இலங்கை அரச கட்டமைப்பின் பேரினவாத சித்தாந்தத்தை ராஜபக்ச குடும்பம் அறுவடை செய்துள்ளது. தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆட்சியமைக்கும் நிலை தோன்றியுள்ளது. 6858782 வாக்குகளைப் பெற்ற மகிந்த ராஜபக்சவின் சிறீ லங்கா பொதுஜன பெரமுன வரலாறு காணாத சாதனையைப் படைத்துள்ளது இலங்கையின் அடிப்படை ஜனநாயகத்தையே மீண்டும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
எதிரணியில் சஜித் பிரமதாச தனது தலைவர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலை நிறுத்திக்கொள்ளும் சூழல் தோன்றியுள்ளது. அக்கட்சியின் இன்றைய தலைவரும் முன்னை நாள் பிரதமருமான ரனில் விக்ரமசிங்கவின் அரசியல் முடிவையும் இத்தேர்தல் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிரதிநிதிகளாகத் தம்மை வெளிப்படையகவே அறிவித்துக்கொள்ளும் அந்த நாட்டின் சனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இலங்கை சிங்கள பௌத்த நாடு என அறிவித்த போது அதனை எதிர்க்கட்சிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மாறாக இலங்கை ஒரு பௌத்த நாடு என எதிர்க்கட்சிகள் வழி மொழிந்தன. சாதியம், பெண்ணடிமைத்தனம், சோதிட நம்பிக்கை, என்ற இந்துத்துவாவின் கோட்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கையின் பௌத்தம் என்பது அடிப்படையில் வட இந்தியர்கள் பின்பற்றும் இந்துமதத்தின் இன்னும் ஒரு கூறாகவே செயற்படுகிறது என்றும் அது இந்து மத்தத்தை கோட்பாட்டுரீதியாக எதிர்த்த புத்தரின் கோட்பாடுகளுக்கு எதிரானது என்ற அடிப்படையைக் கூட கூற மறுத்த மனோ கணேசன் போன்றவர்கள் இலங்கையைப் பௌத்த நாடு என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார்கள்.
பேரினவாத அழிவு அரசியலுகு எதிரான சிங்கள மக்கள் தெரிவு செய்வதற்குக் ஒரு கட்சிகூட இல்லாத வெறுமை தோன்றிய நிலையில் அதனை வெளிப்படையாகவே முன்வைத்த ராஜபக்ச குடும்பம் அதன் பலனை அறுவடை செய்துகொண்டது.
ராஜபக்ச குடும்பம் பெரும்பகுதி வாக்குகளை பேரினவாத பிரச்சாரங்களின் ஊடாகச் சேகரித்துக்கொண்டது. அதனைத் தவிர எந்த அரசியல் பொருளாதார திட்டங்களையும் முன்வைக்கவில்லை. எப்படி இந்துத்துவா பாசிச அரசியலுக்கு எதிரான வெற்றிடம் இந்தியாவில் காங்கிரஸ் உட்பட்ட டெல்லி கட்சிகளால் நிரப்படவில்லையோ இலங்கையிலும் அதே நிலை தொடர்கிறது.
குறைந்தபட்ச ஜனநாயகத்தை மீட்பதற்கான முதலாவது முன் நிபந்தனை என்பதே பேரினவாதத்திற்கு எதிரான அரசியல் இயக்கத்தை உருவாக்குவது என்பது தான்.
வெற்றிடம் சஜித் பிரமதாசவின் தலைமையில் பிரதியிடுசெய்யப்படாது என்பது உறுதியாக நம்பலாம். ஒரு புறத்தில் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் பேரினவாதம் என்றால் அவர்களின் உச்சபட்ச மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் வன்னிப் படுகொலைகளின் போதே நிகழ்த்தப்பட்டன. அக்காலப்பகுதியில் கொலைகளை ஆதரித்த அத்தனை கட்சிகளும் இன்று எதிரணியில்! சஜித் மட்டுமல்ல ஜே.வி.பி யும் சிறுபான்மைத் தேசிய இனக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் கட்சிகள் தான்.
ஆக, சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதே இலங்கையில் அடிப்படை ஜனநாயகத்தை மீளமைப்பதற்கான நுளைவாசல். இதற்கான புதிய இயக்கம் தோற்றுவிக்கபடாவிட்டால் மிக நீண்ட காலத்திற்கு ராஜபக்சவின் பேரரசை அசைக்க முடியாத சூழல் தோன்றும்.
1976 ஆம் ஆண்டு வட்டுகோட்டைத் தீர்மானம் தமிழரசுக் கட்சி மையமாகச் செயற்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியால் நிறைவேற்றப்பட்டது. எங்களுக்கு சுய நிர்ணைய உரிமையை வழங்குங்கள் நாங்கள் எமக்குள் வாக்கெடுப்பு நடத்தி பிரிந்து செல்வதா இணைந்திருப்பதா என்று முடிவெடுத்துக்கொள்கிறோம் என்ற கோரிக்கைக்குப் பதிலாக தனித் தமிழீழமே தீர்வு என நிறைவேற்றப்பட தீர்மானம், இலங்கையின் மையக் கட்சிகளான சுதந்திரக் கட்சியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் வடக்குக் கிழக்கிலிருந்து துடைத்தெறிந்தது. 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி அனைத்து ஆசனங்களையும் கையகப்படுத்தியது. அதன் பின்னர் நேற்றைய தேர்தலில் தான் முதன் முறையாக இலங்கையின் பேரினவாதக் கட்சிகளும் அதன் உள்ளூர் முகவர்களும் பெரும் தொகையான வாக்குகளைப் பெற்றுகொண்டனர்.
ராஜபக்ச குடும்பத்தின் உள்ளூர் முகவரான டக்ளஸ் தேவாந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், சுதந்திரக் கட்சியும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அரசு சார்புக் கட்சியும் இணைந்து மட்டும் வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டன.
40 வருடங்களுக்கு மேலான தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் இன்று கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. தேர்தல் அண்மிக்கும் நேரங்களைத் தவிர சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை கைவிட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் மையக் கட்சியான தமிழரசுக் கட்சியும் பல்வேறு ஊழல் குற்றங்களில் ஈடுபட்டிருந்தன. ஆக, அக்கட்சிக்கு மாற்றாக பாராளுமன்ற அரசியலில் புதிய கட்சியை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனல், மக்களின் முன்னாலிருந்த இரண்டு தெரிவுகள் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி), மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஓரளவு எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்திருந்தாலும், வடக்குக் கிழக்கில் பேரினவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியவில்லை.
புலம்பெயர் நாடுகளில் இயங்கும் குழுக்களின் விருப்பிற்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் கட்சிகளில் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் என மக்கள் தெரிந்து வைத்திருந்தமை இதன் முக்கிய காரணங்களில் ஒன்று. சுன்னாகம் அனல் மின்னிலைய ஊழலில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய விக்னேஸ்வரன் அந்த அழிவின் ஈரம் காயும் முன்பே அடுத்த வாக்கு சேகரிப்பிற்கு தன்னைத் தயார்படுத்தியதை மக்கள் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இந்த அனைத்துக் காரணங்களும், கடந்த அரை நூற்றாண்டு வரை கண்டிராத பேரினவாத கட்சிகளின் உள்ளீட்டை வடக்க்குக் கிழக்கு தமிழ்ப் பிரதேசங்கள் சந்தித்துள்ளன.
இவற்றிற்கு எதிராக தேர்தலை நிராகரிக்க வேண்டும் என மக்களைக் கற்பிக்கும் அரசியல் இயக்கம் இல்லாத வெற்றிடம் நிரப்பப்பட்டால் மட்டுமே பேரினவாத அழிவுகளிலிருந்த தமிழ்ப்பேசும் மக்கள் தம்மை மீட்டமைக்க முடியும்.