புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களாக(NGO) மாற்றுவதற்கான செயற்பாடுகள் தொடர்கின்றன. பாராளுமன்றத் தேர்தலில் மைத்திரி – ரனில் ஆட்சி மீள நிறுவப்பட்ட பின்னர் இதற்கான முயற்சி மீண்டும் முழுவீச்சில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றுவரை காத்திரமான எந்த அரசியல் திட்டங்களுமின்றி போர்க்குற்ற விசாரணையை மட்டுமே தமது முழக்கங்களாக முன்வைக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் அழிவு ஏற்கனவே திட்டமிடப்பட்டுவிட்டது.
வறுமை தொடர்பான ஆய்வு மையம் (center for poverty analysis(CEPA)) என்ற கொழும்பைத் தலைமையகமாக் கொண்ட அமைப்பு அமெரிக்க அரசின் உதவி நிறுவனமான USAID,மற்றும் ஐரோபிஅ ஒன்றியம் போன்றவற்றின் நிதி வழங்கலில் இயங்கிவருகிறது.
புலம்பெயர் அமைப்புக்களைத் தன்னார்வ நிறுவனங்களாக மாற்றும் செயற்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கருத்தரங்கு ஒன்றை center for poverty analysis(CEPA) ஏற்பாடு செய்துள்ளது. ஜுலை 15ம் திகதியிலிருந்து 17ம் திகதிவரை கொழும்பில் நடைபெறும் இக் கருத்தரங்கிற்கு முன்பதாக CEPA அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் இலங்கையர்களும் அபிவிருத்தியும் (Sri Lankan Diaspora and Development) என்ற தலையங்கத்தில் நடத்தப்படும் இக் கருத்தரங்கில், பல தன்னார்வ நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. தென்னாபிரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளிலிருந்து தன்னார்வ நிறுவனங்களோடு தொடர்புடைய பலர் கலந்துகொள்கின்றனர்.
இலங்கையின் வெளிவிககார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் சுரேன் சுரேந்திரனுக்கும் இடையே நடைபெற்ற திரைமறைவுக் கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இக் கருத்தரங்கு நடைபெறுவதாக CEPA அமைப்புக் கூறுகிறது.
இந்த வருட இறுதியில் தென்னாபிரிக்காவின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெறும் புலம்பெயர் விழாவிற்கு (diaspora festival ) முன்னதான கருத்தரங்கு என அந்த அமைப்புக் குறிப்பிடுகின்றது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிட்ட அழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் தயவில் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தருவோம் என கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற அமைப்புக்கள் தேர்தலில் களத்தில் வாக்குப் பொறுக்க ஆரம்பித்துள்ளதன் மறுபக்கத்தில் சீபாவின் நிகழ்வு சத்தமின்றி நடைபெறுகிறது.