பிரான்சின் புற நகர்ப் பகுதியொன்றில் அல்ஜீரிய முஸ்லீம்கள் 90 களில் பல்லாயிரக்கணக்கான மக்களை இணைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். அல்ஜீரியாவிலிருந்த ஆயுதக் குழுவான ஜீ,ஐ.ஏ என்ற அமைப்பிற்கு எதிரான பிரான்சின் நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமியக் கொடிகளுடன் அல்லாஹு அக்பர் என்று முழங்கியபடி நடத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டம் ஏன் நடத்தப்படுகிறது என்பதே பலருக்குப் புரியாத புதிராகவிருந்தது.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக லிபரேஷன் என்ற பிரஞ்சு நாளிதழில் மறு நாள் வெளியான செய்தியிலும் ஆர்ப்பாட்டத்தின் அர்த்தத்தை விட அல்லாஹு அக்பரே அதிகமாகத் தெரிந்ததாக எழுதியிருந்தது.
அடிப்படை வாதத்தால் உள்வாங்கப்பட்டு உறக்க நிலையிருக்கும் அப்பாவிகள் பலர் தமது எஜமானர்களின் வழியைப் பின்பற்றுவது வழமை. அப்பாவிகளைப் பொறுத்தவரை தம்மை வழி நடத்துபவர்கள் என்ன கூறினாலும் அது வேத வாக்கு. இந்த நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஏவலாளிகள் அடிப்படைவாதத்தைப் பயன்படுத்தி தமது பிழைப்பை நடத்திக்கொள்வார்கள், அப்பாவிகளை போதை கலந்த உறக்க நிலையில் பேணுவதே இவர்களின் வெற்றி.
இன்று ஐ.நா முன்றலில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் இவ்வாறான அப்பாவிகளையும் அவர்களை ஏவியவர்களையுமே நினைவிற்குக் கொண்டுவருகின்றன. ஜெனீவாவிற்கு போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசிற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நடத்த வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்ட ஆர்ப்பாட்டக் காரர்கள் ஜெனீவாவில் முழங்கும் சுலோகங்களில் சில இவை:
‘இந்தப்படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா’
‘பனைமரத்தில வவ்வாலா, தலைவருக்கே சவ்வாலா’
புலிக் கொடிகளுடன் செந்தமிழில் முழங்கிய காட்சி ‘கண்கொள்ளாக் நாடகக் காட்சி’! இனி வரும் காலங்களில் காத்தவராயன் கூத்து, சூரன் போர், அலாவுதீன் அற்புத விளக்கு போன்ற கலைகளையும் ஐ.நா முன்றலில் அரங்கேற்றுவார்கள்.
தமிழில் முழங்கும் இச் சுலோகங்களுடன் ஆங்கில முழக்கங்கள் மேலும் ‘விஞ்ஞானபூர்வமானவை’.
‘Our land Tamil Eelam, Our leader pirapaharan’
பல்வேறு இழப்புக்களையும் விலைமதிக்க முடியாத தியாகங்களையும் தன்னகத்தே கொண்ட ஈழப் போராட்டத்தை கொச்சப்படுத்துவதற்கு என்றே இவர்கள் செயற்படுகிறார்கள். ஐ.நா முன்றலைக் கேலிக்கூத்தாக்கிய பெருமை இவர்களைச் சாரும்.
தமிழர்களால் நடத்தப்படும் சொகுசு பஸ்களில் பணம்கொடுத்து ஜெனீவா செல்லும் அப்பாவிகளை அவர்களது ஏவலாளிகள் போதை கலந்த உறக்க நிலையில் வைத்திருக்கிறார்கள். ஏவலாளிகளில் பலர் கடந்த காலங்களில் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டதில்லை. பிரபாகரனுக்கு ஒளிவட்டம் கட்டியே புலிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள்.
ஜெனிவாத் தெருக்களில் உலாவவிடப்ப்பட்டுள்ள அப்பாவிகளை மேலும் உறக்க நிலையில் வைத்திருந்து உணர்ச்சிவயப்படுத்த சினிமாப் பிடித்து தோல்வியடைந்த இயக்குனர்கள் உட்படப் பலர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், இந்து அடிப்படைவாதிகளுக்கும் இணையான ஒரு குழுவை தம்மோடு இணைத்துவைத்திருக்கும் இந்த பிழைப்புவாத ஏவலாளிகளின் ஒரே நோக்கம் வியாபாரம் மட்டுமே.
அமெரிக்க ஆதரவு, இந்திய ஆதரவு, வன்முறை, அடிப்படைவாதம், புலிகளின் அடையாளங்கள், பிரபாகரன் ஆகியவற்றின் ஊடாக ஏனைய போராடும் உலக மக்களிடமிருந்து தமிழர்களை அன்னியப்படுத்தித் தனிமைப்படுத்திய இந்த ஏவலாளிகளிடமிருந்து போர்க்குணமுள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அர்த்தமுள்ள போராட்டங்களை நோக்கி மக்கள் வழிநடத்தப்பட வேண்டும்.
மனிதஉரிமைக்கான போராட்டமா அல்லது புலிக்கொடி பிடிக்கும் போராட்டமா
இலகுவாக இதனை தமிழ் மக்களின் போராட்டமல்ல, இது புலிகளின் போராட்டம் மட்டுமே என இலகுவாக எதிரிகளால் நிரூபிக்க வசதியாக மக்களின் கைகளில் புலிக்கொடி.