மத்திய கிழக்கு நாடுகள் மீது அமெரிக்கா அதிக கவனம் செலுத்தியதாகவும் இனிமேல் ஆசிய நாடுகள் மீது கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்றும் புதிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை முன்மொழிந்தவர் கில்லாரி கிளிங்டன். ஒபாமா ஆட்சி காலத்தின் முதலாவது இறுதிப் பகுதியில் ஆசிய நாடுகள் மீதான கவனம் அதிகமாகியது. அதன் விளைபலன்களின் ஒன்றே வன்னிப் படுகொலைகளை அமெரிக்க அரசின் ஆதரவுடன் இலங்கை அரசு நடத்தி முடித்தது. அதன் பின்னர் போர்க்குற்ற விசாரணை என்ற போலி நாடகத்தைப் புலம்பெயர் தமிழ்க் குழுக்களுடன் இணைந்து அரங்கேற்றி தனது பினாமி அரசை உருவாக்கி இலங்கையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்கு உட்படுத்திற்று.
இன்று தமிழ் – சிங்கள அமெரிக்க சார்பு அதிகாரவர்க்கங்கள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை அமெரிக்கா இராணுவமயமாக்குவதற்குத் துணை சென்று மனிதகுலத்தின் வரலாற்றுத் துரோகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ் அரசியல் கோமாளிகள் கில்லாரி கிளிங்டன் வெற்றி பெற வேண்டி நல்லூரில் பிரார்த்தனை ஒன்றை நடத்தியிருக்கின்றன.
சிவாஜிலிங்கம் என்ற அரசியல்வாதியைப் புடை சூழ்ந்த சிறிய குழு நடத்திய இந்தக் கூத்து புலம்பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் இணைய ஊடகங்களில் பிரதான செய்தியாகியது.
சிவாஜிலிங்கத்துடன் இணைந்துகொண்ட அனந்தி சசீதரன் நல்லூரில் ஹில்லாரிக்காக மண்டியிட்டமை கண்கொள்ளாக் காட்சியாகியது.
இதற்காக 1008 தேங்காய்களை உடைத்து தமிழ் அரசியல் தலைவர்கள் விரயமாக்கி வீரகாவியம் படைத்தனர்.
ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்டத்தை வன்முறை என்றும் ஜனநாயக் மறுப்பு என்றும் விழித்த மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், போகும் வழியில் இந்தியா சென்று பாரத மாதாவே அனைத்தும் என விழித்துச் சென்ற கோமாளித்தனத்தின் பின்னான போட்டியில் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி வெற்றி பெற்றுள்ளனர்.