புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்பகவிருந்து தன்னார்வ நிறுவனமாக(NGO) உருமாற்றம் பெற்ற உலகத் தமிழர்(GTF) பேரவை இலங்கைத் தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்களை வாக்களிக்குமாறு கோரியுள்ளது. அவதானமாக வேட்பாளர்களைத் தெரிந்தெடுத்து வாக்களிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மக்களின் வாழ்க்கையில் ஒரு திரும்பல் புள்ளி எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள உலகத் தமிழர் பேரவை, ஜனநாயகமற்ற, சர்வாதிகார, ஊழல்மிக்க அரசிற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பேரினவாத அரசுகளையும், மேற்கு ஏகாதிபத்திய நாடுகளையும், இந்தியப் பிராந்திய ஏகபோக அரசையும் போன்று இனப்படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்சவிற்கு எதிராக மக்கள் வாக்களித்தார் எனக் உலகத் தமிழர் பேரவையின் அறிக்கை எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
தமிழர்களின் பிரச்சனை என்பது இலங்கை அரசிற்கும், தெரிவு செய்யப்படும் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் ஊடாகவே தீர்த்துவைக்கப்படும் என்றும், உலகத் தமிழர் பேரவை சர்வதேச சமூகத்தின் பங்களிப்படை இந்த நிகழ்ச்சிப் போக்கில் எதிர்பார்ப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பணியாற்றுவதர்கு உலகத்தமிழர் பேரவை எதிர்பார்ப்ப்தாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளதும் அதன் பிரதிநிதிகளான இலங்கை அரச உறுப்புகளதும் இன்றைய அரசியல் நோக்கம் உலகத்தமிழர் பேரவையின் அறிக்கையின் ஊடாக வெளிப்படுகிறது.
உலகத்தமிழர் பேரவை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போன்றவற்றின் அரசியல் கூட்டு தெளிவானது. இலங்கை அரச அதிகாரவர்க்கத்துடன் இணைந்து தமிழ் அதிகாரவர்க்கத்தை நிறுவிக்கொள்ளும் நோக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இக்கூட்டை அமெரிக்க அரச அணியின் நிதி வழங்கலில் இயங்கும் ஏகாதிபத்திய நாடுகளில் வழி நடத்துகின்றன.
இந்த அரசியல் எதிர்கொள்ளப்பட வேண்டும். ஏகாதிபத்திய அழிவிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும். புதிய மக்கள் சார்ந்த அரசியல் முன்வைக்கப்பட வேண்டும். அவ்வாறான மக்கள் சார்ந்த அரசியல் தோன்றாமல் தடைசெய்வதற்கும் ஏகாதிபத்திய சார்புக் குழுக்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, சம உரிமை இயக்கம் என்பவை இவ்வாறான குழுக்களே.
ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உலகத் தமிழர் பேரவையையும் எதிர்கொள்ளும் காத்திரமான அரசியலை முன்வைக்கும் அமைப்புக்கள் தோன்றும் வரை, ஏனைய ஏகாதிபத்தியச் சார்புக் குழுக்களின் இருப்பு தவிர்க்க முடியாத அழிவைத் தோற்றுவிக்கும். இந்த அழிவின் சாம்பலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத்தமிழர் பேரவையும் தமது மக்கள் விரோத அரசியலை நிறுவிக்கொள்ளும்.