அடுத்த முதலமைச்சர் பதவிக்கு தமிழ் கட்சிகள் யாரை தெரிவு செய்வது என்ற அரசியல் போட்டிக்கு மத்தியில் தமிழர்களின் எதிர்காலம் அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு உட்படாமல் மேம்படவேண்டும் என்றால் முதலமைச்சர் பதவிக்கு வருபவர் சமயோசித புத்தியும் சிந்தனைத் தெளிவும் முடிவுகளை சுயமாக எடுக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும். நான் யாழ் மருத்துவ சங்கத்தின் தலைவராக இருந்த 2014 ம் ஆண்டு கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரனை சுன்னாகம் தண்ணீர் மாசடைந்த விவகாரம் தொடர்பாக சந்தித்தபோது அவர் கூட்டம் தொடங்கும்போது கூட்டங்களில் பேசும் விடயங்கள் எதுவும் தனக்கு பிறகு ஞாபகம் வராது என்றும் எனவே அனைத்து விடயங்களையும் பதிவு செய்யப் போவதாகவும் அறிவித்து பதிவு செய்தார். அவருடன் பேசிய போது அவர் சிந்தனைத் தெளிவற்றவராகவும் முடிவுகளை எடுக்கும் ஆற்றல் இன்றியும் காணப்பட்டார். இந்த நிலையில் 4 வருடங்களின் பின்னர் 80 வயதை அண்மித்துள்ள முதலமைச்சர் தொடர்ந்தும் இந்த பதவியை மேலும் 5 வருடங்கள் வகிப்பதற்குரிய ஆரோக்கியமும் அறிவாற்றலும் அவருக்கு இருக்கிறதா என்பதை நேர்மையாக அவருக்கு ஆலோசனை வழங்கும் வைத்தியர்களிடமும் கேட்டறிந்து தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். வட மாகாண முதலமைச்சரே ஏனைய மாகாண முதலமைச்சர்களை விட மூப்பாக இருக்கிறார் என்ற உண்மையையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தக் கோரிக்கையை நான் இந்த இடத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு முன்வைக்கவில்லை. இதே கோரிக்கை கௌரவ எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கும் பொருந்தும். இந்த இடத்தில் கௌரவ எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு நான் மருத்துவர் என்ற முறையில் ஆலோசனை வழங்கி இருப்பதால் மருத்துவ ஒழுக்க நெறிகளுக்கு அமைய அவருடைய உடல்நிலை பற்றி மக்களுக்கு வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறேன் என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறேன். ஆரோக்கியம் குன்றிய நிலையில் இருக்கும் அனைத்து மூத்த தமிழ் தலைவர்களும் முக்கிய பதவிகளை தொடர்ந்தும் வகித்துக் கொண்டு இருக்கும் போது உடல்நிலை மேலும் பலவீனமாகிவிட்டால் தமிழர்கள் நட்டாற்றில் விடப்படுவார்கள் என்ற உண்மையை உணர்ந்து சுயநலமற்று அடுத்த தலைமுறையினருக்கு முக்கிய பதவிகளை வழங்கி அவர்களது ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் செயற்பட முன்வர வேண்டும். தமிழ்நாடு கருணாநிதி போல இயலாத வயதில் தலைமை பதவியில் இருப்பதற்காக தொடர்ந்தும் தமிழர்களின் எதிர்காலத்தை அழிக்கக் கூடாது. ஈழத்தமிழர்களை பொறுத்த வரையில் ஆரோக்கியம் குன்றியநிலையில் வேறு நபர்களால் தயாரிக்கப்படும் அறிக்கைகளை வெளியிட்டு பதவிகளில் நீடித்து இருப்பவர்கள் இலகுவில் ஐந்தாம் படையினரதும் அந்நிய சக்திகளினதும் கட்டுப்பாட்டுக்கு இலகுவில் உட்படக் கூடியவர்களாக இருப்பார்கள் என்ற உண்மையை ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தில் கரிசனை உடைய அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும். மேலும் தமிழ் கூட்டமைப்பு உடைந்து தமிழ் கட்சிகள் பலமிழந்து இருக்கும் இந்த நிலையில் தமிழ் சமூகத்தின் நலனில் அக்கறை கொண்ட ஊழலுக்கு அப்பாற்பட்ட மொழிப் புலமையும் சட்ட நுணுக்கமும் தெரிந்த மக்கள் தலைவர்களை அடையாளம் கண்டு ஒற்றுமையாக உள்வாங்கி சனநாயக அரசியலை எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து பதவி மோகத்துடன் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் உள்ளூர் ஆட்சித்தேர்தலில் இடம் பெற்றது போல் தென்னிலங்கையின் பேரினவாதக் கட்சிகள் தமிழர் தேசத்தில் அதிக பலம் பெற்று வேரூன்ற தொடங்கிவிடும் என்பது நிதர்சனம்.
வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்
இது ஒரு மீள் பதிவு உங்கள் கட்டுரைக்கு பொருத்தமாக ……
ஊடகங்களின் தார்மீகமும், மறைக்கப் படாத உண்மைகளும்!
இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போவது யார் : மறைக்கப்படும் உண்மைகள்!, எனத் தொடரும் இனியொருவின் கட்டுரையில், இலங்கை அரசு வன்னியில் நடத்திய இனப்படுகொலையின் பின்னர், திட்டமிட்டு சிறுகச் சிறுக நடத்தப்படும் இனப்படுகொலையின் மற்றொரு ஏஜண்டாக வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரது ஆதரவாளர் குழாமும் என இந்த வரலாற்றுத் துரோகம் நிறுவியுள்ளது.என நீங்கள் கூறும் வாதம்!…
இன்னொரு வாதமாக பொதுப் பரப்பில் சிலாகிக்கப் படும்!
முதலமைச்சர் விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்தவரும், இனப் படுகொலையே இலங்கையில் நடக்கவில்லை எனக் கூறியவரும், பெரும் பணச் செலவில் தனது பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்து அறிவியல் பொக்கிசங்களை வளைத்துப் பிடித்து தேர்தல் வெற்றியை உறுதிப் படுத்தியவர் எனக் கூறப் படுபவருமான சுமந்திரனின் வகிபாவத்தை தங்களின் வாதம் மறைத்துப் பேசுவதாகவும் பொருள் கொள்ளும் படி அமைந்து விடுகிறது அல்லவா?
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபடுத்தப் பட்டமை மிகத் திட்டமிடப் பட்ட அழிவு நடவடிக்கை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இது பின்வரும் உள்நோக்கங்களை கொண்டிருக்கலாம்!
1. மக்களை அப்புறப் படுத்தி நிலங்களை அல்லது வளங்களை கொள்ளையடிக்கும் உத்தியின் வெளிப்பாடுகளும் இருக்கலாம்.
(உலகின் எந்த எந்த இடங்களில் கனிம வளங்கள் உண்டு என்பதை வல்லரசு நாடுகளும் அதன் நிறுவனங்களும் தெரிந்தே வைத்துள்ளன.)
2. இல்லையேல் இலங்கை பேரினவாத மையங்கள் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரை திட்டமிட்டு நாசமாகும் செயல் பாட்டில் இறங்கி இருக்கலாம்.
3. இவை ஒரு கூட்டு அழிப்பாகவும் இருக்கலாம்
இவைகுறித்த இனிஒருவின் அக்கறைகள் கவனிப்புக்கு உரியவை மிகவும் காலத்தின் தேவையான கட்டுரை! மறுப்பதற்கு இல்லை.
இருப்பினும் இக்கட்டுரையில் ஊடக அறம் மீறப் படுவதாக ஒரு வாசகனாக என்னால் உணர முடிகிறது. ஒரு ஊடகம் தனது ஆளுமை வெற்றியை அடைதல் என்பது சமூகத்தின் ஆளுமை வெற்றியை உறுதி செய்வதில் தான் தங்கியுள்ளது என்பது எனது பணிவான கருத்து. அதனை இனிஒரு செய்தல் வேண்டும் என்பது எனது அவா. வாசகர்களும் அவ்வாறே கருதுவர்.
அரசியல் சமூக பொறுப்புணர்வு மிக்க மனிதர்களை நாம் வளர்ப்பதில் அக்கறை செலுத்துவதில்லை அல்லது அவர்களை இனங்கண்டு நாம் வளர்ப்பதில்லை! குறிப்பாக, சில இளநிலை அரசியல் சகாக்களை, அவர்களின் சமூக அக்கறைகளை, அவர்களின் சமூகம் சார்ந்த செயல்ப்பாடுகளை எமது ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதில்லை.
அவ்வாறாயின் எவ்வாறு நாம் நல்ல தலைவர்களை உருவாக்க முடியும்?
“தமிழ் தேசிய கூட்டமைப்பு இளநிலை அரசியல் தலைவர்களை உருவாக்க முனையவில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியதை இங்கு கோடி காட்ட விரும்புகிறேன். சமூக அக்கறை உள்ள ஒருவரிடம் இருந்தே இத்தகைய கூற்று வெளிப்பட முடியும் என்பது எனது கருத்தாகும்.”
மக்களின் வாழ்வியலில் அவர்களின் இருப்பில் அக்கறையுடன் செயல்படும், முல்லைத்தீவு மாகாண சபை உறுப்பினர் துவிகரன் மற்றும் அம்பாறை மாகாண சபை உறுப்பினர் கலையரசன் போன்றவர்களின் பண்பியல்பு சமூகத்தை வழி நடத்த தேவையான விடயங்கள் ஆகும். ஆனால் துரதிஸ்டவசமாக இவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை.
நூறு விகித தூய்மைவாத வரலாற்றுப் பின்னணியின் சொந்தக் கார்கள் தமிழர்கள். குறை காணுவதில் மாத்திரம் நிம்மதி காணும் மனநிலை பிறழ்வுகள் தமிழ் மக்களின் காலதி காலத்தை மாத்திரம் அழிக்கவில்லை நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கேள்விக் குள்ளாக்குகிறது.
வாசகர்கள் ஆகிய எங்களை விட ஊடகங்கள் மிக நிதானமாக செய்திகளை பதிவு செய்தல் வேண்டும். அவர்கள் தங்கள் பொறுப்பை சரியாகச் செய்தல் என்பதில் சமூகத்தின் வாழ்வும் அல்லது இருத்தலும் தங்கி உள்ளது . தவறுகளை சுட்டிக்காட்டுதல் காலத்தின் தேவை அந்தச் செயல் முறைமையில் முதிர்ச்சி மிக்க சமூகப் பொறுப்புணர்வு வேண்டும். இல்லையேல் அது ஒட்டு மொத்த சமூகத்தின் பொறிமுறைகளை அல்லது இயங்கு திறனை அழித்து விடும் என்பதில் நாம் அக்கறையுடன் இருக்கவேண்டும். சில சந்தர்ப்பங்களில் மிகவும் கீழ் இறங்கி எதிர்வினை ஆற்றவேண்டிய சந்தர்ப்பங்களை சூழல் எனக்கு ஏற்படுத்தி விடுகிறது என்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன்.
S.G.Ragavan (Canada)
இது ஒரு மீள் பதிவு உங்கள் கட்டுரைக்கு பொருத்தமாக ……
//தமிழ் சமூகத்தின் நலனில் அக்கறை கொண்ட ஊழலுக்கு அப்பாற்பட்ட மொழிப் புலமையும் சட்ட நுணுக்கமும் தெரிந்த மக்கள் தலைவர்களை//
We cannot find many. The worst case is the few we have will not dance according to the tune of Diaspora and will do what they think as right. Because of this, there will be a very organized attack on them.