங்கள இராணுவ குடியேற்றங்களையும் செய்து வருகின்றது.
இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர் வழி தமிழர்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்(…….?). ஆனால் இலங்கையில் இடையிட்டுப் புகுந்த இன்றைய வங்காள தேசத்தைச் சேர்ந்த விஐயனும் அவன் நண்பர்களின் வழி வந்தாக கூறும் சிங்களவர்கள் தம்மை ஆரியர்கள் எனக் கூறுவதால் இந்திய அரசுக்கு சிங்கள இனவெறி அரசின் மீது அளவில்லாத அன்பு பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இலங்கையில் இன்றளவும் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இன அழிப்பில் இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு உதவுகிறது.
இப்போது தமிழ் மக்களின் தரப்பில் இருந்து இந்தியாவின் இந்த ஈழத்தமிழர் மீதான விரோத போக்கின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டுமெனில் சீன அரசுடன் ஈழத்தமிழர்கள் அரசியல் பொருளாதார உறவுகளை, நெருக்கங்களை ஏற்படுத்த வேண்டும். தந்திரோபாயமற்ற சமூக கூட்டமாக ஈழத்தமிழர்கள் இருக்கும் வரை அவர்கள் இன அழிப்பின் கோரப்பிடியில் இருந்து தப்ப முடியாது.
இலங்கையின் வட கிழக்கில் இருக்கும் கல்விச் சமூகமும் கல்விசார் கட்டமைப்புகளும் தமது சமூகத்தை தகவமைத்து நிலை நிறுத்தும் மூலோபாயங்கள் இன்றி, ஆற்றலும், அறிவுமற்ற நிலையில் இருக்கின்றது.
இன்றைய தமிழ் அரசியல் சூழல் என்பது காழ்ப்புணர்வுள்ள அருவருக்கத்தக்க அரசியலையே முன்னிறுத்துகிறது. விக்னேஸ்வரனின் வயதைக் காண்ப்பித்து அவரை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்ற முற்படும் போக்கும் அவற்றிற்கு பல்லக்கு தூக்கும் போக்கும் விரவிக் காணப்படுகிறதே ஒழிய அவர் பேசுகின்ற சரியான அரசியலை!? …… பேச, அவரை எதிர்க்கும் சக்திகள் விரும்பவில்லை. அதாவது இந்திய இலங்கை மேற்குலக எஜமானர்களை தாண்டி அரசியல் செய்ய பலர் விரும்பவில்லை. குறிப்பாக தமிழரசு கட்சியும், தனிப்பட்ட நன்மைகளை முதலாளித்துவ சக்திகளிடம் இருந்து பெற்றுவருவோரும் விரும்பவில்லை என உய்த்து உணர வேண்டியுள்ளது.
இப்போது விக்னேஸ்வரனை வெளியேற்றுவதில் ஆர்வம் காட்டுவோரின் பண்பற்ற சொல்லாடல்கள் கீழ்த்தரமான அரசியல் செயல் பாடுகளை பார்க்கும் போது இவர்கள் உண்மையில் தமிழ் மக்கள் நலன் சார்ந்து தானா? விக்னேஸ்வரனை மாற்ற துடிக்கின்றனர் என்பது கேள்வியாகிறது.
இப்போது இனஅழிப்பு குறித்த விக்னேஸ்வரனின் கேள்விக்கு என்ன பதிலை விக்னேஸ்வரனை மாற்றத் துடிப்போர் வைத்திருக்கின்றனர்? தமிழ் மக்களுக்கான நீதியுடன் கூடிய அரசியல் பொறிமுறையை விக்னேஸ்வரனை மாற்றுவதன் மூலம் பெற்று விடலாம் என கனவான்கள் நம்புகிறார்களா? …… விக்னேஸ்வரன் 80 வயது சிந்திக்க திராணியற்ற நிலையில் உள்ளார் எனக் கொண்டால் ….. முதலில் சுய சிந்தனை திராணியற்ற சுமந்திரன், மாவை, சம்மந்தனை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்றிவிட்டு விக்னேஸ்வரனை வெளியேற்றுவதே பொருத்தப் பாடாக அமையும்.
நான் பொறியியல் ஆளராகவோ, சட்டவாளராகவோ கணக்காளராகவோ மருத்துவராகவோ அல்லது இன்னும் பிற துறைகளில் இருப்பவனாகவோ இருப்பது மட்டும் தான் சமூகத்தை ஆளுமை படுத்தும் சுட்டி அல்ல….. மாறாக யதார்த்த நிலைமைகளை சீர்தூக்கி நடை பயில்பவனே தேவையானவன். பிரபாகரன், விக்னேஸ்வரன், சம்மந்தனை தாண்டிய பயணிப்பு எமக்கு தேவையாக உள்ளது என்பதே உண்மை. ஆனால் அதில் மாவையும் சுமந்திரனும் உள்ளிட்ட வகையறாக்கள் பிச்சைப் பாத்திரம் வைக்காமல் பார்த்துக் கொள்வது நன்று.
சுமந்திரன், மாவை, சம்மந்தன் ஆகியோர் நாளை விக்னேஸ்வரனை மாற்றுவதன் மூலம் உரிமைகளை பெற்று விடலாம் நம்பக் கூடும் (நம்ப வைக்க கூடும்) … ஏன் நம்புங்கள் என மக்களை கேட்கவும் கூடும் ……. தம்மை கல்விச் சமூகம் என்று வலிந்து அழைக்கும் அல்லது அடையாளப் படுத்துவோரும் பின்னால் அணிதிரள்வர் …. இவை எதுவும் புதினங்கள் அல்ல ….. ஒரு புரட்ச்சிகர அறிவு சார் கட்டமைப்பும் எத்தனங்களும் எம்மிடம் இன்றில்லை ….. இதனை நிரப்ப பிற்போக்கு சுயநல சக்திகளில் இருந்து யாரும் வருவார் …. ஆனால் புரட்ச்சிகர வரலாறு இவர்களால் எழுதப் படாது ….இவர்கள் ஒரு அறிவார்ந்த சமூகம் ஒன்றின் புரட்ச்சிகர பாச்சலின் போது குப்பைத் தொட்டிகளில் வீசப்ப படுவர்.
இப்போது தமிழ்ச்சமூகத்துக்கு அதன் வெற்றிகரமான அசைவியக்கத்துக்கு தேவையான பொறி எங்கிருந்து எப்போது எப்படி வெளிக்கிளம்ப போகின்றது என்பதே கேள்வியாகின்றது. இந்த கேள்விக்கான விடைகள் இன அழிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களாகிய எம்மிடம் மாத்திரமே இருக்கின்றது.
S.G.Ragavan (Canada)