தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியத்திற்காக ஒரு போதும் செயற்படாது என திட்டவட்டமாகக் கூறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறார். நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இனக்கொலையாளி மகிந்தவின் கட்சியைவிடக் குறைவான வாக்குகளைப் பெற்று படு தோல்வியடைந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது மீண்டும் கூட்டமைப்பை நோக்கி தனது பார்வையைத் திருப்பியுள்ளார்.
அரசியலிலிருந்த அகற்றப்பட வேண்டிய நிலையிலிருந்த வாக்குப் பொறுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான மாற்றை பின் தங்கிய கருத்துக்களை முன்வைத்த கஜேந்திரகுமாரால் வழங்க முடியவில்லை. இப்போது கூட்டமைப்பை நோக்கி நேசக்கரம் நீட்டுகிறார்.
தோல்வியில் முடிவடைந்த புலிகளின் இராணுவ யுத்தத்தின் அரசியலை மீண்டும் தனது அரசியல் முழக்கங்களாக முன்வைத்த கஜேந்திரகுமார், புலிகள் தன்னோடு நெருக்கமான உறவுகளைப் பேணியதாகக் பிரச்சாரம் மேற்கொண்டார். கஜேந்திரகுமாரின் தந்தை குமார் பொன்னம்பலம் புலிகளால் மாவீரர் பட்டமளிக்கப்பட்டவர்.
புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகத் தன்னை கிழக்கில் முன்னிறுத்திய அரியேந்திரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆதரவில் செயற்பட்ட சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோரும் படு தோல்வியைத் தழுவினர். தவிர, புலி எதிர்ப்பு அரச ஆதரவு அரசியலை முன்வைத்த பிள்ளையான் மற்றும் சந்திரகுமார் ஆகியோரும் பாராளுமன்ற இருக்கைகளை இழந்தனர்.
கஜேந்திரகுமாரின் இன்றைய உரையின் தொடர்ச்சி:
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் தாம் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதுடன் அதனுடன் இணைந்து செயற்படவும் தயார் என்று தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை(19.8.2015) மதியம் யாழ்.ஊடக மையத்தில் தமிழ் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
நடந்து முடிந்த தேர்லில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். எமக்கு எதிராக எத்தனையோ பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் பலத்த சவாலின் மத்தியில் இந்த தேர்தலில் நாம் போட்டியிட்டோம்.. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தேர்தல் காலத்தில் கூறும் வாக்குறுதிகளை மட்டும் நம்பி எதனையும் செய்யவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஆனாலும் கூட தேர்தல் முடிவடைந்த பின்னர் நடைபெறவுள்ள செயற்பாடுகளின் அடிப்படையிலேயே எது தொடர்பாகவும் முடிவுக்கு வர முடியும். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எமக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளார்கள். அவர்கள் வழங்கிய நிதியுதவியின் மூலம் தான் நாம் மனிதாபிமான உதவிகளை செய்து வந்துள்ளோம். அவர்களுடைய உதவியும் ஆதரவும் தொடர்ந்தும் எமக்கு இருக்க வேண்டும்.
தமிழ்த் தேசம் என்பது வெறும் உள்ளூரில் உள்ளவர்களை மட்டும் கொண்டது அல்ல. இது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியதாகும். தமிழ் தேசியவாதம்தான் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கின்றது. தமிழ் தேசியம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வேறு இனத்தவர்களின் அடையாளத்தை அழிக்கவோ அன்றி சிதைக்கவோ நாம் முயலவில்லை. அதனைப்போல எமது தேசியத்தையும் கலாசாரத்தையும் யாரும் அழிக்கவோ சிதைக்கவோ அனுமதிக்கவும் முடியாது. நாம் என்றும் எமது அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி .பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சட்டதரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
நான் இவளவு நாளும் இவர்களின் இரண்டு தேசம் என்பது வடகிழக்கு தமிழ்தேசம், ஏனைய பிரதேசங்களில் சிங்களதேசம் என நினைத்தேன்…(முஸ்லீம்களின் நிலை பற்றி எல்லாம் கேட்கப்படாது, மலையக தமிழர் ஏற்கனவே தாத்தாவால் நாடற்றவராக்கிவிட்டார்). இப்போது பார்த்தால் அது ஐரோப்பா, கனடா….என விரிவுபடுத்தப்பட்டுள்ளது.ஏனெனில் அங்குதான் நமக்கு ஆதரவு உண்டு- (அங்கும் மௌனப்பெரும்பான்மை silent majorityஇவர்களை ஆதரிக்கவில்லை என்பதுவேறு.)
தேர்தல் வரை கூட்டமைப்பினர் துரோகிகள். இப்போது இணைந்து செயற்படத் தயாராம்.
“தேர்தல் காலத்தில் கூறும் வாக்குறுதிகளை மட்டும் நம்பி எதனையும் செய்யவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது” என்பது அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே சொன்னது தானோ?