வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. நாம் அவ்வாறான எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் விரும்பாத எதையும் எம்மால் கட்டாயப்படுத்தி திணிக்கவும் முடியாது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், அதிகாரப் பகிர்வு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் கருத்து வெளிவரும் நிலையில் அதுகுறித்து வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பினால் நாட்டின் ஒற்றையாட்சிமுறை பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வட கிழக்குத் தமிழர்களும், முஸ்லீம் தமிழர்களும் மலையக மக்களும் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொள்ள இனிமேலும் தயாராக இல்லை. இவ்வாறான பேரினவாதிகளின் தீவிரவாதக் கருத்துக்கள் ஊடாக தமது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் தமிழர்களைப் பிரித்தாள்வதனூடாக முதலில் அங்கு பிரிவினைவாதம் தலையெடுக்கின்றது. இங்கு பேரினவாததின் நோக்கங்களுக்குத் துணைசெல்லும் முஸ்லீம்களின் அதிகாரவர்க்கம் அடிப்படைவாதத்தைத் தூண்டிவருகிறது. ஏழை முஸ்லீம்களை ஒடுக்கும் இந்த அதிகாரவர்க்கம் அவர்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பரப்புவதனூடாக அவர்களைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளது. இதன் மறுபக்கத்தில் இஸ்லாமியத் தீவிரவாததின் ஊடாக தமது வாக்குவங்கியை அச் சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தக்கவைத்துக்கொள்கின்றனர்.
சாமானிய முஸ்லீம்களுக்கு முஸ்லீம் அதிகாரவர்க்கத்தின் நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தி அடிப்படைவாதிகளை அன்னியப்படுத்திப் பலவீனப்படுத்த வேண்டிய தமிழர் தலைமைகள் முஸ்லீம்களுக்கு எதிரான இனவாதத்தைப் பரப்பி வருகின்றன.
இதனால் பலமடையும் முஸ்லீம் அதிகாரவர்க்கம், வட – கிழக்கு இணைப்பை நிராகரித்து முஸ்லீம்களைத் தனிமைப்படுத்துகிறது.
தேர்தல் தொகுதியாக்கமும், திட்டமிட்ட சிஙக்ளக் குடியேற்றங்களும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்களதும் தமிழர்களையும் தொகையைச் சிறுபான்மையாக்கியது.
1961 ஆம் ஆண்டு வரை அம்பறை,மட்டக்களப்பு மாவட்டத்துடன் இனைந்த ஒரே மாவட்டமாகக் காணப்பட்டது. 1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், பாணமை,அம்பாறை, உகன, தமன ஆகிய பிரதேசங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இவற்றுடன் பதுளை மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மகா ஓயா, பதியத்தலாவை என்பவற்றுடன் இணைத்து அம்பாறை எனும் மாவட்டம் உருவக்கப்பட்டது
இவ்வாறு அம்பாறையை இழந்த முஸ்லீம்கள் தலைவர்கள் பொதுபல சேனாவின் பின்னணியில் செயற்பட்ட மகிந்த ராஜபக்சவின் அரசில் கூட ஒட்டுண்ணிகளாகச் செயற்பட்டனர்.
இதன் மறுபுறத்தில் முஸ்லீம்களது தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களின் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக்கொண்டு, குறிப்பான திட்டத்தின் அடிப்படையில் அவர்களை வட கிழக்கு இணைவிற்கு ஆதரவாக மாற்றும் எந்த முயற்சிகளும் தமிழர் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படவில்லை.
அதேவேளை இணைப்பைச் சந்தேகத்துடன் பார்க்கும் தமிழர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை.
இவை அனைத்தும் லக்ஷ்மன் கிரியெல்ல போன்ற இனவாதிகளுக்கும் அதேவேளை இஸ்லாமிய மற்றும் தமிழ் இனவாதிகளையே சமூகத்தின் முன்னோடிகளாக மாற்றியுள்ளன.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சுமந்திரனும் மக்களிடம் மன்னிப்புக் கோரி அரசியலிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் அல்லது அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும்.