உலகம் முழுவதும் உயர் நிலைக் கல்வி, குறிப்பாக பல்கலைக்கழகக் கல்வி தனியார் நிறுவனமாகிவிட்டது. இவை அனைத்திற்கும் மத்தியில் இலங்கையில் உயர் கல்வித்துறை இன்னும் மக்கள் சொத்தாகவே தொடர்கிறது. ராஜபக்ச அரசும் அதன் கல்வியமைச்சும் பல தடவைகள் கல்வியைத் தனியார் மயமாக்க முயற்சித்தும் வெற்றி பெறவில்லை. இலங்கைப் பல்கலைக் கழகங்கள் மக்கள் சனநாயகத்திற்கான போராட்டங்களின் நுளை வாசலாகவே காணப்படுகிறது.
இலங்கையில் கொடூரமான இனப்படுகொலையின் பின்னதாக மாவீரர் தினத்தைக் கொண்டாட தடைவிதிக்கப்பட்ட போது யாழ்ப்பாணப் பல்கலை கழகம் தடைகளை மீறி தனது எதிர்ர்பை வெளிப்படுத்தியது.
இலங்கை இராணுவம் வடக்கை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் யாழ்.பல்கலைக் கழகம் மட்டுமே மக்களின் ஒரே குரலாக ஒலித்தது.
இந்திய இராணுவம் இலங்கையை ஆக்கிரமித்த போது அந்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் இரண்டு மாணவர்களைப் பலிகொடுத்தது யாழ்ப்பாணப் பல்கலைகழகம்.
விஜிதரன் என்ற மாணவனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கடத்திக் கொலை செய்த போது அதற்கு எதிரான போராட்டத்தில் வட மாகாண முழு மக்களையும் அணிதிரட்டி இயக்கங்களை சனநாயக மயப்படுத்தக் கோரிய போராட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் முன்னெடுத்தது.
இந்தப் போராட்டங்களிலெல்லாம் பல்கலைக் கழக விரிவுரையாளர்களின் பங்கையும் மறுக்க முடியாது.
நேற்று 07.10.2020 யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் மோதிக்கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. வேதனை தரும் இச்சம்பவத்தின் அவமானத்தின் உச்சமாகத் திகழ்ந்தது, அப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சிறீசற்குணராஜா தெருவில் மாணவர்களோடு சண்டை போட்டதாகக் கூறும் சாட்சியங்களே.
தனது பட்டப்படிப்பை அதே பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட சிறீசற்குணராஜா, அங்கிருந்து மேற்படிப்பிற்காக பிரித்தானியா சென்றார். மேற்படிப்பிற்காக வெளி நாடு செல்லும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கேயே தங்கிவிடும் சூழலில் மீண்டும் தனது பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராகக் கடமையேற்றுக்கொண்ட சற்குணராஜா பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னதாக கணித பீடத்தின் அதிபராகவும், விஞ்ஞான பீடத்தின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றிய சற்குணராஜா, செப்டெம்பர் மாதம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். தான் பொறுப்பேற்ற இரண்டே வாரங்களில் ஊடகவியலாளர்களை மிரட்டிய சற்குணராஜா, நேற்று மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பல்கலைகழக வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வு.