இலங்கைத் தீவில் பேரினவாதம் கொழுந்துவிட்டெரிகிறது. இந்திய மத அடிப்படைவாத அரசின் அருவருக்கத்தக்க மத வெறி, இலங்கை அரசின் நிறுவன மயப்படுத்தப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஏகபோக இராணுவ மயமாக்கல் என்பன இன்று தெற்காசியாவின் ஒவ்வொரு மூலையையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ச என்ற முன்னை நாள் இராணுவத் தளபதி இலங்கை அரச நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முன்னெபோதும் இல்லாத அளவிற்கு அவசியமாகிவிட்டது.
பழமைவாத நில உடமைச் சிந்தனை மரபு வழியில், மத வெறியையும், துடைத்தெறியப்பட வேண்டிய அருவருப்பான சாதியக் கட்டமைப்பையும்,மீட்க முயலும் இந்துத்துவ சமூகவிரோதிகளுக்கு இணையாக தேசிய விடுதலைக்கான கோட்பாட்டை மொழி வெறியாக மடை மாற்ற முயலும் கும்பல்களில் முதன்மையானது தான் சீமன் தலைமை தாங்கும் நாம் தமிழர் கட்சி.
சீமான் சிங்கள பெண்களின் மார்பை அறுத்தெறிவேன் என்றும் குழந்தைகளை குண்டுவீசி கொலை செய்வேன் என்றும் கனடா நாட்டில் 2010 ஆம் ஆண்டு பேசியதைத் தொடர்ந்து அந்த நாட்டிற்குள் பிரவேசிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டார். (காணொளி1)
இதன் பின்னர் நாம் தமிழர் கட்சி, வீரத் தமிழர் முன்னணி என்ற பினாமிப் பெயரில் புலம்பெயர் நாடுகளில் இயங்க ஆரம்பித்தது.
விடுதலை புலிகள் இலங்கையில் கோலோச்சிய காலத்தில் புலம்பெயர் நாடுகளில் அந்த இயக்கத்தின் சனநாயக முகமாகச் செயற்பட்ட அமைப்புக்கள் தான் உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்றன. உலகத்தமிழர் பேரவை சிறிது சிறிதாக இலங்கையில் 2015 ஆட்சிக்கு வந்த ‘நல்லாட்சி அரசின்’ ஆதரவு இயக்கமாக மாறிவிட, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு ராஜபக்சவை போர்குற்றவாளிகளாக்கிவிடலாம் என்ற முழக்கத்தோடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பட ஆரம்பித்தது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு எனச் சேர்த்துக்கொண்ட பணம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சீமான் குழு 2015 இற்கு பின்னர் பல இளஞர்களை வீரத் தமிழர் முன்னணியை நோக்கி இணைத்துக்கொண்டது.
தெலுங்கர்களே தமிழர்களின் எதிரிகள், சிங்கள மக்கள் ராஜசிங்கன் என்ற தெலுங்கு மன்னனின் வழித் தோன்றல்கள்;திராவிடக் கட்சிகள் தெலுங்கர்களின் சதித்திட்டத்தால் உருவாக்கப்பட்டவை என்ற புதிய புனைவுகளின் அடிப்படையில் வீரத்தமிழர் முன்னணி இயங்க ஆரம்பித்தது.
தெலுங்கர்கள் – சிங்களவர்கள் – திராவிடக் கட்சிகள் அழிக்கப்பட்டு ஈழம் பெற வேண்டுமானல் தமிழ் நாட்டில் சீமான் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற பிரச்சாரம் வெறியூட்டும் பேச்சுக்கள், கவர்ச்சிகரமான மேலங்கிகள், சமூக வலைத்தளங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. இச்சமூக விரோதக் கருத்தை மையப்படுத்தி உருவாக்க்கப்பட்ட குழுவின் ஆதரவாளர்களாக வியாபாரிகள் பலர் இணைக்கப்பட்டனர். இவை அனைத்தையும் சீமானின் சார்பில் கச்சிதமாக ஒருங்கிணைத்தவரே கல்யாணசுந்தரம் என்ற பள்ளி ஆசிரியர்.
காங்கிரஸ் எதிர்ப்பு, திராவிடர் இயக்க எதிர்ர்பு போன்றவற்றின் ஊடாக மெலிதான ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா ஆதரவும் வீரத்தமிழர் முன்னணியால் உருவமைக்கப்பட்டது. தமிழகத்தின் முன்னை நாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவின் போது புலம்பெயர் நாடுகளில் சில பகுதிகளிலும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அளவிற்கு திராவிட வெறுப்புணர்வை நாம் தமிழர் கட்சி உருவாக்கும் அளவிற்கு வெற்றிபெற்றது.
கருப்பின மக்கள் வாழும் நாடுகளில் உள் முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையேயான யுத்தங்கள் போன்றன இருந்தாலும், வெள்ளையின் மேலதிக்கத்திற்கு எதிராக அவர்கள் கருப்பர்களாக ஒன்றிணைகிறார்கள். இதன் மறுபக்கத்தில் தென்னிந்தியாவில், ஆரிய மேலாதிக்கவாத்த்திற்கு எதிராக திராவிடம் என்ற அடிப்படையில் பல் வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைவதை மறுக்கும் சீமான் கும்பல் அந்த அழிவுச் சமன்பாட்டிற்குள் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களையும் இழுத்துப் போட்டதற்கு பிரதான காரணம் புலம்பெயர் நாடுகளில் எதிர்பார்த்த பணம் மட்டுமே.
ஈழப் போராட்டம் மட்டுமே விமானப்படையைக் கொண்டிருந்தது; புலிகள் போன்ற பலமான இயக்கம் உலகில் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை;பிரபாகரன் போன்ற வலிமை மிக்க தலைவர் எவருமே இதுவரையில் பிறந்ததில்லை; என்ற முழக்கங்களை புலம் பெயர் அமைப்புகள் மட்டுமல்ல இலங்கை அரசும் இணைந்தே முன்வைத்தது. இதன் அடிப்படைக் காரணம், இவ்வளவு வலிமையான அமைப்பே ஈழப் போராட்டத்தை வெற்றிகொள்ள முடியவில்லை என்றால் இனி மேல் ஈழப்போராட்டம் சாத்தியமற்றது என்ற அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே.
அதனை இலங்கை அரசும் புலம்பெயர் அமைப்புக்களும் கச்சிதமாக செய்து முடித்துவிட அதன் மறுபக்கத்தில் சீமான் கும்பல் புதிய திட்டத்தை வகுத்திருந்தது. ஈழப் போராட்டம் இனிமேல் சாத்தியமற்றது என்பது உணமை தான் ஆனால் சீமான் முதலமைச்சரானால் அது வெற்றிகொள்ளப்படலாம் என்ற பிரச்சாரம் ஒவ்வொரு தமிழர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்த வெற்றி தெலுங்கர்களின் அல்லது திராடவிடக் கட்சிகளின் அழிவிலேயே சாத்தியம் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது.
வேதாந்த நிறுவனம் தூத்துகுடியில் நிகழ்த்திய படுகொலைக்கு எதிராக லண்டன் இந்தியத் தூதரகத்தில் ஒரு போராட்டம் நடைபெற்றது. பெருமளவில் ஈழத்தமிழர்கள் கலந்துகொண்ட அந்த போராட்டத்தில் அப்போது பிரித்தானியாவிற்கு வந்திருந்த சு.ப.வீரபாண்டியன் உரையாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. கல்யாணசுந்தரம் ஒழுங்கமைத்திருந்த வீரத்தமிழர் முன்னணி சீமானின் உத்தரவின் பெயர் சு.பி.வி இற்கு மிரட்டல்விடுத்தது. அப் போராட்டத்தில் சு.ப.வி கலந்துகொண்டால் போராட்டத்தையே குழப்பப்போவதாக அதன் உறுப்பினர்கள் மிரட்டினார்கள். இறுதியில் அந்த போராட்டத்தில் சு.ப.வீ கலந்துகொள்ளவில்லை. பாரிசாலன் என்பவரின் வீடியோக்களைப் பார்வையிடுமாறு வீரத்தமிழர் முன்னணியினர் இருவர் துண்டுப்பிரசுரம் வினியோகித்துவிட்டு போராட்டத்திலிருந்து தலைமறைவாகினர்.
2009 இனப்படுகொலையின் பின்னர் உருவாக்கப்பட்டு அறிக்கை அமைப்பாகச் செயலிழந்து போன நாடுகடந்த தமிழீழ அமைப்பிற்காக பணம் சேர்த்த சிலர் இக்காலப் பகுதியில் கல்லாயணசுந்தரம் – சீமான் குழுவினரின் பணம் திரட்டும் முகவர்களாகினர். இவர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் கல்யாணசுந்தரம் ஊடாகவே தமிழகம் சென்றடைந்தது. அத் தொகை அதிகரித்து ஊதிப் பெருக, இந்த வருட ஆரம்பத்தில் பணம் தொடர்பான கேள்விகள் வீரத்தமிழர் முன்னணிக்குள் தொடங்கியது.
திரட்டப்படும் பணத்தை ஒவ்வோரு தேர்தல் தொகுதிக்கும் அனுப்புமாறும், ஒரு குறித்த தனிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டம் என்றும் கல்யாணசுந்தரம் உத்தரவிட்டதாகக் கூறும் லண்டன் வீரத்தமிழர் முன்னணி உறுப்பினர் ஒருவர் அப்போதே சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்.
பணத்தை குறித்த சில கணக்குகளுக்கே அனுப்பிவைக்குமாறு சில நாட்களின் பின்னர் உத்தரவிட்ட சீமான், புலம்பெயர் தமிழர்களின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் கூறுகிறார்.
தவிர, புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய பணத்தை கல்யாணசுந்தரம் சூறையாடிவிட்டதாக சில நாட்களின் முன்னரே புலம்பெயர் நாடுகளில் பிராச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக வீரத் தமிழர் முன்னணியின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
தோழர் சுந்தரவல்லி வெளியிட்ட காணொளியில் பேசப்பட்ட கருத்துக்களை ஒட்டியே இருவருக்கும் இடையிலான மோதல் உருவானது என்று மிகவும் தந்திரமாகத் தப்பிக்கொள்ளும் கல்யாணசுந்தரமும் சீமானும் இச் சிக்கல்களின் அடிப்படை பணப்பட்டுவாடா தொடர்பானது எனப் பேசமாட்டார்கள். அது சட்டரீதியான ஆபத்துகள் நிறைந்தது என்பது மட்டுமல்ல கடந்தகால இலப கணக்குகள் தொடர்பானதும் கூட. ஆனால் ஈழப் போராட்டம் என்பதை வலதுசாரிகளின் அழிவு அரசியலின் பக்கத்திலிருந்து மிட்டெடுக்க அவர்களின் வியாபார நோக்கம் தொடர்பாகப் பேசுவதும் அவசியமானது.
துதிபாடலின் அடிப்படையில் அல்ல, விமர்சனம் சுய விமர்சனம் ஊடகாவே ஈழப் போராட்டம் மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் நடக்கும் போராட்டமும் முன்னோக்கிய வழியில் செல்லும் என்பதை உணர்த்துவதற்காகவும் கூட தமிழ்த் தேசியம் என்ற வியாபார முழக்கத்தின் கீழ் நடக்கும் அயோக்கியத் தனத்தை வெளிக்கொண்டுவர வேண்டும்.
இன்னும் வரும்…
காணொளி1
காணொளி2
https://www.youtube.com/watch?v=tLsyaaEerpY&ab_channel=IBCTamilTV