அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் பெரும் யுத்தமாக முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன. மத்திய கிழக்கில் மக்களைப் பாதுகாக்கப் போகிறோம் என அந்தப் பிராந்தியத்தில் போர் சூழலை ஏற்படுத்தி லட்சக் கணக்கில் மனிதர்கள் அழிக்கப்படுவதற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவுமே காரணமாக இருந்தன. லிபியாவிலிருந்து சாரிசாரியாக அகதிகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் மரண ஓலம் கேட்கின்றது. இங்கிருந்து வெளியேறும் அகதிகளையெல்லாம் எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதே ஐரோப்பிய நாடுகளின் இன்றைய துயரம்.
Operation Triton என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளின் கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகள், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் வழிகள் அனைத்தும் பலப்படுத்தப்படுகின்றன. அகதிகளுக்கு எதிரான இராணுவ வேலி ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் அமைத்துவருகிறது.
அகதிகளைக் கடத்துபவர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தொனியில் ஐரோப்பிய ஒன்றியம் பேச ஆரம்பித்துள்ளது. கடந்தவாரம் பிரித்தானிய நாழிதழ் சண் இல் வெளியான கட்டுரையில் அகதிகளைத் தடுத்து நிறுத்த ஆயுதக் கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் நடத்திய பேரழிவிலிருந்து தப்பியோடும் அப்பாவிகளைக் கொன்று போடுவதற்கான புதிய திட்டம் திட்டமிடப்பட்ட மனித அழிவு.
ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் செல்லப்பிள்ளையான ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என திருடன் போலிஸ் விளையாட்டு விளையாடும் அமெரிக்க அணி மத்தியகிழக்கில் இனச்சுத்திகரிப்பு ஒன்றையே கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
லிபியாவிலிருந்து மட்டும் ஒரு மில்லியன் வரையான அகதிகள் வெளியேறலாம் என ஐரோப்பிய ஒன்றியம் ‘அச்சம்’ தெரிவித்துள்ளது. கடாபியிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதக நாடகமாடிய ஏகாதிபத்திய நாடுகள் இன்று மக்களை இரத்தமும் சதையுமாக உலகம் முழுவதிலும் மரணத்தின் பிடிக்குள் அமிழ்த்தியுள்ளன.