தமிழ்த் தேசியம் என்றால் என்ன? தமிழ்ப் பேசுகின்ற எல்லோரும் ஒரே தேசிய இன வகைக்குள் அடங்குவார்கள் என்பதே அதன் மறு அர்த்தம். ஆக, தமிழ் நாடு, வட கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இன்னும் தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்கள், வேண்டுமானால் புலம்பெயர் தமிழர்கள் போன்ற அனைவரையும் இணைத்து ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்வதே தமிழ்த் தேசியமா என்ன? தமிழ்த் தேசியவாதிகள் பல சந்தர்ப்பங்களில் தம்மைத் தமிழ் உணர்வாளர்கள் என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். தமிழ்த் தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களின் பொதுவான ஆரம்பமே தாம் ஏனைய மொழி பேசும் மக்களைவிட உயர்வானவர்கள் என்பதே. இவர்கள் அனைவரதும் மற்றொரு முழக்கம் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பது என்பதாகும் எனப் புரிந்துகொள்ளலாம்.
முதலில் நாற்பது வருடகாலம் ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்டத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையின் மத்திய பகுதியில் வாழும் தமிழர்கள் பங்கேற்றதில்லை. இன்றும் கூட வட கிழக்கில் தமிழர்களிடம் வாக்குக் கேட்கும் தமிழ் அரசியல் கட்சிகள் மலையகத்தில் இல்லை. மலையகத் தமிழர்களுக்கான அரசியல் கட்சிகளே அங்கு தேர்தல்களில் பெரும்பான்மையாக வெற்றிபெறுகின்றன. மலையகத் தமிழர்கள் வட கிழக்குத் தமிழர்களுடன் தம்மை எப்போதும் அடையாளப்படுத்தியதில்லை. பல வீரம் செறிந்த மக்கள் போராட்டங்களை நடத்திய மலையகத் தமிழர்கள் தம்மைத் தனியான தேசிய இனமாகவே உணர்கின்றனர். வட கிழக்கைச் சார்ந்த அரசியல் கட்சிகளோ, அன்றி வட கிழக்கில் தோன்றிய விடுதலை இயக்கங்களோ அவர்களின் அடிப்படையான அந்த உணர்வை மதித்ததில்லை.
1972 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற வாக்குக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு தனி நாட்டுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, வாக்கைச் சிதறவிடாமல் தடுப்பதற்காக மலையகத்தின் பலமான அரசியல் கட்சியின் தலைவரான சவுமிய மூர்த்தி தொண்டைமானுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டனர்.
அதன் பின்னர் மலையக மக்களையும் இணைத்தே ஈழம் என்ற கோட்பாட்டை ஈரோஸ் என்ற விடுதலை இயக்கம் முன்வைத்து மலையகப் பகுதிகளில் அரசியல் வேலைகள் முன்னெடுத்துத் தோற்றுப் போனது. 80 களின் ஆரம்பத்தில் ஈழப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு மலையக மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான இயக்கங்கள் தோன்றின. இலங்கை பேரினவாத ஒடுக்குமுறையின் கோரத்திற்கு அப்போதே அந்த இயக்கங்கள் பலியானமைக்கு அவற்றின் வர்க்கம் சார்ந்த போர்க்குணமும் ஒரு காரணம் எனலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு மீண்டும் வாக்குக் கட்சிகள் தோன்றிய போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையினான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மீண்டும் மலையக் மக்களை அன்னியப்படுத்தும் வகையிலான கோரிக்கைகளை முன்வைத்தது. தமிழர்கள் அனைவரும் ஒரே தேசத்திற்கு உரித்தானவர்கள் என்றும் இலங்கை என்பது ஒரு நாடு அதனுள் இரண்டு தேசங்கள் அடங்கும் என்ற முழக்கத்தை முன்வைத்தனர். மலையகத்தில் மட்டுமன்றி வட கிழக்கிலும் அவர்களை யாரும் ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை.
ஆக. ஒரு நாட்டின் எல்லைக்குளேயே வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் இரண்டு தேசிய இனங்களாக வளர்ந்து தமக்கான உரிமைகளைக் கோருகின்றனர். இங்கு மலையக மக்களின் சுய நிர்ணைய உரிமையை மதித்து அவர்களுடன் இலங்கைப் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டிணைவை ஏற்படுத்திக்கொள்வதே அதிகாரவர்க்கைதைப் பலவீனப்படுத்தும். தவிர தமிழர்கள் என்ற அடிப்படையில் இணைந்து வட கிழக்குத் தமிழர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுமாறு மலையகத் தமிழர்களைக் கோருவது மேலாதிக்க மனோபாவமே தவிர வேறெதுவுமில்லை.
தமிழ் நாட்டிலிருந்து ஈழம் பிடித்துவருவதாகக் கூறும் ‘தமிழ்’ தேசியவாதிகளில் பலருக்கு மலையகத் தமிழர்கள் குறித்த அறிவிற்கு வாய்ப்பில்லை என்பது வேறு விடையம்
ஒரு நாட்டின் எல்லைக்குள்ளேயே இரண்டு தேசிய இனங்களாக தமிழர்கள் உணரும் போது, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை இணைத்துத் தமிழ்த் தேசிய இனம் எனக் கூறுவது எவ்வளவு அபத்தமானது?
நான்கு தசாப்தங்கள் நடைபெற்ற வீரம்செறிந்த ஈழப் போராட்டம், அதில் பங்காற்றிய இயக்கங்கள், முன்வைக்கப்பட்ட அரசியல் போன்றன தொடர்பாக எந்தக் குறைந்தபட்சப் புரிதலுமின்றி, ஈழப் போராட்டத்தை முன்வைத்து தமிழ்த் தேசியம் என்று கற்பனை செய்து சினிமாப் படம் எடுத்தால் கூட அதில் பந்தாடப்படுவது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களே.
தமிழ்த் தேசியம் என்ற சினிமாப்பாணியிலான கற்பனையை மலையக மக்களின் வரலாறு மட்டுமன்றி ஈழத்தின் இலங்கையின் ஏனைய தேசிய இனங்களின் வரலாறும் இணைந்தே சிதறடித்துவிடுகின்றன.
தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் இலங்கையில் ஒரு போதும் ஈழப் போராட்டத்தில் இணைந்துகொண்டதில்லை. அவர்களை முஸ்லீம் காங்கிரஸ் போன்ற வாக்குக் கட்சிகளே பிரதிநித்துவம் செய்தன. அக்கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைப்பை ஏற்படுத்தி பின்னர் தனியாகப் பிரிந்த வரலாறும் உண்டு. ஈரோஸ் மற்றும் சிறிய இடதுசாரி இயக்கங்கள் தவிர்ந்த அனைத்து விடுதலை இயக்கங்களும் முஸ்லீம்களை சாரிசாரியாகப் படுகொலை செய்த கறைபடிந்த வரலாறும் உண்டு. அதன் மறுபக்கதில் இலங்கை அரசின் துணை இராணுவப் படைகளுடனும் அடிப்படை வாதக் குழுக்களுடனும் முஸ்லீம்களின் ஒரு பகுதியினர் தொடர்பை ஏற்படுத்தி படுகொலைகளில் ஈடுபட்ட துயர்படிந்த வரலாறும் நம்முடையது தான்.
இவற்றின் உச்சமாக வடக்கில் பரம்பரைகளாக வாழ்ந்துவந்த அனைத்து முஸ்லீம் தமிழர்கள் 1990 ஆம் ஆண்டு ஒரு இரவிற்குள் விடுதலைப் புலிகளால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் முஸ்லீம்களை நிரந்தர எதிரிகளாக்கிற்று. இனப்படுகொலையோடு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், முஸ்லீம்கள் மிண்டும் வடக்கில் தமது இருப்பிடங்களில் குடியேற ஆரம்பித்தனர்.
ஆக, இலங்கையின் எல்ல்லைகுள் வாழுகின்றன வெவ்வேறு தேசிய இனங்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவை. அவர்களின் தனித்துவத்தை மதிக்காமல் அவர்களைத் தமிழ்த் தேசியம் என்ற ஒற்றை எல்லைக்குள் உட்படுத்த முற்பட்டு அது அழிவுகளுக்கு வித்திட்டதை வரலாற்றின் பாடமாக கொள்ளலாம்.
இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதே நிலை தான். ஆங்கிலம் பேசும் இங்கிலாந்துக் காரர்கள் அயர்லாந்து மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள் என்பதற்காக ஒரே தேசிய இனமாக இணைத்துக்கொள்ள முற்பட்டதன் விளைபலன் தான் அயர்லாந்து மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம். பிரான்ஸ் நாட்டில் பிரஞ்சு மொழி பேசும் கோர்சிகா மக்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் உரிமைக்காப் போராடுகிறார்கள்.
ஆக, ஒரு மொழியைப் பேசுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரே தேசிய இனம் என்று வலிந்து இணைத்துக்கொள்வது இன்னொரு வகையான ஒடுக்குமுறை மட்டுமன்றி ஆபத்தானதும் கூட என்பதை வரலாறு எமக்கு உணர்த்துகிறது.
இலங்கை அரச கட்டமைப்பு என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அமைதிச் சூழல் தற்காலிகமானது. தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்குக் கிடைத்த இடைவெளிதான் இது. இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகளைப் பலவீனப்படுத்துவதும் அதற்காக ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் மக்களிடம் உரையாடுவதும் ஈழத் தமிழர்களின் இன்றைய கடமை. இலங்கையில் வாழும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை மதித்து அதன் அடிப்படையிலான இணைவை ஏற்படுத்துவது மற்றைய பணி.
நீங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக மேடை போட்டு முழங்கும் தமிழ்த் தேசியம் மற்றொரு பணியையும் செய்து முடிக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாதிகளைப் பலப்படுத்துகிறது. உங்களைக் காரணம் காட்டி பேரினவாதிகள சிங்கள மக்களை தமது பிடிக்குள் வைத்துக்கொள்ள நீங்கள் துணை போகிறீர்கள்,
தமிழ் நாட்டிலிருந்து உங்களுக்குத் தோன்றும் சினிமாப் பாணிக் கற்பனைக் கதைகளுடன் நீங்கள் பேசும் தமிழ்த் தேசியத்தை நிறுத்திக்கொண்டு உங்களை ஆக்கிரமிக்க எண்ணும் இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு எதிராக போராடினாலே அது மனிதகுலத்திற்கு நீங்கள் ஆற்றும் சேவையாகக் கருதப்படும்.