ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி – கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர், அதில் இருந்த 29 மீனவர்களை கைது செய்தனர். இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு மீனவர்களை தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு மீனவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதா ராமேசுவரம் மீனவ சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழ் மீனவர்களுக்கு இது வாழ்வாதரப் பிரச்சனை. தமிழக ரோலர் மீன்பிடிக்கும் முறைகளால் ஈழத் தமிழர்களின் மீன் வளம் அழிக்கப்படுகின்றது. இலங்கைப் பேரினவாத அரசு இதனைத் தனது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது. தமிழக மீன் பிடி இயந்திரங்களின் உரிமையாளர்கள் அப்பாவி மீன்பிடித் தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனையே தமிழ் உணர்வு, தமிழ்த் தேசிய வாதம் எனக் கூச்சலிடும் அரசியல் வியாபாரிகள் ஈழத்தில் மீனவர்கள் பாதிக்கப்படுவது குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை.
தமிழ்ப் பேசும் மக்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் இலங்கை அரசை ஈழத்து மீனவர்கள் மன்றாடும் நிலைக்கு தமிழ் உணவு வியாபாரிகள் நகர்த்திச் செல்கின்றனர். மீனவத் தொழிலாளர்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஏற்பட்டால் மட்டுமே இப் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும்.
மீனவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக சென்னையில் மார்ச் 24, மற்றும் மார்ச் 25 ஆகிய தேதிகளில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன.