புலம்பெயர் நாடுகள் இலங்கையின் அனைத்து வன்முறைகளதும் ஊற்றுமூலமாகிவிட்டது என்பதை இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் நிறுவிக்கொண்டிருக்கிறது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்(NGO), சாதிச் சங்கங்கள், பிரதேசவாதிகள், இனவாதிகள், போலி இடதுசாரிகள் போன்ற இன்னோரன்ன பிழைப்புவாதிகளின் புகலிடமாக ஐரோப்பிய அமெரிக்க புலம்பெயர் நாடுகள் மாறிவிட்டது. தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வியல் அவலங்களைப் மூலதனமாக்கும் இக்கும்பல்கள் தேர்தல் காலப் புற்றீசல்கள் போலப் படையெடுத்திருக்கின்றன.
இனவாதத் தீயில் எண்ணை வார்க்கும் கூட்டங்கள், பிரதேச முரண்பாடைப் பிழந்து ஆழப்படுத்தும் கும்பல்கள், சாதீய வேறுபாடுகளைப் பயன்படுத்திக்கொள்ளும் சமூக எதிரிகள், வர்க்க முரண்பாட்டை பேரினவாதத்தின் பிடியில் ஒப்படைக்கும் சோவனிஸ்டுக்கள் என்ற எல்லாத் தரப்பும், மக்களை கூறுபோட்டு அழிக்க ஆயத்தமாகிவிட்டன. இந்த அழிவின் அழுகுரலை வாக்குகளாக்கும் உக்தி ,இதுவரைகால இழப்பையும், எரியும் நினைவுகளையும் அவமானப்படுத்துகிறது.
இலங்கை அரச பாசிஸ்ட் மகிந்த ராஜபக்சவின் கூலிப்படையாகச் செயற்பட்ட பிள்ளையான் கும்பலின் கொலைகூடத்தின் திறவுகோல் பிரான்சில் நிலை கொண்டிருந்தது.
சிறுபான்மைத் தேசிய இனங்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களின் பெரும்பகுதியும் மகிந்த பாசிசத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதை எண்ணி மகிழ்ந்த காலமொன்றில் பிள்ளையானைப் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக எம்.ஆர்.ஸ்டாலின் என்பவர் பிரான்சிலிருந்து மட்டக்களப்பிற்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
பிரான்சில் தனது அரசியல் செயற்பாடுகளை தலித் முன்னணி, சோபா சக்தியின் ஒன்று கூடல்கள், லண்டன்- “இலங்கை ஜனநாயக ஒன்றியம்”- (SLDF) சம உரிமை இயக்கம் போன்ற போலிகளுடன் மேற்கொண்ட எம்.ஆர்.ஸ்டாலின் பிள்ளையானின் நிரந்தர ஆலோசகரும் கூட.
எம்.ஆர்.ஸ்டாலினும் அவரது புலம்பெயர் துணைக் குழுக்களும் மனித உரிமையையின் அடிப்படை விழுமியங்களையே கேள்விக்கு உட்படுத்துகிறது. புலம்பெயர் சமூகத்தின் உயர் அடுக்குகளில் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொண்ட இவர்களின் இருப்பு நமது சமூகத்திற்கு மிக ஆபத்தானதாகும்.
தமக்கான சுரண்டல் வெளியை மற்றவர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளாத வரைக்கும் இனவாதிகளும், பிரதேசவாதிகளும், சாதீயவாதிகளும் தம்மிடையே முரண்பட்டுக்கொள்வதில்லை.மக்களின் அவலங்களை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் இக் கும்பல்கள் ஒன்றையொன்று விட்டுக்கொடுத்துச் செயற்படுகின்றன.
எம்.ஆர்.ஸ்டாலின் போன்றவர்கள் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுகிறார்களோ இல்லையோ அவர்களதும் அவர்களின் கூட்டுக்களதும் அரசியல் நீக்கம் இன்றைய குறைந்தபட்ச ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது.
தேர்தலில் வாக்களிப்பது தேசியத்திற்கு எதிரானது!
வல்லூறுகள் எச்சரிக்கை!… ஏன் தேர்தலைப் புறக்கணிப்பது அவசியம்?