`தமிழ்நாடு` எனும் சொல் பழந் தமிழ் நூல்களில் காணப்படுகின்றதா? அவ்வாறு காணப்பட்டால் அதன் சூழ்நிலை, விளக்கம் என்பன பற்றியும்; தமிழ்நாடு – தமிழகம் ஆகிய சொற்களில் இன்றைய மாநில அலகுக்குப் பொருத்தமான பெயர் எது? ஆகியவை பற்றியும் இக் கட்டுரை ஆய்வு செய்யவுள்ளது. முதலில் தமிழ்நாடு என்ற சொல் எப்போது முதல் பயன்படுத்தப்படுகின்றது எனப் பார்ப்போம்.
சங்க இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் கையாளப்படும் `தமிழ்` என்ற சொல் தனியாக எமது மொழியினை மட்டுமல்லாது மக்கள் (தமிழர்), நாடு (தமிழ் மொழி புழங்கும் நாடு) எனப் பல்வேறு பொருள்களில் இடம் பெறும். அவற்றினை விடுத்து, நாம் நேரடியாகத் `தமிழ்நாடு` என்ற சொல்லின் பயன்பாட்டினையே நோக்குவோம். சிலப்பதிகாரமே முதன் முதலில் “தமிழ்நாடு” என்ற பெயரைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. அதற்கு முன்னரே தமிழ்நாடு என்ற சொல் பயன்பாட்டிலிருந்திருக்கலாம் எனினும் அதற்கான சான்றுகளில்லை. இளங்கோ அடிகள் பின்வரும் பாடலில் `தமிழ்நாடு` என்ற சொல்லினைப் பதிவு செய்கின்றார்.
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
: சிலப்பதிகாரம்: காட்சிக் காதை
மேலுள்ள பாடலில் அமைச்சர் வில்லவன் கோதையின் கூற்றாக மேற்படி வரிகள் அமைந்துள்ளன. சேரன் செங்குட்டுவன் வடக்கே ஆரிய நாடுகளுக்கு கண்ணகிக்கு கல்லெடுக்கப் போகும் போது, ஆரிய மன்னர்களை எவ்வாறு எதிர்கொள்வது என அமைச்சரவையிடம் கலந்துரையாடும் போது, அமைச்சர் ` கடலால் சூழப்பட்ட இந்த நாட்டினை நீ தமிழ்நாடாக்க விரும்பினால் எதிர்ப்பவர் யார்? ` எனக் கூறுவதாக இளங்கோ அடிகள் பதிவு செய்துள்ளார். சிலப்பதிகாரத்தில் வேறொரு இடத்திலும் `தமிழ்நாடு` என்ற சொல்லினைக் காணலாம்.
“‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
:வாழ்த்துக் காதை
சேரன் செங்குட்டுவன் இமய மலையில் தமிழரின் வீரச் சின்னத்தைப் பொறிக்க வேண்டும் என்று கூறும்போது அமைவதாக இப் பாடல் அமைகின்றது.
சங்க இலக்கியமான பரிபாடலிலும் `தமிழ்நாடு` என்ற சொல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் பரிபாடலைப் பாருங்கள்.
“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.”
:பரிபாடல்
`பாண்டிய மன்னனின் பொதியில்மலையிருக்குமளவும் மதுரை
தமிழ் நாடெங்கும் தன் புகழ் பரவப் பொலிந்து நிற்பதன்றிக் குன்ற
மாட்டாது` என்ற பொருளில் மேற்படி பரிபாடல் அமைந்துள்ளது. இங்குள்ள முகன்மையான செய்தி யாதெனில் தமிழ்நாடு என்ற சொல் ஒரு வகையில் வரைவிலக்கணப் படுத்தப்படுகின்றது; அதாவது தமிழ்மொழி புழங்கப்படும் இடமே தமிழ்நாடு என இப் பாடலின் மூலம் அறியலாம். இங்கு உங்களுக்கொரு கேள்வி எழலாம். சங்க இலக்கியமான பரிபாடலினை சிலப்பதிகாரத்திற்குப் பின் ஏன் குறிப்பிடுகிறேன் என்ற கேள்வி எழலாம். சங்க இலக்கியங்கள் ஒரு தொகுப்பு, அவை யாவும் ஒரே காலத்தில் படைக்கப்பட்டவையல்ல. குறிப்பாக எட்டுத்தொகை நூல்களில் இடம்பெறும் பரிபாடல், கலித்தொகை ஆகியனவும், பத்துப் பாட்டிலுள்ள திருமுருகாற்றுப்படையும் காலத்தால் பிற்பட்டவை என்பது அறிஞர்கள் கருத்து. பேரா கா.சிவத்தம்பி அவர்கள் தனது நூலான `சங்ககாலக் கவிதையும் கருத்தும்` என்ற நூலிலும்; 2009ம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையான `பரிபாடல் கிளப்பும் பிரச்சனைகள்` என்ற கட்டுரையிலும் இது பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார். கமில் ஸ்வெலபில் போன்ற வெளிநாட்டு ஆய்வாளர்களும், சுபவீ போன்ற தமிழ்நாட்டு அறிஞர்களும் கூட இதே கருத்தினைக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பரிபாடலினை (கலித்தொகை, திருமுருகாற்றுப்படை என்பவற்றையும்) பக்தி இயக்க காலத்தின் தொடக்க காலப் படைப்பாகவே கொள்வார்கள். எது எவ்வாறாயினும் பரிபாடல் சஙக இலக்கியமாகத் தொகுக்கப்பட்ட ஒரு நூல் என்பது தெளிவானது.
தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் என்பவரும் `தமிழ்நாடு` என்ற சொல்லினைப் பதிவு செய்யத் தவறவில்லை. “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பது தொல்காப்பிய நூற்பா. இங்கு கேள்வியும் பதிலும் குழப்பமில்லாமல் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்பதைத் தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். தொல்காப்பிய கால நூற்பாவான இதற்கு பதினொராம் நூற்றாண்டில் இளம்பூரணர் உரை எழுதுகின்றார். இங்கு தெளிவான கேள்வி-பதிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு கூறுகின்றார்.
“நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“
மேற்கூறியவாறு `உன்னுடைய நாடு எது எனில் தமிழ்நாடு` என்று கூற வேண்டும் என இற்றைக்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே இளம்பூரணர் கூறியுள்ளார்.
கம்பரும் தனது கம்பராமாயணத்தில் `தமிழ்நாடு` என்ற சொல்லினைக் குறித்துள்ளார்.
“துறக்கமுற்றார் மனமென்னத் துறைகெழுநீர்ச் சோணாடு கடந்தால் தொல்லை
மறக்கமுற்றா ரதனயலே மறைந்துறை வரவ்வழி நீர் வல்லையேகி
உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி
மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ”
-கிட்கிந்தா காண்டம் நாட விட்ட படலம்-30
சுக்ரீவன் அனுமனுக்கும் மற்ற வானரப் படையினருக்கும் சீதையினைத் தேடி இலங்கை நோக்கிச் செல்லுமாறு கூறும் போது தமிழ்நாட்டினைக் கடந்து செல்ல வேண்டும் எனக் கூறுவதாக கம்பன் பதிவு செய்கின்றார். இன்று இராமரை முன் நிறுத்தி அரசியல் செய்பவர்களே பெரும்பாலும் தமிழ்நாடு என்ற சொல்லாடலை வெறுக்கும் நிலையில் கம்ப இராமாயணத்திலேயே தமிழ்நாடு என்ற சொல் இடம் பெறுவதனை எவ்வாறு அவர்கள் எடுத்துக் கொள்ளப் போகின்றார்களோ தெரியவில்லை.
வைணவ சமயம் சார்ந்து கம்பர் மட்டும் தான் தமிழ்நாட்டினை வலியுறுத்தவில்லை, மாறாக சைவ சமயம் சார்ந்த சேக்கிழாரும் பின்வரும் பாடல்களில் தமிழ்நாட்டினைப் பதிவு செய்தே சென்றுள்ளார்.
“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”
: திருநாவுக்கரசு நாயனார் புராணம்.
“மண்குலவு தமிழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்”
: திருநாவுக்கரசு நாயனார் புராணம்.
“செந்தமிழ்த் திருகா டெய்தி”
காரைக்கால் அம்மையார் புராணம்
“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்”
:திருஞான சம்பந்த மூர்த்திகள் புராணம்
இவ்வாறு மேலும் பலவிடங்களில் சேக்கிழார் `தமிழ்நாடு` எனப் பதிவு செய்துள்ளார்.
ஒட்டக்கூத்தர் எனும் புலவரும் தனது தக்கயாகப் பரணியில் பின்வருமாறு பாடுவார்.
“கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
:இராசராச சோழனுலா : 189
இக் காலப் பகுதிகளிலெல்லாம் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, மற்றும் குறுநில மன்னர்களின் நாடுகள் எனப் பல நாடுகளிருக்க ஏன் இவை யாவற்றையும் `தமிழ்நாடு` எனப் பழம் புலவர்கள் அழைத்தார்கள்? மொழி வழித் தேயங்கள், மொழி வழி மாநிலங்கள் பிற் காலத்தில் உருவாகப் போவதனை முற்கூட்டியே அறியும் ஆவதறிவார்கள் (தீர்க்கதரிசிகள்) ஆக இருந்தார்களா! எது எப்படியோ `தமிழ்நாடு` என்ற சொல் தமிழர்களுடன் பிணைந்தே இருந்து வருகின்றது. இந்திய நாட்டின் விடுதலையினைப் பாடிய பாரதியாரும் தமிழ்நாட்டினைக் குறிப்பிட்டே சென்றுள்ளார்.
” செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
:பாரதி
“தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! ”
:பாரதி
தமிழ்நாடு- தமிழகம் எது பொருத்தமான சொல்?
தமிழ்நாடு, தமிழகம் ஆகிய இரண்டு சொற்களும் தொன்று தொட்டே பயன்பாட்டிலுள்ள ஏறக்குறைய ஒரே பொருளிலுள்ள சொற்களாகும். இவற்றில் எச் சொல் தமிழர்களின் மாநிலத்தைக் குறிக்கப் பொருத்தமான சொல் எனப் பார்ப்போம். இரு சொற்களினதும் முன்னொட்டான தமிழ் என்பது ஒன்றே, பின்னொட்டே வேறுபடுகின்றது. அகம் என்பது உள்ளேயிருப்பது என்ற பொருளில் இடம் பெறும். `தமிழை உள்ளே அடக்கியது` என்ற பொருளில் தமிழகம் இடம்பெறும். நாடு என்பது மக்கள் நாடி வருமிடம் என்ற பொருளில் அமையும்.
“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.”
:குறள் 739
வளங்களையுடையது நாடு. தமிழ்நாடு ஏற்கனவே நாம் பார்த்த படி தமிழ்மொழி புழங்கும் நாட்டினைக் குறிக்கும் (பரிபாடல் விளக்கம்). இது இன்றைய மாநிலத்தினைக் குறிப்பதற்குப் பொருத்தமான சொல்லாகும். அப்போதிருந்த தமிழகத்தினை மொழிப் பயன்பாட்டினடிப்படையில் இரு பிரிவுகளாகக் கொள்ளலாம் (செந்தமிழ் – கொடுந் தமிழ்).
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம்குறிப் பினவே திசைச்சொல் கிளவி “
:(தொல்.சொல், 400).
பொருள்- “செந்தமிழ் நாட்டைச் சேர்த்து, பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும், தாம் குறித்த பொருளை விளக்கி நிற்கும் சொற்கள் திசைச்சொல் எனப்படும்” .
இங்கு செந்தமிழகம் எது? கொடுந்தமிழகம் எது? என்று சொல்லப்படவில்லை (அக் காலத்தில் அவர்கள் தெளிவாக அறிந்தேயிருந்தார்கள்). பிற்கால அறிஞர்களே இதனை இன்று எமக்கு வரையறுத்துள்ளார்கள். பிற்கால விளக்கத்தின் படி, செந்தமிழகம் என்பது செந்தமிழ் நாடான பாண்டிய நாட்டுடன் அதனைச் சூழ்ந்த வைகை ஆற்றின் வடக்கும், மருத ஆற்றின் தெற்கும், மருவூரின் மேற்கும், கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் செந்தமிழகம் எனப்பட்டது. கொடுந் தமிழகமாகவிருந்த பகுதிகள் சில இன்று தமிழ் மொழி பயன்பாட்டிலுள்ள இடங்களாகவில்லை. ஏன் சேர நாடே இன்று கேரளாவாகி விட்டது. எனவே தமிழகம் என்பதனை விடத் தமிழ்நாடே என்ற பெயரே இன்றைய மாநிலத்துக்குப் பொருத்தமானது.
`தமிழ்நாடு` என்ற பெயர் சூட்டலுக்காகப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. சங்கரலிங்கனார் என்ற ஈகையாளர் 76 நாட்கள் உணவு மறுப்புப் போராட்டத்திலீடுபட்டு தனது உயிரினையே ஈகையாக்கியுள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க மாநில அரசினைக் கைப்பற்றிய பின்னரே இப் பெயர் மாற்றம் நடைபெற்றது. இவ்வாறு அதிகார முறையில் வைக்கப்பட்ட `தமிழ்நாடு` என்ற பெயரே சிலருக்குக் கசக்கின்றது என்றால் என்ன சொல்ல! இவர்கள் இப்போது சொல்வது ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாடு எப்படி? என்பதே. அதற்கான விடை இந்தியா என்பது ஒரு நாடல்ல, மாறாக அது நாடுகளின் ஒரு ஒன்றியம். இதனைச் சொல்லுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம். எனவே இந்தியா எனும் ஒன்றியத்துக்குள் (நாடுகளின் ஒன்றியம்) இருக்கும் ஒரு நாடே `தமிழ்நாடு` ஆகும்.
பல வேளைகளில் நாம் அறியாத எமது வலிமையினை எதிரி கண்டறிந்திருப்பான். அதனைக் கண்டு பதறவும் செய்வான். அவ்வாறு எதிரியினை அச்சப்பட வைக்கும் சொற்களாகவே `ஒன்றிய அரசு`, `தமிழ்நாடு` என்பன காணப்படுகின்றன. அவற்றினை நாம் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.