தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் இலங்கையில் அழிக்கப்பட்டதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று இந்தியாவின் தலையீடு என்பதை யாரும் மறுப்பதில்லை. 1983 ஆண்டு ஜீலை இன வன்முறைக்குப் பின்னர் இந்திய அரசு, உத்திரப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் TELO, தமிழீழ விடுதலைப் புலிகள் LTTE, ஈழப் புரட்சி அமைப்பு EROS, ஈழ மக்கள் விடுதலை முன்னணி EPRLF ஆகிய இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதற்கு முன்பாகவே இத் தலையீடு பல வழிகளில் ஆரம்பித்துவிட்டது.இலங்கையின் அரசியல் உலக நாடுகளின் ஈர்ப்பு மையமாக 80 களிலிருந்து மாறிவிட்டதற்கு தெற்கசியா சார்ந்த வல்லாதிக்கப் போட்டியில் கடல் சார்ந்த வழிகளும் காரணமாயின.
போராட்ட இயங்களில் இந்திய அரசின் நேரடித் தலையீட்டின் முன்பதான அரசியல் பல்வேறு கோட்பாடுகளுக்கு இடையேயான மோதலாகவே காணப்பட்டது. தேசிய விடுதலை இயக்கம் என்பது பல் வேறு வர்க்கங்களுக்கு இடையேயான ஐக்கிய முன்னணி என்ற அடிப்படையில் பல்வேறு கோட்பாட்டுரீதியான முரண்களை உள்வாங்கிக்கொண்டே விடுதலை இயக்கங்கள் பயணித்தன. டெலோ,விடுதலைப் புலிகள், புளட் போன்ற அமைப்புக்கள் வலதுசாரிய சிந்தாந்தத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கங்களாகவும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஈரோஸ் போன்றன இடதுசாரியப் போக்குடையாகவும் காணப்பட்டன. இந்திய அரசு வழங்கிய இரணுவப் பயிற்சி 1983 ஆம் ஆண்டு ஆரம்பித்ததும், இவை அனைத்துமே வெறுமனே இராணுவக் குழுக்களாக மாறிப் போயின. இயக்கங்களின் உள்ளே இராணுவ அதிகாரம் மேலோங்க, உட்கட்சிப் போராட்டங்கள் ஆரம்பித்தன. இவ்வாறான சித்தாந்த மோதல்கள் எதுவுமற்று, சமூகமாற்றம் தொடர்பான எந்தப் பிரக்ஞையுமற்ற ஆயுதக் குழுவாக மட்டுமே தன்னை அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மைத் தக்கவைத்துக்கொண்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற அமைப்புக்களின் உள்ளே சோசலிசக் கருத்தோடு மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்த பெரும்பாலாவர்கள் தலைமைக்கு எதிரான உறுதியான போராட்டத்தை முன்னெடுத்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவத் தளபதியாவிருந்த டக்ளஸ் தேவாந்தா முற்போக்கு அணிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு தலைமை தளபதியாக கபூர் என்பவர் 1985 ஆம் ஆண்டு நியமிக்கப்படுகிறார்.
1986 இல் புலிகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்ட போது அதன் தலைமைக்கு எதிராகச் உட்கட்சிப் போராட்டம் நடத்திய பெரும்பாலான முற்போக்கு அணிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன.
இந்திய அரசு சார்பான தலைமையின் ஒரு பகுதி இந்தியாவிடம் சரணடைய, ஈழ விடுதலைப் போராட்டத்தில் அனைத்து சனநாயக முற்போக்கு அணிகளும் சோசலிசத்தை நோக்கிச் சென்றவர்களும் துடைத்தெறியப்படன. இந்திய அரசின் திட்டமிட்ட இந்த அழிப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அழிவு அல்ல, மாறாக ஈழப் போராட்டத்தில் சோசலிசக் கருத்தை நோக்கி சென்றவர்களின் அழிப்பு.
மிகவும் நுட்பமாக புலிகளைப் பயன்படுத்தி இந்த அழிப்பை நடத்திய இந்திய அரசு,எஞ்சியிருந்த வலதுசாரி அணிகளை புலிகள் மற்றும் புலிகளுக்கு எதிரானவர்கள் என்ற முகாம்களாக மாற்றுவதில் வெற்றிகண்டது.
1986 இற்குப் பின்னான காலம் முழுவதிலும், வடக்குக் கிழக்கில் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், மக்கள் அமைப்புகள் போன்ற எதுவுமே இல்லாத வெறுமையான சூழல் உருவானது.
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் அமைதிகாக்கும் படை என்ற தலையங்கத்தில் இலங்கையில் மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்த காலப் பகுதி ஈழ வரலாற்றில் இரத்தக் கறை படிந்த அத்தியாயமாக எழுதப்பட்டது.
இந்திய அதிகாரவர்க்கதில் ஏற்பட்ட உள் முரண்பாட்டின் வெளிப்பாடாக ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதற்காகப் புலிகளைப் பயன்படுத்கிக்கொண்ட இந்திய அதிகாரவர்க்கம் வி.பி.சிங் இன் வெற்றியைத் தடுத்து தன்னை மீண்டும் நிலை நிறுத்திக்கொண்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பை, இந்திய அரசுசிற்குச் சவாலாக அமைந்திருந்த திராவிட இயங்களுக்கு எதிராகவும், கம்யூனிச, மாவோயிச இயக்கங்களுக்கு எதிராகவும் மடை மாற்றி சந்தர்ப்பவாதிகளின் கைகளிலும் உளவுத் துறையின் கைகளிலும் சிக்கவைத்தது.
வஜ்பாய் அரசு நடந்த காலத்தில் ஆனையிறவு முகாம் தாக்குதலைத் தடுத்து நிறுத்திய இந்திய அரசு, விடுதலைப் புலிகளை வன்னி நிலப்பரப்பிற்குள் முடக்குவதற்கு தன்னாலான பங்களிப்பை வழங்கிற்று. இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதப் படுகொலையை இலங்கை அரசின் பின்னணியில் செயற்பட்டு 2009 ஆம் ஆண்டு வன்னியில் நடத்தி முடித்தது.
பின் தங்கிய ஈழத்து கோட்பாட்டின் பின்புலமாக செயற்படும் புலம்பெயர் வியாபரிகளுடன் இணைந்து பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தின் பின்புலத்தில் இந்திய அரசு செயற்பட்டு தமிழ் நாட்டில் ஏற்படக்கூடிய எழுச்சியைத் தடுத்து நிறுத்திற்று.
புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் எந்தத் தவறும் இழைக்காமல் சரியாகவே செயற்பட்டனர் என்றும், நேர்த்தியாகத் திட்டமிட்ட ஆயுதப் போராட்டமே சாத்தியமற்றதாகிவிட்டதால் இனிமேல் ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது என்ற கருத்தியலை புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் கட்டமைக்க இந்திய அரசின் ஆசி கிடைத்தது.
தமிழ் நாட்டில் முளைவிட்ட “தமிழ்” தேசிய வாதிகள் முன்வைக்கும் இந்தக் கருத்து உளவியல் யுத்தம் போன்றது. ஒரு நாட்டின் ஆதரவுடனேயே ஈழமும், ஈழ மக்களின் உரிமையும் வெற்றிகொள்ளப்பட முடியும் என்ற போலியான கருத்தியல் ஈழத்தில் தமிழ்ப் பேசும் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியது. புதிய போராட்ட முனைப்புக்கள் தகர்ந்து போயின. இலங்கை அரசும். பேரினவாதிகளும் இதே கருத்தியலைப் பயன்படுத்தி இனிமேல் போராட்டம் என்பதே சாத்தியமற்றது என தமிழ் மக்களை மத்தியில் மட்டுமன்றி சிங்கள மக்களையும் கூட மிரட்டுகிறது.
கடந்தகாலப் புலிகளின் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் போராட்டம் முளைவிட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கும் சிறுபான்மையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான துரோகிகள் என “தமிழ்” தேசிய வாதிகளாலும், பயங்கரவாதிகள் என இந்திய இலங்கை அரசுகளாலும் இயலாதவர்களாக்கப்படுகின்றனர்.
இந்த சூழலில் தான் இந்திய அரசு எமது ஆதரவோடு தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுங்கள் என புலம் பெயர் நாடுகள் ஊடாகக் காய்களை நகர்த்த முயல்கிறது.
இன்றைய உலகின் மிகவும் பின் தங்கிய இந்துத்துவ மதவாத ஆட்சி நடத்தும் பாரதீய ஜனதா கும்பல் இந்திய மக்களுக்கு மட்டுமன்றி மனித குலத்திற்கே எதிரானது. இந்து மதம் என்று அழைக்கபடுகிற மிகவும் அருவருப்பான சாதிய அடுக்குகளையும் சாதிய ஒடுக்குமுறையையும் அடிப்படையாக முன்வைத்துக் கட்டமைக்கப்பட்ட சமூகவிரோதக் கோட்பாட்டை நிறுவன மயப்படுத்தியுள்ள ஆர்.எஸ்.எஸ் புலம் பெயர் நாடுகளில் ஈழப் போராட்டம் குறித்துப் பேசுகிறது.
இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரமுகர் வானதி சீனிவாசன் தலைமையில் மூன்று ZOOM ஒன்று கூடல்கள் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்றுள்ளன. தமிழ் நாட்டிலிருந்து பத்மநாதன் என்ற பார்ப்பனரின் தலைமையில் கனடாவிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட Zoom இல், சீன சார்பு இலங்கை அரசிற்கு எதிராகத் தாக்குதல் ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவதாக ஆ.எஸ்.எஸ் சார்பில் பேசப்பட்டுள்ளது. இந்து ஈழம் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறும் இக் கும்பல் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தவல்லது. இனிமேல் இந்து ஈழம் எனப் பேசுவதன் ஊடாகவே இந்திய அரசை வென்றெடுக்கலாம் என காசியாந்தன், ரங்கராசு என்ற சாணக்கிய இணையத்தை நடத்தும் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலை இந்தப் பின்னணியிலிருந்தே அணுக முடியும். இந்துத்துவா சமூகவிரோதக் கும்பலின் இந்த உள்ளீட்டை அழிப்பதும், இன்று மக்கள் முன்னாலிருக்கும் பிரதான கடமைகளில் ஒன்று.