மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒன்று போல தோற்றமளிக்கும் ராகங்களை நுனித்து நோக்கினால் அவற்றிலிருக்கும் நுண்வேறுபாடுகளை நாம் காணலாம்.ஆயினும் இசையின் நுணுக்கங்கள் தெரிந்த சிலரும் இடறி விழும் வகையில் அமைந்த ராகங்களும் உள்ளன.அந்த வகை ராகங்களில் மத்யமாவதியும் ,பிருந்தாவனசாரங்காவும் அடங்கும்.
இரு ராகங்களின் சுரநிலைகள் வருமாறு:
மத்யமாவதி : ச ரி2 ம1 ப நி2 ச
ச நி2 ப ம1 ரி2 ச
பிருந்தாவன சாரங்கா: ச ரி2 ம1 ப நி3 ச
ச நி2 ப ம1 ரி2 க2 ச
இன்பத் திளைப்பும் , இனம்புரியாத பரவசமும் ,அழகுணர்ச்சியும் தரும் ராகங்களில் பிருந்தாவனசாரங்கா ராகத்திற்கு தனிச்சுவை உண்டு.
தமிழ் செவ்வியல் இசையரங்குகளில் பயன்பாட்டிலிருக்கும் இந்த ராகம் விரிவாகவும் பாடப்பட்டு வருகிறது.
ரங்கபுர விகாரா – இயற்றியவர் : முத்துசுவாமி தீட்சிதர்
கலியுக வரதன் கண் கண்ட தெய்வம் – இயற்றியவர் : பெரியசாமி தூரன்
காளிங்க நர்த்தன [ தில்லானா ] -இயற்றியவர் : ஊத்தக்காடு வெங்கடசுப்பையர்
எழில் தரு மேனி காணீர் – இயற்றியவர் :அம்புஜம் கிருஷ்ணா
போன்ற பாடல்கள் செவ்வியல் அரங்குகளில் பிரபலமானவை..
தேஷ், கனடா போன்ற ராகங்களைப் போலவே இந்த ராகமும் கிருஷ்ணன் , கண்ணன் போன்ற தெய்வ சித்தரிப்பைத் தருகின்ற ராகமாகும்.
ஹிந்துஸ்தானிய சங்கீதத்தில் பயன்பாட்டில் உள்ள பிருந்தாவனி சாரங் [ Brindhavani sarang ] என்கிற ராகம் இந்த ராகத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களால் விரிவாக வாசிக்கப்படும் இந்த ராகம் வசீகரமும் ,மென்மையும் ததும்பும் ராகமாகும்.
மானுட கலையுணர்ச்சி வெளிப்பாடுகள் உலக பொதுமையானதாக இருப்பதும் ,அதில் குறிப்பாக இசையின் நுண்வெளிப்பாடுகள் பிரதேச எல்லைகளைக் கடந்த மனித இனத்துடிப்பாக , பல்வேறு வாழ்நிலைகளோடு உயிர்பண்பின் திரண்ட தொகுப்பாக மாறி ஒன்றுபட்டு நிற்பதை காண்கிறோம்.
இசையில் மட்டுமல்ல இனத்துவரீதியிலும் , தமிழ்மக்களுக்கு நெருக்கமாக இருக்கின்ற ஆபிரிக்க மக்களின் வாழ்க்கையில் ஒன்று கலந்த நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தில் மக்கள் திளைப்பதைப் பார்த்து அதிசயிக்கலாம்.
பிருந்தாவன சாரங்காவின் போதைதரும் கற்பனை நயத்தையும் , இன்பக் களிப்பையும் ஆபிரிக்கநாடான மாலியை சேர்ந்த இசைக்கலைஞர் Vieux Farka Touré இன் கிட்டார் இசையில் கேட்டு அதிசயிக்கலாம்.
01 Vieux Farka Toure “Bamako jam” – Part One
அல்ஜீரிய இசையில் கீழ்க்கண்ட பாடலையும் கேட்டு இன்புறலாம்.
02 Musique touareg
இசைகேட்டல் எனும் பரவச உணர்வில் மனதுக்கும் ,ஆன்மாவுக்கும் தனியின்பம் தரும் ராகம் இது. காட்சியமைப்புக்கிசைந்து பாடல்களைத் தந்து பரந்த ரசிகர்களிடம் இனிய ராகங்களை எடுத்துச் சென்ற சினிமா இசையமைப்பாளர்கள் இந்த ராகத்தையும் விட்டு வைத்தார்களில்லை.
தமிழ் திரையுலகில் இந்த ராகத்தில் குறைந்த அளவிலான பாடல்கள் வெளிவந்தாலும் அழகுணர்ச்சி மேலோங்கும் பல பாடல்களை இசையமைப்பாளர்கள் தந்து நம்மை மகிழ்வித்ததுடன் அந்த ராகங்களை பெருமைப்படுத்தியுமுள்ளனர்.
காலங்களுக்கேற்ப இசைப்போக்குகளிலும் , பாடல்களைக் கையாளும் முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தங்கள் உயர் மேதமையாலும் ,கடின உழைப்பாலும் இயன்றவரை பூர்வ ராகங்களின் இழை அறுந்து,அதன் தன்மை போகாமல் பாதுகாத்துதந்தார்கள்.
வழக்கமான பயன்பாடிலிருந்த மரபு ராகங்களை எடுத்து புதிய சூழலில் புதிய சுவையுடனும் தந்து புதிய இசை வடிவங்களில் இணைத்து சினிமா இசையை மரபு மாறாத வெகுஜன இசையாக்கிய பெருமை சினிமா இசையமைப்பாளர்களைச் சாரும்.
அந்த வகையில் பிருந்தாவனசாரங்கா ராகம் , திரையின் தேவைக்கு ஏற்ப இயல்பாக பயன்படுத்தப்பட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்ற, நினைவில் நிற்கும் பாடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மற்றைய ராகங்களைப் போலவே இந்த ராகமும் பழைய காலம் தொட்டு இன்று வரை நம்மைத் தொடர்ந்து வருகிறது.தமிழ் சினிமாவில் வெளிவந்த பிருந்தாவனசாரங்கா ராகத்தில் அமைந்த பாடல்கள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
01 பூரண நிலவினிலே ராதை – படம்: ராஜராஜேஸ்வரி [1947] – பாடியவர்: கே .எல்.வசந்தா – இசை :
02 சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடுகட்டி – படம்: மருமகள் [1953] – பாடியவர்கள்: ஜிக்கி + ராணி – இசை : சி .ஆர் .சுப்பராமன்
பால்யவயதினர் பாடும் பாடலாக அமைக்கப்பட்ட பாடல் இது.மண்வீடு கட்டுதல் , மாப்பிள்ளை – மணப்பெண் போன்ற சிறுவர்களை விளையாட்டைப் பிரதிபலிக்கும் மகிழ்ச்சிப்பாடல்.இது போன்ற சிறுவர்களை முக்கியப்படுத்தும் பாடல்கள் பழைய படங்களில் அதிகம் காணலாம்.இந்தப் பாடலின் மூலம் பின் நிகழப்போகும் காதலர்களின் நிலையை அனுமானிக்க முடியும்.இன்பம் தரும் இந்தப் பாடலை பிருந்தாவனசாரங்கா ராகத்தில் அந்தக் காலத்திலேயே அமைத்து இன்பத்தில் மிதக்க வைத்திருப்பார் இசைமேதை சி.ஆர்.சுப்பராமன்.
இதே பாடலின் பல்லவியைக் கொண்டு ஆரம்பிக்கும் சோகப்பாடல் ஒன்று மிகப் பிரபலமானது.அந்தப்பாடலை பாடியவர்கள் ஏ.எம்.ராஜா , பி.ஏ.பெரியநாயகி ஆகியோர். சிந்துபைரவி ராகத்தில் அமைத்திருக்கும் இந்தப்பாடல் இலங்கை வானொலியில் , நெஞ்சில் நிறைந்தவை நிகழ்ச்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் பாடல்களில் ஒன்றாகும்.”மருமகள் “என்று படத்தின் பெயர் சொன்னதும் நினைவுக்கு வரும் பாடலும் இந்தப் பாடலே !
03 மாப்பிள்ளை டோய் ,,, மாப்பிள்ளை டோய் – படம்: தந்தை [1957] – பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை :
மரபின் வாசத்தைக் கொஞ்சம் தடவி , மென்மையான சந்தலயத்தில் நகர்த்தி செல்லும் இனிய பாடல்.ஆணும் ,பெண்ணும் ஒருவரை ஒருவர் கேலிபேசும் இந்தப்பாடலில் மென்மையான பியானோ இசையை அமைத்து பிருந்தாவன்சாரங்க ராகத்தில் நம்மை உந்தி தள்ளி செல்கிறார் இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வரராவ்.பாடலின் நையாண்டி உச்சம் பெறும்
சொன்னாலும் புரியாது
சுயமாயும் தெரியாது
மன்னாதி மன்னன் என்று
மனதுக்குள்ளே நினைத்திடுவார்..
என்ற வரிகளில் பிருந்தாவனசாரங்கா ,துள்ளும் அலையாகத் திரண்டு ,ராகத்தின் உச்ச இன்பமாய் நம் நெஞ்சை நிறைக்கிறது.அந்த இன்பத்தை தனது இனிய குரலில் நிறைவாகத் தந்தவர் பாடகி பி.லீலா. மிகப்பல இனிய பாடல்களைத் தந்த எஸ்.ராஜேஸ்வரராவின் இனிய மெல்லிசை வார்ப்புகளில் ஒன்று இந்தப்பாடல் என்பதில் சந்தேகமில்லை.!
04 வானம் என்னும் வீதியிலே வந்து – படம்: ஒரேவழி [1959] – பாடியவர்: பி.சுசீலா – இசை : ஆர்.கோவர்த்தனம்
ராகத்தின் உள்ளார்ந்த இன்பத்தை காதல் தூதாக வெளியிடும் இனிய பாடல்.இனிமையான ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடல் பிருந்தாவன் சாரங்கா ராகத்தில் நம்மை ஊடாடித் திளைக்க வைக்கிறது.
ஆர்.கோவர்த்தனம் இசையமைத்த ஆரம்பகாலத்திரைப்படம் [1959] ஒரே வழி.அவரின் இனிமையான இசையமைப்பை பல பாடல்களில் கேட்டிருக்கின்றோம்.இதுவும் இனிமையான பாடல்களில் ஒன்று.
05 ஆராராரோ,,ஆராராரோ ,,அருமை குமாரா – படம்: சம்சாரம் [1951] – பாடியவர்: பி.லீலா – இசை :ஈமானி சங்கர சாஸ்திரி
1950 களில் புகழ் பெற்ற ஈமனி சங்கரசாஸ்திரி இசையமைத்த அருமையான தாலாட்டுப்பாடல். sansar[1951] என்ற ஹிந்திப்படத்தில் பயன்பட்ட இந்த மெட்டு மீளவும் தமிழில் இந்தப்பாடலாக வெளிவந்தது.
06 சிங்காரக் கண்ணே உன் – படம் : வீரபாண்டிய கட்டபொம்மன் [1959 ] – பாடியவர்: எஸ் .வரலட்சுமி – இசை: ஜி.ராமநாதன்
மென்மையாகத் தொடங்கும் ஹம்மிங் ஆழ்மனத்தை அமைதிப்படுத்தும் நுட்பத்தை வெளிப்படுத்துகிறது.களைத்துப் போன மன்னனை மகிழ்விக்கவும் , சாந்தப்படுத்தவும் உண்டாகும் நடன இசைக்கு ஒப்பாகவும் துள்ளிக் குதிக்கும் சுகமான மெட்டை அமைத்து நம்மையும் குணப்படுத்துகிறார் இசைமேதை ஜி.ராமநாதன்.
ராகங்களில் மெல்லிசையின் சாத்தியங்களை மரபு மாறாமல் காண்பிக்க முடியும் என்பதுடன் ,உணர்வுகளை எல்லாம் இசை ஓவியங்களாக்கியும் காட்டிய ஜி.ராமனாதனின் கைவண்ணங்கள் பலவுண்டு.
ஆழ் மனதுக்கு அமைதி தருகிற இந்தப்பாடலை பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைத்து நளினத்தையும் , மென்மையையும் புதிய திசை காட்டுகிறார் ஜி.ராமநாதன்.
எஸ்.வரலட்சுமி தனக்கேயுரிய பாங்கில் சிறப்பாக பாடிய பாடல்.
07 பொன் ஒன்று கண்டேன் – படம்: படித்தால் மட்டும் போதுமா [1967] – பாடியவர்கள்: சௌந்தரராஜன் + பி.பி.ஸ்ரீநிவாஸ் – இசை : .விஸ்வநாதன் + ராமமூர்த்தி
நுண்ணிழைவான சில பாடல்களைக் கேட்கும் போது மனம் ரசனையின் உச்சங்களில் மிதந்து செல்லும். இந்தப்பாடலின் இசையைக் கேட்கும் போதும் அந்த உணர்வு மேலிடும்.
ஹசல் இசையில் தாம் லயித்து மெல்லிசையில் புதிய திசைக் காட்டிய மெல்லிசைமன்னர்களின் தனித்துவம் காட்டும் இனிய பாடல்.
மனதில் இனம் புரியாத இன்பங்களை கிளறி விடும் ராகங்களின் தன்மையறிந்து ,மரபின் மேன்மையறிந்து ,அதன் நலன் கெடாமல் மெல்லிசைகளில் அவற்றை தக தகக்க வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்.
அதனால் தான் இசைஞானி இளையராஜா “அவர்களது பாடல்கள் என் ஊன் உயிர் ,நாடி நரம்புகளிலெல்லாம் ஊறி கிடக்கிறது ” என்று போற்றுகிறார்.
08 பூ வரையும் பூங்கொடியே – படம்: [1964] – பாடியவர்: பி.பி.ஸ்ரீநிவாஸ் – இசை : .விஸ்வநாதன் + ராமமூர்த்தி
ஒரே ராகங்களில் மண்டிக்கிடக்கும் பல்வேறு குணங்களைக் கண்டெடுத்து ,அவற்றிற்கு புதிய ஒளிகளைக் காட்டி புதுமை செய்து , தமக்கென தனி வழி அமைத்துக்காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்.
மென்மையான ஹம்மிங்குடன் ஆரம்பமாகும் இந்தப்பாடலின் பல்லவியிலேயே பிருந்தாவனசாரங்கா ராகத்தின் இனிமையையும் , அதன் மென்குழைவையும், மென்ணுனர்வையும் காட்டும் பாடல். பாடலில் நடுவே வரும் ஹம்மிங்கின் பின்னணியில் வரும் பொங்கஸ் தாள அதிர்வு மேகத்திரை கிழித்து வரும் சூரியஒளி போல புத்துணர்ச்சி தருகிறது.
கவிஞர் வாலி எழுதிய முதல் பாடலும் இதுவே.!
09 முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் – படம்: நெஞ்சிருக்கும் வரை [1967] – பாடியவர்கள்: சௌந்தரராஜன் + பி.சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
தூரத்தில் மின்னி ,மின்னி ஒளிரும் நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல அருகில் வருவது போல மென்மையானஒலித்திவளைகளால் பாடலுக்கு அடி எடுத்துக் கொடுக்கும் இசை! குளிர் வீசும் இளம் தென்றல் போல் ஆரம்பிக்கும் பாடல். பிருந்தாவனசாரங்கா ராகச் செறிவில் இப்படியும் ஒரு அழகான பாடலா என்று எண்ணி ,எண்ணி வியக்க வைக்கும் மெல்லிசைமன்னரின் இனிய பாடல்.
10 முத்து நகையே உன்னைநானறிவேன் – படம்: என் தம்பி [1970] – பாடியவர்: சௌந்தரராஜன் – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
குழந்தையின் துன்பநிலை கண்டு , வலியில் ஊற்றெடுக்கும் மென்னுணர்வு நிறைந்த மெட்டமைப்பைக்கொண்ட பாடல்.ராகத்தின் ஈரக்கசிவை நம் நெஞ்சங்களை ஏற்றி வைக்கும் இந்தப்பாடலில் மெல்லிசைமன்னரின் நுண்ணிழைவான மெட்டமைக்கும் கலைத்திறனையும் , கற்பனைவளத்தையும் காண்கிறோம். பாடலின் சரணத்தில் புல்லாங்குழல் இசை ராகத்தின் உச்ச இனபத்தில் நம்மைக் கரைய வைக்கிறது.
11 நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் – படம்: பூவும் பொட்டும் [1968 ] – பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி. சுசீலா – இசை : ஆர்.கோவர்த்தனம்
அந்தக் காலத்து இசையமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிப்பது போல சிறந்த இசையமைப்பாளரான ஆர். கோவர்த்தனம் இசையமைத்த பிரபல்யமான பாடல் இது.
மென் குழைவாக நாதஸ்வர இசையுடன் தொடங்கும் இந்தப்பாடலின் இனிமை எடுத்த எடுத்த எடுப்பிலேயே நம்மை ராக இனிமையில் கரைய வைத்து விடுகிறது.
வட இந்திய வாத்தியமான செனாய் காதல் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட அளவுக்கு தென்னிந்திய நாதஸ்வரம் பயன்படுத்தப்படவில்லை என்பது ஆச்சர்யமானது !!
பொதுவாக ஆண், பெண் குரல்கள் இணைந்து பாடும் காதல் பாடல்களில் நாதஸ்வர இசையை அருந்தலாகவே சினிமா இசையமைப்பாளர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.அந்த வகையில் பாடல் மெட்டமைப்பின் இனிமைக்கு நாதஸ்வர இசையின் வருடல் மெருகூட்டுகிறது.பாடலின் அனுபல்லவியில் இடையிசையில் வரும் நாதஸ்வர இசையும் , சரணத்திற்கு முன் வரும் புல்லாங்குழல் இசையும் நெஞ்சைக் கொள்ளை கொள்கிறது.
12 இது குழந்தை பாடும் தாலாட்டு – படம்: ஒரு தலை ராகம் [ 1980 ] – பாடியவர் :எஸ் .பி .]பாலசுப்ரமணியம் – இசை : எ.எ.ராஜ்
சாத்தியமல்லாத , பொருந்தாத விசயங்களை பாடற்பொருளாக்கி காதல் வலியை விரகதாபப் பாடலாக்கிய பாடலாசிரியர் ராஜேந்தரின் புதிய கற்பனை வளம் காட்டும் பாடல்.இந்தப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய சர்ச்சைகள் வெளிவந்தன.படத்தின் பின்னணி இசையமைத்த ஏ.ஏ.ராஜ் என்ற [அதிகம் பிரபலமாகாத , ஒரு சில படங்களுக்கே இசையமைத்தவர் ] ஒரு சில நல்ல பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் இசையமைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.பிருந்தாவனசாரங்கா ராகத்தில் தெவிட்டாத ,தங்குதடையின்றிச் செல்லும் மிக நேர்த்தியான பாடலாக்கிய இசையமைப்பாளரை பாராட்டலாம்.வாத்தியங்களில் நேர்த்தியும் , நிகரற்ற இனிமையையும் அள்ளித் தரும் பாடல்.
தங்களது தனித்துவ இசையாற்றல்களால் அகப்பிணிப்புமிக்க பாடல்களைத்தந்த இசைமேதைகளே வியந்து பாராட்டும் வண்ணம் பாடல்களைத் தந்தவர் இசை மேதை இளையராஜா.
ராகங்களில் நிகழும் வினோத படைப்பு மாற்றங்களை புதிய முறைகளில் பாடல்களை சிருஷ்டித்து ,வாத்தியங்களில் புதிய உறவிணைப்புக்களை புகுத்தி வியப்புக்களை விரித்து படைப்புத் திறனில் சாகசங்கள் புரிந்தவர் இசைஞானி !
இதயங்களைக் கனிய வைக்கும் புதிய ,புதிய இசைச்சுவைகளை ராகங்களில் அடர்த்தியுடன் ,நுட்பமாய் , தமிழ் மண்ணிலிருந்து தொடர்பற்று அறுத்துச் சென்ற இசையை மடை மாற்றி , மண்ணுக்கே மீண்டும் உரிமையாக்கி , மண்ணின் வாசம் நுட்பமாக வேயப்பட்ட பாடல்களால் நம்மை திக்குமுக்காடச் செய்த இசைஞானியின் பாடல்கள் சில.
01 கண்ணன் வந்தாலே நெஞ்சில் நிம்மதி – படம்:தம்பி பொண்டாட்டி [1994] – பாடியவர்: உமா ரமணன் – இசை: இளையராஜா
இளையராஜா இசையில் உமா ரமணன் பாடிய பெரும்பாலான பாடல்கள் மிகவும் சிறப்பானவை.அந்த வரிசையில் இந்தப் பாடலுக்கும் முக்கிய இடமுண்டு.பக்தி இசைக்குரிய கனிவும் ,ராகக் கருவூலத்திலிருந்து எத்தனை ,எத்தனை தோரணைகள் , உயிர்களை வருடும் புலப்பாடு [ Expression ] என்று எண்ண வைக்கும் பாடல்.
02 பூங்காற்றே தீண்டாதே – படம்:குங்குமச் சிமிழ் [1994] – பாடியவர்: எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
இசையின் அதீத இன்பங்களை ராகச்சுவைகளில் ஊடுருவி அதில் அலாதி சுகம் தருகின்ற பாடல் இது.வானவீதியில் வளைந்து வில் காட்டும் வர்ணஜாலம் போல இசை ஜாலங்களை இசைத்தூறல்களாய் ,அதன் மென் தெளிப்பின் பரவசத்தை இசையால் உணர்த்திய பாடல் எனலாம்.இசைஞானி, தன் இசையால் நம்மை இசையைச் சுற்றும் ரசிகர்
களாய் ஆக்கிய பாடல்களில் ஒன்று.செனாய் வாத்தியத்தை மண்ணின் வாசம் காட்ட பயன்படுத்திய மேதமையின் கற்பனை வளத்தை இடையிசையில் கேட்கலாம்.
02 ஆத்தாடி பாவாடை காத்தாட – படம்:பூ விலங்கு [1984] – பாடியவர்: இளையராஜா – இசை: இளையராஜா
தொன்மையான ராகங்களில் கிராமிய வாசனையை பூசி நம்மை கிராமிய இசைக்கு நெருக்கமாக செல்ல வைக்கும் மாயப் பாடல்.ஈரத் தென்றல் மலரில் மோதி வரும் வாசம் போல ராகங்களின் நறுமணத்தைஅது தரும் சுகத்தை நம் நெஞ்சங்களில் பூசும் பாடல்.எத்தனை விதம் விதமான நறுமணங்கள் !
03 மனதில் ஒரே ஒரு பூ பூத்தது – படம்:என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் [1994] – பாடியவர்: பி.சுசீலா – இசை: இளையராஜா
மனதை நெகிழ வைக்கும் பல்லவியால் பிருந்தாவன சாரங்கா ராகத்தின் குணவியல்பை பரிபூரணமாகத் தரும் இனியபாடல்.இசையில் விரிந்து பெருகும் தனது கற்பனை வளத்திற்கு எல்லையில்லை என்று இசைஞானி கூறாமல் கூறும் பாடல்.
04 கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன – படம்:உனக்காகவே கிறேன் [1994] – பாடியவர்: எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
இசை பரிபூரண இன்பம் தரும் என்பதை நிரூபிக்கும் இனிய பாடல்.இனம் புரியாத மயக்கமும் ,சுகமும் , வார்த்தையால் வர்ணிக்க முடியாத அன்பின் பாங்கை நிறைவுறத் தரும் பாடல்.மலரும் பூவின் சுகந்தம் போல இனிய உணர்வு தந்து தொடக்கம்முதல் முடியும் வரை இசையின்பம் கொட்டும் பாடல்.கற்பனைகளின் உச்சம் தரும் இசையமைப்பு.
05 மாலைகள் இடம் மாறுது – படம்:டிசம்பர் பூக்கள் [1994] – பாடியவர்: ஜேசுதாஸ் +சித்ரா – இசை: இளையராஜா
முன்னைக்கும் முன்னையான ராகங்களில் , பின்னைக்கும் பின்னையான புதுமைகள் செய்து காட்டும் இசைஞானியார் தரும் பொங்கும் பூம்புனல் இந்தப்பாடல்.இனிய பாடல்களால் தமிழ் சினிமாவை இசைத் தினவு கொள்ளச் செய்த இசைஞாயின் கொள்ளையின்பம் கொட்டி குவிக்கும் பாடல்களில் ஒன்று.
06 ஒரு போக்கிரி ராத்திரி – படம்: இது நம்ம பூமி [1994] – பாடியவர்: மனோ +சுவர்ணலதா – இசை: இளையராஜா
அகல் விளக்குகள் மென் காற்றில் மெல்ல வளைந்து அழகு காட்டுவதை மனக்கண்ணில் இசையால் காட்டும் இந்த பாடல் வீரியமிகுந்த செனாய் இசையுடன் எழுச்சியுடன் ஆரம்பித்து தேவ ரகசியத்தை எங்கோ புதைத்து வைத்தது போல ஆடி அசைந்து தன்னில் நம்மை மூழ்கடிக்கிறது பொல்லாத பிருந்தாவனசாரங்கா.
03 தெய்வங்கள் கண் பார்த்தது – படம்:புதியராகம் [1994] – பாடியவர்: மனோ + எஸ் .ஜானகி – இசை: இளையராஜா
தொட்டில் இல்லாத வீடு
தென்றல் இல்லாத மன்றம் …….என்று மழலைச் செல்வத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறார் கவிஞர்,பாடலின் இசையமைப்பில் நிறைவும் , பெருமிதமும் ஊறித்ததும்புகிறது .பேஸ் கிட்டாரின் ஒலியலைகள் மகிழ்வின் உயிர்த்துடிப்பாய் அங்காங்கே அசைந்து செல்கிறது.
வழமை போல பாடலின் பல்லவியைத் தொடர்ந்து எழுச்சி தரும் செனாய் இசை உணர்ச்சிகளை பொங்கி எழ வைக்கிறது.
07 இந்த ஜில்லா முழுக்க நல்ல தெரியும் – படம்:பிரியங்கா [1994] – பாடியவர்: மனோ +சித்ரா – இசை: இளையராஜா
ஒரு பாடல் எந்த வீச்சில் எழுகிறதோ அதே வீச்சில் முடிவு வரையும் கொண்டு செல்லும் லாவண்யம் ஒரு சில இசையமைப்பாளர்களுக்கே வாய்த்திருக்கிறது.அந்த வகையில் அமைந்த பாடல் இது. ஒரு பாடலில் எத்தனை , எத்தனை இசை வீச்சுக்கள் ..!
08 முத்தம்மா முத்து முத்து – படம்:தந்து விட்டேன் என்னை [1994] – பாடியவர்: அருண்மொழி + உமா ரமணன் – இசை: இளையராஜா
ஆண் குரல்களில் தனியழகும் ,கனிவும் மிக்க அருண்மொழி பாடிய இனிமையான பாடல்களில் ஒன்று.இனிமையாமான மெட்டமைப்பைக் கொண்ட பாடலில் வரும் தபேலா இசை தனி வழி காட்டி செல்லும் பாடல்.
09 காவேரி ஆறு தானாக ஓடி – படம் : தெம்மாங்கு பாட்டுக்காரன் [1997] – பாடியவர்: மனோ + சித்ரா – இசை: இளையராஜா
பிருந்தாவன சாரங்க ராகம் என்றதும் என் நினைவுக்கு வரும் ஒரு பாடல் “தனிப்பாடல் ” [ private album] என்ற வகையில் வெளிவந்த பாடல்.கர்னாடக இசைப் பாடகர் டி.என்.சேஷகோபாலன் பாடிய ” காக்கைச் சிறகினிலே நந்த லாலா ” என்று தொடங்கும் அந்தப்பாடலை எழுதியவர் மஹாகவி பாரதியார்.
இலங்கை வானொலியில் ” இசைக்களஞ்சியம்” என்ற நிகழச்சியின் இறுதியில் திரைப்படப் பாடலல்லாத பாடல் ஒன்றை ஒலிபரப்பி நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள்.அந்த நிகழ்ச்சிகளில் அடிக்கடி நான் கேட்டு ரசித்த குழைவும் இனிமையும் நிறைந்த மிகச் சிறந்த பாடல்.
மிகவும் சிறப்பான முறையில் டி.என்.சேஷகோபாலன் பாடியிருக்கிறார். பிருந்தாவன சாரங்க ராகம் என்பதை அடையாளப்படுத்த என் நினைவில் வரும் முக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று.
ஸ்ரீராகம்:
========
பிருந்தாவனசாரங்கா ,மத்யமாவதி போன்ற ராகங்களுக்கு நெருக்கமான இன்னொரு ராகம் ஸ்ரீராகம்.
ஸ்ரீராகம் : ச ரி2 ம1 ப நி2 ச
ச நி2 ப த 2 நி2 ப ம1 ரி2 க2 ரி 2
மண்ணின் இசைப் பண்புகளை அனுசரித்து ,அதில் உத்வேகம் பெற்று , அதில் புதிய ஒளிகளைக் காட்டி இசையை பாமரரும் துய்க்கத்தந்த சினிமா இசையமைப்பாளர்கள் இந்த ராகத்தில் அதிகமான பாடல்கள் தராவிட்டாலும் அவையும் மக்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய பாடல்கள் என்பதை நாம் அறிவோம்.
தமிழ் செவ்வியல் இசை மேடைகளில் தியாகராஜரின் புகழ்பெற்ற ” எந்தரோ மகானு பாவுலு ” என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது.அதிகமான திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்ட தியாகராஜரின் பாடல்களில் இதுவும் ஒன்று.
தமிழ் இசை பாரம்பரிய ராகங்களின் பிரிக்கவொண்ணாத மெல்லிசைப் பாங்கு மிளிரும் ஸ்ரீராகத்தில் அமைந்த பாடல்கள் சில :
01 தேவியர் இருவர் முருகனுக்கு – படம் : கலைக்கோயில் [1963 ] – பாடியவர்: பி.சுசீலா – இசை: மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
இசை சம்பந்தமாகப் பின்னாளில் எடுக்கப்பட்ட பல படங்களின் முன்னோடி படமான கலைக்கோயில் படத்தில் இடம்பெற்ற சிறப்பான பாடல் இது.
கனிவும் ,இனிமையும் , சிருங்கார ரசமும் , இனம்புரியாத உணர்வையும் தந்து ஒருவித போதையும் தரும் இந்தப்பாடல் காலத்தை வென்று நிலைக்கின்ற பாடல்களில் ஒன்று.
பாடல் வரிகள் ,இசையமைப்பு , பாடிய முறை , வாத்திய இணைப்பு என்பன இந்தப் பாடல் உரம் பெற்று நிற்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
படத்தின் கதாநாயகன் வீணை இசைக்கலைஞன். படத்தில் வரும் வீணை இசையை மீட்டியவர் வீணை வித்துவான் சிட்டி பாபு.படத்தின் கதாநாயகன் வீணை என்று சொல்லலாம்.
இசைஞானியின் ஸ்ரீராகம் :
01 கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் – படம் : காற்றினிலே வரும் கீதம் [1978 ] – பாடியவர்: எஸ்.ஜானகி – இசை : இளையராஜா
இந்தப்பாடலைப் பற்றி எப்படி எழுதுவது ! மலைமுகடுகளில் ஜாலம் காட்டும் ஒளிக்கற்றைகள், பச்சை நிறங்களின் பல வண்ணக் கோலங்களை அள்ளி இறைக்கும் வெட்ட வெளிகள் , இதமான காற்று தழுவி செல்லும் மலர்க்காடுகள் என்று இயற்கையின் வனப்பு மிகுந்த பகுதியில் வாழும் மலைஜாதி பெண் பாடும் பாடல்.
கதாபாத்திரத்தின் விரகதாப உணர்வை அடிப்படையாக வைத்துக் கொண்டு பாடலின் புறச் சூழலையும் தனது ஒப்பற்ற இசையால் மேல் சொன்ன அத்தனை காட்சிகளையும் வண்ணங்களின் அற்புதக் குழையல்கலாக நம் மனக்கண்ணில் நிறுத்துகிறார் இசைஞானி இளையராஜா.
ராகத்தின் உச்சத்தையும் , உயிர்த்துடிப்பையும் , கதாநாயகியின் உள்ளத்து ஆவலையும் பாடலின் சரணத்திற்கு முன்பு வரும் பின்னணி இசையில் [ 03:20 நிமிடத்திலிருந்து 03:40 வரை ] கொட்டித்தீர்க்கிறார் இசைஞானி.மன எழுச்சியும் , நெகிழ்ச்சியும் தரும் அந்த இசை கல்லையும் கரைய வைக்கும்.
இந்த அழகிய பாடலைத் தன்ன்னிகரற்றுப் பாடியிருக்கின்றார் எஸ்.ஜானகி.
“கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் ”
இந்தப்பாடல் மீண்டும் haunting.பாடலாக வாணி ஜெயராம் குரலில் வருகிறது.இந்தப்பாடலுக்கான வாத்திய அமைப்பு மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கும்.
இந்தப்பாடலைக் கேட்பவர்கள் ஒரு புதிய இசையமைப்பாளன் என்று சொல்ல முடியாத இசைநேர்த்தி இருப்பதை அவதானிக்கலாம்.
பாடலில் வரும் வரிகள் போல
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் ,,, தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை !!
ஸ்ரீராகத்திற்கு இப்படி ஒரு அற்புதகானம் ..!!
02 சோழம் விதைக்கையிலே – படம் : 16 வயதினிலே [ 1977 ] – பாடியவர் இளையராஜா – இசை :இளையராஜா
ராகம் என்றால் அதில் பக்திப்பரவசம் அன்றி வேறில்லை என்ற புளுகுகளை புறம் தள்ளி , பக்தி என்ற பொற்சிறையில் அடைக்கப்பட்ட ராகங்களை பரந்துபட்ட மக்கள் முன் ரசனைமிக்க பாடல்களாக்கித் தந்தவர்கள் சினிமா இசையமைப்பாளர்கள்.அதில் உச்சம் தொட்டவர் இசைஞானி இளையராஜா.
நாடுப்புற இசையிலிருந்து விருத்தி பெற்றவையே ராகங்கள் என்பதை சினிமா இசையும் நிரூபித்தது.இந்தப்பாடலும் அந்த வகையே.
வேற்று மொழிப்பாடல்களிலும் ஸ்ரீராகம் மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. நான் கேட்டு ரசித்த மலையாளப்பாடல்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.
01 கோமேதக மணி மோதிரத்தில் நின் பிரேம சங்கல்பம் – படம் : பஞ்ச பாண்டவர் [ 1972] – பாடியவர் : ஜேசுதாஸ் – இசை : எம் எஸ் விஸ்வநாதன்
கற்பனை வளமிக்க மெல்லிசை மன்னரின் , வியக்க வைக்கும் செவ்வியலிசை சார்ந்த அழகான பாடல்.ஜேசுதாசின் குரலில் அருமையாக ஒலிக்கும் பாடல்.
02 நந்த சுதாவர சுக ஜனனம் – படம் :பார்வதி [ 1981 ] – பாடியவர்: வாணி ஜெயராம் – இசை : ஜோன்சன்
இன்னுமொரு செவ்வியலிசை சார்ந்த மெல்லிசைப்பாடல் [ semiclassical song] வாணியின் குரலில் மதுரமாக ஒலிக்கின்ற பாடல்.இது போன்ற பாடல்கள் மட்டுமல்ல இன்னும் பாலா சிறந்த பாடல்களைத் தந்த ஜோன்சன் மிகத் திறமை வாய்ந்த இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத் தக்கது.
03 அல்லிஇளம் பூவே இல்லிமுழம் காடே – படம் :மங்களம் நேருன்னு [1981] – பாடியவர் : கிருஷ்ணசந்தர் – இசை : இளையராஜா
இளையராஜாவின் தனித்துவமிக்க இசை மிளிர்கின்ற இனிமையான பாடல்.
தொடரும் …
முன்னைய பதிவுகள்:
Excellent article. Keep it up.
இந்த ராகத்தில் இவ்வளவு அருமையான பாடல்கள் என்று வியக்கின்றேன்.நன்றி சௌந்தர்.உங்கள் ஆக்கம் நம்மை சிந்திக்க வைக்கிறது.