இலங்கை அரசியலில் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் முக்கிய நபர்களில் சிறீரங்கா ஜெயரட்ணம் என்பவர் பிரதானமானவர். தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சி நடத்தும் இலங்கையின் ஒரே அரசியல்வாதி சிறீரங்கா ஜெயரட்ணம் மட்டுமே. நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய முன்னணியில் வெற்றிபெற்ற சிறீரங்கா வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது பலருக்குத் தெரியாத தகவல். இன்று கொழும்பில் வாழும் சிறீரங்கா மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர். நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்.
சிறீரங்காவிற்கு மகிந்த ராஜபக்ச நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் அரசதுறைப் பதவியொன்றை வழங்கி நாட்டைவிட்டு சில காலங்கள் வெளியேறுமாறு பணித்திருந்ததாக விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்று கூறுகிறது. அவ்வாறு வெளியேறாவிடின் ஈ.பி.டி.பி இன் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவால் கொல்லப்படலாம் என மகிந்த எச்சரித்ததாக மேலும் அத் தகவல் தெரிவிக்கிறது.
அதே விக்கிலீக்ஸ் கேபிளில், சிறீரங்கா தமிழீழ விடுதலைப் புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தார் எனவும் கூறப்படுகின்றது. ராஜபக்ச அரசின் மறைமுக உளவாளி எனக் கருதியதாலேயே அந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகிந்த குடும்பத்தின் தமிழ் நண்பரான சிறீரங்கா இன்று தமிழ்த் தேசியவாதியாக அவதாரமெடுத்திருப்பதன் பின்புலத்தில் மகிந்த அரசு செயற்படுகிறதா என்ற அனுமானங்கள் தவறானவையல்ல.
தொலைக்காட்சியில் மின்னல் என்ற நிகழ்ச்சியை நடத்திவரும் சிறீரங்கா இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைவசமுள்ள தமிழ்த் தேசியத்தைத் தட்டி நிமிர்த்தப் போவதாகக் கூறுகிறார்.
வட மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசீதரனை கடந்தவாரம் நேர்கண்ட சிறீரங்கா, தமிழ்த் தேசியத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகம் செய்துவிட்டதாக நீலிக்கண்ணீர் வடித்தர். மாவை சேனாதிராசாவையும் சம்பந்தனையும் தமனது நிகழ்ச்சிகளில் தமிழ்த் தேசியச் சினத்தோடு தாக்கியுள்ளார்.
ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை நிராகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிழைப்புவாதம் குறித்து மக்கள் சிறீரங்காவிற்கு முன்பே தெரிந்துவைத்திருக்கிறார்கள்.
சிறீரங்காவின் தமிழ்த் தேசியம் தேர்தல் அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளைக் அபகரித்து ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவீனப்படுத்தி மகிந்தவைப் பலப்படுத்துவதே என்பது எளிய சமன்பாடு. தனது குடும்ப நட்பிற்காக நன்றி மறக்காது வாலாட்டும் சிறீரங்காவின் தந்திரோபாயம் மக்களுக்கானதல்ல. மகிந்தவிற்கானது.
இதே போன்று நமது உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசிய அவதாரமெடுத்துள்ளார். சிறீரங்கா அளவிற்கு விக்னேஸ்வரன் தேசிய உணர்வால் வாந்திபேதி நிலைக்குச் செல்லாவிட்டாலும், புலம்பெயர் நாடுகளிள் வரை சென்று ரிக்கட் போட்டுக் கூட்டம் வைக்கும் நிலைக்கு விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய வளர்ச்சி கண்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு தனது ஓய்வுக் காலத்தில் அரசியலுக்கு வந்த சீ.வீ.விக்னேஸ்வரன் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். குருனாகல், மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் தனது குழந்தைப் பருவத்தில் வளர்ந்தவர். ஆங்கிலமும் சிங்களமும் சரளமாகப் பேசும் இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகளில் விக்னேஸ்வரனும் ஒருவர். அரசியலுக்கு வரும் போதே, தமிழீழ விடுதலை புலிகளின் வன்முறைகளாலேயே ஜனநாயக அரசியலில் தாம் ஈடுபட முடியாத சூழல் காணப்பட்டதாகவும், புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் இடைவெளி கிடைத்துள்ளதாகவும் கூறியவர்.
மகிந்க ராஜபக்சவின் அரசியல் அடிமையான வாசுதேவ நாணயக்காரவின் உறவினரான விக்னேஸ்வரன் வாசுதேவ சகிதம் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். தமிழ்- சிங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே மகிந்த முன்னிலையில் சத்தியப்பிரமாணமெடுத்ததாக வெளிப்படையாகக் கூறினார்.
மகிந்த ஆட்சியிலிருந்த காலப்பகுதி முழுவதும் தான் அரசியல் வாதியல்ல நிர்வாகி எனக் கூறிவந்தார். சட்டம் பேசியே உரிமையை வென்று தரலாம் என ஒவ்வொரு மூலையிலும் முழங்கினார். சிங்கள அரசோடு பேசி நாம் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வோம் என்றார்.
மகிந்த ஆட்சியிலிருந்து அகன்ற மறுகணமே தமிழ்த் தேசியத்தின் வடக்கு நட்சத்திரமானார். கூட்டமைப்பை விமர்சித்தார். இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஜனவரி மாதம் 8ம் திகதியிலிருந்து விக்னேஸ்வரன் புதிய மனிதனாக மாற்றமடைந்ததன் பின்னணியும், சிறீரங்கா புதிய அவதாரமெடுத்ததன் பின்புலமும் ஒன்றா என்பதே இங்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
மகிந்தவிற்கு எதிரியாகத் தன்னை ஒருபோதும் காட்டிக்கொள்ளாத விக்னேஸ்வரன், மக்களை அழிவுகளிலிருந்து பாதுகாக்கச் சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தும் அதனைப் பயன்படுத்தவில்லை. வன்னிப் படுகொலைகளின் பின்னரான பெரும் அழிவாகக் கருதப்படும் சுன்னாகம் நீர் மாசடந்த விவகாரம் விக்னேஸ்வரனின் காலடியிலேயே நடைபெற்றது.
யாழ்ப்பணத்தின் ஒரு பகுதியையே நஞ்சாக்கிய பல்தேசிய நிறுவனத்திற்கு எதிராகவும் அதன் பின்னணியில் செயற்பட்ட மகிந்த அரசிற்கு எதிராகவும் மக்கள் தெருவிக்குவந்து குரல்கொடுக்க விக்னேஸ்வரனின் வடமாகாண சபை போலி ஆணைகுழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்திற்று. சுன்னாகத்தில் நீர் மாசடையவில்லை என்று மக்களை அழிவிற்கு உட்படுத்திற்று. விக்னேஸ்வரன் சுன்னாகத்திற்குச் சென்றதில்லை. ஆனால், சுன்னாகம் நீருக்காகப் போராடும் மக்கள் நீரை விக்னேஸ்வரனிடம் எடுத்துச் சென்றார்கள். கூட்டம் போட்டு தெளிவுபடுத்தினார்கள். விக்னேஸ்வரன் சாமியே சரணம் என முடங்கிவிட்டார்.
எதிர்வரும் 17 ம் திகதி விக்னேஸ்வரன் லண்டனில் தமிழ்த் தேசியப் பிழைப்புக் கூட்டமொன்றை நடத்துகிறார். எந்தக் கூச்ச உணர்வுமின்றி கூட்டத்தில் கலந்துகொண்டு விக்னேஸ்வரனுக்கு மாலை போடுமாறு புலம் பெயர் தமிழர்கள் அழைக்கப்படுகின்றனர். விக்னேஸ்வரனின் கூட்டம் வெற்றிபெற்றால் அடுத்ததாக நாமல் ராஜபக்சவின் கரங்களைக் கோர்த்துக்கொண்டு சிறீரங்கா வந்து சேரலாம்!
இந்தக் கட்டுரை எழுதியவர் அவலை நினைத்து உரலை இடித்தவர் போல் காணப்படுகிறார். விக்னேஸ்வரன் இனப்படுகொலைத் தீர்மானம் ஒன்றை சனவரி 8 க்குப் பிறகு கொண்டுவருவதாக சபையில் வாக்குறுதி அளித்திருந்தார். மகிந்த இராஜபக்சா வென்றிருந்தாலும் அந்தத் தீர்மானத்தை கொண்டு வந்திருப்பார். அந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அவர் கொழும்பில் இருந்தாலும் உணர்வுள்ள தமிழராக இருக்கிறார். அரசியலுக்குப் புதியவர் என்பதால் இராஜதந்திரம் தெரியாத குறை அவரிடம் இருக்கிறது. குறையில்லாத மனிதர்களைக் காணமுடியாது. வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்ட விக்னேஸ்வரனுக்கு அன்பின் நிமித்தமாக புலம்பெயர் தமிழர்கள் சந்தித்து வருகிறார்கள். அதிகாரம் இருக்கோ இல்லையோ ஒரு தமிழர் முதலமைச்சராக இருப்பது தமிழர்களின் தன்மதிப்பை உயர்த்தியுள்ளது. அதற்காக வயிறு எரிய வேண்டாம்!
CV விக்னேஸ்வரன் தொடர்பாக, எழுதியவர் ஒரு எல்லையில் நிற்க, பின்னூட்டக்காரர் இன்னொரு எல்லையில் நிற்கிறார். வடமாகாண சபையின் இனப்படுகொலைத் தீர்மானம் அவரது கட்சியின் அங்கீகாரம் இல்லாது நிறைவேற்றப்பட்டது என்பதைக் கருத்திற் கொள்க.
நான் விக்னேஸ்வரனுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் இந்தக் கட்டுரை அவரை வசைபாடுவதற்கென்றே எழுதப்பட்டிருக்கின்றதா?
1. அவர் எங்க பிறந்தார் வளர்ந்தார் என்னென்ன மொழிகள் தெரியும் என்பதெல்லாம் இந்தக் கட்டுரைக்கு சம்பந்தமற்றவைகள். – இவர் சிங்களவர்களுடன் தொடர்புடையவர் என்பதே ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது.
2. புலிகளின் கொள்கைப்பிடிப்பில் நம்பிக்கை இருந்தாலும் அவர்களது போக்கு வேறெந்த ஜனநாயக அமைப்புகளையும் வளரவிடவில்லை என்பது உண்மைதான்.
3. சிங்கள மக்களுடன் நட்புணர்வு முக்கியமானது தான். இதற்காக மகிந்த முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுப்பதிலும் தவறில்லை.
4. இவரது குடும்பத்திற்கும் வாசுதேவ குடும்பத்திற்கும் உள்ள திருமண பந்தம் கூட தவறானது அல்ல.
ஜனவரி ஆட்சி மாற்றத்தின் பின் அவரது நடவடிக்கைகள் பல சரியானவையல்ல. அதற்காக முக்கிய காரணம் அவரால் வடமாகாண சபையில் எதனையும் சாதிக்க முடியாதது தான். தனது இயலாமையை மறைக்க சம்மந்தமற்ற விடயங்களை முன்னுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்.